Skip to Content

11. நம்முடைய Higher Selfஐ மதித்து நடத்தல்

நம்முடைய Higher Selfஐ மதித்து நடத்தல்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

நம்முடைய Higher Self தன்னைச் சுற்றி உள்ளவர்க்கெல்லாம் தன்னுடைய அன்பை நிபந்தனைகள் இல்லாமல், condition போடாமல் வழங்குகிறது. அதனுடைய பார்வை முழுமையான பார்வையாகும். எந்த ஒரு விஷயமானாலும் நமக்கு நம்முடைய கண்ணோட்டமும் தேவையும் தான் தெரியுமே ஒழிய, சம்பந்தப்பட்டவர்களுடைய கண்ணோட்டம் என்ன, அவர்களுடைய தேவை என்ன, விஷயத்தின் முழுமை என்ன என்று நாம் பார்ப்பதில்லை. ஆனால் நம்முடைய Higher Self வாழ்க்கையின் முழுமையைத்தான் பார்க்குமே ஒழிய நம்மைப் போல் வெறும் பகுதிகளை மட்டும் பார்ப்பதில்லை. இப்படிப் பார்ப்பதால் அடுத்தவருடைய கண்ணோட்டத்தில் உள்ள உண்மையை நம்முடைய Higher Self ஏற்கிறது. அது எது செய்தாலும் வாழ்க்கையின் முழுமையை மனதில் வைத்துக் கொண்டுதான் செய்கிறது. நம்முடைய உடனடி தேவைகள் மற்றும் விருப்பங்கள் இதனால் பாதிக்கப்படலாம். ஆனால் நாம் நம்முடைய Higher Selfஇன் முடிவை அமைதியாக ஏற்றுக் கொண்டு நெடுங்காலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நம்முடைய Higher Self நமக்கு நல்லது தான் செய்திருக்கிறது என்று தெரிய வரும்.

ஒரு திருமணம் ஆகாத அன்னை அன்பரான இளைஞர் ஒரு இளம் பெண்ணின் அழகாலும் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு அவளை உடனே திருமணம் செய்து கொள்ளத் துடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய Higher Self activeஆக இருந்தால் அவருடைய தவிப்பு மற்றும் துடிப்பை அது கவனிக்கும். அவளிடம் அழகு இருக்கிறது, கவர்ச்சி இருக்கிறது, ஆனால் அன்பில்லை, குணமில்லை, முறையாகக் குடும்பம் நடத்தக்கூடிய குடும்பப் பாங்கில்லை என்று அதற்குப் புரிந்தால் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய கட்டுக்கடங்காத ஆர்வத்தை அது ஆதரிக்காது. இவருக்கு இருக்கிற அந்தக் காதல் வேகம் மற்றும் இளமை வேகம் மற்றும் கவர்ச்சி மோகத்தால் அவளுடைய குணக்குறைகள் இவருக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் இவர் கண்ணில் படாதது எல்லாம் இவருடைய Higher Selfஇன் பார்வைக்குப் படும். ஆகவே அவளைத் திருமணம் செய்து கொண்டால் ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே அவளுடைய சுயரூபம் தெரிந்து அவருடைய சந்தோஷம் எல்லாம் போய்விடும் என்று அதற்குத் தெரிவதால் அவருடைய நெடுங்கால சந்தோஷத்தை மனதில் வைத்துக் கொண்டு அவளை இவருக்குக் கட்டி வைக்காமல் சற்றே அழகு குறைந்தாலும் குணவதியாகவும், குடும்பப் பாங்கு தெரிந்தவளாகவும் இருக்கின்ற இன்னொரு இளம் பெண்ணைத்தான் அவருக்கு அவருடைய Higher Self திருமணம் செய்து வைக்கும். Higher Selfஇன் முழுமையான பார்வைக்கு இதை நான் உதாரணமாகச் சொல்கிறேன். நம்முடைய Higher Self எப்போதும் சந்தோஷமாக இருப்பதோடு எந்நேரமும் இறைவனிடமும் அன்னையிடமும் இருந்து தான் பெற்றுக் கொண்டதற்கு எல்லாம் நன்றி தெரிவித்துக் கொண்டே இருக்கும். நம்முடைய surface personalityக்கு இருக்கின்ற ஆணவம், மற்றும் அகம்பாவம் அதற்குக் கிடையாது. மாறாக நம்முடைய Higher Selfக்குப் பணிவும் தன்னடக்கமும் மிகவும் அதிகம். அகம்பாவம் பிடித்த மனிதன் எப்போதும் தன்னுடைய பெருமைகளை ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பான். மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இவன் பேசுவதை நிறுத்தமாட்டான். ஆனால் நம்முடைய Higher Self இப்படி இருப்பதில்லை. அது தன்னைப் பற்றி நினைப்பதே இல்லை. அது தன்னை மறந்து இறைவனையும் அன்னையையும் அவர்களுடைய பெருமையைத்தான் நினைத்துக் கொண்டிருக்கும். நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி மாறினாலும் அதனாலெல்லாம் இறைவனோடும் அன்னையோடும் தனக்கு இருக்கின்ற alignment பாதிக்கப்படாத அளவிற்கு செயல்படும் திறனும் இதற்கு உண்டு.

நம்முடைய Higher Self ஒரு அஞ்சா நெஞ்சம் கொண்ட மாவீரன் போன்றது. அதை நம்பி நாம் தைரியமாக இருந்தால் ஆயிரம் போர் வீரர்களைக் களத்தில் சந்திக்கின்ற ஒரே வீரன் போல நாம் வாழ்க்கை என்ற போராட்டக்களத்தில் தனித்து நின்றாலும் இருக்கின்ற எதிர்ப்பை முறியடித்து நம்மை நம்முடைய Higher Self வெற்றி பெறச் செய்யும். இந்த Higher Self கொடுக்கும் தைரியத்துடன் நம் வாழ்க்கையில் வரும் எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது பெரிய வெல்ல முடியாத பிரச்சனையாக தெரிந்தது சாதாரண சிறிய பிரச்சனையாக மாறிவிடும். அம்மாதிரியே கடக்க முடியாத உயர்ந்த மலை உச்சி போல நம் வாழ்க்கையில் தடையாக நிற்கின்ற ஒரு விஷயம் நம் Higher Self கொடுக்கும் பலத்தோடு செயல்படும்போது வெறும் ஒரு அடி உயரம் உள்ள மணல் கோபுரம் போல சிறிதாகி நம்மால் சுலபமாகக் கடக்கக் கூடியதாகிவிடும். நம்முடைய Higher Self கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பெருந்தன்மையாக இருப்பதுண்டு. நம்முடைய வருமானம் மற்றும் உடைமைகளையும் உரிமைகளையும் அடுத்தவர்கள் பறிக்கிறார்கள் என்று நாம் அலறும் போது நம்முடைய Higher Self நமக்கு நேர் எதிர்மாறான அணுகுமுறையை எடுத்துக் கொள்கிறது. பிடுங்க வருகின்றவரிடம் நீ உரிமையோடு எடுத்துக் கொள்ளலாம் என்று தானே விரும்பி அவருக்கு எடுத்துக் கொடுப்பதைப் போல நம் Higher Self நடந்து கொள்ளும். கோட் ஸ்டாண்டில் மாட்டி இருக்கின்ற உங்கள் சட்டை பாக்கெட்டிலிருந்து உங்களிடம் சொல்லாமல் உங்கள் மனைவி ரூ.1000/- எடுத்துச் செலவழித்திருந்தால் அது தெரிய வரும் போது நீங்கள் கோபப்படுவீர்களா? அல்லது தான் சாப்பிடுவதற்காக ஒரு தாயார் தன் தட்டில் வைத்திருந்த ஒரு இனிப்புப் பண்டத்தைத் தாயாரைக் கேட்காமல் குழந்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டது என்றால் அதைக் கண்டு தாயார் கோபப்படுவாரா? அவரவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அவரவர்களுடைய Selfஐச் சேர்ந்தவர்கள் என்னும் போது அவர்களுடைய அனுமதியில்லாத செயல்பாடுகளையும் சம்பந்தபட்டவர்கள் சரி என்று எடுத்துக் கொள்கிறார்கள். நம் குடும்பம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பவர்களை எல்லாம் நாம் எப்படி நமக்கு உரியவர்கள், நமக்குச் சொந்தமானவர்கள், நம்முடைய Higher Selfஐச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக் கொள்கிறோமோ அப்படியே சமூகம் என்ற பெரிய வட்டத்திற்குள் இருப்பவர்களையும் நம்முடைய Higher Self தனக்குள் இருப்பவர்களாகவும், தன்னைச் சேர்ந்தவர்களாகவும் எடுத்துக் கொள்கிறது. அதனுடைய கண்ணோட்டம் இப்படி இருப்பதால் நம்முடைய நஷ்டத்தைக் கண்டு அது வருத்தப்படுவதோ சோகத்தில் மூழ்குவதோ இல்லை. இருந்தாலும் நம்முடைய surface personalityஇல் நாம் நஷ்டப்பட்டுவிட்டதாக நினைத்து வருத்தப்படுவதாலும் நமக்கு உரிமையானது பறிபோய்விட்டது என்று நாம் கொதித்துப் போவதாலும் நம்மைச் சாந்தப்படுத்தும் வகையிலும் நாம் இழந்ததை ஈடுசெய்யும் வகையிலும் செயல்பட அது முடிவெடுக்கிறது. நம் Higher Selfனுடைய ஆற்றல் மிகப்பெரியது என்பதால் இப்படி நாம் இழந்ததை அது திருப்பித் தர முயற்சி செய்யும் போது நாம் இழந்தது எவ்வளவோ அதே அளவிற்கு அது திருப்பித் தருவதில்லை. மாறாக, நாம் இழந்ததைவிட நூறு மடங்கு அல்லது ஆயிரம் மடங்கு அதிகமாக நமக்கு திருப்பி கொடுத்துவிடுகிறது.

ஏற்கனவே சொன்னது போல நம்முடைய Higher Selfஇனுடைய எனர்ஜி அளவுகடந்த ஒன்றாகும். நாம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு களைத்துப் போய்விடுகிறது. ஆனால் நம்முடைய Higher Self வழங்கும் எனர்ஜியை வைத்துக் கொண்டு நாம் வேலை செய்ய ஆரம்பித்தால் நாள்கணக்காக சரியான தூக்கம் இல்லாமல், சரியான சாப்பாடு இல்லாமல் நாம் வேலை செய்தாலும் நமக்குக் களைப்புத் தெரியாது. இந்த Higher Selfஇனுடைய எனர்ஜி நம்முடைய அறிவில் வெளிப்படும்போது முழுமையான knowledgeஆகவும் நம்முடைய பகுத்தறிவைத் தாண்டி செயல்படுகின்ற intuitionஆகவும் பகுதியான பார்வையாக இல்லாமல் முழுமையான பார்வையாகவும் வெளிப்படும். மேலும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களையும் ஒருசேரப் பார்க்கும் திறமையையும் மேலோட்டமாக முரண்பாடாகத் தெரிகின்றவற்றை உடன்பாடுகளாகப் பார்க்கின்ற திறனையும் வழங்கும். அடுத்ததாக நம்முடைய உணர்வு நிலையில் Higher Self வெளிப்படும்போது நிபந்தனையற்ற அன்பாகவும் அளவுகடந்த நல்லெண்ணமாகவும், நிரந்தர சந்தோஷமாகவும், முறியடிக்க முடியாத மனோபலம், அசைக்க முடியாத அமைதி, மற்றும் நிதானம் ஆகியவற்றோடு அடுத்தவர் உடம்பே கரைந்து போகக்கூடிய அளவிற்கு ஒரு இனிமையாகவும் வெளிப்படும். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் ஒரு இடையறாத நன்றியறிதலை இறைவனுக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். நம் உடம்பு லெவலில் வெளிப்படும் பொழுது களைப்பே வராமல் நீண்ட நேரம் உழைக்கக்கூடிய உடல் தெம்பாகவும், விரைவான மற்றும் நளினமான உடல் movementsஆகவும், ஒரு வருடத்தில் செய்யக்கூடிய வேலையை ஒரு சில நாட்களிலும், ஒரு சில நாட்களில் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்திலும், சில மணி நேரத்தில் செய்யக்கூடிய வேலையை சில நிமிடங்களிலும் செய்யக்கூடிய திறமையாகவும் வெளிப்படும்.

மேலும் உடல் அளவில் Higher Selfஇன் எனர்ஜி வெளிப்படும் பொழுது மாற்ற முடியாத habits மற்றும் பழக்கவழக்கங்களில் நம் உடம்பு சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாகச் செயல்படும் அளவிற்கே நம் உடம்பை வைத்திருக்கும். வேறு வகையாகச் சொன்னால் நாம் ஏற்கனவே செய்த வேலைக்கு உண்டான பழக்கவழக்கங்களும் அணுகுமுறைகளும் புதிதாகச் செய்கின்ற வேலையில் குறுக்கிடாத அளவிற்கு நம்முடைய Higher Self பார்த்துக் கொள்ளும். நம் Higher Selfனுடைய power of spiritual plasticity நம் உடம்பு நிலையில் வெளிப்படும்போது இப்படியெல்லாம் வெளிப்படும்.

நம்முடைய Higher Self activeஆகச் செயல்படும்பொழுது அதனால் விளைகின்ற நன்மைகள் நம்முடைய உடல்நலம் என்ற விஷயத்தில் மிகத்தெளிவாகத் தெரியும். நம்முடைய உடம்பின் எனர்ஜி லெவலை எப்பொழுதுமே அது positive sideஇலேயே வைத்துக் கொள்ளும். அதாவது வேலை செய்வதால் நாம் செலவு செய்கின்ற எனர்ஜியைவிட கூடுதலாகவே நமக்கு Higher Self எனர்ஜியை வழங்கிவிடும். உதாரணமாக ஒரு நாளைக்கு 1000 யூனிட் எனர்ஜியை வேலையில் செலவு செய்வதாக வைத்துக் கொள்வோம். நம்முடைய Higher Self நமக்கு 2000 யூனிட் எனர்ஜியை வழங்கிவிடும். ஆகவே ஒரு நாள் இறுதியில் வேலையெல்லாம் முடித்துவிட்டு நாம் ஓய்வு எடுக்கும் பொழுது நம்முடைய உடம்பில் செலவு செய்த எனர்ஜி போக net positive balanceஆக ஒரு ஆயிரம் யூனிட் எனர்ஜி இருக்கும். இப்படி நம்முடைய எனர்ஜி லெவல் எப்பொழுதுமே positive sideஇல் இருக்கும் என்றால் உடல் நலக்குறைபாடு நம் உடம்பில் எப்படி வரும் என்ற கேள்வி வருகின்றது. நாம் அறிவில்லாமல் நம் உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளும் வகையில் ஏதேனும் செய்தாலன்றி நமக்கு உடல்நலப் பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் நம்முடைய Higher Self activeஆக இருக்கும்பொழுது நம்முடைய மேனி பளபளவென்று மினுக்கும் வண்ணம் ஒரு ஒளி படர்ந்திருக்கும். நமக்கு 40 அல்லது 50 வயது ஆகியிருந்தாலும் அந்த வயதிற்கே பொருத்தமில்லாத ஒரு இளமையான முகத்தோற்றத்தை நம்முடைய Higher Self நமக்கு வழங்கும். ஒரு நிரந்தர புன்சிரிப்பை நம் முகத்தில் பதியவைத்து யார் நம்மிடம் நெருங்கி வந்தாலும் நம்மிடம் ஒரு தெய்வீக அம்சம் செயல்பட்டுக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு அது அவர்களை உணர வைக்கும். மேலும் நாம் வெளிப்படுத்துகின்ற எனர்ஜிக்கும், நாம் சாப்பிடுகின்ற சாப்பாடு, நாம் செய்கின்ற வேலை மற்றும் நாம் இருக்கின்ற இடத்தில் உள்ள வானிலை என்று எவற்றிற்குமே சம்பந்தம் இல்லாததாகக் காண்பிக்கும். அதாவது எனர்ஜி லெவலைப் பற்றி நமக்கு இருக்கின்ற understandingஐ முற்றிலுமாக முறியடித்துக் காட்டும்.

நம்முடைய Higher Selfனுடைய சுபாவம் இவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது என்றால் இப்படிப்பட்ட ஒரு Higher Self நமக்குள் activeஆக இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து கொள்ள நமக்கு ஒரு ஆர்வம் வருவது இயற்கை. இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இரண்டு விதமான வாய்ப்புகளும் உள்ளன. இருந்தாலும் நாம் அன்னையிடம் வந்திருக்கிறோம் என்பதை வைத்துப் பார்க்கும்போது அது நமக்குள் activeஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதை பரிசோதித்துத் தெரிந்து கொள்ள நமக்கு ஒரு வழியும் இருக்கிறது. நமக்குள் ஒரு Higher Self activeஆக இருக்கிறதா என்று தெரியப்படுத்தச் சொல்லி நாம் அன்னையிடம் கேட்கலாம். நாம் சின்சியராகவும், சீரியஸாகவும் அன்னையிடம் சரியாக காலை 6 மணிக்குச் சொன்னால் மாலை 6 மணிக்குள் அது நமக்குள் activeஆக இருக்கிறதா, இல்லையா என்பதை அன்னை காண்பித்து விடுவார்கள். அது இருக்கிறது என்றால் அது தான் இருப்பதை நமக்குத் தெளிவாக அறிவிக்கும். நாம் எதிர்பார்க்காத ஒரு பெரிய நல்ல செய்தி நம்மைத் தேடி வரலாம் அல்லது நீண்ட காலமாக தீராது இருந்த ஒரு பிரச்சனை உடனடியாகத் தீரலாம். ஏமாற்றமும் நஷ்டமும் தான் ஒரு விஷயத்தில் நமக்கு காத்திருக்கின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது நிலைமை தலைகீழாக மாறி நமக்குச் சந்தோஷமும், நல்ல பலனும் கிடைத்து நம்மை வியப்புக்குள் ஆழ்த்தலாம். அல்லது காரணமே இல்லாமல் நமக்குக் காலையிலிருந்து மாலை வரையிலும் ஒரு கட்டுக்கடங்காத சந்தோஷமும், உற்சாகமும் வரலாம். ஆகவே அறிகுறிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். Higher Self இருக்கிறது என்று நமக்கு உறுதியாகத் தெரியும்பட்சத்தில் அதனுடைய தேவைகளுக்கு ஏற்றபடி நம்முடைய வாழ்க்கையை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம்முடைய இலட்சியங்கள், வேல்யூக்கள், நாம் செயல்படும் பாணி மற்றும் நமக்குண்டான வேலையை எதிர்கொள்ளும் அணுகுமுறைகள் என்று எல்லாவற்றையும் நாம் இப்பொழுது நம்முடைய Higher Selfக்கு ஏற்றபடி மாற்றியாக வேண்டும். இதுவரை நமக்காக வாழ்ந்திருந்தால் இப்பொழுது அந்த இடத்திலிருந்து மாறி நாம் அன்னைக்காக வாழ முன்வர வேண்டும். பணம், பதவி, அந்தஸ்து, இதைத்தான் நாம் இதுவரையிலும் நாடி இருக்கிறோம் என்றால் இனிமேல் இவற்றைத் தவிர்த்து ஆன்மீக வளர்ச்சி, திருவுருமாற்றம், அன்னை சேவை என்று இவற்றை நாட வேண்டும். இதுவரை நாம் நம்முடைய பணபலம், பதவி பலம், அறிவு பலம் என்று இவற்றை நம்பி செயல்பட்டிருந்தோம் என்றால் இனிமேல் இவற்றிற்குப் பதிலாக அன்னை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, பக்தி மற்றும் மௌன சக்தி, மற்றும் உள் மனமாற்றம், என்று இவற்றை பிரதானமாக வைத்துச் செயல்பட வேண்டும்.

இப்படியெல்லாம் நாம் மாற்றங்களைக் கொண்டு வந்தால்தான் இத்தனை நாள்வரையிலும் நாம் கண்டுகொள்ளாத நமக்குள் அமர்ந்திருக்கின்ற தெய்வீக விருந்தாளியை நாம் இனிமேலாவது முறையாக நடத்துவோம் என்று அர்த்தமாகும். இத்தனை நாள் நாம் நமக்குள் இருக்கின்ற Higher Selfஐ கண்டுகொள்ளவில்லை என்பதால் அது நம்மேல் கோபித்துக் கொள்ளப்போவது இல்லை. மாறாக, என்றைக்கு அதனுடைய presenceஐ நாம் உணர்ந்து கொள்கிறோமோ அன்றிலிருந்தே அது நம்மோடு ஒத்துழைக்க ஆரம்பிக்கும்.

அப்படி நமக்குள் activeஆன Higher Self இல்லை என்று வாழ்க்கை நமக்கு அறிவித்தால் அதற்காக நாம் ஏமாற்றம் அடைவதோ, வருத்தப்படுவதோ தேவையில்லை. Higher Self இருப்பதாகத் தெரியவில்லை என்றால் அது நாம் உணர முடியாத அளவிற்கு ஆழத்தில் இருக்கிறது என்றும், அதனை மூடி அழுத்திக் கொண்டிருக்கின்ற அறியாமை, பொய், மற்றும் தமஸ் ஆகிய திரைகள் அதாவது layers வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கின்றன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்த வேண்டாத போர்வைகளை எல்லாம் களைந்து எடுத்துவிட்டு, இவற்றால் மூடி மறைக்கப்பட்டிருந்த Higher Selfஐ வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் நாம் maximum முயற்சி எடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவசாயி தன் நிலத்தில் உள்ள பயிருக்குத் தண்ணீர் பாய்ச்ச நீர் ஆதாரம் தேடுவதாக வைத்துக் கொள்வோம். பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் நீர் இருப்பதாக அவருக்குத் தெரிய வருகிறது. அப்படித் தெரிய வரும்பொழுது கிணறு வெட்டியோ அல்லது borewell போட்டோ இந்தத் தண்ணீரைப் பார்க்கும்வரையிலும் அவர் ஓயமாட்டார். அம்மாதிரி நம்முடைய ஜீவனின் ஆழத்தில் Higher Self இருக்கிறது என்று நமக்குத் தெரிந்தால் இடையில் தடையாக இருக்கின்ற அறியாமை, பொய் மற்றும் தமஸ் ஆகிய

இடர்பாடுகளைக் களைந்தெடுத்து Higher Selfஐ மேலே கொண்டு வரும் வரையிலும் அந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளவர்கள் அதற்குண்டான முயற்சிகளை நிறுத்தக் கூடாது. இத்தகைய ஒரு முயற்சிக்கு உண்டான மன உறுதியோ அல்லது அறிவுத் தெளிவோ நமக்கு இல்லை என்று நாம் நினைத்தாலும் அதன் காரணமாகவும் தைரியம் இழக்க வேண்டாம். நமக்குத் தெரிந்தவர்களில் இப்படி ஒரு Higher Self உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அவரோடு ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவருடைய வழிகாட்டல் கிடைக்குமா, அதன்படி செயல்பட முடியுமா என்று நாம் பார்க்க வேண்டும். திரு. கர்மயோகி அவர்கள் இருக்கிறார், ஆனால் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருக்கிறார் என்று நாம் கவலைப்பட வேண்டாம். அவருடைய புத்தகங்கள் மூலம் நாம் அவரோடு நெருக்கமான தொடர்பையே வைத்துக் கொள்ளலாம். அவரெழுதிய ஸ்ரீ அரவிந்தம், Spirituality and Prosperity volumes, பொன்னொளி, பூலோக சுவர்க்கம், தத்துவ ஞானம், யோக வாழ்க்கை விளக்கம் போன்ற புத்தகங்களிலும், திரு. Garry Jacob அவர்கள் எழுதியுள்ள Life Divine lectures மற்றும் அதற்கு நான் எழுதிய Life Divine விரிவுரைகள் தமிழாக்கத்திலும் Higher Selfஐ எப்படி வளர்த்துக் கொள்வது என்பது பற்றிய நிறைய குறிப்புகள் உள்ளன. இவற்றை எல்லாம் நாம் படிக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்து திரு. கர்மயோகி அவர்கள் எதிர்பார்க்கின்ற தீவிரத்தை நம்முடைய முயற்சியில் கொண்டு வந்தோம் என்றால் ஒரு காலகட்டத்தில் நம்முடைய Higher Self மேலே வெளிப்பட்டு நமக்கு ஒரு பேரானந்தத்தை வழங்கும்.

நான் இதுவரையிலும் Higher Selfனுடைய Nature என்ன, அதனுடைய விசேஷ குணாதிசயங்கள் மற்றும் ஆற்றல்கள் என்ன என்று சொல்லியவை எல்லாம் என்னுடைய வெறும் கற்பனையில் பிறந்த விஷயங்கள் இல்லை. இந்த பரிசோதனையை சீரியஸாகப் எடுத்துக் கொண்டு அதில் தீவிரமாக இறங்கி வெற்றி பெறுபவர்கள் நான் சொன்னதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று அவர்களே உணர்ந்து கொள்வார்கள். இந்த Higher Selfஐத் தேடிக் கண்டுபிடிக்கத் தான் நாம் அன்னையிடம் வந்துள்ளோம். நாம் எதற்காக வந்தோமோ அந்த முயற்சியில் நாம் வெற்றி பெறும்பட்சத்தில் நமக்குக் கிடைத்துள்ள Higher Selfஇனுடைய தொடர்பு நாளாவட்டத்தில் அன்னையினுடைய தரிசனத்தையே நமக்கு அகக்காட்சியில் கிடைக்க வழி செய்யும். அப்படி ஒரு அற்புதமான காட்சி நமக்குக் கிடைக்கின்றபொழுது அந்தக் காட்சி கிடைப்பதற்கு நமக்கு வழி செய்த நம்முடைய Higher Selfக்கு இந்தச் சமயத்தில் நாம் கண்டிப்பாக நன்றி கூற வேண்டும். நம்முடைய நன்றியறிதலை அது எதிர்பார்க்கிறது, கேட்கிறது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அது கேட்கிறதோ, இல்லையோ நன்றி சொல்வது நமக்கு நல்லது என்பதால் நான் இதைச் சொல்கிறேன்.

முற்றும்.

******



book | by Dr. Radut