Skip to Content

10. அன்னை இலக்கியம் - அகல்யை என்று நினைத்தனையோ?

அன்னை இலக்கியம்

அகல்யை என்று நினைத்தனையோ?

சமர்ப்பணன்

மார்கழி மாதத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் நதிக்கரைக்கு நீராடச் சென்றாள் ஆனந்தவல்லி. அவள் முன்கோப முனிவனான சந்திரசூடனின் பத்தினி.

"பிரம்மனுக்குப் பிழையின்றி படைக்கத் தெரியாது' என்ற ஓர் அசுரனின் ஏளனப் பேச்சைப் பொய்யாக்குவதற்காக, அல்லும்பகலும் அரும்பாடுபட்டு மிகுந்த கவனத்துடன் நான்முகன் உருவாக்கியப் பேரழகி ஆனந்தவல்லி. தன் படைப்பைக் கண்டு தானே பிரமித்த பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி பிற தேவர்களும் ஆனந்தவல்லிக்கு அனைத்து வளங்களையும் வாரி வழங்கி மகிழ்ந்தனர்.

அவள் பருவம் எய்தியபோது "ஒப்பற்ற இப்பெண்ணுக்கு ஏற்ற மணாளனை எங்குத் தேடுவது?' என்று அனைவரும் கலங்கியபோது, "சென்ற பௌர்ணமியன்று நான் நதிக்கரையில் கண்ட சந்திரசூடரே என் இதயத்திற்கேற்ற மணாளர்'' என்று நாணத்துடன் உலகுக்கு அறிவித்தாள் ஆனந்தவல்லி.

மனம் கலங்கிய பெற்றோர், "அவன் கல்நெஞ்சன், முன்கோபி, தன் தவமே பெரிதென்று போற்றி, உலகை உதறிவிட்டு, பிறர் உணர்வுகளை மதிக்காமல் வாழும் முனிவன், அடுத்த வேளை உணவிற்குப் பிறர் கையை நம்பி இருப்பவன்'' எனக் கண்களில் நீர் வழியப் புகன்ற நல்லுரைகளை மறுத்தாள் ஆனந்தவல்லி. "அவரைக் கண்டதும் அவரது ஆன்மாவை என் ஆன்மா தீண்டியது. எக்காலத்திலும் நான் அவருக்கே உரியவள் என்பதை உணர்ந்து விட்டேன். என் உடல், பொருள், பிராணன், மனம், ஆன்மா உட்பட அனைத்தையும் முழுமையாக எந்த எதிர்பார்ப்புமின்றி அவருக்குத் தருவதே என் வாழ்வின் இலட்சியம்'' என்று அவள் உறுதியாக இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் முனிவனுக்கு மனைவியானாள்.

அரண்மனை ஆடம்பர சுகங்களைத் துறந்து கணவனின் அரண்ய குடிலுக்கு வந்தவள், அந்தக் குடிலுக்கும், அதன் தலைவனான சந்திரசூடனுக்கும் பெருமை தேடித் தந்தாள். அவளது மருண்ட கண்களைக் கண்டு மயங்கிய மான்களும், அவளது இனிய குரலினைக் கேட்டுக் களித்த குயில்களும், அவளது வண்ணத் தோற்றத்தினைக் கண்டு திகைத்த மயில்களும், "இனி இக்கானகத்தில் நமக்கு வேலை இல்லை' என்று வேறு காட்டிற்குக் குடி பெயர்ந்தன.

ஆனந்தவல்லியின் எதிர்பார்ப்பற்ற அன்பும், தன்னை நிபந்தனையின்றித் தந்த பண்பும், பழுதற்ற சேவையும், மாசற்ற நல்லெண்ணமும், கணவனின் குறைகளை நிறைகளாக உணர்ந்த ஞானமும் ஒன்று சேர்ந்து சந்திரசூடனுக்கு அளவற்ற ஆன்மீக வளத்தையும், அதன் மூலம் வாழ்க்கை வளத்தையும் பெற்றுத் தர இருவரும் பூலோக சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தனர்.

அப்படி வாழ்ந்து வரும்போதுதான் முதலில் கூறியபடி மார்கழி மாதத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் நதிக்கரைக்கு நீராடச் சென்றாள் ஆனந்தவல்லி.

மாற்றான் மனத்தால் நினைத்தாலே கற்புடைய பெண்ணுக்கு தெரிந்துவிடுமே! நீராடுவதற்காக தன் ஆடைகளைக் களைய நினைத்தவள், தன் மனத்தில் ஏதோ தட்டுப்பட, வானத்தை நோக்கினாள்.

அங்கே மேகத்தின் நடுவிலே மறைந்து கொண்டு ஓர் அழகிய ஆண்மகன், தான் ஆடைகளைக் களைவதற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டாள். கற்பரசியின் இதழ்களில் மின்னலாகத் தோன்றிய ஒரு சிறு புன்னகை, அக்கருமேகத்தைத் தீண்ட, அது மழையாகக் கரைந்தது. ஒளியுமிடத்தை இழந்த அந்த ஆண்மகன் - அவன் தேவேந்திரன் - விரைந்து எங்கோ ஓடி மறைந்தான். அத்துடன் அப்பதரை மறந்த ஆனந்தவல்லி ஆடைகளைக் களைந்து நீராடிவிட்டுக் குடிலுக்குத் திரும்பினாள்.

யோகமியற்றும் மாமுனிவரின் முன் தகாத செயல் செய்ய நினைத்தவனின் பெயரைக்கூடக் குறிப்பிட ஆனந்தவல் விரும்பவில்லை.

இந்திரனால் அவளை மறக்க முடியவில்லை. அவனைக் காமம் சுட்டெரித்தது. "எழிலரசியான அம்மானிடப் பெண்ணை ஒரு முறையேனும் தீண்டித் தழுவி இன்பம் காண முடியாவிட்டால், நான் தேவேந்திரனாக மனிதர்களைவிட உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்து என்ன பயன்?'

அகல்யாவைத் தீண்டி, கௌதம முனிவரிடம் சாபம் பெற்று தான் பட்ட பாடு இந்திரனுக்கு நினைவிற்கு வந்தது. "சாபத்திற்கு பயந்தால் காமம் கை கூடாதே! என்ன பெரிய சாபம்? நினைத்ததைச் சாதித்துக் கொண்டபின் கண்ணீர் விட்டுக் கதறி நாடகமாடினால், சாபம் கொடுத்தவனே சாப விமோசனத்திற்கு வழி சொல்லிவிட்டுப் போகிறான். எத்தனை காலம்தான் ரம்பை, ஊர்வசி, மேனகா போன்ற தேவதாசிகளுடன் மட்டுமே சல்லாபம் செய்து கொண்டிருப்பது? சலித்துப் போய்விட்டது, மாறுதல் வேண்டாமா? ஆனந்தவல்அ டுத்தவன் மனைவிதான். ஆனால் அதிரூப சுந்தரியாக இருக்கிறாளே! என் மனம் மயங்கி, நான் மோகத்தில் மூழ்குமளவிற்கு அழகாக இருப்பது அவள் குற்றமல்லவா?'

சூதாடுபவன் எத்தனை முறை தோற்றாலும் அடுத்த முறை வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் சூதாடத் துணிவான். பிறன்மனை விழைபவன் எத்தனை முறை அவமானப்பட்டாலும் மீண்டும் ஒரு முறை குலமகளை விழையத் தயங்கமாட்டான்.

அகல்யாவை அபகரிக்கப் பயன்படுத்திய சதித்திட்டத்தை மீண்டும் அரங்கேற்றத் தீர்மானித்த இந்திரன், நன்றாக இருட்டியதும் மெல்ல சந்திரசூடனின் குடிலுக்கருகில் வந்தான். "உள்ளே என்ன நடக்கிறது?' என்று அறிய பிறனது படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தான். தன் ஆயிரம் கண்களையும் அகல விரித்துப் பார்த்தான், ஆசை எந்தக் காலத்தில் வெட்கமறிந்திருக்கிறது?

கருங்காலி மரக்கட்டிலில் சந்திரசூடன் விட்டத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் படுத்திருந்தான். அருகே தரையில் பாய் விரித்து ஆனந்தவல்லி கண்மூடாது தன் கணவனின் முகத்தையே பரவசத்துடன் பார்த்தபடி படுத்திருந்தாள். கணவன் உறங்குமுன் அவள் எப்படி உறங்குவாள்?

ஆனந்தவல்லியின் அருகே இருந்த விடிவிளக்கின் ஒளிச்சுடர், சந்திரசூடனின் இல்லம் இருண்டு போகாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

விடிவிளக்கின் ஒளிச்சுடரை தொட்டுவிட நினைத்து ஒரு விட்டில் பூச்சி, ஒளிச்சுடரை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஒளிச்சுடரைத் தீண்டினால், அதன் வெப்பத்தில் விட்டில் பூச்சி கருகிப் பொசுங்கிவிடும். தன்னை அப்படி பொசுக்கிக் கொள்வதில் தனக்கு எத்தனை இன்பம் கிடைக்கிறது என்பதை விட்டில் பூச்சியால் மட்டும்தான் சொல்ல முடியும்.

பசித்த புலி கழுத்தை முறிக்கும்போது புள்ளிமானிற்கு உண்டாகும் பரவசத்தை அப்புள்ளிமானால் மட்டும்தான் உணர முடியும்.

விடிவிளக்கின் பொன்னொளி பூத்திருந்த அறைக்குள் ஒயிலாக ஒருக்களித்துப் படுத்திருந்த ஆனந்தவல்லியின் பாதங்களைத் தொட்டு வணங்கத் துடித்த சந்திரன் தன் வெண்ணொளியை சாளரத்தின் வழியே செலுத்த, அந்த ஒளியின் வழியே இந்திரப் பூச்சி அவளைப் பார்த்தது.

ஆனந்தவல்லியின் வதனம், சகலமும் தன்னுள் இருந்தபோதும் சலனமற்று இருக்கும், படைப்பிற்கு முன்னிருந்த பிரம்மத்தைப் போல அமைதியாக இருந்தது. அது அவசியம் ஏற்படும்போது சலனமுள்ள சக்தி சமுத்திரமாகவும் மாறும்.

பூரண ஞானத்தைப் பெறத் துடித்துக் கொண்டிருந்த சந்திரசூடனின் மனம்தான் அலை பாய்ந்து கொண்டிருந்தது. பூரண ஞானத்தை அடைவதற்காக எத்தனை ஆண்டுகள் உழைத்துவிட்டான்!

"நான் கற்காத மறைநூல்கள் இனிமேல்தான் எழுதப்பட வேண்டும். நான் செய்யாத யாகங்கள் இனிமேல்தான் உருவாக்கப்பட வேண்டும். நான் அறியாத மந்திரங்கள் இனிமேல்தான் கேட்டறியப்பட வேண்டும். ஆனாலும்.... ஆனாலும்.... பூரணம் இன்னும் சித்திக்கவில்லையே! முன்னேற்றம் தடைபட காரணம் என்ன? தெரியாமல் என்ன! நானும் மனிதன்தானே? உரிமைக்குரிய பேரழகியை அருகிலும், மோகத்தை உணர்விலும் வைத்துக் கொண்டு யோகம் செய்யச் சொன்னால் மனிதன் என்னதான் செய்வான்? மோகத்தை அனுபவித்து தீர்க்கலாம் என்றால் என் மோகம் அனுபவித்தால் மேலும் வளர்கிறதே! சரி, மோகத்தை மறுக்கலாம் என்றாலோ அது உள்ளுக்குள் வேர்விட்டு வளர்ந்து உடல் முழுவதும் பரவுகிறதே! காமத்தை மறக்க வேண்டும் என்று நினைத்தால், அதைப் பற்றிய நினைவு வலுக்கிறதே! மோகத்தில் மூழ்கியவன், யோகத்தில் முன்னேறுவது நடக்கக்கூடிய காரியமா? எனது இந்த அவலநிலைக்கு ஆனந்தவல்லி அல்லவா காரணம்? இவள் என் வாழ்வில் குறிக்கிடாமல் இருந்திருந்தால் நான் பெண்ணையே நினைக்காமல் யோகத்தில் பெருமுன்னேற்றம் பெற்றிருப்பேனே!' பெருமூச்சு விட்டான் சந்திரசூடன்.

கணவனின் மனதிற்குள் சாந்தி இல்லை என்பதை உணர்ந்த மனைவி, தன் பாயிலிருந்து எழுந்து, அவனருகே கட்டிலில் அமர்ந்து, தன் மலர்க்கைகளால் அவன் தலையை மெல்ல வருடித் தந்தாள்.

அவள் கைகளைக் கோபத்துடன் தள்ளிவிட்டான் சந்திரசூடன். "யோகத்தையும், ஞானத்தையும் அறியாத உன்னை ஏறெடுத்துப் பார்ப்பதுவும் பாவம்தான். உன்னோடு வாழவும் முடியாமல், உன்னை மறக்கவும் முடியாமல், என் இலட்சியத்தை அடையவும் முடியாமல் நான் தவிப்பதற்கு நீ அல்லவா காரணம்? உன் சேவை எனக்குத் தேவை இல்லை. உன் காமபலிபீடத்தில் என் யோகம் பலியாக நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன்'' என்று வழக்கம் போல வெடித்தான் முனிவன்.

அவனது குரூரமான வார்த்தைகளால் சிறிதும் பாதிக்கப்படாமல், நித்தமும் நடக்கும் நிந்தனை நாடகத்தை, எவ்வித எதிர்வினையுமின்றி ஏற்றுக் கொண்ட ஆனந்தவல்லி மாறாத புன்னகையோடு மீண்டும் தன் மலர்க்கரங்களால் சந்திரசூடனின் கண்ணிமைகளையும் புருவங்களையும் வருடித் தந்தாள்.

அவள் மடியில் தலை வைத்ததும் அவனை நிம்மதி சூழ்ந்தது. அவளது மலரத் துடிக்கும் தாமரைமொட்டு மார்பகங்களில் முகத்தைப் புதைத்ததும் முனிவனுக்கு காம உணர்வு மறைந்து இறை உணர்வு ஊற்றெடுத்தது. "பூரண ஞானத்தைப் பெறுவது எப்படி?' என்ற அதிதீவிர ஆர்வம் மீண்டும் எழுந்தது.

நள்ளிரவு நெருங்கும்போது சந்திரசூடன் நித்திரையில் ஆழ்ந்தான். அதன்பின் ஆனந்தவல்லி அவனது தோளில் தலைசாய்த்து அவனருகே அமைதியாக உறங்கத் தொடங்கினாள்.

சற்று நேரம் கழிந்த பின் "தன் திட்டம் பலிக்கும் நேரம் வந்து விட்டது' என்று மகிழ்ந்த இந்திரன், மாயச் சேவலை ஏவினான். சேவலும் கூவியது.

சேவல் கூவினால் விடிந்துவிட்டது என்ற அர்த்தமற்ற நம்பிக்கையினாலும், விடியும் சமயம் கங்கையில் நீராட வேண்டும் என்ற பல்லாண்டு பழக்கத்தினாலும், சந்திரசூடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்த ஆனந்தவல்லியை எழுப்ப மனமின்றி, சத்தமின்றி எழுந்து கங்கையை நோக்கிப் புறப்பட்டான்.

குளிர்ந்த காற்றில் நனைந்தவாறு கங்கையை நெருங்கும்போதுதான் கமண்டலத்தை எடுத்துவர தான் மறந்துவிட்டதை உணர்ந்த முனிவன் திடுக்கிட்டான். "கமண்டலம் இல்லாமல் தியானம் செய்வது முறை அல்லவே! இதுவரை இப்படிப்பட்ட தவறு நிகழ்ந்ததில்லையே. இதன் பொருள் என்ன?

ஏன் இன்னமும் பறவைகள் குரல் கொடுக்கவில்லை?' என்ற சிந்தனையோடு குடிலுக்குத் திரும்பலானான்.

தன் ஆயிரம் கண் பார்வையிலிருந்து சந்திரசூடன் மறைந்ததும், "முனிவன் கங்கைக்குச் சென்றுவிட்டான். திரும்ப நேரமாகும்' என்று முடிவு செய்த தேவேந்திரன் அவனைப் போலவே வேடம் புனைந்து, பரபரப்புடன் குடிலுக்குள் நுழைந்து கட்டிலை நெருங்கினான். ஆடைகள் சற்றே கலைந்த நிலையில், விடிவிளக்கின் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத உயிர்ச்சித்திரமாக உறங்கிக் கொண்டிருந்த ஆனந்தவல்லியைப் பார்த்த இந்திரனின் மனம் தான் அடையப் போகும் இன்பானுபவத்தை எண்ணித் துள்ளியது.

பெண்ணையே பார்த்தபடி நடந்த விண்ணவன் மண்ணைப் பார்க்கவில்லை. கட்டிலருகே இருந்த கமண்டலம் அவன் கால்களில் பட்டு பலத்த ஓசையுடன் உருண்டது.

கற்பரசி கண் விழித்தாள்.

ஒரு கணப் பொழுதில் நெகிழ்ந்திருந்த ஆடைகளைத் திருத்திக் கொண்டாள் ஆனந்தவல்லி. தான் பல காலம் துலக்கி சுத்தம் செய்த ஜீவனுள்ள கமண்டலம், தக்க சமயத்தில் தன்னை எழுப்பியதை எண்ணி நன்றி உணர்வால் பூரித்தவள், கமண்டலத்தை எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்து நின்றாள்.

"என் அன்பே, நீ ஆசையோடு என்னை அணைத்தபோது வேறு சிந்தனைகளில் மூழ்கி இருந்ததால் கடுமையாகப் பேசிவிட்டேன். உனக்குத்தான் என் முன்கோபம் பற்றித் தெரியுமே! என்னை மன்னித்துவிடு. இதோ, உன் தீண்டலை வேண்டி நிற்கும் உன் ஆசைக் கணவனை ஏற்றுக் கொள்'' என்று காமம் குரலில் பொங்கி வழிய, கூடலுக்கு ஏங்கி, தன் இரு கைகளையும் விரித்து ஆனந்தவல்லியை அணைக்க நெருங்கினான் முனிவனைப் போல மாறுவேடம் பூண்டிருந்த இந்திரன்.

அவன் கைகள் தன்மேல் பட்டுவிடாமல் விரைந்து விலகிக் கொண்ட மாதரசி, "தேவேந்திரா, அகல்யை என்று நினைத்தனையோ ஆனந்தவல்லியை?'' என்று புன்னகை மாறாத முகத்தோடு கேட்டாள்.

அதிர்ந்து அசைவற்று நின்றான் இந்திரன்.

அதிரசம் திருடப் பார்த்த தன் குழந்தையை அதிரசக் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட தாய், அன்புடனும் கண்டிப்புடனும் குழந்தையைப் பார்த்துச் சிரிப்பது போல இந்திரனைப் பார்த்துச் சிரித்தாள். எச்சூழ்நிலையிலும், எவரிடமும் குறை காணத் தெரியாத குணவதி, இந்திரனிடமும் குறை ஒன்றும் காணவில்லை.

அதே கணம் குடிலுக்குள் நுழைந்த முனிவனின் கண்களில் தன்னைப் போல வேடம் பூண்டிருந்த இந்திரனின் விரிந்த கைகளும், அவனருகே சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருந்த தன் மனைவியும் பட, சந்திரசூடன் கோபத்தால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டான்.

"பஞ்சமாபாதகனே, சாகாவரம் பெற்று விட்டோம் என்ற கர்வத்திலே குற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகிறாய். ஆயிரம் கண்களிருந்தும் காலம் மாறிவிட்டதை நீ காணத் தவறிவிட்டாய். கோபியரோடு கிருஷ்ணன் கொஞ்சி விளையாடியபோது ஒவ்வொரு மனித ஜீவனின் நெஞ்சிலும் பொன்னொளி பூத்துவிட்டது. அதன் துணை கொண்டு பரிணாமம் மூலம் மனிதன் உன்னைப் போன்ற மேலுலக தெய்வங்களைக் கடந்த உயர்ந்த நிலையை அடைவான். அப்போது பொன்னொளி இல்லாத உன்னைப் போன்ற தெய்வங்களின் கதி என்னவோ! நயவஞ்சகனே, உன் ஆயிரம் கண்களும் மீண்டும் யோனிகளாக மாறட்டும். பிறன்மனை விழைந்த உன் இழிசெயலை பிரபஞ்சம் என்றென்றும் தூற்றட்டும்'' என்று முனிவன் சாபமிட்ட அடுத்த கணம் அழகிய இந்திரன் அலங்கோலமான நிலையை அடைந்தான்.

அதன்பின் சந்திரசூடனது கோபம் ஆனந்தவல்லியின் மீது திரும்பியது. அவளது கருணை ததும்பும் கண்களையும், மலர்ந்த முகத்தையும் பார்த்தால் எங்கே தன் கோபம் கரைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தரையைப் பார்த்தவண்ணம், அவளை ஏறிட்டுப் பார்க்காமல் முனிவன் கலங்கிய குரலில் கூறினான், "உண்மைக்கும், பொய்மைக்கும் வேறுபாடு தெரியாமல், காம உணர்ச்சியால் தன்னிலை மறந்தவளே, நீ எல்லா உணர்ச்சிகளையும் மறந்த வெறும் கல்லாக மாறக் கடவாய்!''

பாலைவனத்தில் பலகாலம் தாகத்தால் தவித்தவள் மீது அமுதமழை பொழிவது போல உணர்ந்தாள் ஆனந்தவல்லி.

"அம்மம்மா! என் கணவருக்குத்தான் என் மீது எத்தனை காதல்! பாவம், வேறு ஒருவன் என்னைத் தீண்டிவிட்டான் என்ற நினைப்பில் எப்படித் துடித்துவிட்டார்! என்மீது எத்தனை உரிமை கொண்டாடியிருந்தால், இப்படி ஒரு சாபத்தை எனக்குக் கொடுக்கத் துணிவார்! இவரைக் காதல் கணவராக அடைய நான் என்ன தவம் செய்தேனோ!' என்று நெகிழ்ந்துபோன பேதை, முனிவனின் சாபத்தை ஏற்கும்வண்ணம் தலை வணங்கி நின்றாள்.

அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது.

கல்லாக மாற சபிக்கப்பட்டவளின் மனித உடலில் பொன்னொளி தோன்றியது. ஆனந்தவல்லி ஆயிரம் சூரியர்கள் கூடியதைப் போல ஒளி வீசி உயிரோட்டம் பெற்ற பொற்சிலையாகப் பிரகாசித்தாள். அகன்ற கண்களில் நீலமணி கற்களும், பவள இதழ்களின் நடுவே வெண்ணிற முத்துக்களும், காதோரம் வழிந்தோடிய வியர்வைத் துளிகளில் வைரக் கற்களும் ஜொலித்தன.

இது போன்ற சமயங்களில் பூமாரி பொழிந்து வாழ்த்துச் சொல்வதை யுகயுகமாக வழக்கமாகக் கொண்டிருக்கும் கோடானுகோடி தேவர்களும், இந்திரனுக்கு ஏற்பட்ட கதியைக் கண்டு முனிவன் மீது எழுந்த பயத்தால் செயலற்று நின்றிருந்தனர்.

"காதலி கற்சிலையாகவில்லை, பொற்சிலையாகப் பிரகாசிக்கிறாள்' என்ற எண்ணம் முனிவனுக்கு உள்ளூர உவகையைத் தந்தாலும், "என் யோகசக்தியின் பலம் இவ்வளவுதானா, ஒரு பெண்ணிடம் தோற்றுவிட்டேனே' என்ற ஆற்றாமை தளர்ச்சியைத் தந்தது.

"என்னையா சபித்தாய், கேடு கெட்ட முனிவனே, உன்னைப் பார்த்துதான் உலகம் இப்போது சிரிக்கிறது' என்று தன் அவலநிலைக்கு நடுவிலும் மனத்திற்குள் மகிழ்ச்சி அடைந்தான் இந்திரன். வெளியே சொல்ல அவனுக்குத் தைரியம் இல்லை. அவன் கைகள் ஆனந்தவல்லியை வணங்கின. அவளை ஒரு முறை தொழுததும் முனிவனிட்ட சாபம் விலகி, இந்திரன் முன்பைவிட அதிக தேஜஸைப் பெற்றான்.

"என்ன கொடுமை இது! நான் பாவி. இப்படிப் பொன்னாக மாறி இவரது வாக்கைப் பொய்யாக்கிவிட்டேனே! இவர் மனம் என்ன பாடுபடுகிறதோ! பரம்பொருளே, உடனே என்னை வெறும் கல்லாக ஆக்கிவிடு' என்று இரத்தக்கண்ணீர் வடித்தாள் ஆனந்தவல்லி. ஆனால் அக்கண்ணீர்த்துளிகளோ மாணிக்கக் கற்களாக ஜொலித்தன.

நிலைகுலைந்துபோன முனிவன் சந்திரசூடன், மெல்ல நிதானம் அடைந்தான். "உண்மைக்கும், பொய்மைக்கும் பேதம் தெரியாதவள் என்று இவளை சபித்தேன். கூவியது மாயச்சேவல், விடியல் பொய்விடியல் என்பதைக்கூட என்னால் உணர முடியவில்லை. உண்மையில் நானல்லவா அறிவிலி? என் காமத்தை மறைக்க, ஆணாதிக்க, அகங்கார வெறியிலே அவளை விலக்கிப் பழித்தேன். நான் மாற்ற வேண்டியது என் காம உணர்வை அல்லவா? நான் மறைத்த காமம் இந்திரனை இங்கு வரவழைத்து அவன் மூலம் வெளிப்பட்டுவிட்டதே? நான் பார்க்க வேண்டியது என் அகத்தை மட்டுமே, புறத்தை அல்ல. பெண்ணை ஏன் விலக்க வேண்டும்? வாழ்வில் எதையும் ஏன் விலக்க வேண்டும்? பிறரை ஏன் நிந்திக்க வேண்டும்? என் அகமே புறமல்லவா? பார்ப்பன, கேட்பன, தொடுவன, அறிவன, நிகழ்வன அனைத்தும் என் குரு அல்லவா?'

தன் தவறுகளை உணர்ந்த சந்திரசூடன் மாறத் தொடங்கினான்.

"பூரண ஞானத்தை அரண்ய வேள்விகளிலும், கல்வி கேள்விகளிலும், மறை நூல்களிலும் தேடியது என் பேதைமை அன்றோ? பூரண ஞானம் என் உள்ளேயே புதைந்து கிடக்கிறது. அந்த ஞானத்தை வெளிக்கொணர பரம்பொருளே பெண்ணுருக் கொண்டு ஆனந்தவல்லியாக என் முன் நிற்கிறதே! அகந்தையை விட்டு, எதிர்பார்ப்பின்றி, என்னைத் தந்து, அனைத்தும் அவளே என்ற நன்றி உணர்வோடு என் கடமைகளில் குறைவின்றி நடந்தால், ஆனந்தவல்லியின் ஆசி எனக்குக் கிடைக்காமலா போய்விடும்? இனி எதையும் பெறுவதற்காக நான் யோகம் செய்யப் போவதில்லை. நிபந்தனையின்றி ஆனந்தவல்லிக்கு முழுமையாக என்னைத் தந்து, அவளைச் சரணடைவதற்காக மட்டுமே யோகம் செய்வேன். இப்போது நான் மாற வேண்டும். அது ஒன்றே நான் செய்ய வேண்டியது'.

முனிவனின் முகத்தில் குழப்பம் மறைந்து தெளிவு பிறந்தது.

சப்தரிஷி மண்டலத்தில் விண்மீனாக சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த அகல்யா, தன் ஓரக் கண்களால் கௌதம முனிவரை விஷமமாகப் பார்க்க, அவர் சங்கடத்துடன் தலையைக் குனிந்து கொண்டார்.

கணப்பொழுதில் முனிவன் தான் இதுவரை கற்றதையும், கல்லாததையும், பெற்றதையும், பெறாததையும், அறிந்ததையும், அறியாததையும் ஆனந்தவல்லியிடம் மானசீகமாக அர்ப்பணித்தான். சந்திரசூடன் தனக்குப் புரிந்ததையும், புரியாததையும், தெரிந்ததையும், தெரியாததையும், வெற்றிகளையும், தோல்விகளையும், விசுவாசத்தையும், துரோகத்தையும், தர்மங்களையும், அதர்மங்களையும், நன்மைகளையும், தீமைகளையும், ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் அவளிடம் அர்ப்பணித்தான்.

ஆயத்தம் செய்வதற்கு ஆயுள் காலம், சரணம் செய்வதற்கு ஒரு கணம்! தான் இத்தனை காலம் தவமியற்றி காத்திருந்தது இத்தருணத்திற்கே என்பது முனிவனுக்குப் புரிந்தது.

"ஆனந்தவல்லி, என்னையே உன் உலகமாக நினைத்தாய். என் சுடுமொழி உன் உலகமே உன்னை சுடுவது போன்றது. நான் செய்த தவறுகளுக்கு ஒரே பிராயச்சித்தம் லட்சோபலட்சம் பிரபஞ்சங்களும், கோடானுகோடி தேவர்களும், மனிதர்களும் அறிய, நான் மாறி, உன் பாதங்களைப் பணிந்து உன் மன்னிப்பைக் கோருவதே. இனி நான் மனிதனாக நடந்து கொள்வேன். என்னை மறப்பேன், உன்னை நினைப்பேன். இதுவரை நான் உனக்கு இழைத்த தீமைகளை மன்னித்துவிடு. இதுநாள்வரை நீ யாரென்று அறியாமல் வாழ்ந்துவிட்டேன். நீயே இனி என் குரு. உன் பாதமே இனி என் வேதம்'' என்று தழுதழுத்த குரலில் கூறிய சந்திரசூடன், ஆனந்தவல்லியின் பாதங்களைப் பணியக் குனிந்தான்.

தன் கால்களைப் பணியத் துணிந்த கணவனைத் துடிதுடித்துத் தாவித் தடுத்துத் தூக்கிய ஆனந்தவல்லி, அவன் முகத்தைத் தன் மென்மையான மார்பகங்களோடு இறுக அணைத்துக் கொண்டாள்.

மாசற்றப் பெண்ணின் மேனியில் பிரகாசித்த பொன்னொளிப் பிரவாகத்திலிருந்து புறப்பட்ட ஒரே ஒரு துளி ஒளி, அகந்தையை அழித்தொழித்த ஆணின் மீது பட்டதும் அவனது ஆயிரம் ஜென்மங்களின் தவிப்பு தணிந்து அணைந்தது.

இருவரையும் மௌனம் ஆட்கொண்டது.

பிரபஞ்சப் பெருவெளியை மௌனம் சூழ்ந்தது. அம்மௌனப் பெருவெளியில் காதல் கனிந்து பெருங்காதலாக மாறி பூரணம் பெற்றது.

பூரணம் பெற்ற பெருங்காதல், படைப்பின் இருளைப் பொன்னொளியாக மாற்றியது.

பெண்மையின் பூரண ஆசி ஆண்மைக்குக் கிடைத்தது.

முனிவனுக்குப் பூரண ஞானம் சித்தித்து, பூரண யோகம் பலித்தது.

முற்றும்.

*******



book | by Dr. Radut