Skip to Content

09. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

3. அன்னையின் வழியில் அன்றாட வாழ்க்கை

"வாழ்க்கை' என்றால் நல்லது, கெட்டது என்ற இரண்டும் உண்டு. சில சமயங்களில் வெற்றியையும், பல சமயங்களில் தோல்வியையும் அளிப்பது வாழ்க்கை. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதைப்போல வாழ்க்கையிலும் இரு பக்கங்கள் உண்டு. "செல்வம் சகடக்கால் போல வரும்' என்றும், "யானைக்கும் அடி சறுக்கும்' என்றும் கூறும் வாழ்வியல் உண்மைகளை, உலகத்தின் எல்லா நாடுகளும், மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வாழ்க்கையில் ஒரு வெற்றியைப் பெற மனிதன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கின்றது. போராட்டம் நிறைந்ததே வாழ்க்கை. போராட்டம் நிறைந்தது என்றாலும், அதன் முடிவு எப்படி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. போராட உரிமையுள்ள மனிதனுக்கு, முடிவை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. முடிவு, அவன் முயற்சியையும், திறனையும், உழைப்பையும் பொறுத்ததன்று; அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. அது அவன் கையில் இல்லை. உலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற மனிதன், உணர்ந்து தெளிந்த உண்மை இதுவாகும்.

அன்னை மேற்சொன்ன கூற்றுகளில் உள்ள உண்மையை ஒப்புக் கொள்கின்றார். ஆனால், "அது அப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அவருடைய விளக்கமும், அன்பர்களுக்கு அவர் அளிக்கும் அனுபவமும் வேறு.

பொய்ம்மையான காயத்தை (உடல்) உதறித் தள்ளி, மாயையான வாழ்க்கையைத் துறந்து, உண்மையின் சொரூபமான தெய்வத்தையும், மோட்சத்தையும் நாடுகின்றான் தபஸ்வி. இதுவே நம் மரபு. ஸ்ரீ அரவிந்தர் இதை மாற்றிக் கூறுகின்றார். அதாவது, "காயம் பொய்யானதன்று. அதன் அடிப்படை பொய்யால் அமைக்கப்பட்டதன்று. வாழ்க்கை பொய் இல்லை. அதன் அஸ்திவாரங்கள் பொய்யின் பிறப்பிடம் இல்லை. இன்றுள்ள நிலையில் காயமும், வாழ்வும் பொய்யின் பிடியில் இருப்பதே உண்மை. வாழ்வு பெரியது. காயம் புனிதமானது. அவற்றைப் பொய்யின் சூழலிலிருந்து விடுதலை செய்தால், மனித வாழ்க்கை தெய்வீக வாழ்க்கையாக மாறும். காயம் தெய்வச் சக்தியின் கருவியாக அமையும்'' என்று கூறுகின்றார் ஸ்ரீ அரவிந்தர்.

அந்த மாற்றத்தை உலகில் கொணர அவர் நாடும் சக்தி, தெய்வங்கள் உறையும் உலகத்திற்கும் அப்பால் உள்ள விஞ்ஞான லோகத்தில் இருக்கின்றது. அந்தச் சக்தியில் (Supramental force) பொய்யின் சாயல் இம்மியளவுகூட இல்லை. அது தெய்வச் சத்தியத்தின் பிறப்பிடமும், உறைவிடமும் ஆகும். அந்தச் சக்தியில் "முன்னேற்றம்' என்பது, பொய்யிலிருந்து மெய்க்குப் போவதில்லை. சிறிய உண்மையிலிருந்து பெரிய உண்மைக்குப் போவதே "முன்னேற்றம்' எனப்படும். அந்த உலகில் இந்த உலகில் இருப்பதைப் போல "நல்லது', "கெட்டது' என்பன, "வெற்றி', "தோல்வி' என்பன அங்கில்லை. "சிறிய வெற்றி', "பெரிய வெற்றி' என்பன மட்டுமே அங்குண்டு.

அந்தச் சக்தியை உலகுக்குக் கொண்டுவந்து செயல்படச் செய்வதே யோகம். அன்னையை ஏற்றுக்கொண்ட அன்னையின் அன்பர்கள் அந்தச் சக்தியை (Supramental force) தமது வாழ்வில் செயல்பட அனுமதித்து வாழ்க்கையை நடத்தினால், அதுவே "யோக வாழ்க்கை' எனப்படும். அந்தச் சக்தியை (Supramental force) அன்னை நமக்கு அளிப்பதால், அதுவே அன்னையின் சக்தியாகவும் (Mother's Force) அமைகின்றது.

நம் மரபு வழியிலான யோகத்தின் அடிப்படை, பிறப்பிலிருந்து விடுதலை அடைவது. ஸ்ரீ அரவிந்தரின் யோக இலட்சியம், பொய்யிலிருந்து பிறப்பை விடுவிப்பது.

இந்த இலட்சியத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டம் நிறைந்த நம் வாழ்வு, முயற்சி நிரம்பியதாக மாறுகின்றது. விடா முயற்சியே வெற்றிக்கு வித்து. அன்னையின் இலட்சியத்தை ஏற்றுக்கொண்ட பிறகு வாழ்க்கையின் வழக்கமான அமைப்பை அவர் மாற்றிவிடுகின்றார். போராட்டத்தையும், அதனால் கிடைக்கக்கூடிய அவ்வப்பொழுதைய வெற்றி, தோல்விகளையும் களைந்து விடுகின்றார். அதற்குப் பதிலாக, முயற்சியை முழுவதுமாக நிரப்பிவிடுகின்றார். "முயற்சிக்குப் பலன் வெற்றியா? தோல்வியா?' என்பதை மாற்றி, "சிறிய வெற்றியா? பெரிய வெற்றியா?' என்ற ஏற்றத்தை அமைக்கின்றார். அதற்குப் பின் தோல்வி, நிரந்தரமாகத் தோல்வி அடைகின்றது.

"இது எப்படி முடியும்? வாழ்க்கைக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத ஒன்றாக இருக்கின்றதே!' என்று நினைக்கத் தோன்றலாம். உலக வாழ்க்கை பிறப்பிலிருந்து தொடங்கி இறப்பில் முடிகின்றது. இதில் இறப்பை இறக்கச் செய்ய அவதாரம் எடுத்தவர் அன்னை. அத்தகைய அளப்பரிய சக்தி படைத்த அன்னை, தோல்விக்குத் தோல்வி அளிப்பதில் ஆச்சரியம் இல்லை.

வாழ்க்கையில் ஒரு சிறு அளவில் இது போன்ற நிலைக்கு உதாரணம் இல்லாமல் இல்லை. எல்லாரும் தேர்வு எழுதுகின்றார்கள். ஆனால் எல்லாருமே வெற்றி பெறுவதில்லை. பலர் தோற்றுப்போகின்றார்கள். பொதுவாகத் தேர்வில் வெற்றி, தோல்வி என்ற இரண்டு நிலைகள் உண்டு.

அது 1945ஆம் ஆண்டு. புனித ஜோஸப் கல்லூரியின் கல்வித் தரம் சிறப்பானது. அங்கு பி.எஸ்.ஸி. வகுப்பில் 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்கும் பேராசிரியர் ஒருவர், புதிய வகுப்பு ஆரம்பமாகும் நாளன்று, " ""40 I class, 20 II class, no third class, no failure என்பதே இந்தக் கல்லூரியின் நடைமுறையாக இருந்துவருகிறது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?'' என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்பார்.

அந்தக் கல்லூரியில் failure கிடையாது, III class கிடையாது. II class வாங்குவதே failure எனக் கருதப்படுகின்றது. அது தேர்வுக்குப் பாஸ், பெயில் என்ற இரண்டும் உண்டு என்ற உண்மையை மாற்றி, மூன்றாவதாக ஒரு நிலையைத் தோற்றுவிக்கின்றது.

நான் 1960இல் மாயவரம் நேஷனல் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்தேன். அப்போது அவர், "இப்பொழுதெல்லாம் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் நூற்றுக்கு நூறு பாஸ் செய்த பள்ளிகளின் பெயர் செய்தித்தாள்களில் வருகிறது. எங்கள் பள்ளியில் தொன்றுதொட்டு நூற்றுக்கு நூறு என்ற விகிதத்தில்தான் மாணவர்கள் தேர்வு பெறுகிறார்கள். இதுவரை எந்த மாணவனும் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் ஃபெயிலானதே இல்லை'' என்றார்.

நான் ஒரு சமயம் ஓர் அமெரிக்கரோடு உரையாடிக்கொண்டிருந்த பொழுது, "எங்கள் நாட்டில் ஆண்டுதோறும் வறுமைக்கோட்டிற்குக் கீழே எத்தனை சதம் மக்கள் இருக்கின்றார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்கின்றோம்'' என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, "எங்கள் நாட்டில் ஆண்டுதோறும் கோடீஸ்வரர் பட்டியலில் புதிதாக எத்தனை பேர் சேர்ந்திருக்கிறார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்கின்றோம்!'' என்றார்.

அமெரிக்காவில் குறைந்தபட்சத் தினக்கூலி 26 டாலர்கள். நம் இந்தியக் கணக்குப்படி 350 ரூபாய்!

நம் நாட்டில் திவாலான ஒருவனுடைய சொத்தை எல்லாம் கடன்காரர்கள் பறிமுதல் செய்வார்கள். அவன் நடுத்தெருவில் நிற்பான். ஐரோப்பாவிலும் சட்டம் அப்படியே. அமெரிக்காவில் வாழ்க்கை வளம் மிகஅதிகமாக இருக்கின்றது. வளத்தின் காரணமாக, அங்கு திவாலான மனிதர்களையும் "மனிதன்' என்ற அளவில் கருதி, சில சலுகைகளை அளிக்கின்றார்கள். திவாலான ஒருவனுடைய சொத்துகளை எல்லாம் கடன்காரர்கள் எடுத்துக்கொள்ளச் சட்டம் உண்டு. ஆனால் அவனுடைய வீடு, கார், இன்ஷ்யூரன்ஸ் ஆகியவற்றை அவர்கள் தொட முடியாது. அந்த நாட்டின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதால், திவாலானவனுக்கும் வீடு, கார், இன்ஷ்யூரன்ஸ் ஆகியவை அவசியம் என்று சட்டம் கருதுகின்றது. அந்நாட்டில் வளம் வானளாவ உயர்ந்திருப்பதால், நம் நாட்டில் செல்வர்களுக்குள்ள நிலை, அங்கு திவாலானவர்களுக்கு உண்டு. நாம் அறிந்துள்ள வாழ்க்கைக்கும், அன்னையை ஏற்றுக்கொண்ட பிறகு நாம் சந்திக்கும் வாழ்க்கைக்கும் அது போன்றதொரு வேறுபாடு உண்டு.

கே.எம். முன்ஷி பல்வேறு உயர் பதவிகளை வகித்த பின்னர், பாரதிய வித்யா பவனை நிறுவினார். அவர் ஸ்ரீ அரவிந்தரின் மாணவர். பரோடா கல்லூரி ஒன்றில் பணியாற்றியபொழுது, முன்ஷி அவரிடம் பயின்றவர். அவர் முதல் முதலாக அன்னையைத் தரிசனம் செய்தபிறகு, " Mother emphasises prosperity, not austerity'' ("அன்னை தம் யோகத்தில் கடுமையான விரதங்களுக்குப் பதிலாக, வளம் நிறைந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிப்பது சிறப்பானது'') என்று கூறினார்.

" Austerity” என்றால் விரதம், உபவாசம், உறங்காமை, நெருப்பு மிதித்தல் போன்றவை; கடுமை நிறைந்தவை. அன்னை அவற்றைத் தம் யோகத்தின் பகுதிகளாகக் கொள்ளவில்லை. கலகலப்பு, மகிழ்ச்சி, ஆர்வமிகு செயல் போன்ற அம்சங்களையே அவர் வலியுறுத்தியுள்ளார். "பூரண யோகத்தைப் பயில்வதற்குக்கூடக் கடுமையான விரதங்கள் தேவையில்லை. மன வளம்தான் தேவை' என்னும்போது, பக்தியால் அன்னையை வாழ்வில் ஏற்றுக் கொண்டவனுக்குக் கடுமையோ, கடுமையான அனுஷ்டானங்களோ எதற்குத் தேவை? தேவையே இல்லை. ஆனால் வேறு சில தேவைப்படுகின்றன. அவை: கட்டுப்பாடு, தன்னைத் தானே நெறிப்படுத்திக்கொள்ளும் பண்பு, பக்குவம்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலோ, "அன்னையை ஏற்றுக்கொண்ட பிறகு வாழ்க்கையில் கடுமை இருக்காது; எல்லாச் சிறப்புகளும் இருக்கும்' என்பதை வேறு மாதிரியாகப் புரிந்துகொண்டாலோ, அது ஒரு தவறான கருத்தைத் தோற்றுவிக்கும். அதாவது, "நான் அன்னையை ஏற்றுக்கொண்டேன். இனி எனக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. நான் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம். நான் ஒரு சுதந்திரப் பறவை' என்று விளக்கம் கொடுக்கத் தோன்றும்.

அன்னை வழி இதுவல்ல. இவ்வழியில் சென்றால், மனம் வாழ்க்கையில் உள்ள எல்லா "ருசி'களையும் நாடும்; "குஷி'யாக இருக்க நினைக்கும். அந்த நினைவைச் "சரி' எனத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் மனம். "அதுவே அன்னை வழி' என்று அடித்துக் கூறும் அறிவு. பிறகு வாழ்க்கைப் படியைத் தாண்டிச் சென்று, பாவங்களில் நடமாடி, பாதாளத்தில் விழும். பொதுவாக இக்குணங்களும், குறைகளும் தவறானவை. அவற்றை அன்னையின் பெயரால் செய்கின்றபொழுது மிகப்பெரிய தவறுகளாகிவிடுகின்றன. அதாவது குற்றங்களாகிவிடுகின்றன.

கூர்ந்து நோக்கும்பொழுது அன்னை வழியில் மன வளத்தையும், வாழ்க்கை வளத்தையும் பெறுவதற்கு மகிழ்ச்சியையும், கலகலப்பையும், ஆர்வமிக்க செயலையும் பின்பற்றுதல் மிக எளிமையானவையாகத் தோன்றலாம். ஆனால் அவை விரதம், உபவாசம், உறங்காமை, நெருப்பு மிதித்தல் போன்றவற்றைவிடக் கடுமையானவை. "மனத்தில் கடுமையான கட்டுப்பாட்டை இயல்பாக ஏற்றுக்கொண்டவர்களுக்கே நிரந்தரமான கலகலப்புண்டு' என்பதை வாழ்க்கையில் அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள். ஒருவனுக்குப் பின்னால் அவனைப் பற்றிக் கேவலமாகப் பேசி, வாழ்க்கையில் ருசியை அனுபவிப்பவர்கள் இருக்கிறார்கள். பிறரைப் பற்றிக் குறைவாகப் பேசுவதைக் குறையாக நினைப்பவர்கள் உண்டு. புரளியை ரசமாகப் பேசுபவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதில்லை. வீண் புரளியில் ஆசை இல்லாதவர்களுக்கு மன நிம்மதி கெடுவது இல்லை. ஒரு கெட்ட செய்தியை ஒரே நாளில் நாற்பது பேரிடம் சொல்லி ஆனந்திப்பவர்கள், அந்தப் பழக்கத்தை விட்டுவிட முயன்றால், அது உபவாசத்தைவிடக் கடுமையானதாக இருக்கும். விரதங்களின் கடுமை, அதன் முன்னால் தோற்றுப்போகும். மனக் கட்டுப்பாட்டில் வரும் பக்குவம் இது. "மனத்தைக் கட்டுப்படுத்தி மன வளத்தைப் பெருக்கினால், வாழ்க்கையின் வளம் பெருகுகிறது' என்பதே அன்னை வழியின் சிறப்பாகும்.

தொடரும்....

*******



book | by Dr. Radut