Skip to Content

12. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/26) சிந்தனைக்கு உரிமையில்லாத நேரம் மனம் ஓய்தல் ஒழிவில்லாமல் எதிர்பார்க்கிறது. வெளிவர முயலும் எண்ணம் உணர்வால் உந்தப்படும்பொழுது மனம் எதிர்பார்க்கும்.

  • உலகம் தராத உண்மையை மனம் எதிர்பார்க்கும்.
  • இல்லையென்பதை மனம் நாடும்.
  • மனம் நாடுவதை உணர்வு ஆமோதித்தால் நாடுவதை மனம் தேடும்.
  • மனம் ஏக்கமுற்றுத் தேடுவதை எதிர்பார்ப்பு என்கிறோம்.
  • ஞானம் நால்வகை.
    1. உயர்ந்த ஞானம் இறைவனோடு ஐக்கியமாகப் பெறும் ஞானம்.
    2. இறைவனிடமிருந்து பிரிந்து மனிதன் மேல் மனத்தால் அறிவது கடைசி கட்ட ஞானம்.
    3. அடிமனம் பெறும் பிரபஞ்ச ஞானம் அதனினும் உயர்ந்தது.
    4. யோகி பார்த்தவுடன் சிந்தனையின்றி, திருஷ்டியின்றி நேரடியாகப் பெறுவது ஐக்கியத்திற்கு அடுத்த உயர்ந்த ஞானம் (intuition).
  • எதிர்பார்ப்பது மேல்மனம்.
  • அடிமனத்தில் எதிர்பார்ப்பது குறைவு.
  • நேரடி ஞானம் எதிர்பார்க்க வேண்டியதை அறிவதால் எதிர்பார்ப்பு பெரும் அளவு கரைகிறது.
  • ஐக்கியம் அனைத்தையும் பெறுவதால் எதிர்பார்ப்பு அங்கில்லை.
  • ஜீவன் சத்புருஷன்.
  • அவன் சக்தியால் செயல்படுகிறான்.
  • ஜீவன் சக்தியால் செயல்படுவதை ஏற்று உருவகப்படுத்துவது ஜீவியம்.
  • மனத்திற்கு இவை புறநிகழ்ச்சி.
  • மனம் பெற்ற திறமைகள் மனநிலை, மனத்தின் உணர்ச்சி.
  • புறநிகழ்ச்சியால் ஏற்படும் அலை வெள்ளத்தால் மனநிலை மாறுகிறது.
  • மாறும் மனநிலை காலத்தால் இயங்கி, இடத்தில் செயல்படுகிறது.
  • இந்த இயக்கமும் செயலும் மனத்திலுள்ள பிரம்மத்தின் வெளிப்பாடுகள்.
  • அவை ஜீவனை எட்டுவது மனநிலை (பக்கம் 553 – The Life Divine).
  • டார்சியை எலிசபெத் நிராகரித்துவிட்டாள். அவன் மேல்மனம் நாடுவது கிடைக்கவில்லை.
  • நிராகரித்ததை டார்சி பொருட்படுத்தாது அவளுடன் ஆத்மாவில் ஐக்கியமாக முனைந்தான்.
  • காலத்திலும், இடத்திலும் தன்னுள் உள்ள பிரம்மத்தை நாடினால் ஐக்கியம் பெறலாம்.
  • அவன் மேல் மனத்தை விட்டகன்று, அடிமனத்தைக் கண்டு, நேரடி ஞானத்தை நாடாமல் - காலத்தையும் இடத்தையும் கடந்து - உள்ளே போனான். (அவன் லாங்பார்ன் போய் அவளை சந்திக்க முயலவில்லை - இடத்தைக் கடப்பது. அவளை எப்பொழுது சந்திக்கலாம் என்ற நினைவை விலக்கினான் - காலத்தைக் கடந்தான்).
  • காலம் அவளை அவனிடத்திற்குக் கொண்டு வந்து, அவனை ஒரு நாள் முன்னதாக வரவழைத்து, நேருக்கு நேர் அவளை - இடத்தில் நிறுத்தியது.
  • முடிவாக அவன் அவளுடன் ஐக்கியமானான்.
  • ஞானம் உயர்ந்தால் அறிவு சக்தியாக செயல்படுத்துகிறது.
  • எதிர்பார்ப்பு நெதர்பீல்டிலிருந்தது. அது மேல்மனம்.
  • ஹன்ஸ்போர்டில் மணக்க விருப்பம் தெரிவித்தது அடிமனம்.
  • பெம்பர்லியில் மேல்மனம், அடிமனம் செயலற்றவை என அறிந்து நேரடி ஞானத்தையும் கடந்து, ஐக்கியத்தை மனத்தால் நாடினான்.
  • ஐக்கிய ஞானம் அவளை அவனுடன் ஐக்கியப்படுத்தி விட்டது.

*****

II/27) வெற்றியின் இரகஸ்யத்தை விரும்பி அளித்தால் இரகஸ்யம் வேண்டாம், வெற்றியைக் கொடு என்பார்கள். அவர்கட்கு நிரந்தரத் தோல்வி நிச்சயம்.

  • தேடும் இரகஸ்யம் நாடி வந்தால் விலக்கி வெற்றியைக் கேட்பான்.
  • வெற்றி பெற்றவன் அடுத்த வெற்றியைத் தேடுவதைவிட அடுத்தவர் பெறும் வெற்றியைத் தடுக்க அரும்பாடு படுவான்.
  • மனித சுபாவம் வெற்றி பெறுவதைவிட பிறர் தோல்வியை நாடுகிறது.
  • மனிதனைத் தோற்கடிக்க முனைந்த சிவபெருமானை மனிதனின் குதர்க்கம் தோற்கடிக்க தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்ணும் போக முனைந்தான்.
  • வரம் கேட்கும் பக்தனுக்கு அவன் சிறுமையை உணர்த்த சிவபெருமான் உனக்குக் கிடைப்பது போல் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரு மடங்கு கிடைக்கும் என்றார்.
  • வீடு, மாடு, செல்வம், பிரபலம் கேட்டவன் பெற்றான். பக்கத்து வீட்டுக்காரன் இரு மடங்கு பெற்றபொழுது வரமளித்த கடவுளைக் கடந்து மனித சுபாவமான பொறாமை பலிக்கும்படி அவன் கண் பார்வையை மனிதனால் பறிக்க முடிந்தது கதை.
  • இந்த உலகில் உலகைக் கடந்த வெற்றி பெறுபவரில்லை.
  • ஒருவர் பெற்றால் உலகம் அவரை உடனே பின்பற்றுகிறது.
  • அந்த இரகஸ்யத்தைப் பெற்றவன் பொன் போல பாதுகாப்பான்.
  • எவருக்கும் சொல்லமாட்டான்.
  • கொடுத்தால் மனிதன் மறுப்பான் என்பது மனித சுபாவம்.
  • பெற வேண்டியவர், பெற நெடுநாள் விழைந்து ஏக்கமுற்றால் பெறத் தகுதி பெறுகிறார்.
  • தகுதி பெற்ற பின்னும் தர வேண்டியவரை நாடி தகுதியால் பணிந்து வேண்டினால் பெற்றவர் தர மறுப்பார் என்பது வழக்கு.
  • வழக்கை மீறி ஒருவர் கொடுக்க விரும்பினால் பெற்றவர் அதனால் பயன் பெறமாட்டார் என்பது உலக அனுபவம்.
  • வீடு தேடி வந்து நெடுநாள் விரும்பிக் கேட்டாலும் பெற்றபின் பெற்றதால் பயன்பெற நிபந்தனைகளுண்டு.
  • நிபந்தனையின்றி வந்த உதவி பலன் தராமல் போனது நிதர்சனம்.
  • பெருந்தன்மை, தாராள மனப்பான்மை காரணமாக பெரிய ஆத்மாக்கள் உலக மக்களை நாடி உத்தம இரகஸ்யத்தை உபதேசிக்க முயன்றால் எவரும் கேட்க முன்வருவதில்லை என்பது இலட்சிய புருஷர்களின் வரலாறு.
  • நாடிப் போய்க் கிடைக்காததைத் தேடி வந்து விரும்பிக் கொடுத்தால் பெறுபவரில்லை.
  • வற்புறுத்திக் கொடுத்தால், இரகஸ்யம் வேண்டாம், நீங்களே பலனை பெற்று எனக்குக் கொடுங்கள் என்பது அப்படி முயன்றவர் அனைவரின் அனுபவம்.
  • கொடுப்பவர் கை உயர்ந்தும், பெறுபவர் கை தாழ்ந்துமிருப்பதை எடுத்துக் கூறுவதுண்டு.
  • உலகம் இந்த நிமிஷம் அதிகபட்சம் பெறக்கூடியதைப் பெற்றுவிட்டது என்பது உண்மை.
  • மேலும் பெற வேண்டும் எனக் கருதும் இலட்சிய புருஷர்கள் மனித சுபாவத்தின் அடித்தளத்தை அறியாதவர்.
  • சேவையை யதார்த்தத்தை மீறிக் கருதினால் சேவை வேலையாக மாறும்.
  • மாறிய வேலை பயன் தராது.
  • பயன் பெற்றால், பெற்றவர் சேவைக்கு எதிராகக் குரலெழுப்புவார்.
  • சேவையின் உள் நோக்கம் என்ன என்று வினவுவார்.
  • "உன் சேவையை நான் பெறுவதால் உனக்கு ஏதாவது வந்துவிட்டதானால் என் செய்வது?'' என அங்கலாய்ப்பார்.

*****

II/28) ஒரு விஷயம் புரிய நாம் சிந்திக்கின்றோம். புரியா விட்டால் ஆழ்ந்து சிந்திக்கிறோம். மனிதனுக்குப் புரியாத பிரச்சனைகளுண்டு. தீர்வு கிடைப்பதில்லை என்பதுடன் சிந்தனைக்கு அவை எட்டுவதில்லை. அதைத் தீர்க்க நாம் சிந்திப்பதை நிறுத்தி மௌனத்தைக் கடைப்பிடிக்கிறோம்.

  • தன் ஆழ்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க மனித குலம் சிந்தனையைக் கையாள்கிறது. சிந்தனை விலகிய பின் பிரச்சனை தீரும்.
  • மனம் உடையவன் மனிதன். மனு என்றனர்.
  • மனத்தின் திறன் சிந்தனை.
  • "சித்”தின் செயல் சிந்தனை.
  • இரு விஷயங்களை மனம் தன்னில் இணைத்துக் கருதுவது சிந்தனை.
  • தொடர்பு ஏற்பட்டவுடன் துலங்குவது சிந்தனை.
  • தொடர்ந்த சிந்தனை ஆழ்ந்த சிந்தனை.
  • பார்வைக்குப் புரியாதது சிந்தனைக்குப் புரியும்.
  • சிந்தனைக்குப் புரியாதது ஆழ்ந்த சிந்தனைக்குப் புரியும்.
  • ஆழ்மனம் ஆழ்ந்த சிந்தனையை மேற்கொள்கிறது.
  • ஆழ்மனம் சிந்திக்க மேல்மனம் மௌனம் பூண வேண்டும்.
  • மேல்மனம் சிந்தனையைக் கைவிடாது.
  • சிந்தனையால் பலனில்லை என்பது வரை சிந்தனை தொடரும்.
  • தோல்வி முழுமையாகும் வரை மௌனம் வாராது.
  • மேல்மனத்தின் மௌனம் ஆழ்மனத்தின் சிந்தனை.
  • நாம் மனம் என்பது மேல்மனம்.
  • மனத்தின் சிந்தனை தவறும்பொழுது மௌனம் தழுவும்.
  • சிந்திப்பவன் சீரிய மனிதன்.
  • சிந்திக்க முடியாதவன் அறிவில்லாதவன்.
  • சிந்திக்க முடியாமல் சிந்தனையைக் கைவிட்டால், மௌனம் தீர்வு தரும்.
  • சிந்தனையுள்ளவன், சிந்தனை பயனற்றது என அறிந்து சிந்திக்க மறுப்பது மௌனம்.
  • ஆழ்மன சிந்தனை மௌனம். அது மேல்மன மௌனமாவது சிந்தனையின் உயர் பலன்.
  • கைவிட்ட சிந்தனை, உடனே பலன் தரும்.
  • பரந்த பெரிய விஷயங்களில் சிந்தனையைக் கைவிட்டால் மறதி எழும்.
  • மறதி மௌன சித்தி.
  • நெடுநாள் மறந்த விஷயம் ஆழ்மனத்தின் சிந்தனைக்கு அணி செய்யும்.
  • ஆழ்மனம் சிந்தனையை முடித்து தெளிவு பெற்ற நேரம் மேல்மனம் நினைவு கூறும்.
  • எழும் நினைவு ஆழ்மனம் பெற்ற தீர்வை மேல்மனம் அறிவது.
  • அது அந்தராத்மாவில் குரல் எனப்படும்.
  • அசரிரீ, வாணி எனவும் கூறுவர்.
  • ஆழ்மனமும் மௌனமானால், ஆத்மா விழித்து வழிகாட்டும்.
  • மனிதனுடைய பிரச்சனைகளை ஆழ்மனம் தீர்க்கவல்லது.
  • இறைவனுடைய வாய்ப்புகளை ஆழ்மனத்திற்கு அறிவிப்பது அசரீரி.
  • அசரீரி வாய்ப்பைப் பேசுவது ஆண்டவன் குரல் கேட்கும்.
  • அசரீரி தீர்வைக் கூறினால் அது ஆழ்மனம் எழுப்பிய குரலாகும்.
  • மேல்மனம் மௌனம் பூண்டு, அதைத் தொடர்ந்து ஆழ்மனம் மௌனம் பூண்டு எழுந்த அசரீரி "புதுவைக்கு போ'' என பகவானுக்கு சந்திரநாகூரிலிருக்கும் பொழுது பணித்தது. அது யோகம் செய்யும் பணி.
  • "நானிருக்கிறேன். நீ பேசக்கூடாது'' என கோர்ட்டில் எழுந்த குரல் ஆழ்மனம் பொய்க் கேஸை வெல்லும் குரல்.
  • சிந்தனை சீரியது. சிந்தனையைக் கடந்த மௌனம் மகத்தானது.
    மௌனத்தைக் கடந்த மௌனம் பகவான் உறையுமிடம்.

*****

II/29) வாழ்வு ஆசையாலானது. சிறு ஆசை மனிதனை உத்வேகப்படுத்துகிறது. நாம் சும்மா இருந்தால், ஆழ்மனம் தன் சிறு ஆசைகளில் தீவிரமாக உழல்கிறது.

  • மனத்தின் ஆழம் ஆசையை ஆழ்ந்து அனுபவிக்கும்.
  • ஆசை அன்பின் முந்தைய நிலை.
  • உணர்ச்சி இதயத்திற்குரியது.
  • கிளர்ச்சி உடலுக்குரியது.
  • உணர்ச்சியும், கிளர்ச்சியும் சந்திக்குமிடம் வயிறு.
  • வயிறெரிகிறது என்பது ஆசை அழியும் பொழுது எழுவது.
  • வயிற்றில் பால் வார்த்தால் போலிருக்கிறது என்பது ஆசை பூர்த்தியாகி உணர்வாவது.
  • ஆசையை அழிப்பது துறவு.
  • ஆசையை அடக்கி வாழ்வது இல்லறம்.
  • ஆசை தவறு, ஆசைப்படக்கூடாது என்பவை அனுபவம் வரும் முன் எழும் எண்ணங்கள்.
  • ஆசையை அடக்கினால், அடங்கும். அதிக நாள் கழித்து அதிவேகமாக வெளிவரும்.
  • துறவி தன் ஆசையை மோட்சம் பெறும் ஆசையாக மாற்றுகிறான்.
  • தவசிரேஷ்டர் ஆசையின் மூலத்தை அறிந்தவர்.
  • திருமூலர் மூலம் அறிந்தவர்.
  • திருமந்திரம் அவர் எழுதியது.
  • அவர் ஆசையின் ஆழ்ந்த உருவத்தை அறிந்தவர்.
  • "ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்றார்.
  • ஆசை எந்த ரூபத்திலும் நல்லது செய்யாது என்று அறிந்தவர் திருமூலர்.
  • அகந்தை எந்த ரூபத்திலும் நல்லது செய்யாது என நக்கீரன் வாழ்வு கூறுகிறது.
  • நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என அகந்தை அவரைக் கூற வைத்தது.
  • கயிலாயத்திற்கு உடலின் தசையெல்லாம் உருகி என்பாகும் வரை உருண்டு சென்று எழுந்த அகங்காரத்தை அழிக்க வேண்டும் என அவர் அறிந்தார்.
  • பாசம் எழுந்து, வேகமிழந்து, ஆசையாகி, உயர்ந்து மனத்தையடைந்து அன்பாக மாறுவது பரிணாமம்.
  • பாசம் உடலுக்குரியது.
  • ஆசை உயிருக்குரியது.
  • அன்பு மனத்திற்கும், ஆத்மாவுக்கும் உரியது.
  • உடலிலிருந்து உயர்ந்து ஆத்மாவை அடைவது பரிணாமம்.
  • ஸ்ரீ அரவிந்தம் ஆசையை அழிக்காதே, அனுபவிக்க முனையாதே, எல்லைக்குள் அனுபவித்து அறிவால் அதை வென்று அன்பாகத் திருவுருமாற்ற அழைக்கிறது.
  • துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் என்பது அதுவே.
  • சிறு ஆசைகள் எழுந்தபடியிருக்கும்.
  • அறிவு அவற்றைப் பொருட்படுத்தாது.
  • பண்புள்ள அறிவு சிறு ஆசைகட்கு வெட்கப்படும்.
  • வெட்கம் சிறியதினின்று மனத்தை விலக்கும் சிறப்புடையது.
  • லிடியாவும், விக்காமும் திருமணமான பின் ஓடிப்போனதற்கு வெட்கப்படாமல் வீட்டிலும் ஊரிலும் பழகியதை வீட்டில் அனைவரும் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
  • மாறாக, அவர்களுடன் சேர்ந்து வீடு வீடாகப் போய் திருமணத்தைக் கொண்டாடினார் மிஸஸ். பென்னட்.
  • லிடியாவுக்கும், விக்காமிற்கும் வெட்கமில்லை.
  • இந்த ஜன்மத்தில் வெட்கத்தைப் பெற முடியாத பிறவி மிஸஸ். பென்னட்.

*****

II/30) பரநலம், சுயநலம் என்பது கொடுப்பது, பெறுவதாகும். அது சௌகர்யமாகவோ, தொந்தரவாகவோ அமையும். தன்னலமற்றவனின் நட்பு மற்றவர் வாழ்வை மலரச் செய்யும். சுயநலமானவனின் தொடர்பு, வாழ்வில் சிரமங்களை உற்பத்தி செய்யும்.

  • சுயநலம் சுருக்கும், பரநலம் மலரும்.
  • மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டவன்.
  • வேறுபடாமல் மனிதனாக முடியாது.
  • அறிவால் வேறுபடுவது, திறமையால் உயர்வது.
  • பண்பால் வேறுபடுவது, வேறுபாடு மாறுபாடாவது, தரத்தால் வேறுபட்டுயர்வது.
  • நாலு கால்களால் நடக்கும் விலங்கின் பார்வை தரை மீதிருக்கும்.
  • இரு கால்களால் நடக்கும்பொழுது பார்வை வெகுதூரம் போவதுடன், வானை நோக்கிப் பார்க்க இயலும்.
  • ஆன்மீக ஞானப்படி, மனிதன் என்பவன் ஜீவனுள்ள ஜீவாத்மா, உயிருள்ள உடல் மட்டுமல்ல.
  • ஜீவாத்மா, பல ஆயிரம் ஜீவாத்மாக்களில் ஒன்று.
  • ஜீவாத்மாக்கள் பரமாத்மாவினின்று சிருஷ்டிக்கப்பட்டவை.
    அவற்றின் அமைப்பை உபநிஷதம்,
    • எல்லா ஜீவாத்மாவிலும் பரமாத்மா உள்ளது.
    • எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவில் உள்ளன.
    • ஒவ்வொரு ஜீவாத்மாவும் மற்ற அனைத்து ஜீவாத்மாக்களுக்குள் உள்ளன.
    • மேலும் பரமாத்மா ஒவ்வொரு ஜீவாத்மாவிலும் தனி மனிதனாக உறைகிறது.
  • மனம் பகுதியான பார்வையுடையது.
  • தான் அனைவரிலும் உள்ளதை மனம் அறியும்.
  • அனைவரும் தன்னில் உள்ளதை மனம் அறிய இயலாது.
  • தான் அனைவருள்ளும் இருப்பதால் அனைவரும் தனக்குச் சேவை செய்ய வேண்டும் என மனிதன் ஆழ்ந்து நம்புகிறான் - அது சுயநலம்.
  • அத்துடன் அவன் பரமாத்மாவைக் காணும்பொழுது தன்னையே உலகம் மையமானது எனக் கொள்வதால்
    • இறைவன் என ஒருவரிருந்தால் என் தேவைகளை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என நினைப்பதுடன்,
    • அதைச் செய்யாத இறைவன் எனக்குத் தேவையில்லை எனவும் நம்புகிறான்.
  • இதனால் சுயநலம் வளர்கிறது.
  • அது திறமையால் வளர்கிறது.
  • வாழ்வு திறமையால் மட்டும் நடப்பதல்ல, திறமையைக் கடந்துள்ள பல வாழ்வுக்குத் தேவையென அறியும் நேரம் வரும்பொழுது பரநலமில்லாமல் மனிதன் வாழ முடியாது. இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை ஆயிரக்கணக்கானவர், ஆயிரக்கணக்கான வகைகளில் நடத்தியுள்ளனர் எனத் தெரியும்.
  • அந்த ஞானம் பரநலத்திற்கு அடிப்படை.
  • சுயநலம் பெறும், பரநலம் கொடுக்கும்.
  • கொடுக்காமல் வாழ முடியாது என அறிந்தவனுக்கு நமக்குக் கொடுக்கும் உரிமை மட்டும் உண்டு எனப் புரியும். நாம் பெறுவது அனைத்தும் பிறர் கொடுப்பதால் எனவும் புரியும். கொடுப்பதால் வளர்வது வாழ்வு. இறைக்காத கிணறு பாசி பிடிக்கும், பயன்படாது.

தொடரும்....

*****

ஜீவிய மணி
 
விரயம் இயற்கையின் சின்னம்.

*****



book | by Dr. Radut