Skip to Content

10. அன்னை இலக்கியம் - அன்னையின் தரிசனம்

அன்னை இலக்கியம்

அன்னையின் தரிசனம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

அடக்கம், அன்பு, செயல்திறன், பிரதிபலன் பாராத உழைப்பு, இன்னும் இதுபோன்ற அவள் உயர் பண்புகள் அகந்தைக்குத் (சாமான்யருக்கு வேலைக்காரியாய்) தொண்டு செய்வது கண்டு, அதனின்றும் அவளை விடுவிக்கவே தம்மிடம் இருத்திக் கொண்டார். இதுதான் அவள் அன்னையிடம் வந்த விதம்.

அன்னை யாருக்கு எதைச் சொன்னாலும் அதில் தனக்கு ஏற்றதைத் தவறாமல் பின்பற்றுவாள். அவள் எதைச் செய்தாலும், மற்றவர்களுக்கு வியப்பாயும், சில நேரங்களில் அர்த்தமற்றதாயும் கூடத் தெரியும். ஆனால் அவள் இயல்பறிந்த நுட்பம் புரிந்தவர்க்கே அது விளங்கும். அப்படி அவளை அறிந்தவர் அன்னை ஒருவரே.

ஒரேயொரு நிகழ்ச்சி மூலம் அவள் அன்னையை எப்படி நேசிக்கிறாள் என்பதை விளக்குவதே இக்கதை. இளம்பெண். பெருமைக்கு ஆசைப்படாதவள். பொறுமைசாலி. விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவள். அனைவர்க்கும் குற்றேவல் செய்யும் குணக்குன்று. அன்னையின் சூழலே தன் வாழ்வின் இலட்சியம் என்று எண்ணி, அங்கு பணி செய்து கொண்டு மகிழ்வுடன் வாழ்பவள்.

இரவு ஏழு மணிக்கெல்லாம் பெண்கள் மலர்த் தட்டுகளுடன் அன்னையின் தரிசனத்திற்குக் காத்திருப்பது வழக்கம். பிரபாவதி தனக்கிடப்பட்ட பணிகள் எதுவாயினும் அதை உரிய முறையில் செய்து முடித்துவிட்டு அன்னையின் தரிசனத்திற்குக் காத்திருக்க வந்துவிடுவாள். நாள் தவறாமல் முதன்முதலில் வருபவள் அவள்தான். ஏனெனில் சில நாட்களில் அன்னை தியானம் கலைந்து தரிசனம் கொடுக்க மிகுந்த நேரமாகிவிடும். ஒரு முறை இரவு நெடுநேரம் ஆனதால் பகவானே வந்து இவர்களைத் திருப்பி அனுப்பியும் உள்ளார்.

ஒரு முறை நேரமாகிக் கொண்டேயிருந்தது. ஒரு முதிய பெண்மணி பொறுமையின்றி கதவைச் சிறிது திறந்து, தமது பூத்தட்டை எதிரிலிருந்த அலமாரியில் வைத்துவிட்டுப் போகக் கிளம்பினார். ஓரிளம் பெண்ணோ அவரிடம், "சற்று நேரம் பொறுத்திருங்கள். இதோ அன்னை வந்துவிடுவார்'' என்று அவரைத் தடுத்துப் பார்த்தார். அவரோ இளம்பெண் மீது எரிச்சல் கொண்டு முறைத்துவிட்டுப் போய்விட்டார். இளம்பெண் கூறியது போலவே சிறிது நேரத்தில் அன்னை கதவைத் திறந்துவிட்டார். ஒவ்வொருவராக அன்னையிடம் ஆசி பெற்றுத் திரும்பினர்.

இறுதியாகச் சென்ற அந்த இளம்பெண்ணிடம், "யாரிந்தப் பூத்தட்டை இங்கே வைத்துச் சென்றது?'' என்று கம்பீரமாய்க் கேட்கிறார் அன்னை. அப்பெண் ஒன்றும் கூறாது நிற்கிறாள்.

"எனக்குத் தெரியும். எல்லோருடைய பூத்தட்டுகளையும் எனக்கு அடையாளம் தெரியும். எனக்காகச் சிறிது காத்திருக்க உங்களுக்குப் பொறுமையில்லையா? தேவ, தேவியர்கள்கூட எனக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரிஷிகள், முனிவர்கள் தங்கள் தியானத்தில் ஒரு கண நேரம் என்னைக் கண்டால்கூட தங்களைப் பாக்கியசாலிகள் என்று கருதுகிறார்கள். நீங்கள் எல்லோரும் மிகவும் எளிதாக என்னை அடைகிறீர்கள் என்பதால் அதற்கு நீங்கள் மதிப்புத் தருவதில்லை'' என்று கூறினார்.

அதற்கு அப்பெண், "தேவர்களும், முனிவர்களும் நீங்கள் ஆதிசக்தி என்பதை அறிந்துள்ளார்கள். நாங்கள் உங்கள் எளிய குழந்தைகள். உம்மை நாங்கள் பிரியநண்பராக, உரிமையுடன் அன்னையாகவே காண்கிறோம். எங்கள் அறியாமையைப் பொறுத்தருளும்'' என்று கூற, அப்பெண்ணை அன்னை கட்டியணைத்துக் கொண்டார்.

வெளியில், தரிசனம் முடித்த பின்னும் பிரபாவதி நின்று கொண்டு தரிசனம் பெற்று வருபவர் மகிழ்வைக் கண்டு மகிழ்வது வழக்கம். அன்று அந்த இளம்பெண் அன்னையிடமிருந்து வெளிவர தாமதமானதால் பிரபாவதி நின்று கொண்டிருந்தாள். வெளியில் வந்த இளம்பெண், "நீ இன்னும் நின்று கொண்டிருக்- கிறாயா? வா, போவோம்'' என்று கூறி, சேர்ந்து வரும்போது மேற்படி நிகழ்ச்சியைக் கூறினாள். பிரபாவதி மிகுந்த பக்தியுணர்வால் தேம்பி அழவாரம்பித்துவிட்டாள். இதற்குப் பிறகு அவள் மேலும் ஆர்வத்துடன் தரிசனத்திற்குக் காத்திருக்கத் தொடங்கிவிட்டாள்.

அன்றும் அப்படித்தான், தனக்கிடப்பட்ட பணிகளைக் குறைவறச் (குறைவு+அற) செய்துவிட்டு முன்னதாக வந்து நின்றுவிட்டாள்.

ஒரு ஆசிரமத்துச் சகோதரி அவளிடம், "பிரபா, நீதானே தினமும் முதலில் தரிசிக்கிறாய். இன்று உன்னிடத்தை எனக்கு விட்டுக்கொடுக்கக் கூடாதா?'' என்றாள்.

"ஓ! தாராளமாக. நீயே முதலில் நின்றுகொள்'' என்று அவளுக்கு இடம் கொடுத்துத் தான் அடுத்ததாக நின்றாள். மற்றுமொரு சாதகி தான் அவளிடத்தில் நிற்க அனுமதி கேட்டாள். ஒரு முதிய பெண்மணி தன்னால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என தன்னை முதலில் அனுமதிக்கச் சொன்னாள். இப்படியாக அவள் நகர்ந்து இடம் விட்டு, இடம் விட்டு வரிசையின் இறுதிக்கே வந்துவிட்டாள்.

ஒரு சாதகர் அன்னையின் அறைவாயிலில் எப்போதும் காத்திருப்பார். அன்னையின் அழைப்பிற்கு உடனே செல்பவர். அவர், என்றும் பிரபாவதி தவறாமல் வந்து நிற்பதை அறிவார்.

இன்று அவள் வரிசையின் இறுதிக்குத் தள்ளப்பட்டதைக் கவனித்துக் கொண்டுதானிருந்தார். அவள் சாத்வீகக் குணத்தை எல்லோரும் இப்படிப் பயன்படுத்துகிறார்களே என்று அவருக்கு உள்ளூர வருத்தம். ஆயினும் அவளுடைய விட்டுக்கொடுக்கும் தன்மையும், அவள் பொறுமையும் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அன்று அன்னை மிகத்தாமதமாகவே கதவைத் திறந்தார்.

ஒவ்வொருவராக உள்ளே சென்று அன்னையை தரிசித்து, ஆசி பெற்று, மலர்ச்சியுடன் வெளிவருவதைக் கண்டு மகிழ்ந்தவண்ணம் நின்றிருந்தாள் பிரபாவதி. ஆனால் என்ன சோதனை! அவள் முறை வரும்போது அன்னைக்குத் தியானம் கூடிடவே அவளை உள்ளே அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இனி எப்போது கதவு திறப்பாரோ? கதவைச் சார்த்திவிட்டுச் சாதகர் வெளியே அமர்ந்துவிட்டார். அன்னை உத்தரவு தந்தபிறகே அவர் போவார்.

பிரபாவதிக்குத் தரிசனம் கிடைக்கவில்லையே என்று அவருக்கு மிகவும் வருத்தம். எவ்வளவு பொறுப்பாக முன்னால் வந்து நிற்கிறாள்! பொறுமையாக எல்லோருக்கும் விட்டுக் கொடுத்தாளே, அவளுக்கா தரிசனம் கிடைக்கவில்லை. மனம் அவளுக்காக மிகவும் வருந்தியது. "சகோதரி, மிகவும் ஏமாற்றமடைந்தாயோ? நீ ஏன் ஒவ்வொருவராக உன் இடத்தை விட்டுவிடக் கேட்டபோது சம்மதித்தாய். நாளை முதலிலேயே நின்றுவிடு'' என்றார் ஆறுதல் கூறும் பாவனையில்.

அவள் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் சிறிதுமில்லை. தரிசனம் செய்தவர்களைவிட அவளே மலர்ச்சியாக இருந்தாள்.

"பரவாயில்லை அண்ணா, எல்லோருக்கும் கிடைத்தது எனக்கும் கிடைத்ததுபோலவே சந்தோஷமாய் உணர்கிறேன்'' என்று தெளிவாய்க் கூறி, பொறுமையாய்ச் சென்றாள். இனி அன்னையைத் தொந்தரவு செய்யக்கூடாது. அவரே விடியற்- காலையிலிருந்து நம்பொருட்டு ஓயாது உழைக்கிறார் என்று எண்ணினாள்.

தன்னறைக்குத் திரும்பியவள், மேசை மீது வைத்திருந்த அன்னையின் திருவடிகளைப் பார்த்தவண்ணமிருந்தாள். "அன்னையே, நீர் எப்போதும் என் இதயத்திலேதான் வசிக்கிறீர். என்றாலும் நான் உம்மைப் புறத்திலும் காண ஆர்வங் கொள்கிறேன். அதனாலன்றோ உம் தரிசனத்திற்கு முதலில் நிற்கிறேன். என்றாலும் உம் தரிசனம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் எனக்கில்லை. உமக்காகக் காத்திருப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி உண்டாகிறது. மீண்டும் நாளையும் வருவேன். உம்பொருட்டு நான் வாழ்நாள் எல்லாம் காத்திருப்பேன். எனக்கு ஏமாற்றம் இல்லை, மகிழ்ச்சியே. ஏனெனில் இதுவும் உம் சித்தமே. உம் சித்தப்படியே நடப்பது மகிழ்ச்சி தருவதல்லவா!'' என்று எண்ணியவண்ணம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அரை மணிக்கும் மேலாகியிருக்கும். கதவு தட்டும் ஒகேட்டது. எழுந்து கதவைத் திறந்தாள். அந்தச் சாதகர் நின்றிருந்தார், முகங்கொள்ளாத பரவசத்துடன். "பிரபாவதி, நீ பாக்கியசாலிதான். அன்னை உன்னை அழைத்து வரச் சொன்னார்'' என்றார்.

இவளுக்குத் தரிசனம் இல்லையே என்று இவளைவிடவும் அவர்தான் வருந்தினார். எனவே, இப்போது மகிழ்வுடன் அழைத்துப் போக வந்தார்.

பிரபாவதி, "இதோ வந்துவிட்டேன் அண்ணா'' என்று உடனே புறப்பட்டாள். ஆனால் அவள் நிதானமிழக்கவில்லை.

"நல்லவேளை, நீ இன்னும் உறங்கப் போகவில்லை. உனக்கு அதிர்ஷ்டம்தான்'' என்றார். ஆனாலும் அவருக்கு உள்ளூர வருத்தம். மணிக்கணக்காய் நின்ற குழந்தையின் முறை வரும்போது அவளுக்குத் தரிசனம் தாராது ஏன் தியானம் மேற்கொண்டார். இப்பொழுது ஏன் அவளை அழைக்கிறார். அவருக்கும் என்போல் மனம் கேட்கவில்லையோ என்று சிந்திக்கிறார்.

முன்பே ஒரு முறை இந்தச் சாதகரிடம் அன்னை, "நீ என்னை மானிட வடிவில் காண்கிறாய். இவ்வடிவம் மட்டுமே உன் கண்ணில் படுகிறது. நான் ஒரு மனிதப் பிறவி என்பது போலவே என்னுடன் பழகுகிறாய், வேறொன்றுமில்லை'' என்று கூறியுள்ளார். அதற்கேற்பவே அவர் சிந்தனை அமைந்திருக்கிறது.

அன்னையின் அறையின் முன் சென்றவுடன் சாதகர், "அன்னையே, இதோ பிரபாவதியை அழைத்து வந்துவிட்டேன்'' என்றார்.

"உள்ளே வா'' என்று தலையசைத்தார் அன்னை.

பிரபாவதி அவர் முன் வந்து பணிவுடன் நின்றாள். அன்னை என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் சாதகர் பார்த்து நின்றார்.

"பிரபாவதி, நான் உன்னை ஏமாற்றிவிட்டேனா?'' என்று அன்பு பொங்கக் கேட்டவண்ணம் அவள் தோளைப் பற்றினார். உடல் சிலிர்த்தது அவளுக்கு.

"இல்லை அன்னையே, நீர் ஏமாற்றவில்லை. நீர் ஒருபொழுதும் ஏமாற்றமாட்டீர்'' என்று உருக்கமாகக் கூறினாள்.

அன்னை சாதகரைக் கடைக்கண்ணால் பார்த்தவண்ணம் மேலும் அவளிடம் உரையாடுகிறார்.

"அப்படியென்றால், நீ எனக்காக ஆர்வத்துடன் காத்திருக்கவில்லையா?'' என்றார்.

"ஆம் அன்னையே. உமக்காகத்தான் காத்திருந்தேன். உமக்காக மட்டுமே காத்திருப்பேன்'' என்றாள்.

"அப்படியென்றால், உனக்கேன் என் தரிசனமில்லாதது ஏமாற்றமளிக்கவில்லை?''

சாதகர் மனமும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தது. பிரபாவதி என்ன சொல்லப்போகிறாள் என்பதை ஆவலுடன் கவனிக்கிறார்.

"உமக்காகக் காத்திருப்பதும் இன்பமில்லையா? உமக்காக தேவ, தேவியரும், ரிஷிகளும், முனிவரும் காத்திருக்கவில்லையா? நீரே முன்பு இவருக்கு (அருகிலிருந்த சாதகரை குறிப்பிட்டு) கூறிய ஒரு பதிலிலும் அதை நான் அறிந்தேன்'' என்றாள்.

சாதகருக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னிடம் எப்போது அன்னை காத்திருக்கச் சொன்னார் என்று புரியாமல் விழித்தார்.

"நான் எப்போது சொன்னேன்? என்ன சொன்னேன்?'' என்று ஒன்றும் புரியாதவர் போல் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு சாதகரைக் கடைக்கண்ணால் பார்க்கிறார் அன்னை.

அவரும் ஒன்றும் புரியாமல் அவள் கூறப்போவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

"ஆம் அன்னையே. நீர் யாரிடம் என்ன சொன்னாலும் நானும் அதை எனக்கும் கூறியதாகவே கொள்கிறேன். இவர், முன்பொரு முறை உம்மிடம் உமக்கு மிகவும் பிடித்த தியானமும் பிரார்த்தனையும் எது எனக் கேட்டபோது மார்ச்சு 7, 1915இல் எழுதிய பிரார்த்தனை என்று கூறவில்லையா?'' என்றாள் பணிவாக.

"ஆமாம் கூறினேன். அதில் உனக்கென்ன பதில் கிடைத்தது'' என்றார் ஒன்றும் புரியாதவர் போல்.

"நினது கருணை வேண்டுமென்றுகூட இரக்கமாட்டேன். நீ எதைச் சங்கல்பிக்கிறாயோ அதையே நானும் சங்கல்பிப்பேன்'' என்று கூறியுள்ளீரே என்று நெகிழ்ந்து கூறினாள்.

சாதகர் இமைக்க மறந்து அவளை வியப்புடன் பார்க்க, அன்னை அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.

உம்முடனேயே இருந்தும் இவள் அறிந்ததை நானறியாது போனேனே, உம் திருவிளையாடல் ஒன்றும் நானறியேன் அம்மா என்று மனம் கசிந்து நின்றார் அவர்.

முற்றும்.

*******



book | by Dr. Radut