Skip to Content

10. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை

அன்னை இலக்கியம்

அன்னையின் கைக்குட்டை

இல. சுந்தரி

எஜமானியம்மாள் வீட்டிற்கு அவர்கள் உறவினர் வெளியூரிலிருந்து வந்திருந்தனர். எஜமானியம்மாவின் அண்ணனும் அவர் சம்சாரமும் அவர்கள். எஜமானியம்மாள் தம் அண்ணியாருடன் உரையாடுவது வீட்டு வேலைகளில் உதவி செய்யும் வாணியின் காதிலும் விழுகிறது.

"அண்ணி, இப்போதெல்லாம் அண்ணன் நன்றாக இருக்கிறாரா? பிரச்சனை ஒன்றுமில்லையே?''

"பிரச்சினையா? இல்லை தேன்மொழி. பிரச்சினைகளெல்லாம் அதீத வாய்ப்புகளாக மாறிவிட்டன. இந்தப் பிரச்சினைமட்டும் வந்திராவிட்டால் "அன்னை' என்ற அற்புதத்தை இழந்திருப்போம்''.

"என்ன சொல்கிறீர்கள் அண்ணி? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பிரச்சினையைப் போற்றுவது போலல்லவா இருக்கிறது?''

"ஒரு வகையில் அதுவும் உண்மைதான். ஆபத்து என்பது ஆண்டவன் உலகைத் திருப்பி வைக்கும் நேரமாம். நமக்கு மனம் பதறுவது உண்மைதான். பெரிய நல்லதுடன் வரும் தவறான செய்தியும், கெட்டதுடன் வரும் நல்லதும் வாழ்வின் ஆன்மீக உண்மையைக் காட்டுவனஎன்று ஒரு சான்றோர் எழுத்தில் படித்திருக்கிறேன். சென்ற ஆண்டு எங்கள் நிலை, வாழ்வா சாவா என்றிருந்தது என்னவோ உண்மைதான். அப்போது, இந்த மகிழ்ச்சியான நிலைக்கு மாறுவோம்என்றோ, நன்றிப் பெருக்குடன் இங்கு வருவோமென்றோ கற்பனைகூட செய்திருக்க முடியாது''.

"இங்கு நன்றிப் பெருக்குடன் வந்தோம்என்கிறீர்களே, எனக்கு வெட்கமாக இருக்கிறது. அண்ணன் உயிருக்கும், மானத்திற்கும் போராடிய அந்த நிலையில்கூட ஓருதவியும் செய்ய இயலாமலிருந்- தேனே. உங்களுக்காக நான் எதுவுமே செய்யவில்லையே அண்ணி''.

"நீ மட்டுமல்ல. யாருமே அந்நிலைக்காளான உன் அண்ணனுக்கு உதவி செய்ய முடியாமல்தானிருந்தனர். நான் "இங்கு” என்றது இந்த வீட்டையல்ல இந்தப் பாண்டிச்சேரியை''.

"அப்படி இங்கு நன்றி செலுத்தும்படி என்ன அற்புதம் இருக்கிறது?''

"அதுதான் வேடிக்கை. உனக்கு மட்டுமன்று. இவ்வூரிலுள்ள பலருக்கும் அது தெரியாது''.

"பலருக்குத் தெரியாத அற்புதமாக இவ்வூரில் என்ன அண்ணி இருக்கிறது?''

(வாணிக்கு உரையாடலில் ஈடுபாடு வந்தது).

"ஒரு நிறுவனம்என்று சொல்லலாம். ஒரு சக்திஎன்று சொல்லலாம். ஒரு ஜீவியம்என்று சொல்லலாம். ஒரு சூழல்என்றும் சொல்லலாம். ஆனால் தெய்வம்என்றால்தான் எல்லோர்க்கும் புரிகிறது''.

"ஓ! இங்கே ஒரு சிவன் கோவிலிருக்கிறதே அதைச் சொல்கிறீர்களா? நான் எப்போதாவது விசேஷ நாட்களில்மட்டும் விரதமிருந்து, விளக்கேற்றப் போவேன். ஆனால் இவ்வூரில் உள்ளவர்கள், இதைவிட காசியிலும், கைலாயத்திலும்தான் சக்தி அதிகம் என்பார்கள்''.

"இதுவும் ஒரு வேடிக்கைதான். ஜெராக்ஸ் வந்த பிறகும், கார்பன் காப்பி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நீ சொல்லும் முறை சமயங்களை ஒட்டி எழுந்த வழிபாட்டு முறை. கடந்த காலத்திற்குரியன. ஆனால் எதிர்காலத்திற்குரிய ஆன்மீக வழியைக் காட்டியவர் இங்கே சூட்சும வடிவில் உறைகிறார்''.

"அப்படியென்றால் சிவன், விஷ்ணுவெல்லாம் பெரிய தெய்வங்களில்லையா?''

"ஆரம்பத்தில் உன்னைப் போலத்தான் எனக்கும் சந்தேகம் வந்தது. பகவான் ஸ்ரீ அரவிந்தரது நூல்களைப் பயின்ற ஓரன்பர், உன் அண்ணனின் நண்பர் மூலமாகத்தான் சில விஷயங்களை அறிந்தேன். இதுவரை பூமியை ஆண்ட சக்திகள் மேல்மனச் சக்திகள். இனி அதிமனத்தின் ஆட்சி வரும் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியிருக்கிறாராம்''.

"இதெல்லாம் எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியம்படி எந்த சாமி பெரியது, எதைக் கும்பிட வேண்டும்என்று மட்டும் சொல்லுங்கள்''.

"அன்னை கூறியது சரிதான்'' (என்று கூறிச் சிரித்தாள் அண்ணி).

"என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறு ஏதோ சொல்கிறீர்களே அண்ணி''.

"அதாவது சிவன், விஷ்ணு என்றெல்லாம் சொல்வோமே, அவர்கள் தெய்வ லோகத்தைச் சேர்ந்த கடவுளர்கள். மனிதர்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தெய்வங்கள் மகாசக்தி வாய்ந்தவை. எனவே, அவற்றுடன் தொடர்பு கொள்ளும் போது மனிதர்கள் தடுமாறிப் போகின்றார்களாம். இன்னும் பிராணலோகத்தைச் சேர்ந்த ஜீவர்கள்கூட மாறு வேடத்தில் கோயில்களில் தோன்றி மனிதர்களை ஏமாற்றிவிடுகின்றனராம்''.

"எனக்கு இதெல்லாம் விளங்கவில்லை. நீங்கள் அன்னை என்ற அற்புத சக்தி என்றீர்கள். இவற்றை தெய்வலோகக் கடவுளர் என்றீர்கள். என்னைப் பொறுத்தவரை எது பெரியது? எதை ஏற்க வேண்டும் என்பதுதான் முக்கியம்''.

(வாணிக்கும் இதே கேள்விதான் மனதில். இதற்கென்ன பதில் சொல்வார்கள் என்று ஆவலுடன் கவனித்தாள்).

"உனக்குப் புரியும்படி சொல்ல முயற்சிக்கிறேன். நெய்வேஅன ல் மின்நிலையம் இருக்கிறதல்லவா, அதன் வேலை மின்னுற்பத்திதான். பக்கத்து கிராமங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அதற்கு இல்லை. வேண்டுமென்றால் செய்ய முடியும். கிராமவாசிகள் வேண்டிக் கேட்டுக்கொண்டால் ஒரு பள்ளிக்கூடமோ, ஒரு மருத்துவமனையோ கட்டித் தருகிறது. அது அவர்கள் கடமையில்லை. சுற்றியுள்ளவர்கள் கேட்டுக் கொண்டதால் செய்துகொடுத்தார்கள். அவ்வளவுதான். அதுபோல சிவனும், விஷ்ணுவும், முருகனும் தெய்வ லோகத்தைச் சேர்ந்த கடவுளர்கள். இவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே இருப்பவர்கள். உலகில் வாழும் மனிதர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமையில்லை. மனிதனின் பிரார்த்தனை அவர்களை எட்டினால் அருள் செய்கிறார்கள். இத்தனை கடவுளர்களும் மேல்மனத்தினர். மனத்தின் வகையைச் சேர்ந்தவர். அவர்கள் அளவு பூமியளவு. சக்தியும் பெரியது. என்றாலும் இவர்களுக்கு மனித குணம் ஓரளவுண்டு. கோபம், போட்டி போன்றவையும் உண்டு. நான் சொல்லும் சக்திக்குப் போட்டி, பொறாமை விலக்கு. இது நாம் அழைக்காதபோதும் நம்மை நாடி வரும் தெய்வம். பரம்பொருள் சிருஷ்டியில் தன்னை இழந்து, இழந்ததை மறந்தபோது அதை நினைவூட்ட அவதரித்து வந்த சக்தியிது''.

"இவ்வளவு பெரிய விஷயமெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது? கடவுள் என்றால் நாமனைவருமே சிவன், விஷ்ணு, முருகன் என்றுதானே இத்தனை நாள் எண்ணியிருந்தோம். "அன்னை' என்றும், "அற்புத சக்தி” என்றும் புதிது புதிதாய்ச் சொல்கிறீர்கள். அதுவும் இந்தவூரிலேயே உள்ளதாய்ச் சொல்கிறீர்கள். இதையெல்லாம் உங்களுக்கு யார் கூறினார்?''

"உங்கள் அண்ணனுக்கு வந்த பிரச்சினைதான் அன்னையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது''.

"விபரமாய்ச் சொல்லுங்கள் அண்ணி''.

"அண்ணனுக்கு ஏன் பிரச்சினை வந்தது? அவர் செல்வமும், செல்வாக்கும் எப்படிப் பொருளற்றுப் போயின? உயிர்ப் பிரச்சினை, மானப் பிரச்சினை என்றெல்லாம் சொன்னீர்கள், விளக்கம் சொல்ல மறுத்துவிட்டீர்கள். என் கணவரும் பிடிவாதமாய் என்னைத் தடுத்துவிட்டார். மேலும், தவறாகவும் பேசினார். அந்த நிலைமைகள் மாறி நீங்களும் அண்ணனும் இங்கு வந்திருப்பதும், என் கணவர் அண்ணனுடன் சுமுகமாய் வெளியே சென்றிருப்பதும் வியப்பாயும், மகிழ்வாயும் இருக்கிறது''.

"எல்லாமே அன்னையின் அருள்தான் தேன்மொழி. வாழ்வில் விழுந்தவர் எழுவதில்லை. அன்னை வாழ்வில் நஷ்டமும், தோல்வியும் நம்மவர்க்கில்லை என்பதுதான் புதுமொழி. நான் உன்னை நேரில் பார்க்கும்போது எல்லாவற்றையும் விளக்கமாய்ச் சொல்லலாம் என்றிருந்தேன். உன் அண்ணன் பெரிய தொழிலதிபராய் இருந்தது உண்மை. அவருக்கு அரசியல் செல்வாக்கிருந்ததும் உண்மை. ஆனால் அவர் நேர்மையான வழியில் செல்வந்தராக ஆகவில்லைஎன்பது எனக்கே தெரியாத உண்மை. அவர் தம் தொழில்ரீதியான சட்டங்களை மீறித்தான் செல்வந்தராக இருந்திருக்கிறார். எனக்கு எவ்விதக் குறையும் வராமல் பார்த்துக் கொண்டதுடன், அவர் குறைகள் எனக்குத் தெரியாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு நாள் அரெஸ்ட் வாரண்ட் வரும் நிலை உருவானது தெரிந்திருக்கிறது. ஒரே டென்ஷன். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறார். நிலைமையை மறைக்க ஏதேதோ செய்கிறார். ஆரம்பத்திலிருந்து எனக்கெதுவும் தெரியாமல் வைத்திருந்ததால் அப்போதும் எனக்கொன்றும் புரியவில்லை. அவர் தொழில் நண்பர் ஒருவர். அன்னையன்பர் அவர். அடிக்கடி நேர்மை பற்றி அறிவுறுத்துவார். அப்போதும் எனக்கு நிலைமை புரியவில்லை. கிருஷ்ணன்என்ற அந்த நண்பரைமட்டுமே இவர் வீடு வரை அனுமதிப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். சிஸ்டர் என்றுதான் என்னைப் பாசமாக அழைப்பார். ஒரு நாள் இந்த நெருக்கடிகள் மிகுந்த சமயம் அது. உன் அண்ணன் இரவு 7 மணி சுமாருக்கே வீட்டிற்குள் ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். எனக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படக் காரணமில்லா- திருந்ததால் அதை நான் பெரிதுபடுத்தவில்லை. ஏதோ வேலை மிகுதியில் ஓய்வெடுக்கிறார்என்று புரிந்து கொண்டிருந்தேன்.

சற்றைக்கெல்லாம் அந்த நண்பர் மிகுந்த பரபரப்பை மூடி மறைத்தவண்ணம் வந்தார்.

"சிஸ்டர், ராம் எங்கே?'' என்றார்.

அங்கு அறைக்குள் சென்றதைக் கூறினேன்.

"சிஸ்டர், நீங்கள் என்னைத் தவறாக எண்ணக்கூடாது.

எனக்கொரு முக்கிய விஷயம் அவனுடன் கலந்து பேசவேண்டியுள்ளதால் அவனை நான் கூப்பிட நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியவர், விரைந்து சென்று அறையின் கதவைத் தட்டி, "ராம், ராம், நான் கிருஷ்ணன் வந்திருக்கிறேன். ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். தயவுசெய்து கதவைத் திற'' என்றார்.

இப்படியெல்லாம் இதுவரை நடந்ததில்லை ஆதலாலும், நிலைமையின் கடுமையை நான் அறியாதிருந்ததாலும், நண்பரின் உரிமைக் குரலை ரசித்துவிட்டு உள்ளே உணவு தயாரிக்கச் சென்று விட்டேன். அன்று ஏதோ முக்கிய வேலையென்று சமையற்கார அம்மாள் அனுமதி கேட்டுக் கொண்டு சென்றுவிட்டாள். இன்றொரு நாள் நாமே சமைத்துப் பரிமாறுவோமேஎன்று எண்ணியிருந்தேன்.

சாப்பாட்டு நேரம் வந்துவிட்டதால், நண்பருடன் அவரைச் சாப்பிட அழைக்க எண்ணி அறைக்கு வெளியே சென்றவள் அதிர்ந்தேன். பொதுவாக அவர் தொழில் விஷயம் பேசும்போது நான் அங்கிருப்பதை அவர் விரும்பமாட்டார்என்பதால் நான் அவர் வந்து கூப்பிடும்வரை தலைகாட்டமாட்டேன். இன்று அவர்களைச் சாப்பிட அழைக்கவே வந்தேன். அங்கு நான் கேட்ட உரையாடல்,

"சந்தேகப்பட்டுத்தான் ஓடிவந்தேன். உன்போன்ற நேர்மையில்லாதவர்கள், வெளிப்பார்வைக்கு கம்பீரமாய் இருந்துகொண்டு உள்ளே கோழையாக இருப்பார்கள்''.

"யார் சொன்னது அப்படி? இத்தனை கஷ்டத்திலும் நான் கலங்கவில்லையே. துணிந்துதானே முடிவெடுத்திருக்கிறேன்''.

"என்ன முடிவு? விஷம் குடித்து சாவது உன்போன்ற வீரர்களுக்கு வீரச் செயல்தான். நீ தற்கொலை (நான் நடுங்கிப் போனேன்) செய்துகொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? ஒரு பாவமும் அறியாத உன் மனைவி உன் மரணத்திற்குப் பிறகு எத்தனை அவலங்களுக்கு ஆளாக நேரும்என்று நினைத்துப் பார்த்தாயா? எப்படியாவது நீ செய்த தவறுகளிலிருந்து தப்புவதே உன் வழக்கம். இதுவரை உன் அநியாயங்களுக்குத் துணை வந்த அரசியல் செல்வாக்கு இன்று உன்னைக் கைவிட்டுவிட்டது பார்த்தாயா? அரசியல் சூழல் நிலையற்றது. நிலையான ஒன்றை (பரம்பொருளைப்) பற்றும் பழக்கம் என்றுமே உன்னிடம் கிடையாது. உன் பிரச்சினைகளுக்குத் தீர்வு தற்கொலையில்லை''.

(உள்ளே மெல்ல எட்டிப் பார்த்தேன். ஏதோ சிறிய பாட்டில் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். என் மனக் கலக்கத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, நல்ல நண்பர் அவருடன் இருப்பதால் அதுவே இறைவனருள் என்று நம்பி மறைந்திருந்தேன்).

"நீ நினைப்பதுபோல், பிள்ளைகுட்டியில்லாத என் மனைவியைத் தனியே விட்டுவிட்டுப் போய்விடமாட்டேன். அவள் என்னை நம்புவாள். அவளுக்கும் சிறிது விஷம் கொடுத்து என்னுடனேயே அவளையும் அழைத்துச் செல்வேன்''.

"உன்னுயிரை மாய்த்துக்கொள்ளவே உனக்கு உரிமையில்லை.

பாவம், சிஸ்டர் என்ன தவறு செய்தார்? அவரை ஏன் கொல்ல வேண்டும்? இறைவன் வாழ்வதற்காக நமக்களித்த வரம் இந்தவுயிர்''.

"அதற்கென்ன செய்ய? எனக்கு உயிர் வாழ ஆசைதான். ஆனால் மானம், மரியாதையெல்லாம் போய் நடுத்தெருவில் நிற்கும் வாழ்வு ஒரு வாழ்வா? எத்தனை பெரிய பிரச்சினை என் முன் நிற்கிறதுஎன்பது என் அப்பாவி மனைவிக்குத் தெரியாது. ஆனால் உனக்குத் தெரியுமல்லவா?''

"பொய்யும், புரட்டுமாய், பணம், பகட்டு, மதிப்பு, மரியாதை என்று வாழ்ந்துவிட்டு அதை இழப்பது கடினம்தான். என்ன செய்வது? அந்த அகங்காரத்தை விட்டுவிடத் துணிந்தால், தவற்றை மனம் உவந்து ஏற்று, மாறச் சம்மதித்தால் ஆண்டவனே நேரில் வந்து விடுவானே. நமக்கு ஆண்டவன் முக்கியமில்லை. நம் மரியாதைதான் நமக்கு முக்கியம். அதைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் இழப்போம். ஆண்டவனையும் அர்ப்பணித்துவிடுவோம். அதுதான் நம்மிடமுள்ள பெருங்குறை''.

"மானம் இழந்தபின் வாழக்கூடாது என்றுதானே பெரியவர்கள் கூறியுள்ளார்கள்''.

"ஆமாம், ஆமாம். அவர்களுக்கு சத்தியஜீவியம் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. திருவுருமாற வழி தெரிந்திருக்கவில்லை. நான் எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் நீ திருந்தவில்லை. உன் தவறுகள் எல்லாம் திரண்டு ஓருருக்கொண்டு பிரம்மாண்டமாய் வந்து நிற்கும்போது சாவதன் மூலம் தப்பிவிடலாம்என்று தப்புக்கணக்குப் போடுகிறாய். இப்போதும்கூட உனக்கு வாய்ப்புத் தர அன்னை காத்திருக்கிறார்''.

"ஆ, ஊ என்றால் உனக்கு அன்னைதான். அன்னை நேற்று வந்த தெய்வம். பரம்பரை பரம்பரையாய் கடவுள் வழிபாடு செய்த குடும்பத்திலிருந்து தான் என் மனைவி வந்திருக்கிறாள். எனக்காக அவள் எப்போதுமே கடவுளை வழிபட்டுக் கொண்டுதானிருக்கிறாள். ஆனால் பயனென்ன? நேற்று பிரபல சோதிடர் ஒருவரிடம் போனேன். அரசியல் தலைவர்கள், திரையுலகப் பெரும்புள்ளிகள் யாவர்க்கும் சோதிடம் கூறி, அவை பலித்து, பல பட்டயங்கள் பெற்றவர். ஆனால் அவர் என் ஜாதகத்தைப் பார்த்தவுடன், "இனி உங்களை யாவராலும் காப்பாற்ற முடியாது. உங்கள் ஜாதகம் உங்களுக்குச் சாதகமாய் இல்லை. பாதகமாயுள்ளது. எனக்குப் பொய் சொல்ல முடியாது'' என்றார். ஏதேனும் பரிகாரம் உண்டா என்றேன். "கர்மம் கெட்டியாய் உங்களைப் பற்றியிருக்கிறது. கர்மத்தை கரைத்தவர் உண்டா? விதியை மாற்றியவர் உண்டா? நல்ல ஜாதகங்களைப் பார்த்துப் பலன் கூறிய எனக்கு இன்று உங்கள் ஜாதகத்தைப் பார்க்க நேர்ந்தது துரதிர்ஷ்டமே'' என்றார். இறக்கத்தானே போகிறோம். இப்படிக் கொடுமையாய்ப் பேசியவரைக் கொன்றுவிட்டே இறப்போமே என்றுதான் வேகம் வந்தது. அவர் ஜாதகம் சரியாய் இருந்ததுபோலும். நான் வெறுத்துப்போய் வந்துவிட்டேன்''.

"உன் மனைவி வழிபடும் கடவுளர்க்கு ஆயுளை நீட்டிக்கும் சக்தி இயல்பாகக் கிடையாது. சோதிடர் கூறியது காலத்திற்குக் கட்டுப்பட்டது. காலத்தையும், பிரபஞ்சத்தையும், சிருஷ்டியையும் கடந்த நிலையில் உள்ள ஈஸ்வரன்தான் Supreme. அவனுக்கு யாவுமே கட்டுப்பட்டது. அன்னை ஈஸ்வரனின் கடந்த நிலைக்குரியவர். There is no division between the Mother and the Supreme என்ற வாக்கு அருள்வாக்கு. அதை அறியும் வாய்ப்பாக இன்று உன் நிலையுள்ளது. உணர்ந்தால் அதிர்ஷ்டம். உனக்கு வந்திருக்கும் பெருந்துன்பத்திற்குப் பின்னே பேரதிர்ஷ்டமாய் அன்னை ஒளிந்திருக்கிறார். உன் பிடிவாதத்தால் உனக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டத்தை விலக்கி, ஆபத்தை வலியுறுத்தாதே''.

"நீ என்னதான் சொல்கிறாய்? மானம் போனாலும் பரவாயில்லை, சாகாதே என்கிறாயா?''

"சாவதாலும் மானம் போவதைத் தடுத்து நிறுத்த முடியாது. நான் சொல்லும் அன்னை நம்மைத் திருவுருமாற்றவே அவதரித்தவர். திருடன் திருந்தினால் உயர்ந்தவனைவிட உயர்ந்தவனாவான் என்பது அவர் கூற்று. உனக்கு இப்போது பாதுகாப்புத் தரவல்லவர் அன்னைஎன்பதை நம்பு. அதற்கு நீ செய்ய வேண்டியது, நீ செய்த தவறுகளையெல்லாம் உணர்ந்து, அவற்றை இனி விட்டுவிடச் சம்மதிப்பதுதான். அவற்றை இனி நீ ஒருபோதும் நாடக்கூடாது. கர்மம் கெட்டியாக இருப்பதாய்ச் சோதிடர் கூறினாரல்லவா, அது கெட்டிப்பட காரணமான உன் தவறுகளை அழித்துவிட்டால், சார்ந்து நிற்க இடமில்லாமல் அதுவும் கரைந்துபோகும்என்பது அவரறியாதது. கர்மத்தை கரைத்துவிட்டு அவர் முன் நீ நிற்கமுடியும். இதற்கு உதவ அன்னை காத்திருக்கிறார். இதுதான் அன்னை வழி''.

"ஒன்றா, இரண்டா? எப்படிச் சாத்தியம்? என் சாதகமான சூழல் எல்லாம் மாறிவிட்டது. நம்பிக்கை வரமறுக்கிறது கிருஷ்ணா. என்னை மன்னித்துவிடு. என்னைச் சாகவிடு''.

"என் கையில் அமுதம் உள்ளபோது உன்னை விஷம் குடிக்க அனுமதிப்பது முட்டாள்தனமில்லையா ராம்?''

"உன் அமுதம் யாரேனும் நல்லவருக்குப் பயன்படட்டும். அக்கிரமங்கள் செய்த எனக்குக் கொடுத்து அதை வீணாக்காதே''.

"மீண்டும் நீ தவறாகவே புரிந்து கொள்கிறாய். இந்த அமுதம் பாவத்தைக் கரைத்து, அதனுள் புதைந்திருக்கும் புண்ணியத்திற்கு உயிரூட்ட வல்லது. உன் மனதை மாற்று. எல்லோரும் கைவிட்டபின் ஓடிவரும் தெய்வமிது. இது செயல்பட நம்பிக்கைதான் உன் பங்கு. நீ அன்னையை நம்பு. இதுவரை செய்த பிழைகளையெல்லாம் அன்னையிடம் ஒளிவுமறைவின்றி சரணம் செய்துவிடு. இனி அவற்றைச் செய்யமாட்டேன்என அன்னைக்கு உறுதியளி. பிறகு பார், நிலைமை மாறுவதை''.

"என்ன உன் போதனை? விடிந்தால் என் கழுத்திற்குக் கத்தி காத்திருக்கிறது. இப்போது நான் மனம் மாறி என்ன பயன்?''

"இப்போதுதானே கூறினேன், உனக்குத் தேவை அன்னை மீது நம்பிக்கை. மனதை மாற்றிக் கொள்ள முடிவு செய்து பார். உன்னைத் திருவுருமாற்றவே இந்தப் பிரச்சினை வந்திருக்கிறது''.

"திருவுருமாற்றவா? நாளை உன் உருவம் மாறி, ஆள்மாறாட்டம் ஏதேனும் நிகழுமா?''

"திருவுருமாற்றமென்றால் ஆள்மாறாட்டமில்லை. புறத்தோற்றத்- தின் மாறுபாட்டைச் சொல்லவில்லை. அன்னை சக்திக்கு துன்பத்தை அதற்கெதிரான பேரின்பமாக மாற்றும் திறனுண்டு. ஒவ்வொரு தீய குணத்தையும், கெட்ட சுபாவத்தையும் அதற்கெதிரான தெய்வீக குணமாக, சுபாவமாக மாற்றுவதுதான் திருவுருமாற்றம்''.

"அதை அன்னையே செய்வாரா?''

"செய்வார். அதற்கு நீ உன் தீயகுணத்தை உணர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். மாற சம்மதித்து, அவற்றை அன்னைக்குச் சரணம் செய்துவிட வேண்டும். அதற்குத்தான் மாற்றம்என்று பெயர். மனம் மாறினால் அருள் செயல்படுவதை நீ ஏற்கிறாய்என்று பொருள். அருள் செயல்பட்டால் அதன் முன் நிற்கவல்லது எது? உணர்வு மாறினால் உலகமே மாறும்''.

"அப்படியே நீ சொல்லும்படிப் பார்த்தாலும் என் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அரெஸ்ட் வாரண்ட்வரை வந்தபின் மாறி என்ன பயன்? ஜெயிலுக்குப் போய் திருந்தி வரச் சொல்கிறாயா?''

"நீ உலகியலை நம்புகிறாய். அதைக் கடந்த நிலையிலுள்ள ஓர் அற்புதத்தை நம்ப மறுக்கிறாய்''.

"நீ ஏன் கிருஷ்ணா இவ்வளவு பாடுபடுகிறாய்?''

"நீ என் நண்பன். நண்பனுக்குக் கடமையுண்டல்லவா? நடந்த நிகழ்ச்சியானாலும் முடிவை நிர்ணயிப்பது செய்தியில்லை. உள்ளுறை உணர்வுதான் முடிவை நிர்ணயிக்கும். உணர்வு சரியாக இருந்து மனம் அன்னையில் இருந்தால் நல்ல செய்தி மட்டுமே வரும். நடக்கவிருக்கும் கெட்டது தடம்மாறி நல்லதாக நடக்கும்''.

"கிருஷ்ணா, நல்ல நேரத்தில் வந்து என்னைக் கொலை செய்யும் தவற்றிலிருந்து காப்பாற்றினாய். திடீரென எனக்குள் ஏதோ ரசவாதம் நிகழ்வது போலுணர்கிறேன். இனி தவறு செய்யப் போவதில்லை. சற்றுமுன்வரை நீ கூறுவதெல்லாம் கட்டுக்கதை; செல்வமும் செல்வாக்குமே சாதிக்கும்என நம்பினேன். திடீரென அந்தரத்தில் தொங்குவதுபோல் உணர்கிறேன். பற்றிக்கொள்ளத் தவித்தபோது உன் அன்னை தம் திருவடிகளை நீட்டுகிறார். பற்றிக் கொண்டுவிட்டேன். என் சாமர்த்தியத்தில் ஒன்றுமில்லைஎன்பதை நன்றாகவே உணர்ந்துவிட்டேன். குழம்பிக்கிடந்த என் மனம் நன்றாகவே தெளிந்துவிட்டது. அரெஸ்ட் வாரண்ட் பற்றிய அச்சம்கூட போய்விட்டது. நேற்றுவரை வாழ்ந்த வாழ்வின் அசிங்கம் இனிப் பிடிக்கவில்லை. இந்தக் குற்றங்களிலிருந்து தப்பிக்க நான் எந்த முயற்சியும் செய்யமாட்டேன். அன்னை கொடுக்கும் எதையும் மனமுவந்து ஏற்பேன்''.

(இதைக் கேட்டதும் நான் அவர் தற்கொலை முயற்சியிலிருந்து விடுபட்டது எண்ணி உருகி கடவுளுக்கு நன்றி கூறினேன். திடீரென டெலிபோன் மணி ஒலித்தது. எனக்குக் கலவரமானது. மீண்டும் மனதில் இறைவா, இறைவா என்று ஜபித்தேன்). "கிருஷ்ணா, நீ கூறியது அனைத்தும் சத்யம். அன்னை சக்தி

மிகப்பெரியதுஎன இக்கணமே உணர்ந்தேன்''.

(நண்பனின் கையைப் பற்றியவண்ணம் நெகிழ்வுடன் கண்ணீர் உகுத்தார்).

"போனில் பேசியது யார் ராம்?''

"நம் மகேந்திரன்தான்''.

"அட! மகேந்திரனா? எங்கிருந்து பேசினான்?''

"அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டானாம். நேற்று பேப்பரில் என்னைப் பற்றிய செய்திகளைப் பார்த்தானாம். தந்தைக்கு நிகராக தான் நேசித்த எனக்குக் கஷ்டம்என்றதும் என்னிடம்கூடத் தொடர்பு கொள்ளாமல் என்னை இதிலிருந்து மீட்பதற்கு ஆவன செய்துவிட்டு, இப்போது நான் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பேனோஎன்று எனக்குப் போன் செய்து, "கத்தி விலகியது, கவலை வேண்டாம்' என்கிறான். உண்மையில் அவன் இப்போது வரவேண்டிய நிலைமையே இல்லையாம். புதிய காரணம் ஏற்பட்டு அவசரமாய் வர நேர்ந்ததாம். வந்தவிடத்தில் என் செய்தி கேட்க நேர்ந்து உடனே ஆவன செய்திருக்கிறான்''.

(மகேந்திரன் பெற்றோர் இல்லாதவன். எந்த ஜன்ம பாக்கியோ தற்செயலாக அவனுக்குச் செய்த உதவியால் அவன் இவரை அப்பாவாகவே கொண்டாடுவான். மேன்மேலும் படித்து உயர்ந்து பெரிய திட்டம் ஒன்றை முடிக்க அமெரிக்கா சென்றிருந்தான். அவன் வர இன்னும் 2 மாத காலக்கெடு இருந்தது. மேலும் தன் மீது மரியாதை கொண்ட அவனுக்குத் தன்னிலை தெரிவதற்குள் தன்னை முடித்துக்கொள்ளவும் நினைத்திருக்கிறார் ராம்).

"பார்த்தாயா ராம்? உன்னைத் திருவுருமாற்ற அன்னை எண்ணிவிட்டார். நீ மாறமாட்டேன்என்றால் முடியுமா? இந்தக் குற்றங்களிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யமாட்டேனென்று நீ கூறினாயல்லவா? அதுதான் சரி. அன்னையே ஓரன்பருக்குக் கூறிய மந்திரமொழி என்ன தெரியுமா? "Mother knows everything. I should not worry about anything. She will arrange everything''. "அன்னையின் பாதங்களைப் பற்றிக் கொண்டேன். அவர் கொடுப்பதை உவந்து ஏற்பேன்'' என்று சொன்னாயல்லவா?

உடனே அவர் செய்த ஏற்பாட்டைப் பார்த்தாயா? இனி நீ கனவிலும் தவறான வழி செல்லக்கூடாது. வா, சிஸ்டர் கையால் பரிமாற, சாப்பிடுவோம்''.

(இருவரும் பெரும் நிம்மதியுடன் சாப்பிட வந்தனர்).

மறுநாள் நிகழ்ந்தவைகளோ பேர் அற்புதங்கள். எல்லாப் பத்திரிகைகளும், "தொழிலதிபர் ராம் மீது தவறான குற்றச்சாட்டுகள். பெரிய மனம் படைத்த ராம் எதிர் வழக்கிடாமல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்'' என்று செய்தி வெளியிட்டிருந்தன. அதையும் தாண்டி இவர் தவறு செய்தபோதெல்லாம் நன்மையடைந்திருந்த பலர் (அது இவருக்கே தெரிந்திருக்கவில்லை), "எங்களுக்கு நன்மை செய்துவிட்டு, நீங்கள் அவப்பெயர் ஏற்றீர்களே'' என்று அவர் பெருந்தன்மையைப் புகழ்ந்தவண்ணம் கூறிச் சென்றனர். அதற்கும் மேலாக இவர் மீது புகார் கொடுத்த நபர், "உங்கள் நல்ல மனம் அறியாமல் உங்களைச் சிறிது காலம் அவப்பெயருக்கு உள்ளாக்கி விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்'' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அன்னையே போதும். "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்' என்பது இதுதானா? என்று நன்றியால் உருகியதுடன் உடனே பாண்டி வந்து மனமுருகி அன்னையிடம் சரணம் செய்தார். அதன் பிறகு இவர் நேர்மைக்கே இலக்கணமாகி முன்னோடி ஆகிவிட்டார்''.

"அப்படியென்றால் அண்ணன் பலமுறை பாண்டி வந்தாரா? ஏன் இங்கு வீட்டிற்கு வரவில்லை?''

"தரிசனத்திற்கு வரும்போது வேறொன்றையும் அதனுடன் கலக்கக்கூடாதென என்னிடம்கூடத் தெரிவிக்காமல் திடீர், திடீர் என வருவார். பிறகுதான் என்னிடம் சொல்வார். இம்முறை என்னை அழைத்து வந்ததால் இங்கு நேரே வந்தோம்''.

"அண்ணி, முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்து விட்டீர்கள். மகேந்திரன் என்பவர் போனில் கழுத்திற்குக் கத்தி விலகிவிட்டது, கவலை வேண்டாம்எனக் கூறினாரே, அவர் யார்? அவர் நேரில் வந்து ஏதும் சொல்லவில்லையா?''

"ஆமாம், ஆமாம். அதைச் சொல்ல மறந்தது என் தவறுதான். நல்ல வேளை, தேன்மொழி நீயாவது நினைவுபடுத்தினாயே. அதில்தானே சூட்சுமமே அடங்கியிருந்தது'' என்று அண்ணி தொடர்ந்தார்.

வாணியோ, சுவாரஸ்யமான படம் ஒன்றைப் பார்க்கும் நிலையில் இருந்தாள்.

"மறுநாள் மாலையே, தன் அப்பாவாகக் கருதும் இவரைத் தேடி அன்புடன் வந்தான். இனி அவர்கள் உரையாடலை இங்கு தருகிறேன்.

"மகேந்திரா! நீயா? வா, வா. எப்போது சென்னை வந்தாய்? எப்படி வந்தாய்? என்பொருட்டு என்ன மாயம் செய்தாய்?'' (என்று உணர்ச்சி வசப்பட்டு அவனைப் பற்றி அணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார் உன் அண்ணன்).

"வாருங்கள், உள்ளே போய்ப் பேசுவோம். நீங்களும் வாருங்கள் அம்மா'' என்று கூறியவண்ணம் அவரை அணைத்துப் பிடித்து மாடி அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் உட்கார வைத்துவிட்டுப் பேசினான். "மாயம் செய்தது நானல்லேன், மதர்'' என்றான் நிதானமாக. "மதரா? அன்னையைத் தெரியுமா உனக்கு?'' (மிகுந்த வியப்புடன் கேட்டார் இவர்).

"ஆம், அன்னையை எனக்குக் கொடுத்தவரே நீங்கள்தாமே அப்பா?''

"நானா? அன்னையை அறிமுகப்படுத்தினேனா? நேற்றிரவு வரை கிருஷ்ணன் எவ்வளவு எடுத்துக் கூறியும் புரியாதிருந்து, நேற்றிரவுதானே நானே அன்னையை உணர்ந்தேன். அப்படியிருக்க நான் எப்படி அன்னையை உனக்குத் தந்திருக்க முடியும்?''

"ஆம் அப்பா. உங்களை அறியாமலேயே நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள்''.

"ஒன்றும் புரியவில்லையே மகேன்''.

"முதன்முதலில் என்னைப் பேராபத்திலிருந்து மீட்டு வந்தீர்களே, அப்போது நீங்கள் அன்னையாகத்தான் என் வாழ்வில் வந்தீர்கள்''.

"என்ன சொல்கிறாய் நீ?''

"அனாதைச் சிறுவனான நான் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது ஒருவர் என்னை ஓரன்னை அன்பரான பெரியவரிடம் செலுத்தினார். அவர் எனக்கு அன்னையைப் பற்றியெல்லாம் கூறி, "நீ அன்னையைச் சரணடைந்து விடு. உன் பொறுப்பை அவர் ஏற்பார்'' என்று கூறினார். அதை நான் சத்தியவாக்காக ஏற்றிருந்தேன். அப்போதுதான் ஒரு மோசடிப் பேர்வழி அனாதையான என்னைத் தன் தொழிலுக்காக என்னைப் பிடிக்க வந்தான். நான் தப்பிக்க வழியறியாமல் அன்னையை நினைத்து அழுதபோதுதான் காரில் அவ்வழியே சென்ற நீங்கள் காரை நிறுத்தி அவனிடமிருந்து என்னைக் காப்பாற்றி உங்கள் வீட்டிற்குக் காரிலேயே அழைத்து வந்து ஒரு தாயின் பரிவுடன் நடந்து கொண்டீர்கள். அக்கணமே உங்களை என் தந்தையின் இடத்தில் வைத்துவிட்டேன். என் படிப்பிற்கு, பாதுகாப்பிற்கு, யாவற்றிற்கும் அளவு கடந்து உதவினீர்கள். நான் அடிக்கடி இங்கு வரும்போதெல்லாம் கிருஷ்ணன் அங்கிள் உங்களுக்கு அறிவுரை சொல்வதையெல்லாம் கவனித்திருக்கிறேன். உங்கள் திறமையும், உழைப்பும் நாணயமற்ற வழியிலே சென்று கொண்டிருப்பதாய் அங்கிள் வருத்தப்படுவார். இருந்தும் நான் எதுவும் தெரிந்ததாய்க் காட்டிக் கொள்ளவில்லை. எனக்கு அன்னையைப் பற்றிக் கூறிய பெரியவரிடம் அது பற்றிச் சொல்லி வருந்தினேன். நான் தங்களைத் தந்தை போல் எண்ணி நேசிப்பதாய்ச் சொன்னேன். உங்களைத் தீய வழியிலிருந்து மீட்கக்கூடுமா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அந்தப் பெரியவர், "நீ அவருடைய தீமைகளுக்கு மானசீகமாய்ப் பொறுப்பேற்று அவரை இக்குற்றங்களிலிருந்து மீட்கத் துணிவாயா- னால் அவருக்கு இவற்றிலிருந்து மீட்சியுண்டு'' என்றார். அப்பொழுதே உம் பிழைகளுக்குப் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டேன். அன்னையிடம் உங்களைச் சரண் செய்தேன். ஓயாது உம் மனமாற்றத்தை அன்னையிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் எங்கள் அமெரிக்க நண்பர் அவர் மேற்கொண்டுள்ள திட்டத்திற்குப் பொறுப்பேற்க என்னை அழைத்தார். அது அன்னை முறைகளை ஏற்று பிரச்சினைகளை வாய்ப்பாக மாற்றுவது; அதன் மூலம் அன்னையை ஜீவனின் சிகரத்தில் ஏற்பது போன்றவற்றின் அமைப்பை உள்ளடக்கியது. அந்த அமெரிக்க அன்பர் நான் கூறிய பெரியவரின் வழிகாட்டுதலுடன் அன்னையை அதிகம் ஏற்றவர். சிறியது, பெரியது என்றில்லாமல் அன்றாட நிகழ்ச்சிகளை அன்னையால் அமைத்துக் கொண்டவர். அந்தப் பெரியவர்தாம் என்னையும் அத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி அமெரிக்க அன்பருக்கு செய்தி அனுப்பியிருந்தார். பெரியவரின் ஆசியுடன்தான் நான் அமெரிக்கா சென்றேன். ஆன்மீகம் பற்றிய திட்டமானதால் பறையறை செய்யாமலிருப்பது நல்லது என்பதால்தான் யாருக்கும் விபரம் சொல்லவில்லை. நேற்று முன்தினமே நான் இந்தியா வந்துவிட்டேன். எங்களுக்கு வழிகாட்டும் பெரியவர் அழைப்பை ஏற்றுதான் வந்தேன். நாங்கள் மேற்கொண்ட திட்டம் தொடர்பான உண்மை நிகழ்ச்சியை எனக்குக் காட்டப்போவதாக உடனே வரச் சொல்லியிருந்தார். வந்தபோது உங்கள் செய்தி அரெஸ்ட் வாரண்ட் வரை வந்துவிட்டது தெரிந்தது. பெரியவரிடம் கூறினேன். எங்கள் திட்டத்தில் தொடர்புடைய அன்பர் இங்கு சென்னையில் இருக்கிறார். அவரை நேரில் பார்த்து யாவற்றையும் சொல்லச் சொன்னார். அவரிடம் சொன்னேன். அவர், முதலில் உங்கள் மனமாற்றத்திற்காக நாம் பிரார்த்திப்போம் என்றார். உடனே நான் என்னையே நீங்களாகப் பாவித்து அன்னை முன்னமர்ந்து உங்கள் பிழைகளை நீங்கள் மனமார ஏற்று, அன்னை முன் சரணடைந்துவிட்டதாக மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தேன். அப்போது எனக்கு ஓர் அகக்காட்சி கிடைத்தது. ஒரு போலீஸ் அதிகாரி உம் கையில் விலங்கு மாட்ட வருவதாயும், இடையில் அன்னை வந்து விலங்கை பற்றி வீசி எறிந்துவிட்டு உம்மை அணைத்துக் கொண்டார். சிலிர்த்து விழித்தேன்.

மேற்படி திட்டத்தில் உள்ள அன்பர், உம்மீது புகார் கொடுத்த நண்பரைச் சந்தித்து நீர் உம் பிழைகளைப் பூரணமாக உணர்ந்து ஏற்றுக் கொண்டதாயும், இனி உங்களைத் தண்டிக்க அவசியமிராது என்பது பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார். புகார் அளித்தவரின் மகனும் எங்கள் திட்டத்துடன் தொடர்பு கொண்டவர். அவரும் எனக்காகப் பேசியிருக்கிறார். கணப்போதில் அன்னை செயல்பட்டு, புகார் கொடுத்தவரே, குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதிஎனத் தெரியவந்ததால் தாமே தம் புகார் மனுவைத் திரும்பப் பெறுவதாயும், இனி உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமெனவும் எழுதிவிட்டார். இரவோடிரவாகச் செய்தித்தாள்களுக்குச் செய்தி போய்விட்டது. கிருஷ்ணன் அங்கிள் உம்மைத் தேடி இங்கு வந்து உம்முடன் இருப்பதை நான் விசாரித்துத் தெரிந்துகொண்டு விட்டேன். எனக்கு அன்னை மீது அளவுகடந்த நம்பிக்கையுண்டு. எங்களுக்கு வழிகாட்டும் பெரியவர், முன்பே உங்களுக்குத் திருவுருமாற்ற வாய்ப்பு உண்டுஎன்று கூறியுள்ளார். எனவே, தக்க சமயத்தில் யாவும் நிகழும்என்று நம்பி நிதானமாய்ச் செயல்பட்டேன். "அன்னை நம்மை நாடி வரும் தெய்வம்'' என்பது எத்தனை உண்மை''.

"அண்ணனிடம் பழைய அலட்டல் ஒன்றுமில்லை. மிக அடக்கமாக மாறிவிட்டாரே'' என்றாள் தேன்மொழி.

"அன்னை அன்பர்க்கு இருக்க வேண்டிய தகுதியே அதுதான்'' என்றார் அண்ணி.

வாணி மெய்ம்மறந்து பக்கத்தில் வந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணி, "வாணி, அன்னையில் மயங்கிப் போனாயா?'' என்றார்.

"ஆம்' என்பதுபோல் தலையசைத்தாள் வாணி. எஜமானியம்- மாள் அண்ணியாரிடம், "வாணி மிகவும் நல்ல பெண். இவள் கணவன் இவளைத் தள்ளி வைத்துவிட்டு வேறொருத்தியுடன் வாழ்கிறான். நம் நாட்டுப் பெண்கள் நிலைதான் தெரியாதா? நன்றாக வாழும்போதே ஆயிரம் குற்றம் சொல்லும் சமுதாயம். இவளைச் சொல்லக் கேட்க வேண்டுமா? மிகவும் நல்லவள். நான்தான் இவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டேன்''.

"அன்னை பெண்களுக்கும் நிறைய சொல்லியிருக்கிறார்'' என்றார் அண்ணி.

வாணி மெல்ல அண்ணியாரிடம் வந்து, "நீங்கள் கூறியதெல்லாம் நானும் கேட்டேன். ஏதோ சக்தி, அன்னை என்றெல்லாம் கூறினீர்கள், அந்த அன்னையைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லக்கூடாதா? அவர்கள் தெய்வம் என்றீர்கள். பூவுலகில் சூட்சுமமாக இருப்பதாகவும் சொன்னீர்கள். எனக்கு விளக்கமாய்த் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாய் இருக்கிறது''. "சரி, இப்போது உன் வேலைகளைச் செய்து முடித்துவிட்டு வா. முதலில் தியான மையம் சென்று வருவோம். வந்து அவரைப் பற்றி நிறைய சொல்கிறேன்'' என்றார் அண்ணி.

அன்னை தரிசனம் முடித்து, வரும் வழியிலேயே அண்ணி, அன்னையைப் பற்றி தாமறிந்த செய்திகளையெல்லாம் சொன்னார்.

"அன்னை என்று ஸ்ரீ அரவிந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பிரான்ஸ் தேசத்தில் அவதரித்தவர். மனிதனுக்குள் உள்ள தெய்வீகத்தை அவனுக்கு உணர்த்த வந்தவர். எளிய மனிதப் பெண்ணாய் வந்து, எல்லோரும் காணும்படி வாழ்ந்தவர். இங்கு புதுவையில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் பூரணயோகம் என்ற யோகத்தை மேற்கொண்டபோது அந்த யோகப் பலனை நமக்குப் பெற்றுத் தரும் தாயாய் இருந்தவர். தம்மை உண்மையாய் பக்தி செய்தவர்க்- கெல்லாம் பரமானந்தமாய் இருப்பவர். இறையார்வம் உள்ளவர்க்கு எளிதில் கிடைப்பவர். கடவுள் சக்தியைச் சுமந்து நிற்பவர். உயர் சாதனை புரிய விரும்புகின்றவர் அவரை ஏற்றால், சாதிக்க துணை நிற்பவர். கஷ்ட காலத்தில் தோழியாய் இருப்பார். சோதனை செய்யமாட்டார். பொய் அவருக்குப் பிடிக்காது. சத்தியமே அவர் சக்தி. நல்லெண்ணத்திற்கு பிறப்பிடம். அக்காலங்களில் பெண்களை யோகத்திற்கு யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் அன்னை பெண்களை யோகத்திற்கு அனுமதித்தார். பெண்களை அடிமைப்படுத்துவதை அவர் விரும்பமாட்டார். பெண்களுக்கு இயல்பாய் இருந்த மூன்று குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அதை எப்படி மாற்றினால் சிறந்தது என்பதையும் கூறியிருக்கிறார்.

பெண்கள் தாய்மையை விரும்புவது, ஆணின் வலிமையால் ஈர்க்கப்படுவது, சொந்த வீடு வேண்டும் என விரும்புவது என்ற மூன்றும் அவர்களைப் பிணித்துள்ள கட்டுகள் என்று சொல்லியிருக்கிறார்''.

"அப்படியென்றால் தாய்மை என்பது சிறந்ததில்லையா?'' என்று துணுக்குற்றுக் கேட்டாள் வாணி.

"தன் வீடு, தன் குழந்தை என்ற அளவில் பாசம் அவளைச் சுயநலப்படுத்துகிறது. அந்தச் சுயநலமான பாசத்திலிருந்து தன்னை விடுவித்து, தூய அன்பாக அதை மாற்றினால், சுயநலம் அழிந்து உயர்ந்த பரநலம் வந்துவிடும். சொந்த வீடு என்பது சொத்தால் வரும் பாதுகாப்பு. அன்னையின் அருளை நாடினால் பாதுகாப்பு நிரந்தரமாயும், அளவுகடந்தும் கிடைக்கும். ஆண்களின் வலிமையை பெண் விரும்புவது அச்சத்தால் பெறும் ஆதரவு. இறைவனின் அருளை நம்பினால் சமூகமே வலிமை மிக்க ஆதரவாய் அமைந்துவிடும்''.

"எல்லாம் சரிதான் அண்ணி. அவர் இப்போது எங்கே இருக்கிறார்'' என்றாள் தேன்மொழி.

"96 ஆண்டுகள் மனித வடிவில் இருந்தார். உணர்த்த வந்ததை நமக்கெல்லாம் உணர்த்திவிட்டு, ஸ்தூல உடம்பை விட்டுவிட்டு, கண்ணுக்குப் புலப்படாத சக்தியாய் பூலோகத்தில் தங்கிவிட்டார்'' என்றார் அண்ணி.

நாம் அவரை அன்புடன் நினைத்தாலும், அழைத்தாலும் அவர் சக்தி வந்து நமக்காகச் செயல்படும்.

அன்னையைப் பற்றி, அண்ணியார் ஊருக்குப் புறப்படும் வரை நிறைய செய்திகள், நிகழ்ச்சிகள் என்று ஏதேனும் கூறியபடி இருப்பார். பொருட்களைத் தாறுமாறாய் அடுக்கினால், "வாணி, இது மதருக்குப் பிடிக்காது. முதலில் அவர் பொருட்களை ஒழுங்காக அடுக்கும் முறையைத்தான் சாதகர்க்குக் கற்பித்திருக்கிறார். அது நமக்கும் அவர் சொல்லியதாக புரிந்து ஏற்றுக்கொள்வது நாம் அவரை ஏற்றிருப்பதற்கு அடையாளம்'' என்பார். வாணியும் மகிழ்ச்சியுடன் புத்தக அலமாரி, புடவை, துணி வைக்கும் பீரோ, அடுக்களை சாமான்கள் என்பதை ஒழுங்குபடுத்திவிட்டு அண்ணியை அழைத்து வந்து காட்டுவாள். "ஆகா, எத்தனை திறமை உனக்குள் ஒளிந்திருக்கிறது பார்த்தாயா வாணி!'' என்று மகிழ்வார். அன்னை தன் முதுகில் தட்டிப் பாராட்டியது போலிருக்கும் வாணிக்கு.

"இன்னும் என்னவெல்லாம் அன்னைக்குப் பிடிக்கும் என்று சொல்லுங்கள் அண்ணி'' என்பாள் வாணி.

"சுத்தம் பிடிக்கும், சுறுசுறுப்புப் பிடிக்கும், நல்ல எண்ணம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும், தாழ்ந்த குரலில் தேவைக்கு அளவாகப் பேசுவது பிடிக்கும், எல்லாப் பூக்களும் பிடிக்கும்'' என்று சொல்லச் சொல்ல குழந்தைபோல் ஆவலுடன் கேட்டுக் கொள்வாள்.

"அன்னைக்கு எதெல்லாம் பிடிக்காது என்பதையும் சொல்லிவிடுங்கள் அண்ணி'' என்றாள் வாணி.

"பொய் பிடிக்காது, அசுத்தம் பிடிக்காது, வம்பு பேசுவது பிடிக்காது, பொருட்களை விரயம் செய்வது பிடிக்காது, சோம்பல் அறவே பிடிக்காது''.

"இதெல்லாம் எல்லாப் பெரியவர்களும் சொல்லக்கூடியதுதானே அண்ணி?'' என்றாள் கள்ளமில்லாது.

"வாழ்வில் இவற்றைச் செய்வதால் நல்ல பெயர் வரும், அவ்வளவுதான். அன்னையை ஏற்றுச் செய்யும்போது அதிர்ஷ்டம் வரும். அன்னைக்காகச் செய்யும்போது அன்னையே வருவார்'' என்றாள் அண்ணி.

"அன்னையே வருவாரா! அவரை நான் பார்க்க முடியுமா!'' என்று ஆர்வம் ததும்பக் கேட்டாள் வாணி.

"பார்க்க வேண்டும் என்ற தணியாத ஆவல் இருந்தால் நிச்சயம் பார்க்க முடியும். எங்கும், எப்போதும் அவர் இருந்து கொண்டுதானிருக்கிறார். பார்க்கும் தெளிவு நமக்கிருப்பதில்லை'' என்றெல்லாம் கூறியவர் அன்னையைப் பற்றிய எளிய முறையில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றையும் அன்னையின் திருவுருவப் படம் ஒன்றையும் அவளுக்கு அன்புடன் தந்தார்.

ஒரு நாள் ஓரன்னையன்பரைக் காணவும் அண்ணி சென்று வந்தார். வந்து அந்த அன்பர் அன்னை மீது கொண்டுள்ள பக்தியும், நம்பிக்கையும், அவரை அன்னை மயமாக்கியிருப்பதையும், அவரைக் கண்டதே அன்னையைத் தரிசிப்பது போன்றிருந்ததையும், அவர் அன்னையிடம் நேரில் அருளாசிகளுடன் பல பரிசுப் பொருட்களைப் பெற்று அவற்றைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதையும் விவரித்தார். இவ்வாறு அன்னையை அங்கு ஊன்றிவிட்டு அவர்கள் ஊருக்குச் சென்றனர்.

அது முதல் வாணிக்கு அன்னையைப் பற்றிய கற்பனைகள். ஒரு முறை ஆசிரமத்துச் சாதகி அன்னையிடம் ஸ்ரீ கிருஷ்ணன் தன் அகக்காட்சியில் வந்ததாக மகிழ்ந்து கூறினாளாம். அதைக் கேட்டுப் புன்னகை செய்த அன்னை அந்தச் சாதகி சென்றவுடன் அருகே நின்றிருந்த சாதகரிடம், "அவள் என்னைத்தான் அந்த வடிவில் பார்த்திருக்கிறாள்'' என்றாராம்.

அதற்கு அந்தச் சாதகர், "நீர் பெண் அல்லரோ, ஸ்ரீ கிருஷ்ணன் ஆடவரல்லரோ?'' என்றாராம். அதற்கு அன்னை சிரித்து, "அவையெல்லாம் முக்கியமல்ல'' என்று கூறினாராம். இந்நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது வாணிக்குச் சிறிது குழப்பமேற்பட்டது. "அண்ணி, அன்னை ஆணா? பெண்ணா? கிருஷ்ணரும் அவரும் ஒன்றா?'' என்று கள்ளமில்லாமல் கேட்டாள்.

"பரம்பொருளுக்கு எவ்வித வரையறையும் இல்லை. அது ஆணாகும், பெண்ணாகும். நாம் எதில் அதை உணர்கிறோமோ அதுவாக அது காட்சி தரும் என்று புரிந்து கொண்டால் குழப்பமில்லை'' என்று பரிவுடன் கூறியிருந்தார் அண்ணி.

படிப்பறிவில்லாத எளிய பாமரப் பெண்ணான அவள், மிகப்பெரிய கடவுள் அன்னைதான் என்று உறுதியாக நம்பினாள். சதா அன்னையைப் பற்றி அண்ணியார் கூறிய செய்திகள், நிகழ்ச்சிகள் மனதில் சுழன்றபடி இருந்தது.

இவ்வாறாக வாணியின் வாழ்வில் அன்னையின் பிரவேசம் நிகழ்ந்துவிட்டது. அதன் விளைவான அருட்பிரசாதத்தை அவள் எப்படிப் பெற்றாள் என்பதையும் பார்த்துவிடுவோம்.

முகமெல்லாம் பிரகாசிக்க தன் இதயம் கவர்ந்தவனின் இனிய நினைவில் வலம் வரும் இளம் பெண்ணாக வளையவரும் வாணியை அவள் தாத்தா கண்டு வியக்கிறார்.

"என்ன வாணி, இப்போவெல்லாம் ஏதோ ஆகாசத்துல பறக்குறாப்பல இருக்குற'' என்றார் தாத்தா.

"ஆமா தாத்தா. சந்தோஷத்தால ஆகாசத்தில பறக்குறேன்'' என்கிறாள் வாணி.

"எங்ஙனா ஒம் புருஷங்காரனப் பாத்தியா?''

"இல்ல தாத்தா. இது வேற'' என்றாள்.

"புருஷனவிட என்ன சந்தோஷம் ஒனக்கு?''

"அதுவா? நா வேல செய்யுற வீட்ல சென்னப் பட்ணத்து சனங்க சாமி கும்பிட வந்தாங்க. அவங்க பேசற பேச்சுல ஒரு சந்தோஷ சமாச்சாரம் கெடச்சுது. அதுதான் எந்நேரமும் என்னெ ஆட்டிப்படைக்குது'' என்று துள்ளும் மகிழ்வுடன் கூறுகிறாள்.

"அட, அதெ எனக்கும் சொல்லம்மா'' என்று கெஞ்சும் பாவனையில் தாத்தா கேட்டார்.

"இந்த வூர்ல (பாண்டிச்சேரி) அன்னைன்னு ஒரு மனுஷ தெய்வம் இருந்திச்சாம். இப்பவும் அது பூலோகத்துக்குள்ள கண்ணுக்குத் தெரியாம சக்தியா இருக்குதாம். அதை வேண்டிக்கிட்டா எல்லாம் நடக்குமாம். அதால முடியாததே இல்லையாம். அதெ நாம கள்ளங்கவடில்லாம நம்பினா போதுமாம். அது நம்ம கூடவே இருக்க நம்ம மனசையும், இடத்தையும் சுத்தமா வெச்சுக்கிடணுமாம்''.

"அதுதான் சொம்மா வீட்டெ சுத்தம் பண்ணிக்கினு இருக்கியா?'' என்று கேலி செய்தார்.

"நீ கேலி பேசுற. நடந்த சமாச்சாரத்தை கேட்டீனா சிலுத்துடுவே'' என்று சிலிர்ப்புடன் கூறினாள்.

"அப்படி என்ன புள்ள நடந்திச்சு?''

"யாருனா அநியாயம், அக்கிரம்பு செஞ்சு மாட்டிக்கினா தப்பிச்சுடுவாங்களா?'' என்றாள்.

"தப்ப விடக்கூடாது புள்ள. விட்டா மேல மேல அநியாயம் செய்வாங்க'' என்றார் தாத்தா.

"அதுதான் இல்ல. அன்னைகிட்ட தாஞ் செஞ்ச தப்பையெல்லாம் ஒத்துக்கிட்டு இனி கனாவுலயும் அதெச் செய்யறதில்லேன்னு சத்தியம் செஞ்சா அவுங்க மன்னிச்சுடுவாங்க''.

"அவுங்க மன்னிச்சா போதுமாம்மா. தெய்வம் எப்பவும் மன்னிச்சுடும். அதனால தப்பு செஞ்சு மாட்டினவன ஒலகம் மதிக்காதும்மா'' என்று வருந்திக் கூறினார் தாத்தா.

"அதுதான் இல்ல. அன்னையால மாறினவங்கள ஒலகம் தலைல வைச்சு கொண்டாடும்'' என்றாள் பெருமையாக.

"இதெல்லாம் நம்புறாப்பல இல்லம்மா'' என்றார் தாத்தா.

"விஷயத்தை கேட்டீனா நம்புவ தாத்தா. எங்க எஜமானியம்மாவோட அண்ணங்காரரு தில்லுமுல்லு பண்ணி பெரிய பணக்காரரா ஆயிட்டாராம். திடீர்னு ஒரு நா ஒத்தரு அதெப்பத்தி புகார் கொடுத்து அவரைப் போலீஸ்ல மாட்டினாராம். அவமானம் தாங்காம அந்த மனுசன் விஷம் குடிச்சு சாவப் போறப்ப, அன்னெய கும்பிடறவரு தெய்வமா குறுக்க வந்து, அவரை மனச மாத்தி, தப்பு செய்யதில்லேன்னு அன்னைக்கு சத்தியம் செய்யினு கட்டாயப்படுத்தி- னாராம். அவரும் ஒன்னப்போல இதெ நம்பாமே விஷமே குடிக்கிறேன்னு அடம்புடிச்சாராம். அவரு புள்ளகணக்கா வளத்த பையன் அவருக்காக அன்னைகிட்ட வேண்டிக்கிச்சாம். அப்ப இவரும் மனசு மாறி தப்பே செய்யறதில்லேன்னு அன்னைக்கு சத்யம் செஞ்சாராம். அதே நேரமே உனக்கு ஜெயிலு இல்ல, மன்னிச்சுட்- டாங்கன்னு சேதி வந்திச்சாம். அதிலேர்ந்து அவரு நல்ல மனுஷனா மாறி இன்னும் பெரிய பணக்காரரா ஆயிட்டாராம். அதுக்கு விஸ்வாசமாத்தான் அடிக்கடி பாண்டிக்கு வருவாராம்'' என்று ஏற்றியிறக்கி உணர்வோடு கூறினாள் வாணி.

"நடக்குமா புள்ள இது?'' என்று அதிசயித்தார் தாத்தா.

"நடந்திருக்கே. அவுங்களே இதெல்லாம் எசமானியம்மாகிட்ட சொன்னத நானே கேட்டேனே. அதுல அவங்க ரொம்ப மாறிட்டாங்களாம். கோயில், பூஜை எல்லாம் விட்டுட்டாங்களாம். அன்னைக்கு ஏத்துக்கறாப்பல சுத்தமா, சத்தியமாக வாழ ஆசப்படறாங்களாம்''.

"அதெல்லாம் சரி புள்ள. அதுல ஒனக்கு என்னா சந்தோஷம் வந்திச்சு?''

"இருக்கு தாத்தா. புருசன் கைவிட்டார்ன்னு என்ன ஊரெல்லாம் குத்தமா பேசிச்சில்ல, அதெல்லாம் மாறி நான் புருஷன் கைவிட்ட கெட்ட பொண்ணில்ல, சாமிக்குச் சொந்தமான நல்ல பொண்ணுன்னு உலகம் சொல்லுற நல்ல நாள் வரப்போவுதுன்ற சந்தோஷம்தான்''.

"என்னவோ போ, எதுனா பேசி ஆறுதல் பட்டுக்கிற'' என்று சோர்ந்துபோனார் தாத்தா.

"பொம்பளங்களப் பத்தியெல்லாம் அந்த அன்னையம்மா ஒசத்தியா பேசியிருக்காங்க. ஆம்பள தொணைய நாடுறதவிட தெய்வத் தொணைய நாடுறது ஒசத்தின்னு பேசியிருக்காங்க. அவுங்க சக்தியைப் பாத்து எத்தனையோ பொம்பளங்க கல்யாணமே கட்டிக்கிடாம அவங்க சொன்ன சாமி வழியில வாழ்ந்தாங்களாமே'' என்று மெய்மறந்து பேசினாள் வாணி.

"ஆமாம் புள்ள, இதெல்லாம் கதைக்கு வேணாச் சரியாகும். வாழறத்துக்கு சரிவராது. புருஷனில்லாம என்ன வாழவேண்டியிருக்கு'' என்று அலுப்படைந்தார் தாத்தா.

"சரி தாத்தா. நா புருஷன வேண்டாமின்னு சொல்லலையே, அவுருதானே என்னெயப் புடிக்காம விட்டுப் போனாரு. அதுக்கு நான் என்ன செய்ய?'' என்றாள் ஏக்கம் ஏதுமில்லாமல்.

"அவ்வளவு சக்தி கொண்ட தெய்வங்றியே, அதெ வேண்டி உம் புருஷங்காரந் திரும்பி வர செய்ய முடியாதா?''

"முடியும் தாத்தா. மனப்பூர்வமா வேண்டினா கிடைக்கும். அப்போ அது எம் புருஷனுக்கு நா செய்யிற துன்பந்தானே அது?''

"ஏம்மா அப்படிச் சொல்லுற?''

"ஆமாந் தாத்தா. அது தம் மனசுக்குப் புடிச்ச பொம்பளயோட சந்தோஷமா வாழுது. புள்ளக்குட்டியும் ஆயிடிச்சு. இனிமே நா அதைப் பத்தி நெனக்கறது எதுக்குத் தாத்தா?''

"அப்ப, நீ வேற கல்யாணங் கட்டிக்கிட முடியுமா?'' என்று துயரப்பட்டார் தாத்தா.

"ஏன், நா மறுபடி ஒரு கல்யாணங் கட்டிக்கிடணும்?" என்றாள் வாணி.

"உனக்குன்னு ஒரு பாதுகாப்பு வேணாமா?" என்று பரிவாய்க் கேட்கிறார் தாத்தா.

"தாத்தா, உனக்குப் புத்தி போறல. தெய்வம் எல்லாத்தையும்விடப் பெரிசு தாத்தா. அது தராத பாதுகாப்பையா மனுசன் தருவாரு?'' என்று சிரிக்கிறாள்.

"எப்படிம்மா இது? எல்லாரும்தான் தெய்வத்தைக் கும்பிடறாங்க. அதுக்காக தெய்வம் நேருலயா வருது? இப்படி மனுஷ ரூபத்துலதானேம்மா வருது?"

தொடரும்.....

*******book | by Dr. Radut