Skip to Content

07. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 1. உதவி செய்யப் பெரும்பாடுபட்டாலும் பெறுபவர் சிறு குழந்தையாகச் சொல்லிய ஒரு சொல் அதிர்ஷ்டத்தையும் அன்னை அதிர்ஷ்டத்தையும் தடை செய்ய வல்லது.

  அன்றைய சிறுசொல் இன்றைய பெரிய அதிர்ஷ்டத்திற்குத் தடை.

  நாம் பேசும்பொழுது பெரும்பாலும் யோசனை செய்து பேசுவதில்லை. எழுதும்பொழுதும் அப்படியே. நாம் பேசும்பொழுது ஒரு மாமா அங்கிருந்தால் அந்த இடத்திற்கு மாமாவின் இராசி வரும்என நாம் நினைப்பதில்லை. சாதாரணமாகப் பேசும்பொழுது முக்கியமான நினைவுகள் எழுந்தால் பேச்சு நினைவுக்குரிய சூடு பிடிக்கும். அந்த நேரம் நாம் சொல்லும் சொல்லுக்கு முக்கியத்துவம் வரும்என நாம் அறியோம். நேரம் எளிய பேச்சுக்கு இல்லாத அர்த்தம் தரும். நினைவுக்கே முக்கியத்துவம் எழுந்து பலிக்கும். கேலியான பேச்சில் சொல்பவை பலிக்கும்பொழுது ஆச்சரியமாக இருக்கும். நல்லெண்ணத்தால் சொல்வது பலிக்கும். வெறுங் கற்பனையானாலும் நல்ல எண்ணமானால் அதுவும் பலிக்கும். வெறுப்பால் குதர்க்கமாக நடக்க முடியாததைக் கூறினால் அதுவும் பலிக்கும். இவை நாமறியாதது, அறிந்தாலும் பொருட்படுத்தாதது.

  • இளைஞர்கள் இரண்டு வருஷம் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் கடிதம் எழுதும்பொழுது "நாம் மிகவும் நெருங்கியிருக்கிறோம். இதுபோன்ற நெருங்கிய நட்பும் முறிந்து போவதுண்டு என நான் படிக்கிறேன். அப்படி நம் நட்பு முறிந்து போனால் அதற்கு வருத்தப்படக் கூடாது'' என்று எழுதினார். எப்படி இச்சொற்களை, சுடுசொற்களை உங்களால் எழுத முடிந்தது என அடுத்தவர் ஆத்திரப்பட்டார். ஓராண்டு கழித்து ஒருவரை ஒருவர் பார்க்க மனம் இடங்கொடுக்காத நிகழ்ச்சி நடந்து விட்டது. பிரிந்தனர்.
  • புதியதாக flat வீடுகள் கட்டுகிறார்கள். நீங்கள் இங்கே வந்தால் அருகாமையாகும். வந்துவிடுங்கள்என்றவர் எதையும் நினைத்துச் சொல்லவில்லை. ஒரு சில ஆண்டுகட்குப்பின் அவர் புதிய வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். கொஞ்ச நாள் கழித்து அதை விலைக்கு வாங்கிக் கொண்டார்.
  • அடிக்கடி தம்பியைப் போய்ப் பார்ப்பவரை நோக்கி, ஏன் இப்படி போவதும் வருவதுமாக இருக்க வேண்டும். தம்பி வீட்டிற்கே போய் தங்கிவிடக்கூடாதாஎன்ற குரல் கொஞ்ச நாள் கழித்துப் பூரணமாகப் பலித்துவிட்டது.
  • பட்டப்படிப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர் மாணவனை எழுதச் சொன்னார். ஒரு நாள் எழுதியவர் மேற்கொண்டு எழுத மறுத்தார். இப்படி மறுத்தால் 3 முறை பரீட்சை எழுத வேண்டும்என்றார். அவர் மூன்றாம் முறை பாஸ் செய்தார்.
  • சிறு தொழில், இரண்டு பார்ட்னர்கள். ஒரு லட்சம் வருஷ வியாபாரம், தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்ததில் ஓர் ஆண்டில் 10 லட்சமாயிற்று. பார்ட்னருக்குத் துரோகம் செய்து பழைய லட்சம் எட்ட முடியாமற் போயிற்று. மீண்டும் தொழில் நுணுக்கங்களை ஆழ்ந்து பயில முயன்றும் எந்தப் பலனுமில்லாமற் போனபொழுது தொழிலதிபரை முன்னேற்ற முயன்றவர் காரணங்களை அலசி ஆராய்ந்தார். அவர் சிறு பையனாக இருந்த சமயம் கேலியாகப் பேசியதைக் கேட்டுப் புண்பட்டு சாமர்த்தியமாக சிறுகுழந்தை சொல்லிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் அமிழ்த்தியது. அது இன்று அதிர்ஷ்டம்பெறத் தடையென விளங்கியது.
  • ஒருவர் நல்லெண்ணத்தால் அதுபோல் பேசிய சொல், முனிசிபல் கௌன்சிலுக்கு 60 வயது வரை நின்றறியாதவரை அட்ஹாக் கமிட்டி வந்து கௌன்சிலராக்கியது.
  • சொற்கள் பலம் வாய்ந்தவை. பலிக்காமல் போகாது.

  *****

 2. நோக்கம் உள்ளவரை பலன் தரும். ஆழ்ந்த நோக்கம் வாழ்வு முழுவதையும் நிர்ணயிக்கும்.

  ஆழ்ந்த நோக்கம் வாழ்வு முழுவதையும் நிர்ணயிக்கும்.

  வாய்க்கால் நீரோட்டத்தைச் செலுத்துவதுபோல் நோக்கம் வாழ்வை நடத்தும். வாய்க்காலின்றி நீரோட்டம் குட்டையாகத் தங்கும். ஓடாது. சமூகத்தின் அடி மட்டத்திலுள்ளவர் அனைவருக்கும் நோக்கமில்லை. பிழைத்தால் போதும்என்பதே அவர் நிலை. மனிதனாக வாழ வேண்டும். நாலுபேர் மதிக்க வாழ வேண்டும் என்பவர் சம்பாதிப்பார்கள். அவர்கட்குத் திருமணமாகும். குடும்பம் நடத்தி மனைவி மக்கள் மரியாதைக்குரியவராவர். பிறந்தோம், வளர்ந்தோம்என்றால் வாழ்ந்ததாக முடியுமா? ஏதாவது சாதிக்க வேண்டாமா? கணிசமாகச் சம்பாதிக்க வேண்டும்என்பது என் நோக்கம்என்பவர் வெற்றிபெற வழியுண்டு. எனது தொழிலில் நான் சிறப்படைய வேண்டும்என முயன்று வெற்றி பெறுபவருண்டு. ஊரில் முக்கியஸ்தராக வேண்டும்என்று M.L.A., M.P. ஆனவருண்டு. தொழிலுடன் உறவு கொண்டு தொழிலுக்கு சிறப்பு கொண்டு வர வேண்டும்என்று முயல்பவருண்டு. என் தகப்பனார் சிறிய சொத்து வைத்துவிட்டுப் போனார். என் பிள்ளைகட்கு நான் பெரிய சொத்து வைக்க வேண்டும், நல்லவன்எனப் பெயர் வாங்க வேண்டும், நாணயஸ்தன்என விளங்க வேண்டும், அரசியல் தலைவனாக வேண்டும், குடும்பக் கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும், மொழியில் புலமைபெற வேண்டும், வெளிநாடு போக வேண்டும், பெரிய பட்டம்பெற வேண்டும், பெரிய வேலைக்குப் போக வேண்டும், துறவறம்பூண வேண்டும், என் மக்கள் என்னைப் போல் வரவேண்டும் என நினைக்க வேண்டும், பத்திரிகை நடத்த வேண்டும், புத்தகம் எழுத வேண்டும்என்பது பல நோக்கங்கள்.

  • நோக்கமே இல்லாதவனுக்குச் சாதனையில்லை.
  • நோக்கம் திறமையால் பூர்த்தியாகும்.
  • நோக்கம் ஆதாயமாக, சிறியதாக இருப்பதுண்டு.
  • திறமை நோக்கத்தைப் பூர்த்தி செய்தால் சொத்து சேரும்.
  • திறமையும் பண்புமிருந்தால், நாணயம், பிரபலம் வரும்.
  • பொது வாழ்வில் நோக்கமிருப்பது அரிது.
  • பொது வாழ்வில் இலட்சியம் பூர்த்தியாவது அரிது.
  • துறவறம் பெரிய நோக்கம். அது காட்டில் பூர்த்தியாவது.
  • நோக்கமே மனிதன்.
  • ஆழ்ந்த நோக்கம் வாழ்வனைத்தையும் நிர்ணயிக்கும்.
  • ஒரு சிலர் இலட்சிய நோக்கம் பூர்த்தியாவதால் உலகம் இயங்குகிறது.
  • நோக்கம் வாழ்வைச் சீர் செய்து சாதனைபெற வழி செய்யும்.
  • கடன் படக்கூடாது. கெட்டபெயர் வரக்கூடாதுஎன்பவை சிறு நோக்கங்கள்.
  • ஊருக்கு உழைக்க வேண்டும், நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்பவை பெருநோக்கங்கள்.
  • இந்தியர் பிறப்பிலேயே இலட்சியவாதிகள்.
  • ஆண்டவனுக்கும், தர்மத்திற்கும், மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்கள்.
  • அன்பருக்கு உகந்த நோக்கம் அன்னை நினைவில் அனைத்தும் லயிக்க வேண்டும் என்பது.

  ******

 3. செயலின் புறம் காலத்தால் அழியும். அதன் சூட்சுமப் பலன் அழியாது. எண்ணம், நோக்கம் அழிவதைப்போல் செயலை எளிதில் அழிக்க முடியாது.

  எண்ணம், நோக்கம் அழிவதைப்போல் செயலை எளிதில் அழிக்க முடியாது.

  எண்ணமும், உணர்ச்சியும் சேர்ந்தது நோக்கம். எண்ணம் அழியாது. அது அழிந்தாலும் நோக்கம் அழிவது சிரமம். செயல் முழுமையானது. செயல் நெடுநாள்வரை அழியாது. பல ஜென்மங்களாகும் செயல் அழிய. போன ஜென்மத்தில் முதலாளியை ஏமாற்றியவர் இந்த ஜென்மத்தில் யாரையும் ஏமாற்றாதபொழுது ஏமாற்றியதாகப் பொய்க் கேசில் மாட்டி அவதிப்படுகிறார். பாட்டனார் கடன் வாங்கினார், திருப்பி தரவில்லை. பேரன் கடன் வாங்கினார். 30 வருஷமாகப் பெரிய அளவு வட்டி கட்டி வருகிறார். திருப்பித் தர பெரிய சம்பளம் பெற்றும் 30 ஆண்டாக முடியவில்லை.

  பாட்டனார் செய்தது அழியவில்லை.

  கிடைக்காத அட்மிஷனை முகம் தெரியாத பையன் கேட்கிறான். அன்பர் கேட்டார் கிடைத்தது. இரண்டாண்டு கழித்து அன்பருக்கு டிரெயினிங்கில் அட்மிஷன் வேண்டும். போட்டி அதிகம். செல்வாக்குள்ளவர் உடனிருக்கிறார். வாங்கிக் கொடுக்க முன் வரவில்லை. அன்பர் கேட்கவில்லை. அவருடனிருந்த முகம் தெரியாத பிரின்சிபால் முன்வந்து அந்த அட்மிஷனை வாங்கிக் கொடுத்தார்.

  முகம் தெரியாத பையனுக்குப் பெற்றுக் கொடுத்த செயல் முகம் தெரியாதவர்மூலம் திரும்ப வருகிறது.
  செயல் அழியாது.

  எண்ணம் தரமானது. எளிதில் அழியாது. உணர்ச்சி அதிக வலுவானது. எண்ணமும், உணர்ச்சியும் சேர்ந்தது நோக்கம் (attitude) என்பதால் கரையாது. இவை அனைத்தும் அகத்திற்குரியவை. அகம் புறமாகி செயலாகிறது. செயல் ஜட உலகின் நிகழ்ச்சி. அழிய பல ஜென்மங்களாகும். திருவுருமாற்றம் அழிக்கும். காலம் அழிக்கும். அதற்கு நெடுநாளாகும். வெறுப்பான காட்சி மனதில் பதிந்துவிட்டால் எளிதில் மறக்க முடியாது. மறக்க முயன்றால், அதிகமாக நினைவு வரும்.

  காலின்ஸை ஷார்லோட் மணக்க முடிவு செய்ததை எலிசபெத்திடம் கூறியபொழுது "நடக்காது'' என்றாள். பல மாதம் கழித்து லேடி காதரீனுடன் பேசும்பொழுது டார்சியை மணம் புரிவதைப் பற்றிப் பேசும்பொழுது காதரீன் "நடக்காது'' என்றாள். முடிவாக டார்சி மணக்க விரும்பியதை ஜேனிடம் கூறியபொழுது "நடக்காது'' என்றாள்.

  • சொல்லுக்கு உயிர் உண்டு.
  • மீண்டும் மீண்டும் வரும், வந்தபடியிருக்கும். 

  தம்பிக்கு மறுமணம் செய்ய தமக்கை முயன்றாள். அனைவரும் அவளைக் கண்டித்தனர். அவள் வாயை மூடிக் கொண்டாள். அவள் பெண் திருமணம் வந்தது. அதே கோளாறு வந்து தீர்ந்தது. பெண் ஆறாவது பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்கு வந்தாள். கணவனுக்கு ப்ரமோஷன் வந்தது. மறுமணம் செய்து கொள்வதற்காகப் பெண் பார்க்கப் புறப்பட்டார். தாயார் செய்த செயல் பெண் வாழ்வில் தொடர்கிறது.

  செயல் எளிதில் அழியாது.

  *****

 4. உயர்ந்த அறிவு வந்தால் எண்ணம் மாறிக் கொள்ளும் (reverse). உணர்வு உயர்ந்து தன் நோக்கத்திற்கெதிரான உயர்ந்ததைக் கண்டால் தலைகீழாக மாறும். காலம் கனிந்து செயலை அதுபோல் மாற்றவல்லது உடல். தனக்கேயுரிய வாழ்வாக ஆழ்ந்து உயர்ந்த தீவிரமான பரந்த நிலையைக் கண்ணுற்றால் தன் செயலை தலைகீழாக மாற்றும்.

  காலம் கனிந்து செயலை மாற்றும்.

  இளமைக்கு வேகமுண்டு. வேகத்தில் அறிவு விலகும். அறியாமை வேகம் பெறும். வேகம் விறுவிறுப்பு பெற்று இலட்சியமாக எழும். பலர் சேருவார்கள். ஒரு கட்சியாகவும், மதமாகவும் மாறுவதுண்டு. இளமை கடந்து வயது வந்தால் நேற்று பேசியது இன்று உண்மையில்லையெனத் தெரியும். வெட்கம் வருவதுண்டு. அதுவே முடிவாகத் தெரியும். இளமையின் வேகத்தில் பேசுவது முடிவன்றுஎன மீண்டும் வேகம் எழும். அரசன் அந்தப்புரம் வைத்திருக்கிறான். பணக்காரன் 10 பெண்களை சேர்த்து சிறு அந்தப்புரம் கொண்டாடுகிறான். புதிய பணம் வந்ததும் 4 மனைவி உடன் வருகிறது. குடிக்கிறான். குடிப்பதின் பெருமையைப் போற்றுகிறான். குடிப்பது தவறுஎனப் பேசினால் இல்லாதவன் பேசுவான்எனக் கூறுவான். தொழிலாளி பங்காளனாய் வாழ்க்கையை ஆரம்பித்துத் தொழிற்சங்கத் தலைவனாகி முதலாளிகளே அழிய வேண்டும்எனப் பேசியவனுக்கு தொழிற்சங்கம் மனித சுபாவத்தின் ஆழ்ந்த உண்மைகளைக் கூறுகிறது. தொழிலாளிகள் தலைவர்கள், முதலாளி செய்யும் அத்தனை அட்டூழியத்தையும் செய்யக்கூடியவர் எனச் சந்தர்ப்பம் தெரிவிக்கிறது. மனம் உடைந்து வெளியே போய் சொந்தத் தொழிலாரம்பித்து முதலாளியானபின் மனிதன் யார்என அறிந்து மனம் மாறி புதிய உணர்வு எழுகிறது. கெடுபிடியில்லாமல் நிர்வாகமில்லை. தொழிலில்லாமல் நாடில்லை. நியாயம்என எழுந்தால் முதலாளி, தொழிலாளி எவரும் தேற மாட்டார்கள். முடிந்ததை செய்வார்கள். முடிந்தால் கொடுமை செய்வான். முடியாவிட்டால் நியாயம் பேசுவான். முதலாளி தவறு, தொழிலாளி தவறு என்பதில்லை. தவறு எவரும் செய்யக் கூடியது. தவறு செய்யும் சந்தர்ப்பம் வந்தால் செய்யாமலிருக்க மனிதத்தன்மை வேண்டும். அங்கு மாமியார், மருமகளில்லை. மனிதத்தன்மை, நியாயம், தெய்வ பக்தி, மனசாட்சி எழும். அதில் தேறுபவர்கள் குறைவு. வருஷக்கணக்காக ஊழலை எதிர்த்துப் பேசியவன் MLA ஆனவுடன் எப்படி பணம் வாங்காமலிருக்க முடியும்என்ற "உண்மை”யை ஆழ்ந்து உணர்கிறான். இந்தி சைனி பாயி பாயிஎன்ற நேரு 1962இல் சைனா படையெடுத்த பொழுது சைனாவையும், பஞ்சசீலத்தையும் மறந்து, அமெரிக்காவை உதவி கேட்டார். வலிமையற்றவன் பேசும் அரசியல் வேறு. வலிமையுள்ளவன் செய்வது வேறு. வலிமையற்றவன் வலிமையுள்ளவன் என்ன செய்ய வேண்டும்எனக் கூறுவது இளமையின் வேகம். அறியாமையின் அனுபவமற்ற ஞானம். மாமியார் கொடுமையை அனுபவித்தவள் மாமியாரானபின் தான் செய்யும் கொடுமை சரியென உணர்கிறாள். தான் பட்டதை மறந்துவிடுகிறாள். மருமகளாகக் கொடுமை அனுபவித்தவர் மாமியாராகியும் மருமகளிடம் கொடுமையை அனுபவிக்கும்பொழுது எதற்கும் இராசி வேண்டாமா எனக் கூறுகிறாள். சிஷ்யனுக்கு குரு பாரபட்சமானாலும் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் மனம் சம்மதிக்கவில்லை. தான் குரு ஆனபொழுது பாரபட்சமில்லாமல் நடப்பது முடியாதுஎனவும், பாரபட்சம் அவசியம்எனவும், சுபாவத்தை மீற முடியாதுஎனவும், பாரபட்சமில்லாமல் நடந்து அதனால் அவதிப்பட்டும், அனுபவம் பல என அறிந்து ஞானம் பெறாமல் போய்விடுகிறான்.

  சூரியன் உலகைச் சுற்றி வருகிறதுஎன்ற மனிதன் விஞ்ஞானம் பூமி சூரியனைச் சுற்றி வருகிறதுஎன்று கூறுவதை ஏற்கிறான். உரம் போட்டால் நிலம் கெட்டுவிடும்என்ற விவசாயி, உரம் போடாமல் பயிராகாதுஎன மாறிக் கொள்கிறான். படிப்பை அலட்சியம் செய்த கிராமத்து மனிதர், படிப்பில்லாமல் எதுவுமில்லைஎன்று உணர்கின்றனர்.

  • அறிவு வளர்ந்து தலைகீழே மாறும்.
  • உணர்வு உயர்ந்து நேர் எதிராக மாறும்.
  • செயலும் அதுபோல் மாறும். 

  காலில் செருப்புப் போட்டுக்கொண்டு ஊர் வழியாகப் போனவனை மரத்தில் கட்டி வைத்துக் கொளுத்திய காலம் ஒன்று. அவன் மகன் ஙகஆ ஆகி, மந்திரியானபொழுது அவனை நடுவீட்டில் உட்கார வைத்து விருந்து நடத்திப் பெருமைப்படுவது காலம் மாறியதைக் காட்டும்.

  • காலம் மாறும், மனம் மாறும்.
  • நியாயம் மாறாது.
  • எந்தக் காலத்திலும் நியாயத்தை அறியும் திறன் மனிதனுக்கு உண்டு.

   

தொடரும்.....

******

ஜீவிய மணி
 
நம்பிக்கை நாலு காரியம் செய்யும்.

*****book | by Dr. Radut