Skip to Content

1. ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

ஒருவர் வாழ்வில் முன்னேறி பெருஞ்சொத்து சம்பாதிக்கிறார். அவர் அந்தச் சொத்துமூலம் பெறுவது அனுபவம், அறிவு, நிதானம், அந்தஸ்து போன்ற பல. வேறு ஒருவரால் அதே அந்தஸ்தைப்பெற முடிந்தால் அவருக்கு அந்தச் சொத்துவரும் சந்தர்ப்பம் உண்டு. அது எளிதாக வரும். இதையே அனுபவம், அறிவு, நிதானம் ஆகியவற்றிற்குக் கூறலாம்.

  • பெருஞ்சொத்து (உ.ம்.) 100 கோடி தரும் எந்த அம்சத்தையும் ஒருவர் எந்த வகையில் பெற்றாலும் அவருக்கு அந்தச் சொத்து வரும்.
  • ஒருவர் அன்பரானால், அவர் பெரிய சொத்தை அடைய மற்றவர் போல் 20 ஆண்டு, 50 ஆண்டு உழைக்க வேண்டியதில்லை. அந்தச் சொத்து பெற்றபின் அவர் பெற்ற அம்சங்களில் ஒன்றைப் பெற்றால் அந்தச் சொத்து அவரைத் தேடி வரும்.

நாம் பார்க்கிறோம், ஊரில் ஒரு ரெட்டியார், ஒரு செட்டியார், ஒரு முதலியார் 50 ஆண்டு உழைத்து வெற்றிபெற்று, 100 கோடி அல்லது அதைப் போல பன்மடங்கு சொத்து பெற்றுவிட்டார். இவர் இச்சொத்து பெற்றபின் என்ன பெற்றிருக்கிறார், நிதானமா, அனுபவமா, அந்தஸ்தா, அறிவாஎன அறிவது முடியக்கூடியது. உதாரணமாக, இவர் பெற்றது நிதானம், பெரிய அளவில் நிதானம்எனக் கொள்வோம்.

ஓர் அன்பர் அதே அளவு நிதானம் பெற்றால்,

அதே அளவு சொத்து அவரைத் தேடி வரும்.

வாழ்வில் 50 ஆண்டில் பெறுவதை தவத்தால் 5 ஆண்டில் பெறலாம். தவத்தால் 50 ஆண்டில் பெறமுடியாததை சமர்ப்பணத்தால் 5 ஆண்டில் பெறலாம். 50 ஆண்டில் வாழ்க்கை அனுபவம் தரும் நிதானம், சமர்ப்பணத்தால் 5 மாதத்தில் வரும். அன்பர் பங்கு: (sincerity) உண்மை, சமர்ப்பணம்.

ஓர் அன்பர் சமர்ப்பணத்தை உண்மையாக ஏற்றால் அவர் செய்யும் தொழில் 5 மாதத்தில் அதே நிதானத்தைப் பெறலாம். அதன்முறை என்ன? முடிவு, முயற்சி, பொறுமை.

முடிவு, முயற்சி, பொறுமை

முடிவு:

நிதானம் தேவையென்பது முடிவு. இந்த முடிவை எடுக்கும்முன் மனம் நிதானம் தேவையில்லை, சொத்து வேண்டும்எனத் திட்டவட்டமாகக் கூறும். மனம் நம் கட்டுப்பாட்டிலிருக்காது. இது உண்மையான முடிவாக நெடுநாளாகும். அறிவில் தெளிவு ஏற்பட்டால் முடிவு இடம் கொடுக்கும். முடிவுஎன்றால் என்னஎன மனம் சிந்தித்தால், முடிவு நம்முடையதன்று, மூலவனின் முடிவே முடிவு என்பது தெரியும். அறிவு அதை ஏற்பது தெளிவு. அந்தத் தெளிவு முடியாத முடிவை முடிய வைக்கும்.

முயற்சி:

செய்யும் தொழில் வியாபாரம், ஆபீஸ் அதிகாரம், அரசியல் தலைமை, வக்கீல் தொழில், ஆசிரியர், டாக்டர், புரோக்கர்தொழிலாக இருந்தாலும், நிமிஷத்திற்கு நிமிஷம் "நான் கூறுவதை ஊழியர் ஏற்க வேண்டும்', "இலாபம் வரவேண்டுமல்லவா?', "கேஸ் வெற்றி பெறவேண்டும்' என்ற அவசியம் உண்டு.

அவசியம் காரியம் முடிவதில்லை.
சமர்ப்பணம் பூர்த்தியாக வேண்டும்.

காரியம் முடிய வேண்டும் என்ற அவசியத்தை மாற்றி, சமர்ப்பணம் பூர்த்தியாக வேண்டும் என்றால், சமர்ப்பணம் எளிதில் பலிக்காது. சமர்ப்பணம் பலிக்காவிட்டாலும், காரியம் பூர்த்தியாகும். சமர்ப்பணத்தை மட்டும் மனம் நாடுவது முயற்சி.

பொறுமை:

சமர்ப்பணம் பலிக்க வேண்டும் என்று அவசரம் எழும். அவசரம் போய் பொறுமை வரவேண்டும். "அந்த நாளில் எனக்குப் பொறுமையில்லை'' என பகவான் கூறும் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொள்ளவும் நமக்குப் பொறுமை இருக்காது. பொறுமை உள்ளே வளர்ந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் "பொறுமை வேண்டும்” என்ற பிரார்த்தனை பலிக்கும்.

பலன்:

நிதானம் வேண்டும் என்றால் நிதானம் பலிக்கும். சொத்து அதனுள் அடக்கம். சொத்து வேண்டும்என்றால், நிச்சயம் பலிக்கும், நிதானம் வாராது. நிதானம் சொத்தைக் கொடுத்து, யோக வாயிலைத் திறக்கும்.

******



book | by Dr. Radut