Skip to Content

09. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

"அன்னை இலக்கியம்"

மனிதனும் மிருகமும்

சியாமளா ராவ்

"மனிதன்" என்கிற நான்கெழுத்துக்குள் "மனிதம்" என்கிற நான்கு எழுத்துகள் இருக்கிறதா, இல்லையா?

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் எங்கு கிடைக்கும்? எவரிடம் கிடைக்கும்?

இந்த அலைமோதும் வாழ்க்கையில் இந்த "மனிதம்", "மனிதன்" என்னும் சிந்தனைப் பற்றிய கவலை எவருக்கும் இல்லைஎன்று சொல்ல முடியாவிட்டாலும், அவ்வப்போது வரும் இந்தச் சிந்தனைக்குப் பதில் தேடுவதில் அவர்களுக்கு அக்கறையுமில்லை, விருப்பமுமில்லை. அக்கறையிருக்கும்போது, அதற்கான சிந்தனைகளையோ, வழிகளையோ நாடுவதற்கு வேண்டிய நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைப்பதில்லைஎன்பது, எல்லாவற்றிலிருந்தும் விடுபட நினைக்கும் ஒரு "நொண்டிச்சாக்கு” என்பதுதான் உண்மை.

ஆறறிவுஎன்பது மனிதர்களுக்குமட்டும் தந்தது எதனால்? இன்றுவரை புரியாத புதிர். ஐந்தறிவு மிருகங்களுக்கு மட்டுந்தான் என்பது, மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள வித்தியாசங்களை காட்டுவதற்காகவா?

இதில் அதிகப்படியான அறிவை வைத்துக் கொண்டு மாந்தர்கள் ஆடும் ஆட்டம்.... கொஞ்சமா, நஞ்சமா?

நல்லது, அல்லாததுஎன்று பிரிக்கத் தெரிந்த மாந்தர்களுக்கு, ஏன் அல்லாததைத் தம் தேவைக்கேற்ப உபயோகப்படுத்திக் கொள்ளும் எண்ணம் உற்பத்தியானது? தேவையற்றதை, தேவைகளாக்கித் தம் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் நம் விருப்பப்படிச் செய்யலாம் என்கிற மனோபாவம் நல்லது அன்றுஎன்பதை ஏன் உணர முடியாமல் இருக்கிறார்கள்? உணர முடியாமல் இருக்கிறார்கள்என்பதைவிட, உணர்ந்ததினால்தான் உணர முடியாமல் இருக்க வேண்டுமென்பதை உணர்ந்து, அதன்படிச் செயல்படுகிறார்கள்என்பதே நிஜம் என்பது உண்மை. இந்த மனோபாவம், மனநிலை நிச்சயமாக மனிதர்களுக்கு மட்டுமே உள்ள சுயநலந்தான்.

அதுவும் சமீபகாலத்தின் நடப்புகள் ஏன், எப்படி மாறியது என்பது .......

நல்ல பால், நல்ல காற்று, நல்ல நீர்என எல்லாவற்றிலும் நல்லதே கிடைத்தது. அதனால் ஆரோக்கியம்என்பது நன்றாகவே இருந்தது. மனநிலையும், எத்தனை கோபதாபங்களிருந்தாலும் விட்டுக் கொடுத்தலும், இணைந்து செல்வதிலும், மதங்களைப் பற்றிய வெறித்தனமில்லாமலுமிருந்தது உண்மைதானே.

எல்லாமே தடம் மாறிப்போனது எப்போது?

வசதிகள், வாய்ப்புகள், புதியபுதிய டெக்னாலஜி, கம்ப்யூட்டர் படிப்புஎன்பது மிகவும் உச்சஸ்தாயியில் எல்லாரையும் உட்கார வைத்தது. அது மிகவும் நல்ல விஷயமேயன்றி, தவறே அல்லவே. படிப்பிலும், வேலையிலும் முன்னேற்றம்என்பது மிகவும் நன்மைதானே. நாடும் செழிப்பாகும்தானே. ஆனாலும் அதிலும் ஏதோ ஒரு குறை.... குறை என்பதைவிட நிறைவுஎன்பது இல்லாமல் போனது ஏன்? இன்னும், இன்னும் என்னும் ஆவலாதிதானே அதிகம்.

ஆறறிவு உள்ளவர்களாகிய நாம், ஐந்தறிவு உள்ளதைப் போல மாறிப்போயிருக்கிறோம்என்பதே உண்மை. ஆனாலும் அதைவிடப் பெரிய உண்மை மிருகங்களே..... இப்போதும் மாறாமல், எப்போதும் இருப்பதுபோல் அவைகள் தங்கள் இயல்போடு இருப்பதுதான். மாறியது மனித இனம்தான். அதுவும் ஆறறிவுள்ள நாம்தான்.

கணவன், மனைவி என்பது ஒரு நிலையான நல்ல குடும்பத்திற்கு ஆரம்பமாகும் சங்கமம். ஆனால்.... இந்த இணைப்பில்தான் தற்காலத்தில் எத்தனை, எத்தனை விகல்பங்கள், விடுபட்டுப் பிரிதல்.... இதெல்லாம் மனித இனத்திற்கே இப்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கேவலமான நிலைகள், பரிதாபமான அவலங்கள்.

காரணம்.... ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைஎன்பது அற்றுப்போன நிலையில், நீயா, நானா என்கிற போட்டி மனப்பான்மையே வெற்றிக்கொடிக் கட்டி பறக்கிறது.

படிப்பும், வேலையும் அவர்களை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தணிந்து போகும் மனநிலையைத் துடைத்து எறிந்துவிட்டதன் காரணமேயன்றி வேறில்லை.

நல்ல உயர்ந்த படிப்பும், கை நிறைய என்பதைவிட பை நிறைய வருமானமும் ஈட்டுவது நல்லதுதான். விற்கும் விலைவாசியில் இருவரும் வேலைக்குப் போவதும் தேவைதான்.

இந்தத் தேவைகள் என்பன, அத்துமீறிப் போவதால்தான் எல்லா விதங்களிலும் மீறல்களைத் தங்களையறியாமலேயே தம்பதிகள் அந்த அரங்கத்தினுள் சென்று மீள முடியாமல் போகிறார்கள்.

அப்போது அவர்களுக்கு வேண்டியது தான் என்ன?

நிச்சயமாக ஒரு நல்ல பாதை தேவை. அவர்கள் மனதின் உள்ளேயிருக்கும், அடைபட்டுக் கிடக்கும் அத்தனையையும் வெளியே கொண்டுவர, ஒரு out-let தேவை நிச்சயமாக. அந்த வெளியே வரும் வழியை எங்கே தேடுவது?

ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, இருவருக்குமே அந்தவழி தேவை. தேடுவதுஎன்பது சிரமம் என்று நினைப்பவர்களுக்கு, எல்லாமே சிரமம்தான்.

ஆனால், நாம் தேட வேண்டியது, மனதிற்கு இதம் தரும், வல்லமையைத் தரும், நிம்மதியைத் தரும், ஆனந்தமும், சந்தோஷமும் அள்ளிஅள்ளித் தரும் இடம் இன்றும் இருக்கிறதே. ஏன் அந்த இடத்தை நோக்கி நாம் செல்லக்கூடாது?

"எனக்குத் தெரியாதே, யார் வழி காட்டுவார்கள்?'' என்று முடங்கிப் போவது வெகு சுலபம். அது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றுதான்.

ஒரு கடைக்குப் போனால், நாம் எதை வாங்கப் போகிறோமோ அதையும் மறந்து, வேறு ஏதேதோ பொருள்களை மூட்டைக் கட்டிக் கொண்டு வருகிறோம். ஒரு புடவை வாங்க கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து புடவைகளைப் புரட்டுகிறோம். அதற்கெல்லாம் மெனக்கெடும் நாம், நம் மனதை, நம் சரீரத்தை, நம் எண்ணங்களை சுத்தீகரித்து, ஸ்புடமாக்கிக் கொள்ளும் நல்வழியை நாட ஏனோ தயங்குகிறோம், போராட்டத்தை விடமறுக்கிறோம்.

வேண்டாமே இந்தத் தயக்கமும், போராட்டமும், தேவையே இல்லையே. அதற்கான வழியை நம் மனம் தேடவேண்டும். மனத்தை ஒருங்கிணைத்து, உண்மையான ஆர்வத்துடன் இருக்கும் தேடல், வழியை மனப்பூர்வமாக நம் எதிரே கொணர்ந்து நிறுத்தும் என்பது சர்வ நிச்சயம்.

அந்த "சர்வ நிச்சயம்" என்னும் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல், வழியைத் தேடாமல், அல்லல்பட்டு, நொந்து நூலாகி, முடிவில் களைத்துப்போய், "அன்னையே சரணம்'' என்று தேடி வந்து அன்னையின் பாதாரவிந்தங்களை கெட்டியாகப் பற்றிக்கொண்ட ராமனாதனின் வாழ்க்கையை எத்தனை அழகாய், நல்லவிதமாய் அவனைத் தன் குழந்தையாய் பாவித்து, அணைத்து, தடவிக் கொடுத்து, சுதாரித்து, தைர்யம் அளித்து, ஒரு நல்ல இதயமுடைய மனிதனாக, குடும்பத்தின் சிறந்த தலைவனாக மாற்றினாரே.... இந்த அதிசயம், அதிசயம்மட்டுமில்லை.... ஆனாலும் உண்மைதானே.

******

"பாரு.... பாரு.... எங்கேயிருக்கே? இங்கே வாயேன்மா.... சீக்கிரமா.... ம்.... வேகமா வா.... ஒரு விஷயம் சொல்லணுமே....''.

ஒரு கையில் பிசைந்த சாதத்துடன் தட்டு, மறுகையில் இரண்டு வயதுக் குழந்தை ராமு, வயிற்றில் எட்டு மாதக் குழந்தையை சுமந்தவண்ணம் நிதானமாய் வந்தாள் அகலக் கால் வைத்து நடந்தபடி. முகத்தில் வாட்டம், களைப்பு. அப்படியே ராமநாதனை நிமிர்ந்து பார்த்தாள்.

"பாரு, ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ் சந்தர்ப்பம். என் ஃப்ரண்ட் கோவிந்தன் இருக்கானோல்யோ, அவனோட நானும் சேர்ந்து ஒரு நல்ல பிஸினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். இத்தனை நாள் அதுக்குத்தான் ரெண்டு பேருமா எத்தனை ஆலோசிச்சோம்கறே... கடைசியில நல்ல வழி பிடிபட்டுடுத்துடி பாரு. ம்... அதுதான் வேக வேகமா ஓடி வந்தேன். சூப்பர் டிஸ்கஷன், அபாரமான யோசனைகள், எப்டி சாதிக்கறதுங்கற வேகம், எல்லாமா ஒண்ணுத்துக்கொண்ணு கைக்கோத்துண்டு எங்க ரெண்டு பேரையும் தூண்டிவிட்டுடுத்து. ம்...ஹும் இனிமே ஒரு செகண்ட் கூட காத்திருக்க முடியாது, பாரு. எந்த ஒரு நல்ல யோசனையையும், காரியத்தையும் சூட்டோட சூடா செய்ய வேண்டாமோ... அதான் ஓடி வந்துட்டேன்.... என்ன அப்டி பார்க்கரே.....''

கடைசி வரியில் ஒரு கோபத்தோடு, ஆங்காரமுமாய்தான் வெளிப்பட்டது.

எதுவுமே பேசாமல் அவனையே உற்றுப் பார்த்தாள் பார்வதி. அதில் எந்த உணர்வுகளும் வெளிப்படவேயில்லை.

"மண்டூகமே.... எத்தனை ஆர்வத்தோட, பரபரப்போட வந்து உங்கிட்டே சொல்றேன்.... பாரு... ஹும்... எந்த உணர்ச்சியுமில்லாம மரக்கட்டையா நிக்கிறியே.... நான் பேசினது புரியலையா.... இல்லே.... தெனாவட்டா.... என்ன... ம்.... இப்ப வர கோவத்துக்கு.... சே... போட்டு மிதிக்கலாம்னுதான் ஆத்திரமா வரது. முடியாதே... என்னோட வாரிசைன்னா சுமந்துண்டிருக்கே..... சே.... என்னோட சந்தோஷமே போச்சுடி.... அத்துப்போச்சு.....''

சொல்லி விட்டு வெளியே போனவனைப் பார்த்து நீர் மல்க மனதில் நினைத்துக் கொண்டாள், "என்னிக்கு நீங்க என் கழுத்துல தாகட்டினேளோ அன்னிலேருந்தே என் சந்தோஷமே காணாமல் போயே போச்சே....''.

"ம்மா.... மம்மும்மா... அம்மா....''

சட்டென உணர்விற்கு வந்தவள், குழந்தைக்கு சாதம் ஊட்டலானாள்.

*****

வயிறு பசித்தது. ஆனால் ஆகாரம் இறங்கவில்லை. பலவந்தமாய், வயிற்றுக்குள் தள்ளினாள். தண்ணீர் குடித்தவுடன் தெம்பு ஏற்பட்டது. கதவு தட்டும் சத்தம். இத்தனை சீக்கிரம் திரும்பி வந்துட்டாரே, என்ன ஆயிற்று? ஏதாவது சண்டை, சச்சரவா?

பயத்துடனேயே கதவைத் திறந்தாள். வந்தது பக்கத்து வீட்டு மாமி.

"பாரு, சாப்டியாம்மா? இதோ பாரு, கையில ஒண்ணு, வயத்துல ஒண்ணு சுமந்துண்டிருக்கே. ஏதாவது வேணும்னா கேளு, நான் தரேன். வயத்தைக் காயப்போடாதே. உன் ரெண்டு குழந்தைகளுக்கும் அம்மாவா இருக்கணுமா, வேண்டாமா? சொல்லுடி, பாரு. அவனை நம்பி பிரயோஜனமில்லே. சரி... சரி... அழாதே. தயிர் சாதமா பிசைஞ்சுண்டு வந்துருக்கேன், சாப்டு.... சரியா? கண்ணுல தண்ணி வரப்டாது, சரியா? தைரியமாயிரு.... வரேண்டி பாரு. ம்... அவன் வரதுக்குள்ளே சாப்டு, இல்லேன்னா அது அவன் வயத்துக்குள்ள போயிடும். போ... சரியா?''.

தலையையாட்டிவளுக்கு, கண்களை மூட முடியாமல் கண்ணீர் தளும்பியது.

****

பிஸினஸ் பண்ணுகிறேன் எனக் கூறி, முதல் முதலாய், திருமணமான இரண்டே மாதத்தில் இரண்டுவட செயினை எடுத்துக் கொண்டு போனான். என்ன பிஸினஸ் செய்தான், எப்படிச் செய்தான், அவளுக்குத் தெரியாது. ஆனால் சில கெட்ட பழக்கங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டான்.

பார்வதி ஒரு நாள் அவனைக் கேட்டாள், "என்னமோ நெடி வரதே.... ம்... என்னால முடியலே..... வ்வே..... ம்.... வாந்தி வரது.... என்ன சாப்டேள்?''

"அதாண்டி தெரியலே.... என் ஃப்ரெண்ட்தான் குடுத்தான். ஆனா, இப்ப என்னமோ பண்றது. வாந்தி வருது.... ம்மா.... ப்பா....''.

கீழே விழுந்து புரண்டான். வலியால் துடித்தான். வாய் வார்த்தைகளைத் துப்பியது துண்டம், துண்டமாக.

புரிந்து கொண்ட பார்வதி, எதையும் செய்ய முடியாமல், குழந்தையை அணைத்துக் கொண்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்தாள். மனதில் பலவிதமான யோசனைகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டு குதியாட்டம் போட்டது. அவளால் அதை அடக்க முடியவில்லை.

பெற்றவர்கள் வீட்டிற்கு அடைக்கலமாகப் போகலாம் தான். அவர்களும் அரவணைத்து, அணைத்துக் கொள்வார்கள் தான். ஆனால், கூடப்பிறந்த சகோதர, சகோதரிகளின் எதிரில் தன்னிலை இரக்கத்தால் அவளால் அவர்களோடு இணைந்துபோக முடியவில்லை. நம் கஷ்டம் நமக்கு மட்டுந்தான். சந்தோஷத்தை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். கஷ்டங்களை? ம்...ஹும்... நமக்குள்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் அங்கும் போகவில்லை.

வேண்டிக் கொண்டாள் தன் மனதில், ஞாபகம் வந்த தெய்வங்களிடம். ஏதாவது ஒரு தெய்வமாவது தனக்குச் செவிசாய்க்காதா என்கிற நப்பாசையை இன்னும் கைவிடாமல் தான் இருந்தாள்... ம்.... ஹும்.... எந்தவிதமான முன்னேற்றமும் இவளுக்குத் தெரியவில்லை. ஆனால் ராமனாதன் பல விதங்களில், பல வழிகளில், வேண்டாதவைகளையெல்லாம் கற்றுக் கை தேர்ந்தவனானான் என்பதுதான் நிஜமானது.

****

அதது, அந்தந்தக் காலத்தில் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நாம் அதை உணருகிறோமோ, இல்லையோ... நடப்பது நிற்பதில்லை. பார்வதியின் பிரசவ நேரம் நெருங்கிவிட்டது. தன்னந்தனியாக துடித்துக் கொண்டிருந்தாள். முதல் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. எழுந்திருக்கவும் முடியவில்லை. யாரைக் கூப்பிடுவது? குரல் எழும்பவில்லை. வாயைத் திறந்தாலே பேச்சு வாராமல், வலியில்.... ஹா.... ஹா.... என்ற அனத்தல்தான் வெளிப்பட்டது.

யாரைக் கூப்பிடுவது? எப்படிக் கூப்பிடுவது? யார் காதிலாவது விழுமா? என்ன செய்வேன்? என் கத்தல் அந்தக் குழந்தையும் எழுந்துவிட்டால்.... என்ன செய்வேன்? யோசிக்கும்போதே பளீரென்ற வ.... சாட்டையடிபோல் விழுந்தது.

"அம்மா..... அம்மா..... அம்மா.....''.

பெரிய கூக்குரல் அவளிடமிருந்து வெளிப்படவும், பக்கத்து வீட்டிலிருந்த மாமி வரவும் சரியாகயிருந்தது. அவர் கையில் அன்னையின் சிறுபடமும், மற்றொரு கரத்தில் சில பூக்களுமாக வந்தவர், சட்டென்று அவளருகில் வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டார். அன்னையை அவள் வயிற்றின் மேல் வைத்து, சில வினாடிகள் பிரார்த்தித்தார். அந்தப் பூக்களை ஒரு தட்டில் வைத்து, நீர் தெளித்து, அவளிடமிருந்து அன்னையை ஒரு பலகையின் மீது வைத்தார். பதட்டப்படவில்லை. ஆனால், அதரம் மட்டும் "அன்னையே சரணம்" சொல்லிக் கொண்டிருந்தது. இத்தனையிலும் முதல் குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை.

மாமி மளமளவென்று அவளுக்கு அந்த நேரத்திற்கு வேண்டிய சுஸ்ருஷைகளைக் கனிவாகச் செய்தார். மனது துடித்த துடிப்பில் அன்னை மட்டுமே சுழன்று கொண்டிருந்தார். அன்னை அவளிடமே வந்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

எந்த ஓர் இக்கட்டான சூழ்நிலையிலும் சரி, சமைக்கும்போது சின்ன சூடு பட்டாலும் சரி, எந்த ஒரு வக்கும், தொந்திரவுகளுக்கும், ஆயாசமாக உட்காரும்போதும், ஆச்சரியப்படும்போதும், நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் (ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி) ஒரே ஒரு வார்த்தை "அம்மா" என்கிற மூன்று எழுத்துகள் தான். அந்த மூன்றெழுத்தில்தான் நம் மூச்சுக்காற்றே சுழன்று கொண்டிருக்கிறது. இது எல்லாருக்குமே பொதுவான சத்தியமான உண்மைதானே.

வலி தீவிரமாகியது. மெல்ல பார்வதியை எழுப்பி, அங்கு இருக்கும் அடுத்த அறைக்குள் அழைத்துச் சென்று, விரித்திருந்த பாயில், உடுப்பை தளர்த்தி, வாகாகப் படுக்க வைத்தாள். ஸ்டவ் பற்ற வைத்து, சுடுநீர் மற்றும் தேவையானவைகளை மளமளவென்று ஒவ்வொன்றாய்க் கொண்டுவந்து வைத்தாள். யாரையாவது கூப்பிடலாமா? வாசல் வரை போனவளின் மனதுள் தோன்றியது என்ன? ஏன் நின்றுவிட்டாள் அப்படியே? சட்டெனத் திரும்பி பார்வதியின் அருகில் உட்கார்ந்தாள். கண்களை மூடி தியானித்தாள். அன்னையின் படத்தை அவள் கண்களில் படுமாறு அங்கிருந்த ஸ்டாண்டில் சாய்த்து வைத்தாள்.

"பார்வதி, பயப்படாதே. அதோ பாரு, அன்னை எத்தனை அழகா சிரிச்சுண்டு உன்னையே அன்போடவும், ஆதரவோடும், தீட்சண்யமா பார்க்கறா பார்த்தியா. உன்னைப் பற்றிய கவலையோ, வலியோ எதுவானாலும் அன்னையைப் பார்த்து கும்பிடும்மா, பாரு. உன்னோட அத்தனை வலிகளையும், வேதனைகளையும் தாம் எடுத்துண்டு, உனக்கு எந்த இம்சையையும் தரமாட்டா.... பார்த்துண்டேயிரேன்.... புரியறதோம்மா.... நான் உனக்கு பக்கபலமா வந்துட்டேனேன்னு சொல்றாப்பல சிரிக்கிறா பாரேன். புடவையில தாமரைப் பூ தெரியறதோன்னோ... அதனால "லோட்டஸ் மதர்"னு சொல்லுவா. அன்னையை நாலு அவதாரம்னு சொல்லுவா? எனக்கு என்னமோ.... இந்த உலகத்துலயிருக்கிற எல்லாக் கடவுள்களும், அப்பனும், அம்மையும், அத்தனையும்... இதோ பாரு.... பார்க்கறியோன்னோ.... இந்த லோட்டஸ் மதர்க்குள்ளேயே மனசால அடங்கியே போய்ட்டாடி... உனக்கு வலிக்கவேயில்லையோன்னோ..... உன்னோட வலிகளையெல்லாம் தாம் எடுத்துனுட்டா.... இதோ பாரு.... பார்த்துண்டேயிரு.... இப்ப உன் குழந்தை வழுக்கிண்டே வந்துடுத்தே....''

"அம்மா''.... பெரிய குரல் ஒரே ஒரு முறை குரல் கொடுத்த பார்வதியோடு, வெளியுலகத்தைப் பார்க்க வந்த அந்த சிசுவின் அழுகைக் குரலும் இணைந்து கொள்ள, மளமளவென்று அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை கிடுகிடுவென செய்தாள் மாமி. வயதையும் மறந்து செயல்பட்ட அந்த வேகம், அவளைத் தவிர யாருமில்லாத அந்த நிலையில் தைர்யமாகி எல்லாம் தெரிந்ததுபோல் செய்ய வைத்தது யார்? மொத்தத்தில் அந்த மாமி அந்த நேரத்தில் கையில் அன்னையின் படத்தோடும், பூக்களோடும், மனதில் அன்னையின் தியானத்தோடும் வந்தது எதனால்? எப்படி? எதற்கு?

நல்ல உள்ளம், நல்ல எண்ணம், பொறுமை, கசடுகளற்ற மனம், இத்தனையும் உள்ள பார்வதியைத் துடிக்கவிட முடியுமா?

பார்வதியின் துயரங்களுக்கு அவ்வப்போது உதவும் அன்னையின் பக்தியைத் தவிர, அன்னை, ஸ்ரீ அரவிந்தரைத் தவிர, வேறு எதைப் பற்றியும் நினைக்காமலிருந்த மாமியையே தூண்டிவிட்டு, சரியான சமயத்தில் பார்வதியின் பிரசவத்திற்கு அவளையே, அதுவும் அன்னையை மனதில் மட்டுமில்லாமல் கரங்களில் பூக்களோடு அன்னையையும் ஏந்திக் கொண்டு, அந்த நாம ஸ்மரணத்தோடு அனுப்பியது, தூண்டிவிட்டது யார்என நமக்குப் புரிந்துவிட்டது அல்லவா?

"தெய்வம் மனுஷ்ய ரூபேனா''.

"ஆமாம்.... தெய்வம், தெய்வமாகத்தான் இருக்க முடியும். உலகத்தில் இருக்கும் எத்தனையோ கோடி மக்களுக்கு அவரே வந்து செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால்... அது தவறு. தெய்வமாகிய அன்னை ஒருவர்தான். நாமோ கோடிக்கணக்கில். அத்தனை பேருக்கும் அன்னை நிச்சயமாக, நம் பிரார்த்தனைகளின் வீர்யத்திற்கும், தீவிரத்திற்கும் ஏற்றவாறு அருள்பாலிப்பதற்குத் தவறுவதேயில்லை. அதுவும் நம்முடைய சில பிரார்த்தனைகளுக்கு அன்னை பறந்து வந்துதான் அருள்பாலிக்கிறார் என்பது நமக்கே தெரியும், புரியும். கண்கள் திரள, முகம் சிவக்க, மெய்சோர நன்றி கூறுகிறோம், அவ்வளவே. அத்துடன் நம்முடைய தொடர்பு அன்னையிடம் மிகமிக லேசானதாகத்தானேயிருக்கிறது. மீண்டும் அதுபோல் ஒரு சந்தர்ப்பம் வந்தாலொழிய நம் பக்தியின் தீவிரமும், வணங்குதலும் மேலோட்டமாகத்தானேயிருக்கிறது.

குடும்பச் சூழல், குழந்தை குட்டிகளின் கலாட்டா, வேலைக்காரிகளின் தொந்திரவு, ஆபீஸில் நிம்மதியின்மை, பஸ்ஸில் ஏறி வரும் அயர்வு, வீட்டில் நுழையும்போதே புடவையை அள்ளிச் செருகியபடி மாலை வேலையையும், இரவுக்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய சூழ்நிலை.... நிச்சயம் இந்தக் காலகட்டத்தின், அவசர யுகத்தின் பாதிப்புகள்தான். ஆனால் அதைச் சுமக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது. சுமக்கலாமே எதையும், அன்னையை மனதில் இருத்திக் கொண்டு. ஓர் ஐந்து வினாடிகள் போதும்.... உண்மையான நம் பிரார்த்தனையை உளமாறச் சொல், வேண்டி... "நீயே என்னுள்ளிருந்து எல்லாம் செய்யம்மா'' என்ற ஒரு வேண்டுகோளை நாம் மூச்சை வெளியே விட்டு, மறுபடி உள்ளிழுக்கும் முன்பே, ஆழ்ந்த பக்தியோடு சொன்னாலே போதுமே. அடுத்த வினாடி உங்களுக்குள் ஒரு சக்தி, நிச்சயமாக.... புகுந்து, உங்கள் வேலைகளை சுலபமாக்கி, லேசாக ஆக்கும்என்பது பொய்யேயன்று. உணர்ந்து பார்த்தால் புரியும். மளமளவென்று சந்தோஷம் பொங்கும். ஆனால், அந்த பக்தியும், வேண்டுகோளும் உள்ளார்ந்து வரவேண்டும் என்பதே முக்கியம்.

இத்தனை நேரம் முதல் குழந்தையான முரளி எப்படித் தூங்கினான்? ஏன் எழவேயில்லை? வீடு சிறியது. அடுத்த சின்ன அறையிலேயே அம்மாவின் பிரசவம் நடந்துள்ளது. டாக்டரில்லை, நர்ஸில்லை, தனி அறையில் கதவு சாத்தப்பட்டு நடக்கவில்லை. அம்மாவின் கடைசி நிமிஷக் கதறலோடு குழந்தையின், சின்னஞ்சிறிய குழந்தையின், அழுகையும் சேர்ந்த அந்த சப்தம் தூங்கும் குழந்தையை எழுப்பவில்லையே. இது நம் "அன்னை"யின், நாம் உளமார வணங்கும் அன்னையின் சமயத்திற்குத் தகுந்த கருணையேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

அது மட்டுமா? தள்ளாடி வரும் கணவனின் வருகையும் அன்று ஏனோ காணவில்லையே... எப்படி?

அவன் வந்திருந்தால்? மாமியால் நிச்சலனமாய், அன்னையின் மேலுள்ள தீவிரமான பக்தியோடும், முழுமையாக அன்னையையே மனதிலிறுத்திச் செய்திருக்க முடியுமா? அன்னை கொடுத்த தைர்யம்.... இது நிச்சயம்..... ஆமாம்.... அன்னையே அந்த மாமியினுள்ளிருந்து, எதெதை, எப்படிச் செய்யவேண்டுமென்பதை உணர்த்திக் கொண்டே இருந்ததினால் தான் தடைபடாமல், தன் வயதையும், சக்தியையும் மீறி மளமளவென, அடுத்தது, அடுத்தது என குழந்தையை நன்கு குளிப்பாட்டுமுன் தொப்புள் கொடியறுத்து, அங்கு ஒரு கட்டுப் போட்டு, நன்கு ஈரத்துணியால் துடைத்து, பிறகு ஐந்து நிமிடங்களுக்குள் குளிப்பாட்டி, வாயிலிருந்த கோழையை நீக்கி, முதுகில் தட்டி, அது வாய் திறந்து அழுததும்தான்.... அப்பாடா.... என்ற நிம்மதியுடன், ஓர் உலர்ந்த துணியை இரண்டு புறம் கொஞ்சமாகக் கிழித்து, அதில் குழந்தையின் கைகளை நுழைத்துப் பின்பக்கமாக முடிச்சு போட்டு படுக்க வைக்கும் வரை.... அவளை, அந்த மாமியை இயக்க வைத்தது யார்? எதுவுமே தெரியாத மாமிக்கு அந்த வல்லமை தந்தது யார்?

மளமளவென பார்வதியையும் சுத்தம் செய்து, உள்ளே ஓடி ஒரு புடவையைக் கொண்டு வந்து அவளுக்கு மேலோட்டமாய் சுற்றி, முகத்தைத் துடைத்து, சமையலறைக்கு ஓடி, இருந்த பாலைச் சுட வைத்து, சர்க்கரை கலந்து பார்வதியின் களைப்புப் போக அவளுக்குப் புகட்டியவள்... சட்டென நிமிர்ந்தாள்.

தொடரும்......

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தவறான வாழ்வு வியாதியை உற்பத்தி செய்கிறது. அது புது மருந்துகளைத் தோற்கடிக்கும் தீராத வியாதியாகவும் இருக்கும். உடல் அவ்வியாதியை அழிக்க எழுந்தால், வியாதி மறையும். பரம்பரையான சர்க்கார் சட்டம், மாற்றுச் சட்டத்தால் போகும். "மனம் மாறினால் ஜடம் திருவுருமாற்றமடையும்'' என்ற பகவான் வாக்குக்கு இவை உதாரணங்கள்.
 
மனம் மாறினால் ஜடம் திருவுருமாற்றமடையும்.

****



book | by Dr. Radut