Skip to Content

08. பூரண யோகம் - முதல் வாயில்கள்

பூரண யோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(11) மூன்றாம்நிலைக் காலம்

நாம் வாழும் உலகம் காலத்தால் நடத்தப்படுவது. ரிஷி காலத்தை கடந்தவர். ஸ்ரீ அரவிந்தம் மூன்றாம்நிலைக் காலத்திற்குரியது. நம் உலகில் எந்தக் காரியத்திற்கும் உரிய நேரமுண்டு. நினைத்தவுடன் பலன் வாராது. ரிஷி விதையை நட்டால் உடனே செடியாகும். ரிஷிப் பிண்டம் ராத்தங்காது. அவருக்குக் காலம் தேவையில்லை. ஆனால் ரிஷி அதுபோல் எப்பொழுதும் நடக்க முடியாது. ஸ்ரீ அரவிந்தவாழ்வு தெய்வீகவாழ்வு. அதில் காலத்திற்கு சக்தியில்லை. நினைத்தவுடன் செயல் பூர்த்தியாகிப் பலன் தரும்.

இவை அறிவுக்குப் புறம்பானவை.
ஆனால் அனுபவம் இவற்றை அறியும்
.

இதற்கு உதாரணங்களுண்டு. விளக்கம் உண்டு.

எவரும் எதிர்பாராமல் லால்பகதூர் சாஸ்திரி திடீரென 5 நாளில் பிரதமரானார். அவருக்குப்பின் இந்திரா அதேபோல் பிரதமரானார். சட்டப்படி காபினட்டில் இரண்டாம் நபர் நந்தா. அவரே உரிமை உடையவர். நடைமுறையில் கட்சி ஆதரவு மொரார்ஜிக்குண்டு. சாஸ்திரியும், இந்திராவும் அன்னையை தரிசித்தவர். அவருடன் அன்னையை தரிசித்த காமராஜ் அவர்களைப் பிரதமராக்கினார். எல்லா அன்பர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு நேரம் இது போல் காரியங்கள் நடந்துள்ளன. நாம் அதை இக்கோணத்தில் கருதுவதில்லை.

இல்லறம் காலத்திற்குரியது. துறவறம் காலத்தைக் கடந்தது. துறவறத்தின் தூய்மையுடன் நடத்தும் இல்லறம் மூன்றாம்நிலைக் காலத்தில் செயல்படுவது.

இயற்கை காலத்தால் நடக்கிறது. ஆத்மா காலத்தைக் கடந்தது. இது சாட்சி புருஷன். வளரும் ஆத்மா மூன்றாம்நிலைக் காலத்திற்கு உரியது. இயற்கையும், ஆத்மாவும் எதிரானவை. நாம் இயற்கைக்கு உரியவர். துறவி ஆத்மாவில் உறைபவர். துறவியின் ஆத்மா ஆதி, அந்தமில்லாதது, மாற்றமில்லாதது, வளராதது, சாட்சியாயிருப்பது. வளரும் ஆத்மா - சைத்தியப் புருஷன் - ஸ்ரீ அரவிந்தம் கூறுவது. ரிஷிகள் தவத்தால் ஆத்மா சித்திக்கப் பெற்று மோட்சம் அடைந்தனர். அது பரமாத்மா. நம்மிடம் உள்ளது ஜீவாத்மா. ஜீவாத்மா அழிந்து பரமாத்மாவை அடைவது மோட்சம்.

ஸ்ரீ அரவிந்தம் மோட்சத்தை நாடவில்லை. பூலோகச் சுவர்க்கத்தை நாடுகிறது. இயற்கை ஆத்மாவை நாடுவது மோட்சம். இயற்கை தன்னுள் உள்ள ஆத்மா செயல்படும்படி வாழ்ந்தால், இயற்கையின் ஆத்மா வளர ஆரம்பிக்கும். அது 3ஆம்நிலைக் காலத்திற்குரியது. தொழிலாளி உழைப்பவன். முதலாளி இலாபம் பெறுபவன். ஒரு தொழிலாளி முதலாளியானால், தான் தொழிலாளியாக இருந்ததை மறந்து முதலாளியாக நடப்பான். ஒரு கம்பனி முதலாளி எல்லா தொழிலாளிகட்கும் சம்பளம் தருவதுடன் இலாபத்தில் அவர்கட்கு பங்கு வரும்படி ஷேர் சர்ட்டிபிகேட் வழங்கினால், அக்கம்பனியில் தொழிலாளி முதலாளி ஆகிறான். அக்கம்பனியின் வருமானம் 10, அல்லது 100 மடங்கு பெருகுகிறது. இந்தநிலை ஓரளவு இன்று உலகில் உண்டு. பூரணமாக இல்லை. கம்பனி ஆரம்பத்திலிருந்தே இந்த அடிப்படையில் நடப்பது மூன்றாம்நிலைக் காலத்திற்குரியது. நெடுநாளில் நடப்பது குறுகிய காலத்தில் நடப்பதை அன்பர்கள் கண்டுள்ளனர். அதைப் பாராட்டினால், யோகவாயில் திறக்கும். பலனைக் கருதினால் பலன் கிடைக்கும். தத்துவத்தைக் கருதினால் யோகம் புரியும், வழிவிடும். நம் அனுபவத்தை மீண்டும் மனதில் கொண்டு வந்தால், பல காரியங்கள் இப்படி நடந்தது தெரியும். பார்வை மாறினால் பலன் யோகமாகும்.

(14) மூன்றாம்நிலைக் காலம்

காலம், காலத்தைக் கடந்தது, இரண்டும் சேர்ந்துள்ள மூன்றாம் நிலைக்காலம் ஆகிய 3 காலங்கள் உள்ளன.

  1. காலம் என்பது நாம் வாழும் நிலை. இங்கு எக்காரியத்திற்கும் உரிய நேரம் தேவை.

    எதற்கும் எதிரானதுண்டு. உ.ம். ஒளி x இருள்.

  2. காலத்தைக் கடந்தநிலை ரிஷியின் நிஷ்டைக்குரியது.

    நமக்குத் தேவைப்படும் காலம் அவருக்குத் தேவைப்படாது.

    சங்கரர் இந்தியாவைச் சுற்றிவர அதுபோல் பிரயாணம் செய்தார்.

    நினைத்தவுடன் நினைத்த இடம் செல்வார்.

    அங்கும் எதிரானதுண்டு.

    அந்நிலையிலும் தீமை, இருள் உண்டு.

  3. மூன்றாம்நிலை.

    காலமும் காலத்தைக் கடந்த நிலையில் சேர்ந்த நிலையிது.

    இங்கு எதிர்மறையில்லை. ஒளிக்கு எதிரான இருளில்லை.

    ஒளிமட்டும் உண்டு. தீமையில்லை, நன்மைமட்டும் உண்டு.

    எந்தச் செயலுக்கும் நேரம் தேவையில்லை.

    மனிதன் காலத்தைவிட்டு இறைவனை நாடினால் காலத்தைக் கடப்பான்.

    காலத்தைவிட்டு அகலாமல், காலத்துள் உள்ள இறைவனை நாடினால், காலத்துள் கடந்தது வரும்.

    இது சத்தியஜீவிய நிலை.

    நம் வாழ்வில் மனம் உருகியநிலையில் நாம் செய்யும் காரியங்கள் ஆயிரம் மடங்கு பெருகுவது இம்மூன்றாம்நிலைக் காலத்தை நாம் அடைவதால்என நாம் அறிவதில்லை.

    இது அன்னை வாழும் காலம்.

தொடரும்......

******



book | by Dr. Radut