Skip to Content

06. நேரம் வந்துவிட்டது

நேரம் வந்துவிட்டது

என். அசோகன்

ஒரு நாடு அல்லது குடும்பத்தை உயர்த்துவதற்கும் மற்றும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் கம்பனியை லாபகரமாக மாற்றுவதற்கும் மனிதர்கள் பெருமுயற்சி எடுக்கிறார்கள். சில சமயங்களில் அம்முயற்சிகள் கூடி வருகின்றன. கூடி வாராதபோது, "நேரம் இன்னமும் வரவில்லை" என்று சொல்லிக் கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையைப் பற்றிய ஆன்மீக உண்மை என்னவென்றால் நேரத்தை மனிதன் வரவழைக்கலாம் என்பதுதான். அத்தகைய நேரம் இப்பொழுது வந்திருக்கிறது. இக்கருத்து மனிதனுக்குப் பழக்கமான ஒன்று இல்லையென்றாலும் இதனை விளக்குவது சிரமமில்லை. ஏனென்றால் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நம்மைச் சுற்றி உலகெங்கிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எளிமையாகச் சொல்லப்போனால்,

  • அறிவிலிருந்து செயல்படும்பொழுது நேரம் வரும்வரை மனிதன் காத்திருக்கிறான்.
  • ஆன்மாவிலிருந்து செயல்படும்பொழுது அதே நேரத்தை மனிதன் வரவழைக்கிறான்.

இதைப் படிக்கும் யாரேனும், "நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். இப்படி நேரத்தை வரவழைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். மேற்சொன்ன கருத்துகள் எனக்குச் சிறிது நம்பிக்கையூட்டுகின்றன. இக்கருத்தை எனக்குப் புரியும்படிச் சொல்ல முடியுமா?'' என்று கேட்கலாம். அதாவது, "நடைமுறையில் நான் இருக்கும் சூழ்நிலையில் எனக்கு வேண்டிய நேரத்தைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று சொல்லலாம். இதற்கு உடனடிப் பதில் என்னவென்றால், "இக்கருத்து உங்களுக்குப் புரிந்து, இதன் பின்னிருக்கும் உண்மையை நீங்கள் நம்புகிறீர்கள்என்றால், உங்களுடைய கடினமான சூழ்நிலை உடனே கடினம் குறைந்து நிலைமை முன்னேறுவதைப் பார்ப்பீர்கள்”.

இக்கருத்தை விளக்க உண்மையான உதாரணம் தேவைதான். இத்தகைய உதாரணம் positive விளைவுகளுக்கான வாய்ப்புகள் இருப்பதைக் காட்டும். மற்றவர்களுடைய அனுபவத்தில் இது உண்மை என்று பார்க்கும்பொழுது துளிர்விட்டிருக்கும் சிறிதளவு நம்பிக்கை வளர ஆரம்பித்து, நிலைமை மேலும்மேலும் முன்னேறும். பலன் எப்படிக் கிடைத்தது என்பதற்கான விளக்கமும் உதவியாக இருக்கும். ஏனென்றால் அது நம் அறிவைத் தெளிவுபடுத்தும். மேலும் ஒரு விஷயம் தேவைப்படுகிறது. இதை நம் வாழ்க்கையிலும் செய்து காட்டவேண்டும் என்ற எழுச்சி நமக்கு வரவேண்டும். அவ்வெழுச்சி விளக்கம் தரும் அறிவை இதுவரைக்கும் நமக்குக் கிடைக்காத பலனாக மாற்றித் தரும். மேலும் ஒன்றுள்ளது, மற்றவர்கள் செயல்படும் துறைக்குப் பதிலாக நாம் செயல்படும் துறையிலிருந்தே (field) உதாரணம் வேண்டும் என்று நம் அறிவு கேட்கும். அப்பட்சத்தில் ஒரே கருத்து, நூற்றுக்கணக்கான சூழ்நிலைகளில் நிரூபிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் விசேஷமாக இருப்பதால், எல்லாம் நம்முடைய நடைமுறை அறிவிற்குத் தெளிவூட்டுவதாகவும் இருக்கும். மேலும், இத்தகைய கருத்துகள் வரம்பில்லாமல் உள்ளன. இறுதியாக ஆன்மீகமும் செல்வ வளமும்என்ற கருத்து ஆன்மீகமே செல்வ வளம் என்று மாறிவிடும்.

பொதுவாக, நேரத்தை நாமே வரவழைக்கும் கட்டம்: அறிவின் முறைகளைக் கைவிட்டு ஆன்மாவின் முறைகளை ஏற்க வேண்டும். ஒவ்வொரு மனிதச் செயலும் இது வெளிப்படுவதால் இவற்றுள் சில: (1) சுயநலத்திலிருந்து பரநலத்தோடு நடப்பது, (2) உரிமையைக் கேட்காதது, (3) பிறர் கண்ணோட்டத்தில் பிரச்சினையைக் காண்பது, (4) அவசரத்தைக் கைவிட்டு, பொறுமையைக் கடைப்பிடிப்பது போன்றவை நீண்ட பட்டியல். ஓர் உதாரணம்:

1970இல் 600 அடிக்கு 12 அங்குல போர்வெல் போட விரும்பிய விவசாயி ஒருவர், தமிழ்நாட்டில் 400 அடிக்கு மேல் "போர்" போடும் மெஷின் இல்லை, அதுவும் 8 அங்குலத்துக்குத்தான் துளைக்கும்என அறிந்து நெய்வேயை அணுகினார். அவர்கள் எளிதில் சம்மதம் தெரிவிக்கவில்லை. சம்மதம் தெரிவித்தபோது, ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கட்டணம் கேட்டனர். இதர செலவுகளுக்கு 15,000 ரூபாயை இவர் ஒத்துக்கொள்ள வேண்டும்என்றனர். வேலை கூடிவர தாம் பொறுப்பில்லைஎன்றனர். பின்னர் ரூ.1,25,000ஐ ரூ.96,000ஆகக் குறைத்தனர்.

விவசாயி வேறு வழியுண்டாஎனக் கருதிய பொழுது, அப்பொழுதுதான் புதியதாக போர் மெஷின் வாங்கிய ஒருவர் வேலையை ஒத்துக்கொண்டார். விவசாயி செய்த ஆராய்ச்சியில் இந்த வேலைக்கு ஆகக்கூடிய செலவு, அதற்குரிய வட்டி, தேய்மானம் உட்பட ரூ.15 ஆயிரம் ஆகும் என அறிவார். பேரம் பேசும் நிலையில் அவர் இல்லை.

"நேரம் வந்தால் வேலை நடக்கும். மனம் திருப்திப்படும் வகையில் நடக்கும். அதற்கு நான் என்ஜினியர் கண்ணோட்டத்தில் பேரத்தை அணுகுவேன்' என முடிவு செய்தார். முடிவு மனத்தைத் தொட்டு வழிவிட்டு, ஆத்மாவின் கதவைத் திறந்து, அகன்ற பரவெளியை எட்டியது. என்ஜினியரிடம் போய், "நான் பேரம் பேச விரும்பவில்லை. உங்களுக்குக் கணிசமான லாபம் பெறும் தொகையை எனக்குப் பொருந்துமாறு கூறவேண்டும்" என்றார். "இதர செலவுகளையும், "போர்” கூடிவரும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், ரூ.36,000 கொடுங்கள்" என்றார் என்ஜினியர்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூகத்தில் மேல் மட்டத்திலுள்ளவர், சமூகத்தில் தாழ்ந்தவரிடம் ஆன்மீகப் பலன் பெற விரும்பினால், தாம் ஆன்மீகத்தில் தாழ்ந்தவர் என அறிய வேண்டும்.
 
தாழ்ந்தவர் உயர்ந்தவரிடம் பெறுவது பலன்.

*****



book | by Dr. Radut