Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி

18. மனமும் சத்தியஜீவியமும்

உலகில் தத்துவ ஞானிகளோ, விஞ்ஞானிகளோ மனம்என்றால் என்ன என்று கூறவில்லை. அதை அறிவது இன்றில்லாத ஞானத்தைப் பெறுவதாகும். யானையைப் பார்த்த குருடன் அதன் உடலைத் தடவி, "யானை சுவர் போன்றது'' என்றான். ஏனெனில் அவனால் முழு யானையைக் காண முடியவில்லை, பார்வையில்லை. பார்வையிருந்தும் ஒரு பொருளின் முழுஅம்சத்தைக் காண இயலாமல், ஓர் அம்சத்தை மட்டும் காணும் கருவி மனம். தாயாருக்குத் தன் குழந்தையின் அறியாமை தெரிவதில்லை. அவள் மனம் குழந்தையைப் பார்க்கிறது. அது மக்குஎன்பது அனைவருக்கும் தெரிந்தாலும், அவளுக்குத் தெரிவதில்லை. மனம் குழந்தையை அதன் அறியாமையிலிருந்து பிரித்துக் கொடுக்கிறது. இத்திறன் மனத்திற்கு மட்டுமேயுண்டு. மனிதன் மனத்தாலானவன். அவன் தினமும் அனுபவிப்பது இது. கடைக்குப் போனால் சிலர் அங்குள்ள அனைத்தையும் காண்பர். மற்றவருக்கு, தங்களுக்கு வேண்டிய பொருள்கள் மட்டும் தெரியும். நாம் முக்கியமாக வீடு வாங்கப் பேரம் பேசும்பொழுது மனம் பேரத்தில் இருக்கிறது, மற்றதைக் கவனிப்பதில்லை. பேரம் முடிந்தபிறகு பார்த்தால், எதிரில் வீடு விற்பவருடன் நம் நண்பர் உட்கார்ந்து இருக்கிறார். பேரம் முடியும்வரை அவர், கண்ணில் படுவதில்லை. மனம் பேரத்திலிருக்கிறது. இது மனத்திற்கேயுள்ள திறன். ஒரு பகுதியை முழுமையாகக் காணும் இத்திறன், முழுமையைக் காண முடியாமற் செய்கிறது.

  • மனம் முழுமையைக் காணும் திறனற்றது.
  • மனம் பகுதியை முழுமையிலிருந்து பிரித்துக் காணும்.
  • முழுமையிலிருந்து பிரித்த பகுதியையே முழுமையெனக் கொள்வது மனம்.

நாம் ஒரு கம்பனியில் வேலை செய்தால், நம் சௌகரியங்கள் மட்டும் தெரிகிறது. கம்பனியின் சௌகரியம் - இலாபம் - நமக்குத் தெரிவதில்லை. கம்பனிக்கு இலாபம் வாராவிட்டால், நமக்கு வேலை இல்லை. இருப்பினும் மனம் தன்னையே முழுமையாகக் கொள்கிறது. முழுமையான கம்பனியைக் காண அதனால் முடியவில்லை.

  • சத்து, சித்து, ஆனந்தமுள்ள சச்சிதானந்தத்தில் ஆனந்தத்தைமட்டும் கண்ட ரிஷிகள், "அதுவே சச்சிதானந்தம்'' என்றனர். இது மனம் செயல்படும் வகை.
  • அரசியல்வாதிக்கு எலக்ஷன் தெரியும், தொகுதி தெரியாது.
  • பரிசு பெறுபவருக்குப் பரிசுப்பொருள் தெரியும், அதைக் கொடுக்கும் அன்பு தெரிவதில்லை.
  • பிள்ளை அதிகமாகச் சம்பாதித்தால், அதிக வருமானம் தெரியும், பிள்ளை கண்ணில் படுவதில்லை.
  • எலக்ஷனில் ஜாதி தெரிகிறது, நாடு தெரிவதில்லை.

மனம் பகுக்கும் கருவி. தொடர்ந்து துண்டு செய்யும். இனித் துண்டு செய்ய முடியாதென்றால், துண்டு செய்ததை ஒன்று சேர்க்கும். மனத்திற்கு முழுப்பார்வையில்லை. இதுவரை மனிதனுக்கு முழுப் பார்வை உற்பத்தியாகவில்லை. முழுப்பார்வையுள்ளது சத்தியஜீவியம். மனிதன் தெய்வம் என்பது மனிதனுடைய முழுமை. மனிதன் நம்மைப் போன்றவன் என்பது பகுதியான பார்வை. பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கு முழுப்பார்வை - சத்தியஜீவியப்பார்வை - அலிப்பூர் ஜெயிலில் வந்த பொழுது மனிதன் நாராயணனாகத் தெரிந்தான். முழுப்பார்வைக்கு உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் பிரம்மமாக - ஸ்ரீ அரவிந்தராகத் - தெரியும். அதுவே சத்தியஜீவியம் பெற்றதற்கு அடையாளம். உடல் குருடு. உணர்ச்சிக்குக் கண் தெரியும், காது கேட்கும். மனம் உணர்வால் - புலனால் - உலகை அறிகிறது. அதுவே நமக்குள்ள பெரிய கருவி. சத்தியஜீவியம் இனி உலகுக்கு வரப்போகும் கருவி.

  • மனம் தீமையை அறியும்.
  • முழுப்பார்வைக்குத் தீமை உலகில்லை.

பிரம்மம் அகம், புறமாகப் பிரிய முடிவு செய்ததால் சிருஷ்டி ஏற்பட்டது. சத்தியஜீவியம் அகம், புறமாகப் பிரிந்ததால், அகம் கடவுளாகவும், புறம் உலகமாகவுமாயிற்று. மனம் இவற்றிடையே உற்பத்தியானது. பிரிவினையால் உற்பத்தியான மனம் பிரிவினைக்குரிய கருவியாயிற்று. பிரிவினைக்கான கருவி பொருள்கள் அணுவாகும் வரைப் பிரிவினையைத் தொடர்ந்தது. மனம் பெற்ற ஞானமும் உறுதியும் பிரிந்ததால் வாழ்வு உற்பத்தியாயிற்று. ஞானம் உறுதியுள் மறைந்ததால் ஜடம் ஏற்பட்டது.

வேதகாலம் முதல் மனிதன் நாடுவது தெய்வீக வாழ்வு. அது சத்தியமான வாழ்வு. இன்று அது முடியுமாஎன நாம் ஐயுறுகிறோம். ஐயம் எழக் காரணம் மேலுலகுக்கும் நமக்கும் எந்த உறவுமிருப்பதாகத் தெரியவில்லை. முன் அத்தியாயங்களில் அத்தொடர்புகளை பகவான் சுட்டிக்காட்டியுள்ளார். பின்வரும் அத்தியாயங்களில் அவற்றை விளக்குகிறார். அவை விளங்கினால், அறியாமை ஏற்பட்ட வகை புரிந்தால் இந்த ஐயம் அகலும். அப்படி விளங்க வேண்டியவை,

  • சத்து, சித்து, ஆனந்தம், சத்தியஜீவியம் சிருஷ்டியில் தலைகீழாகி அஞ்ஞானத்துள் மனம், உயிர், சைத்தியப்புருஷன், உடலாகின.
  • அஞ்ஞானம் சிருஷ்டியின் சிகரம். அதுவே ஆனந்தத்தைப் பேரானந்தம் ஆக்குகிறது.
  • மனம் சிருஷ்டிக்கு உபகருவி.
  • அது அஞ்ஞானத்தை உற்பத்தி செய்து, அஞ்ஞானமாகவே ஆகிறது.
  • மனம் அஞ்ஞானத்தை விட்டு வெளியேறுவது பரிணாமம்.
  • தன்னை மறப்பது அஞ்ஞானம். மறந்தவன், மறைவது பூரண அஞ்ஞானம்.

மேற்கூறியவை அத்தியாயத்திற்கு முக்கியக் கருத்துகள். இனி நூலை வரிசைக்கிரமமாகப் பார்க்கலாம்.

பக்கம் 158 / பாரா 1

தெய்வீக ஆன்மா சத்தியஜீவிய வாழ்வின் சாரத்தைப் பெற்று, சச்சிதானந்தத்திலுறைகிறது. அதை நாம் தெளிவாக அறிய முயன்றோம். ஜீவாத்மா இவ்வுடல் அவ்வுயர்ந்த வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். நம் வாழ்வு உடலால் வாழப்பட்டு, மனத்தால் ஆளப்படுகிறது. நாம் சத்தியஜீவிய வாழ்வையறிந்தவரை நமக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமிருப்பதாகத் தெரியவில்லை. மனித வாழ்வு மனம், உடல்என்ற இரு அம்சங்களிடையேயிருந்து வாழப்படுவது. சத்தியஜீவிய வாழ்வு ஜீவிய நிலையாகவும், ஜீவனுடைய நிலையாகவும் காணப்படுகிறது. உடலில்லாத ஆத்மாக்கள் கொள்ளும் தொடர்பாகவும், தொடர்பின் ஆனந்தமாகவும் அது காணப்படுகிறது. ஆத்மாக்கள் பிரிந்து, உடல் பிரியாத உலக வாழ்வு அது. அது அனந்தமான சந்தோஷமுடையது; சிறைப்பட்ட உருவம் அனுபவிக்கும் சிதறிய சந்தோஷமன்று. உடலுக்குள் சிறைப்பட்ட ஆத்மாவுக்கு அவ்வாழ்வு அமையுமாஎன்ற ஐயம் எழுவது இயற்கை. நம் வாழ்வின் மனம் ரூபத்தால் சிறைப்பட்டுள்ளது. சக்தி ரூபத்தால் சுருக்கப்பட்டு உள்ளது.

  1. தெய்வீக ஆன்மாவின் சத்தியஜீவிய வாழ்வின் சாரம்.

    தெய்வீக ஆன்மா, சத்தியஜீவியம், தெய்வீக வாழ்வு ஆகியவற்றை மரபு ஓரளவு அறியுமென்றாலும், அவர்கள் அவற்றை முக்கியமாகக் கருதி விளக்கவில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் உலகுக்களித்த வரங்களில் இது முதன்மையானது. இதை நமக்கு எடுத்துரைக்கும்பொழுது அவர் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட வழியை process of creation கூறுகிறார். பாடகர் பாடுவதைக் கேட்கலாம், கேட்டு ரசிக்கலாம், அப்பாட்டை எழுதிக் கொள்ளலாம், நாமும் பாடலாம். ஆனால் அவர் போலப் பாடுவது எளிதன்று. அதுபோல பகவான் கூறும் இரகஸ்யம் எழுத்திருக்கிறது. படிக்கலாம், புரிவது போலத் தோன்றும், ஆனால் முக்கிய அம்சங்கள் விட்டுப்போகும். அந்த இரகஸ்யம் புரிந்தால், வாழ்வில் தோல்வியிருக்காது. உடலும் புரிந்து கொண்டால், மரணம் அழியும். அதை முன் அத்தியாயங்களில் கூறுகிறார். அதன் சுருக்கம்,

    அனந்தமான ஜீவன் அளவில்லாத சக்தியுடன் அபரிமிதமான
    ஆனந்தத்தை ஆத்மா ரூபத்தில் தன்னிலும், பிறரிலும்,
    கடவுளுடனும் அனுபவிக்கப் பிரபஞ்சம் முழுவதும்
    ஜீவாத்மாக்களாகப் பரவியுள்ளான்.

இது உண்மையானால், இது பூவுலகில் சாத்தியமானால்,

  1. தீமை, மரணம், நோய், தோல்வியிருக்கா.
  2. நம்மையும், பிறரையும், பிரபஞ்சத்தையும் நாம் முழுவதும் அறிவோம்.
  3. உலகில் அஞ்ஞானம் அழியும்.
  4. பிரம்மம் காலத்துள் காலத்தைக் கடந்து ஜனித்து, பரிணாமத்தைப் பூர்த்திசெய்து, மீண்டும் தன் ஆதியையடையும்.

இப்படிப்பட்ட உயர்ந்த வாழ்வுக்கும் இன்று நாமறிந்த வாழ்வுக்கும் எந்தத் தொடர்புமில்லை. நமக்கு நம்மையே தெரியாது. பிறரையும் தெரியாது. எதிர்காலம் புரியாது. தோல்வி நிரம்பியது நம் வாழ்வு. மரணம் நமது பிறப்புரிமை. நாம் ஒரு விஷயத்தை அடைய வேண்டுமானால், நாம் அதனுள் இருக்க வேண்டும். M.P.ஆக ஒருவர் விருப்பப்பட்டால், அவர் அரசியல் தொண்டராகவாவது இருக்க வேண்டும், இல்லாமல் எப்படி முடியும்? தெய்வீக வாழ்வின் அரங்கிலேயே (field) நாமில்லை. அடுத்த பாராவில் நாம் தெய்வீக வாழ்வின் அரங்கில் உள்ளோம். ஆனால், அதை நாமறியோம் எனக் கூறுகிறார்.

பக்கம் 159 / பாரா 2

அனந்தஜீவன் சச்சிதானந்தம். உலகம் அவனால் சிருஷ்டிக்கப்பட்டது. மனம் அதன் குதர்க்கமான கோணல் ரூபம்.

சுதந்திர இயக்கம் இந்தியாவுக்கு ஆயுதம் தாங்கிய போராட்டமில்லாமல் விடுதலையளித்தது. அதன் குதர்க்கமான கோணல் விளைவு ஊழல். எப்படி அப்படிப்பட்ட உன்னத இயக்கத்தின் பலன் ஊழலாகும்என்பது கேள்வி. பதிலெதுவானாலும் ஊழல் இலஞ்சம் உண்மை. அறிவு குறைவான நிலையில் திறமை அதிகமானால், பலன் சிறுபிள்ளை கையில் துப்பாக்கியைக் கொடுத்ததுபோல் விபரீதமாகும். சச்சிதானந்தம் அனந்தஜீவன், அவன் ஆனந்தமயம் ஆனவன். நம் உலகம் அறியாமையால் ஆளப்படுகிறது. உன்னதமான சச்சிதானந்தம் அறியாமை ஆளும் இடத்தில் குதர்க்கமாகிறது.

தெய்வீக மாயையை நாம் முன்அத்தியாயங்களில் விளக்கினோம். சத்தியம்-ஜீவியம், முழுஎண்ணம் இவற்றின் மூலம் சித்-சக்தி, பிரபஞ்ச வாழ்வு செயல்படுகிறது. உலகை சிருஷ்டித்து, நிர்வாகம் செய்கிறது. ஆனால் மேலேயுள்ள நான்குடன் - சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம் - கீழேயுள்ள மூன்று - மனம், உயிர், உடல் - எப்படித் தொடர்புள்ளது என நாம் அறியோம்.

மத்திய சர்க்கார், மாநில சர்க்கார்போன்றவை மேலேயும், ஓட்டுப் போடும் மனிதன் கீழேயும் உள்ளான். மனிதனுக்கு, தனக்கும் சர்க்காருக்கும் உள்ள தொடர்பு தெரியாது. ஓட்டுப் போடுவது தெரியும். மந்திரி, M.P, M.L.A ஆகியவர் செல்வாக்குள்ளவர் எனத் தெரியும். தான் ஓட்டுப் போடுவதால் அவர்கள் பதவியிலுள்ளனர்எனவும் தெரியும். ஆனால் தானும் அந்நிலையை அடைய முடியும்என அவனுக்குத் தெரியாது. கிராமத்து ஓட்டுக்குப் படிப்பும் அனுபவமும் வந்தால் அது புரியும். அது புரிந்தால் அவன் M.P. ஆவதில்லை. கிராமத்து விவசாயி வசதியுள்ள நகரத்துக் குடிமகனாவான். முயன்றால் அவர்கள் வகிக்கும் பதவிகள் அவனுக்கும் உண்டு.

அஞ்ஞான மாயையை நாமறியோம். அதுவே நம் வேதனைக்கு எல்லாம் வேர். எப்படி இறைவனிலிருந்து அது வெளிவருகிறது, தெய்வீக மாயையிலிருந்து எப்படி அஞ்ஞான மாயை உற்பத்தி ஆயிற்று என நாம் அறியோம். தெய்வீக மாயை நம் உலகை சிருஷ்டித்தது. அதுவே மேல் லோகத்தையும் சிருஷ்டித்தது. அந்த சிருஷ்டியில் இவ்விரண்டு லோகங்கட்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதை நாமறியும் வரை இப்புதிருக்கு விடை கிடைக்காது.

கோர்ட்டில் கேஸ் கொடுக்க வக்கீலிடம் போகும் கட்சிக்காரன் தனக்குச் சாதகமான விஷயங்களைக் கூறுவான், பாதகமான விஷயங்களை மறைத்துவிடுவான். அதைக் கோர்ட்டில் எதிரி வக்கீல் எழுப்புவார். அதையும் சொல்லும்வரை வக்கீலுக்குக் கேஸ் பிடிபடாது. வக்கீல் எடுக்கும் கேஸில் நியாயமிருந்தாலும், நடந்தவைகளை, சிக்கல் எழும்பிய வகையைக் கட்சிக்காரர் வக்கீலிடம் கூறாவிட்டால், நியாயமிருந்தபொழுதிலும் ஏதாவது ஒரு law pointஇல் கேஸ் தோற்றுப்போகும்.

  • நியாயமான கேஸ் தோற்காது.
  • வழக்கு உருவான வழிகளை முழுவதும் ஒளிவு மறைவு இல்லாமல் கூறினால், வக்கீல் எப்படி சட்டம் நமக்குச் சாதகம் செய்யும் என அறிவார்.

    மேல்லோகம் இருக்கிறது, கீழ்லோகம் இருக்கிறது. எப்படி வந்தது எனத் தெரியாது எனில் புதிருக்கு விடை கிடைக்காது. மேல்லோகத்திலிருந்து கீழ்லோகம் உற்பத்தியானதில் இரகஸ்யம் உள்ளது. அதைச் செய்தது மனம்.

இந்தலோகம் சச்சிதானந்தத்திலிருந்து வந்தது என அறிவோம். இது அவனது ஜீவனுள் உறைகிறது. சச்சிதானந்தம் - கடவுள் - இவ்வுலகில் அனுபவிப்பவராகவும், அறிபவராகவும், ஈஸ்வரனாகவும் இருக்கிறார். உணர்ச்சி, மனம், சக்தி, ஜீவன் ஆகியவை இரட்டையின் பகுதிகள். ஆனால் இவை அவனுடைய ஆனந்தம், சக்தி, வாழ்வின் பிரதிநிதிகளென அறிவோம். நாம் இறைவனுக்கு எதிராக இருக்கிறோம் எனவும் காண்கிறோம் (நம் உணர்ச்சி வேதனை தருகிறது, இறைவனின் உணர்ச்சி ஆனந்தம்). அதனால் தெய்வீக வாழ்வுக்கு பூலோகத்தில் இடமில்லை. நம் தாழ்ந்த நிலையை உயர்த்துவது ஒரு வழி. அல்லது நம் உடலை இறைவனின் தூய வாழ்வுடன் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதேபோல் நம் வாழ்வையும், மனத்தையும் இறைவனுடைய வாழ்வுடனும், மனத்துடனும் மாற்றிக் கொள்ள வேண்டும். இது உண்மையானால் பூவுலக வாழ்வை மேலுலக வாழ்வுக்கு மாற்றிக் கொள்கிறோம். இவ்வுலகில் தெய்வீக வாழ்வில்லை என ஆகும்.

பக்கம் 160 / பாரா 3

நமக்கு தெய்வீகம், அதற்கெதிரானது எனப் பிரிவுண்டு. அழுக்கு, தவறு, குற்றம், குறை ஆகியவை தெய்வத்திற்கு எதிரானவைஎன நாம் நம்புகிறோம். இருப்பவை மேலே 4 தத்துவங்கள் - சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம். அவை மட்டுமே செயல்பட முடியும். ரூபத்தாலானது உலகம். தெய்வீக தத்துவங்கள் ரூபமான உலகை சிருஷ்டிப்பது நமக்கு தெய்வத்திற்குப் புறம்பானதாகத் தோன்றுகிறது.

நாட்டில் நடக்கும் நல்லவையெல்லாம் செய்வது சர்க்கார். அதைச் செய்ய சர்க்காருக்குப் பணம் வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ திருடனும் குற்றவாளியும் ஜெயிலில் இருக்க வேண்டும். அமைதி தேடும் மக்களே ஆர்ப்பாட்டம் செய்வர். அவர்களை அடக்காமல், தடியடி, குண்டுவீச்சுமூலம் அடக்காமல் அம்மக்களுக்கு நிம்மதியான வாழ்வை சர்க்கார் தரமுடியாது. வரி வசூல் செய்தாலும், அராஜகத்தை அடக்கினாலும், நாமே திருடும்பொழுது நம்மைக் கைது செய்தாலும், நாம் ஓலமிடுகிறோம். நமக்குச் சர்க்கார் நல்லது செய்ய முனைந்தால் நமக்கு அது தொந்தரவாவது நம் மனப்போக்கு.

இந்த ரூபங்கள் - ஜீவன்கள், ஜீவராசிகள், பொருள்கள் - இறைவனின் உடலுக்குள் சிருஷ்டிக்கப்படுகின்றன, வெளியில் இல்லை. (இறைவனுக்கு வெளியே எதுவுமில்லை என்பது நம் அடிப்படை). இறைவனுடைய உடலுக்குள் எனில் அவன் சக்தி, ஆனந்தத்திற்குள் எனப் பொருள். முழு எண்ணம் உலகை சிருஷ்டிக்கிறது. இந்த ரூபங்கள் அதற்குட்பட்டவை, அதன் செயல்படும் முறைக்கு உட்பட்டவை. அதனால் ரூபலோகத்தில் - அதாவது நம் லோகத்தில் - தெய்வீக ஜீவியம் செயல்படாது, தெய்வத் திருவிளையாடருக்காது எனக் கூற முடியாது. இந்த ரூபங்கட்கு உதவியாக மனமும் சக்தியும் தேவை. அவை அவற்றிற்குரிய அடிப்படை - பொருள். அவை அவசியமாக இருப்பதால் அவற்றால் இந்த ரூபங்கள் சிதையும், சிதறும் என நாம் நம்பவேண்டிய அவசியமில்லை.

செய்தி கடிதம், தந்தி, ஆள், ஈமெயில்மூலம் போகிறது. இவை செய்தி உலவ அவசியம். இவற்றால் செய்தி தவறாக மாற்றப்படுவதும் உண்டு. மாற்றப்பட வேண்டும், தவறாக அவசியம் மாறும் என்று நினைக்கும் அவசியமில்லை.

மனம், உயிர், உடல் தெய்வீக சத்தியத்தில் தூய்மையாக இருக்க முடியும். அதனால் நம் வாழ்விலும் அவை அதே தூய்மையைத் தாங்கி வர முடியும். நம் வாழ்வில் அவை இவ்வுயர்ந்த செயல்கட்கு உபசெயல்களாகும். அதனால் உயர்ந்த சக்தி அவைமூலம் செயல்பட முடியும். மனம், உயிர், உடலுக்கு தெய்வீகம் இருப்பது சாத்தியம். அவை ஒரு ஜென்மம் என்ற சிறு காலத்துள் தங்கள் திறனை முழுவதும் வெளிப்படுத்த முடியாது. விஞ்ஞானம் பிறப்பிலிருந்து இறப்புவரை அறியும். அதற்கு முன்னும், பின்னும் அது அறியாது. இன்று மனம், உயிர், உடல் தடுமாறிச் செயல்படுவதற்குக் காரணம், அவை இருளில் கண்மூடிச் செயல்படுகின்றன. தெய்வீக சக்தி தானே வளர்வது. அது இவற்றுள் நுழைந்தால் மனம் விரியும், உணர்ச்சி நெகிழும், உடல் தன் இருளைக் கடந்துவரும். அதன் வழி மனிதச் செயல் வளரும் பரிணாமச் செயலாகும். அது தூய்மையான சத்தியஜீவியச் செயல் ஆகும்.

சுயநலமான பெற்றோர் கடுமையாக இருக்கின்றனர். குழந்தை படிக்கவில்லைஎன்பதையே அறிய முடியாமல் இருக்கின்றனர். வீட்டு வேலைக்கு உதவியாகக் கொள்கின்றனர். பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துகின்றனர். சுயநலம் பரநலமானால், கடுமை இனிமை ஆகும்.

பக்கம் 161 / பாரா 4

அது உண்மையானால், மனித மனம், உயிர், உடல் தெய்வீக ஜீவியத்தை வெளிப்படுத்தி நிலைநிறுத்த முடியும். முடிவில் தெய்வீக ஜீவியம் தான்பெற்ற வெற்றியை வளர்த்து மனம், உயிர், உடலை அதனுள் வளர்த்து, சத்தியத்தின் பிம்பமாக்கும்என நம்பலாம். இது ஆத்மாவில்மட்டும் சித்திக்காது. இந்த சித்தி - பூலோகச் சொர்க்கம் - அடிப்படையான ஜடப்பொருளையும் வெல்லும்.

இந்தியாவில் எங்கு திருட்டுப் பையனைப் பிடித்தாலும் அவன் சொந்த ஊர் கேப்மாரிஎன போலீஸ் அறிந்தது. அவர்களை நல்வழிக்குக் கொணர சர்க்கார் ஒரு பஞ்சாலையை அங்கு ஆரம்பித்தது. அதன்பின் அவ்வூர் மக்கள் தொழிலாளிகள் ஆனார்கள். பிக்பாக்கட் சப்ளை நின்றது. 30 ஆண்டிற்குப்பின் அடுத்த தலைமுறைக்கு ஆலையில் வேலை கிடைக்கவில்லை. மீண்டும் பிக்பாக்கட் சப்ளை அகில இந்தியரீதியில் தொடர்ந்தது. ஒரு தலைமுறை மாறினாலும் அடுத்த தலைமுறைக்குப் பரம்பரைக் குணம் தொடர்கிறது. நம்மை ஜீவியம், பொருள் என பகவான் பிரிக்கிறார். படிப்பாலும், பண்பாலும் ஜீவியம் மாறும். அதனடியில் உள்ள ஜடம் மாறாது. அது மாறுவது திருவுருமாற்றம். கேப்மாரி அனுபவம் அதை நிரூபிக்கிறது. தெய்வீகஜீவியம் மாற்றத்தைத் தொடர்ந்து நம் ஜடப் பொருளையும் மாற்றும் என மேலே கூறியது சொல்கிறது.

முதலில் கூறியது அகத்திற்குரியது. அநேகர் இதைப் பெரும்பாலும் பெற்றுள்ளனர். அடுத்தது புறத்தில் பெறும் வெற்றி. இதுவரை எவரும் அதைப் பெறவில்லை. இவ்வெற்றி நம் பாதாளத்துள் இருக்கிறது. அதன் நினைவில் பொதிந்துள்ளது. அது பூமாதேவியின் சுபாவத்திற்குரியது. அது இனி வரஇருப்பது. அது வரும்பொழுது அது மனித குலத்தில் இறைவன் பெற்ற வெற்றியாகும். தற்சமயம் நம் வாழ்வு அரைகுறை ஆனந்தம் பெறுகிறது. அரைகுறை சோகச்சாயல் உடையது. அது இனி தேவையில்லை. இங்கு வெற்றியுண்டு. அத்துடன் ஆனந்தமும் அதன் வெற்றியும் வரும். இறைவன் இகவாழ்வில் தன் அருள் மணம் வீசப் பரவுவான்.

பக்கம் 161 / பாரா 5

மனம், உயிர், உடல், அவற்றின் உயர்ந்த உற்பத்தி ஸ்தானத்தில் என்னவாக இருக்கின்றன? அவை தெய்வீக சிருஷ்டியில் சத்தியத்தால் நிரம்பிப் பூரண முழுமையடைந்தால் என்னவாக இருக்கும்என்பதை நாம் ஆராய வேண்டும். அப்பொழுது அவை அஞ்ஞானத்தால் முழுமையிலிருந்து பிரியா.

படிக்காதவனைவிடப் படித்தவன் உயர்ந்தவன். படித்தவன் இலட்சியமாக வாழ்ந்தால் அவன் படித்தவனைவிட உயர்ந்தவன். மனம், உயிர், உடல் படிக்காதவன்போன்றவை. இவை அவற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் படித்தவன்போருக்கும். மனம், உயிர், உடல் தற்சமயம் இருளால் நிறைந்துள்ளன. ஆதியில் அக்குறையில்லை. ஆனால் அவற்றிற்கு அதையும்விட உயர்ந்த கட்டம் உண்டு. ஆதியிலும் அவை சத்தியத்தால் நிரம்பியோ, பூரணம் பெற்றோ இல்லை. தூய்மையாக இருந்தன. பூவுலகில் அஞ்ஞானத்திலிருந்து வெளியேறினால் ஞானம் பெற்று, சத்தியம் பெறலாம், பூரணம் பெறலாம். இது படித்தவன் இலட்சியவாதியாவதுபோன்றது.

அவை தேடும் இலட்சியம் ஏற்கனவே மேலே இருக்கவேண்டும். (ஜடத்திலிருந்து பரிணாமத்தால் விலங்குடன் எழும் மனிதர் நாம். இது மனம் எழுவது. ஆத்மா ரூபத்துள் வந்ததிலிருந்து இன்னும் விடுதலை பெறாதநிலை நம்நிலை. ஒளி தன் நிழலுள் மறைந்த நிலை நாம் சிருஷ்டிஎன அறிவது. அந்நிலை பூரணமாகி இருண்ட ஜடம் உற்பத்தியாயிற்று). நாம் தேடும் சிறப்பு பல. நம் பரிணாம இலட்சியமும் பல. அவை ஏற்கனவே முழுஎண்ணத்துள்ளிருக்க வேண்டும். அங்கே உருவம் பெற்று உயிரோடு அவை இருந்தால்தான் நாம் அதை நோக்கிச் செல்ல முடியும். தெய்வீகஞானம் முன்கூட்டிக் காத்திருப்பதை நாம் இலட்சியம் என்கிறோம். இலட்சியம் நிலையான சத்தியம். நாமுள்ள நிலையில் நாம் அதை இன்னும் அடையவில்லை. இறைவனும், பிரம்மமும் அறியாத இலட்சியத்தை அரைகுறை மனிதர்களாகிய நாம் கண்டு உற்பத்தி செய்யப்போகும் இலட்சியமன்று அது.

பக்கம் 162 / பாரா 6

மனித வாழ்வின் சிறைப்பட்ட அரசன் மனம். மனத்தின் சூட்சுமம் ஒரு ஜீவியம். அது அளக்கும், வரையறை செய்யும், பொருள்களினின்று ஒரு பகுதியை வெட்டி எடுக்கும். முழுப்பொருளின் பகுதியை வெட்டி எடுத்து, அதை முழுமையானதாகத் தன்னுள் பெற்றிருக்கும். பகுதி, பின்னமானவற்றையும் மனம் இப்படிக் கருதுகிறது. இது மனத்தின் தொழில். பொருள்களை முழுமையாகக் கருதுவது அதன் சுபாவம். அவற்றை முழுமையின் பகுதியாக அதனால் காண இயலாது.

கிராமப்புறங்களில் படிக்காத கூக்காரன், 60 வயதைக் கடந்தவன் சந்தோஷமாக வாழ்ந்தவனாக இருப்பதுண்டு. அவனைப் பொருத்தவரை அவனுக்கு வாழ்வு சௌகரியமானதால், அவன் மனநிறைவு பெறுவான். படிப்போ, அறிவோ, அனுபவமோ இல்லாவிட்டால், உள்ள நிறைவு உலகத்து நிறைவாகத் தெரியும். அப்படிப்பட்டவன் "உலகமெல்லாம் அறியும்" என்றால், அவன் ஊர் முழுவதும் அறியும்எனப் பொருள். அவனுக்கு அவன் ஊர் உலகம். மனம் அத்தகையது. அவன் ஊர் அவனறிந்த உலகம்என்பதைப் போல, மனம் கண்ட சிறு பகுதி அதற்கு முழுமையாகும்.

சில சமயங்களில் மனம் தான் காணும் பகுதியை முழுமையில்லை என அறியும். இருப்பினும், மனம் அப்பகுதியை முழுமையாகவே கருதும். அப்படியில்லையெனில் மனம் செயல்பட முடியாது.

தான் வேலை செய்யும் கம்பனியே உலகமில்லை. அது உலகத்தின் பகுதியென அறிந்தாலும், மனிதனால் தன் கம்பனியே எல்லாம்எனக் கருதாமருக்க முடியாது. கம்பனி ஊரிலும், உலகிலும் பகுதியென அவன் மனம் ஏற்றுக் கொண்டால் கம்பனிக்கு அவனால் ஆர்வமாக உழைக்க முடியாது. அவனது முழுத்திறமை வெளிப்பட அவன் கம்பனியே எல்லாம்என நினைக்க வேண்டும்.

இது மனத்தின் சாரமான குறிப்பிட்ட குணம். அதன் எல்லாச் செயல்கட்கும் இந்தக் குணம் உண்டு. கருவாக எண்ணமிடுவதிலும், உள்ளே ஆழ்ந்து உணர்வதிலும், உடலால் உணர்ச்சிமூலம் அறிவதிலும் இதே முத்திரையிருக்கும். படைப்புக்குரிய எண்ணத்தையும் மனம் இது போலவே கருதும். ஒரு முழுமையினின்று ஒரு பகுதியை மனம் முழுமையெனக் கருதி, உணர்ந்து, வெட்டியெடுத்து, முழுமையாகக் கொண்டாடுவது அதன் இயல்பு. அப்பகுதியை தனக்குச் சொந்தமாகப் படைக்கக் கொடுத்ததாக மனம் கொள்கிறது. மனத்தின் செயல்கள், ஆனந்தம் ஆகிய அனைத்தும் முழுமையின் பகுதியை முழுமையாகக் கருதுவதால் ஏற்பட்டவை. அவற்றை மேலும் பகுத்து, அப்படி ஏற்பட்ட பகுதிகளை முழுமையாகத் தொடர்ந்து கொண்டாடுவது மனம். மனம் பகுக்கலாம், பெருக்கலாம், கூட்டலாம், கழிக்கலாம். அதனால் இந்த கணக்கைத் தாண்டி வரமுடியாது. (உள்ளூர் கடைக்காரன் உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் விற்கலாம். ஆனால் அவற்றுள் எந்தப் பொருளையும் அவனால் உற்பத்தி செய்ய முடியாது). மனம் தன் எல்லையைக் கடந்து ஒரு முழுமையை அறிய முயன்றால் அது திக்குத் தெரியாமல் திகைக்கும். தன் சொந்த ராஜ்யத்தினின்று ஆழங்காணாத அலைகடலுள் வீழும். அனந்தம்என்ற படுகுழியில் விழும். அங்கு மனத்தின் கருத்து, உள்ளுணர்வு, உடலுணர்வு செயல்படாது. தனக்குப் படைக்கத் கொடுத்த பொருளை அனுபவிக்க முடியாது. அனந்தத்தை அறிய, உணர, பெற மனம் முயன்றால் அதற்குக் கிடைப்பது அனந்தமன்று, அனந்தத்தின் அடையாளம்.

சிறு குழந்தை தாயாரின் புடவையைக் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டால், அதனால் முடியாது. தன்னைப் புடவையுள் இழந்துவிடும். கல்விபெற குருவை நாடவேண்டும். கல்லூரியை நாடினால் கிடைப்பது கடலெனப் பரவிய கல்வியில்லை. கல்வி கற்றவன் பாண்டித்தியம் பெற்றவன். அவனுக்கு உலகமே பள்ளி, இலக்கியமே பாடபுத்தகம். மனம் பெறும் தெளிவு கல்வி. கல்லூரியை நாடுபவன், வேலை தேடுபவன். அவன் கல்வியை நாடினால் அவனது சிறுஇலட்சியம் அதைப் பெறமுடியாது. அவனுக்குக் கிடைப்பது பட்டம். அது பெருங்கல்வியின் சிறு அடையாள முத்திரை.

மனம் குழப்பத்துடன் அனந்தத்திலிருந்து பெறுவது உருவமற்ற பெரிய குழப்பம். மேகம் சூழ்ந்த விவரமற்ற மண்டலம். நட்சத்திரம் ஜொலிக்கும் தெளிவான நள்ளிரவன்று. அம்முயற்சியில் ஈடுபட்டால் அதன் பகுக்கும் குணம் எழும். கிடைப்பது பகுதி, அடையாளம், பிம்பம், நிழல், சத்தியமில்லை. மனத்தால் அனந்தத்தைப் பெற்று வைத்திருக்க முடியாது. அனந்தம் மனத்தைப் பெறமுடியும். மனம் அனந்தத்தை அனுமதிக்கும். இதனால் அதை ஆள முடியாது. அனந்தமாகத் தன்னை இழந்து லயித்திருக்கலாம், அனந்தம் மனத்திற்குப் பிடிபடாது. சத்தியத்தின் ஒளிமயமான நிழல் வரலாம். பெரிய இடத்தில் பெருநிழல் அதன் மீது விழுகிறது. அனந்தத்தை மனம் தனக்கெனப் பெற வேண்டுமானால் அது உயர்ந்து சத்தியஜீவியத்தை எட்ட வேண்டும். மனம் அனந்தத்தைப் பற்றியறிய வேண்டுமானால் மேலிருந்து சத்தியஜீவிய சத்தியம் கொண்டுவரும் செய்திக்குத் தான் சரணடைய வேண்டும்.

பக்கம் 163 / பாரா 7

மனத்தின் சத்தியம், மனத்தின் இயலாமை மனத்துடன் வருகின்றன. அவை மனத்தின் உண்மையான சுபாவத்தையும், செயலையும் நிர்ணயிக்கின்றன. அவை சுபாவம், சுதர்மம். தெய்வீகச் செயல் மனத்திற்கு அதன் வேலையை இப்படி நிர்ணயம் செய்தது. மனம் முழுவதும் மனமாகச் செயல்படுவது மாயை மனத்திற்களித்த திறன். இறைவன் சுயமாகச் சிந்தித்து மனம் பிறக்கும் பொழுதே அதற்கு அளித்த திறமையிது.

உலகம் பெரியது. தனி மனித வாழ்வு சிறியது, குறுகியது. பெரிய அரங்கில் குறுகிய வாழ்வை நடத்த சிறுகருவி வேண்டும். அது மனம். வாயால் முழுவாழைப்பழத்தைச் சாப்பிட முடியாது. பலாப் பழத்தை அப்படிச் சாப்பிட நினைக்கவும் முடியாது. சிறு துண்டுகளாக வெட்டிச் சாப்பிடலாம். வாழ்வுஎன்ற பெரு முழுமையை சிறுதுண்டுகளாக்க இறைவன் நமக்கு அளித்த துண்டாடும் கருவி மனம். துண்டாடுவது பல வகையின.

  1. வாழைப் பழத்தை 4 துண்டுகளாக்குவது ஒரு வகை.
  2. டாக்டருக்கு நம் வியாதி தெரியும், நம்மைத் தெரியாது. 6 மாதம் கழித்துப் போனால் அவருக்கு அடையாளம் தெரியாது. கட்டை விரல் நகத்தை எடுக்க வந்தேன்என்று கூறினால் உடனே அவருக்கு ஞாபகம் வரும். - இது மனிதன்என்ற முழுமையில் ஒரு பகுதியைமட்டும் காணும் திறன், பிரித்துப் பார்க்கும் திறன். இது மனம் பெற்ற திறன்.
  3. சீனுவாச இராமானுஜன் பெற்ற மேதாவிலாசம் கண்ணுக்குத் தெரியாமல், அவன் பரீட்சையில் பெயிலானதுமட்டும் தெரிவது அடுத்த வகை.
  4. ரேஸுக்குப்போய் சொத்தைப் பல முறை அழித்தவன் கொஞ்சம் காசு வந்தவுடன் பழைய அனுபவத்தைப் பார்க்க முடியாத மனநிலை. மனம் அந்த அனுபவத்தை இன்றுள்ள ஆசையிலிருந்து பிரித்துவிடுகிறது.
  5. பதவியிலுள்ளவன் குறை தெரியாது.

    ரிஷிகள் மனத்தால் செய்த தவம் சச்சிதானந்தத்தைப் பார்த்து, சத்தைமட்டும் கண்டு, "அதுமட்டுமிருக்கிறது. அதுவே சச்சிதானந்தம்'' என்றது மனம் செயல்பட்ட வகை.

மாயை மனத்திற்குக் கொடுத்த வேலை: அனந்தத்தை அந்தமாக்குவது (பெரியதை சிறியதாக்குவது, அகண்டத்தைக் கண்டமாக்குவது). அளந்து, அளவிட்டு, வெட்டி எடுப்பது. நம் ஜீவியத்தில் மனம் அனந்தத்தையே விலக்கி இதைச் சாதிக்கிறது. எனவே மனம் அஞ்ஞானத்தின் தலைமை அலுவலகம். பிரிவினைஎன்று ஏற்படுத்தியது மனம். பிரித்ததை வினியோகம் செய்தது. அதனால் மனம் உலகை சிருஷ்டித்ததுஎனவும் கருதினர். மனத்தையே மாயை எனவும் கூறினர்.

சத்தியஜீவியம் அம்சத்தைப் பிரிக்கிறது, அங்கத்தைப் பிரிக்கவில்லை. சத்புருஷனை சத், சித், ஆனந்தம் என துண்டுபடாமல் பிரித்தது சத்தியஜீவியம். ஏகனை, அநேகனாகப் பிரித்ததும் சத்தியஜீவியமே.

நமக்கு அனந்தமான உலக வாழ்வே மனதில் வருவதில்லை. நம் வாழ்வுமட்டுமே தெரியும். மனம் நம் பார்வையிலிருந்து அனந்தத்தை அறவே பிரித்து விட்டதால் அனந்தமான வாழ்வை நாம் அறியவில்லை. கல்லூரியில் கல்வியை எவரும்

சிந்திப்பதில்லை, பட்டத்தைக் கருத்தாகக் கருதுகின்றனர். கல்வி அனந்தம், பட்டம் குறுகியது. வாழ்க்கை நடக்க சிறியதைப் பாராட்ட வேண்டும். எனவே மனம் பெரியதை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அப்படி நாம் இன்று பெற்றனவெல்லாம் மனத்தால் பெற்றனஎன்பதால் வாழ்வை சிருஷ்டித்ததே மனம் என நினைத்தனர். அடுத்த கட்டத்திற்குப் போய் உலகை சிருஷ்டித்த தெய்வீக மாயையே மனம்எனவும் கூறினர்.

தெய்வீக மாயை ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் அறியும். சிறியது பெரியதன் தோற்றம். எனில், சிறியது பெரியதில்லாமல் இருக்க முடியாது. அதன் பின்னணியில் பெரியது இருக்க வேண்டும். சிறியது பெரியதனுள்ளிருக்க வேண்டும், அதனால் உயிர் வாழ வேண்டும். இது உண்மையானால், சிறியதையும் பெரியதையும் உட்கொண்ட பெரியது - முழுமை - இருக்க வேண்டும். அதனுள் இவையிரண்டுமிருக்கும். அவை ஒன்றுடன் மற்றது கொண்டுள்ள தொடர்பைச் சிறப்பாக அறிந்திருக்க வேண்டும். அந்த ஜீவியத்தில் அஞ்ஞானமிருக்காது. ஏனெனில் அனந்தம் தெரியும். சிறியது அதனின்று பிரிக்கப் பட்டிருக்காது.

வக்கீலுக்குத் தன் கட்சி தெரியும். ஜட்ஜ்க்கு இரண்டு கட்சியும் தெரியும். வக்கீல் மாயையைப்போல் அறியாமையைமட்டும் அறியும். ஜட்ஜ் தெய்வீக மாயையைப்போல் இரண்டு கட்சிகளையும், நியாயத்தையும் அறிவார்.

மனம் ஒரு உபகருவி. (மனமில்லாமல் உலகமில்லை). மனம் பிரித்துச் சேர்க்கிறது. வாழ்வு விரித்துக் குவிக்கிறது. ஜடம் துண்டாகி, துண்டுகள் ஒன்று சேர்கின்றன. இவையனைத்தும் ஒரே வகையான செயல்கள் - தோற்றத்தை ஏற்படுத்துபவை. இவ்உபசெயல் இறைவன்என்ற ரிஷி, முனிவர் செயல். இது ஒளிமயமான செயல், விழிப்பான செயல். தான் பெரியதில் சிறியதை ஏற்படுத்துவதை அவன் அறிவான். இதை தெய்வீக மனம் எனக் கூறுவோம்.

இது தனிப்பட்ட செயலன்று. உபசெயல்என்பது தெளிவு. இதை முழுஎண்ணம், சத்தியஜீவியம், சத்தியம்-ஜீவியம் என்கிறோம். இது பிரக்ஞா மூலம் செயல்படுகிறது.

பக்கம் 164 / பாரா 8

பிரக்ஞா என்பது சத்தியஜீவியத்தின் பகுதி. காலத்துள் உள்ள பகுதி. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது - காலத்தைக் கடந்தது, காலத்துள் உள்ளது - இடையே மனம் உற்பத்தி ஆகிறது. இதை அகம், புறம்எனலாம். இங்கு அகம்என்பது கடவுள், புறம்என்பது உலகம். இதுவே சிருஷ்டியின் ஆரம்பம், இரகஸ்யம். இந்த இரகஸ்யம் தெரியாததால் உலகம் எப்படிக் கடவுளிலிருந்து உற்பத்தியாயிற்று எனத் தெரியவில்லைஎன்றனர்.

  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் கண்ட இரகஸ்யங்களில் இது தலையானது.

 இறைவனை இங்கு பகுக்க முடியாத முழுமை என்கிறார். இறைவன் சுறுசுறுப்பாகவும், உருவகப்படுத்துபவராகவும் - ஜீவியத்திற்கு உருவம் தருவது - இருக்கிறார். இறைவன் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானமாகவும், அறிபவராகவும், சாட்சியாகவும், உடையவராகவும் இருக்கிறார். கவி தன் காவியத்தைத் தானே படிப்பது போல, இறைவன் தன் திருஷ்டியை தாமே விமர்சனம் செய்கிறார். சிருஷ்டி வேறு, இறைவன் வேறில்லை. இருந்தாலும், அவை வேறாக இருப்பதாக இறைவன் செயல்படுகிறான். இதுவே இறைவனின் ஐக்கியத்தில் ஏற்பட்ட முதல்பிளவு, பிரிவினை. உலகிலுள்ள எல்லாப் பிரிவினைகட்கும் இதுவே ஆரம்பம். புருஷன், பிரகிருதிஎன்ற பிரிவினை இது. புருஷன் தன் திருஷ்டியால் சிருஷ்டிக்கிறான். பிரகிருதி தன் சக்தியால் சிருஷ்டிக்கிறான். புருஷனும், பிரகிருதியும் ஒரே ஜீவன், ஒரே வாழ்வு. ஏற்படும் ரூபங்கள் அனைத்தும் அவனே, அவனுடைய ரூபங்களே. ஏற்படும் செயல்கள் அனைத்தும் அவனே, அவன் செயல்களே. பிரக்ஞாவின் கடைசி செயலாக புருஷன் தன்னை, தன் படைப்புக்குள் செலுத்தி, அவற்றினுள்ளிருந்து அதன் கோணத்தில் மற்றதையும் உலகையும் காண்பது.

தலைவன் தொண்டர்களைத் தலைமை தாங்கி நடத்துகிறான். தலைவன், தொண்டர்என்பது பிளவு. மேலும், தலைவன் ஒவ்வொரு தொண்டருடனும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அத்தொண்டர் நோக்கத்தில் தலைவனையும், அடுத்தவரையும் காண்பது.

பக்கம் 165 / பாரா 9

பிரக்ஞாவின் செயலால் முழுமையான இறைவன் புருஷன், பிரகிருதி எனப் பிரிந்தான். பிரிவினை எழுந்தது. இதன் முதன் விளைவு அனந்தம் இரண்டாகப் பிரிந்து காலம், இடமென ஆயிற்று. இரண்டாவதாக எங்கும் நிறை ஏகன், அநேகனானான். ஆத்ம விழிப்புடன் இறைவன் இம்மாறுதலுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு சாங்கியம் கூறும் பல புருஷர்களை ஏற்படுத்தினான். மூன்றாவதாகப் பல புருஷர்கள் - ஆத்ம ரூபங்கள் - தனித்த வாழ்வை உண்டு பண்ணிற்று. இது ஏகன் தன் ஐக்கியத்தை பரவலான ஐக்கியமாக்கியதாகும். பல புருஷர்கள் - பல ஜீவாத்மாக்கள் - ஒவ்வொருவரும் தனித்தனிப் பிரகிருதியைப் பெறாததால், பிரிந்து நிற்பது தவிர்க்க முடியாது. எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஒரே பிரகிருதி பொதுவானது. (அப்படியே இருக்க முடியும். ஏகனுடைய ஆத்ம ரூபங்கள் புருஷர்கள். அவனுடைய ஆயிரம் சிருஷ்டிக்கு அவை தலைமை தாங்குகின்றன). இருப்பினும் ஒரே பிரகிருதி ஏற்படுத்திய ஒரே உலகில் அப்புருஷர்கட்குள் தொடர்புண்டு. ஒவ்வோர் ஆத்ம ரூபத்திலும் உள்ள புருஷன் தன்னில் தன்னை மறந்து இரண்டறக் கலக்கிறான். தன்னைத் தன் ரூபத்திற்குள் வரையறுத்துக் கொள்கிறான். அடுத்த புருஷர்களை வேறாகக் கருதுகிறான். அவர்கள் தன் பிற அம்சங்களைப் பிரதிபப்பதாகக் கொள்கிறான். தன்னுடன் இணைந்த புருஷனானாலும் உறவில் வேறு தொடர்பு உள்ளவனாகக் கருதுகிறான். அளவிலும், அசைவிலும், சக்தி, ஜீவியம், பொருள், ஆனந்தம் ஆகியவற்றின் நோக்கிலும் அவை காலத்தாலும், இடத்தாலும் வேறுபடுபவையாகக் கருதுகிறான். தெய்வீக வாழ்வில், தன்னை முழுவதும் அறியுமென்பதால், இப்பிரிவினை தவிர்க்க முடியாததில்லை. ஆத்மா இந்த ரூபங்கட்கோ, அம்சங்கட்கோ அடிமையாக வேண்டுமென்பது இல்லை. நாம் உடலோடு ஐக்கியப்படுவது போன்றது இது, அகந்தையுடன் இணைவதுபோன்றது. காலத்துள் ஒரு மணித்துளியுடன், இடத்தில் ஒரு புள்ளியுடன் நாம் இணைந்து அடிமைப்படுவதுபோன்றது. இத்தனையுமிருந்தாலும், தெய்வீக ஆத்மாவின் சுயஞானம் அப்பிரிவினையைத் தடுக்க வல்லது. நம் வாழ்வில் பிரிவினை தவிர்க்க முடியாததாகத் தோன்றுகிறது.

சர்க்கார் ஒன்றே, இலாக்காக்கள் பல. கம்பனி முதலாளியினுடையது. அதற்கு ஏராளமான கிளைகள் உண்டு. கிளைகள் கம்பனியைப் பிரிப்பதில்லை. இலாக்காக்கள் கம்பனியைப் பிரிப்பதில்லை. நடைமுறையில் பிரிந்ததாகச் செயல்படுகின்றன. போட்டி போடுவதும் உண்டு. கிளை எத்தனையானாலும், இலாக்கா எத்தனையானாலும், கம்பனி ஒன்றே. அதுபோல் புருஷன், பிரகிருதிஎனப் பிரிந்தாலும், பல ஜீவாத்மாக்களிருந்தாலும், காலத்தாலும், செயலாலும், ஞானத்தாலும், இடத்தாலும், அவை பிரிந்து தோன்றினாலும், பிரிவினையில்லை, முழுமையுண்டு.

பக்கம் 165 / பாரா 10

மனம் பகுக்க, துண்டு செய்ய ஆரம்பித்துவிட்டது. ரூபம் தனி ஜீவனாகத் தோன்றுகிறது. ரூபம் அடுத்த ரூபத்துடன் தொடர்பு கொள்கிறது. ஜீவனின் உறுதி அதே போல் பிரிந்து, தனித்து, அடுத்த ஜீவனின் உறுதியுடன் தொடர்பு கொள்கிறது. ஜீவனின் ஞானம் பிரிந்து அடுத்த ஜீவனின் ஞானத்துடன் தொடர்பு கொள்கிறது. தெய்வீகஆன்மாவுக்கு இவை தோற்றம், அது ஏமாறுவதில்லை. ஜீவனின் தோற்றங்களை அது அறியும். தன் ஜீவனின் சத்தியத்தில் தன் வாழ்வை நிலைநிறுத்துகிறது. மனத்தை உபகருவியாகப் பயன்படுத்துகிறது. அடிப்படை அதன் அனந்த ஞானம். மனம் உபகருவி. இப்பிரிவு அடிப்படையான முழுமையைப் பொருத்தது - அது பகுதிகளின் தொகுப்பன்று. அது துண்டுகள் சேர்ந்த முழுமையன்று. அதுவும் மனத்தின் தோற்றமே. எனவே பிரிவினைக்கு உண்மையில்லை. ஆன்மா தன் விவரிக்கும் சக்தியைப் பயன்படுத்துகிறது. ரூபங்களும், சக்திகளும் தெளிவாகப் பிரிந்து அலையில் பங்கெடுக்க ஆத்மா அவற்றைப் பயன்படுத்துகிறது. ஆத்மா அவற்றால் பயன்படுத்தப்படவில்லை.

ஜீவன் என்பதைக் கல்விக்கு ஒப்பிடலாம். கல்வி ஸ்தாபனங்கள் பிரிகின்றன. என்ஜினியரிங், மெடிகல்எனப் பிரிகின்றன. கலைக் கல்லூரி வேறு. கலை பல பகுதிகளாகப் பிரிகின்றது. இது பிரிவினைத் தோற்றம். இதனால் கல்வி பிரிக்கப்படுவதில்லை. அடிப்படையில் கல்விஎன்பது ஒன்றே.

பக்கம் 166 / பாரா 11

தானே தன்னைக் கட்டுப்படுத்தும் மனம் வேறு, வேறு வழி இல்லாமல் கட்டுப்படும் மனம் வேறு. அதை உற்பத்தி செய்ய இதுவரை கூறியவை போதாது. ஒரு புதுஅம்சம் தேவை - அது மனம் தன் செயலால் கட்டுப்படுவது. அதனால் நாம் ஏமாறுவோம். எதையும் தான் கட்டுப்படுத்தும், ஏமாறாது. ஒன்று மனித மனம், அடுத்தது தெய்வீக மனம். புதிய அம்சம் நாம் தேடுவது அஞ்ஞானம், அறியாமை, அவித்யா. இது மனத்தின் தன்மை, தன்னை மறக்கச் செய்யும் குணம், சத்தியஜீவியத்தினின்று மனத்தைப் பிரிப்பது. சத்தியஜீவியம் திரைக்குப் பின்னாலிருந்து மனத்தை ஆள்கிறது. அப்படிப் பிரித்தால் மனம் பொதுவானதைக் காணும் திறனை இழக்கும், குறிப்பானதை மட்டும் காணும். அனந்தம் பிரபஞ்சத்தில் பொதுவானதாகவும், குறிப்பிட்டதாகவும் வெளிப்படுகிறது. பிரிக்கப்பட்ட மனம் பொதுவானதைக் காணும் திறனை இழந்து, குறிப்பிட்டதைக் காணும் திறனை மட்டும் பெறும். அப்படிப்பட்டது குறுகிய மனம். அதற்குக் கண்டதே காட்சி, கொண்டதே கோலம். தோள் கண்டார், தோளே கண்டார்என அடுத்ததைக் காணாது. பகுதியை முழுமையாகக் காணும். பகுதிகளின் தொகுப்பை வளர்க்கும். முழுமை, பூரணம், ஒருமை, அனந்தத்தின் அம்சம் அதற்கில்லை.

சம்பளக்காரனுக்கு லாபத்தில் பங்கில்லை. அவன் சம்பளக்காரனாகவே ஓய்வு பெறுவான். சொந்தமாகத் தொழில் செய்பவனுக்கு உயரும் வாய்ப்புண்டு. ஸ்தாபனத்துடன் இணைந்து இலட்சியமாக வேலை செய்பவன் எந்த வேலையானாலும், "இது எப்படி ஸ்தாபனத்தைப் பாதிக்கும்?” என்று நினைப்பான். சுயநலமி "இதில் எனக்கு என்ன இலாபம்?”எனக் கருதுவான். மனம் சிறியது, சுயநலமானது. சத்தியஜீவியம் பெரியது, பொதுவானது, தெய்வீகமானது.

பக்கம் 166 / பாரா 12

மனம் அனந்தத்தின் செயல். அது பிரிப்பதுடன், முடிவின்றிச் சேர்க்கிறது.

குழந்தையைத் தாயார் வளர்க்கிறாள். அவன் பெரியவனானபின் தாயாரை அவன் கவனிக்கிறான். தன்னை வளர்த்த தாயாரைத் தான் வளர்க்கிறான். கடமை மாறுகிறது. உறவு நீடிக்கிறது. அனந்தம் என்பது அந்தம்என்ற சொல்லுக்கு எதிரானது. அந்தம் என்றால் முடிவு. அனந்தம் எனில் முடிவில்லாதது. மனம் முடிவு இல்லாததின் செயல். அது பிரிக்க ஆரம்பிக்கிறது. அணுவானபின் பிரிக்க முடியாது. பிரிக்க முடியாவிட்டால் செயல் நிற்காது. ஏனெனில் அது அனந்தத்தின் செயல். பிரிப்பது முடிந்தாலும் செயல் நிற்கக்கூடாதுஎன்பதால், பிரிப்பது சேர்ப்பதாக மாறுகிறது. அணுக்கள் சேர்க்கப்பட்டு பொருள்களாகின்றன. அனந்தம் தன்னை அழியாமல் பாதுகாப்பதால் செயல் திசை மாறித் தொடர்கிறது. தாய்க்கும், மகனுக்கும் உள்ள தொடர்பு முடிவற்றது. ஆரம்பத்தில் தாய் குழந்தையைக் கவனிக்கிறாள். அவள் கடமை முடிந்துவிட்டபின் அவன் தாயைக் கவனிக்கிறான். தாய், சேய் உறவு அனந்தம்.

மனம் சிறுதுண்டுகளாக்குகிறது. துண்டு முழுமையானது. முழுமையின் அளவு குறைந்து கொண்டே போகிறது. அணுவாகி, அணுவின் மூலமாகின்றன. அவை மறையுமானால் மறையும். அணு மறைய முடியாது என்பதால், அது மறைவதில்லை. பிரிக்கும்செயல் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. முழுமைஎன்பது, அணு என்பது சக்தியின் செறிவுஎன்று அந்த ஞானம் கூறுகிறது. சக்தியின் செறிவு என்பது போல் ஒவ்வோர் அணுவும் ஜீவியத்தின் செறிவு, ஜீவனின் செறிவு. அணு பகுதி. அப்பகுதி முழுமை. இம்முழுமை ஜீவனின் தோற்றம். ஜீவன் அணுவை தன்னுடைய புறத் தோற்றமென அறியும். சேர்க்கையான பொருள்கள் கரைந்து சூன்யமாவது மனம் செய்வது. சத்தியஜீவியம் அதை ஞானத்தால் புரிந்து கொள்ளும். அணுஎன்ற ஜீவனின் தோற்றம் தோற்றத்தை இழந்து, மீண்டும் தன்னை வந்தடைந்ததாக சத்தியஜீவியம் அறியும். மனம் தரும் வாழ்வு பகுதியான தோற்றம். சத்தியஜீவியம் அறிவது கண்டமான அணு தோற்றத்தை இழந்து, அதன் ஆதியான விழிப்பான ஜீவனாக, சுயச்செறிவையடைகிறது. வழி எதுவானாலும் முடிவு ஒன்றே. ஜீவன் ஐக்கியமான நிலையான பிரம்மம். அதன் ஐக்கியம் அழியக்கூடியதன்று. வழி பிரிவினையானாலும், ஒன்று சேர்ப்பதானாலும், முடிவில் பகுதி முழுமையை அடைகிறது. முடிவை நிர்ணயிப்பது மூலம், செயலன்று. மனம் தன் செயலை இந்த ஞானத்திற்குட்படுத்திக் கொண்டால், நாம் பின்பற்றும் முறை - பிரிவு, சேர்ப்பது - அதன் உள்ளுறை சத்தியத்தை வெளிப்படுத்தும். வெளிப்படுத்துவதுடன் அம்முறையைப் புறக்கணிக்காது. உண்மையில் பிரிவினை என்பதேயில்லை. ஆயிரமாகப் பிரிந்து, அனந்தமாகப் பிரிந்து, ரூபத்தையேற்று, பிரிந்தவை தொடர்பு கொள்வது காலத்திலும், இடத்திலும் முழுமையான ஜீவன் லீலை செய்ய அவசியமானதுஎன நாம் அறியலாம். எவ்வளவு பிரிந்தாலும், எப்படிச் சேர்த்தாலும் புதியதான பொருளை அடைய முடியாது. அனைத்தும் ஆதிசக்தியின் ரூபங்களேயாகும். ஆதிசக்தியே சத்தியம். மற்றவையனைத்தும் தானே பெற்ற ரூபத்தின் லீலை. அவை அனைத்தும் சித்சக்தியின் அல்லது சக்தியின் ஜீவியத்தின் சுயரூபங்கள்.

ஒன்று பலவாகத் தோன்றுவதை வாழ்வில் நாம் ஆயிரமாயிரம் வகைகளாக அறிவோம். நாம் நின்று, நிதானித்து அவற்றின் தத்துவத்தை - தாத்பர்யத்தைக் - கருதி, ஆழ்ந்து உணர முயல்வதில்லை.

  • ஜீவன் பிரிந்து ஜீவாத்மாக்களாக ஆவது நடிகன் 40 பாத்திரமாக நடிப்பதுபோலாகும். பாத்திரம் பல ஆனாலும், நடிகன் நாமறிந்த ஒருவரேயாகும்.
  • மரம், செடி, கொடி, மனிதன், விலங்கு, பேனா, கத்தி என்பது போல ஆயிரமாயிரம் பொருள்களை நாம் காண்கிறோம். அனைத்தும் பூமாதேவியின் புதுமை. அவை அழிந்து மீண்டும் அவள் மடியில் புகலிடம் பெறுகின்றன. பொருள் மாறலாம், புவனம் மாறுவதில்லை.
  • ஆடு, புத்தகம், தயிர், சொல் போன்ற பல சொற்களை நாம் பேசுகிறோம். அவற்றுள் உள்ள எழுத்துகள் ஆ, டு, பு, த், த, க, ம், த, யி, ர், சொ, ல் என பல வகையானவை. சொற்கள் லட்சக்கணக்கானவை. ஆனால் அனைத்துச் சொற்களும் இப்பல்வேறு எழுத்துகள் பல வகைகளாகச் சேரும் புதுரூபங்களே. ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் எழுத்து என்பது ஒலி. பல எழுத்துகள் பல இலட்சம் சொற்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் கருத்து வேறுபடுவதால், உண்மை மாறுவதில்லை. உண்மை நாமறிந்த எழுத்துகளே. மேலும் நாம் அறிந்த ஒலிகளே. அதன் பின்போனால் ஒலியின் பின்னுள்ளது எண்ணம். மனம் அதற்கும் பின்னாலுள்ளது. விசாரம் தொடர்ந்தால் மனம், ஜீவியம், ஜீவன், பிரம்மம் என நாம் ஆதியை அடைவோம்.
    • தோற்ற மாற்றம் ஆதியின் ஒருமையைப் பாதிக்காது.
    • ஒருமையின் வெளிப்பாடு பன்மை.
    • ஒருமையுள்ளது, பன்மை தோற்றம்.
    • தோற்றம் வேறு, விஷயம் வேறன்று.
    மனம் சத்தியஜீவியத்தின் உபகருவி, உபசெயல். மனம் வேறு, சத்தியஜீவியம் வேறன்று.

பக்கம் 167 / பாரா 13

அவித்தைஎன்ற குறுகிய கருவி எங்கிருந்து வருகிறது? மனம் சத்தியஜீவியத்தினின்று எப்படி விலகியது? ஆரம்பத்தில் பிரிவினை எப்படி வந்தது? சத்தியஜீவியத்தின் எந்த அம்சம் எப்படி குதர்க்கமாகி இந்த நிலை உருவாயிற்று? ஜீவாத்மா தன் கோணத்தில் உலகைக் காண மற்றவற்றை விலக்கியதால் இந்த குதர்க்கம், அவித்யா எழுந்தது. தத்துவ பாஷையில் ஜீவியம் தன்னில் தன்னை இழந்ததால் இது ஏற்பட்டது. ஆத்மா காலத்திலும், இடத்திலும் ஒரு குறிப்பிட்ட செயலுடன் தன்னை இணைப்பதால் இது ஏற்பட்டது. அக்குறிப்பிட்ட செயல் ஆத்ம லீலையின் ஒரு பகுதி. மற்ற ஜீவன்கள் தானில்லை என ஜீவாத்மா புறக்கணிப்பதால் இது நடக்க முடிகிறது. பிறர் செயல் தன் செயல், பிறர் நிலை தன் நிலை, பிறர் ஜீவியம் தன் ஜீவியம்எனவும் அதுவே தன் செயலுக்கும், காலத்திற்கும் பொருந்தும்என்பதை புறக்கணிப்பதால் இது ஏற்பட்டது. இந்தநேரம், இந்தரூபம், இந்தசந்தர்ப்பம் முக்கியமாவதால் மற்ற அனைத்தையும் இழக்க வேண்டி வருகிறது. இழந்ததைப்பெற மனம் அவற்றுடன் தொடர்பு கொண்டு உறவாட வேண்டும். காலம் முழுமையானது என்ற எண்ணம் பலனற்றுப் போகிறது. சக்தியும், பொருளும் முழுமையானவைஎன்பதும் இல்லாமற் போகிறது. எல்லா மனமும் ஒரே மனம், எல்லோர் வாழ்வும் ஒரே வாழ்வு, எல்லா உடலும் ஒரே உடல் என்ற வெளிப்படையான உண்மை மறந்து போகிறது. உண்மையில் நிலையாகத் தோன்றும் இவையெல்லாம் சலனத்தின் புரட்சி, வேறொன்றுமில்லை. மனம் எதையும் தனித்துப் பார்க்கிறது. அதன் ரூபங்கள் இறுகிப்போயின. புற அம்சத்தால் அவை மாறாத, அசையாத ரூபமாகக் கருதுகிறது. அப்படியில்லை எனில், மனம் செயல்பட முடியாது. உண்மையில் அனைத்தும் ஆற்றோட்டமே, மாறி மாறிப் புதுப்பிக்கும் ஓட்டம். குறிப்பிட்ட ரூபமில்லை, மாறாத புற அம்சமில்லை.

நாம் ஆபீசில் வேலை செய்தால் நமக்குஎன மேஜை, ஒரு வேலை கொடுத்தால் செய்யலாம். ஆபீசிலுள்ள எந்த வேலையையும், எவரும், எப்பொழுதும் செய்யலாம் என்றால் குழப்பம் வரும், வேலை நடக்காது. எனக்கு ஒரு தனிஇடம் கொடுத்தால், அது என்னுடையது என்ற சொந்த உணர்வும், அதன் வழிப் போட்டியும், பொறாமையும், பிணக்கும் எழுகின்றன. தனிப்பட்ட வேலையானாலும், ஆபீஸ் வேலையானாலும் பொறுப்போடு வேலை செய்பவர் எந்த வேலை கொடுத்தாலும் போட்டியின்றி, கருத்தாக வேலை செய்து, ஆபீஸ் காரியத்தை முடிப்பார். பொதுவாக பிரிவதும், போட்டியிடுவதும் மனத்தின் செயல். எல்லாம் ஆபீஸ் வேலை, யார் செய்தாலும் சரிஎன்பது உயர்ந்த மனப்பான்மை.

நிலையான முழுஎண்ணம்என்பதே நிலையானது. அதற்கு ஒழுங்குமுறையுண்டு. ஓட்டத்தில் உறவுண்டு. மனம் பெற முயன்று தோற்பதை முழுஎண்ணம் இயல்பாகப் பெறும். மனம் இவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். மனம் இதையறியாது என்பதில்லை. இவை அதன் ஜீவியத்துள் மறைந்துள்ளன. அதன் ஜீவனின் இரகஸ்யத்தில் அது ஒளிந்துள்ளது. அது அறியாமையை ஏற்படுத்தி, ஒளி என்பதால் அது மனத்திற்கு ஒளியன்று, இருள். மனம் பிரிக்கும் செயலை ஏற்று, பிரிந்த மனமாயிற்று. தன் செயலில் தன்னை இழந்துவிட்டது, தன் படைப்பில் தன்னை இழந்துவிட்டது.

பக்கம் 168 / பாரா 14

இந்த அறியாமை மனிதன் தன் உடலுடன் ஐக்கியப்படுவதால் மேலும் இருளடைகிறது.

திருமணமானவுடன் தானும் தன் மனைவியும் வேறு, குடும்பம் வேறு என நினைப்பது தவற்றுக்கு ஆரம்பம். தன்னைக் குடும்பத்தைவிட முக்கியம்எனக் கருதுவதால் பிரிவினை ஏற்படுகிறது. நாளடைவில் அது வளர்ந்து தன் குடும்பத்தைவிட - தானும், மனைவியுமான குடும்பம் - தான் முக்கியம் எனக் கருதினால் சம்பளத்தில் பெரும்பகுதியைத் தனக்குச் செலவு செய்துவிட்டுச் சிறுபகுதியை மனைவி, மக்களுக்குக் கொடுப்பான். சீட்டாட ஆரம்பித்தால், சீட்டு முக்கியமானால், முழுச்செலவும் சீட்டில் போகும். கடன் வாங்கிச் சீட்டாடுவான். குடும்பம் அழியும், தானும் அழிவான். அவன் வாழ்வு இருளால் கவ்வப்படும்.

  • மனம், மனமாகச் செயல்பட வேண்டியது முதலில் தன்னைத் தன் செயல் இழக்கிறது. ஒரு வேலை செய்யும்பொழுது நாம் வேலையில் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம். இது முதல் தவறு.
  • வேலையில் தன்னை இழந்தவன், அடுத்தாற்போல், அதேபோல் மனத்தில் தன்னை இழந்துவிடுகிறான். சிந்தனையில் ஆழ்ந்தவர் உலகை மறப்பார்.
  • அடுத்த நிலையில் சிந்தனையில் உணர்வில் தன்னை இழப்பது வழக்கம். அப்படிப்பட்டவருக்குப் பார்ப்பனவெல்லாம் தன் ஆசையெனத் தெரியும். தாசி வீட்டிற்குப் போகின்றவர் மனைவியைத் தாசி பேர் சொல்லி அழைப்பார்.
  • முடிவான நிலையில் மனம் உடலோடு ஐக்கியப்பட்டு, தன்னை அதில் இழக்கும். அது மெய்மறந்த நிலை. தவசி இறைவனை நாடி, நிஷ்டையில் புலன் அவிந்து, சிந்தனையை இழந்து, மௌனத்தை எய்தி, முடிவாகச் சமாதியை அடைகிறார். உடலின் மீது ஊறும் எறும்பு, ஈ அவர் அறிவதில்லை. மனம் உலகினின்று பிரிந்து பகுதியில் தன்னை மறப்பதை நாம் தவசியின் நிஷ்டையில் காண்கிறோம்.

நமக்கு நம் மனத்தை உடல் நிர்ணயிப்பதாகத் தோன்றுகிறது. மனம் உடலை நினைத்துக் கொண்டிருக்கிறது. உடலின் தேவைகளே மனத்திற்குப் பிரதானம். உடன் செயல்களும், உணர்வுகளும், தேவைகளும் மனத்தை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால், மனம் உடலால் தான் நிர்ணயிக்கப்படுவதாக நினைக்கிறது. நரம்பும், மூளையும் மனம் தனக்காக உற்பத்தி செய்தது, உடலை வளர்க்க மனம் கடைப்பிடித்த உபாயம். தற்சமயம் அவற்றின் செயல்களில் மனம் தன்னை மறந்துவிட்டது. மனம் உடலின்றி செயல்படவல்லது. அதை இப்பொழுது இழந்துவிட்டது. உடல் மனத்தை ஆக்கிரமிப்பது ஆழ்மனச் செயல்.

மேலே ஈ உட்கார்ந்தால், நம்மையறியாமல் கை ஈயை ஓட்டுவது மனம் அறியாத ஆழ்மனச் செயல். நடப்பது, உண்பது, உண்பது ஜீரணமாவது, மூச்சு விடுவது போன்ற எல்லா முக்கியச் செயல்களையும் ஆழ்மனம் செய்கிறது.

இருந்தால் உயிருக்கு மனம் உண்டு, உயிருக்கு ஜீவன் உண்டு என நாம் சிந்திக்கலாம். அவற்றிற்கு உடல் தங்களை மறக்கும் பரிணாம அவசியமில்லை. அவை ஒரு பிறவியுடன் முடிவதில்லை. உடலெனும் அச்சில் மனம் வார்த்தெடுத்த சிலை நம் உடல். அதனால் உடல் மனம் வழி சிந்திப்பது மனத்தின் ஜீவனாகாது. அது மேல்மனம். அதற்கு உடலின் அனுபவம் மட்டுமே தெரியும்.

ஓர் ஆர்டரை டைப் செய்யும் டைப்பிஸ்டுக்கு ஏன் அந்த ஆர்டர் போடுகிறார்கள், எப்படி அம்முடிவு வந்ததுஎன்பவை தெரியாது. அவர் செய்வது ஆர்டரை டைப் பண்ணுவது. அதுபோல் மேல்மனம் உள் விவரம் அறியாது.

அதன்பின் உடலின் வாழ்விலும் அடிமனம், ஆழ்மனத்தில் தன்னையறியும் மனம் உண்டு. அது உடலைக் கடந்தது. அதன் செயல் உடலுக்குக் கட்டுப்பட்டதில்லை. மேல்மனம் வேகமாக, தீவிரமாக, ஆழ்ந்து, அகன்று செயல்படும்நேரம் மனத்தின் இந்த உயர்ந்த பகுதியே செயல்படுகிறது. நாம் அதை அறிவது முதல்சித்தி. அதன் சாயல் நம்மீது படுவது முதல்சித்திஎனலாம். அதுவே நம் உள்ளேயுள்ள ஜீவன், ஆத்மா, புருஷா. இதைப் பிராணமயப் புருஷன் எனக் கூறுவர்.

பக்கம் 169 / பாரா 15

பிராணமயப் புருஷன் உயிரின் மனம். உடலின் தவற்றிலிருந்து இது நம்மை விடுவிக்கும். எனினும் மனத்தின் குறையிலிருந்து இதனால் முழுமையாக விடுவிக்க முடியாது. ஆரம்ப அறியாமை இன்னும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தும். ஜீவாத்மா அனைத்தையும் தன் நோக்கில் காண்பதே ஆரம்ப அறியாமை. அது சத்தியத்தை வெளியிலிருந்து உணர்த்தும். அல்லது தன் கால, இட சந்தர்ப்பங்களிலிருந்து எழுந்து சத்தியத்தைக் கண்ணுறும். இது பழைய ரூபம், பலன், இன்றைய அனுபவங்களால் பாதிக்கப்படும். பிற ஜீவாத்மாக்களை அது அறியாது. எண்ணம், சொல், செயல், பயன், சூட்சும அடையாளம்போன்ற புறச் செயல்களால் மட்டுமே அதை அறிய முடியும். (இவை நமக்கு, நம் உடலுக்கு, நேரடியாகப் புலப்படாதவை). இவை நம் புலன்களைத் தொட்டுணர்த்தும். அதேபோல் இவற்றின் பலனையும் அதனால் அறிய முடியாது. ஏனெனில் அது தன்னைக் காலத்தின் மூலம் மட்டுமே அறியும். பல ஜன்மங்களிலெடுத்த பல உடல்களின் அனுபவத்தால் மட்டும் அறியவல்லது. நம் உடலின் மனத்திற்கு உடலே பிரதானம். அதே போல் தீவிரமான நம் ஆழ்மனத்திற்கு உயிரே பிரதானம். அதனுள் அது கிரகிக்கப்பட்டு செறிந்துள்ளது. அதனால் அது வரையறுக்கப் பட்டது. அத்துடன் தன் ஜீவனை அது இரண்டறக் கலந்து இணைகிறது. இங்கு மனமும் சத்தியஜீவியமும் சந்திக்குமிடத்திற்கு நாம் செல்ல முடிவதில்லை. அதுவே அவை முதலில் பிரிந்த இடம்.

பக்கம் 169 / பாரா 16

பிராணமயப் புருஷன் பிராணனில் தன்னை இழக்காது. அதற்குச் சொந்தத் திறனுண்டு. தனக்கே சொந்தமாகச் செயல்பட முனைந்து தான் காணும் ஞானத்தின் பிரதிபலிப்பாக அது செயல்பட வல்லது. அதன்பின் தூய்மையான ஞானமுள்ள மனம் உண்டு. அதன் பெயர் மனோமயப் புருஷன். அதுவே ஞானி. அதற்கு மனம்என்றால் என்ன என்று தெரியும். உலகை உடல் மூலமோ, உயிர் மூலமோ காணாமல், அதனால் மனத்தின் மூலம் காண முடியும். நாம் அதையடையும்பொழுது அதை நம் ஜீவாத்மாஎனத் தவறாகக் கருதுகிறோம். இது உயர்ந்த மனம். அடுத்த ஆத்மாக்களை அதனால் பிரம்மத்தின் ரூபங்களாகக் கருத முடியும். உடல் உணர்வு, உணர்வால் பாதிக்கப்படாமல் செய்திகளை மனத்தால் ஏற்க அதனால் முடியும். ஐக்கியத்தை மனோமயப் புருஷன் மனம் புரியும் வகையில் உருவகப்படுத்துகிறது. பிறர் மனத்திலும், வாழ்விலும் அதனால் நேரடியாகப் பங்குகொண்டு செயல்பட முடியும். (நம் அன்றாட வாழ்வில் நாம் மறைமுகமாக அது போல் செயல்படுகிறோம்). இந்தத் தூய மனமும் ஆரம்பக் குறையற்றதன்று. தன்னைத் தனித்த மனமாகக் கருதி, விஷயங்களைத் தீர்மானிக்கிறது. தன்னையே உலகின் மையமாகக் கொள்கிறது. அதன் மூலம் அது உயர்ந்த பிரம்மத்தையும், சத்தியத்தையும் அடைய முயல்கிறது. பிறர், அதற்குப்பிறரே. அனைவரும் தன்னைச் சூழ்ந்தவராகக் கருதும். விடுதலையடைய அது உடல், உயிரிலிருந்து விடுபட்டு, மனத்திலிருந்தும் விடுபட்டு ஐக்கியத்துள் மறைகிறது. அங்கும் அஞ்ஞானத்திரையுள்ளது. அது மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடைப்பட்டது. சத்தியம் அதைக் கடப்பதில்லை. சத்தியத்திருக்காமல் திரையைக் கடந்து வரும்.

பக்கம் 170 / பாரா 17

திரையைக் கிழித்து, பிரிக்கும் மனத்தை அடக்கியபின்னரே மௌனமான, அமைதியுள்ள சத்தியஜீவியச் செயல் வெளிப்படும். மனம் சத்தியத்தை மீண்டும் அடையும். அங்கு ஜோதிமயமான சிந்தனையாளன் தெய்வீக சத்தியத்திற்குக் கீழ்ப்படியும் கருவியாக அமையும். உலகம் என்பது உண்மையில் என்னஎன்பது அங்குத் தெரியும். நாம் முழுவதும் நம்மையறிவோம், பிறரையறிவோம், பிறரில் நம்மை அறிவோம். அனைத்தும் பிரபஞ்ச ஜீவனாக, ஒருமையின் பன்மையாக அறிவோம். நாம் வேறுஎன்ற கருத்து எல்லாத் தவற்றையும் ஏற்படுத்துவது. நாம் அதையிழந்து விடுகிறோம். அறியாமை உண்மையெனக் கொண்டதெல்லாம் உண்மையென அறிவோம். அதைச் சிதைந்த உண்மை, தவறாகப் புரிந்துகொண்ட உண்மை, பொய்யாக நினைத்தவையென அறிகிறோம். நாம் பிரிவினையைக் காண்கிறோம், ஜீவாத்மா பிரிந்து நிற்பதையறிகிறோம். என்றாலும், அவையென்ன, நாம் யார்என்பதை நாம் அறிவோம். அணுவாகப் பிரிந்ததையும் அறிவோம். நாமும், அவையும் யார்என்பதை அறிவோம். எனவே மனம் சத்தியம் - ஜீவியத்திற்கு உபகருவிஎன அறிவோம். மனத்திற்குச் சுய அனுபவம் உண்டு. தன் சுய அனுபவத்தில் அதன் தாயகத்தை விட்டுப் பிரிக்காவிட்டால், தனக்கென மனம் ஒரு வீடு அமைக்காவிட்டால், மௌனமானக் கருவியாகமட்டும் செயல்பட்டால், தன் ஆதாயத்திற்காகக் கிடைப்பதைச் சொந்தமாக்கிக் கொள்ள முயலாவிட்டால், மனம் தன் கடமையை ஒளிமயமாகப் பூர்த்தி செய்யும். மனத்திற்கு அளித்த கடமை தோற்றங்களைப் பிரித்து, பொதுவான பின்னணியில் அவை கலந்து குழப்பமடையாமல் இருக்க உதவுவது. அக்கடமையை மனம் சிறப்பாகச் செய்யும்.

கல்லூரியில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் பாடம் படித்தால் அவர்களுக்குப் பல ஆசிரியர்கள் பல பாடம் நடத்துவார்கள். எந்த மாணவனும் ஓர் ஆசிரியருடைய சொந்த சொத்தல்லன். தன் மாணவன் அடுத்த ஆசிரியரிடம் நெருங்கிப் பழகினால் பொறாமைப்படும் ஆசிரியருண்டு. நாம் பல கடைகளில் பல பொருள்களை வாங்குகிறோம். கடைக்காரனுக்கு நாம் சொந்த உடமை இல்லை. "ஏன் அடுத்த கடைக்குப் போனாய்?” என சண்டைக்கு வருபவர் உண்டு. டாக்டர், வக்கீல், நண்பர்கள், உறவினர்களுடன் இந்த இல்லாத உரிமை பொறாமையை எழுப்பி வேலையைக் கெடுக்கும்.

  • கடமைகள் பிரியாமல் வேலை நடக்காது. அதற்காக ஏற்பட்டது மனம். கடமைகளைப் பிரிக்க ஏற்பட்ட மனம் மனிதர்களைப் பிரிக்க முயல்வது பிணக்கு ஏற்பட வழி.
  • பிள்ளைகளை அடுத்தவரிடம் பழக அனுமதிக்காத பெற்றோருண்டு.

மனம் சத்தியத்தை ஏற்று, பரமனின் பார்வைக்கேற்ப விநியோகம் செய்வது கடமை. ஜீவியம், ஆனந்தம், சக்தி, பொருட்கட்குத் தனித்தன்மையுண்டு. அவற்றிற்குரிய சக்தி, சத்தியம், ஆனந்தம் அவற்றின் பொதுத்தன்மையிலிருந்து எழுகிறது. ஒருமையில் பன்மையை பன்மையாகப் பிரித்து, ஒன்று மற்றதைச் சந்தித்து சந்தோஷம்பெற உதவுவது மனத்தின் கடமை.

மொழி பொது. ஆனால் நாம் பேசுவது பிறர் பேசுவதிலிருந்து மாறுபட்டது. குரல் பொது. ஆனால் ஒவ்வொருவருக்கும் குரல் தனி. எல்லோர் குரலும் ஒரே மாதியாக இருந்தால் பேச்சு புரியாது. ருசி பொது. பழம், பால், தேன், அரிசி, சர்க்கரைக்கு ருசி வெவ்வேறு. மாறுபடும் ருசியை ரசிப்பது லீலை. நம் வாழ்வில் தோற்றம், ஜாடை, பார்வை, குரல், குணம், உடை, நடை, பாவனை ஆகிய அனைத்தும் ஒவ்வொருவருக்கும் மாறுவதால் வாழ்வு ருசிக்கிறது. அது லீலை. சர்க்கரையின் இனிப்பைப் பான் ருசியிலிருந்து பிரித்துக் காட்டுவது மனம். மனம்என்பது இல்லையெனில் சர்க்கரையும், பாலும் ஒரே ருசியாக இருக்கும். வாழ்வு சப்பென இருக்கும். எல்லாச் சொற்களுக்கும் ஒரே பொருளானால் நம் கருத்தைப் பிறருக்குக் கூற முடியாது.

  • அம்சத்தைப் பிரிக்க ஏற்பட்ட மனம் அங்கத்தைப் பிரித்து, சொந்தம் கொண்டாடி, வாழ்வில் அறியாமையால் பிணக்கை ஏற்படுத்துகிறது.
  • சர்க்கரை எனக்கு, வீட்டில் என்னைத் தவிர யாரும் சர்க்கரை சாப்பிடக் கூடாதுஎன ஒருவர் கூறுவது இல்லாத சண்டையை வளர்ப்பதாகும். மனம் அதுபோல் கட்சி கட்டுகிறது. நீ எனக்கு நண்பனானால் வேறு யாரிடமும் பேசக்கூடாதுஎன்பவர் அதைச் செய்கிறார்.
  • தோற்றப் பிரிவால் வாழ்வின் இனிமையை உயர்த்த ஏற்பட்ட மனம் கிடைத்ததை தனக்கே உரிமை கொண்டாடும் பழக்கத்தால் இனிமையைக் கடுமையாக்குகிறது.

 நிலையான ஐக்கியம் கலந்து வரும்பொழுது ஏற்படும் ஆனந்தம் வாழ்வின் ஆனந்தம். அங்கு பிரித்து, இணைவதால் ஏற்படும் இன்பத்திற்காக ஏற்படுத்தப்பட்டது மனம். பரமாத்மா ஜீவாத்மாவாக இதர ஜீவாத்மாக்களுடன் பழகுவதை மனம் ஏற்படுத்த வேண்டும். தன் ஐக்கியத்தை இழக்காமல் இதர ஜீவாத்மாக்களுடன் அவர்போல நடக்கும் திறமை பரமாத்மாவுக்குண்டு. அதுவே உலகம்.

தலைவர் தலைமையை இழக்காமல் ஒவ்வொரு தொண்டருடனும் தொண்டராகப் பழகும்தன்மை மனம் கொடுத்த பரிசு. அது தொண்டருள் அதிக ஒற்றுமையை ஏற்படுத்தும். தொண்டர் கட்சி கட்டுவது விலகும்.

பிரக்ஞாவின் செயல் முடியுமிடம் மனம். இதனால் உறவு வளர்ந்து சிறக்கும். அறியாமைஎன நாம் அறிவது புதியதாக எதையும் ஏற்படுத்தவில்லை. முழுப்பொய்யை உற்பத்தி செய்யவில்லை. மெய்யை நமக்குத் தவறாகக் காட்டுகிறது. ஞானத்திற்கு ஆரம்பம் உண்டு. அத்தொடர்பை விலக்குவது அறியாமை. அது எதிரிஎன்ற தோற்றத்தையும், பிணக்கையும் பிரபஞ்ச லீலையில் புகுத்துவது அறியாமை.

ஆபீஸ், வீடு, ஸ்தாபனங்களில் அனைவரும் உள்ள கடமைகளைப் பிரித்துச் செய்யும்பொழுது ஒற்றுமை துலங்கும். பொறாமை இருளை வளர்க்கும். கடமைகளைப் பிரிக்க ஏற்பட்ட மனம் மனிதர்களைப் பிரிப்பது அறியாமை.

பக்கம் 171 / பாரா 18

மனம் தன் சுய ஞானத்திலிருந்து விலகியது மனத்தின் அடிப்படையான தவறு. ஜீவாத்மா உண்மையில் பிரபஞ்சத்தின் ஒரு மையம். ஒரு செறிந்த மையம். அது ஒருமையின் ஒரு ரூபம். அதற்குப் பதிலாக ஜீவாத்மா தன்னை தனித்த விஷயமாகக் கருதுவது, அதன் அடிப்படையில் தன்னையே தன் லோகத்தின் மையமாகக் கருதுவது தவறு. இதுவே தவற்றுக்கு ஆரம்பம். அதிலிருந்து எல்லா அறியாமைகளும், இதரச் சிறுமைகளும் பலனாக வருகின்றன. வாழ்வுஎன்பது ஆற்றோட்டம். தன்னுள் அது ஓடுவதைமட்டும் மனம் அறிகிறது. அதனால் ஜீவனுக்கு அளவேற்படுகிறது. அதனினின்று ஜீவியத்திற்கு எல்லை ஏற்படுகிறது. அதன்மூலம் அறிவுக்கும், செயலுக்கும், திறனுக்கும், சுய அனுபவத்திற்கும், ஆனந்தத்திற்கும் அளவு, லிமிட் ஏற்படுகிறது. பொருள்களையும், நிகழ்ச்சிகளையும் தான் கண்டவாறு காண்பதால், மனம் இதர விஷயங்களையறிய முடிவதில்லை. அதனால் தனக்குத் தெரிந்தவற்றையும் மனத்தால் அறிய முடியவில்லை. எல்லா ஜீவன்களும் ஒன்றையொன்று நம்பியுள்ளது. அதனால் முழுமையை அறிவது உண்மையை அறிய உதவும். சாரத்தையறிவதும் உண்மையை அறிய உதவும். அதேபோல் நம் மன உறுதி, இறைவனின் திருவுள்ளத்தை அறியவில்லைஎன்பதால் தவறாகச் செயல்படுகிறது. இயலாமை, முடியாமை ஓரளவில் எழுகிறது. நம் ஆத்மாவின் சுய ஆனந்தம், பொருள்களை அனுபவிப்பது, இறைவனின் ஆனந்தத்திலிருந்து பிரிவதால், செயலாலும், அறிவாலும் குறையேற்பட்டு உலகையாளும் திறனை இழக்கிறது. கண்டதைச் சொந்தமாகப்பெற முயன்று, பெற்றதைச் சுயநலமாக அனுபவிக்க முயல்வதால் வேதனை எழுகிறது. தன்னையறியாதது எல்லா குதர்க்கத்திற்கும் அடிப்படை. அது அகந்தையால் ஆதரிக்கப்பட்டு வலுவடைகிறது.

பக்கம் 172 / பாரா 19

இருப்பினும் எல்லா அறியாமையும், குதர்க்கமும் சத்தியம் சிதைவதால் ஏற்படுவதே தவிர பொய்மையின் முழுமையால் ஏற்படவில்லை. அவித்யாயம் அந்த்தரே, மனம் பொருள்களைப் பிரித்துப் பார்ப்பதால் ஏற்படும் பலன் இது. சச்சிதானந்த சத்தியம் லீலையில் தோற்றமாக மாறுவதால் பிரிவினை கருவியாகிறதுஎன்பதை மறந்துவிடுகிறோம். தானிழந்த சத்தியத்தின் எல்லையை மனம் மீண்டும் அடைந்தால் அது பிரக்ஞாவின் செயலில் முடிவையடையும். அப்படி ஏற்படும் தொடர்பான உறவுகள் ஒளிமயமான திறனுடையதாக இருக்கும், குதர்க்கமானதாக இருக்காது. அது நேரானது, வேதம் கூறும் கோணலன்று. சத்தியம் என்பது இறைவன் தன் ஜீவியத்தில் சுமுகமாகச் செயலாகவும், ஆனந்தமாகவும் அசைவது. தற்சமயம் நாம் காண்பது மனம் முன்னும் பின்னுமாகச் செல்லும் அசைவுகள் வளைந்து உடைந்தவை. இவை தன்னை மறந்த ஆத்மாவின் நெளிவு சுளிவுகள். ஆத்மா தன்னையறிந்து, தன் தவறுகளினின்று விலகுவது சத்தியம். நாம் சரி, தவறுஎனக் கொள்பவை சத்தியத்திற்கு அளவிட்டு, சிதற அடிக்கிறது. இவை மாறினால் இயலாமை வமையாகும், வேதனை இன்பமாகும். உணர்ச்சி தன்னையறியும் போராட்டம் வேதனையை எழுப்புகிறது. மரணம் மரணமிலா வாழ்வாக மாறும். அப்பொழுது நம் வாழ்வும், மரணமும் மீண்டும் சத்தியத்தையடையும் முயற்சியாகும்.

159/1 : பூவுலகில் தெய்வீக வாழ்வு சாத்தியமா என்ற ஐயம் எழுகிறது.

159/2 : நம்மை உயர்த்த வேண்டும் அல்லது நம் வாழ்வுடன் பெரியதைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

160/3 : மனம், உயிர், உடல் ஆகியவை அறியாமையால் அவற்றின் மூல சத்தியத்தினின்று பிரிக்கப்பட்டன.

161/5 : இலட்சிய மனம் மேலுலகில் உள்ளது. இல்லாவிட்டால் நாம் அதை உற்பத்தி செய்வோம்.

161/5 : மனம் பகுதியை அறியும். அனந்தத்தை அறிய மனம் மேலே செல்ல வேண்டும்.

162/4 : அகத்திற்குரிய வெற்றியைப் பெற்றவர் அதிகம். புறம் வெல்லப்படவில்லை.

163/7 : மனம் உபஉபாயம். இது தெய்வீகமனம். இனி தனிப்பட்ட உபாயமன்று.

164/8 : பிரக்ஞா புருஷப் பிரகிருதியைப் பிரிக்கிறது.

165/9 : புருஷன் ஒவ்வோர் ஆத்மாவிலும் தன்னைக் கண்டு, தன் ஐக்கியத்தை இழக்க மறுக்கிறான்.

165/10 : மனம் துண்டாடுவது தொடர்ந்தாலும், மனம் தன் அடிப்படையான ஐக்கியத்தை இழப்பதில்லை.

166/11 : மனம் தன்னை தன் வேலையிழப்பதால், அவித்தை உற்பத்தி ஆகிறது.

166/12 : துண்டாடுவது சூன்யத்தில் முடிகிறது. அது சத்தியஜீவிய நிலை.

167/13 : தன்னை மறந்து தன்னுடனும், வாழ்வுடனும் ஐக்கியமாவதால் அவித்தை உண்டாகிறது.

168/14 : உடலோடு ஐக்கியமாவதால் அஞ்ஞானம் ஆழ்ந்து வளர்கிறது. அதிலிருந்து விடுதலை பெற்றால் பிராணமயப் புருஷன் வெளிவரும்.

169/15 : பிராணமயப் புருஷன் நம்மை மனமும் சத்தியஜீவியமும் சந்திக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லாது.

169/16 : அதற்கடுத்தாற் போலுள்ளது மனோமயப் புருஷன். அது நம் ஆத்மா இல்லை. மனம் செய்யும் தவற்றை அதுவும் செய்யும். சத்தியஜீவியத்திற்கும் மனத்திற்கும் இடையேயுள்ள திரையை அதனால் கிழிக்க முடியாது.

170/17 : திரையைக் கிழித்து, அறிவை விட்டகன்று, சத்தியத்தைக் காணலாம்.

171/18 : சுய ஞானத்திலிருந்து நகர்ந்தால் சுய அறியாமை எழும். அதுவே குதர்க்கத்தின் வேர்.

172/19 : அறியாமை மனத்தைச் சிதறடிப்பதால் மனம் கோணலாகிறது - அது வேதம் கூறியது.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சத்தியம் (existence) விளக்கம் பெற்றால் (when comprehends) ஜீவனுள்ள எண்ணம் (Real Idea) தோன்றும். இவ்விளக்கத்தை நாடாவிட்டால் உணர்வு ஆனந்தமாக நின்றுவிடும். தன்னறிவு (self-awareness) ஜீவியமாகவே இருக்கும்.
 
தன்னையறிந்த ஜீவியத்தை விளக்கம்
ஜீவனுள்ள எண்ணமாக மாற்றுகிறது.
தன்னையறிந்தவன் சிருஷ்டிக்கர்த்தா.

*****



book | by Dr. Radut