Skip to Content

09. சாவித்ரி

P. 15. Even his godlike strength to rise must fall
தெய்வ வலிமையும் பாய்வதற்கு பதுங்க வேண்டும்

இயற்கையின் முரண்பாடு, இறைவனுக்கு உடன்பாடு. இதயத்தின் பிணக்கு சிந்தனைக்கு அழைப்பு என்ற கருத்துகள் Life Divine முதல் அத்தியாயத்திற்குரியவை. ஸ்ரீ அரவிந்தத்தைச் சுருக்கமாகச் சொல்ல முடியும். நாம் வாழும் உலகம் சிருஷ்டி எனப்படும். இது காலத்தில் செயல்படுவது -  Becoming என்பது. மேல் உலகம் காலத்தைக் கடந்தது. சிருஷ்டியில் வாழ்பவன் மனிதன். சிருஷ்டியைக் கடந்த நிலை காலத்தைக் கடந்த நிலை. அங்கு உறைவது புருஷன், Being. இதுவரை யோகம் என்பது உலகத்தைவிட்டு மோட்சத்திற்குப் போவது. From Becoming to Being. ஸ்ரீ அரவிந்தம் சிருஷ்டியைப் பகுதியாகவும், புருஷனைப் பகுதியாகவும் காண்கிறது. சிருஷ்டியும், புருஷனும் சேர்ந்தது முழுமை. அந்த முழுமையின் மையம் சிருஷ்டியில் உள்ள புருஷனில் (Being of the Becoming) உள்ளது. அதுவே சைத்தியப் புருஷன். மேற்சொன்ன வரி தெய்வமும் பகுதி, பாய்வதற்குப் பதுங்கவேண்டும் என்கிறது. முழுமைக்கு அது தேவையில்லை. பிரம்மமில்லாமல் எதுவுமில்லை, சர்வம் பிரம்மம்.

 

 புருஷன் --> சுவர்க்கம்
 --------------
 சிருஷ்டி --> பூவுலகம்

 

சிருஷ்டிக்கும் வித்து பிரம்மம். அப்பிரம்மம் முழுமையானது. மனிதன் புருஷனைத் தேடுவதற்குப் பதிலாக, சிருஷ்டியிலுள்ள புருஷனை - சைத்தியப் புருஷனைத் தேடினால் வாழ்வு தெய்வீக வாழ்வாகும். யோக வாழ்வில் ஆரம்பித்துத் தெய்வீக வாழ்வில் பூரணயோகம் முடிகிறது. நம் பூவுலகம் வாழ்வும், தெய்வத்தின் வாழ்வும் பகுதி என்பதே ஸ்ரீ அரவிந்தம்.

இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்:

  • ஆன்மா அதன் ஆதியை தனியே சென்றடையும்.
  • பிரம்மாண்டமான சக்தி பின்னே போய் நின்றது.
  • அணுவில் உறையும் அனந்தனின் தழல்.
  • எல்லாம் வல்ல சூட்சுமக் குரு.
  • இரண்டு இரட்டைகள் உருண்டு தேறிய ஒருமை.
  • உருண்டு வந்த உச்சியைத் தாண்டும் குதிப்பு.
  • உயர்ந்த நிலைக்குரிய உன்னத நிதானம்.
  • புவியும் சுவர்க்கமும் ஆடும் ஊசல்.
  • வளர்பிறைபோல் வளரும் ஆன்ம வளம்.
  • பின்னத்தின் முழுமை பின்னணியில் தெரியும் ஆத்மா.
  • பிரம்மத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் சந்திப்பு.
  • அனைவர் முகத்திலும் பொலியும் அவனுருவம்.
  • காலத்தினுள் காலத்தைக் கடந்த கல்பம்.
  • ஊனக் கண்ணுக்கு உயிரும் உயர்வும் தரும் உன்னதம்.
  • கர்மத்தின் வலிமையும் அருளின் சக்தியும் இணையும் இடம்.

***

 



book | by Dr. Radut