Skip to Content

அன்பர் கடிதம்

கடந்த 1998-ஆம் வருடம் பாண்டிச்சேரி சென்று வந்த உறவினர் ஒருவர் அன்னை பெருமையை என் மாமியாருக்குச் சொல்ல அவரும் ஒரு படம் வாங்கி வைத்து, தினமும் வணங்கி வந்தார். கூட்டுக் குடும்பத்திலுள்ள எங்களுக்கு அந்த வணங்குதல் என்ற விஷயம் மட்டுமே அறிந்திருந்த நேரத்தில் எனக்கு ஒரு மனக்கஷ்டம் வந்தது. தெளிவான முடிவு எடுக்க இயலாத நிலைமையில் என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஸ்ரீ அன்னை படத்திற்கு முன் நின்று "நீதான் நல்லதொரு பதிலைக் கூறவேண்டும்" எனப் பிரார்த்தனை செய்துவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன். முடிவு தானாகவே அமைந்தது. ஒரு வாரம் கழித்து ஸ்ரீ அரவிந்தரின் படம் (Aug 15th) மற்றும் blessing packet-உம் வேறொருவர் பெயரில் என்னுடைய அட்ரஸ் போட்டு வந்தது. பாண்டிச்சேரி என்று போட்டிருந்ததால் பெயர் மாறியிருந்தது கூடத் தெரியாமல் பிரித்து விட்டேன். புளகாங்கிதம் அடைந்தேன். ஆனால், பெயர் யாருடையதோ என்பதால் குற்றவுணர்ச்சி மேலிட ஊர் முழுவதும் இதே மாதிரி தெருவில் (2 தெரு உண்டு) postman-ஐ விட்டே தேடச் சொல்லியதில் அப்படி யாருமே இல்லை என்று அறிய வந்ததில் சொல்லவொணா மகிழ்ச்சி அடைந்தேன். இருப்பினும் தொடர்ந்து இருமாதங்களுக்கு அன்னையிடம் தொடர்பில்லை.

மூன்றாவது மாதம், எங்கள் ஓர்ப்படிக்கு மூன்றுவிதமான ப்ராப்ளம் உடம்பில் எழ அதாவது uterus remove செய்தாகிவிட்டது. அதைப் பிரித்துத் தைக்கையில் mesh வைத்து தைக்காததால் தையல் பிரிந்துவிட்டது. அதேசமயம் கால் ப்ளேடரில் gall bladder கற்கள் ஃபார்ம் ஆகியிருந்தது தெரியவந்தது. முழுவதுமாகக் கிழித்தால் உடம்பு தேறாது. தையலைக் கிழித்துத் தைத்துவிட்டு stones-ஐ லேப்பிராஸ்கோப்பி மூலம் எடுக்கவேண்டும். கையில் 1 1/2 வயது குழந்தை வேறு. இதை சக்ஸஸ்புல்லாகச் செய்ய எந்த டாக்டர் இருக்கிறார் என்ற ஆராய்ச்சியில் கோயம்புத்தூரில் மருத்துவர் கிடைத்து ஆப்பரேஷனுக்கு சென்று விட்டனர். இங்கேயே இருந்து நாங்கள் அன்னைக்கு வழிபாடு செய்ய செய்ய ஸ்ரீ அன்னை குன்னத்தூரிலிருந்து என் மைத்துனரின் கனவில் வந்து அவர் கையைப் பிடித்து மேல்மாடிக்கு அழைத்துச் செல்வதாகப் போனில் சொல்ல அதுவே நல்ல முடிவைத் தெரிவித்தது. ஆபரேஷன் நல்லபடியாய் முடிந்து எந்தவிதமான பிரச்சினையுமின்றிச் சுகமாக இருக்கிறார். எல்லாம் அன்னையின் அருளே.

அடுத்து என் நாத்தனார் கணவர் சென்ற வருடம் மூளையில் கட்டி ஏற்பட்டு (Brain tumour) அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். சென்னையிலிருந்த அன்னை அன்பர்கள் என் நாத்தனாருக்காகப் பிரார்த்தனை செய்ததில் அவரும் அன்னை devotee ஆனதுடன் மாதா மாதம் போபாலிலிருந்து அன்னைக்குக் காணிக்கை அனுப்பி வருகிறார். இதற்கிடையில் சர்ஸ் ''99 இல் அவருக்கு கொடுத்து வந்த கீமோதெரபியின் மூலம் எரித்தவை (கட்டியை எரிக்க பயன்படும் கதிர்கள்) பண்டலாக மூளையின் நரம்பில் உட்கார அதனால் அவருடைய செயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, தூக்கம், தூக்கம், தூக்கம்தான். ஒருசமயம் அவர் உயிரே பிழைக்கமாட்டார் என்று கைவிட்ட நிலையில் அன்னையே நம்பிக்கை அளித்து வருகிறார். வேண்டிவேண்டி ஹீமோகுளோபின் மிகவும் குறைந்த நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்ததுடன் நன்கு தேறி வருகிறார். இதற்கிடையில் 24ஆம் தேதி (பிப்ரவரி) ஊருக்கு டிக்கட் வாங்கி உள்ளோம். ஆனால், அவருடைய health மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அன்னையின் பிறந்த நாளில் யாரோ தெரிந்தவர் இந்தப் பூவை எடுத்துப்போங்கள் வீட்டுக்கு என்று என் மைத்துனரிடம் கொடுத்தனுப்ப நாங்களும் பிரமாதமாக அன்னையின் அருளால் மலரஞ்சலி செலுத்தினோம். இதில் விசேஷம் என்ன என்கிறீர்களா? எங்கள் வீட்டில் பூக்கும் செம்பருத்தி, மயில் கொன்றை, கொழுக்கட்டை மந்தாரை, சங்கு புஷ்பம், பவளமல்லி, நந்தியாவட்டை, பன்னீர்ப் பூக்களை எம்போதும் தினமும் செய்வது போல தட்டுக்களில் அடுக்கி வைத்திருந்தேன், கூடவே கொஞ்சம் காகிதப்பூ. ஆனால் மலர்க்கோலமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இதுவரை எழவில்லை, செய்யவுமில்லை. முதல்நாள் (20ஆம் தேதி) தரிசன நாளில் பாண்டிக்குச் செல்லமுடியவில்லையே என்ற வருத்தத்தோடு படுத்ததுடன் சரி, ஆனால் அன்னை ஒரு பை நிறைய பூக்களைக் கொடுத்தனுப்பி தனக்கு தானே செய்து கொண்டார். அதுவும் அதிலிருந்த பூக்கள் முற்றிலும் எங்கள் வீட்டில் இல்லாதன செவ்வரளி, வெள்ளை அரளி, ஜவந்தி, சம்பங்கி, வாடாமல்லி, பெயர் தெரியாத அழகான பூ (மெரூன் நிறத்தில்) மற்றும் வீட்டில் இருந்த விருட்சி மலர். அன்னையின் கருணையே கருணை! எங்கள் இரண்டரை வயதாகும் குழந்தைகளும் ஏதாவதொன்று என்றால் அன்னையிடமே பேசுகின்றன.

மலரலங்காரம் 3 மணிக்குச் செய்தோம். ஐந்தேமுக்காலுக்கு ஒரு van நிறைய உறவினர்கள் வந்தனர். வந்தவர்கள் மெய் சிலிர்த்து நின்றனர். காரணம் அவர்கள் அன்னை அன்பர்கள். தினமும் மாலை 6 மணிக்குப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுடையவர்கள். ஊர் போய் சேர்ந்து பிரார்த்தனை செய்ய முடியாதே என்று கவலைப்பட்டவாறே வந்துள்ளனர். ஆனால், எல்லாம்வல்ல அன்னை எங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்ய அவர்களைப் பணித்து விட்டார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

இன்னோர் அற்புதமும் நடந்தது. எங்கள் உறவினர் பையன் இரயிலில் அடிபட்டு கோமாவில் 22 நாள் கிடக்கையில் இங்கிருந்தவாறே பிரார்த்தனை செய்து என்னிடமிருந்த போட்டோவை அனுப்பினேன். அவன் தலையணைக்கடியில் வைத்த 1 மணி நேரத்தில் நினைவு திரும்பி இன்று நல்லபடியாகிவிட்டான்.

அன்னையின் அருளுக்கு அளவேது? பொறுமையில்லாததுடன் எல்லாவித அவசர நடவடிக்கையுடனிருந்த என்னுடைய குணத்தையும் மாற்றிவருகிறார் அன்னை என்றால் மிகையில்லை.

*******



book | by Dr. Radut