Skip to Content

சிறு குறிப்புகள்

அஜெண்டா  4ஆம்  வால்யூமில்  56 ஆம் பக்கத்தில் அன்னை தாம் படித்ததைப் பற்றிச் சொல்லுகிறார். 5 மாதம் தொடர்ந்து படித்தார். "ஒரு 800 புத்தகங்கள் படித்தேன்............, இல்லை, அந்த ஐந்து மாதங்களில் சுமார் தொள்ளாயிரத்து ஐம்பது புத்தகங்கள் படித்தேன்'' என்றார்.

M.A. படித்து ஆங்கில ஆசிரியராகப் பல்கலைக்கழகத்திலிருப்பவரிடம், மனைவியார் தம் தோழி எழுதிய கார்டைப் படிக்கும்படிக் கொடுத்தார். "உனக்குத் தெரியுமல்லவா, எனக்குப் படிப்பது கஷ்டம் என்று, என்ன விஷயம் சொல்லேன்'' என்றார். தோழி தம்மை உயர்வாக எழுதியிருப்பதைக் கணவர் படிக்க வேண்டும் என நினைத்தவர் பெற்ற பதில். இவர் பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆசிரியர் எனப் பெயர் வாங்கியதால் இவருக்குப் பல இடங்களிலிருந்து அழைப்பு வருகிறது.

தம் 2 வயதுக் குழந்தைக்கு அமெரிக்க முறைப்படி பாடம் போதித்தவர், அப்பெண் குழந்தை 5ஆம் வயதில் Reader Digest முழுவதையும் படிப்பதைக் கண்டார். 11ஆம் வயதில் அக்குழந்தை ஒரே நாளில் 700 பக்க ஆங்கில நாவலை படித்து முடித்தது. மேலும் பல உதாரணங்களை இருதரத்திற்கும் கூறலாம். படிப்பைப் பற்றிய உண்மைகள் பல.

  1. பயிற்சியும், பழக்கமுமில்லாதவர்க்குப் படிப்பது கடினம். 50 பக்கம் படிக்க 1 வாரமாகும்.
  2. முழு ஆர்வமுள்ளவர்க்கு நல்ல பயிற்சியைச் சிறு வயதில் தொடர்ந்து கொடுத்தால் எளிய நூல்களை ஒரு நாளில் 800, 900 பக்கமும் படிப்பவர்கள் உண்டு.
  3. அப்படிப்பட்டவர் ஒரு மணி நேரத்தில் 100 பக்கத்திற்கும் அதிகமாகப் படிப்பார்கள்.
  4. ஆன்மீக விழிப்புள்ளவர் - விவேகாநந்தருடைய அனுபவம் - புத்தகத்தை எடுத்து முதல் பக்கம் படித்தால், முழுப் புத்தகமும் மனதுள் பாய்வதைக் காணலாம்.
  5. அன்னைக்கு ஆன்மீக விழிப்பும், சூட்சுமத்திறனும், படிக்கும் பழக்கமும் அதிக அளவிலுண்டு.

5 மாதத்தில் 950 புத்தகம் எனில் 1 நாளில் அன்னை 6 புத்தகங்கள் படித்தார். பகவான் ஸ்ரீ அரவிந்தரை முதலில் சந்தித்த பொழுது அவர் மௌனம் பெற்றார். மௌனம் தம் தலையுள் நுழைந்தவுடன் "நான் ஒரு நூலகம். நான் படிக்காத புத்தகம் இல்லை. அவை கொடுத்த அறிவின் அமைப்புகள் எல்லாம் என் மனதினுள் கரைவதைக் கண்டேன். ஏதோ அற்புதம் நடக்கிறது என உணர்ந்தேன். Let this last. இது நீடிக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தேன். என் ஆயுள் முழுவதும் அந்த மௌனம் என்னை விட்டகலவில்லை'' என்று கூறியுள்ளார். வாழ்நாளில் ஒருவர் 950 புத்தகம் படிப்பது அரிது. அன்னை அதை 5 மாதத்தில் முடித்தார்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சமுதாயம் சட்டத்திற்குட்பட்டது. மனித சுபாவத்தால் கட்டுப்பட்டது என்பதை அறிவுடைய ஒருவன் புரிந்து கொள்ளலாம். தெளிவில்லாதவன் கண்ணில் இது படுவதில்லை.



book | by Dr. Radut