Skip to Content

லைப் டிவைன் - கருத்து

P. 119 Mind Understands not knowledge, but its own analysis

மனத்தால் ஞானத்தை அறியமுடியாது. மனம் தன்னையே அறியும்

"தான் கண்டவாறே காண்பவனை'' வள்ளுவர் அறிவற்றவன் என்கிறார். மின் விளக்கைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்தபின் எண்ணெய் எங்கு ஊற்றுவார் எனக் கேட்பவன், தான் அறிந்த எண்ணெய் விளக்கையே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

மனம் என்பது சிருஷ்டியின் கருவி. தானே சிருஷ்டிக்கும் தன்மையுடையதன்று. பேனாவைப் போன்றது. பேனா எழுதும் கருவி. பேனாவுக்குச் சொந்தமாக எழுத வராது. நாம் மனம் ஞானபீடம் எனக் கருதுகிறோம். ஸ்ரீ அரவிந்தம் அடிப்படையில் மரபிலிருந்து மாறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று.

புத்தகத்திலுள்ளதை ஆசிரியர் விளக்கும் திறன் பெற்றவர். புத்தகம் எழுதியது ஆசிரியர் அல்லர். நியூடன், வால்மீகி, தாகூர் எழுதியதை ஆசிரியர் புத்தகத்திலிருந்து வகுப்பில் போதிக்கிறார். வகுப்பு ஆசிரியர் நியூடனோ, தாகூரோ அல்லர் என்பதுபோல் மனம் ஞானத்தின் உறைவிடமன்று. தம் சிந்தனையை மட்டும் கருவி மனம் என்கிறார் பகவான்.

ரிப்பேர் செய்பவனுக்கு ரேடியோவை ரிப்பேர் செய்ய மட்டும் தெரியும். ரேடியோ செய்யத் தெரியாது. நமக்கு வரும் தபாலை கொண்டு வருபவன் தபால்காரன். அத்தபாலை எழுதியது தபால்காரனல்லன்.

ஸ்ரீ அரவிந்தர் கூறும் இவ்விளக்கம் உலகுக்குப் புதியது. விஞ்ஞானிகளும், மாயாவாதிகளும் கூறுபவை மனமே ஞானத்தை அறியும் எனப் பொருள்படுவதால் பகவான் மறுப்பாக இக்கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார்.

சர்க்கார் மக்கள் சார்பாகப் பணத்தை அச்சிட்டு வழங்குகிறது. சர்க்காரிடம் பணம் என்று ஒரு ரூபாயுமில்லை. பணத்தை உற்பத்தி செய்வது மக்கள் உழைப்பு. மக்களின் உழைப்பில் உற்பத்தியான பணத்தை அச்சிட்டு வினியோகம் செய்யும் கடமையைச் சர்க்கார் ஏற்றுக்கொண்டுள்ளது. பொதுவாக நாம் சர்க்காரிடம் எல்லாப் பணமும் இருப்பதாகப் பேசுகிறோம், நினைக்கிறோம். "நான் என்ன கஜானாவா?'' என்கிறோம்.

மனம் என்பது என்ன என்று ஆழ்ந்துணருபவர்க்குக் கவலை என்பதிருக்காது. குழப்பம் எழாது. இறைவனை எளிதில் நினைக்கலாம். நிம்மதியைச் சுலபமாக அடையலாம். மனம் கருவி என்றறிபவன் ஞானத்தை அடைய அது உதவும். Mind is ignorance seeking knowledge. அறிவைத் தேடும் அறியாமை என்பதே மனம் என்கிறார் பகவான்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

"உங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும்'' எனச் சொல்லி பரவசமடைவது சரணாகதியின் உச்சகட்டம்



book | by Dr. Radut