Skip to Content

06.சத்திய ஜீவன்

"அன்பர் உரை"

சத்திய ஜீவன்

                                                                          (சென்ற இதழின் தொடர்ச்சி....)


 (ராணிப்பேட்டை தியான மையத்தில் 21.2.2002 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மிநாராயணன் நிகழ்த்திய உரை)

மனித ஜீவன் பரமாத்மாவை நாடுகிறது. இதை பக்தி, ஆர்வம் என்று கூறுகிறோம். உடலிலும், உணர்விலும், மனதிலும், பக்தியும், ஆர்வமும், சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் பூரிப்பாகவும் ஆகின்றன. சத்திய ஜீவனை விஞ்ஞானமயப் புருஷன் என்று கூறுகிறோம். இதற்கடுத்த நிலை ஆனந்தமயப் புருஷன். ஆனந்தமயப் புருஷனது ஆனந்தம் சத்திய ஜீவனுள் புதைந்து இருக்கும். (ஆன்மீகத்தில் மௌனமும், சாந்தியும் இறைவன் என்று கூறுவார்கள்) சரணாகதிக்கு முன் உள்ள ஒன்பது கட்டத்துள் எட்டாவது கட்டமாகப் பூரிப்பை பகவான் சொல்கிறார். ஆனால் ஆன்மீக மரபில் பக்தன் பூரிப்படைந்து களியாட்டம் ஆடுவதைவிட பக்தியாலோ, ஞானத்தாலோ வரும் சாந்தியைப் பெரியது என்பார்கள். ஏனெனில் சாந்தியே இறைவன் எனக் கருதப்படும். ஆனால் சத்திய ஜீவனைக் கடந்து செல்லும்போது பூரிப்பே சாந்தி, சாந்தியே பூரிப்பு என்றாகும். நிலைமை உயர்ந்தால் சிறியது பெரியது ஆகும். பொதுவாகக் குடும்பங்களில் பதவி உள்ளவன், சம்பாதிப்பவன் முக்கியமாகக் கருதப்படுவான். உயர்ந்த குடும்பங்களில் அது உள்ளவனும், இல்லாதவனும் சமமாக இருப்பான். சம்பாதிப்பவனும், சம்பாதிக்காதவனும் சமமாகக் கருதப்படுவான். சத்தியஜீவியம் பூரிப்பிற்கும், சாந்திக்கும் உள்ள ஒற்றுமையை வெளிக்கொணரும். அமைதியும் சந்தோஷமும் உயர்ந்தால் தீவிரமடைந்து, பூரிப்பாகி, ஆனந்தமாகி, அனந்தமாக முடியும். இந்த மாறுதல் ஏற்பட்டால்,

1. மனத்தில் இது ஞானமாகவும், திருஷ்டியாகவும் தெரியும்.

2. உணர்வில் தீவிரமான பக்திலயமாகத் தெரியும்.

3. செயலில் ஆனந்தமான சக்தியாக வெளிப்படும்.

4. உடலில் ஆன்மீகமயமான தூய்மையான வாழ்வாக மாறும்.

5. பிரபஞ்சத்தில் நிகழ்ச்சிகள் தங்களின் இரகசியமான பிரம்மானந்தத்தை வெளிப்படுத்தும்.

இனி, செயல். அதாவது புறவாழ்வில் உள்ள செயல் திருவுருமாற்றப்பட வேண்டும். இதற்கு பர்சனாலிட்டி என்ற கருத்தை விளக்கவேண்டும். மேலும் சத்தியஜீவிய சுபாவத்தில் நியாயம், தர்மம் என்பவற்றையும் விளக்கவேண்டும். சத்தியஜீவியத்தில் பர்சனாலிட்டி, இம்பர்சனாலிட்டி (impersonality) பிணக்கானவையல்ல. உதாரணமாகப் பையனுக்குப் பெரிய வேலை வந்து நாட்டைவிட்டுப் போகவேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்கிறது, ஆனால் வயதான பெற்றோர்களுக்கு அவனின் ஆதரவு தேவைப்படுகிறது, இது பிணக்கு. பையன் பெற்றோர்களின் சௌகரியமே தன் சௌகரியம் என்று கொண்டிருந்தால் அல்லது பெற்றோர் பையனுடைய வாழ்வே தங்கள் வாழ்வு என்று கொண்டிருந்தால், இந்தப் பிணக்கில்லை. இதை நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சி ஊழியராக வேலை செய்யும்பொழுதும், ஸ்தாபனத்தின் இலட்சிய ஊழியராக இருக்கும் பொழுதும் பிணக்கில்லை என்று காண்கிறோம். மனமாற்றம் ஏற்படுவதால் பிணக்கில்லை. அங்கு (சத்தியஜீவியத்தில்) நிலைமை மாறுவதால் பிணக்கில்லை. ஏனெனில் அங்கு அகந்தை மையம் இல்லை. சிருஷ்டியிலும், பரிணாமத்திலும் பிணக்கிற்கு மூலகாரணம் அகந்தை. அகந்தை ஒழிந்த லோகம் என்பதால் சத்தியஜீவிய லோகத்தில் இந்தப் பிணக்கு இல்லை. மேலும் இவற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஆபீஸில் ஒருவரை செந்தாமரைக் கண்ணன் என்று கூப்பிடுவார்கள். அவர் கோட், சூட், டையுடன் வேலை செய்வார். அவர் அதிகாரம் ஆபீஸில் செல்லும். ஆபீஸில் உள்ளவர்கட்கு அவர் செந்தாமரைக் கண்ணன். அவரை நினைத்தால் அவர்கள் கண்முன் வரும் உருவம் கோட், சூட், டை. வீட்டில் அவர் வேஷ்டி கட்டிக் கொண்டிருப்பார். யாராவது ஆபீஸிலிருந்து செந்தாமரைக் கண்ணனைப் பார்க்கவேண்டும் என்றால் குழந்தை யார் அது என்று கேட்கும். குழந்தைக்கு செந்தாமரைக் கண்ணனைத் தெரியாது, அப்பா தெரியும். ஆபீஸில் இருப்பவருக்கு அப்பா தெரியாது; கோட், சூட், டை, செந்தாமரைக் கண்ணனைத் தெரியும். அவர்களால் இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோல் கீழ்லோகங்களில் உள்ள பிரிந்துள்ள அம்சங்கள் மேல்லோகங்களில் சேர்ந்து இருக்கின்றன.

இந்தக் கருத்தை விளக்குவது சற்றுக் கடினம். இம்பர்சனாலிட்டியை (impersonality) பொதுவிதி எனவும் பர்சனாலிட்டியை அதன் குறிப்பிட்ட விளக்கம் எனவும் கொள்ளலாம்.

இம்பர்சனாலிட்டி, பர்சனாலிட்டி என்றால் என்ன?

பொதுவானது, குறிப்பானது என்று இரு பகுதிகள் உண்டு. கிராப்பு, காபி, சாம்பார், மூக்குக் கண்ணாடி, கையெழுத்து, உடை என்பனவை அனைவருக்கும் பொதுவானவை, ஆனால் ஒருவர் கையெழுத்து மற்றவர் கையெழுத்துபோல் இருப்பது இல்லை. பலரும் காப்பி போட்டால் பலவிதமாக இருக்கும். காப்பி என்பது பொது, ஒருவர் போடும் காப்பி குறிப்பானது. கோபம் என்பது பொது, ஒவ்வொருவருடைய கோபம் வெவ்வேறு வகையாக இருக்கும். அதுபோல் மனிதச் சுபாவம், விலங்கின் சுபாவம், தாவரத்தின் சுபாவம், தெய்வத்தின் சுபாவம், ஜடத்தின் சுபாவம் ஆகியவற்றிற்குப் பொதுவான சுபாவம் உண்டு. அது பிரபஞ்சத்தின் சுபாவம் ஆகும். பிரபஞ்சத்தின் சுபாவத்தை இம்பர்சனாலிட்டி என்பர்.

இம்பர்சனாலிட்டி அதனுடைய உற்பத்தி ஸ்தானத்தில் அடிப்படையானது. மனிதச் சுபாவம் எப்படி மனிதர்களுக்கு அடிப்படையோ அதுபோல் பிரபஞ்ச வாழ்விற்கு இம்பர்சனாலிட்டி அடிப்படை. இம்பர்சனாலிட்டி என்பது ஒரு தீவிரமான சக்தி, ஒரு ஸ்தாபனத்தின் அதிகாரம் போன்றது. ஸ்தாபனத்திலுள்ள ஒவ்வொருவரும் ஸ்தாபனத்தின் அதிகாரத்தைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், இது பர்சனாலிட்டியைப் போன்றது. ஜீவனின் சுபாவத்தில் தூய்மையான அம்சம் இம்பர்சனாலிட்டி. அன்பு என்பது செலுத்துபவரைப் பொருத்தது. அன்பு பொது, ஒருவருடைய அன்பு குறிப்பானது. வீரம் என்பது வீரனைப் பொருத்தது. வீரம் பொது, ஒருவருடைய வீரம் குறிப்பானது. பொதுவானதும், குறிப்பானதும் வெவ்வேறல்ல. சத்திய ஜீவன் இறைவனின் சுபாவத்தை உடையவன். இறைவனின் சுபாவத்தை அவன் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறான். அது இயற்கையின் புதிர். பல சமயம் நாம் இதுபோன்றவற்றைக் காண்கிறோம். வழக்கமாக பொய் சொல்பவர் முக்கியமான கேசில் தனக்கு எதிராக மெய் சொல்கிறார். பயந்தாங்கொள்ளி ஒரு சமயம் ஆவேசமாகத் தன்னை வெறி ஏற்றுபவனைத் தாக்குகிறான். சாது மிரண்டால் காடு கொள்ளாது சாதுவும் மிரள்வார். அடக்கத்திற்கே பேர்போன பெண் பிரம்மச்சாரியின் கோபத்தைக் கண்டு சிரித்துக் கேலி செய்கிறாள். இவை இயற்கைக்கு மாறானவை. நமக்குப் புரியாத புதிர். நாம் குறிப்பிட்ட அம்சத்தை அறிவோம், பொது அம்சத்தை அறிவதில்லை. ஒரு நேரம் பொது அம்சம் வெளிவந்தால் நமக்கு அது ஆச்சரியமாக இருக்கும்,சத்தியஜீவியத்திற்கு அது ஆச்சரியமாக இருக்காது.


 

தொடரும்.....

****


 


 



book | by Dr. Radut