Skip to Content

04.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

                                           (சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

கணவன் : உனக்கு மட்டும்தானா குடும்பம். எனக்கில்லையா? உனக்குள்ள பக்தி எனக்குத் தெரியும். நீ எதைச் செய்தாலும் நான் தடுக்கமாட்டேன்.

மனைவி : தடுக்காதது சரி. வருவது, கூடி வரும்வரை பொறுமையாக இருக்கவேண்டாமா?

கணவன் : என்னால் இதுவரை அப்படிக் கெட்டுப் போனதுண்டா?

மனைவி : பெரியவனைப் பெரிய தொழில் பார்ட்னராக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு பலித்திருந்தால், இன்று எங்கிருப்போம்?

கணவன் : சென்னையில் பெரிய செல்வர் வரிசையிலிருப்போம். அது என்னால் தவறிவிட்டதா?

மனைவி : தவறியது உண்மை. தவறியதை நம்மால் தடுக்க முடியவில்லையே.இதைப் பேசும்பொழுது மனைவிக்கு அந்த நேரம் தான் தன் தம்பியிடம் அவ்விஷயத்தைச் சொல்லியது நினைவுக்கு வந்தது. தம்பி நல்லவன். அவனிடம் சொன்னதால் விஷயம் கெட்டுப்போகாது. பெரிய விஷயம் வந்தவுடன் தமக்குச் சொல்லத் துடித்தது நினைவுக்கு வந்தது. அப்படி மனம் அவசரப்பட்டால் விஷயம் கெட்டுப்போகும் என்று தெரியும். தன்னைமீறிச் சொல்லியதால்தான் கெட்டுப் போயிற்று என்று தெரியும். அது தம் பங்கு. தொழிலை விஜயவாடாவில் ஆரம்பிக்க வேண்டும் என்றபொழுது சென்னையில் இல்லாவிட்டால் வேண்டாம் எனக் கணவர் கூறி காரியத்தைக் கெடுத்தார்.

கணவன் : அன்னையால் வருகிறது. வருவது கூடி வருவதில்லை. என்ன செய்வது?

மனைவி : வரும் அதிர்ஷ்டத்திற்கு வரவேற்பு தரும் மனநிலை வீட்டிலில்லை.

கணவன் : என் மீது என்ன தவறு? சென்னையில் வேண்டும் என்று கேட்டது தவறா?

மனைவி : அப்படி நினைத்தாலே கெட்டுவிடும், கேட்கலாமா?

கணவன் : சரி அடுத்த முறை அப்படி நான் கேட்கவில்லை. நினைக்கக்கூடாது என என்னால் மனத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?

கணவர் மனம் கேட்டுக்கொள்ளும் நிலையிலில்லை என்பதால் பேச்சை அவள் தொடரவில்லை. தம்மைத் தவிர எவரும் அன்னையைச் சரிவர அறியாதபொழுது இதுவரை வந்த வாய்ப்புகள் தங்கள் குடும்பத்தை 15ஆம் நிலையினின்று 80ஆம் நிலைக்குக் கொண்டு போயிருக்கும். குழந்தைகள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள். கணவனுக்குப் புரியவில்லை. ஒரு நேரம் கிண்டலாகப் பேசுகிறார். அடுத்த நேரம் பொருத்தமாகப் பேசுகிறார். இந்தச் சூழல் வாய்ப்பைப் பெறாது. அப்படியானால் சரியான சூழலை தாம் கொண்டு வரமுடியுமா? முடியும் என்றால் அந்த முயற்சியை எடுப்பது சரியா? முயற்சியே எடுக்காவிட்டால், எதுவுமில்லாமல் போய்விடுமே. முயற்சி எடுத்தால் பலன் தாராது. அது புரியவே முயற்சி எடுக்கலாம் என்பது புரிந்தது. மனம் இக்கட்டத்தில் போராடியது. தமக்கு மனம் இந்தக் கட்டத்தில் அடங்கும்வரை எவரையும் நொந்துகொள்வதில் பலனில்லை என நினைத்தவுடன் கணவன் மீண்டும் வந்தார். பொருத்தமாகப் பேசினார். ஆதரவாகப் பேசினார். தம் மனம் அடங்குவதால் இவர் இப்படிப் பேசுவதாக மனைவி நினைத்தார். எது நடந்தாலும் என்னால் மட்டும் நடக்கும், பிறர் ஒத்துழைக்கவும் என் மனநிலையே காரணம் என்று தோன்றுகிறதே என நினைத்தார். உண்மை எது என அறியப் பிரியப்பட்டார். முதல் எண்ணம் ஏற்பட்டவுடன் சமர்ப்பணம் செய்ய முடிந்திருந்தால், இத்தனைப் பிரச்சினையில்லை என்று தெளிவாயிற்று. சற்று நேரம் கழித்து தனக்கு மனம் அடங்கி, முதல் எண்ணம் சமர்ப்பணமானால், அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று புரிந்தது. இத்தனை நாளாக அந்தச் சமர்ப்பணம் பிடிபடவில்லை, இன்று நினைவும் வரவில்லை. நமக்குச் சமர்ப்பணமும் நினைவு வாராத காலத்தில் இவ்வளவு பெரிய வாய்ப்பை அன்னை அளிப்பதை உணர்ந்தார். நன்றி எழவில்லை என்பதைக் கண்டார். மனம் வறண்டிருந்தது. எவ்வளவு நல்லவை நடந்தாலும், அவை முழுப்பலன் தர உடல் நன்றியால் பூரிக்கவேண்டும் என்பதை அவர் அறிவார். அது அவருக்கு மனக்குறை.

கொஞ்ச நாள் கழித்து ஒரு நாள் கணவன் மிகவும் கனிவுடன் பழகுவதையும் அன்னையைப் பற்றிய சிந்தனை அவர் மனத்தை ஆட்கொண்டிருப்பதையும் கண்ட மனைவி சந்தோஷப்படுவதற்குப் பதிலாக முதற்காரியமாக அவ்வெண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய விரும்பினார். மனம் சந்தோஷத்தை நாடுகிறது. சமர்ப்பணம் எண்ணமாக இருக்கிறதே தவிர செயலாகப் பூர்த்தியாகவில்லை. கணவன் தனிமையில் மனைவியிடம் வந்து பேசினார்.

கணவன் : கொஞ்ச நாளாக நீ சொல்லியது என் மனத்திலிருக்கிறது. மேற்கொண்டு நாமனைவரும் சேர்ந்து செய்யக்கூடியதுண்டா என நான் கேட்க விரும்புகிறேன்.

இது மனைவி வாழ்வில் பெரிய மாறுதல், புரட்சி எனவும் கூறலாம். ஆனால் எண்ணம் சமர்ப்பணமாகாதவரை என்ன செய்வது என்று தெரியவில்லை. மேலும் பிள்ளைகளோ, கணவனோ அன்னை எழுதிய எதையும் படித்தவரில்லை. அவர்களிடம் எந்த disciplineஐப் பற்றிப் பேச முடியும் என்று தயங்கியபொழுது, போன் மணியடித்தது. கணவர் பேசினார். பெரியவனை பார்ட்னராக எடுத்துக்கொள்ளப் பிரியப்பட்டவர் வருகிறார் என்பது செய்தி. இது முடியும்வரை சமர்ப்பணமே முக்கியம் என்று மனைவி நினைத்தார். ஆனால் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை. கணவனுக்கு அன்னையைப் புரிகிறது. நடந்தது பெரியது என்ற சந்தோஷம். போனில் பேசியவர் வந்தார். கணவன் மனைவியை தொழில் விஷயமாகக் கலந்தார். முதல்முறை ஏன் தவறியது என்று கூறினார். இம்முறை உடனே அதை முடிக்கவேண்டும் என்று பேசினார். அன்று மாலை கணவர் பிள்ளைகளுடன் வந்து மனைவியிடம் தம் மனத்தைத் திறந்து பேசினார்.

கணவன் : நான் அன்னையை அறியவில்லை. அறியவேண்டும் என்று நினைத்தபொழுது இவ்வளவு பெரிய காரியம் நடந்துள்ளது. நாம் அனைவரும் இனி அன்னை சட்டப்படி செயல்படவேண்டும்.

பெரியவன் : அன்னை சட்டம் என்றால் அம்மா சொல்படி நடக்கவேண்டும் என்பதுதானே?

மகன் அப்படிப் பேசுவது வேலையைக் கெடுக்கும். அவனை அப்படிப் பேசக் கூடாது என்று தாம் சொல்லக்கூடாது. அவன் சொற்களைச் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்று முயன்றபொழுது அவை சமர்ப்பணமாயின. கணவன் மகனைக் கடிந்துகொண்டார்.முதன்முறை ஓர் எண்ணம் சமர்ப்பணமானது தாயாருக்கு அபரிமிதமான சந்தோஷம். அதனால் காரியம் முடியும் என்பது எதிர்பார்ப்பு அல்லவா? என்ற நினைவு மனத்தில் எழுந்தது. வீட்டின் சூழல் மாறிவருகிறது. ஒரு நாள் தாயாரும் பெண்ணும் பேசினர். பெண் அன்னையைப் பற்றி அறிய விரும்பினாள். அன்னையை தம்மைப்போல் ஏற்க மகள் விரும்புகிறாள் என்றறிந்து தாயார் மிகவும் மகிழ்ந்தாள். பெண்ணுடன் பிள்ளைகளும் சேர்ந்துகொண்டு தங்களுக்குத் தெரிந்த குடும்பங்களில் அன்னை செயல்பட்டதை ஆராய்ச்சி செய்ய விரும்பினர். பெரியவனால் கேலியாகப் பேசாமலிருக்க முடியாது. அது அவன் காரியத்திற்குத் தடை என்பதை நினைத்த தாயார் அக்குணம் அவனுக்குத் தன்னிடமிருந்து வந்திருக்குமா, தகப்பனாரிடமிருந்து வந்திருக்குமா என யோசனை செய்து, தம் குணமானால் அதைத் தாமே திருத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். நினைவை முடிவாக மாற்ற முயன்றார். மறுநாள் தியானத்தில் அதைச் செய்யலாம் என்று தள்ளிப்போட்டார். உடனே பெரியவன் தாயாரிடம் தன் குணத்தைப் பற்றிப் பேசினான். தான் தம்பியைப் பற்றி அன்று கேலியாகப் பேசியிருக்கக் கூடாது என்றான். அவனைப் பொருத்தவரை இது யுகப் புரட்சி, வெறும் புரட்சியில்லை. வந்துள்ள சந்தர்ப்பத்தை எப்படியாவது நல்லபடியாக முடிக்கவேண்டும் என்று தாயார் சிந்தனையிலாழ்ந்து பிள்ளைகள் பேசுவதைக் காதில் வாங்காமலிருந்தபொழுது, சிறியவன் சரணாகதி என்றால் என்ன என்று கேட்டான். தாயாருக்குத் தாம் காரியத்தை முடிக்க வேண்டுமா, காரியத்தைச் சரணம் செய்யவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

தாயார் : ஒரு காரியத்தை நாம் பொறுப்பாகத் திறமையாகச் செய்வதைவிட, நாம் நம் திறமையை நம்பாமல், அன்னையை மட்டும் நம்பி திறமையை முழுவதும் செயல்படச் செய்தால், முடிவான பலன் முதலிலேயே கிடைப்பது சரணாகதி.

சிறியவன் : என்னை, பள்ளி teamஇல் சேர்க்கவில்லை. நான் என்ன செய்வது?

பெண் : இது தோல்வியில்லை. அருள் என எடுத்துக்கொள்வது சரணாகதியாகுமா!

பெரியவன்: இது இல்லை என்றால், பெரியது வரும் என நினைப்பது சரணாகதியில்லையா?

தாயார் : இரண்டும் சரணாகதி போன்றவையே. ஆனால் சரணாகதி இவையிரண்டையும் கடந்தது.

பெரியவன்: எப்படி?

தாயார் : காரியம் கூடிவர நீங்கள் இருவரும் கூறிய மனநிலை போதும். சரணாகதி என்பது காரியத்தை மறந்து அன்னையை நினைப்பது.

பெரியவன் : அன்னையை நினைத்தால் என்ன வரும்?

பெண் : அன்னை வருவார்.

சிறியவன் : எனக்கு teamஇல் இடம் வேண்டும். அன்னை வேண்டாம்.

அப்பொழுது மாமா வந்தார். ஆக்ரா போவதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். சிறியவனைப் பற்றி ஒரு பிரின்சிபாலிடம் பேசியதாகவும், நன்றாக வாலிபால் விளையாடுவான் எனவும் கூறினார். அவர் ஒரு பிரபலமான கல்லூரியின் பிரின்சிபால். தம் கல்லூரியில் பையனைச் சேர்த்தால் college teamஇல் அவனை எடுத்துக்கொள்வதாகக் கூறினாராம். அது பிரபலமான கல்லூரி. அம்மாணவர்கள் வடநாட்டில் எல்லாம் போய் ஜெயித்து வந்திருக்கின்றனர். சரணாகதியை நினைப்பதன் பலன் இது. பிள்ளைகள் வாயால் மறுத்துப் பேசும்பொழுதும், அதை மீறிப் பலன் வருகிறது என்பதை தாயார் கருத்தாகக் கருதினார். அப்படியிருந்தும் சரணாகதியை முதலாகவும், முடிவாகவும் ஏற்கவேண்டும் என்று தோன்றவில்லை. எப்படிச் சிறியவன் சந்தோஷப்படுவான், பெரியவனுக்கு வந்துள்ள பேரதிர்ஷ்டம் எப்படிக் கூடிவரும் என்பதையே மனம் தாயாருக்குக் கருதுகிறது. சரணாகதிக்கோ, சமர்ப்பணத்திற்கோ அவர் மனத்தில் இடமில்லை. தொழில் (industries) சந்தர்ப்பம் பலித்தது பெரிய விஷயம். இதை நல்லபடியாக முடிக்கவேண்டும் என்ற கவலை தாயார், தகப்பனார் மனத்தை ஆட்கொண்டது. அங்குப் பிரச்சினையில்லை. காரியங்கள் சிறப்பாக நடக்கின்றன. நாம் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. எல்லாம் மற்றவர் முயற்சி. பலனைப் பெறுவதே நம் பங்கு என்பது அங்குள்ள நிலை. வீட்டு நிலை அடியோடு மாறிவிட்டது. குடும்பம் இனி உயர்ந்துவிடும். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிடும். தமக்குச் சரணாகதி பலிப்பதன் முன் இவ்வளவு பெரிய உயர்வு வருகிறது. ஆனால் குடும்பத்தாரை அன்னையை ஏற்கவைப்பது இதைவிடக் கடினமானது எனத் தாயார் உணர்கிறார்.

****

ஒரு நாள் வீட்டில் அனைவரும் சேர்ந்து அன்னையைப் பற்றியும் அவர்கள் அறிந்த அன்னை வெளிப்பாடுகளைப் பற்றியும் பேசினர்.

கணவர் : அன்னை சக்தி வாய்ந்த தெய்வம். நாமெப்படி அதைப் பெறுவது எனத் தெரியவில்லை.

பெண் : ஏன் தெய்வம் என்று கூறுகிறீர்கள் அப்பா? அன்னை தெய்வங்களுக்கும் மேற்பட்டவரல்லவா?

சிறியவன் : நமக்கு எல்லாம் ஒன்றுதானே.

பெரியவன் : நமக்கு ரூபாய்தான் தெய்வம்.

தாயார் : அந்த ரூபாயை அன்னை சட்டப்படிச் சம்பாதிப்பது எளிதன்று.

பெரியவன்: அப்படி வந்தால் அதிகமாக வருமா?

கணவன் : அதிகமாக வரும் என்று தெரிகிறது. வந்தபிறகு நிலைக்கமாட்டேன் என்கிறது.

தாயார் : கொடுப்பது அன்னை, பெறுவது நாமல்லவா?

கணவன் : வந்தது நிலைக்கவில்லை எனில் என்ன புண்ணியம்?

பெண் : அட்மிஷன் வாங்கிக் கொடுத்தபின் படிக்கும் பொறுப்பு பையனுடையதல்லவா? படிக்காமல் வீட்டிற்கு வந்து விட்டால் என்ன செய்யலாம்?

பெரியவன் : அகந்தை போனபிறகு சம்பாதித்தால் அழியாது.

சிறியவன் : அகந்தை போகப் போவதில்லை. சம்பாதிக்க முடியாது என்றாகும்.

கணவர் : அன்னை எதை அகந்தை என்கிறார்?

சிறியவன் : எனக்குத் தெரியும். கர்வம், திமிர், சுயநலம்.

கணவர் : நாமெல்லாம் அப்படியா இருக்கிறோம்.

பெண் : அம்மாதான் சொல்லணும்.

தாயார் : பரநலமாக இல்லாததெல்லாம் சுயநலம்.

பெரியவன் : எனக்கு பேக்டரி வந்துவிட்டது. அங்கு எப்படிப் பரநலமாக இருப்பது?

பெண் : பாக்டரி உனக்கில்லை, வீட்டிற்கு.

சிறியவன் : அதுதான் சுயநலம்.

பெரியவன் : என் பேரில் இருப்பதால் நான் எனக்கு என்றேன். நான் சுயநலமாக நினைக்கவில்லை.

சிறியவன் : பணம் வந்தால், சுயநலம் கூடவே வரும்.

தாயார் : அதெல்லாமிருக்கட்டும். பாக்டரி நாம் கேட்காமல் அடுத்தவர் பரநலத்தால் வருவதைக் கருதி அதன்படி நடந்தால் நீடிக்கும்.

கணவர் : சரி, எனக்கு இப்பொழுது புரிகிறது. இன்று அடக்கமாக இருக்கலாம். பாக்டரி பெரியதானால், மனம் அடங்காது.

தாயார் : மனம் அடங்குவது, உடல் வணங்குவது அவசியம்.

பெண் : அதெல்லாம் நம்மால் முடியுமா?

தாயார் : அன்னையை முன்னே வைத்தால் முடியும்.

கணவர் : இது பெரிய காரியம். இப்போ, புரியுது. நீ நாமெல்லாம் பேசுவது சரியில்லை என்றாயே, அது என்ன?

தாயார் : நம் வீட்டில் மனத்தில் தோன்றுவதைப் பேசுகிறோம். அது பிறர் மனத்தைப் புண்படுத்தும். கேலியாகப் பேசுகிறோம், அது காரியத்தைக் கெடுக்கும்.

கணவர் : இது மட்டமான குடும்பம் என்பது உன் முடிவா?

தாயார் : நாம் பேசுவதை எல்லாம் யோசனை செய்து பார்த்தால் நமக்கே சரி என்று படுமா?

கணவர் : எப்படி இனி பேசக் கற்றுக்கொள்வது?

தாயார் : யோசனை செய்தால் புரியும்.

பெண் : பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது வேடிக்கை.

சிறியவன் : இதுதான் ரொம்ப நாளையப் பிரச்சினையாயிற்றே. அம்மா சொல்வது சரிதானே. பிறர் மனம் புண்படப் பேசி சிரிப்பது நமக்கு வழக்கம்தானே.

பெரியவன்: அப்படிப் பேசினால்தான் ருசியாக இருக்கிறது.

கணவர் : இப்போ பாக்டரி வந்துவிட்டது. அப்படிப் பேசினால் ஆபத்து.

பெரியவன்: எனக்கு அகண்ட மௌனம் பூணவேண்டும்.

கணவர் : பாக்டரி பெரிய விஷயம். கேலிக்கு இடமில்லை. எல்லோரும் அம்மா சொல்படி நடக்கணும்.

பெண் : இப்போ பாக்டரி வந்து பேச்சு கற்றுக்கொடுக்கிறது.

தாயார் : அதுவே அன்னை விசேஷம். பாக்டரிக்காகச் சரியாகப் பேசினால் பாக்டரி நிலைக்கும். அன்னைக்குரிய பண்பு என்பது பாக்டரியில்லாத பொழுதும் பண்போடு பழகக் கற்றுக்கொள்வது.

சிறியவன் : அம்மா, நடக்கறதைப் பேசணும்.

மறுத்துப் பேசினாலும், நாளடைவில் வீடு மாறியது. கேலியாகப் பேசுவது, குத்தலாகப் பேசுவது குறைந்தது. ஆனால் மனம் மாறவில்லை, மாற்றமும் நிலையாக இருப்பதில்லை. நேரம் வந்தால் சற்று அடக்கம் வரும். இல்லையென்றால் பழைய தொனி எழும்.பாக்டரி விஷயம் நிலையாக முன்னேறி வருகிறது. ஏதோ ஒரு பெரிய விஷயம் கூடிவருவதால் சக்தி முழுவதும் அதற்கே செலவாகிறது என்பதால் மற்ற விஷயங்கள் அப்படியே இருப்பதாகத் தாயார் நினைத்தார். இப்பொழுதுள்ள முக்கியப் பிரச்சினை: குடும்பம் மட்டமானது. மட்டமான நிலையில் அன்னை செயல்படுவது குறைவு. ஓரளவு மாற்றமிருந்தாலும், பண்பான குடும்பமாக மாற வேண்டும் என்ற நினைவேயில்லாத இடத்தில் எப்படி அந்த அவசரம் வரும்? நெடுநாள் சிந்தித்தபின் தம் மனநிலைக்கும் இதற்கும் தொடர்புண்டா? வேறு அம்சங்களுண்டா என யோசனை செய்தார் தாயார். குடும்ப நலனுக்காகத்தான் அன்னையை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே தவிர அன்னையை அன்னைக்காக, யோகத்திற்காகத் தாம் ஏற்கவில்லை. அதேபோல் குடும்பத்தில் அனைவரும் தங்கள் முன்னேற்றத்திற்காக - சௌகரியத்திற்காக - அன்னையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அது இப்படித்தானிருக்கும் எனத் தோன்றியது. அடுத்த முறை பேச்சு எழுந்தது.

கணவர் : உன் மனத்தில் பெரிய குறையிருப்பதாக நினைக்கிறேன்.

பெண் : நாமெல்லாம் அம்மாவைப் போலில்லை என்று அம்மாவுக்குக் குறை.

பெரியவன் : நாமெல்லாம் அம்மாவைப் போலிருக்கிறோம் என்பதே உண்மை.

பெண் : அம்மா தினமும் தியானம் செய்கிறார். நாமெல்லாம் செய்வதில்லை.

சிறியவன் : தியானம் பக்தியாகுமா? சுயநலம் என்று கூறக்கூடாதா?

கணவர் : அம்மா தியானம் உண்மை. இதைவிட அன்னைக்கு எப்படி உண்மையாக இருப்பது?

பெரியவன் : எதற்காக அம்மா அன்னையை வணங்குகிறார்? தம் காரியம் நிறைவேற.

பெண் : அம்மா அப்படியெல்லாம் சுயநலமில்லை.

சிறியவன் : அம்மாவின் சுயநலத்துள் குடும்பத்தின் பரநலம் உள்ளது.

பெரியவன் : என்ன சொல்கிறாய்?

சிறியவன் : அம்மாவுக்கு அன்னை தேவையில்லை. குடும்பம் முன்னுக்கு வரவேண்டும். அந்தஸ்து வேண்டும்.

பெரியவன் : பெரிய இடத்துச் சம்பந்தம் வேண்டும். நான் இதைத்தானே சொல்கிறேன். அம்மாவும், நாமும் ஒன்றே. அவரவர்க்கு அவரவர் விஷயம் முக்கியம்.

பெண் : இது தப்பு. அம்மாவுக்கு பக்தியுண்டு. நாமெல்லாம் வெறும் மனிதர்கள்.

கணவர் : நாம் அப்படிப் பேசக் கூடாது. அம்மாவுக்கு நம்மெல்லாரையும்விட பக்தியுண்டு.

பெரியவன் : பக்தியுண்டு. எதற்காக பக்தி? பெரிய இடத்துக் கல்யாணங்கட்குப் போய் வரவேண்டும்.

தாயார் : என் மனம் சுயநலமாக இல்லாமல், உங்களுக்கு இப்படிப் பேசத் தோன்றாது. நான் சுயநலம் என ஏற்கிறேன்.

அனைவரும் : அது சரியில்லை. நாங்கள் இப்படிப் பேசக் கூடாது.

பெரியவன் : உண்மையைச் சொல்லக் கூடாதா?

கணவர் : எது உண்மை, சொல்லலாமா? கூடாதா என அம்மாவையே கேட்போம். அன்னை எதை உண்மை என்கிறார்?

தாயார் : அன்னையை நோக்கிப் போவது உண்மை. மற்றதெல்லாம் பொய். என் மனத்தை நான் மேலும் சோதனை செய்யும் சந்தர்ப்பம் உங்கள் பேச்சு.

பெண் : அண்ணன் குதர்க்கமாகப் பேசுவதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

தாயார் : என்னிடம் விஷயமில்லாமல் அவனுக்கு இப்பேச்சு எழாது என அன்னை கூறுகிறார்.

கணவர் : விதண்டாவாதம் பேசுவதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். புதிய நிலைமை வந்திருப்பதால், நம்மால் மேலும் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். நீதான் முக்கியம். நீயே மனம் உடைந்து பேசினால் அப்புறம் என்ன இருக்கும்?

கணவர் இதுபோல் மனம் மாறிப் பேசுவது பெரிய விஷயமானாலும், தாம் குடும்பத்திற்கு எதிர்பார்ப்பதை எட்டிப்பிடிக்க இதுவோ, இதுபோன்ற மற்ற எதுவோ போதாது என்று தாயார் அறிவார். அவருக்கு யோசனை பிறக்கவில்லை. சரணாகதி எட்டாக்கனி. இந்த அளவில் மனப் போராட்டம். டென்ஷன் அந்த ஆழத்தில். அது ஆழத்திலிருப்பதால் முகத்தில் தெரியாது. அன்னை எழுதியவற்றைப் பல முறை படித்ததுடன், ஆழ்ந்து பயின்றிருப்பதால் இனிப் படிக்க வேண்டியது இல்லை. செய்யவேண்டியது இருக்கிறது. இதன் இரகஸ்யத்தின் சுருக்கம் எனத் தாயார் அறிவது முரண்பாடான கருத்துகள். அவை உடன்பாடாவது முக்கியம்.

1) பெற்ற பிள்ளையானாலும், ஓரளவுக்கு மேல் நாம் அவனுக்குச் செய்ய முடியாது. அன்னை கொடுப்பது அபரிமிதம். அது வர அவன் மனம் மாறவேண்டும்.

2) தாயார் மாறும் அளவுக்கு பிள்ளைகள் மாறுவார்கள். நாமே அவர்களை மாற்ற முயலக்கூடாது.

இம்முரண்பாடு சரணாகதியால் உடன்பாடாகும். அது சிரமம். அடிக்கடி கணவரும், பிள்ளைகளும் தாயாரிடம் மற்ற குடும்பங்களில் நடந்தவற்றைப் பற்றி அபிப்பிராயம் கேட்பதுண்டு. தாயார் விளக்கமாகப் பதில் கூறுவார். பதில் சொல்லப் பிரியப்பட்டாலும், அன்னையைப் பற்றிக் குடும்பத்தார் கேட்பது சந்தோஷமாக இருந்தாலும் தாயாருக்கு இதனாலெல்லாம் காரியம் நடக்காது எனத் தெரியும். தான் முதலில் அன்னையை ஏற்றுக் கொண்டபொழுதிருந்த அனுபவம் அவருக்கு நினைவிருக்கிறது. அது,

. அன்னையை ஏற்றுக்கொள்வதால் நடக்கும் நல்லவை நம்ப முடியாதவை.

. நம் சுபாவம் மாறுமிடத்தில்தான் அன்னை தாம் அன்பருக்கு அளிப்பதை அளிக்க முடியும்.

அந்த இடம் வரும்பொழுது கணவரும், பிள்ளைகளும் பிடிபடமாட்டார்கள். அப்பொழுது,

1) தாம் செய்த தவற்றை சரி எனப் பேசுவார்கள்.

2) அவசியமானால் பச்சையாகப் பொய் சொல்வார்கள்.

3) பிறருக்குத் தாம் செய்யும் கொடுமைகள் கண்ணில் படாது.

4) அந்த இடத்தில் "இந்த அன்னை எனக்கு வேண்டாம்'' என்பார்கள்.

5) எவரிடம் மாதம் இருமுறை கார் கடன் வாங்குகிறார்களோ, அவருக்கு வருஷத்தில் ஒருமுறை மோட்டார் பைக் கொடுக்க மறுப்பார்கள். அது சரி எனப் பேசுவார்கள்.

6) எவரையும் தூக்கிவாரிப் போடும்படி துடுக்காகப் பேசிச் சிரிப்பார்கள்.

இவர்கள் தாமாக மாறுவார்களா? இப்பொழுது பெரிய இடம் வந்துவிட்டது, அதனால் மாறுவார்களா? நான் சமர்ப்பணத்தில் மாறியபின் அவர்களே மாறுவார்களா என்பது தாயார் மனம். கணவர் மனைவியுடன் தனியாகப் பேசுவதுண்டு. பிள்ளைகளும் தனித்தனியாக அம்மாவிடம் வந்து அன்னையைப் பற்றிப் பேசுவார்கள். சேர்ந்தும் பேசுவதுண்டு. தாயார் தம் மனத்துடன் கலந்துரையாடுவது அதிகம். விசேஷம் அங்குண்டு. மகள் தாயாரை அன்னையைப் பற்றிய விசேஷமான செய்திகளைச் சொல்லும்படிக் கேட்டாள்.

தாயார் : அன்னைக்குரிய சக்தியைப் பற்றி அறிய உனக்கு முதலில் வாழ்க்கையைப் பற்றித் தெரியவேண்டும். முதல் மார்க் வாங்கும் பையன் எப்படிப் படிப்பான், எப்படிப் பள்ளிக்கூடம் செல்வான் என்று தெரியும். படிக்கமாட்டேன், பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்ற பையன் பாஸ் செய்ய முடியுமா? அவனுக்கு முதல் மார்க் ஏது?

பெண் : நேரடியாகச் சொல்லுங்களேன்.

தாயார் : படிக்கமாட்டேன் என்ற பையன் பாஸ் செய்தால் அவன் பெரிய புத்திசாலியாகும்.அவனே முதல் மார்க் வாங்குவது என்பதில்லை. வாங்கினால் அது உலக அதிசயம். அதை நடத்தும் சக்தி உலகிலில்லை.

பெண் : என்ன சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை.

தாயார் : அப்பாவுடன் வேலை செய்யும் முதலியாரைத் தெரியும் உனக்கு. அவர் மகள் உனக்கு வேண்டியவள். அவளுக்கு என்ன மாப்பிள்ளை வரும்?

பெண் : அவளுக்கு எதுவுமேயில்லை.அழகில்லை, குள்ளம், பணத்திற்கு வழியில்லை, சிடுமூஞ்சி. பணமும், குணமும் இல்லாதவளுக்குக் கிளார்க் மாப்பிள்ளை கிடைப்பதே கஷ்டம். அவளுக்கு வந்தது அமெரிக்கா மாப்பிள்ளையாச்சே. அது Mother's Grace என்று எனக்குத் தெரியும்.

தாயார் : இதுவரை எல்லோரும் அறிவார். என்ன நடந்தது என உனக்கு நினைவில்லையா?

பெண் : சரியாக விபரமாகத் தெரியாது. பெண் இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்றாள், பிறகு சம்மதித்தாள் எனக் கேள்விப்பட்டேன்.

தாயார் : அதை விளக்கவே படிக்காத பையனுக்கு முதல் மார்க் தரும் சக்தி உலகிலில்லை

என்றேன்.

பெண் : எனக்குத் தெரியாது.

தாயார் : முதலில் படிக்காத பையனுக்கு முதல் மார்க் தரும் சக்தி எப்படிப்பட்டது என்று யோசனை செய்.

பெண் : அதெல்லாம் நடக்காது.


 

தொடரும்........

****


 



book | by Dr. Radut