Skip to Content

13.அன்னையை மட்டும் நம்பவேண்டும்

அன்னையை மட்டும் நம்பவேண்டும்

பெரிய முதலாளிகள் ஆபத்தான நேரங்களை சமாளிக்க ஆபத்தான மனிதர்களைப் பயன்படுத்துவார்கள். கூர்க்கா செய்யும் வேலையை முதலாளி செய்ய முடியும் என்றாலும் செய்வது சரியில்லை. பாக்கிதாரர்களைச் சமாளிக்க, முரட்டுத் தொழிலாளிகளை அடக்க, சட்டத்தை நமக்கு எதிராகப் பயன்படுத்துவதிலிருந்து தப்பிக்க, மானேஜர், செக்கூரிட்டி, வக்கீல் ஆகியவர் முதலாளிக்குப் பயன்படுவர். ஒரு கிராமத்தில் ஒரு பாக்டரி செயல்பட வேண்டுமானால், அந்த ஊர் நாட்டாண்மைக்காரனை பாக்டரி தன்னிடம் வேலைக்கு வைத்துக்கொண்டால், ஊர், முதலாளிக்குக் கட்டுப்படும். அது போன்று ஒரு முதலாளியும், அவர் பாக்டரியில் வேலை செய்யும் நாட்டாண்மைக்காரனும் ரோட்டில் வந்துகொண்டிருக்கும்பொழுது ஒருவன் குடித்துவிட்டு முதலாளியிடம் சண்டைக்கு வருகிறான். நாட்டாண்மைக்காரன் ஓடிப்போய் அவனை அடக்குவதற்குப் பதிலாக முதலாளி என்ன செய்கிறார், தன்னை உதவிக்குக் கூப்பிடுகிறாரா என வேடிக்கைப் பார்க்கிறான். முதலாளிக்கு அவன் மனம் புரிந்தது. ரோட்டில் சற்று நின்றார். குடிகாரனை நோக்கி "ஏன் அங்கிருந்து பேசுகிறாய், கிட்டே வா'' என்றார். அவன் சத்தம் சற்று அடங்கியது. தன் உதவியில்லாமல் முதலாளிக்கு நிலைமை அடங்குவதைக் கண்ட நாட்டாண்மைக்காரன் குடிகாரன் மீது பாய்ந்தான். நாட்டாண்மைக்காரனை நம்புவதைவிட தன்னையே நம்புவது சரி என முதலாளி அறிந்தார். மனிதன் அன்பிற்காக, நேர்மைக்காக, கடமைக்காக உதவி செய்யமாட்டான். ஆதாயத்திற்காக உதவ முன்வருவான். ஆதாயத்திற்காக வரும் உதவி அவசியமானவற்றைச் சாதிக்காது. "நேரம் வந்தால், மனிதர் சாயம் வெளுக்கும்'' என்பது அனுபவம்.

* மனிதர்களை நம்ப முடியாது என அறிவது விவேகம்.

*அன்னையை மட்டும் நம்பவேண்டும் என்பது ஞானம்.

****



book | by Dr. Radut