Skip to Content

09. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - இந்தக் குழந்தைக்கு என்ன செய்வது? இப்பொழுது தினமும் அன்னை புத்தகங்களையும், சாவித்ரியும் படிக்கிறது. அதிலிருந்து சற்று குணம் தெரிகிறது.

அண்ணன்- அதைத் தொடர்ந்து செய்யலாம். நீ சொல்கின்ற பெற்றோர், பிரச்சினைக்காக அன்னையிடம் வருபவர்கள். பக்திக்காக வருபவர்களா?

தம்பி - அவர்கள் அன்பர்கள். அவர்கட்குக் குழந்தை முக்கியம். அதைவிட அவர்கள் சேவை முக்கியம்.

அண்ணன் - பிரச்சினைக்காக வருபவர்கட்கு முறைகள் பிரச்சினையைத் தீர்க்கும். அது நாளடைவில் நல்லபடியாக, நிச்சயமாக நடக்கும்.

தம்பி - உடனே நடக்குமா?

அண்ணன் - அது அன்னைக்காக வாழ்பவர்கட்கு நடக்கும். அத்துடன் பிரச்சினை அவர்கட்கு வாய்ப்பாகவும் மாறும்.

தம்பி - இவர்கள் அப்படி மாற முடியாதா?

அண்ணன் - சேவை முதல் என்பது அன்னை முதல் என்று மாறினால், அது நடக்கும்.

தம்பி - அவர்களாக மாற்றிக்கொள்ளக் கூடாதா?

அண்ணன் - மாறக் கூடாது என்பதில்லை. அப்படியெல்லாம் மனம் மாறுவதில்லை.

தம்பி - சரி, அப்படி மாறினால் என்ன நடக்கும்?

அண்ணன் - பிரச்சினை இருக்காது, குழந்தை சந்தோஷமாகிவிடும்.

தம்பி - அதற்கென்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்.

அண்ணன்- நான் சொன்னதுபோல் சமர்ப்பணம் செய்தால், குழந்தை பிரச்சினை தீரும்.

தம்பி - மேலும் செய்யக்கூடியதுண்டா?

அண்ணன் - உண்டு.

தம்பி - என்ன செய்யலாம்?

அண்ணன்- ஆர்வம் உள்ளவரை செய்யலாம். முழு ஆர்வம் அன்னை பேரிலிருப்பதற்கு அடையாளம், இடையாத நினைவு. மனம் அன்னையைத் தானே விரும்பி நினைத்து, நினைவில் திளைத்தால், பிரச்சினை இருந்த இடம் தெரியாது.

தம்பி – “இடையறாத நினைவு” கட்டுரையிலுள்ளதைப்போல் மாறிவிட்டால்,

அண்ணன் - அது யோக நிலை. அதுபோல் பெற்றோர் மாறினால் குழந்தை நாடெங்கும் பிரபலமாகும். இன்று எதை யாரும் குழந்தைக்குக் கற்பனை செய்ய முடியாதோ, அது நடக்கும்; நடந்தபடியிருக்கும்.

தம்பி - குழந்தை இடையறாத நினைவைப் பெற்றால்,

அண்ணன் - குழந்தை வாழ்வை விட்டு யோகத்திற்குப் போகும். அக்குழந்தையுள்ள இடத்தில் மற்றவர்க்குப் பிரச்சினையிருக்காது.

தம்பி - குழந்தை உலகப் பிரசித்தி பெறுமா?

அண்ணன் - அன்னையை குழந்தையே நான் கூறுவதுபோல் அறிந்து, குழந்தைக்கு இடையறாத நினைவு வந்தால், இந்தக் குழந்தை உலகப் பிரசித்தி பெறும் என்பது உறுதி. அவ்வுறுதியை உறுதிப்படுத்த இரண்டு நிபந்தனைகளுண்டு.

  1. முழு உடல் நலம். Total perfect health, a body sound as a bell.
  2. தானே பொங்கிவரும் சந்தோஷம். Self-existent joy.

தம்பி - இக்குழந்தைக்கு இதைச் செய்ய நான் துடிக்கிறேன். அதாவது,

  • அன்னையைப் பூரணமாக அறிந்து, ஏற்றுக் கொண்டு, நம்ப வேண்டும்.
  • இடையறாத நினைவு வேண்டும்.
  • உடல் வெண்கலம் போலிருக்க வேண்டும்.
  • மனம் பூரிப்பான நிலையிலிருக்க வேண்டும்.

அண்ணன் - இவையெல்லாம் முடியும், பகீரதப் பிரயத்தனம். இன்று அதுபோன்ற குழந்தை உலகில் இல்லை. இக்குழந்தை மாறினால் அது உலகத்திற்கு மகுடம். பெரிய காரியம். உன் அவசரம் உதவாது. நிதானம் வேண்டும்.

தம்பி - வார்த்தை பலிக்கிறது என்கிறார்களே, அது என்ன?

அண்ணன் - நடப்பனவெல்லாம் நாராயணன் செயல் என அறிவோம். நாம் குறுக்கிட்டால் காரியம் கெட்டுப் போகிறது. குறுக்கிட நம்மில் எதுவுமில்லை எனில், உள்ளிருந்து எழும் வார்த்தை நாராயணன் வார்த்தையாகிறது. அதனால் பலிக்கிறது.

தம்பி - காரியம் கூடிவர நாம் குறுக்கிடாமலிருந்தால் போதுமா?

அண்ணன் - Mother is a subtle institution அன்னை ஒரு சூட்சும ஸ்தாபனம் என்றது நினைவிலிருக்கிறதா? அந்த ஸ்தாபனம், குறிப்பாக அன்பர்கள் வாழ்வில் இடையறாது செயல்படுகிறது. நாம் குறுக்கிடாவிட்டால் பலிக்கிறது. "நான்' வந்து குறுக்கிடாத- வருடைய வார்த்தை பலிக்கிறது.

தம்பி - நாம் குறுக்கிடாமலிருப்பதற்கு அடையாளம் உண்டா?

அண்ணன் - நமக்கு விஷயமே தெரியாதபொழுது செயலோ, மனமோ குறுக்கிடுவதில்லையல்லவா? விஷயம் தெரிந்தபொழுது அதுபோல் மனமும் (mental impulse) குறுக்கிடாவிட்டால் அதுவே அடையாளம்.

தம்பி - குறுக்கிட்ட பின் வழியுண்டா?

அண்ணன் - Mntal impulse மன எழுச்சி வந்து மனத்தைத் தொடுமுன் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அது சிரமம் ஆனால் முடியும். விஷயம் எழுமுன் குறுக்கிடுவதில்லை என முடிவு செய்து முடிவைச் சமர்ப்பணம் செய்தால், அது சமர்ப்பணமானால், குறுக்கீடு எழாது.

தம்பி - வார்த்தை பலிக்கிறது எனில், அவர் மனம் எப்பொழுதும் அதுபோன்ற அமைதியுடனிருக்கும் போலிருக்கிறது.

அண்ணன் - ஆம். நாம் முயன்று பெறும் அமைதியை அவர் இயல்பாகப் பெற்றுள்ளார். நல்லெண்ணம் உபரியாக இருந்தால், நடக்க வேண்டிய செயல் அவர் நல்லெண்ணத்தில் உற்பத்தியாகும் வார்த்தை மூலம் பலிக்கிறது.

தம்பி - நீங்கள் சொன்ன சக்தி, ஸ்தாபனம் இங்கு எப்படிச் செயல்படுகிறது?

அண்ணன்- தெருவில் கலாட்டாவானால், போலீஸ்காரனைக் கூப்பிடுகிறோம். அவனைக் கண்டவுடன் கலாட்டா மறைகிறது. போலீஸ் என ஒன்றிருக்கிறது. வேண்டியவர் கூப்பிடுகிறார்கள். IG ஆபீசில் போலீசைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. கலாட்டா செய்பவர்கட்கு அது IG ஆபீஸ் எனத் தெரியும். கலாட்டா செய்யமாட்டார்கள். கலெக்டர் ஆபீசும் அப்படியே. எல்லாக் கவர்மெண்ட் ஆபீசுக்கும் அத்தகுதியுள்ளது என்பதால் கலாட்டா செய்பவர்கள் அங்கெல்லாம் வரமாட்டார்கள்.

தம்பி - நாம் கூப்பிடும்பொழுது மட்டும் அன்னை வருகிறார். அன்னையை மனதில் பிரதிஷ்டை செய்துவிட்டால், அன்னைச் சூழல் எப்பொழுதும் நம்மைச் சுற்றியிருக்கும். அன்னையை அழைக்க வேண்டிய அவசியமிருக்காது. வேலை சமர்ப்பணமாகும். அன்னை ஸ்தாபனங்களில் புறச் சூழலில் அன்னை நிறைந்திருப்பார். நெஞ்சில் பிரதிஷ்டை செய்தால் அகச் சூழலில் அன்னை இருப்பார். கூப்பிடும் அவசியமில்லை.

அண்ணன் - புறச் சூழலிலிருப்பது அன்னை எனும் ஸ்தாபனம். அகச் சூழலிலிருப்பது அன்னை எனும் ஸ்தாபனம் என்றாலும் அது ஆன்மாவுக்குரிய ஸ்தாபனம். இரண்டும் சேர்வது பெரியது.

தம்பி - அகந்தை என்னாவது?

அண்ணன் - அகந்தை கரைந்தால்தான் அகச் சூழல் நிறையும். அன்னையின் சூழல் உலகில் அன்னை அவதரிக்கும் முன்னேயுண்டு. அவர் அவதரித்த பிறகு அது அதிகமாயிற்று. அவர் வாழ்ந்த இடத்திலும், அவர் அன்பர்கள் உள்ள இடத்திலும் சூழல் ஸ்தாபனமாக வேலை செய்கிறது. போலீஸ் ஸ்டேஷன் உள்ள இடத்தில் போலீஸ் உள்ளது. இல்லாத ஊரில் மணியக்காரர் மூலம் போலீஸ் வேலை செய்யும். நேரடியான அதிகாரமிருக்காது. அதுபோல் அன்னை அன்பர்கள் அவர்களுடைய ஸ்தாபனமாகச் செயல்படுகிறார்கள். உலகம் உற்பத்தியானதிலிருந்து உலகெங்கும் இருப்பது அன்னைச் சூழல் தான் என்றாலும், அளவு மாறுகிறது.

தம்பி - அன்னை ஜீவியம் நம் குறைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவதெப்படி என மேலும் விவரமாகச் சொல்லவும்.

அண்ணன் - கார் ரிப்பேர் ஷாப்புக்குப் போனால், நமக்கு எந்தவித ரிப்பேர் தேவையானாலும் செய்து தரும் வசதியை வைத்திருக்கிறார்கள். அது கார் ரிப்பேருக்காக என்று ஏற்பட்டது. ஓர் இன்ஜீனியரிங் ஒர்க்ஷாப்புக்குப் போனால், அவன் நம் காரில் உள்ள ரிப்பேரைச் சரி செய்ய வேண்டுமானால் அவனுக்கு முடியும். காரை ரிப்பேர் செய்ய ஏற்பட்ட இடமில்லை என்றாலும் இன்ஜீனியரிங் ஒர்க்ஷாப் என்பதால், கார் வேலையையும் அவர்களால் செய்ய முடியும். கார் வேலை இன்ஜீனியரிங்க்கு உட்பட்டதுபோல், வாழ்வில் எப்பகுதியும் அன்னைக்குட்பட்டது. எந்தத் தேவை நமக்கெழுகிறதோ, அதற்கேற்ப அன்னைச் சூழல் மாறும் திறனுடையது.

தம்பி - ரெவின்யூ டிபார்ட்மெண்ட் போலவா?

அண்ணன் - எந்த டிபார்ட்மெண்ட்டும் தன் வேலையை மட்டும் செய்யும். ரெவின்யூ டிபார்ட்மெண்ட் மட்டும் எந்த நேரத்திலும் எந்த வேலையையும் செய்ய அழைப்பார்கள். அவர்களும் செய்வார்கள். எலெக்ஷன், வெள்ளம், கலவரம், பரீட்சை, ஸ்டிரைக் என எதுவும் அவசரத்திற்காக ரெவின்யூ டிபார்ட்மெண்டாரிடம் கொடுப்பார்கள்.

தம்பி - IAS ஆபீசர் போல எந்த டிபார்ட்மெண்ட்டுக்கும் அன்னைச் சூழல் போகும் போலிருக்கிறது.

அண்ணன் - ஒரு டிபார்ட்மெண்டில் பிரமோஷனில் வந்தவர்களை விட IAS ஆபீசர்கள் பாரபட்சமின்றி, வேலையைச் சிறப்பாகச் செய்வதாகக் கூறுவதைக் கேட்டதுண்டா?

தம்பி - அதுபோல் அன்னைச் சூழல் ஏதாவது ஒரு செயலுக்காக தன்னை அதற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்படும்பொழுது சாதாரணச் செயலைவிட அது சிறப்பாக இருக்குமா? உதாரணம் உண்டா?

அண்ணன் - அன்பர் ஒருவர் புதியதாக ஒரு துறையில் செயல்பட்டார். பாங்க் அத்துறையில் சம்பந்தப்படாதது. அன்னை செயல்பட்டார். அத்துறைக்குப் பாங்க் வந்தது. அற்புதமாகச் செயல்பட்டது. அதன் விசேஷங்கள் பல.

  1. அத்துறைக்கு வழக்கமான வட்டியைவிட வட்டி குறைவு எனச் சட்டம் வந்தது.
  2. சில அம்சங்கட்கு வட்டியுமில்லை என்றார்கள்.
  3. ஓரளவு மான்யம் உண்டு என்ற நிலையும் வந்தது.
  4. ஈடில்லாமல் கடன் பெறும் விஷயங்களும் எழுந்தன.

தம்பி - ஆமாம், எனக்குத் தெரியும். இவையெல்லாம் அன்னையின் சிறப்பல்லவா?

அண்ணன்- அன்னைக்கேயுரிய சிறப்பு இத்துறையில் எழுந்தது. பொதுவாக பாங்க் ஒரு துறையில் செயல்பட்டால் அத்துறை பயன்பெறும். இத்துறை பாங்க்குக்குப் பயன்படுத்தும்படி ஏராளமான டெபாசிட்டைக் கொடுத்தது.

தம்பி - சத்தியஜீவியம் செயல்பட்டால் கருவியும் திருவுருமாறும் என்கிறார் அன்னை.

அண்ணன் - யார் பலனை மட்டும் பெறுவார்களோ, அவர்களால் பாங்க்குக்குப் பலன் பெருவாரியாக எழுந்தது.

தம்பி - அது என்ன சட்டம்?

அண்ணன் - அது திருவுருமாற்றத்தைக் கடந்த நிலை, அருளன்று, பேரருள். இதுபோன்ற அம்சம் அன்னையுள்ள எல்லா இடங்களிலும் காணலாம். அதைத் தத்துவரீதியாக நாம் அறிவது அன்னை ஞானம்.

தம்பி - யாராவது எடுத்து உதாரணத்தின் மூலமாகச் சொன்னால் புரியும். அதிகம் படித்த குழந்தை உலகப் பிரசித்தி பெறலாம் என்றீர்களே, அது எப்படி? Genius மேதையாகப் பிறந்திருக்க வேண்டாமா?

அண்ணன் - அமெரிக்காவில் வீடு பெருக்குபவளும் காரில் வருகிறாள். நமக்குக் கார் பணக்காரனுக்கு. நமக்கு அதிகபட்சம், அமெரிக்காவில் குறைந்தபட்சம். அன்னை வாழ்வு அன்னையின் கோட்பாடுகளை ஏற்ற வாழ்வு. Mother first, anything next அன்னையை முதன்மையாகக் கொண்ட வாழ்வில் மனித வாழ்வின் உச்சக்கட்டம், அங்குக் குறைந்தபட்சம் என்பது சட்டம்.

தம்பி - என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நம்ப முடியவில்லை. ஏழ்மை நிறைந்த கிராமம் அன்னையை ஏற்றுக்கொண்டு செல்வம் நிறைந்த கிராமமாக மாறியதைப் பார்த்தேன். இருந்தாலும் மனம் சம்மதப்படமாட்டேன் என்கிறது.

அண்ணன்- அதைத்தான் நான் அன்னையைப் புரிந்துகொள்வது என்றேன்.

தம்பி - சரி, இந்தக் குழந்தை உலகப் பிரசித்தி பெறுமா?

அண்ணன் - எந்தக் குழந்தையும் 11 வயதில் நிரூபமா பெற்றதைப் பெற்றிருந்தால், அன்னையை ஏற்றால், உலகப் பிரசித்தி பெறும். நமக்குப் பணம், அந்தஸ்து, செல்வாக்கு, புகழ், பிரபலம் முக்கியம். அதனால் அது கோடியில் ஒருவருக்கு என நினைக்கிறோம்.

தம்பி - அதுபோல் புரியும்படி அன்னையைச் சொல்லுங்களேன்.

அண்ணன் - அன்னையை ஏற்றுக்கொண்டால், அன்னை நம்மை அன்னையாக்குகிறார்.

தம்பி - நம்ப முடியவில்லையே.

அண்ணன் - நம்புவது சிரமம். விஷயமே நம்பிக்கையில் தான் இருக்கிறது. நாம் அன்னையை வணங்குகிறோம். அன்னை நம்மைத் தம்போலச் செய்கிறார்.

தம்பி - முடியுமா?

அண்ணன் - நமக்கு அது பிடிக்கவில்லை என்கிறார் அன்னை. சாவித்ரியில்,

"எந்த அற்புதத்தை மனம் விழைகிறதோ அதை மனிதன் மறுக்கிறான்".

"தான் விரும்பும் கொடுமைக்குக் கடவுளை நிந்தனை செய்கிறான்" என இரு வரிகள் உள்ளன.

நம்ப முடியவில்லை என்கிறோம். உண்மையில் அன்னை வாழ்வின் உயர்வு நமக்குப் பிடிக்கவில்லை.

தம்பி - இந்தக் குழந்தை நிலை என்ன?

அண்ணன் - இது சாதாரணக் குழந்தை. அற்புதமான பயிற்சி. அபரிமிதமான வெற்றி. பெற்றோர் சேவை உணர்வு உள்ளவர்கள். சேவை பெரியது. ஆனால் சேவையால் நான் சொல்லும் பலன் வாராது. அன்னையைக் குழந்தை ஏற்க முடியும். அது நடந்தால் நான் சொல்வது நடக்கும். பெற்றோரும் ஏற்றால் பெரியது.

தம்பி - நான் அன்னையை ஏற்றுக்கொண்டுள்ளேனே?

அண்ணன் - முதலில் அன்னை என்றால் என்ன என்று அறிய வேண்டும். நான் சொன்ன சாவித்ரி வரிகள் பக்கம் 365இல் இருக்கிறது. நான் கூறவில்லை. பகவான் எழுதுகிறார். பகவான் நாமெல்லாம் உலகப் பிரசித்தி அடைய முடியும் என்று கூறவில்லை. மனிதன் சத்தியஜீவனாக முடியும் என்கிறார். அது சிவபெருமானைவிட உயர்ந்த நிலை. அது பூரணயோகம். நான் சொல்வது பூரணயோக சக்தியை வாழ்வில் சிறப்பாகப் பயன்படுத்துவது.

தொடரும்...

*****



book | by Dr. Radut