Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

  1. இழந்த உரிமை, உடைமை, சந்தோஷத்தை அன்னை மீட்டுத் தருகிறார்கள். உடைந்த கண்ணாடி பாட்டிலை உருக்கி மீண்டும் பாட்டிலாக வார்க்க முடியும் என்றாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை. இழந்த உரிமையைப் பெற சட்டமும், நாட்டு வழக்கும் மாற வேண்டும். கண்ணாடி உருகி அதன் முன் நிலையை அடைய வேண்டும் என்பதுபோல, உணர்ச்சி அதன் ஆரம்ப நிலையை அடைந்தால்தான் அதற்கெதிரான உருமாற்றம் அடைய முடியும்.
    • இழந்ததைப் பெறலாம்.
    • ஆதியில் ஆரம்பித்தால் இழந்ததைப் பெறலாம்.
    • எதையும் செய்யலாம். இழந்த அனைத்தையும் மீண்டும் பெறலாம்.
    • முந்தைய நிலை பலித்தால், பிந்தையது முடியும்.

    பரீட்சை பெயிலானால் மீண்டும் பாஸ் செய்யலாம். ஆனால் ஒரு வருஷம் போய்விடும். கிழிந்த துணியைத் தைக்கலாம். ஆனால் கிழிசல் மறையாது. கடலில் மூழ்கிய பொருள் கிடைக்காது. போன உயிர் வாராது. இழந்த பொருளை மீண்டும் அனைவராலும் பெற முடியாது. அன்னை சட்டம் வேறு.

    அன்னை காலத்தைக் கடந்தவர். காலத்தைக் கடந்தும் அருளை நமக்கு அன்னை நம்பிக்கை மூலம் வழங்குகிறார். நம் நம்பிக்கை மூலம் நாம் காலத்தைக் கடக்க முடியும். அதன் மூலம் இழந்ததைப் பெற முடியும். அதற்கு வரையறையுண்டு என்றால், அது நம்பிக்கைக்குரிய வரையறையே தவிர அருளுக்குரியதன்று.

    அன்பர்கள் வாழ்வில் நடந்தவற்றை யோசனை செய்து பார்த்தால், அவர்கள் நிலையில் முடியாதது என்பது முடியும் என்று பல நூறு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றை நாம் பலனாகப் பெற்றால், பலன் அத்துடன் முடிகிறது. பலன் மூலம் நாம் ஞானம் பெற முயன்றால், நமக்கு அந்த ஞானம் வரும். ஞானத்தின் அடிப்படையில் செயல்பட்டால், நடக்காதது நடக்கும். நமக்கு நடக்காதது முதலில் நடந்தால், முடிவில் எவருக்கும் நடக்காதது நடக்கும். அன்னை செய்தவற்றை நாம் அறிந்தால் அவை விளங்கும். நம்முடைய அதிகபட்ச நம்பிக்கை செயல்பட்டு காரியம் நடந்தால், உடைந்த கண்ணாடி பாட்டில் உயிர்பெறும்.

    இதைச் செய்து முடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

    • அன்னைக்கு இந்த சக்தி பரிபூரணமாக உண்டு என்று முழுமையாக நம்ப வேண்டும்.
    • இது நடக்காவிட்டால், அது நம் நம்பிக்கையின் குறைவு என மனம் ஏற்கவேண்டும்.
    • குறைவான நம்பிக்கையை நிறைவாக மாற்ற வேண்டும்.
    • மாறியபின் காரியம் பூர்த்தியாகும்.
    • பூர்த்தியாகாவிட்டால், நடைமுறையில் குறை இருக்கிறது எனப் பொருள்.
    • அதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
    • கண்டுபிடிக்க முடியாவிட்டால், அக்காரியத்தில் பூரண அனுபவம் உள்ளவர்களைக் கேட்டுத் தடையை, குறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
    • கண்டுபிடித்த குறையை அகற்ற வேண்டும்.
    • அதன்பின் பிரார்த்தனையில்லாமல் பலிக்கும்.
    • பலிக்காவிட்டால், 3 நாள் பிரார்த்தனை தவறாது பலிக்கும்.
    • அது தவறியதாக இதுவரை சரித்திரம் இல்லை.

    வீட்டை விற்றுக் கடன் கொடுத்தவர், 10 ஆண்டுக்குப் பின் அன்னையின் இம்முறையை அறிந்து மீண்டும் வீடு வாங்கினார். எஸ்டேட்டை இழந்தவர், திரும்பப் பெற்றார். 17 வருஷம் கழித்து இழந்த வேலையை மீண்டும் ஒருவர் பெற்றார். 18 ஆண்டுகட்குப் பின் மகப்பேறு கிட்டியது. இழந்ததை மீண்டும் பெறலாம். நிச்சயம் பெறலாம். புதிய வாய்ப்பைப் பெறுவது சிரமம் என்றாலும், இழந்ததைப் பெறுவதைவிட, வாய்ப்பைப் பெறுவது எளிது. ஏனெனில் இழந்ததைப் பெற நாம் நம் பழைய நிலையை நேர் எதிராக மாற்றுதல் அவசியம். அது நமக்குச் சிரமம்.

    களிமண்ணால் செய்யப்பட்ட குடத்தை சூளையிடுவதற்கு முன், பாத்திரமாக மாற்ற முடியும். குடம், மாறிய பாத்திரமாக மீண்டும் களிமண்ணாகி பாத்திரமாக உருப்பெற வேண்டும். முடியும் என்றால், அதன் ஆரம்ப நிலையை எய்தினால்தான் மாற்றம் முடியும். எனது சொத்தை நான் இழந்துவிட்டேன் என்றால் பொதுவாக உலகில் அதை மீண்டும் பெறும் வழியில்லை. வழி என்று ஒன்றிருந்தாலும், அது ஆயிரத்தில் ஒருவர்க்குப் பல ஆண்டுகட்குப் பின் பலிக்கும். அன்னையிடம் அவர் முறையை ஏற்றுக் கொள்பவர் அனைவருக்கும் பலிக்கும். எவ்வளவு நாளாகும் என்பது கேள்வியில்லை. மனம் மாறினால், பலன் உண்டு. மாறியவுடன் பலன் வரும்.

    சொத்தை இழந்தவர் அறிவில்லாமல் அல்லது பொறுப்பு இல்லாமல், ஊதாரித்தனமாகவோ, வேறு வகையிலோ இழந்திருப்பார். பொறுப்பில்லாமல் இழந்தவரை எடுத்துக் கொள்வோம். சொத்து பொறுப்புக்கு சேருவது. பொறுப்பின்மை சொத்தை இழக்கும். பொறுப்பின்மையால் சொத்தை இழந்தவர், தன் பொறுப்பின்மையைப் பொறுப்பாக மாற்றிக் கொண்டால், மீண்டும் அந்தச் சொத்து வரும். இதை ஏற்பவர்கள் குறைவு. ஏற்றால், நம்புபவர்கள் குறைவு. இழந்தவர் மனம் திறந்து பேசினால், தான் பொறுப்பற்று நடந்ததை அறிந்து அவர் மனம் அதை ஏற்றுக்கொண்டால், இனி மனதால் பொறுப்புடன் நடப்பதாக ஏற்றுக்கொண்டு, அதைச் செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்குப் பொறுப்பின்மை என்ற குணம் தன்னையறிந்து, பொறுப்பின்மையை இழந்து, ஆரம்ப நிலைக்குப் போய், மீண்டும் பொறுப்புள்ள குணமாக மாற வேண்டும். அதெல்லாம் என்னால் முடியாது என்பவருக்கு நாம் உதவ முடியாது. இன்று மனம் மாறி, பொறுப்பேற்பட்டு, சிறு காரியங்களில் பொறுப்போடு நடந்து, பெரிய விஷயங்களில் பொறுப்பு ஏற்பட்டு, இழந்த சொத்தை பெறும் அளவுக்குப் பொறுப்பு வரும் நேரம் சொத்து தேடி வரும்.

    நாமறிந்த மனித வாழ்க்கையில் இதுபோல் மனம் மாறினால் வீட்டிலுள்ளவர்கள் போற்றுவார்கள். இதுபோலிருந்தால் சொத்து போயிருக்காது என்பார்கள். அதனால் அவர் மனநிம்மதி பெறலாம். இழந்த சொத்து மீண்டும் வாராது. வருவதற்கு வாழ்க்கையில் முறைகளில்லை. வரவேண்டுமானால், மீண்டும் சம்பாதிக்க முயன்றால், பலிக்கும். எப்பொழுது பலிக்கும் என்பது அவர் கையில் இல்லை. அன்னையை ஏற்றுக்கொண்ட வாழ்வில்,

    செயல் மன உணர்வால் ஏற்படுகிறது என்பது சட்டம். மனம் மாறிய நேரம், சூழ்நிலை மாறும். சூழ்நிலை மாறினால், இழந்தது வரும். அனைவரும் இம்முறையால் இழந்ததைப் பெறுவர். முயற்சியுடையவர் இழந்ததைவிட அதிகமாகப் பெறுவார்கள்.

    இந்தச் சட்டம் உரிமை, உடைமை, அந்தஸ்து, பதவி, செல்வாக்கு, பணம், அனைத்திற்கும் பொது.

    வாழ்வில் மனம் மாறுவது நல்லது, ஆனால் அரிது.
    மனம் மாறினால், குணம் மாறும், இழந்தது வாராது.
    அன்னையிடம், மனம் மாறினால், இழந்தது வரும்.

  2. சர்வ ஆரம்பப் பரித்தியாகி எனில் எவ்வளவு சிறியதானாலும், அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. (உ.ம்.) ஓர் அபிப்பிராயத்தைச் சொல்வது, நோக்கத்தை வெளியிடுவது, சௌகரியத்திற்காக ஒரு பழக்கப்பட்ட காரியத்தைச் செய்வதும் அது போலாகும். அடக்க முடியாத ஆசையை அடக்க முயல்வது ஆரம்பமாகும்.

    சர்வ ஆரம்பத்தையும் பரித்தியாகம் செய்ய பிழையற்ற பூரணம் தேவை.

    சர்வ ஆரம்பப் பரித்தியாகி.
    பூரணயோகத்தின் அடிப்படைகள் பல்வகையானவை. அவை,

    • சரணாகதி
    • திருவுருமாற்றம்
    • சர்வாரம்பப் பரித்தியாகி
    • சமர்ப்பணம்

    இதன் யோக ரகஸ்யம் உண்டா? அது என்ன? எப்படி இது யோக ரகஸ்யமாயிற்று? நடைமுறைக்குப் பயன்படும் முறையாக எடுத்துக்கொள்ளலாமா?

    நாம் வாழ்கிறோம். அதாவது உயிரோடிருக்கிறோம். இடையறாது செயல்படுகிறோம். தண்ணீர் குடிப்பதுபோன்ற சிறு காரியங்களிலிருந்து வெளிநாடு போவது, எலக்ஷனில் நிற்பது போன்ற பெரிய காரியங்கள் வரை ஆயிரமாயிரம் செயல்களைச் செய்கிறோம். இச்செயல்கள் உடலாலும், உணர்வாலும், மனத்தாலும் நடைபெறுகின்றன. அறிவு போடும் உத்தரவை கை செயல்படுத்துகிறது. அதற்குத் தேவையான சக்தியை (energy) உணர்வு தருகிறது. இதுவே ஆன்மீகச் சட்டம். விஞ்ஞானச் சட்டமும் இதுவேயாகும். இப்படிச் செய்ய வேண்டிய காரியங்களை நம்முள் நாம் ஆரம்பிப்பதைக் காணலாம்.

    • "ஏதாவது படித்தால் தேவலை போன்றிருந்தது. இதயம் படித்தேன்".
    • "என் மாமன் என் அண்ணனை குறை கூறிப் பேசினார். எனக்குத் தாங்கவில்லை. பதில் சொல்லாமலிருக்க முடியவில்லை. சொல்லிவிட்டேன்".
    • "மாம்பழம் 2 சாப்பிட்டேன். 3வது பழத்தையும் சாப்பிடத் தோன்றியது, சாப்பிட்டேன்''.

     இதுபோல் நாம் செயல்படும்பொழுது அச்செயலை நாம் நம்முள்ளே ஆரம்பிக்கின்றோம். ஆசையாலோ, தேவையாலோ, அவசியத்தாலோ நாம் இதுபோன்று காரியங்களை ஆரம்பிப்பதை தியாகம் செய்ய வேண்டும். சர்வ காரியங்களையும் அதுபோல் தியாகம் செய்பவர் சர்வாரம்பப் பரித்தியாகி ஆவார்.

    இதுபோன்ற ஆரம்பம் இல்லாவிட்டால், வாழ்வேயில்லை. ஆனால் யோகத்திற்கு இது அவசியம்.

    நடைமுறை: நமக்குப் பிரச்சினைகளைத் தீர்க்க இதை - சர்வாரம்பப் பரித்தியாகம் - ஒரு முறையாகப் பயன்படுத்தலாம். வீட்டில் fuse போய்விட்டது. இரண்டு நாளாக EB ஆட்கள் வரவில்லை. நாம் போய் அழைத்து வாராவிட்டால் எத்தனை நாளானாலும் அப்படியேயிருக்கும். அவர்களாக 5 நாள் கழித்து வந்தால் அதுவரை நமக்குத் தாங்குமா?

    நம் கடமை complaint தர வேண்டியது. போய் அழைத்து வர வேண்டியது. அன்னையை நினைத்து அவற்றைச் செய்தால் வேலை முடியும். போய்க் கூப்பிட்டால், வருவதாகச் சொல்கிறார்கள், வரமாட்டேன் என்கின்றனர் எனில், நம் கடமை பூர்த்தியாகிவிட்டது. மேற்கொண்டு அன்னையிடம் சொல்லிவிட்டு, மனதால் ஆரம்பிக்கக் கூடாது என்று முடிவு செய்தால், முடிவை நிறைவேற்றினால், EB ஆட்கள் அதே நேரம் தவறாது வருவார்கள்.

    நாமாக ஒரு காரியத்தைச் செய்யப் பிரியப்பட்டு ஆரம்பிப்பதை 'ஆரம்பம்' என்கிறார். ஒரு காரியம் செய்யத் தோன்றினால், தோன்றும் எண்ணத்தை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து, சமர்ப்பணத்திற்கு என்ன உத்தரவு வருகிறது எனக் காத்திருந்து, அதன்படி நடப்பது ஆரம்பத்தைத் தியாகம் செய்வதாகும். எல்லாக் காரியங்களையும் அதுபோல் செய்பவன் சர்வ ஆரம்ப பரித்தியாகி ஆகும்.

    இதைச் செய்ய முன்வருபவர்கள் மிகவும் குறைவு. முன் வருபவர்களுக்குச் சற்று நேரத்திற்குள் இந்த எண்ணம் மறந்துவிடும். அடுத்த முறை நினைவு வருவது சில நாளாகும். சில சமயம் பல மாதமாகும். அப்பொழுது மீண்டும் முனைந்தாலும் ஓரிரு முயற்சிகளில் இது மீண்டும் மறந்துபோகும். மறந்துபோகவில்லை எனில், இது முடியவில்லை என்று தெரியவரும். மூச்சை இரண்டு மணி நேரம் அடக்க எடுக்கும் முயற்சி சில நிமிஷத்தில் முடிவது போல், ஆரம்பத்தைத் தியாகம் செய்யும் முயற்சியும் உடனே முடிவடைந்துவிடும். மூச்சை நெடுநேரம் அடக்குவது யோகப் பயிற்சி. அதைப் பெற நெடுநாளாகும். பெற்று முயன்றால், முடியும். அதே போல் கரணங்கள் தூய்மைப்பட்டு, மன அலைச்சல் அழிந்து, மன எழுச்சியடங்கி, உணர்வு நேர்ப்பட்டு, சுயகட்டுப்பாட்டில் வந்து, உடலின் படபடப்பு அடங்கி, சாந்தி பெற்று, ஜீவன் சமர்ப்பணத்தை ஏற்க வேண்டும். சமர்ப்பணத்தை ஏற்றால், ஆரம்பத்தில் வாய்ச் சொல்லால் சமர்ப்பணம் செய்கிறோம். அதாவது வாயால், ‘இக்காரியத்தை நான் சமர்ப்பணம் செய்கிறேன்’ என்கிறோம். அதற்கிசைய காரியத்தின் போக்கு மாறுகிறது. வாயால் சொல்வது மறக்காமல் தொடர்ந்தால், மனதால் அதையே சொல்லலாம். அதற்குப் பலன் அதிகம். அது தவறாது தொடர்ந்த நிலையில், மனதில் எழும் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்தால், எண்ணம் எழுந்தது தணிந்து, அடங்குவது தெரியும். மனம் அமைதியுறும். காரியம் பெருமாறுதலடையும்.

    அதை இடையறாது செய்பவர்கள் உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்தால், உடலில் பேரளவு சக்தி நிறைவதைக் காணலாம். அது முழுமை பெற்றபின் உடல் அசைவுகளை அதேபோல் சமர்ப்பணம் செய்து, பலித்து, நிரந்தரமானால், ஆரம்பத்தைத் தியானம் செய்ய முன்வரலாம். இனி ஆரம்பத்தைத் தியாகம் செய்வது பலிக்கும் வாய்ப்புண்டு.

    நம் அபிப்பிராயம் மனதில் எழுந்தால், சொல்லாமலிருக்க முயலும்பொழுது இதன் கரு விளங்கும். ஒரு நோக்கம் (attitude) எழுந்தாலும், மறுப்பது கடினம். போன் பேசும்பொழுது வலக்கையில் ரிசீவரை வைப்பது பழக்கமானால், அப்பழக்கம் தன்னை வலியுறுத்தும். அதை மாற்ற முயன்றால் எரிச்சல் வரும். போனில் பேசவே பிடிக்காது. பழக்கத்தை மாற்ற முடிய வேண்டும். அது மிகவும் கடினம். அபிப்பிராயம், நோக்கம், பழக்கம் ஆகியவற்றை தியாகம் செய்த பின்தான் ஆரம்பத்தைத் தியாகம் செய்ய முடியும்.

  3. பிறருக்கு உபதேசம் செய்தபின் ஒவ்வொரு முறையும், அது நமக்கே எந்த அளவுக்குப் பயன்படும் என்று கருதுவது நல்லது. இதைப் பின்பற்றினால் அளவுகடந்து முன்னேறலாம்.

    தனக்குத் தேவையானதைப் பிறருக்கு உபதேசம் செய்கிறோம்.

    முன்னேறலாம் என்றால் என்ன? அது எப்படி அளவு கடந்து போகும்? மனிதன் தன் வாழ்வை (survival) போதுமென்ற அளவில் அமைத்துக்கொள்கிறான். பிழைக்க வழி தெரிய வேண்டும் என்பது வழக்கு. அதாவது தேவைகள் - உணவு, உடை, இருப்பிடம் - பூர்த்தியாகும் அளவுக்கே அவன் முயற்சி இருக்கும். அதற்கு மேல் பொதுவாக முயல்வதில்லை. முயல்பவனைப் பேராசைக்காரன் என்பார்கள். நாலு பேர் மதிக்கத்தக்க அளவு முனைபவர் பலர். இவர்கள் சிறுபான்மையோர். இவர்களும் அந்நிலையை எட்டியவுடன் முயற்சியை நிறுத்திவிடுவார்கள்.

    ஒருவனால் பெறக்கூடியதை முயன்று பெறுவது முன்னேற்றம். அது அவன் இன்று பெற்றுள்ளதைப்போல் 10 மடங்கிருக்கும். மரத்தடியில் நின்று பறிக்க முடியும் அளவு பிழைக்கத் தேவையானது போலவும், மரத்தின் மீதேறி பறித்துண்பது முன்னேற்றம் போலவும் கருதலாம். ஆசை தீரச் சாப்பிட முடியும். அளவுகடந்த முன்னேற்றம் என்பது அடுத்த கட்டம். மரத்தில் ஏறி தன்னால் முடிந்த அளவு பறிப்பது, பறித்ததை விற்றுப் பலனடைவது போன்றது அளவுகடந்த முன்னேற்றம். அதற்களவில்லை. நாம் ஏற்படுத்துவதே அளவு.

    அனைவராலும் பிறருக்கு உபதேசம் செய்ய முடியாது. உபதேசம் செய்ய அனுபவம், அறிவு தேவை. அறிவு மனத்திற்கு உரியது. அனுபவம் உணர்ச்சிக்குரியது. அறிவு உடலையடைந்தால் அனுபவம் முதிர்ந்து பலனாகும்.

    ஸ்ரீ அரவிந்தர் Thoughts & Aphorisms ‘சிந்தனை மணிகள்’ என்ற தலைப்பில் 500 கருத்துகள் எழுதியுள்ளார். தாம் பெற்ற கிருத்துவப் பயிற்சியைத் தம்மிடமிருந்து விலக்க அவர் செய்த முயற்சி அது என்று அன்னை கூறுகிறார்.

    நினைவு, பேச்சு, எழுத்து, உபதேசம் ஆகியவற்றிற்கு ஒரு காரணம் உண்டு. நமக்கு முழுவதும் புரியாததை நாம் நினைக்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம், உபதேசிக்கிறோம் என்றொரு கருத்துண்டு. மகாபுருஷர்கள் போக மற்றவர்க்கு இந்தச் சட்டம் உண்மை. மகாபுருஷர்கட்கும் ஆரம்பக் காலத்தில் இது உண்மையாகும்.

    அறிவு மனதில் தெளிவுபடாத நேரம் அது நினைவிலெழும். அறிவு ஏற்றுக்கொண்டதை உணர்வு ஏற்க பேச்சு உதவும். உணர்வு ஏற்றதை உடல் ஏற்க - அதாவது பூரணப் பலன் பெற - எழுத்து உதவும். பிறருக்கு நாம் உபதேசம் செய்வதை, நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கமாட்டோம். அதனால் உபதேசம் முடிந்தபின், நாம் அதை எந்த அளவு பின்பற்றுகிறோம் என நினைத்துப் பார்த்தால், உண்மையில் நாம் சொல்லியதைப் பாதி அளவுக்கே பின்பற்றுகிறோம் என அறிவோம்.

    நாம் வாழ்வில் முதல் அளவில் பல விஷயங்களிலிருக்கிறோம். முதல் வகுப்பில் பாஸ் செய்யும் மாணவன் மூன்றாம் வகுப்பில் பாஸ் செய்வதைப் போலிருக்கிறோம். முன்னேற்றத்தை விழைய நாம் சிந்திக்க வேண்டும்.

    பிறருக்கு நாம் சொல்வதை முழுமையாக நம் வாழ்வில் பின்பற்ற முயன்றால், தெளிவுடன் முன்னேற்றமும் ஏற்படும். அதையே ஒரு முறையாகப் பின்பற்றினால், முன்னேற்றத்திற்கு முடிவில்லை.

    அளவுகடந்த முன்னேற்றம் அனுதினமும் அமையும்.

    பெற்றோர், ஆசிரியர், முதலாளி, தலைவர் போன்றவர்கட்கு பிறருக்கு உபதேசம் செய்யும் கடமையுண்டு. கடமைக்குட்பட்டு கூறும் அறிவுரை சரியானது. அது மேற்சொன்ன தலைப்பின் கீழ் வாராது. அதுபோக தேவையில்லாமல் உபதேசம் செய்பவருண்டு. தேவையுள்ளபொழுது, அதை ஒரு சந்தர்ப்பமாக ஏற்று அதிகமாக உபதேசம் செய்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவருக்கே மேற்சொன்னது பொருந்தும்.

    அடிப்படை உண்மை

    தனக்குப் பிடிக்காதது, முடியாதது, தனக்கு நம்பிக்கை இல்லாதது ஆகியவற்றையே மனிதன் பிறருக்கு உபதேசம் செய்கிறான். தனக்கு முடியும் என்றபின் உபதேசம் செய்வதை நிறுத்திவிடுவான்.

    பிறருக்கு உபதேசம் செய்கிறார் எனில், அவருக்கே நம்பிக்கை இல்லை எனப் பொருள்.

    நம்பிக்கையில்லாதபொழுதுதான் உபதேசம் செய்வார்கள்.

    இது அடிப்படை உண்மையானால், விதிவிலக்கு, மாற்றம், திருத்தம் உண்டல்லவா? ஓரளவில் விலக்கு, மாற்றம், திருத்தம் உண்டு. வேறொரு பெரிய அளவில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய Aphorisms சிந்தனை மணிகளையும் அன்னை இந்தச் சட்டத்திற்குட்படுத்தி, பகவான் தாம் பெற்ற கிருஸ்துவப் பயிற்சியிலிருந்து விடுபடவே இவற்றை எழுதினார் என்கிறார். மேதை (genius), சிருஷ்டிக்கர்த்தாக்கள் (creative writers) போன்றவர்கள் எந்த அளவுக்கு இந்தச் சட்டத்திற்குட்படுவார்கள் என்று விவாதிக்காமல், நம்மைப் போன்றவர்களை மட்டும் கருதுவதற்காகவே மேற்கூறியதை எழுதினேன்.

    நாம் பிறரை விமர்சிப்பதற்குப் பதிலாக, ஒருவரிடம் இதுபோல் ½ மணி பேசிய பின், அவர் போனபின், நாம் என்ன பேசினோம் என்று நினைத்துப் பார்த்தால்,

    • பிறர் பேசும்பொழுது குறுக்கிட்டுப் பேசக்கூடாது.
    • வேலையைத் தாமதிக்காமல் செய்ய வேண்டும்.
    • கடன் வாங்குவது தவறு என்ற 3 கருத்துகளை வலியுறுத்தி விளக்கமாகப் பேசியவர் கண்டார். கேட்டுக் கொண்டவர், "மிகப்பயனுள்ள கருத்து. எனக்கு நேரடியாகப் பயன் தரும்" என்று கூறிப் போனார் எனில், அதை அடுத்துப் பேசியவர் தம் வாழ்வை நினைவுகூர்ந்தால்,
    • குறுக்கிடாமல் அவராலிருக்க முடியாது.
    • எந்தக் காரியமும் நேரத்தில் செய்ததில்லை.
    • ஏராளமான கடன் பாக்கியுள்ளது எனத் தெரியும். இது ஒரு absolute truth, சாதாரணமானவர்கள் வாழ்வில் விலக்கில்லாத சட்டம் என்பதை நாம் அன்றாடம் காணலாம்.
    •  தம்மை ஒருவர் அறிய வேண்டுமானால், இதுவரை யார், யாருக்கு என்ன என்ன உபதேசம் செய்தோம் என நினைத்துப் பார்த்தால், அவருக்கு அவருடைய எல்லாக் குறைகளும் தெரிய வரும். தாமே அவ்வுபதேசங்களைப் பின்பற்றினால் அவர் வாழ்வு பெரிய அளவு முன்னேறும்.

  4. வாய்விட்டுப் பேசினால் புரியக்கூடியதுண்டு. மௌனமாகப் படிப்பதால் புரியக்கூடிய உயர்ந்த கருத்துண்டு. முனிவர் மனம் எண்ணத்தின் உதவியின்றி அறியும். ரிஷியின் மனம் காட்சியாகவே காணும். புரிவதென்பதே அங்கில்லை. யோகிக்கு ஜோதியும் தேவையில்லை, தானே புரியும். சத்திய ஜீவியத்திற்கு ஞானமே தேவையில்லை.

    வாய்விட்டுப் படித்தும், மௌனம் காத்தும், சிருஷ்டியில் பார்க்கும் ஞானம் சத்தியஜீவியத்திற்குத் தேவையில்லை.

    நாம் படித்தது புரியவில்லை எனில், உரக்கப் படித்துப் பார்ப்பதுண்டு. அப்பொழுது புரியும். நாம் சொல்லியது புரியவில்லை என்றால், புரியாதவர்க்குப் புரிய குரலை உயர்த்திப் பேசுவதுண்டு.

    நமக்கே புரியாத நேரம் நம் குரல் உயர்வது வழக்கம்.

    வாய்விட்டுப் படித்தால் 10 பக்கம் படிக்க முடியுமானால், மௌனமாகப் படித்தால் அதிகமாகப் படிக்கலாம். அதிக அளவும் புரியும். கருத்து உயர்ந்ததானால், சத்தம் போட்டுப் படித்தால் புரியாது. மௌனமாகப் படித்தால் விளங்கும். இவை நம்மைப் போன்ற மனிதர்கட்கு.

    முனிவர்கள் உயர்ந்த ஞானத்தை அறிபவர்கள். அவர்களுக்கு சொல் குறுக்கே வந்தால், அது தடையாகும். சொல் எழுந்தால் தடை. அழிந்தால் தடை விலகும். முனிவர் மனம் மௌனமானது. அதனால் உயர்ந்ததை அறியும். உயர்ந்ததை அறிய சொல் தடையாகும்.

    ரிஷியின் நிலை அதையும்விட உயர்ந்ததால் அவருக்கு ‘புரிவது’ என்பதே understanding தடையாகும். எனவே அவர் தமக்குரிய ஞானத்தைக் காட்சியாக, திருஷ்டியாக, நேரடியாகக் காண்கிறார்.

    வாய்விட்டுப் படிப்பவனுக்குக் கருவி சப்தம். மௌனமாகப் படிப்பவனுக்குக் கருவி சொல். சொல்லில்லாமல் புரிந்துகொள்ளும் முனிவரின் கருவி comprehension புரிந்துகொள்ளும் திறன், புத்தி எனப்படும். ரிஷியின் கருவி ஒளி, ஜோதியாகும். யோகிக்கு ஒளியும் தேவையில்லை. ஒளியும் தடையாகும். ஞானத்தை நேரடியாகப் பெறுகிறார் அவர். அதை intuition, நேரடி ஞானம், சகஜ ஞானம் என்கிறார்கள்.

    தெய்வநிலை அடுத்தது. அவர்கள் ஞானத்தையுடையவர்கள். ஞானத்தைப் பெறவேண்டிய அவசியமில்லை. தெய்வஞானம், அஞ்ஞானத்துடன் கலந்த நிலையிலுள்ளது. சத்தியஜீவனில் - அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இதன் அவதாரமாவார்கள் - ஞானம் அஞ்ஞானக் கலப்பில்லாமல் அமைந்துள்ளது. அதனால் ஞானத்தைப் பெறும் அவசியமோ, ஞானத்தை அஞ்ஞானத்திலிருந்து பிரிக்கும் தேவையோ சத்தியஜீவியத்திற்கில்லை.

    இதற்கடுத்த நிலை சித்தம் - சத்து, சித்து, ஆனந்தம் எனப்படும் சச்சிதானந்தத்திலுள்ள இரண்டாம் கட்டமான சித்தம் - ஜீவியமானது. ஜீவியம் ஞானத்தின் பிறப்பிடமாகும். ‘அறிவால் பெற முடியாததை, ஞானத்தால் பெற முடியாததை, ஜீவியத்தால் பெறலாம்' என பகவான் பகுத்தறிவுவாதிக்குச் சொல்லி, அறிவே முடிவானதில்லை என அறிவுறுத்துகிறார்.

    புரியாதவற்றைப் புரிந்துகொள்ள நாம் சில சமயங்களில் வாய்விட்டுப் படிப்பதுண்டு. வாய்விட்டுப் படிப்பதால், புரியாதது புரியும். அது ஒரு நிலை. மௌனமாகப் படிப்பதால் வேகமாகப் படிக்கலாம். அத்துடன் வாய்விட்டுப் படித்தால் புரியாதது, மௌனமாகப் படிக்கும்பொழுது புரியும். இது அடுத்த நிலை.

    சில சமயம் பிரச்சினை வந்து நம்மை ஆட்டிப்படைக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடிவதில்லை. யோசனை செய்ய முடியாத அளவு குழப்பம் பயங்கரமாக வளரும். அது போன்ற சமயம் நாம் வேறிடம் போய், வேறு வேலையில் ஈடுபட்டு, பிரச்சினை இயல்பாக மறந்துள்ளபொழுது திடீரெனத் தோன்றும் யோசனை எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும்.

    இதை நாம் மௌனமான சிந்தனை என்கிறோம்.

    எண்ணம் தெளிவு பெறாதபொழுது, எண்ணமற்ற நிலை தெளிவு தரும். இதுவே மௌனத்திற்குரிய முனிவர் மனமாகும். இதைவிட உயர்ந்த நிலையும் உண்டு. அவை முந்நிலையைவிட கடுமையான பெரிய பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. அதற்கு மௌனத்தைக் கடந்து செல்ல வேண்டும். அந்நிலை ரிஷியின் நிலை எனலாம், மனிதனுக்குரியதன்று. ஆனால் மனிதனுக்கும், அன்னை மீது பக்தி மேலிட்ட நிலையில் ஒரு நிமிஷம் தோன்றும். ஆயிரம் அன்பர்கள் அதை அனுபவித்துள்ளனர். பிரச்சினை எப்படித் தீரும் என்பது மௌனமான மனம், மௌனத்தைக் கடந்த நேரம் காட்சியாகத் தோன்றும். யார் பிரச்சினையைத் தீர்க்க முடியுமோ அவர் காட்சியில் தெரிவார். ஓர் அன்பருக்கு அன்னை காட்சியளித்தார், பிரச்சினை தீர்ந்தது.

    அடுத்தது யோகியின் நிலை. பிரச்சினையின் தீர்வு யோசனையோ, மௌனமோ, காட்சியோவன்று, நேரடியாக வெளிப்படும் (intuition). இதற்கடுத்தது தெய்வநிலை. அதற்குரியது ஞானம். அஞ்ஞானக் கலப்பற்ற ஞானம் எழுந்து, நமக்கு விபரம் தெரியும். முடிவான நிலை சத்தியஜீவியம். சத்தியஜீவியம் ஞானமயமானதால், அங்கு ஞானமும் தேவை இல்லை. ஏனெனில் அங்குத் தீர்க்க வேண்டிய பிரச்சினை ஒன்றில்லை.

    நடைமுறை: மேற்சொன்ன முறைகளை, பிரச்சினைகளைத் தீர்க்கவும், வாய்ப்பை அனுபவிக்கவும் பயன்படுத்தலாம். அன்பர்கட்கு இவையெல்லாம் பல சமயங்களில் நடப்பதுண்டு. என்ன நடந்தது என்று தெரியாமல், நாம் பலனை மட்டும் அனுபவிப்பதால், இவற்றின் தத்துவக் கருவை அறிவதில்லை. புதிய மருந்து குணப்படுத்துகிறது என்று காண்கிறோம். எப்படி என அறிய முயல்வதில்லை.

    அறிய முயன்று பெறும் தெளிவு ஞானமாகும்.

  5. ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை சத்தியஜீவிய ஞானத்தை தருகின்றன. அதைப் பெற மனம் சிந்தனையை நிறுத்த வேண்டும். காட்சிகளைக் காணும் திறனை இழக்க வேண்டும். எண்ணம், காட்சி உதவியின்றி நேரடியாக ஞானத்தைப் பெற முடியவேண்டும். அகத்திலுள்ளதே புறத்திலிருந்து வருகிறது எனத் தெரியும் நேரம், அந்த ஞானம் பூர்த்தி பெறுகிறது.

    புறத்தை அகத்தில் காண்பவருக்கு ஸ்ரீ அரவிந்தம் தன்னை வெளிப்படுத்தும்.

     பேச்சு, சிந்தனை, புத்தி, திருஷ்டி, ஞானம் ஆகியவை மனிதன் உயரும் வகை என்றோம். பிரம்மம் ஒன்றே என்பது தத்துவம். மனத்தால் அகத்தையும், புலன்களால் புறத்தையும் உணர்கிறோம். அகமும், புறமும் ஒன்றே. அகவுணர்வை subjective எனவும், புறவுணர்வை objective எனவும் ஆங்கிலத்தில் பிரிக்கிறார்கள். மனித அறிவுக்கு அகம், புறம் என்ற இரு பிரிவுகள் உண்டு. யோக ஞானத்திற்கு அகமே, புறம்; புறமே அகம். அகமும், புறமும் இணையும் காலத்தில் பொருள்கள் பிரம்மமாகக் காட்சியளிக்கின்றன. பிரம்மத்தை உணர்வது பிரம்ம ஞானம். அதை திருஷ்டியாக - காட்சியாக - காண்பது பிரம்ம திருஷ்டி. அதை அகத்தில் கண்டவன் பிரம்ம ரிஷி.

     பேச்சு நின்றால் வாய்மூடி நிசப்தமாகிறோம். சிந்தனை நின்றால் மௌனமாகி முனிவராகலாம். விரதமாகப் பேச்சை நிறுத்தினால் மனத்தில் எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும். பேசும் குரலைத் தாழ்த்தி, அளவைக் குறைத்து, பேசுவதால் பயனில்லை என அறிந்து, பேசுவதால் காரியம் கெடுகிறது என உணர்ந்து, பேச்சு குறைந்தால், அதே அளவுக்கு எண்ணம் குறையும். இதுபோல் பேச்சைக் குறைப்பது கட்டாயப்படுத்தி விரதமாக, வலிய செய்வதில்லை. வலிய செய்தால் உள்ளே பேச்சு குறையும். அறிந்து, தெளிந்து, உணர்ந்து பேச்சு குறையும்பொழுது, பேச்சு உள்ளும், புறமும் குறையும். புற அனுபவத்தை அகவுணர்வு ஏற்று, அகவுணர்வை புறச் செயல் ஏற்று, முயற்சி பகுதியாக (partial) இல்லாமல், முழுமை பெறுகிறது.

    பேச்சைக் குறைப்பதில் அனுஷ்டித்த முறையை - முழுமையான முறையை - சிந்தனைக்கும் பயன்படுத்தினால் மனத்தில் சேரும் மௌனம், எதிரேயுள்ள பொருளையும், அல்லது நபரையும் தொடும். அது மௌன சித்தி. அவர் எதிரே போனால் ‘நம்மை மௌனம் சூழ்கிறது' என்கிறோம்.

    திருஷ்டி பெற்றவர் இதே முறையை - making the object the subject- பின்பற்றித் தவமுயற்சியை முழுமை பெறச் செய்தால், அவரிடம் சென்றால் நம் மனதில் காட்சிகள் தோன்றும்.

    (Intuition) நேரடி ஞானம் பெற்றவரின் முழுமை அவரிடம் வருபவருக்கு ஞானத்தின் சாயலை அளிக்கும்.

    அடுத்தது தெய்வநிலை. முடிவானது சத்தியஜீவியம். தெய்வநிலையில் பெறும் முழுமை அஞ்ஞானத்திலிருந்து பிரிய உதவும். சத்தியஜீவியம் முழுமையானது. முழுமையின்றி பெற முடியாதது. அதை நாம் பெற்றால், முழுமை பெறுவோம். நாம் அதை முழுமைப்படுத்தத் தேவையில்லை. அங்கு அகம் புறமாகவும், புறம் அகமாகவும், இரண்டும் பிரம்மமாகவும், புருஷனாகவும் விளங்கும். அடுத்தவர் இறைவனாகக் காட்சியளிப்பார்.

    The Life Divineஐப் படிப்பவர்கள் புரியவில்லை என்கின்றனர். சில இடங்கள் புரிகின்றன, பல இடங்கள் புரியவில்லை என்கின்றனர். சாவித்ரியைப் படிப்பவர்கள், தனி வரி விளங்குகிறது, மொத்தமாகப் புரியவில்லை என்கின்றனர். இவர்கள் போன்றவர்கள் தவிர, புரிகிறது என்பவர்கள் பலர். அவர்கட்குப் படித்தது புரியும். அப்படிப் புரிவது என்ன? நூலின் கருத்து தெளிவாகப் புரிகிறது என்பவர்கள் இவர்கள். இந்நூல்கள் சத்தியஜீவிய ஞானத்தைக் கொடுக்கின்றன. அது புரிகிறதா எனில், புரிவது சத்தியஜீவிய ஞானமில்லை. நூலின் வாதம், விளக்கம், கருத்து, கருத்துக் கோர்வை புரிகிறது என்று பொருள். Argument, explanation, idea ஆகியவற்றை மனத்தால் புரிந்து கொள்ளலாம். Essence சாரம் மனத்திற்குரியதன்று. சத்திய ஜீவியத்திற்குரியது. பட்டப்படிப்பால் பெறும் அறிவு மனத்திற்குரியது. அந்த அறிவுக்கு இந்நூல்களுடைய ஞானம் புலப்படாது. கீதையை மனப்பாடம் செய்து தினமும் பாராயணம் செய்வது போன்றது இது. பாராயணம் செய்பவர்க்குக் கருத்து விளங்காததுபோல், கருத்தும் விளக்கமும் புரிபவர்க்குச் சாரம் விளங்காது.

    சத்தியஜீவியத்தை எட்டியவர்க்குத்தான் இந்நூல்கள் புரியுமா எனில், இந்நூல்கள் புரிய அவ்வளவு பெரிய சித்தி அவசியமில்லை. பக்தியும், நம்பிக்கையும், ஆங்கில அறிவுமிருந்தால் இந்நூல்கள் புரியும்.

    அன்னை சக்தி சத்தியஜீவிய சக்தி. அதைப் பெற நாம் சத்தியஜீவியத்தை எட்ட வேண்டிய அவசியமில்லை. அதுபோல் இந்நூல்கள் புரிய சத்தியஜீவியத்தை எட்ட வேண்டும் என்பதில்லை.

    Supramental Grace, Mother's Grace ஏழ்ஹஸ்ரீங் சத்தியஜீவிய அருள், அன்னை அருள் பெறுபவர் இந்நூல்களைப் பயிலலாம். கலைக்டரைப் பார்க்க, கலைக்டராக வேண்டும் என்பதில்லை. கலைக்டரை அனைவரும் பார்க்க முடியாது, பார்க்க ஒரு முறையுண்டு. அம்முறை, அதற்குரிய சந்தர்ப்பம் வந்தால், எவரும் கலைக்டரைப் பார்க்கலாம் என்பதுபோல், அன்பராக இருந்து, பக்தி, நம்பிக்கையுடன் இந்நூல்களைப் பயில ஒரு முறையுண்டு. அம்முறையை மேலே சொன்னேன்.

    மனம், முனிவர் மனம், ரிஷியின் மனம், யோகியின் மனம், தெய்வ மனத்தைக் கடந்த சத்தியஜீவிய ஞானத்தைப் பெற அன்பர் இந்நிலைகளைக் கடக்க வேண்டும். கடக்கும் முறையையே மேலே கூறியுள்ளேன். சுருக்கமாகச் சொன்னால்,

    இந்நிலைகளைக் கடந்த அன்னை மீது மனதை இருத்தினால், அன்பர் இந்நிலைகளைக் கடந்து படிக்க முடியும். அப்படிப் படித்தால், படிப்பது புரியும். சத்தியஜீவிய ஞானம் பெற அன்னையை மனதில் இருத்த வேண்டும் என்பதே முறை.

தொடரும்....

*****

ஜீவிய மணி
 
சைத்தியப்புருஷன் ஈஸ்வரனின் பகுதி.

 

*****



book | by Dr. Radut