Skip to Content

08.லைப் டிவைன் - கருத்து

 

P. 77. Reason, Intuition, Integral experience

          பகுத்தறிவு, ஞானம், ஆத்மானுபவம்

 

     பகுத்தறிவு பெரும்பாலும் சரியாக இருக்கும். தவறும் நேரம் உண்டு. அதனால் பகுத்தறிவுக்குப் பொருத்தமானது என்பதால் மட்டும் ஒன்றை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கில்லை. படித்தவனுக்கு அறிவுண்டு எனலாம். படித்தவன் நல்லவன் என்று சொன்னால் அது 60% தான் உண்மையாக இருக்கும். ஞானம் பகுத்தறிவை விட உயர்ந்தது. ஞானம் என்பதை intuition எனவும் நேரடி ஞானம் எனவும் கூறுகிறார்கள். இன்ஜீனீயர் படித்தவன். அவன் கட்டும் வீடு நன்றாக இருக்கும் என்பது 90% உண்மை. முழுவதும் உண்மை எனக் கொள்ள முடியாது. கொத்தனார் அனுபவசாலி. பல வீடுகள் கட்டியிருக்கிறார். இன்ஜீனீயர் படிப்பைவிட கொத்தனார் அனுபவத்தை நம்பலாம் என்பது சரி. கொத்தனார் படிப்பில்லாதவர். அனுபவத்தில் அவருக்குத் தெரிந்தது சரி. அவருக்கு அனுபவமில்லாத இடத்தில் சரி வாராது. அத்துடன் கொத்தனார் தன் அனுபவம் தவிர மற்றவர் அனுபவம் தவறு என்பார். R.C.roofing வந்தபொழுது சாரம் போட்டு கட்டிய எந்தக் கொத்தனாரும் R.C.யை ஏற்கவில்லை. “நிற்காது” என்று மறுத்தனர். Integral experience ஆத்மானுபவம் என்பது படிப்பின் அடிப்படையில் அனுபவம் பெற்ற இன்ஜீனீயர் வேலை. இவருக்குப் படிப்புண்டு, பல கட்டிடங்களைக் கட்டியவர். அதனால் படிப்பைவிட, படிப்பில்லாத அனுபவத்தைவிட, படித்த அனுபவம் பெரியது.

     பகுத்தறிவு தவறலாம் - இது முதல் நிலை.

     நேரடி ஞானம் அறிவைவிடச் சிறந்தது - இது இரண்டாம் நிலை.

     ஆத்மானுபவம் - படிப்பின்பேரில் ஏற்பட்ட அனுபவம் - முடிவானது

     முதலிரண்டும் மூன்றின் பகுதி. நாம் பகுத்தறிவில் ஆரம்பித்து ஆத்மானுபவம்வரை செல்லமுடியும்.

              போட்டோ - வீடியோ - கண்ணால் பார்ப்பது.

              பகுத்தறிவு - ஞானம் - ஆத்மானுபவம்.

     போட்டோவைப் பகுத்தறிவுக்கும், வீடியோவை ஞானத்திற்கும், நேரடியாகப் பார்ப்பதை integral experience ஆத்மானுபவத்திற்கும் உதாரணமாகக் கூறலாம்.

     1) போட்டோவில் தவறு வரலாம்.

     2) அத்தவறு வீடியோவில் வாராது.

     3) நேரடியாகப் பார்த்துப் பேசுவது முடிவானது என்பதாலும் போட்டோவும், வீடியோவும் அதன் பகுதிகள் என்பதாலும் இம்மூன்றாம் நிலையை நாம் ஏற்கலாம்.

அதனால் போட்டோவை நம்ப முடியாது என்பதில்லை.வீடியோவில் இல்லாததைக் காட்ட முடியாது என்று கூற முடியாது. நேரடியாகப் பார்த்துப் பேசுவது மற்ற இரண்டையும் விட பூரணமானது என்பதையும் மறுக்க முடியாது.

 

நேரடியாக ஒருவரைப் பார்ப்பதைவிட போட்டோவில் அழகாகத் தெரிவதும் உண்டு. வீடியோ காட்சியில் ஒரு வீடு நேரே பார்ப்பதை விடக் கவர்ச்சியாக இருப்பதும் உண்டு. இவையெல்லாம் மனிதனே ஏற்படுத்தியவை என்பதால் உயர்வு/தாழ்வு என்பதைக் கருதவேண்டிய அவசியமில்லை. எதையும்   வற்புறுத்தாத மனநிலை, எதையும் மறுக்காத மனநிலை மேல். 

                                                                       ****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அரிய பொருளான உணர்வின் வேகத்திற்குரிய

ஞான வேட்கை, சிந்தனையாகிறது.

 

 



book | by Dr. Radut