Skip to Content

10.அன்னை இலக்கியம்

 திருவுருமாற்றிய தெய்வீக அன்னை

(ஜுன் இதழின் தொடர்ச்சி....)

S. அன்னபூரணி

        சங்கர் எழுதிய கடிதத்தைப் படித்தவுடன் கல்லுக்குள் ஈரம் கசிவதுபோல பர்வதம் கூட ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனாள். இந்தப் பேச்சு வார்த்தை நடந்து ஒரு  மாதத்திற்குள் குமாரி லலிதா, திருமதி லலிதா சங்கர் ஆனாள். அவளுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. இது வாரா வாரம் தான் அன்னைக்குச் சேவை செய்ததன் விளைவாக ஏற்பட்ட பலன் என்பது.

       ‘கல்யாணியா வா வா’, என்று அன்போடு வரவேற்றாள் லலிதா. கல்யாணம் விசாரிக்க வந்திருந்த கல்யாணிக்கு லலிதாவின் எழில்மிகு தோற்றம் மிகவும் களிப்பைக் கொடுத்தது.லிதா நாம் ஒன்றாகப் படிக்கும் காலத்திலேயே நினைத்துக் கொள்வேன். உனக்கு ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. உனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு என்று என் உள்மனசு சொல்லும். அது மாதிரியே நடந்தது. எவ்வளவு நிறைவாக இருக்கிறது தெரியுமா?’என்றாள் ஆத்மார்த்தமாக.

       ‘ஆமாம் கல்யாணி 99 சதவிகிதம் இந்த உலகத்திலேயே நான்தான் அதிர்ஷ்டமானவள்; மகிழ்ச்சியானவள். எனக்குக் கிடைத்திருப்பதுபோல் ஒரு கணவரும் வாழ்க்கையும் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது.’   

       ‘அது என்ன 99 சதவிகிதம். நூறு சதவிகிதம் என்றுதான் சொல்லேன்.’

       ‘கவனித்துவிட்டாயா? நான் சொன்னதை. என் கணவருக்கு கடவுள் பக்தி இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் என்னுடைய பூஜை புனஸ்காரங்களைத் தடை செய்யமாட்டார்.பார்க்கப் போனால் என் பூஜைக்குத் தேவையான சாமான்களை தாமே வாங்கி வந்து தருவார். ஆனால் தப்பித் தவறிக்கூட ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்வதோ, ஸ்லோகம் சொல்வதோ, கற்பூரத்தைக் கண்ணில் ஒற்றிக்கொள்வதோகிடையாது. ’‘சரி போகட்டும் விடு. உன்னையாவது தடை செய்யாமலிருக்கிறரே’ கல்யாணம் விசாரித்துவிட்டுக் கிளம்பி போனாள் கல்யாணி.

       சற்றே மேடிட்ட வயிற்றோடு ஏற்கனவே களை பொருந்திய முகம் இன்னும் தாய்மைப் பூரிப்பில் மேலும் மெருகூட்டப்பட்டு வாயில் தாம்பூலம் மணக்க அமர்ந்திருந்தாள் லலிதா. சங்கர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். சட்டென்று ஏதோ நினைவுக்கு வர பேப்பரை மடித்து வைத்துவிட்டுப் பேசினான்.

   ‘லலிதா உன்னை வெகுநாட்களாக ஒன்று கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன்.’

       ‘கேளுங்களேன்’ என்று சொல்லிக் கன்னம் குழிய சிரித்தாள்.‘நான் ஏன் உன்னை விரும்பித் திருமணம் செய்து கொண்டேன். ஏன் கடவுள் பக்தியே இல்லாத நாஸ்திகனாக இருக்கிறேன் என்று யோசித்திருக்கிறாயா?’

       ‘எப்பொழுதாவது அப்படித் தோன்றுவதுண்டு.’

       ‘பின் ஏன் என்னை இதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை?’

       ‘என்னைப் பொருத்தவரை என் தகுதிக்கு நீங்கள் என்னைத் தேடி வந்து திருமணம் செய்து கொண்டதே அதிகம்.அது நான் வணங்கும் பாண்டி அன்னையின் அருளால் நடந்தது.   மேலும் நீங்கள் என்னைவிட வயதிலும்அறிவிலும் எல்லாவிதத்திலும் மிகப் பெரியவர். உங்களைக் கேள்வி கேட்கும் தகுதி எனக்கில்லை என்று தோன்றுகிறது. அப்படித் தேவையாயிருந்தால் நீங்களே ஒரு நாள் விளக்குவீர்கள் என்று நம்பிக்கை இருந்தது.’

      ‘ஏதேது நான் நினைத்ததுபோல் நீ சாதாரணமான ஆள் இல்லை. புத்திசாலியாக இருக்கிறாயே. இப்பொழுது சொல்கிறேன் கேள். ஒரு காலத்தில் நானும் உன்னைப்போலத்தான். சிறுவயதிலேயே எனக்குப் பூணூல் போட்டுவிட்டார்கள்.சந்தியா வந்தனம், காயத்ரி எல்லாம் ஒழுங்காகச் சொல்லுவேன்.சமஸ்கிருதம் தெரியுமாதலால் நிறைய ஸ்லோகங்கள் சொல்லுவேன். ஆனால் விதி விளையாடிவிட்டது. என் உயிருக்குயிரான அம்மாவை இழந்துவிட்டேன். என் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். என் சித்தியிடம் நான் பட்ட கொடுமைகளை விவரித்துச் சொல்ல வார்த்தைகளில்லை. சுபாவமாகவே நான் அன்புக்காக ஏங்குபவன். அந்த அன்பை வாரி வழங்கிய என் தாயை இழந்த சோகம் ஒரு புறமிருக்க, கடுமையைத் தவிர கருணை காட்டத் தெரியாத சித்தியின் குணத்தால் வாழ்க்கை வெறுத்துப் போய் நாஸ்திகனானேன். சித்தியைப் பார்த்ததிலிருந்து பெண்களைக் கண்டாலே வெறுப்பாயிருந்த என் வாழ்வில் தென்றலாக நீ குறுக்கிட்டாய். ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருக்கும்பொழுது நீயும் உன் சித்தியும் பேசும் பேச்சுக்கள் என் காதில் விழும். ஒருவாறு உன் நிலையை யூகித்துக் கொண்டேன். அதற்காக உன்மேல் இரக்கப்பட்டு உன்னைத் திருமணம் செய்து கொண்டதாக நினைத்து விடாதே. நானும் அன்புக்காக ஏங்கும் ஒரு ஜீவன், நீயும் அன்புக்காக ஏங்கும் ஒரு ஜீவன். ஏன் இருவரும் வாழ்க்கையில் இணைந்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்தத் திருமணத்தை விரும்பினேன். நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.’

       இதைக் கேட்ட லலிதா அவன் மீது மேலும் அன்பு பொங்க விழிகளை அகல விரித்துப் பார்த்தாள். ஆதரவாக அவன் கைமேல் தன் கையை வைத்து தன் அன்பைக் கண்களாலேயே வெளிப்படுத்தினாள்.

      லலிதாவுக்கு பிரசவ நேரம் நெருங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே தஞ்சாவூரில் ஜாகை எடுத்துத் தங்கிவிட்டான் சங்கர்.அங்குள்ள ஆஸ்பத்திரியில்தான் நல்ல கவனிப்பு இருக்கும் என்ற நம்பிக்கை.

       ‘என்னங்க எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. லேசாக இடுப்பை லிக்கிறது.’ உடனே ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு வந்து கைத்தாங்கலாகப் பிடித்து காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தான்.டாக்டர் அவளை செக்அப் செய்யும்போதே அவர் முகம் இருண்டது.

       ‘மிஸ்டர் சங்கர், அயாம் சாரி. உங்கள் மனைவிக்கு எமெர்ஜென்ஸி ஆப்பரேஷன் செய்து குழந்தையை எடுக்க வேண்டும். உள்ளே கொடி சுற்றிப் போய் குழந்தை இறந்துவிட்டது.’

       சங்கருக்கு உலகமே சுற்றுவது போருந்தது. இதற்குள் படுத்துக் கொண்டிருந்த லலிதாவின் வாயில் நுரை தள்ளி இழுப்பு வந்தாற்போல் கைகால்கள் விலுக்விலுக்கென்று இழுக்க ஆரம்பித்தன.பார்க்க மிகவும் பரிதாபமான காட்சியாக இருந்தது.உடனே ஆக்ஸிஜன் சிண்டர் வரவழைக்கப்பட்டு அங்கே குழுமியிருந்த டாக்டர்கள் அனைவரும் அவளை கவனிக்க ஆரம்பித்தனர். உடனடியாக அவளை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். இடிமேல் விழுந்த இடியைத் தாங்க முடியாமல் துவண்டு போனான் சங்கர்.

      ‘என்னங்க நீங்க எத்தனை நாள்தான் லீவில் இருப்பீங்க. மெல்ல மெல்ல நான் வேலைகளைக் கவனித்துக் கொள்கிறேன்’ பச்சை மரம் போலிருந்த அவள் உடல் பட்டமரம் போல் ஆகியிருந்தது. நீண்ட கருங்கூந்தல் எண்ணெய் காணாமல் வறண்டு போய் செம்பட்டை படிந்திருந்தது. குழி விழுந்த கண்கள். ஊற்றாய்ப் பொங்கி வந்த மகிழ்ச்சி வடிந்து போய்விட்டிருந்தது. சோலைவனமாய் இருந்த வீடு பாலைவனமாய் மாறியிருந்தது. சங்கர் அலுவலகம் போனதும் அன்னை படத்தின் முன்பு அமர்ந்து புலம்புவாள். ‘அம்மா இது நீ கொடுத்த வாழ்வல்லவா? இதில் ஏன் இந்தக் கஷ்டம் வந்தது? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? என்னுடைய தவறு என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நீயே குறையைக் களைந்து விடு’ என்று தினமும் புலம்புவாள்.

       ‘லலிதா ஒரு நல்ல செய்தி. எனக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றல் ஆகியிருக்கிறது. நமக்கும் இடமாற்றம் இருந்தால் நல்லது தானே.’

       ‘பாண்டிக்கா?’

       லலிதாவின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளேயில்லை.

       வாராந்திர தியானத்தில் மட்டும் அன்னையை தரிசித்துவிட்டு வந்தவள் அங்கு வருபவர்களெல்லாம் பாண்டிச்சேரி,தரிசன நாளுக்குப் போனேன் என்று சொல்லும்போது தனக்கு அந்த பாக்கியம் கிட்டுமா என்று ஏங்கியதுண்டு. சுபாவமாகவே எதையும் கேட்டுப் பழக்கமில்லாததால் அவள் கணவனிடம் கூட அவள் தன்னை அழைத்துப் போகுமாறு கேட்டதில்லை. இப்பொழுது அன்னையே தனக்கு அழைப்பு விடுப்பது போலிருந்தது. வெகுநாட்களுக்குப் பின் அவள் முகம் பழையபடி பிரகாசித்தது.

       ஆசிரமத்திற்கு அருகிலேயே அன்னையின் அருளால் வீடு கிடைத்து தினமும் சமாதி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. ஆறு மாதங்கள் விரைவாக ஓடின.

       ‘என்னங்க முதல் குழந்தை இறந்து பிறந்ததால் நமக்குக் குழந்தையே வேண்டாமென்று சொல்வது நியாயமில்லை.’

       ‘லலிதா எனக்கு அந்தக் குறையேயில்லை. நீ எனக்குக் குழந்தை, நான் உனக்குக் குழந்தை’ என்று சொல்லிப் புன்னகைத்தவாறே அவளை சமாதானப்படுத்தினான்.

       ‘எனக்கு அப்படித் தோன்றவில்லை. தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கக் கூடிய வரப்பிரசாதம். நமக்கே உடல் இயல்பாகக் குறையிருந்து குழந்தை பிறக்காவிட்டால் பரவாயில்லை. ஓர் அனாதைக் குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கலாம். ஆனால் ஏற்கனவே ஒரு முறை கருத்தரித்த காரணத்தால் நமக்குக் குழந்தை பிறக்காமலிருக்க வாய்ப்பில்லை.’

       ‘என்ன லலிதா ஆச்சரியமாக இருக்கிறது எதற்குமே என்னை எதிர்த்து ஒரு சொல் கூட பேசாத நீ இந்த விஷயத்தில் இப்படித் துணிச்சலுடன் வாதிடுகிறாயே.’

       ‘எந்தப் பெண்ணும் தாய்மைப் பதவியை மட்டும் விட்டுக் கொடுக்கமாட்டாள். உங்களுக்கு வேண்டுமோ இல்லையோ எனக்குக் கண்டிப்பாக ஒரு குழந்தையாவது வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை.’

  சங்கர் திகைத்துத் தடுமாறினான். லலிதா இந்த அளவுக்குப் பிடிவாதமாயிருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை.

       'லலிதா என்னை மன்னித்துவிடு. காரணமாகத்தான் நான் குழந்தை வேண்டாமென்று சொன்னேன். உனக்கு முதல் பிரவசத்தின் போது ஆபரேஷன் செய்த டாக்டர் சொன்னார் மிஸ்டர் சங்கர் உங்கள் மனைவிக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பையில் கோளாறு இருக்கிறது. இனிமேல் அவர் கருத்தரித்தால் குழந்தையின் உயிருக்கு மட்டுமல்ல உங்கள் மனைவியின் உயிருக்கும் ஆபத்து. ஆகவே குழந்தை வேண்டும் என்ற ஆசையை நீங்கள் விட்டுவிடுவது நல்லது. '

       தீக்கங்குகளை நெஞ்சில் வாரிக் கொட்டியதுபோல் துடிதுடித்துப் போனாள் லலிதா. கண்ணிலிருந்து கரகரவென்று நீர் வழிந்தது. சங்கரின் கைகளிரண்டையும் பற்றி எடுத்து அதில் முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழுதாள். ‘அழாதே லலிதா. நீ அழுதால் எனக்குப் பொறுக்காது. நீ சந்தோஷமாக இருக்க வேண்டும். எனக்குக் குழந்தை வேண்டுமென்பதை விட நீ எனக்கு வேண்டும். உன்னை இழக்க நான் சம்மதிக்க மாட்டேன்.’

       பதில் சொல்லாமல் மேலும் தேம்பினாள் லலிதா.

       ‘நான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?’

       ‘இல்லை உங்களால் தவறே செய்யமுடியாது. நீங்கள் உங்கள் அபரிமித அன்பினால் என்னைக் கொல்கிறீர்கள். இப்படிப்பட்ட தெய்வத்திற்கு வாரிசாக ஒரு குழந்தையைக் கொடுக்க முடியாத பாவியாக நான் இருக்கிறேனே. என் மீது பலன் கருதாது அன்பு செலுத்தும் இப்படி ஒரு ஜீவனா? இவரைக் கணவனாகப் பெற என்ன தவம் செய்தேன்? என்று நினைத்து நெகிழ்கிறேன். ஒரு புத்தகத்தில் படித்தேன். நமக்கு நடந்த எந்த நல்லது நினைவுக்கு வந்தாலும் அன்னையை நன்றியோடு நமஸ்கரிக்க வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் அன்னைக்கு எத்தனைக்கு என்று நான் நன்றி சொல்வேன்?’ என்று சொல்லி நாத்தழுதழுத்தாள்.

       மாதங்கள் உருண்டோடின மகிழ்ச்சியுமில்லாமல், சோகமுமில்லாத ஒரு சூழ்நிலையில் காலம் ஓடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் ஒரு வெறுமை விரவியிருப்பதை இருவருமே உணர்ந்திருந்தனர். அன்று வெள்ளிக்கிழமை, பௌர்ணமி இரண்டும் சேர்ந்து அமைந்திருந்தது.வழக்கம்போல் சமாதி தரிசனம் செய்துவிட்டு மாலையில் அன்னையைப் பிரார்த்தித்துவிட்டுப் படுத்தாள். இரவு உறங்க ஆரம்பித்து சிறிது நேரம்தான் ஆயிருக்கும். திடீரென்று வீடெங்கும் ஒளி வெள்ளம். தூய வெள்ளை உடையில் அன்னை அவளருகே வந்து அமர்ந்து ‘குழந்தாய்! லலிதா, உனக்கு மழலைச் செல்வம் வேண்டுமா? ஒரு முறை உன் கணவனோடு வந்து சமாதி தரிசனம் செய்து வேண்டிக் கொள்.’ சட்டென்று காட்சி மறைந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் லலிதா.

       ‘என்னங்க, என்னங்க எழுந்திருங்க’.

       ‘என்னம்மா இது சின்னக் குழந்தை மாதிரி. ஏதாவது கனவு கண்டு பயந்திட்டயா?’

       ‘இல்லைங்க. அன்னை என் கனவில் வந்தாங்க. உனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டுமானால் உன் கணவருடன் வந்து சமாதி தரிசனம் செய் என்று சொல்லி மறைந்துவிட்டார்.’

       ‘சரி இதையெல்லாம் நாளைக்கு பேசிக்கொள்ளலாம். பேசாமல் படு’ மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

       லலிதாவுக்கு ஆனந்த அதிர்ச்சி தாங்கவில்லை.

        ‘அம்மா என் மீது உனக்கு இவ்வளவு அன்பா? தாயில்லாத எனக்குத் தாயாக நீ வந்தாயா?’

       நெடுநேரம் தான் கண்ட காட்சியை நினைவுக்குக் கொண்டு வந்து மகிழ்ந்து போனாள்.

       ‘என்ன லலிதா இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்? சரி உன் ஆசைக்காக நான் வந்து அன்னையை வேண்டிக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள். நீயும் அவர் அருளால் கருத்தரிக்கிறாய் என்றாலும் டெலிவரி ஆகி நல்லபடியாக நீ பிரசவிக்கும்வரை எனக்கு எத்தனை டென்ஷன்? அதற்காக உன் உயிர் விஷயத்தில் நான் ரிஸ்க் எடுக்கத் தயாராயில்லை’. உடனே அவன் வாயைப் பொத்தினாள் லலிதா.

       ‘அப்படிச் சொல்லாதீர்கள். அன்னையை நம்பிக்கையுடன் பிரார்த்தியுங்கள். சத்தியமாகச் சொல்கிறேன். என்னுடைய உயிர் என்றாவது ஒரு நாள் பிரியப் போகிறது. அதற்குப் பயந்து கொண்டு என் தாய்மைப் பேற்றை இழக்க விரும்பவில்லை. நீங்கள் இதற்கு சம்மதிக்காவிட்டால் நான் உங்களிடம் வேறொரு விண்ணப்பம் அளிப்பேன்.அதற்காவது சம்மதிக்கவேண்டும்.’

       ‘என்ன அது?’

       ‘நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும்.’தூக்கிவாரிப் போட்டது சங்கருக்கு. அப்பொழுது தான் அவள் இந்த முடிவில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறாள் என்பது புரிந்தது.

       ‘சரி லலிதா.  உன் கோரிக்கைக்கு சம்மதிக்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு பந்தயந்தானே.’

       ‘ஆனால் அன்னையின் துணை இருந்தால் அதில் என்றும் ஜெயம்தான். சரி இன்னும் ஒரு நிபந்தனை போடுகிறேன். அன்னையின் அருளால் நான் பெற்றுப் பிழைத்துவிட்டால், பிழைத்துவிட்டாலென்ன, நிச்சயம் அது நடக்கும். அப்பொழுது நீங்களும் அன்னை பக்தராகி விடுவீர்களா?’

       சங்கர் சிரித்தான். ‘அந்த அற்புதம் மட்டும் நடந்துவிடட்டும். நான் அன்னைக்கு பரிபூரணமாக அடிமையாகிவிடுவேன்.’

      அடுத்த நாள் தம்பதி சமேதராக சமாதி தரிசனத்திற்கு கிளம்பினர். லலிதாவுக்கு கால் தரையில் பாவவில்லை. சங்கர் ஆசிரமச் சூழலைப் பார்த்து அதிசயப்பட்டுப் போனான். இப்படி ஒரு அமைதியான இடத்தை அவன் எங்குமே பார்த்ததில்லை. அங்கு சேவை செய்து கொண்டிருந்த ஆசிரமவாசிகளெல்லாம் தேவதைகளாக அவனுக்குத் தோன்றினர். அங்கிருந்த ஒரு தெய்வீகச் சூழல் அவனைக் கவர்ந்தது.

       ‘கங்கிராட்ஸ் மிஸ்டர் சங்கர். உங்கள் மனைவி தாயாகப் போகிறார்.’ சங்கருக்கு மகிழ்ச்சியும் பயமும் கலந்த ஓர் உணர்வு ஏற்பட்டது. இதைப் புரிந்து கொண்ட லலிதா இதோ பாருங்கள் அன்னையின் பொறுப்பில் ஒரு விஷயத்தை விட்ட பின்பு நாம் அதைப் பற்றி நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அன்னை சக்தி அங்கு வேலை செய்ய அது தடையாக இருக்கும்.

       ‘எனக்கு இதெல்லாம் தெரியாது. நான் உன்னை மாதிரி புத்தகங்கள் எல்லாம் படிப்பதில்லை. நான் ஒரு சாதாரண மனிதன். என்ன இருந்தாலும் முதல் டெலிவரியின்போது நடந்ததை மறக்க முடியவில்லை. அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் வந்து என்னை பயமுறுத்துகிறது. நான் என்ன செய்வேன்?’

       ‘வாஸ்தவம்தான். அது மனித இயல்புதான். அப்படி அது நினைவுக்கு வரும் போதெல்லாம் நினைவை சமர்ப்பணம் செய்யவேண்டும்.’

       ‘சரி உனக்காக இதை செய்கிறேன்.’

       பிரசவ நாள் நெருங்கியது. லலிதாவுக்கு லேசாக வலி எடுத்தவுடனேயே அவளை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துவிட்டான். லலிதா முனகலுடன், ‘எனக்குத் துணையாக அன்னையின் பிளெஸ்ஸிங் மட்டும் கொடுங்கள். நீங்கள் நேராக சமாதிக்குப் போய் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். பங்கஜம் மாமி மட்டும் அருகில் இருந்தால் போதும்.’ சங்கர் திகைத்தான். ‘என்ன இது லலிதா?’

       ‘ப்ளீஸ் நீங்கள் தயவு செய்து நான் சொன்னதைச் செய்யுங்களேன்.’ அவளைப் பிரிய மனமில்லாமல் கனத்த இதயத்துடன் ஆசிரமத்தை நோக்கி விரைந்தான். அவன் மனச்சாட்சி பேசியது. நீ லலிதாவின் திருப்திக்காக இந்த முடிவை எடுத்துவிட்டாய். நீயும் அவளைப்போல் நம்பிக்கை வைத்துப் பிரார்த்தித்தால்தான் அவளுடைய ஆசையை நிறைவேற்றி வைத்ததாக ஆகும்.

       சமாதி அருகில் சென்று அமர்ந்தவன் தன்னை மறந்தான். உலகை மறந்தான் Om Mother Om Mother என்று தீவிரமாக அழைக்க ஆரம்பித்தான்; அன்னையை மானசீகமாக லலிதா படுத்திருந்த நர்ஸிங் ஹோமுக்கு அனுப்பி வைத்தான். பிரசவம் பார்க்கும் டாக்டர்களை அன்னையாக உருவகித்தான். சிறிது நேரம் அதையும் மறந்து ஆழத்திற்குப் போனான். எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ தெரியாது. கண்களை விழித்தபோது பரவசத்துடன் பங்கஜம் மாமி நின்று கொண்டிருந்தாள். அவன் காதருகில் குனிந்து சுகப்பிரசவம் லலிதாவிற்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம்.’

       நன்றியால் நெகிழ்ந்த சங்கர் அன்னையை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். ‘என்னை ஆட்கொள்ளவந்த அன்புத் தாயே, இன்று முதல் நான் உங்கள் அடிமை.’

       பாண்டிச்சேரியிலிருந்து மாற்றல் ஆகி விடுமென்பதற்காக பிரமோஷன் வேண்டாமென்று எழுதிக் கொடுத்துவிட்டான். தினமும் சமாதி தரிசனம் செய்யத் தொடங்கிவிட்டான். நாஸ்திகனாக இருந்த சங்கர் இப்போது தினமும் அன்னையின் படத்தின் முன்பு நின்று நீங்கள் மட்டுமே எனக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறான். இந்தக் காட்சியைப் பூரிப்புடன் பார்த்து மகிழ்ந்து போகிறாள் லலிதா.

 

 

முற்றும்.

 

 

 

 

 

 

      

 



book | by Dr. Radut