Skip to Content

11. அன்னை இலக்கியம் - பார்வைகள்

அன்னை இலக்கியம்

பார்வைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

21. பூரணியின் பார்வை

அறுபது ஆன்மிகப் புத்தகங்கள் வாங்கி வந்தபின் அவற்றை வாசிப்பதற்கே சந்துருவிற்கு நேரம் போதவில்லை. பேச்சு வெகுவாகக் குறைந்துவிட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பியதிலிருந்து மறுநாள் அலுவலகம் போகும்வரை வாசிப்பில் ஆழ்ந்து வருவது சந்துருவின் வழக்கமாகிக் கொண்டு வந்தது.

தத்தாவும், வம்சியும் ஒரு ஞாயிறு மாலை வீட்டுக்கு வந்தனர். சந்துரு புத்தகங்களைப் பற்றி எதுவுமே கூறவில்லை என்றாலும் தத்தா கல்வியைப் பற்றிய புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தபடி இருந்தார். ‘நீ வாசித்துவிட்டு கொடு. நான் இந்தத் தொகுதியை எடுத்துக்கொள்ள நாளாகும்’ என்று சந்துரு கூறவும் தத்தா மகிழ்ச்சியோடு நூலை எடுத்துக்கொண்டார். வம்சி எந்தப் புத்தகத்தையும் தொடவில்லை. ‘இவற்றை எங்கு வாங்கினாய்?’ என்று மட்டும் கேட்டு கடை முகவரியைத் தெரிந்து கொண்டார்.

ஆண்கள் அலுவலகம் போனபின் எனக்கு வேலை எதுவுமே இல்லை என்பதால் புதிய புத்தகங்களை வாசிக்க என்னிடம் நேரம் நிறைய இருந்தது. எதிலிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சந்துருவைப்போல வரிசைக்கிரமமாக வாசிக்க நினைக்காமல், கையில் கிடைத்த ஒரு தொகுதியை எடுத்துப் பிரிப்பேன். வந்த பக்கத்தில் கண்ணில் பட்ட வரிகளை வாசிப்பேன். நான் வாசித்த ஒவ்வொன்றையும், என் சொந்த வாழ்க்கையில் அனுபவமாக அறிய முயல ஆரம்பித்தேன்.

‘இவன் தன்னுணர்வுள்ள ஒளிமயமான ஜீவன். கைக் கட்டைவிரல் உயரமுள்ளவன். நம்முள் இருக்கிறான். நெஞ்சின் நடுவே நின்று ஒளிர்கிறான். நம் காலங்களின் தலைவன் இவனே. இன்று என்பதும் நாளை என்பதும் இவனே’ என்று சைத்தியபுருஷனைப் பற்றி ஒரு நாள் கதா உபநிஷதம் கூறியது.

கருவுற்ற பெண் தன் குழந்தையின் இருப்பை வயிற்றில் உணர்கிறாள். தாய் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் தன்னிருப்பை குழந்தை உணர்த்திக்கொண்டே இருக்கும். சைத்தியபுருஷன் மௌனமாக மறைவாக அல்லவா இருக்கிறான்?

நெஞ்சிலிருக்கும் சைத்தியபுருஷனின் இருப்பை மனிதர்கள் அறிவதில்லை. அறிய முயல்வதுமில்லை. எது ஒன்றை அடைய இடைவிடாது ஆர்வத்துடன் முயல்கிறோமோ அதை அடைந்து, பின் அதாகவே ஆவோம் என்ற கூற்றால் பயனடைய வேண்டுமானால் முயற்சியை ஆரம்பிக்கவேண்டும்.

அந்தகன் இடைவிடாமல் பற்றிக் கொண்டிருக்கும் வழிக்கோல் போல ஆர்வம் என்னுடன் இருந்து கொண்டே இருக்கிறது. அதுமட்டும் போதுமா? அழைக்கவும் வேண்டும். என்னைப் பிறிதொன்றாக மாற்ற எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். சமர்ப்பணம் செய்பவருக்குக் காலமோ, வெளியோ தடையல்ல. தான் மட்டுமேதான் தடை. நான் என்ன செய்ய வேண்டும் என்று நானே செய்த முடிவு சரியா, தவறா என்று சிந்திக்கவில்லை. அமைதி குலையவில்லை அதனால் சரியான பாதையில் போகிறேன் என்று என்னிதயம் கூறியது. அன்று முதல் என் உறக்கம் வேறு வகையானதாக மாறத் தொடங்கியது. உறக்கம் மாறவில்லை. நான் அதை உணரும் விதம் மாறத் தொடங்கியது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

சந்துருவின் வாசிப்பு மிகவும் தீவிரமாக இருந்தது. வேறு எதிலும் கவனமில்லாமல் இருந்தார். ஒருநாள் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும்போது, தன் தட்டில் இருக்கும் தோசையை எடுப்பதற்கு பதிலாக அண்ணன் தட்டிலிருக்கும் தோசையை எடுத்தார். அண்ணன் தன் தட்டை நகர்த்தி வைத்துக் கொண்டார்.

‘ஏன் இப்படிக் கவனமில்லாமல் சாப்பிடுகிறீர்கள்? எதற்காக இப்படி ஓயாமல் வாசிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘வேறென்ன? உருப்படியாக செய்ய வேறு வேலை இருந்தால்தானே!’ என்றார் அண்ணன்.

சற்று திகைத்த சந்துரு ‘எனக்கு ஆன்மிகப் புத்தகங்களை வாசிக்க மிகவும் பிடிக்கும்’ என்றார்.

நான் எதுவும் கூறாதிருந்தேன்.

‘பிடிக்காதவற்றை ஒதுக்கிவிட்டு பிடித்தவற்றை மட்டும் செய்தால் முழுமையை அடைய முடியாது. எல்லாக் காரியங்-- களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்கிறீர்களா?’ என்று கேட்டார் சந்துரு.

நான் புன்னகைத்தேன்.

‘ஒரே ஒரு ஆழ்ந்த அழைப்பு அல்லது ஒரே ஒரு தீவிர சமர்ப்பணம் அல்லது ஒரே ஒரு கனத்த அனுபவம் இத்தனை புத்தகங்களை வாசிப்பதைவிட மேலானது என்கிறீர்களா?’ என்றார் சந்துரு.

மேலும் புன்னகைத்தேன்.

‘பூரண ஞானம் நமக்குள் ஏற்கனவே இருக்கிறது. நாம் வெளியே வாசிப்பதெல்லாம் உள்ளே இருக்கும் ஞானத்தின் பிரதிபிம்பம்தான். அகத்தில் இருப்பதைத் தேடி அலைய வேண்டும். அதற்கு மேற்பரப்பு மனதிலிருந்து விலகி ஆழ்மனதிற்குச் செல்ல வேண்டும். சமர்ப்பணம் செய்து கொண்டே இருந்தால் மேற்பரப்பிலிருந்து அக ஆழத்திற்குச் செல்லலாம். இதைத்தானே சொல்கிறீர்கள்’ என்று சந்துரு புத்தகத்தை மூடி வைத்தார். ‘இவ்வளவு தெளிவாக நீங்கள் விளக்கிச் சொன்னதும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிகிறது பூரணி!’ என்றார் சந்துரு.

சாப்பிட்டு முடித்தபின் தோள்பையில் சில உடைகளை அலங்கோலமாக திணித்துக் கொண்ட சந்துரு, ‘அலுவலகம் போய்விட்டு அங்கிருந்து அப்படியே மதுரை போகிறேன்.

வங்கி தணிக்கை. திரும்ப இரண்டு நாட்கள் ஆகும்’ என்று கசப்புடன் கூறியபடி கிளம்பினார்.

‘கொஞ்சம் இருங்கள்’ என்று அவரது பையை பலவந்தமாக வாங்கி துணிகளைச் சரியாக அடுக்கித் தந்தேன்.

‘பிரயாணம் செய்வது என்றாலே உங்களுக்கு வருத்தம் வந்துவிடுகிறது’ என்றேன்.

‘மகாவெறுப்பு. கடுங்கசப்பு. என் அண்ணனும், தம்பியும் காலை ஆறரைக்கெல்லாம் மின்சாரரயிலில் மருத்துவமனைக்குப் போகிறார்கள். கூட்டநெரிசலே இல்லாமல் ஏதோ அவர்களது சொந்த வண்டியில் போவது போல போகிறார்கள். திரும்பும் போதும் அப்படித்தான். என் அலுவலகத்திற்கு மின்வண்டி கிடையாது. பஸ்ஸில் போகும் போதும் வரும்போதும் நசுங்கி வருகிறேன். அதனால் பஸ் பிரயாணம் என்றாலே பிடிப்பதில்லை’ என்றார் சந்துரு.

‘நீங்களும் நேரத்தை மாற்றிக் கொண்டு கூட்டமில்லாத வண்டியில் போக வேண்டியதுதானே? சரி உள்ளூர் பிரச்சனையை விடுங்கள். முன்பதிவு செய்து வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியூர் போவதில் என்ன வெறுப்பு?’ என்று கேட்டேன்.

‘உள்ளூர் பஸ் நேரத்தை மாற்றிப் பார்த்துவிட்டேன். அதில் ஒரு பிரச்சனை வருகிறது. அதே பிரச்சனை வெளியூர் பிரச்சனையிலும் தொடர்ந்து வருகிறது’ என்றார் சந்துரு.

‘அப்படியென்ன பிரச்சனையோ?’ என்றேன்.

‘சொல்கிறேன். ஆனால் சிரிக்கக் கூடாது’ என்றார் சந்துரு.

‘சரி’ என்றேன். ஆனால் அப்போதே எனக்கு சிரிப்பு வர ஆரம்பித்துவிட்டது.

‘எப்போது பஸ்ஸில் போனாலும், பெண்கள் என்னை சீட்டிலிருந்து எழுப்பி விடுகிறார்கள்’ என்றார் சந்துரு.

’எதற்காக?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

‘அவர்கள் வசதியாக உட்காரத்தான். கால்கள் நீளமாக இருப்பதால் பல இருக்கைகள் எனக்கு வசதியாக இருக்காது. சில இருக்கைகளில் மட்டும்தான் என்னால் வசதியாக உட்கார முடியும்’ என்றார் சந்துரு.

‘உயரமாக இருப்பதில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா’ என்றேன்.

‘நான் எங்குப் போனாலும் தனியாகப் போகிறேன். வசதி- யான இடத்தில் உட்காருகிறேன். உடனே இரண்டு பெண்களோ, அல்லது ஒரு ஆணும், பெண்ணுமோ வருகிறார்கள். என்னை வேறு சீட்டிற்கு மாறச் சொல்கிறார்கள். பல வருஷங்களாக இப்பிரச்சனை இருக்கிறது. தினசரி உள்ளூர் பஸ் பிரயாணத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். கொஞ்ச நேரம்தானே? வெளியூர் பிரயாணங்கள்தான் சிரமமானவை. வசதியான இடத்தில் உட்கார்ந்து பயணம் செய்து பல காலமாகிவிட்டது. என்னைப் பார்த்தால் எல்லோருக்கும் ஏமாளி போலத் தெரிகிறது’ என்றார் சந்துரு.

‘கஷ்டம்தான்’ என்று கூறி சிரித்தேன்.

‘மாதத்திற்கு மூன்று தடவையாவது தணிக்கைக்காக வெளியூர் செல்கிறேன். எங்கும் இதே பிரச்சனைதான். பஸ், ரயிலில் மட்டுமல்ல, ஒரு முறை டெல்லி போகும் விமானத்தில் கூட இருக்கை மாற்றி உட்கார வேண்டியதாகிவிட்டது. அந்தமானுக்குச் சிறிய கப்பலில் செல்லும்போது என் அறையையே பெண்களுக்காக மாற்றவேண்டி வந்தது’ என்றார் சந்துரு.

‘இதற்கு என்ன தீர்வு?’என்றேன்.

‘பெண்களுக்காக விசேஷ வண்டி விடுவதுபோல, ஆண்களுக்கும் விசேஷ வண்டி விட வேண்டும் என்று ஒரு முறை இந்து பத்திரிக்கைக்குக் கடிதம் எழுதினேன். பிரசுரமாகவில்லை. இப்போதெல்லாம் வண்டி காலியாக இருந்தாலும், நானாகவே வசதியே இல்லாத கடைசி சீட்டில் உட்கார்ந்து விடுகிறேன். அவமானப்படுவதைவிட கஷ்டத்தை பொறுத்துக் கொள்வது எளிதாக இருக்கிறது. கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும் போலிருக்கிறது!’ என்றார் சந்துரு.

‘சென்னைக்குள் மோட்டார் சைக்கிளில் போகலாமே!’ என்றேன்.

‘சென்னை போக்குவரத்து நெரிசலில் அதைப் போன்ற அறிவற்ற செயல் இருக்க முடியுமா? அது அண்ணன் வண்டி. நான் விரும்பிய போதெல்லாம் கிடைக்காது’ என்றார் சந்துரு.

‘அதுவும் சரிதான். சதா கற்பனை உலகில் வேறு இருப்பீர்கள். ஆபத்துதான்’ என்றேன்.

‘பூரணி, நீங்களும் இன்று அலுவலகம் வாருங்களேன்’ என்றார் சந்துரு.

‘நானா!’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

‘நான் பஸ்ஸில் எவ்வளவு சிரமப்படுகிறேன் என்பது உங்களுக்கு அனுபவத்தில் புரிய வேண்டாமா?’ என்றார்.

வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினோம்.

நான் பஸ்ஸில் மிக அபூர்வமாகத்தான் பயணித்திருக்கிறேன். பஸ்ஸிலிருந்த மக்கள் திரளும், நெரிசலும் எனக்குத் திகைப்பூட்டின. தினமும் இத்தனை சிரமப்பட்டா சந்துரு அலுவலகம் போகிறார். கடவுளே!

வெகு நேரம் காத்திருந்த பின், கூட்டம் சற்றே குறைவான பஸ் வந்தது. அதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் உராயாமல் நிற்கும் அளவிற்கு இடமிருந்தது என்பதே.

சந்துரு தலைக்கு மேலிருந்த ஒரு கம்பியை பிடித்துக் கொண்டார். நான் ஒரு சீட்டை ஒட்டி இருந்த செங்குத்துக் கம்பியின் மீது சாய்ந்து நின்று கொண்டேன்.

‘கோவில் தூணில் செதுக்கியிருக்கும் தேவமங்கை போலிருக்கிறீர்கள்’ என்றார் சந்துரு.

எனக்குச் சற்று கூச்சமாக இருந்தது, ஓரப்பார்வையால் சுற்றிலும் கவனித்தேன். சந்துரு சொன்னது எவர் காதிலும்   விழவில்லை. அப்படியே விழுந்தாலும் யார் பொருட்படுத்தப் போகிறார்கள். அவரவர் கவலை அவரவருக்கு. பொது இடத்தில் இப்படிப்பட்ட நேரடியான புகழ்ச்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை. சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் நான் அதை வெளிக்காட்டவில்லை.

‘இலக்கியவாதி என்றால் கொஞ்சம் கிறுக்குத்தனம் இருக்குமோ!’ என்றேன்

‘நான் பெரிய இலக்கியவாதி. பெரிய கிறுக்கு’ என்றார் சந்துரு.

சிரித்தேன்.

சந்துரு ‘திருவல்லிகேணி செல்ல குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகிவிடும்’ என்றார்.

‘அவ்வளவு நேரம் என்ன செய்வீர்கள்?’ என்றேன்

‘நான் வாசித்த கதைகளின் பாத்திரங்கள் வேறுவிதமாக நடந்து கொண்டிருந்தால் கதையின் போக்கு எப்படி மாறியிருக்கும் என்று யோசிப்பேன். நேரம் போவதே தெரியாது’ என்றார் சந்துரு.

‘நிஜ மனிதர்களைப் பற்றி யோசிக்க மாட்டீர்களா?’ என்றேன்

‘கனவில் நடப்பது கனவில் நிஜம்தானே? என் கதைகளில் நடப்பவை எல்லாமே என் மனதில் நிஜமானவைதான். என் கதாமனிதர்களோடு பேசுவேன். பழகுவேன். ஆனால் என்னை அறியாமலே நிஜ மனிதர்களைப் பற்றிய நினைவுகள் தாமாகவே வரும். இப்போது கூட திடீரென்று மாலதியின் நினைவு வருகிறது. அந்த நினைவில்தான் கோவில் தூண், தேவமங்கை என்று உங்களிடம் சொல்லிவிட்டேன்’ என்றார் சந்துரு.

எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அட. இவரைவிட நான் பெரிய கிறுக்காக இருப்பேன் போலிருக்கிறதே! வாய்விட்டுச் சிரித்தேன். அருகிலிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

‘யாரது மாலதி?’ என்று கேட்டேன்.

‘பள்ளியில் பழக்கமானவள். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்தாள். அவள் பெண்கள் கல்லூரிக்குச் சென்றபின்னும் நட்பு தொடர்ந்தது. மிகவும் நல்லவள்’ என்றார் சந்துரு.

‘எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்

‘நான் சொல்லும் கதைகளை எல்லாம் ஆர்வத்தோடு கேட்பாள். நான் கிறுக்கலாக எழுதும் எல்லாவற்றையும் ஆர்வத்தோடு அழகான கையெழுத்தில் பிரதி எடுப்பாள்’ என்றார் சந்துரு. ‘அப்படியானால் மிக நல்லவள் என்ற பட்டத்தைத் தந்தே தீர வேண்டும்தான்’ என்று கூறி சிரித்தேன்.

‘நாமிருவரும் பஸ்ஸில் ஏறும்போதும் மாலதியோடு பஸ்ஸில் சென்ற நினைவு வந்தது. பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு கல்யாணத்திற்காக அவள் திருச்சி செல்ல வேண்டியிருந்தது. அவள் அப்பாவால் போக முடியவில்லை. என் உதவியைக் கேட்டார்’ என்றார் சந்துரு.

‘உடனே சரி என்று சொல்லி இருப்பீர்களே!’ என்றேன்.

‘ஆமாம். முடியாது என்றா சொல்வேன்? அன்று பஸ்ஸில் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. நாங்கள் இரட்டை இருக்கைகளை முன்பதிவு செய்திருந்தோம். தலையில் முக்காடிட்டிருந்த ஒரே குடும்பத்துப் பெண்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களும் முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால் ஒரு இளம் பெண்ணுக்கு மட்டும் கடைசி வரிசையில் நான்கு ஆண்களுக்கு நடுவே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்பெண் சீட்டை மாற்றிக் கொள்ளலாமா என்று என்னிடம் மிகவும் பணிவோடு கேட்டாள்’ என்றார் சந்துரு.

‘முடியாது என்று சொல்லி இருப்பீர்களே?’ என்றேன்.

‘எப்படி அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?’ என்றார் சந்துரு.

‘பக்கத்து சீட்டு பளிங்குச் சிலையை விட்டு நகர மனம் வருமா? மேலே சொல்லுங்கள்’ என்றேன்.

‘பொதுவாக நான் எவரிடமும் முரட்டுத்தனமாகப் பேசாதவன். அன்று தற்காலிக புத்தி மாறாட்டம் ஏற்பட்டுவிட்டது! அப்பெண்ணை அலட்சியமாகப் பேசினேன்.

நான்கைந்து முறை கேட்டுவிட்டு, வேறு வழியில்லாமல் தன் சேலைத் தலைப்பை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டு தன் சீட்டில் சென்று ஆண்கள் நடுவே உட்கார்ந்து கொண்டுவிட்டாள். என் வார்த்தைகளால் புண்பட்டுவிட்டாள் போலிருக்கிறது. வேறு எவரிடமும் உதவி கேட்கவில்லை. அப்பெண்ணை அப்போதே மறந்து விட்டேன்’ என்றார் சந்துரு.

‘மாலதியால் வந்த மாலை நேரத்து மயக்கம் எதை வேண்டுமானாலும் மறக்க வைக்கும்’ என்றேன்.

‘அந்த நிகழ்ச்சி பல வருஷங்கள் கழித்து இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. அவளது கண்களில் தேங்கிய கண்ணீர் இப்போது என்னைத் துன்புறுத்துகிறது’ என்றார் சந்துரு.

ஜெமினி மேம்பால நிறுத்தத்தில் பலர் இறங்கவும், பஸ் பாதி காலியாகிவிட்டது. நானும் சந்துருவும் உட்கார இடம் கிடைத்தது.

‘மேற்பரப்பில்தான் நான் நாகரிகமானவன். சந்தர்ப்பம் சாதகமாக இருந்தால் அநாகரிமாக நடந்து கொள்ளக் கூடியவன். அன்று நடந்ததை நினைத்தால் பதற்றமாக இருக்கிறது. பல வருஷங்களாகி விட்டன. இன்று என்னால் என்ன செய்ய முடியும்! ஒன்றும் செய்ய முடியாது!’ சந்துருவின் குரல் மெல்லுணர்ச்சியால் நெகிழத் தொடங்கியிருந்தது. நான் சமையல்காரியாக இருப்பதை மறந்தேன். சந்துருவின் கைகளை மெல்லப் பற்றினேன். பொது இடம் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. சிறுகுழந்தையை சமாதானப்படுத்தும் தாயாக என்னை உணர்ந்தேன்.

‘இதற்கான பதில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்கிறீர்களா?’ என்றார் சந்துரு.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

‘காலம் என்பது உள்ளத்தில் இருக்கிறது. காலண்டரிலோ, கடிகாரத்திலோ இல்லை. பெயர் தெரியாத அந்த பெண்ணின் வருத்தத்தை, அவமான உணர்ச்சியை என் உணர்ச்சியால் தொட்டுணர முடியும் என்கிறீர்கள்?’ என்றார் சந்துரு.

நான் மௌனமாக இருந்தேன்.

‘அந்த நிகழ்ச்சி இன்னும் ஜீவனோடுதான் இருக்கிறது. ஒவ்வொரு முறை நான் பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போதும் அது எனக்கு சேதி சொல்ல முயற்சி செய்து கொண்டே இருந்தது. நான்தான் கவனக் குறைவாக இருந்துவிட்டேன். அதனால் பாதகமில்லை. இப்போது அந்த நிகழ்ச்சியை உணர்வில் மீண்டும் வாழ்ந்து அந்தப் பெண்ணிற்கு சந்தோஷம் தர முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது’ என்றார் சந்துரு.

அப்போதும் நான் மௌனமாகத்தான் இருந்தேன்.

சந்துரு ஜன்னல் வழியே தெரிந்த விரிந்த வானத்தை சிறிது நேரம் பார்த்தார். வானத்தைப் பார்க்க மனிதர்களுக்கு அபூர்வமாகத்தான் தோன்றுகிறது. ஜன்னலை பூட்டிக் கொண்டால்தான் பாதுகாப்பாக உணர்கிறோம். பெரியதில் கரைந்து விட சிறியது எப்போதும் அஞ்சுகிறது. அப்படி கரையும்போது தான் பெரியதாவதை ஏன் சிறியதால் உணர முடியவில்லை? முடியவில்லையா அல்லது விரும்பவில்லையா? கண்களை மூடி தன்னுள் ஆழ்ந்த சந்துருவின் முகத்திலிருந்த இறுக்கம் மெல்ல மெல்ல விலகியது. அவர் கண்மலர்களில் தோன்றிய பனித்துளி உருண்டு, கன்னத்தில் கோடிட்டது. அக்கோடு கண்மலரின் நீண்ட காம்பு போலிருந்தது.

நான் புன்னகைத்தேன். நாங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விட்டிருந்தது.

நாங்கள் அலுவலகத்தில் நுழைந்ததும், ‘வழக்கம்போல பஸ் தாமதம் என்று பொய் சொல்லப் போகிறாய்?’ என்று வரவேற்றார் ஆடிட்டர்.

‘உண்மையிலே பஸ்தான் காரணம்’ என்றேன்.

‘நீங்கள் யார்?’ என்று கேட்டார் ஆடிட்டர்.

நான் பதில் சொல்லும்முன் ‘என் சொந்தக்காரப் பெண். நம் அலுவலகத்தைக் காட்ட அழைத்து வந்தேன்’ என்றார் சந்துரு.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

காலையிலேயே சந்துரு தணிக்கை செய்யச் செல்ல வேண்டிய வங்கியின் மண்டல அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘தணிக்கைக்குச் செல்ல வேண்டாம். அவசர கூட்டம் கூடுகிறது. நேரில் உடனே வரவும்’ என்றது.

தனியே அலுவலகத்தில் நான் என்ன செய்வது! நானும், ஆடிட்டரும், சந்துருவும், வம்சியும் காரில் சென்றோம்.

நான் வங்கி வரவேற்பறையில் காத்திருக்க, மற்றவர்கள் வங்கிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் அரைமணி நேரத்தில் முடிந்து விட்டது.

ஆடிட்டர் உற்சாகமாக இருந்தார். ‘அவசரக் கூட்டம் என்றதும் ஏதோ குற்றம் சுமத்தத்தான் கூப்பிடுகிறார்கள் என்று பயந்து விட்டேன். நல்ல விஷயம்தான். தணிக்கை சன்மானத்தை உயர்த்தி இருக்கிறார்கள். பல ஆடிட்டர்கள் சன்மானம், பயணப்படி எல்லாமே குறைவாக இருக்கிறது என்று தணிக்கை செய்ய வருவதே இல்லையாம். பல மாதங்களாக இந்த பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று நல்லபடியாக முடிந்தது’ என்றார்.

‘சாருக்கு நல்ல விஷயம்தான்’ என்றார் வம்சி.

‘என்ன அப்படி பிரித்துச் சொல்லி விட்டாய்? உங்களுக்கும் நல்ல விஷயம்தான். நீங்கள் எல்லோரும் இனி முதல் வகுப்பில் பிரயாணம் செய்யலாம். உள்ளூரில் வாடகை காரில் போகலாம்.

இதில் நீங்களும் கூடுதலாக சம்பாதிக்க வழி இருக்கிறது’ என்றார் ஆடிட்டர்.

‘முதல் வகுப்புப் பயணச் சீட்டு வாங்கி அதை போட்டோகாபி எடுத்துக் கொண்டு, பின் பயணச் சீட்டை ரத்து செய்து விட்டு, இரண்டாம் வகுப்பில் போக வேண்டும். பஸ்ஸில் போனாலும், காரில் சென்றதாக நாமே டிரைவரின் கையெழுத்தை ரசீதில் போட்டு விடவேண்டும். ஒவ்வொரு பயணத்திலும் ஆயிரக்கணக்கில் கூடுதலாக சம்பாதித்துவிடலாம்’ என்றார் வம்சி.

‘நீதாண்டா என் வாரிசு!’ என்று மகிழ்ந்தார் ஆடிட்டர்.

‘தணிக்கை செய்ய வேண்டிய நாமே இப்படி தகிடுதத்த வேலை செய்தால், நம் தொழிலுக்கே மரியாதை இல்லாமல் போய்விடும்’ என்றார் சந்துரு.

‘மரியாதையெல்லாம் நமக்கெதற்கு? பணம்தான் முக்கியம்’ என்றார் ஆடிட்டர்.

‘கொஞ்ச நாட்கள் அப்படிச் செய்ய முடியும். வங்கிக்குத் தெரிய வந்ததும், புதிய விதியைக் கொண்டு வந்துவிடும்’ என்றார் சந்துரு.

‘அதை முறிக்க நம் அறிவை கொஞ்சம் உபயோகப்படுத்தினாலே போதும்’ என்றார் ஆடிட்டர்.

‘அப்படியெல்லாம் என்னால் செய்ய முடியாது. மாட்டிக் கொண்டால் கேவலம்’ என்றார் சந்துரு.

‘மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லை என்றால் செய்வாயா?’ என்று கேட்டார் ஆடிட்டர்.

சந்துருவால் பதில் சொல்ல முடியவில்லை.

‘உன்னைத் திருத்த என்னால் முடியாது. நீ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் ஆடிட்டர் தொழில் செய்ய முடியாமல், வேறு வேலைக்குப் போய்விடுவாய். படித்ததெல்லாம் வீணாகிவிடும். அடுத்தவர் பணத்தில் பிழைப்பது எப்படி என்று புரிந்து கொண்டு நல்ல புத்தியோடு இரு’ என்றார் ஆடிட்டர்.

‘சரி சார்’ என்றார் சந்துரு பேச்சை முடிக்கும் உத்தேசத்தோடு.

‘படைப்பு என்பது ஒளி - இருள், ஆண் - பெண், இன்பம் - துன்பம் போன்ற இருமைகளால் ஆனது என்று ஒரு கட்டுரையில் எழுதி இருந்தாயே! சட்டம் என்ற ஒன்றிருந்தால் சட்டமுறிப்பு என்ற ஒன்றும் இருக்கும். மனிதன் பிறப்பது இறக்கத்தான்.

இறப்பு இருந்தால்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் வருகிறது, இல்லையென்றால் வாழ்க்கை தேங்கி விடும். சட்டம் முறிந்தால்தான் அரசாங்கம் யோசித்து சட்ட சீர்திருத்தம் கொண்டுவரும் அல்லது புதிய சட்டம் கொண்டு வரும். யோசித்துப் பார். வரி சட்டம், கம்பெனி சட்டம் எல்லாமே கேலிக் கூத்து ஆவதால்தான், அந்தச் சட்டங்கள் காலத்திற்கேற்றபடி புதிதாக இருக்கின்றன. யாருமே முறிக்காத எத்தனையோ சட்டங்கள் இருநூறு வருஷங்களாக எந்த மாற்றமுமில்லாமல் பிரிட்டிஷ் மகாராணி போட்டபடியே இருக்கின்றன. சட்டமுறிப்பு அரசாங்கத்திற்கும், குடிமகனுக்கும் நடக்கும் போட்டி. முன்னேற்றம் வேண்டுமானால் போட்டி வேண்டும். ரஷ்யாவில் வியாபாரப் போட்டி இல்லாமல் இருந்தது. எல்லா பொருட்களும் தரங்கெட்டவையாகி விட்டன. பொதுவுடைமை சித்தாந்தமே அந்த நாட்டில் தோற்றுவிட்டது’ என்றார் ஆடிட்டர். ‘சார், நீங்கள் உண்மையை லேசாகத் திரிக்கிறீர்கள். முழுப் பொய்யை விட அது ஆபத்தானது, அது தீய சக்தியின் வேலை’ என்றார் சந்துரு.

‘யார் இல்லை என்றார்கள்? சட்ட நிபுணக் கருத்து என்று சொல்கிறார்களே. அது சட்டத்தின் நோக்கத்தை நம் வசதிக்கு திரிப்பதுதானே? திரிப்பது மட்டும்தானா தீமை? சத்தியத்தை முறைப்படுத்துவது, நிறுவனமாக்குவது எல்லாமே தீமைதான். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒரு குட்டிக் கதை சொன்னார். சாத்தானும், அவன் உதவியாளனும் மேதை ஒருவனை கெடுப்பதற்காக அவர் வீட்டிற்குப் போனார்கள். அதே நேரத்தில், இறைவனின் அருளால் மேதையின் கைகளில் ஒளிமயமான ஒரு வைரக்கல் விழுந்தது. உதவியாளன் துடித்தான். ‘மோசம் போய்விட்டோம். மேதையின் கைகளில் தூயசத்தியம் சிக்கி விட்டது. அதை அவர் விடமாட்டார். இனிமேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றான். ‘மூடா! இப்போதுதான் நம் வேலை எளிதாகிவிட்டது. மேதை சத்தியத்தை உலகெங்கும் பரப்ப நாம் அவருக்கு உதவுவோம்’ என்று சந்தோஷமாக சாத்தான் கூறினான். இத்தனை வருஷங்களாக விவேகானந்தர், வேதம், உபநிஷதம் என்று பிதற்றிக் கொண்டிருந்தாய். இப்போது திடீரென்று கொடி நிறத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீ அரபிந்தோ என்கிறாய். அவர் லைப் டிவைனில் என்ன சொல்கிறார் என்றால் என்று ஆரம்பித்து உன் நண்பர்களுக்கு விளக்கம் தருகிறாய். உனக்கும், ஜேகே சொன்ன மேதைக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? முதலில் வாழ்க்கையை அனுபவித்துப் புரிந்து கொள். எதையாவது சாதித்துக் காட்டு. புத்தகத்தை வைத்துக் கொண்டு வார்த்தை ஆடிட்டர்.

வித்தை காட்டிக் கொண்டிருக்காதே’ என்றார்

சந்துரு பதில் பேசவில்லை.

‘சார், என்னை மதியம் ரத்தினம் வீட்டிற்குப் போகச் சொன்னீர்கள்’ என்று பேச்சை மாற்றினார் வம்சி.

வம்சியிடம் ‘ரத்தினம் வீட்டிற்கு என் காரிலேயே போய்வா.

பெரிய இடம். பஸ்ஸில் போகாதே. எனக்குத்தான் கேவலம்’ என்ற ஆடிட்டர் தொடர்ந்து ‘உங்களில் ஒருவர் கூட சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை. வாடிக்கையாளர், அரசாங்க அலுவலகங்களுக்கும் தாமதமாகத்தான் போகிறீர்கள். கேட்டால் பஸ் தாமதமாக வந்தது என்ற பொய்தான் பதிலாக வருகிறது. சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை எதுவுமில்லாமல் இருக்கிறான் டிரைவர். நம் அலுவலகத்திற்காக ஒரு கார் வாங்கிவிட்டால் என்ன? என் காரை இப்போதே அலுவலக உபயோகத்திற்குத் தந்து விடுகிறேன். எனக்குப் புதிய கார் வாங்கிக் கொள்கிறேன். அதுதான் சரி. இனி நீங்கள் எல்லோரும் காரில்தான் வர வேண்டும், காரில்தான் போக வேண்டும். யாரும் என்னை ஏமாற்ற முடியாது’ என்றார்.

  அன்று மாலை நானும், சந்துருவும் அலுவலகக் காரில் வீடு திரும்பினோம். திரும்பும்போது ‘மாலதி என்ன ஆனாள்?’ என்று கேட்டேன்.

‘அவள் அத்தை மகனைக் கல்யாணம் செய்து கொண்டு லண்டனில் சந்தோஷமாக இருக்கிறாள். எங்கும் சொந்தக் காரில் போகிறாள். பெண்ணாக இருக்கிறாள். யாரும் அவளை சீட்டிலிருந்து எழுப்ப மாட்டார்கள்’ என்றார் சந்துரு.

‘விஷமம் பண்ணியது நீங்கள். அவளை ஏன் கேலி செய்கிறீர்கள்?’ என்றேன்

அன்றிரவு ஆடிட்டரும் மதுரை வருகிறேன் என்றதால், சந்துரு காரிலேயே மதுரை சென்று விட்டார். அதன்பின் சந்துரு பஸ்ஸில் சென்றதாக எனக்கு நினைவில்லை. இங்கிருந்து வேலையை விட்டுப் போகும்போது என் காரை சந்துருவிற்கு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

(தொடரும்)

***********

ஜீவிய மணி

நான் மனித உதவியை நாடப் போவதில்லை; என் சொந்தத் திறமையையும் நம்பப் போவதில்லை; எப்படி என்ன நடக்கும் என நினைக்கப் போவதில்லை; நண்பர், உறவினர், பார்ட்னர், குடும்பம், குருவையும் நாடப்போவதில்லை;

இந்த நெருக்கடி வந்தபின், இது அன்னையை நெருங்கக் கிடைத்த சந்தர்ப்பம் என
அன்னையை மட்டும் நம்புகிறேன்.

***********



book | by Dr. Radut