Skip to Content

10. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

V. தேவகி, கடலூர்

ஸ்ரீ அன்னையின் பாத கமலங்களே சரணம் !!

ஸ்ரீ அன்னையின் அருளால் நான் பெற்ற அனுபவங்களை எழுத வார்த்தைகளும், வருஷங்களும் போதாது. ஏறக்குறைய 20 வருஷங்களாக ஸ்ரீ அன்னையை அறிந்த நாள் முதல் எனது துன்பங்கள் மாறி, சின்னச்சின்ன அபிலாசைகளையும் ஸ்ரீ அன்னை எதிர்பாராதவிதமாக நிறைவேற்றி வருகிறார்.

நம் அனுபவங்கள் அடுத்தவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், அவ்விஷயங்களில் அன்னையின் அருட்தீண்டுதல் அரும்பியதால் அவை அனுபவிப்பவர்களுக்கு மனக்கஷ்டத்திற்கு மருந்தாகவும், நெஞ்சுக்கு உரமாகவும், ஞான வெளிச்சங்களாகவும் விளங்கக்கூடியவை. ஸ்ரீ கர்மயோகி அவர்களின் கீழ்க்கண்ட வரிகளின்படி நன்றியறிதலாக எனது இளைய மகளுக்கு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன்.

அனுபவம் விவேகமானால் ஆனந்தம் நன்றியாகும்.

+2 படித்த பிறகு இன்ஜினியரிங் படிக்க விரும்பினாள். விண்ணப்பமும் செய்திருந்தாள். முற்படுத்தப்பட்ட வகுப்பு, மதிப்பெண்கள், தங்கிப் படிக்க பணச் செலவு எனப் பல விஷயங்கள் இருந்தாலும், அத்தனையையும் அன்னையிடம் சொல்லி வந்தேன்.

இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்தால் படிப்பது, இல்லையென்றால் திருச்சியில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் படிப்பது என முடிவு எடுத்து அங்கும் விண்ணப்பித்து இருந்தாள்.

முதற்பட்டியல் வெளிவந்தது, பெயர் இல்லை. இரண்டாம் பட்டியலிலும் பெயர் வரவில்லை. சரி அன்னையின் விருப்பம் என திருச்சியில் உள்ள கல்லூரியில் சேர்ந்தாள்.

அன்னையின் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும் என நான் நினைத்தாலும், ஒரு பெற்றவளாக, அவள் விரும்பிய படிப்பைப் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் அன்னையிடம் சொல்லி, அவளுக்கு மனத் தெம்பைக் கொடுங்கள் எனவும் வேண்டி வந்தேன்.

கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம் வார விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தவள் மூன்று நாள் பிரார்த்தனையை மேற்-கொண்டாள். சிதம்பரம் வாகீச நகரில் இருந்த தியான மையத்திற்குச் சென்று White Roses என்ற புத்தகத்தையும் மூன்று நாட்கள் வாசித்தாள்.

சேர்க்கைகள் முடிவடைந்து இன்ஜினியரிங் கல்லூரி வகுப்புகள் தொடங்க இருக்கும் தருணத்தில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து அட்மிஷன் கார்டு வந்தது. சந்தோஷத்துடன் சென்று அந்தக் கல்லூரியில் சேர்ந்தாள். மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் நிரப்பியபின், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் - இவள் பாஸ்கெட் பால் பிளேயர் என்பதால் - இடம் கொடுத்துள்ளார்கள் என்ற விபரம் பின்பு தெரிந்தது. இனி இல்லை என்ற படிப்பை அன்னை நாம் அறியாமல், நமக்கு இருக்கும் சிறப்பை வெளிக்கொண்டு வந்து வாய்ப்பை உருவாக்கியதை உணர்ந்து தெளிந்தேன்.

இரு பெண்களையும் எப்படிக் கரையேற்றப் போகிறோம் என்ற நினைவு மேலிடும் போதெல்லாம் ஸ்ரீ அன்னையின் பாதங்களில் இரண்டு பேரையும் மானசீகமாக வைத்து இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்; தாங்கள்தாம் நல்ல வழிகாட்டவேண்டும் என பிரார்த்திப்பேன். இரு பெண்களுக்கும் திருமணங்கள் நல்ல முறையில் நடந்து இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

ஸ்ரீ கர்மயோகி அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் சத்தியம். ஆபத்து வந்தபோதெல்லாம் ஸ்ரீ அன்னையின் அருளால் காப்பாற்றப்பட்டோம். அன்னைக்குக் காணிக்கை வைத்து, செயலைச் சமர்ப்பணம் செய்து விடுவேன்.

ஆச்சரியப்படும் விதத்தில் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறியுள்ளன. எனக்கு ஸ்ரீ அன்னையை அறிமுகப்படுத்திய சகோதரி இல. சுந்தரி அவர்களுக்கும், அப்பா ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளும் நமஸ்காரங்களும் உரித்தாகுக.

ஸ்ரீ அன்னையே சரணம்.

அன்னையின் குழந்தை

V. தேவகி

**********

ஜீவிய மணி

ஒரு புதிர் போட்டால் யாரோ ஒருவர் அதற்கு விடை கூறுவார். அவர் கூறிய பின் அனைவருக்கும் புரியும். விடையைக் கூறுபவர் முன்னோடி.

முன்னோடிகளால் உலகம் முன்னேறுகிறது. மற்றவர்
முன்னோடிகளால் பயன் பெறுபவர்.

மனிதனுக்கு அடுத்த நிலையாக சத்திய ஜீவன் பிறப்பான் எனவும், அம்முயற்சிக்கு முன்னோடிகள் 100 பேர் தேவை எனவும் பகவான் கூறுகிறார். அது யோகம். மவுண்ட் எவரெஸ்ட் வாழ்க்கையின் சிகரம். நிரந்தர நிலையான அதிர்ஷ்டம். அன்னையின் அருளை நடப்பதற்கு முன் புரிந்தவர்க்கு அத்தகு நிலையான அதிர்ஷ்டம் கிட்டும். நடந்தபின் புரிந்து கொண்டாலும் பிரார்த்தனை பலிக்கும். வாழ்வு திருவண்ணாமலை மலை போன்றது. வருஷத்தில் 1000 பேராவது இம்மலை உச்சிக்குப் போகிறார்கள். பல ஆயிரம் பேர் உச்சிக்குப் போக முடியாததால் மலையைப் பிரதட்சணம் வருகிறார்கள். அனைவருக்கும் அதற்குரிய பலன் உண்டு.

நடந்தபின் புரிந்தாலும், நடப்பதற்கு முன் புரிந்தாலும்
அனைவரும் அன்னைக்கு உரியவராவர்.

நடப்பதற்கு முன் புரிந்தால் நிரந்தர நிலையான அதிர்ஷ்டம் பெறலாம். அது மலையேறி உச்சியைத் தொட்டதாகும். நடந்தபின் புரிந்தால் பிரார்த்தனை பலிக்கும். அது பிரதட்சணம் செய்வது போன்றது.

***********



book | by Dr. Radut