Skip to Content

08. பாதுகாப்பு

பாதுகாப்பு

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவு ஆற்றியவர்: திருமதி உஷா ராமதாஸ்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: டிசம்பர் 15, 2014

வாழ்க்கையென ஆரம்பிப்பது ஆயுள் எனப்படும். உயிர் வாழ்வது ஆயுள். அதற்குரிய பாதுகாப்பைச் சிறு வயதில் தாயாரும் குடும்பமும் தரும். வீட்டை விட்டு வெளியே போய் வாழ வீட்டில் கற்றுக் கொண்டவனுக்குச் சுய பாதுகாப்புண்டு. இது இல்லாத சிறுவர்கள் குளம், குட்டையில் விழுவார்கள். விபத்தில் சிக்குவார்கள். இரண்டும் உடலுக்குத் தேவையான பாதுகாப்பு. அடுத்தது உயிருக்குத் தேவையான பாதுகாப்பு. உயர்ந்த இளைஞர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர்களைப் பல சிறுவர்கள் நாடுவார்கள். உயிருக்குப் பாதுகாப்புள்ளவனை அது தேவைப்பட்ட சிலர் நாடி அமைதியடைவார்கள். அது போதுமான அளவில்லாவிட்டால் அடிக்கடி வாழ்வு பிறரால், பிற சந்தர்ப்பத்தால் எரிச்சல் மூட்டும். எரிச்சல் கோபத்தைக் கிளப்பும். கோபம் உயிரின் பாதுகாப்பு. தவம் செய்யப் பிரியப்பட்ட பாம்புக்குப் பிரம்மச்சாரி சொல்லிக்கொடுத்த உபாயத்தை பரமஹம்ஸர் கதையாகக் கூறுகிறார். தனிப்பட்ட-வ ருக்குக் கோபம் பாதுகாப்பு. குடும்பத்திற்கு அதுவே பொறுமை. பொறுமையும் பொறுப்பும் உள்ளவர் குடும்பம் காப்பாற்றப்படும். பென்னட்டிற்குப் பொறுப்பில்லாத பொழுது குடும்பம் சீரழிந்தது. அவர் பொறுப்பை ஏற்றபின் அதேபோல் தனக்கில்லாத ‘பொறுப்பை’ ஏற்று டார்சி அவர் குடும்பத்தைக் காப்பாற்றினான். உயிருக்கு அடுத்தது மனம் பெற்ற அறிவு. அறிவு விஷயத்தைப் புரிந்து கொள்ளும். புரிவதால் பாதுகாப்புண்டு. புரியாதது பிரச்சனை. புரியாதது புரிந்தால் பிரச்சனையின் சிக்கல் அவிழ்ந்து வாய்ப்பாகும். அடுத்தது ஆன்மா. ஆன்மா அனைவருக்கும் பாதுகாப்பு தரும். பெரிய ஆத்மாக்கள் ஜனிக்கும் நேரம் அவ்வூரில் சுபீட்சம் வளர்வதாகக் கூறுவார்கள். அளவு கடந்த பாதுகாப்பிருந்தால் அங்கு வாழ்வு வளரும். சுபீட்சம் வாழ்வு வளர்வது. சைத்திய புருஷன் ஆன்மா பரிணாம வளர்ச்சி பெறுவது. சத்திய ஜீவியத்திற்கும் பாதுகாப்புண்டு. சுமுகம், பரஸ்பர உணர்ச்சி மூலம் ஐக்கியத்தை வளர்ப்பது சத்திய ஜீவியம். இங்கு அறிவும் செயலும் இணைந்திருப்பதால், பாதுகாப்பு தேவையில்லை. அறிவுக்கு எதிராகச் செயல் செயல்பட்டால் பாதுகாப்பு தேவை. சத்திய ஜீவியத்தைச் சத்தியத்தின் ஜீவியம் என பகவான் குறிப்பிட்டு “இச்சொற்களை வேதத்திலிருக்கும் சத்தியம், ரிதம், பிருஹத் என்ற சொற்களிலிருந்து எழுதுகிறேன்” என்கிறார். இவற்றை இருவகையாகக் கூறுகிறார்.

1) சத்தியம் - ஜீவியம், ஜீவியமுள்ள சத்தியம், 2) அடுத்தது Supermind. Supermind என்பது பல கருத்துகளை தன்னுள் கொள்ளும் (elastic) தன்மையுடையது. இந்த எந்தச் சொற்களும், சொற்றொடர்களும் பகவானுக்குத் திருப்தி தரவில்லை. இவற்றிலிருந்து எழும் சிறிய சக்திகளை அசரீரி, திருஷ்டி போன்றவற்றைக் குறிப்பிட்டு “அவை மனிதனுக்குரிய உற்சாகம், அற்புத ஞானம், பாகுபாடு, சுட்டிக்காட்டுவதால் நாமறிய முடியும்” என்கிறார். “இவற்றிடையேயுள்ள இடைவெளி கடல் போல் (gulf) பிரிக்காமல் ஆகாயமாக விரிகிறது” என்கிறார். சூரியசந்திரர் போல் எட்ட உள்ளது. இதைக் கடந்தது சச்சிதானந்தம். அதைக் கடந்தது ஆத்மா (Spirit). சச்சிதானந்தத்தை நினைவுகூர்பவன் பெறுவது ஆன்மிகப் பாதுகாப்பு. ஆத்மா (Spirit) உலகின் பாதுகாப்பிற்கு உறைவிடம். இவை பாதுகாப்பின் பல நிலைகளானால், வேலை நிரந்தரமாக இருக்கும் பாதுகாப்பு, விபத்து உடலைத் தொடாத பாதுகாப்பு, திருமண வாழ்வில் அமைதி குலையாத பாதுகாப்பு, ஊரில் பரவும் நோய் உடலைத் தொடாத பாதுகாப்பு, வாழ்வில் உள்ள தீராத வியாதிகள் வராத உடலுக்குரிய பாதுகாப்பு, கெட்ட பெயர் அண்டாமலிருக்கும் சமூகப் பாதுகாப்பு, கவலை மனத்தை ஆக்ரமிக்காத பாதுகாப்பு, பணவரவு குறையாத பாதுகாப்பு, பணவரவு எனக்குக் குறையாது என்ற நம்பிக்கையால் எழும் சாஸ்வதமான பாதுகாப்புபோன்றவை அன்பன் கருதுபவை. வேத ரிஷிகள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் அவர் வாழ்வு காமதேனு, கற்பக விருட்சமாகியது. எந்தப் பாதுகாப்பு தேவையோ அந்த முழுமையுடன் பகுதியான நாம் இணைவது நிரந்தரப் பாதுகாப்புக்குரிய சூத்திரம்.

பாதுகாப்பு உயர்ந்ததால் வாழ்க்கை உயர்ந்தால் பாதுகாப்பு தேடி வரும். அன்பர்கட்கு வாய்ப்பும், பிரச்சனையும் வந்தால் உடலின் பெரும் பாதுகாப்பு வரும். பாதுகாப்பு இல்லாமலில்லை, பாராட்டுவது குறைவு. தெரிந்து கொள்ள முடியாத நிலை பரவலாக இருக்கிறது. உலகில் ஒரு மனிதனுக்கு வாய்ப்பு வந்தால் அவன் அதைப் பாதுகாக்க வேண்டும். அன்னையின் வாய்ப்பு பாதுகாப்பால் சூழப்பட்டு வரும். வெறும் மனிதன் அன்னை அன்பனாக இருப்பது அவசியம். கேரளாவிலில்லாத பெண்கள் பாதுகாப்பு, பெங்களூரில் உள்ளது. வடநாட்டில் நடுத்தெருவில் தவறு நடக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். டெல்லியில் அடிபட்ட டாக்டரை 6 மணி வரை எவரும் அண்டவில்லை. பாதுகாப்புத் தருவது நாட்டின் பண்பு. அதை அதிகபட்சம் பெற உதவுவது அன்பரின் பண்பு. அன்பருக்-- குள்ளது அன்னை ஜீவியத்தின் பணிவு. படித்தவர்க்கு, மேல் ஜாதியினருக்கு மரியாதைக்குரியவர் என்பதால் பெண்கட்கு, அந்தஸ்துள்ளவர்க்கு, முகவசீகரம் உள்ளவர்க்கு, இனிமையான பழக்கம் உள்ளவர்க்கு, இயல்பாக உலகில் மற்றவர்க்குரிய பாதுகாப்பு ஓரிழை அதிகமாக உண்டு. நாம் கருத வேண்டிய தத்துவங்கள் எல்லாம் இவற்றுள் அடங்கியுள்ளன. ஒருவர் தன் சந்தர்ப்பத்தில் உள்ள பாதுகாப்பை எப்படி உயர்த்துவது, இல்லாததை எப்படிப் பெறுவது? பொதுவான சட்டங்களை அனைவரும் அறிவார்கள். எவரும் நேரம் வந்தால் அதை அவசியமாக மீறுவார்கள். மீறாதது நெகட்டிவ் பாதுகாப்பு. பாஸிட்டிவ்வாக எப்படி அதையே செய்வது? வேலைக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் வேலைக்கு ஒழுங்காகச் சென்று திருப்தியாக முடிக்க வேண்டும். தம்பதிகட்கு திருமணப் பாதுகாப்புக்குக் கணவன் சம்பாதிக்க வேண்டும், பொறுப்பாக இருக்க வேண்டும், மனைவி மக்களைச் சுயநலமாக, அலட்சியம் செய்யக்கூடாது. கடமையைக் கண்ணும்கருத்துமாக செய்தவரை காலம் கைவிட்டதில்லை. வேலையைத் திறமையுடன் பொறுப்பாக செய்த காவல்காரன் சம்பளம் ஓராண்டில் மூன்று மடங்கு உயர்ந்தது. ஓரிரு சமயம் ஏழு மடங்கும் உயர்ந்தது. பெரும் குறுக்கீட்டால் அவனை அவசரமாக நீக்கிய முதலாளி மீண்டும் அவனைத் தேடிப்போய் வேலையை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். இலட்சியவாதிக்கும், இளமையால் துள்ளுபவருக்கும் கடமை, பொறுப்பு சரியாக இருந்தால் முழுப் பாதுகாப்புண்டு. ஆரம்பகால அவசரம் செயல்பட்டு வேலை போனாலும் மீண்டும் அழைப்பு ‘செய்த வேலை’யிடமிருந்து வரும். பெண்ணைப் பார்த்த பிள்ளை வீட்டார் நாத்தனாரும் அண்ணியும் ‘இந்தப் பெண் என் வீட்டில் வந்து குடித்தனம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ எனப் போட்டி போட்டனர். முடிவில் திருமணமான பின் மாமியார் தன் ஐந்து பிள்ளைகளுடன் மாறி மாறி இருந்தவர் இந்தப் பெண்ணிடம் நிலையாக வந்து தங்கினார். அன்னையை அறிந்தபின் அன்பருக்கு இது போன்ற “பாதுகாப்பு” எல்லாத் துறைகளிலும் கிடைக்கும். செய்யும் வேலையைச் சரியாகச் செய்தால் பாதுகாப்பு உண்டு. சமர்ப்பணமாகச் செய்தால், அன்னையின் பாதுகாப்புண்டு. 250 மைலுக்கு அப்பால் திருடனைத் தேடிப் போய் ஏமாந்தவன் பணம் திரும்ப வந்த அதிசயம் அன்னை நிகழ்த்தியது. கணக்குப் பரீட்சை சிம்மசொப்பனமான சிறுமி எல்லா இதர பாடங்களிலும் முதல் மார்க்கு வாங்கினாள். முடிந்ததை முறையாக அடுத்த பரீட்சையில் செய்தவள் சமர்ப்பணமாகச் செய்தாள். முதல் மார்க் பெற்றதை அவளால் நம்ப முடியவில்லை.

ஊரில் ஒன்பது கட்சி, போட்டி, பொறாமை. ஒரு கட்சிக்கு வெளி ஆதரவு. வெளி மனிதருக்கும் உள் விவகாரத்திற்கும் தொடர்பேயில்லை. வெளி மனிதனுக்கு உள்ளேயுள்ள போட்டி பொறாமை தெரியாது. வெளியூர் மனிதன் அன்பன். அவர் செய்த அன்னை சேவையால் ஒரு கட்சி பிரபலமாயிற்று. அதுவும் வெளியூராருக்குத் தெரியாது. பொறாமையாலும், போட்டியாலும், பிரபலமானவரைத் தாக்க முடிவு செய்தனர். அப்பெரும் தாக்குதலின் சிறுபலன் வெளியூராருக்குக் கிடைத்தால் அவர் காற்றில் பறக்க வேண்டும். போட்டி போட்ட கட்சி வரிசைகள் அமைந்தவிதம், மாறிய நிலை, மாறிமாறி அமைத்த முறை தாக்கும் படைக்குள்ள ஆதரவை அறவே நீக்கியது. அன்னையுடன் தொடர்பு உண்டானால் அதன் பெயர் பாதுகாப்பு. எப்படியெல்லாம் அது உருவாகும் எனப் பார்த்த பின்னரே தெரியும். ஆனால் ஒன்று, அது வரும்பொழுது தேவைப்பட்ட பாதுகாப்பு போல் பத்து மடங்கு வரும். ஒரு போலீஸ்காரன் துணை வேண்டுமானால் சூப்பரின்டென்டென்ட் துணை நிரந்தரமாக இருக்கும். நம் பங்கைச் செய்து முடித்தால் பாதுகாப்புக்குக் குறைவிருக்காது.

பொதுவாக பெருங்கடன் பெற்றவர்கள் பெரும் சாதுரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கட்குரிய பாதுகாப்பை இருவகையாகச் சொல்லலாம். முதல் வழி வாழ்வுக்குரிய அறிவின் வழி. கடன் வாங்கப் பயன்படுத்தும் சாதுரியத்தை வாழ்க்கையில் வெளிப்படுத்தப் பயன்படுத்தினால் இவர்கட்கு கடன் எழாது. வாழ்க்கை வசதியாக இருக்கும். இவர்கள் அன்னையிடம் வந்தால் கடன் எளிதாக, அதிகமாகக் கிடைக்கும். அன்னையின் பாதுகாப்பு அவர்கட்குக் கடன் தொல்லையின் சிரமத்தைத் தாங்க உதவும். அன்பர் தன்னையறிந்து, தன்னை அதிகபட்சம் முன்னேற்ற முடிவு செய்து, கடனை ரசிக்கும் குணத்தைச் சமர்ப்பணம் செய்தால், இவர் எவ்வளவு கடன் பெற முடியுமோ அவ்வளவு சொத்து சேரும். மனநிலை மாறுவது sincerity. கணவன் மனைவி பிரிவது அடிப்படைக் குறைகளால்; சம்பாதிக்காத கணவன், எந்தப் பொறுப்பும் அற்ற சோம்பேறி மனைவி போன்றவை அவை. பெண்ணுக்குச் சுதந்திரமில்லாத பழைய காலத்தில் அவள் அடங்கியிருந்தாள். படித்து சம்பாதிக்கும் பெண்ணுக்கு அந்த அடக்கமிருக்காது. பயந்து அடங்குவதற்குப் பதிலாக பொறுப்புடன் அடக்கமானால் அவளுக்குப் பிரச்சனையிருக்காது. அன்பர்கள் இந்த அவல நிலையிலும் பிரியமுடியாத ‘பாதுகாப்பு’ப் பெறுவர். முறையானவர்க்கு முடிவான பாதுகாப்பு அன்னையிடம் உண்டு. பத்துப் பேர் நண்பர் குழாமிருந்தால் ஒருவருக்கு அடிக்கடி இடறி விழுவதும், பிறர் மேலே இடிப்பதும், காயம் படுவதும் வழக்கமாக இருக்கும். மற்ற எட்டு பேருக்கு இவை அரிபொருளாக இருக்கும். ஒருவருக்கு வாழ்வில் இடறி விழுந்ததோ, காயம்பட்ட நிலையோ இருக்காது. அவர் உடல் உஷாரானது. அன்பரானால் கடைசி நிலையில் அவதிப்படுபவருக்கு அடியே படாதவருடைய நிலையை அன்னை சூழல் தரும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் உஷாராவது உசிதம். தாழ்த்தப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர் அந்த நாளில் எல்லாச் சிறுமைகட்கும் கொடுமைகட்கும் ஆளாயினர். உயர்ந்தவர்க்குச் சமூகம் எல்லா மரியாதையும் தந்தது. அந்த நாளில் உயர்ந்தோர் பெற்றதை இந்த நாளில் தாழ்ந்தோர் பெறுகின்றனர். அன்பர்கட்கு எந்த நாளிலும் உயர்ந்தோர் பெறும் மரியாதையுண்டு. காலத்தால் சமூகம் மாறுகிறது, அன்னை ஜீவியத்தால் அன்பர் உயருகிறார். எந்தப் பாதுகாப்பையும் எவரும் கேட்டால் உடனே அது கிடைக்கும். செல்வாக்குள்ள பிரபல அரசியல் எதிரி வன்மத்தால் பொய்க் கேஸ் போட்டு அரெஸ்ட் செய்ய முயலும்பொழுது அன்பர் பாக்டரியில் எதிரிக்கு சாதகமான சூழல் எழுந்தது. ஒரு தொழிலாளி இறந்தான். பிரமுகர் அரெஸ்ட் வாரண்ட் போட்டார். ஆனால் அன்பர் அரெஸ்டாகவில்லை. பிரமுகர் செல்வாக்கை இழந்து பதவியை இழந்தார். அன்பர்கள் மனம் சுத்தமானால் பாதுகாப்பு கேட்காமலேயே வரும். ஆ.க., ண்தஞ்ச்ணூ உள்ளவர் முதிர்ந்த வயதில் டாக்டர் கொடுக்கும் மருந்தைச் சாப்பிடாமல், அவர் சொன்னதைப் பின்பற்றாமல், அவர் கூடாது என்பதைப் பிடிவாதமாக செய்தார். வயிற்றுப் போக்கு வந்தது, மயக்கமானார். ஆபத்து விலக்க முடியாதென வந்தது. ஆஸ்பத்திரியாலும் முடியாது போல் சில நாட்களிருந்தன. நிலைமை மாறி நெடுநாள் வைத்தியம் பெரும் செலவில் செய்து பிழைத்தார். பிழைத்தபின் டாக்டர் “எல்லாம் போய் ஓரிழை உயிருடனிருந்ததால் பிழைத்தார்” என்றார். தன் உடம்பைத் தானே கவனித்துக் கொள்ளும் அன்பருக்கு டாக்டரிடம் போகும் வாய்ப்பு எழாது. “வியாதி எனில் குணம்” என்பது மந்திரம். ‘வாய்’ உள்ளவர்க்கு வியாதி வரும், ஆபத்து வரும். அன்னை கடைசி வரை காப்பாற்றுவது உண்மையென்றாலும் எந்த நேரம் நிலைமை மீறிப்போகும் எனக் கூறமுடியாது. பொய் சொல்லாதவர்க்கு வியாதியில்லை. வியாதியென நெடுநாளாக இருந்து அனுபவிப்பவர், இந்த வியாதி எப்பொழுது வந்தது, எந்தப் பொய் சொன்னதால் வந்தது என சில சமயம் அறிய முடியும். அப்பொய் சமர்ப்பணமானால் வியாதி தீரும். ஆன்மிகத் தத்துவப்படி வியாதி என்பது கர்மவினை, பாவத்தால் எழுந்தது. விசாரணையை மேலும் தொடர்ந்தால் எந்த வியாதிக்கும் மூலமாக ஒரு பொய்யிருக்கும். ‘பொய் வியாதி’ என்பதை ஏற்பது சிரமம். ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், தன்னைப் பொறுத்தவரை வியாதியைக் குணப்படுத்த முடிவுள்ளவர், இம்முறையைப் பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.

தாயும், குடும்பமும், வீடும், ஊரும், தானே கற்கும் பழக்கங்களும், முக்கியமாகப் பண்புகளும் சிறு வயதிலும், வீட்டிலும், ஊரில் பழகவும் வாழ்வை நடத்தவும் பாதுகாப்பைத் தரும். February 19 பிறந்த தினம் உள்ளவர் பாண்டி வர ஒரு நாள் பிரயாணம் செய்ய வேண்டும் என்பதால் வர போக இருக்க மூன்று நாள் லீவு வேண்டும். அதனால் அவர் February 21 அன்று வருவார். ஒரு வருஷம் அவர் வாழ்வில் பேரதிர்ச்சி ஏற்பட்டு மறைந்தது. எனவே பிறந்த நாள் அன்று அன்னையை தரிசித்தால் அது வந்திருக்காது என்ற கருத்தைக் கருதும் பொழுது February 19, February 21 இரண்டு நாள் ஆசிரமத்தில் தங்க ஐந்து நாள் லீவு வேண்டும். இது அறிவுக்குப் புலப்படாத பொழுது, சமர்ப்பணத்தை நாடினார். அடுத்த ஆண்டு அந்நாட்களில் எலக்க்ஷனுக்காக ஒரு வாரம் லீவு விட்டு, இவருக்கு எலக்க்ஷன் வேலை தரவில்லை, அந்த ஆண்டு இரண்டு நாளும் வந்தார். அதன் பிறகு அவர் வாழ்வில் அந்த அதிர்ச்சியில்லை. ஓராண்டு எலக்க்ஷனால் வர முடிந்தது. அது 1970-க்கு முன். அடுத்த 20 ஆண்டுகள் அதே போல் வர முதல் சமர்ப்பணம் உதவியதை அவர் அறியவில்லை. எவருக்கும் புரியவில்லை. வாழ்வின் தேவைகள் பல. ஒவ்வொரு தேவையை அனுபவிக்க ஒவ்வொரு பழக்கம், திறமை பெறுகிறோம். பெற்றதைக் காப்பாற்ற ஒரு வழி செய்கிறோம். ஆயிரம் தேவைகளை ஆயிரம் வகையாகப் பெற்று ஆயிரம் வகையாகப் பாதுகாப்பது மனித வாழ்வு. சமர்ப்பணம் இன்றில்லாத ஆயிரம் வசதிகளை உற்பத்தி செய்து அவையனைத்தையும் நாமறியாமல் பாதுகாக்கிறது என்பதை நாம் கண்ணுற்றபின்னும் நாம் எப்படிச் சமர்ப்பணம் செயல்படுகிறது என அறிவதில்லை.

0.75 பைசாவுடன் கிராமத்திலிருந்து டவுனுக்கு இடம் கிடைக்காத ‘படிப்பைப்’ படிக்க வந்தான் ஓர் அற்புதப் பிறவி. அரை மணி மட்டும் அறிமுகமானவர் இடம் பெற்றுக் கொடுத்தார். எங்குத் தங்குவது, எப்படிச் சாப்பிடுவது என யோசிக்க அவகாசமில்லை. இடம் கிடைத்தது போல அவையும் அடுத்த ஆறு மாதம் கிடைத்தன. பிறகு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அடுத்து ஒன்றரை வருஷப்படிப்பு முடிந்தது. தற்செயலாய் வழியில் கண்டவர் நல்லெண்ணம் முதலில் ஆறு மாதமும், அதன் பிறகு பதினெட்டு மாதமும் உதவி பெற்றுத் தருகிறது என்றால், இந்த இளைஞனின் முழுச் சரித்திரமும் அந்த நல்ல எண்ணத்திறன் என விளங்குமா? அன்னையின் நல்லெண்ணம் அவர் கருணையில் ஓரிழை. அவர் கருணை அருளின் பகுதி. அதைக் கடந்து பேரருள் உண்டு. மனிதன் எதையும் நினைப்பவனில்லை, நடந்தால் ஏற்பது, நடக்காவிட்டால் அது நினைவுக்கு வராது. அன்னை அதை unconscious என்கிறார். பாதுகாப்பு என்ற கருத்தை எந்த அளவில் நாம் புரிந்து கொண்டாலும், அது அடுத்த அளவில் முழுமையாகச் செயல்படும் என்பது சரி. மனிதன் நல்லவன், தெய்வம், குடும்பம் ஒரு கோயில், ஊர் உத்தமமான இடம், சமூகம் சக்தியின் சாகரம். அவனுடைய தேவைகள் துளி. சுற்றியிருப்பது கடல் போன்ற வசதி. வாழ்வு பிரச்சனையில்லை. உள்ளதை உள்ளபடி உணர்ந்து பெற்றால் எதற்கும் பஞ்சமில்லை. ஐந்து வயது சிறுவனுக்கு ஆட்டம் போட இருப்பதெல்லாம் இடம் என்பது போல் வாழ்வு வளமானது. அவன் அன்பனானால், தேவையை மறந்து விடலாம், பாதுகாப்பை நினைக்க வேண்டாம், கற்பனைக்குரியதைக் கேட்கலாம், பெறலாம், பெற்றதை நீட்டிக்கலாம். நான் கூறும் இக்கருத்து உலகமறியாத உன்மத்தவாதியின் எண்ணம் என நினைக்கவும் தோன்றும். 1800-இல் அமெரிக்காவில் உள்ளதை விவரிக்கும் ஆசிரியர் கூறியது இது. ஒரு பெரிய கப்பல் செய்ய 4800 oak மரம் தேவைப்பட்டது 1800-இல். அன்று இங்கிலாந்தில் மட்டும் 7000-க்கும் மேற்பட்ட கப்பல்களிருந்தன. நாட்டின் வளம் இவ்வளவு மரங்களையும் தந்தது. ஏன்? Web, Internet பயன்படுத்துபவர்கட்கு ஒரு நாளில் எத்தனை கோடி email-கள் செல்கின்றன, எத்தனை கோடி பக்கங்கள் அச்சடிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன, அவை எங்கு எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன எனத் தெரியும். Web-இல் இடம் முடிவற்றது. உலகில் வளமும், பாதுகாப்பும் வரையறையின்றி வழங்கப்படுவதை, நம் கடமை பெற்று அனுபவிப்பதேயாகும். கவி அதை ‘புண்ணியவாளர் புகழினைப் போல்’ என வர்ணிக்கிறார். பாதுகாப்புப் பெறுவது சரி, நல்லது. அதன்படி அன்னையின் பாதுகாப்பை அறிவதை நாம் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அதையும் கடந்து அன்னையை நாட முயல வேண்டும். ஆடு மாடுகள் காட்டிலுள்ள விஷப்பூண்டுகளைச் சாப்பிடுவதில்லை, விஷம் எது என அறிந்து விலக்கும் ஞானமுடையவை விலங்குகள். மனிதனுக்கு வாழ்வில் அந்த ஞானம் பல வழிகளிலும் வருவதைக் கண்டோம். ஆத்மா விழித்தால் அன்னையை அறிய முடியும். அவருடைய பாதுகாப்புக்குள் நுழைந்து நிரந்தரமாக இருக்க முடியும். உலகில் உள்ள அத்தனை வகையான பாதுகாப்பையும் அன்னையின் கோணத்தில் விவரிப்பது உயர்ந்த முயற்சி. தேவன் கதை ‘வேதாந்தம்’. வெகுளியான இளைஞன் வீராப்பாகச் சொத்தை இழந்து வேலை தேடி சென்னைக்குப் போய் பர்ஸையும் இழந்து நிர்க்கதியானபின் அவனுக்கு வந்த உதவிகள், பிரச்சனைகள், அவை தீர்ந்த விதம், தேவன் வாழ்வின் உள்ளொளியை விளக்குவதாகும்.

(தொடரும்)

***********

ஜீவிய மணி

எந்த விஷயத்திற்குச் சந்தோஷப்பட வேண்டுமோ, அதற்கு நாம் அழுது வருத்தப்படுகிறோம் என்பது ஆத்ம ஞானம். இதை மனம் ஏற்றவுடன் துக்கம் குறையும். ஞானம் முதிர்ந்தால், துக்கம் சந்தோஷமாகும்.

**********



book | by Dr. Radut