Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

8. நாமே உருவாக்கிய பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றிற்கு நாமே அடிமையாவதைத் தடுக்க வேண்டும். நம் கண்டுபிடிப்புகளைவிட நாமே முக்கியம் என்பதை உணர வேண்டும். இந்த உணர்வு வலுப்பெறும் அளவிற்கு வாழ்க்கை நமக்குக் கட்டுப்படும்.

மனிதனுடைய பலம் பல. பலவீனம் பலப்பல. அவற்றுள் இதுவும் ஒன்று. இவற்றுள் தலையாயவை இரண்டு. 1. மனைவி, 2. பணம். இவை தொன்றுதொட்டு நடப்பவை. நாட்டிலுள்ள 1000 தொழில்களில் சுமார் 100 தொழில்களில் மானேஜர் சொற்படி முதலாளி நடப்பான். ஓரிரு இடத்தில் முதலாளி சிரமப்பட்டு, அவதிப்படுவதைக் காணலாம். ஆண், பெண்ணை ஆள்வது பரம்பரை. இங்கிலாந்தில் 1900-வரை பெண் ஆணின் உடைமை. ஒரு கதையில் கணவன் குடித்துவிட்டு போதையில் மனைவியை ஏலம் போட்டு விற்றுவிடுகிறான். அடிக்கும் பிரம்பு கட்டை விரலைவிடப் பெரியதாக இல்லாவிட்டால் கணவனுக்கு மனைவியை பிரம்பால் அடிக்கும் உரிமையை சட்டம் கொடுத்தது. அன்று கணவன் மனைவி கிழித்த கோட்டைத் தாண்டாத நிலையை ஒரு பிஷப் வேறொரு கதையில் நிரூபிக்கிறார். இதன் பின்னாலுள்ள ஆன்மிக உண்மை என்னவென்றால் உடலால் வாழும் மண்ணாங்கட்டி மனிதன் உள்பட எல்லோருக்கும் உள்ளத்தின் உருக்கம் தேவைப்படுகிறது. அதைத் தருவது பெண், மனைவி. அதற்காக அவளுக்கு மனம் விரும்பி அடிமையாகி, அடிமையாக இருப்பதற்கு உள்ளூரப் பிரியப்படுகிறான். பணம் நாம் சிருஷ்டித்தது, உயிரற்றது. பணம் ஏற்பட்டபின் பணத்திற்கு மரியாதை வந்து விட்டது. மனிதன் அந்த மரியாதைக்கு ஆசைப்படுகிறான். பணத்திற்கு அடிமையாகிறான். இன்று உலகில் 20 ஆண்டிற்குமுன் இருந்ததைப்போல் 20 மடங்கு பணம் உள்ளது. பணம் ஐரோப்பாவில் பிரச்சனையாக, உலக அரசாங்கம் கவிழும் நிலை எழுந்து, உலகத்துப் பேரறிஞர்கள் அனைவரும் செய்வதறியாமல் உள்ளனர். அவர்களில் இருவர் பணத்தை ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவர்கள். பட்டத்திற்கும் மனிதன் அடிமை. இதுபோல் மனிதன் உடைக்கும், உறவுக்கும், தோற்றத்திற்கும் அடிமையானவை ஆயிரம். வித்யாசாகர் கோட்டில் சாப்பாட்டைப் போட்ட கதை உலகப் பிரசித்தம்.

Ladies and Gentlemen என அவையை விளிப்பது பல்லாண்டு காலமாக உள்ளது. அது தோற்றம். ஜீவனில்லை. சிகாகோவில் விவேகானந்தர் தோற்றத்தை உதறித் தள்ளிவிட்டு உள்ளுறை விஷயத்தை ‘சகோதர சகோதரிகளே’ என்றவுடன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. பிரசங்கம் உலகப் பிரசித்தி பெற்றது. அது ஆங்கில மோகம் கரைபுரண்டு ஓடிய நேரம். இந்தியா கிருஸ்துவ நாடாகும் எல்லையில் உள்ள நேரம். சிகாகோ பிரசங்கம் இந்திய ஆன்மிகப் பெருமையை இந்தியருக்கு எடுத்துக் காட்டியது. அன்னிபெஸண்ட் அம்மையார் ரஷ்ய மாதைப் பின்பற்றி சென்னை வந்து இந்து மதப் பெருமைகளை ஏற்று Theosophy என்ற தத்துவத்தை எடுத்துக் கூறிய காலம். இவ்விருவரின் முயற்சியும் — விவேகானந்தரும், தியசாபிக்கல் சொஸைட்டியும் — இந்தியா கிருஸ்துவ நாடாவதைத் தடுத்தன என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

மனிதன் மனத்தால் செயல்படவில்லை. உணர்வால் செயல்படுவதால் இந்த அவலம் ஏற்படுகிறது. இதுபோன்ற பட்டியலைத் தயாரித்து முழுமைப்படுத்தி சிந்தனை செய்பவர் எவரும் சிந்தனையாளராவர். அப்படிப்பட்டவர் உலகப் பிரச்சனைகட்குத் தீர்வு கூறக் கூடியவர். அப்பட்டியலில் பணம், பெண், பட்டம், உடை, சட்டம், ஊர் அபிப்பிராயம், ஜாதி, திருமணம், ஜனநாயகம், பொருளாதாரம், அரசியல் தோற்றம், வயது, பீடம், ஐ.நா. அமைப்பு என்பவை அடங்கும். பட்டியல் ஆயிரமானாலும் முடியாது.

(தொடரும்...)

**********



book | by Dr. Radut