Skip to Content

16. சந்துருவின் பார்வை

சந்துருவின் பார்வை

இறைவன் உலகைப் படைக்கவில்லை. எண்ணற்ற உருவங்கள் கொண்ட படைப்பாக தன்னை காட்டிக் கொள்கிறான். அது உண்மை என்றால், எதிர்பாராமல் சந்திக்கும் மகத்தான மனிதர்கள், குரைத்தபடி குப்பையை கிளறும் தெருநாய்கள், இடைவிடாமல் கூவும் குயில்கள், தெருவில் பிறருக்கு புரியாத அற்புத கவிதைகளைப் பிதற்றியபடி தள்ளாடி நடக்கும் குடிப்பிரியர்கள், இரைச்சலோடு ஓடும் வண்டிகள், மௌனமாக நிற்கும் மரங்கள், பூக்கும் மலர்க் கொடிகள், பட்டுப்போன மரங்கள் எல்லாமே, எல்லாமே, எல்லாமே இறைவன்தான். அனைத்தும், அனைவரும் சமமே.

பள்ளியில் படிக்கும்போது பொற்குன்றன் எனக்கு தமிழாசிரியராக அமைந்தார். அனைவரும் சமம் என்று அவர்தான் சொல்லித் தந்தார். தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் கற்றவர். தமிழார்வம் கொண்டவர்களுக்கும் பசிக்கும்தானே? அதனால் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

வகுப்பில் நுழைந்த முதல் நாளே ‘தமிழ் பாடம் பிடிக்காதவர்களெல்லாம் வெளியே போய் மகிழ்ச்சியாக இருங்கள். எல்லோரும் வகுப்பிற்கு வந்ததாக பதிவு செய்து விடுகிறேன்’ என்றார். அடுத்த கணம் ஆறேழு மாணவர்களே வகுப்பில் எஞ்சினோம்.

‘அவர்கள் உருப்படமாட்டார்கள். எங்களுக்கு பாடம் எடுங்கள்’ என்றான் முருகவேள்.

‘அப்படியெல்லாம் எவரையும் குறை சொல்லக் கூடாது! எல்லோருமே சமம்தான்’ என்றார் பொற்குன்றன்.

‘அதெப்படி? படிப்பவனும், படிக்காதவனும் எப்படி சமமாக முடியும்?’ என்று வாதமிட்டான் முருகவேள்.

‘தம்பி, என் தங்கக் கம்பி! நாம் எதற்காக படிக்கிறோம்? பொழுதுபோகவா? அறிவாளியாகவா? அகந்தையை வளர்த்துக் கொள்ளவா? சம்பாதிக்கவா? இல்லை. வாழ்வைப் புரிந்து கொள்ளத்தான் எதையும் படிக்கிறோம். எதையும் செய்கிறோம்.

அறிதலும், இருத்தலுமே வாழ்க்கை. அறிய வேண்டியதை அறிந்து, இருக்க வேண்டியபடி இருத்தலே மனித லட்சியமாக இருக்க வேண்டும்’ என்றார் பொற்குன்றன்.

‘நாங்கள் அறிய வேண்டியது என்னவென்று சொல்லுங்கள் சார்’ என்று கேட்டான் முருகவேள்.

‘அப்படிக் கேளடா என் சிங்கக் குட்டி. மின்னலால் அதிரும் வானம் பொழியும் குளிர்ந்த மழை மலைப் பாறைகளில் விழுந்து விரியும் பெரிய நதியின் மீது தோணி தன் போக்கில் மிதந்து செல்வதைப் போல நம் எல்லோருடைய வாழ்வும், உயிரும் நம்மை விட பெரிய சக்தியின் ஆற்றலின் ஓட்டத்தில் மிதந்து சென்று கொண்டிருக்கின்றன. எவருடைய உயிரும் பிறருடைய உயிரைவிட உயர்ந்ததில்லை. எவருடைய வாழ்வும் பிறருடைய வாழ்வைவிட தாழ்ந்ததில்லை. அவரவர் அறத்தின்படி வாழ்வில் மிதந்து சென்று கடலை சேரப் போகிறோம். ஒரு பிடி உப்பும் கடலில் கரைந்து ஒன்றுமில்லாமல் ஆகப் போகிறது. ஒரு வண்டி உப்பும் கடலில் கரைந்து ஒன்றுமில்லாமல் ஆகப்போகிறது.

அதனால் நம்மைவிட பெரியோர் என்று எண்ணி வியந்து பிறரை வணங்கி நிற்க வேண்டாம். அதைவிட முக்கியமாக நம்மைவிட தாழ்ந்தவர்கள் என்று ஏளனமாக எண்ணி பிறரை இகழவும் வேண்டாம். நம் அறம் என்னவோ அதை அறிந்து அதன்படி மட்டுமே வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் நாம் நம் அகத்திலும், புறத்திலும் எப்படி வாழ்கிறோமோ அதை ஒட்டி நமக்கு நன்மைகளும், தீமைகளும் கிடைக்கும். பிறரால் நமக்கு நல்லதும் செய்ய முடியாது, கெடுதலும் செய்ய முடியாது. நம் வாழ்வை நிர்ணயிப்பவர்கள் நாமே. எவரும் நமக்கு எதிரிகள் அல்ல என்பதால் எல்லோரையும் நம் உறவினர்களாகக் கருதுவோம். எல்லா தேசங்களையும் நம் தேசமாகவே கருதுவோம்’ என்றார் பொற்குன்றன்.

‘அப்படியானால் நீங்களும் நானும் சமமா? குருவும் சீடனும் சமமா?’ என்று கேட்டான் முருகவேள்.

‘ஆமாம். எல்லோருமே, எல்லாமே சமம்தான். அரசனும், ஆண்டியும், வீரனும், கோழையும், இருளும், ஒளியும், கள்வனும், காவலனும், பரத்தையும், பத்தினியும், பண்டிதனும், பாமரனும், பிறந்தவனும், இறந்தவனும், ஜடமும், பிரம்மமும் சமமே. பூங்குன்றனார் எழுதிய பாட்டின் அர்த்தத்தைதான் நான் உங்களுக்கு சொன்னேன். வாழ்க்கையில் எப்போதும் அதை நினைவில் வைத்திருங்கள். எதையும் சமமாக பாவிக்கும் பக்குவம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும். அப்போது மனதில் நிம்மதி மட்டும்தான் இருக்கும்’ என்றார் பொற்குன்றன்.

நான் இலக்கியத்தில் மூழ்க ஆரம்பித்தபோது உயர்ந்த இலக்கியம், தாழ்ந்த இலக்கியம் என்ற பாகுபாடுகளை தராதரங்களைக் கொண்டிருந்தேன், பொற்குன்றன் ஆசிரியராக வந்தபின் அவரவர் நிலைக்குரிய இலக்கியத்தை அவரவர் வாசிக்க வேண்டும். எதையும், எவரையும் குறை கூறக்கூடாது என்ற தெளிவு வந்தது.

அதனால் நான் எதிர்பாராத இன்னொரு நன்மை விளைந்தது. எல்லோரும் என்னை சமநிலை தவறாதவன் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர். அடுத்தவர்கள் தாமாகவே என்னைப் பற்றி உயர்வாக பேசும் போது அதை ஏன் மறுக்க வேண்டும் என்று நானும் பேசாதிருந்து விட்டேன். பல சமயங்களில் அகக் கொந்தளிப்பு ஏற்படுவது உண்டு என்றாலும் பொற்குன்றன் சொல்லிக் கொடுத்த பூங்குன்றனாரின் பாடல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவியாக இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அரசாங்க அதிகாரியாக இருந்த என் அப்பா, கடன் கடலில் சிக்கித் தடுமாறியபோது, என்னை உற்சாகமாக வைத்திருந்து வீட்டுச் சூழலை மிக எளிதாக மாற்ற உதவியது இப்பாடல்தான்.

ஆனாலும், ஆணை விட பெண் ஒருபடி மேலானவள் என்ற என் கருத்தை, இப்பாடலால் மாற்ற முடியவில்லை.

பெண்களின் அருமையும், பெருமையும் பிரம்மச்சாரி களுக்குத்தான் தெரியும்.

கட்டுப்பாடற்ற நண்பர்களோடு, ஒழுங்காக அடுக்கி வைக்கப்ப டாத பொருட்களுக்கு மத்தியில், குப்பை கூளங்களின் மேல் உட்கார்ந்து, சரியாகக் கழுவப்படாத தட்டுகளில், உணவு விடுதியில் வாங்கிய அல்லது தாங்களே சமைத்த மோசமான, உணவை உண்ண வேண்டிய அவலமான வாழ்க்கையை வாழும் இளம்வயது பிரம்மச்சாரிகளுக்கு பெண்களின் அருமையும், பெருமையும் மிக மிக நன்றாகத் தெரியும்.

பட்டய கணக்காளர் என்று நல்ல தமிழிலும், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்ட, படிப்பை படிப்பதற்காக அப்போதுதான் சேர்ந்திருந்தேன்.

அப்போதுதான் ஒரு மருத்துவமனையில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த என் அண்ணனும், தம்பியும், அப்போதுதான் அரசாங்க வேலையில் சேர்ந்திருந்த ஒன்றுவிட்ட அண்ணன் நந்துவும் சூளைமேட்டில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் குடியிருந்தோம். அது அப்பாவின் சொந்த வீடு.

திரை கடலோடி திரவியம் தேடி, வாங்கிய கடனை திருப்பிக் கட்டுவதற்காக என் அப்பா சவூதி அரேபியாவிற்குச் சென்றார். போகும்போது அம்மாவையும் கையோடு அழைத்துச் சென்று விட்டார். ‘பெண் குழந்தைகள் இருந்தால் பயப்படலாம். அந்தக் கொடுப்பினை எனக்கில்லை. தடிமாடுகள் போல மூன்றும் ஆண்பிள்ளைகள். எங்கேயாவது சாப்பிட்டுக் கொள்வார்கள்’ என்று அன்போடு சொல்லிவிட்டு அம்மா அரேபியா சென்று விட்டார்.

அப்பா அனுப்பும் பணத்திற்கு நான்தான் காசாளன், கணக்காளன். அதனால் மற்றவர்களைவிட அதிகமான பொறுப்பும், அதிகாரமும் எனக்கிருந்ததாக நானே நம்பிக் கொண்டிருந்தேன். என் சகோதரர்களுக்கு அதுபோன்ற தவறான நம்பிக்கைகள் எதுவும் இல்லை.

முதல் மாதம் வாழ்க்கை வெகு நன்றாக இருந்தது. ஒவ்வொரு வேளையும் புதுப்புது உணவு விடுதிகளில் சாப்பிட்டோம். எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பினோம். எப்போது வேண்டுமானாலும் தூங்கினோம், எப்போது வேண்டுமானாலும் எழுந்தோம். சில நாட்கள் எழுந்திருக்காமலே கூட இருந்தோம். நாளிதழ்களையும், படுக்கை விரிப்புகளையும், போர்வைகளையும் மடித்து வைக்க மாட்டோம். தூங்கும்போது எறும்பு கடிப்பது போலிருந்தால் ‘அடடா, இன்று படுக்கையில் உட்கார்ந்து கொண்டு தெருவோரக் கடையில் வாங்கிய அதிரசங்களை உதிர்த்துக் கொண்டே தின்றோமே’ என்று தோன்றும். எறும்பை தட்டிவிட்டு மீண்டும் தூங்கி விடுவோம். மறுநாள் மீண்டும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டே தெருவோரக் கடையில் வாங்கிய அதிரசங்களை சாப்பிடுவோம்.

பாத்திரங்கள் தொடமுடியாத அளவிற்கு பிசுபிசுவென்று ஆகிவிட்டன. சில முறை தொட்டபின் உடல் பிசுபிசுப்பை ஏற்றுக் கொண்டது, குப்பைத்தொட்டி எப்போதும் நிரம்பி வழியும். ஆரம்பத்தில் அதிலிருந்து வந்த அழுகிய வாசம் குமட்டலைத் தந்தாலும் போகப்போக அதுவும் எங்கள் வாழ்வின் பகுதியாகிவிட்டது.

முதல் முறை தவறு செய்யும்போது, முதல் முறை யாருக்காவது துரோகம் செய்யும்போது, முதல் முறை லஞ்சம் கொடுக்கும்போது, அறவுணர்வில் மனம் பதட்டமடையும். பழகியபின் தவறு செய்தால்தான் நிம்மதியாக தூங்க முடிகிறது. ‘எல்லோரும் செய்வதை நாமும் செய்தால்தான் வாழ முடியும். ஊரோடு ஒத்து வாழ் என்று பெரியவர்கள் சொன்னதை பின்பற்றவேண்டாமா?’ என்று நம்மை நாமே சமாதனம் செய்து கொண்டால் கணக்கு சரியாகி விடாதா?

எங்கெல்லாம் மறைவிடம் உண்டோ அங்கெல்லாம் கரப்பான் பூச்சிகள் குடும்பம், குடும்பமாகத் வாழ ஆரம்பித்துவிட்டன. விட்டமும், மூலைகளும் வீணாகப் போகின்றனவே என்று கவலைப்பட்ட சிலந்திப்பூச்சிகள் வலைகள் கட்டிவிட்டன. வீடே ஒட்டடைமயமாகி விட்டது.

வேலைக்காரி என்ற பெயரில் ஒரு பெண்மணி நினைத்தபோது வருவாள். மற்ற வீடுகளில் தருவதைவிட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தந்தோம். அவள் வீட்டை தளுக்காகக் கூட்டியபின், தரை முன்பிருந்ததை விட அதிக அழுக்காக இருக்கும்! துணிகளை புதிதாகப் பிறந்த குழந்தைகள் என்ற நினைப்பில் அவற்றிற்கு சிறிதும் நோகாமல் லேசாகத் தொட்டு ஆசிர்வதித்து விட்டு, தண்ணீரைத் தெளித்து காயப் போடுவாள். வியர்வை வாசம் அப்படியே இருக்கும். துணிகளின் உண்மையான நிறம் என்ன என்பது எங்களுக்கு மறந்து போய்விட்டது.

பொறுக்கவே முடியாத நிலை வரும்போது பயந்துகொண்டே, ‘ஏனம்மா, இன்னும் கொஞ்சம் நன்றாக பெருக்கக் கூடாதா? அழுக்கு போக துவைக்கக் கூடாதா?’ என்றால் அவ்வளவுதான். ‘ஏதோ தெரிந்த பிள்ளைகள் ஆச்சே என்பதால்தான் தடிதடியாக ஆண்பிள்ளைகள் இருக்கும் இந்த வீட்டிற்கு பெண்ணான நான் வேலைக்கு வருகிறேன். வேறு எவளும் வரமாட்டாள். இன்றோடு கணக்கைத் தீர்த்து விடுங்கள்’ என்று சத்தம் போட்டுவிட்டுப் போய்விடுவாள்.

இரண்டு நாட்கள் வேலைக்கு வரமாட்டாள். எங்கள் நிலைமை படுமோசமாகி விடும். காவல்கார கிருஷ்ணனை தூதனுப்பி அவளை மீண்டும் வேலைக்கு வரச் சொல்வோம். காவல்கார கிருஷ்ணனும், வேலைக்காரியும் கூட்டுக் களவாணிகள் என்பதால் வேறு யாரையும் வேலைக்கு வைத்து விட முடியாது.

நந்தண்ணன் அவ்வபோது சினிமா இதழ்களை அலுவலகத்திலிருந்து கொண்டு வருவார். அதன் நடுப்பக்கத்தில் அதிகமான ஊதியம் பெற்றதால் குறைவான உடையணிந்திருக்கும் பெண்களின் கவர்ச்சிப்படம் வெளிவரும். பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கும். ‘அம்பாள் உபாசகன். ஆன்மீக வழியில் செல்பவன், இப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்கக் கூடாது’ என்று தோன்றினாலும், பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தபின் அம்பாளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன். என்னை எண்ணற்ற முறைகள் அம்பாள் மன்னித்து இருக்கிறாள்.

அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா?

ஒருநாள் நந்தண்ணன், ‘தம்பிகளா! நமக்கென்ன குறைச்சல்?’ நாம் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்? வீட்டோடு ஒரு சமையல்காரனை வைத்தால் என்ன? சமையலோடு வீட்டையும் பார்த்துக் கொள்ளட்டும்’ என்று வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒரு உருப்படியான யோசனையைச் சொன்னார். அதை எல்லோரும் வரவேற்றோம்.

முதலில் வந்த சமையல்காரப் பெரியவர் தன் கைவண்ணத்தைப் பற்றி பிரமாதமாக, சுவையாக விளக்கினார். அதைக் கேட்கும்பேõதே நாக்கு உணவை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது, அவர் சொன்னதை நாங்கள் முழுமையாக நம்பினோம். ஆனால் அவர் வைத்த முருங்கைக்காய் சாம்பார், வெங்காய சாம்பார், மீன் குழம்பு, கோழி குழம்பு, மோர் குழம்பு, பூண்டு ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம் ஆகிய எல்லாமே எந்த வித்தியாசமும் இல்லாமல் தீய்ந்து போன காரக்குழம்பு சுவையில் இருந்தன. எனவே, ஒரே வாரத்தில் அவருக்கு ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து வழி அனுப்பி வைத்து விட்டோம்.

இவரை கண்டுபிடித்துக் கொண்டுவந்த நந்தண்ணன், ‘நானே எல்லா பொறுப்புகளையும் ஏற்க வேண்டியிருக்கிறதே! நீங்கள் யாரும், எதுவும் செய்ய மாட்டீர்களா?’ என்று கோபித்துக் கொண்டார்.

எனவே, என் அண்ணன் சுந்தர் ஒரு சமையல்கார இளைஞனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தார். புதிய சமையல்காரன் ‘வெளியூரிலிருந்து வருகிறேன். இன்று நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு நாளையிலிருந்து சமையல் செய்கிறேன். இன்று எனக்கும் சேர்த்து ஒரு பிளேட் கோழி பிரியாணி வாங்கி வந்து விடுங்கள்’ என்றான்.

‘மனிதன் என்றால் அலுப்பு இருக்காதா? நியாயமான கோரிக்கைதானே!’ என்று நினைத்தபடி பையெடுத்துக் கொண்டு கிளம்பினேன். ‘சார், அப்படியே வஞ்சரமீன் வறுவலும், முட்டைப் பொடிமாசும் வாங்கி வந்துவிடுங்கள். எனக்கு ஆட்டுக்கறி அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது’ என்றான்.

‘சரி’ என்று கூறி விட்டு நான் படியிறங்கிய பின், பால்கனியிலிருந்து கை தட்டி அழைத்து, ‘இரண்டு ரஸ்தாளி வாழைப் பழங்களும் வாங்கி வந்து விடுங்கள். பச்சைப் பழம் வேண்டாம்’ என்றான். ’அதுவும் சரிதான்’ என்று நினைத்துக் கொண்டு அவன் கேட்டதையெல்லாம் வாங்கி வந்து தந்தேன்.

திருப்தியாக உண்டு விட்டு நிம்மதியாகத் தூங்கினான்.

மறுநாள் காலையில் நான் ஆறுமணிக்கு எழுந்தபோது சமையலறையில் அவன் படுக்கை காலியாக இருந்தது. சமையலறையும் காலியாக இருந்தது! நாங்கள் கைக்கடிகாரங்கள், பணப்பைகள் வைக்குமிடங்களும் காலியாக இருந்தன. சமையல்காரன் காற்றில் கரைந்து விட்டான். திருட வந்தவனுக்கு விருந்து வைத்தவன் உலகிலேயே நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.

அதிர்ச்சியிலிருந்து நாங்கள் மீண்டபின் என் தம்பி புதிய யோசனை சொன்னான். ‘ஆண்களை நம்பமுடியாது. அயோக்கியர்கள்! பெண்களைத்தான் நம்பமுடியும் எனவே, அடுத்தபடியாக சமையல்காரியைத்தான் வேலைக்கு சேர்க்க வேண்டும்’ என்றான்.

எங்கள் அனைவருக்கும் ‘அதுதான் சரி’ என்று தோன்றியது.

காவல்கார கிருஷ்ணனையே ஒரு பெண்ணை சமையலுக்கு சேர்த்துவிடச் சொல்லி, நூறு ரூபாய் அன்பளிப்பும் தந்தோம்.

சமையல் வேலைக்கு ஆள் கேட்டதால், வேலைக்காரி எந்தவிதமான ஆட்சேபணையும் கிளப்பவில்லை.

அடுத்தநாள் மதியம் வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தபேõது அழைப்புமணி ஒலித்தது.

ஒரு பெண் வாசலில் நின்றிருந்தாள். வயது இருபத்தைந்திற்குள்தான் இருக்கும். ஆரஞ்சுவர்ண சேலையும், வெளிர்கனகாம்பர நிற ரவிக்கையும் அணிந்திருந்தாள். இடதுகையில் கடிகாரம் கட்டி, வலது கையில் ஒரு நெளிவளையல் அணிந்திருந்தாள். மெல்லிய தங்க சங்கிலி அவளது கழுத்தால் அழகு பெற்றிருந்தது. காதுகளில் சிறு தங்க வளையங்கள். அமைதியான முகம். அழகான தெளிவான கண்கள். நெற்றியில் குட்டியாக வட்டப் பொட்டு. காலியாக இருந்த கீழ்வீட்டிற்கு புதிதாக குடி வந்திருக்கிறாளா?

‘சமையல் வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லியிருந்தீர்களாமே?’ என்றாள் அப்பெண்.

‘ஆமாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டேன்.

‘நான்தான் அந்த வேலைக்கு வந்திருக்கிறேன்’ என்றாள்.

துணுக்குற்றேன். சமையல்காரி போலவோ, வேலைக்காரி போலவோ தெரியவில்லை. இளம்வயதில் என் அம்மா, பெரியம்மா, சின்னம்மா எல்லாம் இவளைப் போலத்தான் இருந்திருப்பார்கள்.

‘நாங்கள் நான்கு ஆண்கள் மட்டும் இருக்கிறோம்’ என்று எங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.

‘எல்லா விவரங்களும் கிருஷ்ணன் சொன்னார். எனக்குப் பூரண சம்மதம்’ என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

‘உங்களைப் பற்றி சொல்லுங்களேன்’ என்றேன்.

‘என் பெயர் பூரணி. நான் நன்றாக சமைப்பேன். மேற்கொண்டு வேறெதுவும் என்னைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. நீங்கள் எதுவும் கேட்காமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் எந்த பொய்யும் சொல்ல விரும்பவில்லை. உண்மை மட்டுமே பேச விரும்புகிறேன்’ என்றாள்.

வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவள் போலிருக்கிறது. அதனால்தான் சொந்த விவரங்களைக் கூற இந்த அளவு தயங்குகிறாள் என்று தோன்றியது.

பூரணியை எனக்குப் பிடித்திருந்தது. அவளிடமிருந்து இனிமையான அதிர்வுகள் வந்தன. ‘உண்மை மட்டுமே பேச விரும்புகிறேன்’ என்று ஒரு பெண் சொல்லிய பின் மேற்கொண்டு விசாரிக்க என்ன இருக்கிறது? எனக்கு விசாரிப்பது அவசியமென்று படவில்லை.

‘உள்ளே வாருங்கள்’ என்றேன்.

வந்தாள்.

‘என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘மாதம் ஆயிரம்’ என்றாள். இந்த சம்பவம் நடந்த காலத்தில் மாதம் ஆயிரம் என்பது ஓரளவு நல்ல சம்பளம்தான்,

நான் யோசித்தேன்.

‘அதிகம் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டாள்.

‘இல்லை. குறைவாக இருக்கிறதே என்று யோசித்தேன்.

வேலைக்காரிக்கே ஆயிரம் தருகிறோம்’ என்றேன்.

‘ரொம்ப அதிகம். உங்களை ஏமாற்றுகிறார்கள்’ என்றாள்.

‘ஏமாற்றவில்லை. வேறு வழியில்லாமல் நாங்கள் தெரிந்தே ஏமாறுகிறோம். நாங்கள் ஆண்களாக இருக்கிறோம். பரவாயில்லையா?’ என்று கேட்டேன்.

‘எனக்கு ஆண்களிடம் பயமொன்றுமில்லை. நீங்கள் பயப்படாமல் இருந்தால் சரி’ என்றாள் பூரணி.

‘நீங்கள் பெண்தான். ஆனால், தனியறை தருவதற்கில்லை. சமையலறையில்தான் நீங்கள் தூங்க வேண்டியிருக்கும்’ என்றேன்.

‘பெரும்பாலான பெண்களுக்கு சமையலறைதான் உலகமாக இருக்கிறது’ என்றாள் பூரணி.

‘நீங்கள் எப்போது வேலையில் சேர்வீர்கள்?’ என்று கேட்டேன்.

‘நீங்கள் உள்ளே அழைத்ததும், என்னை வேலைக்கு எடுத்துக் கொண்டு விட்டீர்களாக்கும் என்று நினைத்துவிட்டேன்!’ என்று கூறி சிரித்தாள் பூரணி.

வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். ‘என்ன இது! வாழும் வீட்டை பாழும் கிணறு போல் வைத்திருக்கிறீர்களே!’ என்றாள்.

ஒரு காகிதமும் பேனாவும் எடுத்து பெரிய பட்டியல் எழுதினாள். அழகான கையெழுத்து. ‘இந்த சாமான்களையெல்லாம் வாங்கி வர முடியுமா?’ என்றாள்.

‘அந்த வேலையெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. நான் கடைக்குப் போனால் ஐந்து ரூபாய் பழத்தை ஐம்பது ரூபாய் விலை சொல்வார்கள். என் திருமுகராசி அப்படிப்பட்டது’ என்றேன்.

சிரித்தாள். ‘அப்படியானால் நானே வாங்கி வந்து விடுகிறேன்.

இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கள்’ என்றாள்.

பணத்தை எடுத்து பவ்வியமாக நீட்டினேன். அவளை ஒரு கணம் கூட என் மனம் சந்தேகப்படவில்லை.

‘நான் பொருட்களை வாங்கிக் கொண்டு தெரிந்தவர்கள் வீட்டிலிருக்கும் என் பெட்டியை எடுத்து வந்துவிடுகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

‘ஆட்டோ அல்லது பஸ்ஸிற்கு உங்களுக்கு பணம் தேவை என்றால் நான் கொடுத்த பணத்திலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.

என்னைப் பார்த்து பிரியத்துடன் புன்னகைத்துவிட்டு சென்றாள்.

மாலையில் வீடு திரும்பிய என் சகோதரர்கள் என்னை கேலி செய்து சிரித்தார்கள்.

‘போன பணம் போனதுதான்!’ என்றான் தம்பி.

‘பெண்ணைப் பார்த்ததும் மயங்கிப் போய் பணத்தைத் தூக்கி கொடுத்துவிட்டான்!’ என்றார் நந்தண்ணன்.

அப்பாவிடம் சொல்லி நிதி மந்திரி பதவியிலிருந்து என்னை விலக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ யார் எதைச் சொன்னாலும் அப்பெண் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து கொண்டுதானிருந்தது. ஆறு மணி அளவில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூரணி ஒரு சைக்கிள் ரிக்ஷா நிறைய பலவிதமான பொருட்களோடும், தன் பெட்டியோடும் வந்து இறங்கினாள். ஒட்டடைக் குச்சி, துடைப்பம், பினாயில், காய்கறி, பழங்கள், அரிசி, பால், சில சிறிய பாத்திரங்கள் என்று ஏதேதோ இருந்தன. அவற்றை வீட்டிற்குள் எடுத்து வர நான் உதவினேன்.

எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் சொன்ன பூரணி, ‘மன்னித்து கொள்ளுங்கள். தாமதமாகிவிட்டது’ என்றாள்.

‘விளக்கு வைக்கும் நேரம் மகாலட்சுமி வரும் நேரமாச்சே!’ என்று ஒரு போடு போட்டார் நந்தண்ணன்.

‘வீட்டை சுத்தம் செய்வதுதான் முதல் வேலை. எல்லாவற்றையும் சரி செய்து காலையில் குப்பையை வெளியே கொட்டிவிடலாம். நாளையிலிருந்து சமையலை ஆரம்பிக்கிறேன். இன்று இரவு மட்டும் சாப்பாடு வெளியே வாங்கிக் கொள்ளலாம்’ என்றாள் பூரணி.

‘என்ன வேண்டும்? நான் வாங்கி வருகிறேன். சந்துருவிற்கு சரியாக வாங்கத் தெரியாது’ என்று பையை எடுத்துக் கொண்டு உற்சாகமாகக் கிளம்பினார் நந்தண்ணன். நாங்கள் வழக்கம் போல பிரியாணி சாப்பிட நினைத்தோம். பூரணி தனக்கு இரண்டே இரண்டு இட்லிகள் மட்டும் போதும் என்று கூறிவிட்டாள். அதனால் எல்லோருக்கும் நந்தண்ணன் இட்லி வாங்கி வந்தார்.

பூரணி சேலையை லேசாகத் தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டாள். குடத்திலிருந்த தண்ணீரைக் கொட்டி விட்டு அதை நன்றாகத் துலக்கி சுத்தம் செய்தாள். நாங்கள் அழுக்காக வைத்திருந்த, குடிநீரை சுத்தம் செய்யும் அக்குவா கார்டிலிருந்து குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்தாள். ஒரு தம்ளரை நன்றாகக் கழுவி குடத்தின் மூடியின் மேல் கவிழ்த்து வைத்தாள்.

அடுத்த கட்டமாக கழிப்பறையையும், குளியலறையையும் சுத்தம் செய்துவிட்டு, அதன்பின் சமையலறையை ஒழுங்குபடுத்தினாள்.

அவளது திருக்கரங்களால் அதிர்ஷ்டசாலிகளான நூறு கரப்பான்பூச்சிகளும், பத்து சிலந்திப்பூச்சிகளும் முக்தி அடைந்தன.

ஒட்டடைகளை எடுத்து விட்டாள். படுக்கைகளையும், போர்வைகளையும் நன்றாக உதறித்தட்டி சுருக்கங்களின்றி விரித்து சரியாகப் போட்டு விட்டாள். நாளிதழ்களையும், புத்தகங்களையும், காலணிகளையும் அடுக்கி வைத்தாள்.

அவளே தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தது என் மனதை உறுத்தியது. மற்றவர்களுக்குத் தெரியாமல், அவளிடம், ‘நான் ஏதாவது உதவி செய்யட்டுமா?’ என்று கேட்டேன். ‘வேண்டுமானால் கேட்கிறேன்’ என்று கூறிவிட்டாள்.

தரையைப் பெருக்கி பின் துடைத்து விட்டாள். புதிய துடைப்பான் நிறம் மாறிவிட்டது. அத்தனை அழுக்கு. வீடு வித்தியாசமாக இருந்தது. ‘இன்னும் மின்விசிறிகள் மட்டும்தான் பாக்கி. நீங்கள் எல்லோரும் நாளை வெளியே சென்றபின், நான் அவற்றைத் துடைத்து விடுகிறேன்’ என்றாள் பூரணி.

பிரிட்ஜைத் திறந்தாள். துர்நாற்றம் வீசியது. ‘இப்போது சுத்தம் செய்தால் உங்கள் எல்லோருக்கும் சிரமமாக இருக்கும். இதையும் நாளை சரி செய்து விடுகிறேன்.’ என்றாள் பூரணி.

பரணிலிருந்து ஒரு சில புதிய தட்டுகளையும் கிண்ணங்களையும், கீழிறக்கினேன். பூரணி அவற்றைக் கழுவி, துடைத்து விட்டு, நந்தண்ணன் வாங்கி வந்திருந்த உணவை தட்டுகளில் பரிமாறினாள்.

‘களைப்பாக இருக்குமே, நீங்களும் சாப்பிடலாமே’ என்றேன்.

‘பரிமாறி விட்டு, கடைசியாக சாப்பிடுகிறேன்’ என்றாள் பூரணி.

சாப்பிட்டபின் பிசுக்கு பிடித்திருந்த பாத்திரங்கள் எல்லாவற்றையும் தொட்டியில் அம்பாரமாகக் தேய்த்து கழுவ ஆரம்பித்தாள்.

குவித்துப் போட்டு பத்தரைக்கு நாங்கள் படுக்கச் சென்றோம்.

பாவம், பூரணி எப்போது தூங்கினாளோ! அவளும் மனுஷிதானே?

நந்தண்ணன் ‘சந்துரு, அலமாரி எல்லாவற்றையும் பூட்டி விட்டாயல்லவா? என்று ரகசியமாகக் கேட்டார்.

‘ஆமாம்’ என்றேன்.

ஆனால் நான் எதையும் பூட்டவில்லை. ஒரு பெண்ணை நல்லவள் என்று நான் நினைத்து அவளை நம்பியது தவறென்றால், எது வேண்டுமானாலும் நடந்து விட்டுப் போகட்டும்.

பூரணி ஊதுபத்தியை ஏற்றி வைத்தாள். வீட்டில் புதிய நறுமணம் எழுந்தது.

தூங்கிவிட்டேன். அன்று இரவு எறும்புகள் எதுவும் ஒரு முறை கூட கடிக்கவில்லை.

அதிகாலையில் படுக்கையறைக் கதவு லேசாக தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன்.

என்னருகே உறங்கிக் கொண்டிருந்த நந்தண்ணனை எட்டி உதைத்தாலும் எழுந்திருக்க மாட்டார். அவராக எப்போது எழுந்திருக்கிறாரோ அப்போதுதான் அவருக்கு நாள் ஆரம்பமாகும்.

பூரணியின் கைகளில் ஒரு தட்டு. தட்டில் தம்ளர்கள். தம்ளர்களில் சூடான காபி. காபியின் மணம் காலைப் பொழுதை சுறுசுறுப்பாக்கியது. ‘மற்றவர்கள் எழுந்திருக்க இன்னும் ஒரு மணி நேரமாகும்’ என்று சொல்லிக் கொண்டே ஒரு தம்ளரை எடுக்கப் போனேன்.

‘பல் தேய்த்து விட்டு குடிக்கலாமே!’ என்றாள் பூரணி.

‘பழக்கமில்லை! சில சமயங்களில் பல் தேய்க்காமல் டிபன் கூட சாப்பிடுவோம்’ என்றேன்.

‘அய்யோ!’ என்றவள், ‘மற்றவர்களை எழுப்புங்களேன். மணி ஆறாகிறது!’ என்றாள்.

‘ஆறுதானே ஆகிறது!’ என்றேன்.

சிறிது காபி குடித்தபின் கண் பார்வை தெளிந்தது. பூரணி குளித்து உடைகள் மாற்றியிருந்தாள். நேற்றை விடவும் இன்று அழகாக அவளிருப்பது போல் எனக்குத் தோன்றியது. அவள் முன்னால் நாங்கள் அழுக்காக இருப்பது போல உணர்ந்தேன். ‘நான் அம்பாள் உபாசகன் தினமும் நாலரைக்கே எழுந்து பூஜை தியானமெல்லாம் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் பெரும்பõலும் அசந்து நன்றாகத் தூங்கி விடுவேன்’ என்று கூறி விட்டு காலி தம்ளரை அவள் கைகளில் தந்தேன்.

‘நாளையிலிருந்து உங்களை நாலரை மணிக்கு காபியோடு எழுப்பி விடுகிறேன்’ என்று கூறி விட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

நான் தியானத்தை எட்டு மணிக்கு முடித்தபோது, லேசாகப் புரண்டு படுத்தார் நந்தண்ணன். என் அண்ணனும், தம்பியும் மருத்துவமனைக்குச் சென்று விட்டிருந்தனர்.

தோசையும், தக்காளி சட்னியும் செய்திருந்தாள். சாப்பிட்டு முடித்த பின்தான் நிறைய சாப்பிட்டு விட்டேனோ என்று தோன்றியது. ‘நன்றாக இருந்தது’ என்றேன்.

‘நீங்கள் சாப்பிட்ட வேகத்தை பார்த்ததும் புரிந்தது’ என்றாள்.

ஒரு வழியாக நந்தண்ணனும் என்னுடன் அலுவலகத்திற்கு கிளம்பினார். ஆளுக்கொரு உணவுப் பெட்டி தந்தாள். போகும் வழியில் நந்தண்ணன் கவலையோடு கேட்டார். ‘ஏனப்பா, நாம் சாயந்தரம் திரும்பி வரும் போது வீடு இருக்குமா? ஒரு மாற்றுடையாவது எடுத்து வந்திருக்கலாமோ?’

நான் பதில் சொல்லவில்லை.

காலையில் தத்தா என்ற வெளியூர் இளைஞன் பயிற்சிக்காக அலுவலகத்தில் வந்து சேர்ந்தான். வசதியில்லாத நிலையில் படிக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் கொண்டவனாகத் தெரிந்தான்.

வாத்சல்யாவின் உதவியால் பயிற்சிக் கட்டணம் கட்டினான். பொய் சொல்ல விரும்பவில்லை என்று ஆழ்ந்து விரும்பினால் கடவுள் பொய் சொல்லும் வாய்ப்பையே தரமாட்டாராம். பிறருக்கு உதவ வேண்டும் என்று ஆழ்ந்து விரும்பினால் கடவுள் பிறருக்கு உதவும் வாய்ப்புகளை தந்து கொண்டே இருப்பாரோ! மதியம் அலுவலகத்தில் உணவுப் பெட்டியைத் திறந்தபோது ‘என்னப்பா ஊரிலிருந்து அம்மா வந்து விட்டாரா?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் மந்திரா.

மந்திரா என அப்பாவின் நண்பரின் செல்லப் பெண். அம்மா இல்லாத பெண் என்பதால் செல்லம் அதிகம். செல்லம் தந்தாலும் பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்வார். நான் ஆடிட்டராக தொழிலை ஆரம்பித்ததும், தன் பெண்ணை என் அலுவலகத்தில் சேர்த்துவிட்டு, அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளச் சொன்னார். நடந்ததோ வேறு. அவள்தான் என்னை நல்ல முறையில் கவனித்து வருகிறாள். அம்மா அரேபியா சென்றபின் மந்திரா தினமும் எனக்கும் சேர்த்து சமைத்து எடுத்து வருவாள். காலையிலும். இரவிலும் எனக்கு சமைத்துக் கொடுக்க முடியவில்லையே என்ற கவலை அவளுக்கு உண்டு. சரியாக சாப்பிடவில்லை என்றால் திட்டித்திட்டி சாப்பிட வைப்பாள்.

‘ஊரிலிருந்து உறவுப்பெண் வந்திருக்கிறாள். அவள்தான் கட்டாயப்படுத்தி உணவுப் பெட்டியை கையில் கொடுத்தனுப்பினாள்’ என்றேன். பேசிக்கொண்டே வேகமாக சாப்பிட்டேன்.

அருமையான ருசி. எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா!

சமையல்காரி என்றால் விவரங்கள் கேட்பாள். என்னவென்று பதில் சொல்வது? எனக்கே விவரங்கள் தெரியாதே.

‘எப்படி சொந்தம்?’ என்று கேட்டாள் மந்திரா.

‘ஏதோ தூரத்து சொந்தம்’ என்றேன். உண்மையே பேசுவேன் என்று சொன்ன பெண்ணைப் பற்றி பொய் சொன்னேன். ‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே! அவர் என்ன அர்த்தத்தில் எழுதினாரோ!

‘எப்போது ஊருக்குப் போவாள்?’ என்று கேட்டாள் மந்திரா.

‘இன்றுதான் வந்திருக்கிறாள். அதற்குள் எப்போது போவாய் என்று கேட்க முடியுமா?’ என்றேன்.

‘பெண்கள் இல்லாத வீட்டிற்கு அவள் எதற்கு வந்தாள்? அவள் வீட்டுப் பெரியவர்கள் யோசிக்கும் திறனில்லாதவர்களா? அவரவர் இடத்தில் இருந்தால்தான் எல்லோருக்கும் நல்லது’ என்றாள் மந்திரா,

‘நீ சொல்வது சரிதான்’ என்றேன்.

‘என் பிரியதோழி மந்திரா மதிய சாப்பாடு கொண்டு வருவாள்,

அதனால் உணவுப் பெட்டி வேண்டாம் என்று சொல்லவேண்டியதுதானே?’ என்று கேட்டாள்.

‘அவள் கட்டித் தந்தது நன்றாகவே இல்லை. மீதி வைத்துவிட்டேன் பார். நீ கொண்டு வந்ததை கொடு’ என்றேன்.

அதற்குப்பின்தான் மந்திரா கொஞ்சம் சமாதானமானாள்.

‘நாளைக்கு எதுவும் வேண்டாம் என்று இன்றே சொல்லிவிடு, அலுவலக நாட்களில் இனி சாப்பாடு கட்ட வேண்டாம் என்றும் சொல்லிவிடு’ என்றாள் மந்திரா.

‘சரி’ என்றேன்.

வெளியே சென்றுவிட்டு திரும்பிய தத்தாவைப் பார்த்தேன்.

முகம் சோர்ந்திருந்தது. ‘சாப்பிட்டாயா?’ என்று கேட்டேன்.

அரைகுறையாக தலையாட்டினான் தத்தா. அது பொய் என்று புரிந்தது.

‘நான் கொண்டு வந்த சாப்பாட்டை சுவைத்துப் பாரேன்’ என்று கூறி பூரணி தந்த உணவை நீட்டினேன். என் குரலிலிருந்த ஆணையை அவனால் மறுக்க முடியவில்லை.

சாப்பிட்டான். முகம் தெளிந்தது.

நான் மாலையில் வீடு திரும்பும் போது நேற்று இரவைவிட வீடு இன்னமும் பிரகாசமாக இருந்தது. பூரணி பளிச்சென்ற முகத்தோடு வரவேற்றாள். பிரிட்ஜைத் திறந்து குளிர்ந்த தண்ணீர் தந்தாள். பிரிட்ஜிலிருந்து நறுமணம் எழுந்தது. மின்விசிறிகள் சுத்தமாக இருந்தன.

‘டீ சாப்பிடுகிறீர்களா? அல்லது காபியா?’ என்று கேட்டாள்.

வெளியிலிருந்து என் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு பெண் மூடியிருக்கும் கதவுகளைத் திறந்துவிட்டு வாவென்று பிரியத்துடன் வரவேற்று உபசரிப்பது. மூடியிருக்கும் இதயக் கதவுகளை மனிதன் தட்டும்போது ஆன்மா அழைப்பை ஏற்று இதயக் கதவுகளைத் திறந்து வரம் தருவதற்கு சமானமானது என்று தோன்றியது.

‘டீ கொடுங்கள்’ என்றேன்.

‘பெயர் சொல்லி ஒருமையிலேயே அழைக்கலாம்’ என்றாள்.

‘ஒரிரண்டு பெண்களைத் தவிர வேறு எவரையும் பெயர் சொல்லி அழைத்தோ, ஒருமையில் விளித்தோ எனக்கு பழக்கமில்லை. அது மரியாதையுமில்லை’ என்றேன்.

‘நீங்கள் மதுரைப்பக்கமா?’ என்று கேட்டாள் பூரணி.

‘ஆமாம்’ என்றேன்.

சிரித்துக் கொண்டாள்.

டீ அருந்தும்போது, ‘உங்களுக்கு என்னவெல்லாம் சமைக்கத் தெரியும்?’ என்று கேட்டேன்.

‘உங்களுக்கும், மற்றவர்களுக்கும் என்னவெல்லாம் பிடிக்கும் என்று சொல்லுங்கள். அதையெல்லாம் சமைக்கிறேன்’ என்றாள் பூரணி.

மற்றவர்களும் வந்தபின் பஜ்ஜி தந்தாள். எல்லாமே எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. இது புது வாழ்க்கை போலிருந்தது.

அன்று இரவு வேலைக்காரி வந்தாள். ‘சமையல்காரியை உடனே வேலையை விட்டு நிறுத்துங்கள்’ என்றாள்.

‘ஏன்?’ என்று கேட்டேன்.

‘எனக்கே உத்தரவு போடுகிறாள். துணியை இப்படித் துவை, அப்படித் துவை என்கிறாள். பாத்திரத்தை இப்படித் தேய், அப்படித் தேய் என்கிறாள் எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிச் சொல்ல மாட்டாள்?’ என்று உரத்த குரலில் பேசினாள் வேலைக்காரி.

நான் அவள் கூறிய எதையும் பொருட்படுத்தாமல் மௌனமாக இருந்தேன். என் மௌனத்தால் சீண்டப்பட்ட வேலைக்காரி மேலும் உரத்த குரலில் பேச ஆரம்பித்தாள்.

அறைக்குள் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த அண்ணன் கூடத்திற்கு வந்தான். ‘ஏன் கத்துகிறாய்?’ என்று கோபமாக கேட்டான்.

‘சமையல்காரியை உடனே வேலையை விட்டு நிறுத்துங்கள்’ என்றாள் வேலைக்காரி.

‘எனக்கா உத்தரவு போடுகிறாய்? பூரணி இங்கேதான் இருப்பாள். இனிமேல் நீ வேலைக்கு வராதே!’ என்றான் அண்ணன்.

‘என்னது! அதெப்படி என்னை வேலையை விட்டு நிறுத்த முடியும்?’ அதிர்ச்சியுடன் கேட்டாள் வேலைக்காரி.

‘கிருஷ்ணா, கிருஷ்ணா!’ என்று காவல்காரனை அழைத்த அண்ணன், ‘இனிமேல் இந்த வேலைக்காரி நம் வளாகத்தில் நுழையக் கூடாது, யார் வேலைக்காரி, யார் வீட்டுக்காரர் என்று இந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை’ என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டான்.

‘சரி சரி, கிளம்பு கிளம்பு’ என்று அவளை மெல்ல விரட்டினான் கிருஷ்ணன்.

ஆத்திரத்துடன் என்னைப் பார்த்து வேலைக்காரி, ‘என் சம்பளம்?’ என்று கேட்டாள்.

‘நீங்கள்தான் எனக்கு மூவாயிரம் ரூபாய் தர வேண்டும்.

முன்பணம் வாங்கி இருக்கிறீர்களே. காலாகாலத்தில் திருப்பி கொடுக்கும் வழியைப் பாருங்கள்’ என்றேன்.

‘உங்கள் அம்மா வெளிநாட்டிலிருந்து வரட்டும் அவரிடம் பேசிக் கொள்கிறேன்’ என்று கூறிய வேலைக்காரி முணுமுணுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போனாள்.

கூடத்தில் இத்தனை களேபரம் நடந்து கொண்டிருந்த போது அது தனக்கு சம்பந்தமில்லாதது போல பூரணி சமையலறையில் சப்பாத்தி செய்து கொண்டிருந்தாள்.

(வளரும்)

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆன்ம விழிப்பு மனத்திலிருந்தால், மனம் மேதையாகத் தயாராகும் திறன் பெறும். முறையான வாழ்வு, நெறியான பழக்கம், கட்டுப்பாடான கொள்கையால் மனம் சிறந்தால் அது வாழ்வில் நிம்மதியான வளமாக வெளிப்படும். அதுவே உடலில் வெளிப்பட்டால், விலங்கின் இன உணர்வு மாறி, அமிர்த உணர்வை அளிக்கும். அன்னையிடம் அருள் பெற அருளுக்கு எல்லையில்லை. மனித வாழ்வின் இன்றைய மனப்போக்கால் வரையறை உண்டு.book | by Dr. Radut