Skip to Content

15. வம்சியின் பார்வை

வம்சியின் பார்வை

நான் அலுவலகத்திற்குள் நுழைந்த போது என் வயதிருக்கும் ஒருவன் வாடிக்கையாளர்கள் அமரும் மெத்தை நாற்காலியின் நுனியில் எந்த வினாடியும் கீழே விழுந்துவிடுவானோ என்பது போல உட்கார்ந்திருந்தான். வெளியூர்காரன் போலிருந்தான். மிக எளிய, சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு பதட்டத்துடன் இருந்தான். குளிரூட்டப்பட்ட அறை, மேல்நாட்டு மோஸ்தரில் அலங்கரிக்கப்பட்ட அலுவலகம், மெத்தை நாற்காலிகள், கம்பளி விரிப்புகள், கம்ப்யூட்டர்கள், ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் தமிழர்கள் என்ற பல்முனைத் தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருந்தான். யாரும் அவனை கவனித்ததாகவோ, பொருட்படுத்தியதாகவோ தெரியவில்லை.

அவனருகில் சென்று புன்னகைத்தேன்.

பதட்டத்தோடு எழுந்து நின்று ‘என் பெயர் தத்தாத்ரேயன். தத்தா என்று கூப்பிடுவார்கள். உங்களிடம் சேர்ந்து சிஏ படிப்பிற்கு பயிற்சி பெற வந்திருக்கிறேன். பகுத்தறிவு சார் அனுப்பி வைத்தார்’ என்று படபடப்புடன் கூறினான். ‘என்னை சேர்த்துக் கொள்ளுங்கள். இடமில்லை என்று கூறிவிடாதீர்கள்’ என்ற கெஞ்சல் அவன் வார்த்தைகளுக்கு பின்னாலிருந்ததை உணர்ந்தேன்.

‘உட்காரப்பா’ என்று கூறி விட்டு அவன் தந்த பகுத்தறிவு சாரின் சிபாரிசு கடிதத்தையும், அவனுடைய சான்றிதழ்களையும் பார்த்தேன். மிகவும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தான்.

‘தத்தா, நீ நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாய். உடனே இந்தப் படிப்பில் சேர்ந்து விடலாம். ஒரு பிரச்சனையும் இல்லை’ என்றேன்.

‘மிகவும் நன்றி சார். நான் என்றும் உங்களுக்கு உண்மையாகவும், நன்றியுடனும் இருப்பேன்’ என்று தழுதழுத்த குரலில் கூறினான் தத்தா.

பின்னாலிருந்து எங்களோடு பயிற்சி பெறும் மந்திரா சிரிக்கும் ஒலி கேட்டது. ‘தத்தா, நீ வம்சிக்கு நன்றியோடு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவனும் உன்னைப் போல படித்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆடிட்டர் சார் பத்து மணிக்கு வருவார். அவர்தான் உன்னை சேர்ப்பதா இல்லையா என்று முடிவெடுப்பார்’ என்றாள்.

பத்து மணிக்கு எங்கள் அலுவலகத் தலைவர் செந்தில்நாதன் வந்தார். எந்த சம்பளமும் கேட்காமல் தூங்கும் நேரம் தவிர மீதி எல்லா நேரமும் வேலை பார்க்கக் கூடிய அப்பாவி என்பதை தத்தாவை பார்த்தவுடனே புரிந்து கொண்டார். உடனே அவனை அலுவலகத்தில் சேர்த்துக் கொண்டு விட்டார்.

‘வம்சி, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று இவனுக்கு சொல்லிக் கொடு’ என்றார்.

பயிற்சியில் சேரத் தேவைப்படும் படிவங்களை நிரப்பி கையெழுத்துகளை வாங்கினேன்.

தத்தா பயிற்சிக் கட்டணத்தைப் பார்த்து திடுக்கிட்டான். ‘படிப்பு இலவசமில்லையா?’ என்று தயக்கத்துடன் கேட்டான். அவனுடைய நிதி நிலைமை அப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது.

‘குறைவான கட்டணம்தான். இது தவிர தேர்வுக் கட்டணம் உண்டு. வேறு செலவுகள் இல்லை’ என்றேன்.

‘பயிற்சிக்கான ஊதியத்தை தராவிட்டாலும் பயிற்சிக் கட்டணத்தையாவது, நம் சார் கொடுக்கலாம்’ என்று வருத்தப்பட்டாள் மந்திரா.

‘சார், நான் இப்போது இங்கே சேர்ந்து கொள்கிறேன். பணம் கிடைத்த பின் முறைப்படி பதிவு செய்து கொள்கிறேன்’ கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் தவிப்போடு பேசினான் தத்தா.

‘சந்துரு உன்னிடம் பணம் எதேனும் இருக்கிறதா?’ என்று கேட்டேன்,

‘வீட்டில் இருக்கிறது. நாளை கொண்டு வருகிறேன்’ என்றான் சந்துரு,

‘வம்சி, எவ்வளவு பணம் வேண்டும்?’ என்ற குரல் கேட்க மூவரும் திரும்பிப் பார்த்தோம். ஆடிட்டரை பார்க்கும் சாக்கில் என்னைப் பார்க்க வந்திருந்த வாத்சல்யாதான் கேட்டவள்.

தொகையைச் சொன்னதும் தன் கைப்பையிலிருந்து அதைவிட கூட அதிகமான பணத்தை எடுத்துத் தந்தாள் வாத்சல்யா. அதை வாங்கிக் கொள்ள தத்தா தயங்கினான். தன் நிலையை எண்ணி எழுந்த சுய கழிவிரக்கமும், அவமானமும் அவன் முகத்தில் தெரிந்தன.

நான் வாத்சல்யாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டேன்.

‘ஏன் பதறுகிறாய்? நீ பணத்தை வாங்கிக் கொள்ளாவிட்டால் வாத்சல்யா கண்ணீர் விட ஆரம்பித்துவிடுவாள்’ என்று கூறிவிட்டு பியூன் பழனிச்சாமியிடம் படிவத்தையும், பணத்தையும் தந்தேன்.

‘சார், நான் கூடிய விரைவில் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன்.

மிகவும் நன்றி என்று அக்காவிடம் சொல்லி விடுங்கள்’ என்று வாத்சல்யாவைப் பார்க்காமல் என்னிடம் கூறினான் தத்தா.

‘அவள் உன்னை விட வயதில் சிறியவள். அக்கா இல்லை. என்னையும் வம்சி என்றே கூப்பிடு’ என்றேன்.

‘சரி சார்’ என்றான் தத்தா.

வாத்சல்யா புன்னகைத்து விடைபெற்றாள்.

அவனுக்கு அலுவலக நடைமுறைகளை சொல்லித் தந்தேன். பின் டெலிபோன் டைரக்டரியை எடுத்து முதல் பத்து பக்கங்களிலுள்ள தொலைபேசி எண்களை கூட்டச் சொன்னேன்.

திகைத்தான் தத்தா.

‘உனக்கு எண்களோடு நல்ல உறவும், நட்பும் உண்டாக வேண்டுமென்றால் இதுதான் வழி. அடுத்த மூன்று நாட்களுக்கு இதைத்தான் செய்ய வேண்டும்’ என்றேன்.

தத்தா பென்சிலை எடுத்து தொலைபேசி எண்களை கூட்டத் தொடங்கினான்.

********



book | by Dr. Radut