Skip to Content

14. தரங்கிணியின் பார்வை

தரங்கிணியின் பார்வை

நான் கல்லூரியில் மூன்றாவது வருட பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போதுதான் அவர், அத்தை பிள்ளை, எங்கள் வீட்டில் தங்கிப் படிக்க வந்தார்.

அத்தைக்கு வசதி குறைவு என்பதால், அத்தை மாமாவோடு, உறவாட அம்மா விரும்பியதில்லை இத்தனைக்கும் நாங்களும் பெரிய பணக்காரர்கள் இல்லை. சொந்தமாக வீடும், ஒரு கடையும் இருந்தது.

ஆனால் அந்த சிறிய வசதியே அத்தையின் பார்வையில் எங்களை பெரிய பணக்காரர்களாகக் காட்டியது. அம்மாவோ தன்னை உலகிலேயே பெரிய பணக்காரியாக நினைத்துக் கொண்டிருந்தார். அப்பா எங்கள் நிலை என்னவென்பதை உணர்ந்திருந்தார் என்றாலும் அம்மாவை மீறி எதுவும் பேச மாட்டார்.

அப்பாவிற்கு நிர்வாகத் திறமை குறைவு என்று அம்மாவிற்கு எண்ணமுண்டு. அதனால் அடிக்கடி அம்மா கடைக்கும் போய் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்துவிடுவார். அம்மா கடைக்கு வந்தால் அப்பா கோவிலுக்கு போய் உட்கார்ந்து கொண்டுவிடுவார். அவ்வளவு நெருக்கமான உறவு இருவருக்கும்!

அன்று அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அம்மா எழுந்திருக்கவில்லை. குளித்துவிட்டு காய்வதற்காக கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு கோலம் போட்டதைப் பார்த்தால் திட்டி இருப்பார்.

கோலத்தை முடித்த போது யாரோ என்னை உற்றுப் பார்க்கும் உணர்வு எழுந்து நிமிர்ந்து பார்த்தேன்.

ஒரு உயரமான வாலிபன் திருதிருவென்று விழித்துக் கொண்டு இடது கையில் ஓரங்கள் கிழிந்து போன பழைய பையோடு நின்று கொண்டிருந்தான். வலது கையில் பெரிய புதிய பை இருந்தது. கழுத்தில் துண்டு ஒன்றை மாலை போல போட்டிருந்தான். மாப்பிள்ளை என்ற நினைப்போ! பேப்பர் போடுபவன் என்றால் சைக்கிளில் வர வேண்டுமே!

அவனைப் பார்த்த பின்பு அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்தேன். இருளில் சரியாக அடையாளம் தெரியவில்லை. கூர்ந்து பார்த்த போது அத்தை என்பது தெரிந்தது. ஆச்சரியமாக இருந்தது.

‘வாருங்கள்’ என்று கூறியபடியே எழுந்த போது இடுப்பில் செருகி வைத்திருந்த வீட்டு சாவி கீழே விழ, அத்தை அதை எடுத்துத் தந்தார். என்னை அணைத்துக் கொண்டு அளவுக்கதிகமாக அன்பை வெளிப்படுத்தினார். அப்பாவிடம் ஏதோ உதவி கேட்க வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

அதன்பின் மீண்டும் அத்தை பிள்ளையைப் பார்த்தேன். இதற்கு முன் பார்த்துப் பல காலமாகிவிட்டது. தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆளே மாறிப் போயிருந்தார். நான் கூடத்தான் மாறி விட்டிருக்கிறேன். நெடுநெடுவென்று ஒட்டகச்சிவிங்கிப் போல் நன்றாக வளர்ந்து விட்டிருந்தார். பெரிய கோழி முட்டை கண்கள். கைகள் ஒல்லியாக இருந்தாலும் பெண்ணை அணைக்கும் போது வலிமையுள்ளவையாக மாறக் கூடியவை என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.

‘படிப்பு முடிந்ததா?’ என்று கேட்டேன்.

அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்து தலையசைத்துவிட்டு மீண்டும் தலை குனிந்து கொண்டார்.

வீட்டுக்குள் இருவரையும் அழைத்துச் சென்றேன். அப்பாவிற்கு ஒரே சந்தோஷம்.

சிறிது நேரம் நலம் விசாரித்துக் கொண்ட பின், ‘எங்களுக்கு உன்னை விட்டால் யாரப்பா ஆதரவு? என் பையன் நன்றாகப் படிக்கிறான். ஆடிட்டர் படிப்பு படித்து சீக்கிரம் ஆடிட்டராகி முன்னுக்கு வர ஆசைப்படுகிறான். கிராமத்தில் வசதியும் இல்லை என் கையில் பணமும் இல்லை. நீதான் அவனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்,’ என்று கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீர் விட்டாள்.

மாமா என்ன சொல்வாரோ என்ற பயத்தோடு அத்தை பிள்ளை நின்று கொண்டிருந்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆதரவற்று நிற்கும் ஆணின் மீது பெண்ணுக்கு அன்பு ஏற்படுவது இயற்கைதானே? அப்போதே அவரை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

‘இது உன் வீடோ, என் வீடோ இல்லை. நம் வீடு. தத்தா சென்னைக்கு வந்து வெளியே தங்கி படித்திருந்தால் எனக்கு வருத்தம் வந்திருக்கும். தத்தா இந்த வீட்டில்தான் தங்கி படித்து முன்னுக்கு வரவேண்டும்’ என்றார் அப்பா.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

மிகுந்த அதிர்ச்சி அடைந்துவிட்ட அம்மாவிற்கு இந்த ஏற்பாடு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

தனிமையில் அம்மா அப்பாவிடம், ‘வயசுப் பெண் இருக்கும் வீட்டில் வயசுப் பையனை வருடக்கணக்கில் விருந்துபச்சாரம் பண்ணுவது சரியா’ என்று கேட்டார்.

‘அதனால் என்ன? அவன் நன்றாகப் படித்து ஆடிட்டராகி சம்பாதித்தால் நம் பெண்ணை உரிமையோடு கட்டிக் கொடுக்கலாமே’ என்றார் அப்பா.

  அப்பாவின் மனோரதம் அம்மாவின் கோபத்தை அதிகப்படுத்தியது. ‘என் பெண்ணை ராஜகுமாரனுக்குத் தரத்தான் பெற்று வளர்த்திருக்கிறேன். உங்கள் சொந்தக்கார அன்னக்காவடிகளுக்கு தாரை வார்க்க இல்லை’ என்று சிடுசிடுத்தார்.

‘கௌசல்யா, நமக்கு கடை வைக்க முதல் கொடுத்ததே தத்தாவின் அப்பாதான். மறந்துவிடாதே!’ என்றார் அப்பா.

அம்மா அத்தையிடம் சரியாகப் பேசவில்லை. அதைப்பற்றி அத்தை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்பாவின் மீது காட்ட முடியாத கோபத்தை அத்தான் மீது அம்மா முழுமையாகக் காட்டப் போகிறார் என்பது எனக்குப் புரிந்தது,

காலையில் குளித்துவிட்டு அத்தை பிள்ளை அலுவலகத்திற்கு கிளம்பினார்.

‘தரங்கிணி, நீ தத்தாவிற்கு வழி சொல்லி பஸ்ஸில் ஏற்றி விடு’ என்று கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த என்னிடம் அப்பா சொன்னார்.

அவர் எதுவும் பேசாமல், என்னை விட்டு இரண்டடி விலகி படபடப்புடன் நடந்து வந்தார். பேச்சு கொடுத்தாலும் தலையசைப்பின் மூலமே பதில் சொன்னார். எந்த கேள்வி கேட்டாலும் அதிர்ச்சி அடைந்து பின் தலையசைப்பின் மூலமே பதில் சொன்னார். இளம்பெண்களோடு பேசியதே இல்லை போலிருக்கிறது,

பழைய உடைகளை அணிந்து கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டிருந்தார். அவரது கிராமத்தில் இந்த உடை மிடுக்கானதாக இருந்திருக்கும். போகப் போக அவரே புரிந்து கொள்வார் என்று நினைத்துக் கொண்டேன்.

அவருக்குரிய பஸ் வந்ததும் ஏறச் சொன்னேன். ‘கூட்டமாக இருக்கிறது. அடுத்த பஸ்ஸில் போகிறேன்’ என்று மெல்ல கூறினார்.

‘இந்த நேரத்தில் இதுதான் கூட்டம் குறைவான விரைவு வண்டி. இன்னும் கொஞ்சம் நேரங்கழித்து வரும் பஸ்களில் நீங்கள் ஏறவே முடியாது’ என்றேன்.

‘பயணச்சீட்டு எவ்வளவு?’ என்று கேட்டார்.

‘ஐந்து ரூபாய்! இது விரைவு வண்டி. சாதாரண வண்டியில் இரண்டு ரூபாய். சில்லறையாக கொடுங்கள். நூறு ரூபாயை நீட்டிவிடாதீர்கள். திட்டு விழும்’ என்றேன்.

முதல்முறையாக புன்னகைத்தார். ‘எனக்கு அந்தப் பிரச்சனை வராது. என்னிடம் மொத்தமே பத்து ரூபாய்தான் இருக்கிறது’ என்று கூறிவிட்டு பஸ்ஸில் ஏறிப் போய்விட்டார்.

நான் திகைத்து நின்றுவிட்டேன். முதல்முதலாக அலுவலகம் போகிறார். நூறோ, ஆயிரமோ எடுத்துப் போனால் என்ன! சரியான மக்கு.

மத்தியானம் சாப்பாட்டிற்கு என்ன செய்வாரோ! எனக்கென்ன?

அன்று மாலை அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது அம்மா கடைக்குப் போயிருந்தார். அப்பாவோடு அத்தை கோவிலுக்குப் போயிருந்தார்.

வீட்டிற்குள் நுழையும்போது அங்கு நிலவிய நிசப்தத்தைக் கவனித்தார். ‘வீட்டில் யாருமில்லையா?’ என்று தயக்கத்துடன் கேட்டார்.

‘என்னைப் பார்த்தால் மனுஷியாகத் தெரியவில்லையா?’ என்று கேட்டேன்.

தலையைக் குனிந்து கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

காபி போட்டுத் தந்தேன்.

‘மத்தியானம் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன்.

ஆமென்பது போல தலையாட்டினார்.

‘பயிற்சியில் சேர்ந்தாகி விட்டதா?’ என்று கேட்டேன்.

ஆமென்பது போல தலையாட்டினார்.

‘பத்து ரூபாய்தானே வைத்திருந்தீர்கள். எப்படி சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டேன்.

‘அலுவலகத்தில் ஒருவர் சாப்பாடு தந்தார்’ என்றார்.

‘பயிற்சி கட்டணம்?’ என்று கேட்டேன்.

‘ஒரு பெண் கொடுத்துதவினார்’ என்றார்.

என்னுள் கடுமையான கோபம் எழுந்தது. பணமில்லையென்றால் என்னிடமோ, அப்பாவிடமோ கேட்டிருக்கக் கூடாதா?

மேற்கொண்டு அவரோடு பேசாமல் என் அறைக்குச் சென்றுவிட்டேன்.

அம்மா திரும்பி வரும் வரை அவர் கூடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

********book | by Dr. Radut