Skip to Content

13. தத்தாத்ரேயனின் பார்வை

தத்தாத்ரேயனின் பார்வை

அதிகாலை குளிருக்கு பாதுகாப்பாக பனித்திரையை போர்த்திக் கொண்டு விழிக்கலாமா, வேண்டாமா என்று உலகம் மெல்லப் புரண்டு சிந்தித்துக் கொண்டிருந்த போது அம்மாவோடு சென்னைக்கு பஸ்ஸில் வந்து சேர்ந்தேன்.

இதற்கு முன்பு நான் பெரிய நகரங்களுக்குச் சென்றதில்லை. போக வசதி இருந்ததில்லை. பிறந்து வளர்ந்த சிறிய ஊரிலேயே பள்ளிப் படிப்பு, சற்றே பெரிய பக்கத்து ஊரிலிருந்த கல்லூரியில் வணிகப் பட்டப்படிப்பு.

நான் பிறந்தபோது வசதியாக இருந்த குடும்பம் நான் வளர்ந்தபோது வசதியை இழந்து விட்டதால் இல்லாமையின் இயலாமையால் சீராட்டப்பட்டு வளர்ந்தவன்.

புதிய செருப்பு, புதிய ஆடை, புதிய புத்தகம், புதிய சாப்பாடு எதையும் நான் கண்டதில்லை.

மிகச் சிறுவயதில் அம்மாவிடம் செருப்பு கேட்டது நினைவில் இருக்கிறது, ‘அம்மா, எனக்கு புது செருப்பு வேண்டும்’

‘கண்ணா, புது செருப்பு காலைக் கடிக்கும். புண்ணாக்கி விடும். பழைய செருப்புதான் காலுக்கு பாதுகாப்பு.’

‘ஆனால் என் செருப்பு அறுந்து விட்டதே. ஏற்கனவே பல முறை தைத்தாகிவிட்டது. இனிமேல் தைக்க முடியாது.’

‘நம் வண்டிக்காரர் பிள்ளை போட்ட செருப்பு ஜோடியை போன மாதமே வாங்கி பத்திரமாக வைத்திருக்கிறேன். போட்டுக் கொள்.’ நான் புதிதாக அணியும் பழைய செருப்புகள் என் கால்களைக் கடித்ததே இல்லை.

இல்லாமையை மறைக்க அம்மா பல அழகிய விளக்கங்களை எப்போதும் தயாராக வைத்திருப்பார். உள்ளுரில் வசதியாக இருந்து நொடித்த குடும்பம் என்பதால் அம்மா எங்கும் வேலைக்குப் போகவில்லை. இருப்பதையெல்லாம் விற்று வாழ்ந்தபின், ஊறுகாய் போட்டு கடைகளுக்குத் தருவது, தையல் வேலை செய்வது போன்ற வேலைகளைச் செய்து சம்பாதித்தார், பள்ளிப்படிப்பு முடிந்ததும் நான் ஏதேனும் வேலைக்குப் போகிறேன் என்று சொன்னபோது அம்மா அதை ஏற்கவில்லை. ‘இழந்த சொத்தை நீதான் மீட்க வேண்டும். அதனால் மேற்கொண்டு படி’ என்று கூறிவிட்டார்.

பொருள் இல்லாமை ஆசை இல்லாமை அல்ல. ஆசைப்பட்டாலும் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதால் மெல்ல மெல்ல ஆசைகளை வெளிப்படுத்தாமலிருக்கவும், எதிலும் பற்றில்லாததைப் போல தோற்றம் தரவும் பழகிக் கொண்டு விட்டேன்.

வெளிப்படுத்தாத ஆசைகள் அடைக்கலம் புகுவது நம் ஆழ்மனத்தில்தானே? என்றோ ஒரு நாள் என் கையிலும் ஏராளமான பணமிருக்கும். அப்போது எல்லா ஆழ்மன ஆசைகளும் நிறைவேறும் என்று எனக்கு நானே திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வேன்.

சொத்தோ, வியாபாரமோ, தொழிலோ இல்லாதவன் வாழ்வில் வளம் பெற வேண்டுமானால் அதற்கு படிப்பு ஒன்றே வழி என்று ஏதோ ஒரு கணத்தில் என் மனதில் விதை ஒன்று விழுந்தது. அது ஆசைநீரால் வெகு விரைவில் பிரம்மாண்டமான மரமாக வளர்ந்து விட்டது.

என்ன படித்தால் பணக்காரனாகலாம் என்று பள்ளியில் படிக்கும் போது தெரியவில்லை. படிக்க வேண்டும் என்ற வேகமிருந்தது. கையில் கிடைத்ததை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.

நூலகம் என்னுடைய சொந்த வீடு போலாகிவிட்டது. தினசரிகள், வாராந்தரிகள், துப்பறியும் நாவல்கள், எளிய காதல்கதைகள் மட்டுமே வாசகர்களால் விரும்பப்பட்டதால் அறிவுப் பெட்டகங்களும், ஞானப் பெட்டகங்களும் தூசி படிந்து ஒட்டடையால் சிறைப்படுத்தப்பட்டிருந்தன. புத்தகங்களை வாசிப்பதோடு அவற்றை தூசி தட்டி ஒழுங்காக அடுக்கி வைத்து பயன்படுத்தியதால் நூலகருக்கு என்மீது பிரியம் வந்துவிட்டது. எனவே நூலகத்தின் சாவி ஒன்றை என்னிடமே கொடுத்து விட்டார்.

ஓரளவிற்கு வாசிப்பனுபவம் வந்ததும் மற்றவர்களைவிட நான் உயர்ந்தவன், அதிகம் அறிந்தவன் என்ற எண்ணம் சில காலம் என்னுள் இருந்தது. ஆனால் மிக நல்ல வாசிப்பனுபவம் வந்த பின் நான் அறிந்தது மிகக் குறைவு என்ற நல்லறிவு வந்தது. சிறிது அடக்கமும் வந்தது.

அதிகமாக எவருடனும் பேசமாட்டேன். புத்தகங்கள் மட்டுமே என் தோழர்கள். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களை, நெருக்கமாக உணரும் நூல்களை என் நெருங்கிய தோழிகளாக கற்பனை செய்து கொள்வேன்.

பத்தாவது படிக்கும் போது, ‘வணிகம் படித்துவிடு. சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டாகி நன்றாக சம்பாதிக்கலாம்’ என்று பகுத்தறிவு சார் கூறியதால் வணிகம் படித்தேன். சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸியும் கல்லூரியில் ஒரு பிரிவாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். பின்னர்தான் பட்டய கணக்கரிடம் சில ஆண்டுகள் வேலை செய்து பயிற்சி பெற வேண்டும், கூடவே தேர்வுகளும் எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

‘நம்மூரிலேயே இருந்தால் கணக்குப் பிள்ளையாக மாறிவிடுவான். சென்னைக்கு அனுப்பினால் நகரத்து அனுபவமும், பழக்க வழக்கங்களும் வரும். வாழ்க்கையில் முன்னேற வழிகள் தெரிய வரும்’ என்றார் பகுத்தறிவு சார்.

விசாரித்து பார்த்தால் பயிற்சியின் போது மிகவும் சொற்பமான தொகைதான் ஊதியமாகக் கிடைக்கும் என்பதுவும், அது நான் பிழைத்திருக்கக்கூட போதாது என்பதுவும், அந்த எளியத் தொகையைக்கூட பெரும்பாலான பட்டய கணக்காளர்கள் தருவதில்லை என்பதுவும் தெரிய வந்தது.

அம்மாவிற்கு நான் படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. என்னைப் பல ஆண்டுகள் பிரிந்திருக்க வேண்டுமே என்ற தவிப்பிருந்தது. நான் எப்படி நகரத்தில் வாழப் போகிறேன் என்ற பதட்டமிருந்தது.

‘தத்தா, உன் மாமா சென்னையில்தான் இருக்கிறார். மிகவும் வசதியாக வாழ்கிறார். அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்’ என்று ஒரு நாள் திடாரென சொன்னார் அம்மா.

‘அவரோடுதான் நமக்கு மூன்று, நான்கு வருடங்களாக போக்குவரத்து இல்லாமல் போய்விட்டதே’ என்றேன்.

‘என் அண்ணா மிகவும் நல்லவர். அண்ணிதான் அரக்கி. ஆனால் யார் நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தால் முன்னுக்கு வர முடியாது. வெள்ளத்தில் மூழ்கும் போது கையில் கிடைப்பது சந்தனக்கட்டையா, அல்லது பட்ட மரக்கிளையா என்று பார்க்கக் கூடாது. நாம் மேலே மிதந்து செல்வதுதான் முக்கியம்’ என்றார் அம்மா.

எனக்கு பண விவகாரங்கள் புரிந்ததே இல்லை. பணத்தை சம்பாதித்ததோ, செலவழித்ததோ இல்லை. ‘நான் படித்து முடிக்க மூன்று நான்கு வருடங்களாகலாம். அவரிடம் என்ன உதவி கேட்பது? மாதாமாதம் செலவிற்கு பணம் கொடுங்கள் என்று கேட்பதை நினைக்கவே கூச்சமாக இருக்கிறது’ என்றேன்.

‘நீ வெளியே தங்கி, வெளியே சாப்பிட்டால் உடம்பு என்னவாகும்? அதெல்லாம் சரிவராது. நீ மாமா வீட்டிலே தங்கி, அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு, படிப்பை முடித்து விடு. நான் முடிவு செய்து விட்டேன்’ என்றார் அம்மா.

மாமா வீட்டில் நான் தங்க வேண்டுமென அம்மா முடிவெடுத்திருப்பதாகக் கூறியதைக் கேட்டதும் என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. அம்மாவிற்கு தன்னம்பிக்கை அதிகம்.

ஆனால் அம்மா அதை வேறு விதமாக புரிந்து கொண்டார். ‘பார்த்தாயா? வெளியே தங்க வேண்டும் என்ற நினைப்பில் நீ பயந்து போயிருந்தாய். மாமா வீட்டில் தங்கலாம் என்று சொன்னதும் உனக்கு சந்தோஷம் வந்துவிட்டது’ என்றார்.

அம்மாவின் முடிவை மறுக்கவோ, நிராகரிக்கவோ எனக்குத் தெரியாது. பழக்கமில்லை.

அதனால் என்னிடமிருந்த பழைய சட்டைகளையும், பழைய கால்சட்டைகளையும் ஒரு பழைய பையில் திணித்துக் கொண்டேன். ஆடைகள் பகுத்தறிவு சாரின் பிள்ளை போட்டுக் கழித்தவை. பையும் பகுத்திறவு சாரின் பழைய பை. அவருக்கு பழையதாக இருந்தாலும் எனக்குப் புதியதுதானே?

வாழ்க்கைக் கல்வியை கணந்தோறும் நம்மைச் சுற்றி நடப்பவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், பிழைப்புக் கல்வி பெற எத்தனை சமரசங்களை செய்யவும், சிரமங்களை மேற்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. நொடிப் பொழுதில் கடிதத்தை உலகின் மறுமுனைக்கு அனுப்புமளவிற்கு, பிற கிரகங்களுக்கு விண்வெளிக்கலங்களை அனுப்புமளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் ஆர்வமுள்ளவர்கள், முயற்சியுள்ளவர்கள், இருக்கும் இடத்திலிருந்தபடி, செலவின்றி கல்வி கற்க எவரேனும் ஏற்பாடு செய்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

என் ஏக்கத்தை பகுத்தறிவு சாரிடம் வெளியிட்டேன்.

‘தம்பி, நல்ல காரியம் செய்ய ஆர்வம் ஏற்பட்டால் நாமே செய்து விடவேண்டும். அடுத்தவன் செய்வான் என கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடாது. ஆர்வம் வெற்றி அடைவதின் ரகசியம் ஆர்வத்தை இடைவிடாமல் வளர்த்து, தீவிரப்படுத்திக் கொண்டிருப்பதில்தான் இருக்கிறது. நான் பகுத்தறிவு பற்றி பேச ஆரம்பித்த போது அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் இடைவிடாமல் அதைப்பற்றி யோசித்ததாலும், பேசியதாலும் நான் பகுத்தறிவு மேதையாகி விட்டேன்’ என்று அடக்கத்துடன் கூறினார் பகுத்தறிவு சார்.

‘ஆர்வம் நிறைவேற உலகமே உதவ வேண்டும்’ என்றேன்.

‘அதெல்லாம் உலகத்தின் பிரச்சனை. நம் பிரச்சனை இல்லை. நாம் என்ன செய்ய முடியுமோ அதை செய்தால் போதும். செய்வதை பெரியதாக செய்து விடவேண்டும். பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் நின்று பெரிய வெற்றி பெறுவதைவிட பிரதமர் தேர்தலில் நின்று படுதோல்வி அடைவது சிறப்பானது. நான் தனிமனிதன் பகுத்தறிவு பெறுவது பற்றி அதிகம் பேசுவதில்øல. சமூகமே பகுத்தறிவு பெற வேண்டும் என்றுதான் பேசுகிறேன். என்னிடமிருந்து நீயும், மற்றவர்களும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது’ என்றார் பகுத்தறிவு சார்.

‘ஆமாம் சார். அது உண்மைதான்’ என்றேன்.

‘முதலில் உன் படிப்பை முடித்து, சம்பாதித்து, சொந்த வாழ்க்கையை எவர் உதவியுமில்லாமல் நடத்த ஏற்பாடு செய்து கொள். அதன் பின்பு உலகத்தை மாற்ற முயற்சி செய். ஆனால் அது வரை ஆர்வத்தை அணைய விட்டுவிடாதே!’ என்றார் பகுத்தறிவு சார்.

சென்னைக்கு கிளம்ப சில நாட்கள் இருக்கும்போது நூலகரை சந்தித்தேன். எனக்குப் பிடித்த புத்தகங்களை எல்லாம் ஒரு புதிய பெரிய பையில் போட்டுத் தந்தார்.

‘சார், இதெல்லாம் அரசாங்க புத்தகங்கள்’ என்று தயங்கினேன்.

‘நீயும் இந்நாட்டின் மன்னன்தானே. உனக்கு உரிமையுள்ளவைதான் இவை. ஆனாலும், உரிய பணத்தை நான் அரசாங் கத்திற்கு கட்டி விடுகிறேன்’ என்று கூறியவர் சில நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தார்.

வாங்கத் தயங்கினேன்.

‘தம்பி, நூலகத்தை பராமரிக்க வேண்டியது என் வேலை. ஆனால் இலவசமாக பல வருடங்கள் அந்த வேலையை நீ செய்திருக்கிறாய். இப்போதைக்கு என்னிடம் இருப்பது இவ்வளவுதான்.

என் சொந்த பிள்ளை போன்ற நீ முன்னுக்கு வர வேண்டும் என்ற நினைப்போடு கையிலிருப்பதைத் தருகிறேன்’ என்றார்.

மனநெகிழ்ச்சியுடன் பணத்தை வாங்கிக் கொண்டேன்.

பணம் கிடைத்ததைவிட புத்தகங்கள் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அந்தப் பணம்தான் சென்னைக்கு பஸ் பயணச்சீட்டு எடுக்கவும், பிற உதிரி செலவுகளுக்கும் உதவியாக இருந்தது. மீதி பணத்தை அம்மாவை வைத்துக் கொள்ள சொன்ன போது அம்மா கண்கலங்கி விட்டார். ‘இதையும் எனக்கு கொடுத்து விட்டு புதிய இடத்தில் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்.

‘மாமா இருக்கிறாரே!’ என்றேன். அம்மாவை சமாதானப்படுத்த அப்படிச் சொன்னேன். அம்மாவும் சமாதானமானார்.

பேருந்து நிலையத்தில் இறங்கியதும் மாமா வீடு செல்ல ஆட்டோக்காரர் கேட்ட தொகை நாங்கள் ஊரிலிருந்து சென்னை வர செலவழித்த தொகையை விட அதிகமாக இருந்தது.

அங்குமிங்கும் விசாரித்து நகரப் பேருந்து மூலம் மாமா வீட்டிற்குச் சென்றோம். பஸ்ஸில் நவீன மோஸ்தரில் உடையணிந்த பெண்கள் விசேஷ வகுப்புக்களுக்காக அந்த அரையிருள் அதிகாலையிலேயே பயணித்துக் கொண்டிருந்தனர். வாரப் பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும்தான் அப்படிப்பட்ட உடைகளைப் பார்த்திருக்கிறேன். நேரில் இப்போதுதான் பார்க்கிறேன்.

‘தத்தா எல்லோரும் பொல்லாத பெண்கள். உன்னைப் போன்ற கெட்டிக்காரனை பார்த்தால் வலைவீசி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று அம்மா ரகசிய குரலில் கூறினார்.

அம்மாவின் தன்னம்பிக்கையும், தன் பிள்ளை மீது கொண்ட நம்பிக்கையையும் பார்த்து புன்னகை எழுந்தது. ஒன்றுமில்லாத எனக்கு வலை வீசும் அளவிற்கு இப்பெண்கள் அறியாமை நிரம்பியவர்களா என்ன!

மாமாவின் வீடு அகன்ற தெருவொன்றில் இருந்தது.

நாங்கள் வீட்டை நெருங்கிய போது அதன் வாசலில் இளம் பெண்ணொருத்தி கோலமிட்டுக் கொண்டிருந்தாள். ‘உன் மாமா பெண் தரங்கிணி. நன்றாகப் பேசி, அவளது அன்பை சம்பாதித்துவிடு. அப்போதுதான் இங்கு நிம்மதியாகத் தங்க முடியும்’ என்று அம்மா மெல்லிய குரலில் கூறினாள்.

தரங்கிணி தலைக்குக் குளித்து விரித்து விட்ட கூந்தலோடு கவனமாக கோலம் வரைந்து கொண்டிருந்தாள். அவள் மெல்ல அசையுந்தோறும் அவளுடைய கொலுசுகள் இசை எழுப்பின. எங்களைக் கண்டதும் யாரென்று ஒரு கணம் புரியாமலிருந்தாள். பின் அம்மாவை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்கும் புன்னகையோடு, தோகை விரித்த மயில் மெல்ல அசைந்து எழுந்து நிற்பது போல எழுந்து நின்றாள்.

‘வாருங்கள்’ என்றாள்.

ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணியிலிருந்து பாடலொன்று நினைவிற்கு வந்தது. கப்பம் செலுத்த மறுத்த கலிங்கத்தின் மீது முதல் குலோத்துங்க சோழனின் தளபதியான கருணாகரப் பல்லவன் படையெடுத்துச் சென்று பெருவெற்றியோடு திரும்புகிறான். அவன் படை வீரர்கள் பல காலம் பிரிந்திருந்த காதலியரைக் காண ஓடோடி வருகின்றனர்.

காதலன் வருவானா மாட்டானா என்றேங்கி வாசலில் காத்துக் கொண்டிருந்த காதலி ஊடலோடு பொய்ச்சினம் கொண்டு கதவை மூடிக் கொள்கிறாள். காதலன் இனிமையான சொற்களைக் கூறி காதலியை கதவைத் திறக்குமாறு வேண்டுகிறான். காதல் இன்பம் ஊறும் பல பாடல்கள் கொண்ட கடைத் திறப்புக் காட்சியிலிருந்து ஒரு பாடல்.

கரிகுழல் அசைவற அசைவற
துயிலெழும் மயிலென மயிலென
பரிபுரம் ஒலியெழ ஒலியெழ
பனி மொழியவர்! கடை திறமினோ!

‘பனிபோல குளிர்ந்த இனிய மொழியைப் பேசும் பெண்ணே! கரிய கூந்தல் அசைய அசைய, சிலம்புகள் இனிய ஒலி எழுப்ப எழுப்ப, துயிலெழும் மயிலைப் போல எழுந்து வந்து கதவைத் திற’ என்கிறான் காதலன்.

தரங்கிணியைப் பார்க்கும் போது அக்காதலன் வாய்விட்டுக் கூறியதை மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

மறுகணமே என் நிலையை உணர்ந்து மீண்டேன். நான் போர்க்களம் சென்று மீண்ட வீரனல்ல. அடைக்கலம் தேடி வந்திருக்கும் இரவலன். தரங்கிணி என் காதலி அல்ல. எனக்கு பிச்சையிடப் போகும் மாமாவின் பெண்.

தரங்கிணி எழுந்த போது இடுப்பில் செருகி வைத்திருந்த சாவிக் கொத்து கீழே விழ அதை அம்மா பாய்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டார்.

‘கண்ணே, எப்படி வளர்ந்து விட்டாய்! அம்மன் சிலை போல அழகாக இருக்கிறாய். உன்னைப் பார்க்க வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருந்தேன்’ அம்மா பேசிக் கொண்டே போனாள். சந்தர்ப்பத்தை ஒட்டி அளவுக்கு அதிகமாக பிரியம் காட்டுகிறாள் என்று தோன்றியது.

தரங்கிணியை பார்க்க வேண்டுமென ஆர்வம் எழுந்தாலும் தலையைக் குனிந்து அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

********



book | by Dr. Radut