Skip to Content

07. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

வள்ளி, அம்பத்தூர்

என் பெயர் வள்ளி. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நான் இருபது வருடங்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்து வீடு, வீடாகச் சென்று விற்பனை செய்து வருகிறேன். எங்கள் வீட்டில் நானும், என் அப்பாவும்தான் உள்ளோம். காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்றுதான் குடும்பம் நடத்தி வருகிறேன். ஒரு கருப்புப் பூனையை எடுத்து வந்து வளர்த்தேன். அதன் சந்ததியாக இப்போது மொத்தம் பதினான்கு பூனைகள் உள்ளன. சுமார் மூன்று வருடங்களாக இந்தப் பூனையை வளர்த்து வருகிறேன். பூனைகள் மிகவும் பாசமாக இருக்கும். கறுப்புப் பூனையின் பெயர் பிரியா. வியாபாரம் முடிந்து மதியம் வீட்டிற்குப் போனதும் பிரியா என்று கூப்பிட்டால், பதினான்கு பூனைகளும் ஓடி வந்து காலைச் சுற்றிக் கொள்ளும். பூனைக்கு சாப்பாடு, பால், வாரத்திற்கு இரண்டு முறைகள் மீன், பால் சாதம் போடுவேன். இதில் நான்கு குட்டிகள் போட்ட ஒரு பூனைக்கு நான்கு நாட்களாக உடல் நலம் சரியில்லை. அன்று வியாபாரம் முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியதும் பூனைக்கு பேச்சு, மூச்சு இல்லை. என் அப்பா பூனையை கட்டில்மேல் போட்டு படுக்க வைத்து துணியைப் போட்டு போர்த்தி மூடி வைத்திருந்தார். பூனை செத்துப் போச்சு என்றார். நான் அழுது புலம்பினேன். அப்பா, அதன் விதி அவ்வளவுதான் என்றார். காலையில் எழுந்ததும் நம் வீட்டின் பின்னால் புதைத்து விடலாம் என்றார்.

என் வீட்டில் மதர் அம்மா போட்டோ ஒன்று வைத்து வணங்கி வருகிறேன். அப்பா சொன்னதை நம்பாமல், கட்டில்மேல் போட்டிருந்த பூனையை எடுத்து என் மடியில் போட்டுக் கொண்டு மதர் அம்மா முன்னால் உட்கார்ந்து இந்த பூனையின் நான்கு குட்டிகளும் கஷ்டப்படும். இந்தப் பூனையை எப்படியாவது பிழைக்க வையுங்கள் என்று அழுது புலம்பினேன். மதரைவேண்டிக் கொண்டே பூனையைத் தடவிக் கொடுத்தேன். என்ன ஆச்சரியம்! ஒரு மணி நேரத்தில் இந்தப் பூனை பெரிய கொட்டாவி விட்டு எழுந்தது. எழுந்து சிறிது நேரத்திற்கெல்லாம் ஓடி விளையாட ஆரம்பித்தது.

கொஞ்ச நேரம் கழித்து வந்து மறுபடியும் சோர்ந்து படுத்து விட்டது. எங்களுக்குத் தெரிந்த பையன் எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வருவான். அவன், ‘என்னமோ மதர் அம்மா பூனையை காப்பாத்திட்டாங்க என்று சொன்னாயே, அது விளையாடவே இல்லையே’ என்று சொன்னான். அதற்கு ‘இவங்க உயிர் கொடுத்த மதர் அம்மா. கண்டிப்பாக விளையாட வைப்பாங்க’ என்று சொன்னேன். பிறகு, மதர் அம்மாவிடம், நீங்கள் உயிர் கொடுத்தப் பூனையை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்று நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தேன். மதர் அம்மா கருணையால் அந்தப் பூனை இப்பொழுது நல்ல active-ஆக இருக்கிறது. மதர் அம்மாவிற்கு என் நன்றிகள்.

************

ஜீவிய மணி
 
யோக பாஷையைச் சாதாரண பக்தர்கட்குக் கூற முடியாது. அதன்படி என்னை அனைவரும் மட்டமாகப் பேசுகின்றார்கள், நடத்துகிறார்கள் என்று உண்மையாக நினைத்தால், உன் மனம் பிறரை மட்டமாக நினைக்கிறது என்று பொருள். உனக்கு அது தெரியலாம், தெரியாமல் போகலாம். அதுவே உண்மை. தெரிந்தால், வேலையை அங்கு ஆரம்பிக்க வேண்டும். தெரியாவிட்டால், ‘எனக்கு இந்த மரியாதைதான் தகுதி’ என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.



book | by Dr. Radut