Skip to Content

11. அன்னை இலக்கியம் - சொல்பவர் சொன்னதால்

அன்னை இலக்கியம்

சொல்பவர் சொன்னதால்

இல. சுந்தரி

முக்கியமான ஒரு விஷயத்தை நெட்டில் தேடிக் கொண்டிருந்தேன். சற்று சலிப்பு வந்தது. உடனே அறையை விட்டு வெளியே வந்து பாண்ட் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியையும், லைட்டரையும் எடுத்தேன். அதே நேரம் "வீல்' என்று உயிரே உறைவது போல் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்படியே அவற்றைப் பாண்ட் பாக்கெட்டில் திணித்தபடி விரைந்து வந்தேன். யாமினி (என் மனைவி)தான் குழந்தையைச் சுரீரென்று முதுகில் அறைந்திருக்கிறாள்.

"உனக்குப் பொறுமையே கிடையாதா? சின்னக் குழந்தைக்கு என்ன தெரியும்? எதற்கு இப்படிப் பேயறை அறைந்தாய்? நயமாகப் பேச வாராதா உனக்கு?'' என்றேன்.

"ஆமாம், நடந்த காரியத்திற்கு நயமாகத்தான் பேச வேண்டும். பாருங்கள் இங்கே'' என்று தரையைக் காட்டினாள்.

கையில் சன்பிளவர் ஆயில் கவரைப் பிரித்து வைத்திருக்கிறாள். எண்ணெய் ஜாடியில் விழாமல் தரையில் விழுந்து ஓடிக்கொண்டிருந்தது.

"நீ தவறு செய்துவிட்டு கோபத்தைக் குழந்தையின் மேல் ஏன் காட்டுகிறாய்?'' என்றேன் நயமாக.

"ஆமாம், எண்ணெயை ஊற்றும்போது கையைப் பிடித்திழுத்தது உங்கள் குழந்தை. தவறு என்னுடையதா?'' என்று ஹமாம்சோப் விளம்பரப் பெண்ணைப் போல் எங்கள் குழந்தையை உங்கள் குழந்தை என்றாள்.

"சரி, சரி. விடு ஏதோ அன்பால் உன் கையைப் பிடித்திழுத்து கூப்பிட்டிருக்கிறாள்'' என்று சமாதானமாய்ப் பேசி இரண்டு வயது பாப்பாவைத் தூக்கிக் கொண்டேன். முகம் சிவந்து அழுகை நிற்கவில்லை. இப்படி அழவிடக் கூடாது என்று முன்பே டாக்டர் கூறியிருந்தார். எனவே, சமாதானம் செய்யும் நோக்கில், "அழக் கூடாது. நீ நல்ல பாப்பா. உனக்குப் புதிய சாக்லேட் ஒன்று வாங்கித் தரப் போகிறேன். அம்மாவிற்குக் கிடையாது. உனக்கு மட்டும்தான்'' என்று கூறி தோளில் போட்டுத் தட்டியவண்ணம் அடுத்த தெருவில் உள்ள பெட்டிக்கடை போன்ற சிறிய கடைக்குச் சென்றேன். பாப்பாவின் கேவல் குறையவில்லை.

வழியெல்லாம் அவள் அழுகையை நிறுத்த வேடிக்கைக் காட்டிக் கொண்டே சென்றேன்.

சோட்டா பாய் கடை என்று எல்லோரும் அழைக்கும் அந்தக் கடையை நோக்கிச் சென்றேன். கும்பல் எதுவுமில்லை. கடைக்காரர் ஏதோ இந்திப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வாங்க என்றார். "இரண்டு நாட்களாய்க் கடை திறக்கவில்லையே, ஏதாவது வீட்டில் விசேஷமா?'' என்று கேட்டு வைத்தேன்.

"இல்லைங்க, வடக்கே சொந்தவூருக்குப் போயிருந்தேன்'' என்றார்.

"அவ்வளவு தொலைவிலிருந்து வந்தா இங்குக் கடை வைத்திருக்கிறீர்கள்!'' என்றேன் வியப்புடன்.

"கடை வைப்பதற்காக இங்கு (புதுச்சேரிக்கு) வரவில்லை. மதருக்காக வந்தேன்'' என்றார். அவ்வளவுதான் என் சைத்திய புருஷன் விழித்துக் கொண்டது.

"மதருக்காகவா வந்தீர்கள்? மதர் தெரியுமா?'' என்றேன் ஆவல் மேலிட. என்னை நான் அன்னை அன்பன் என்று நினைத்துக் கொள்வேன். மதர் மிகவும் பிடிக்கும். அதற்காக என் சுபாவத்தை மாற்றிக் கொண்டதில்லை. யாராவது அன்னையை பிடிக்கும் என்றால் எனக்கு அவரைப் பிடிக்கும்.

"தெரியும்'' என்றார். சற்று வயதானவராய் இருந்ததால், "நீங்கள் அன்னையை தரிசித்தது உண்டா?'' என்றேன்.

"ஆம், தரிசித்திருக்கிறேன்'' என்றார். "பால்கனி தரிசனத்தின்போதா?'' என்றேன் ஆர்வ மிகுதியால்.

"நேரில் தரிசித்திருக்கிறேன். என் தலையில் அவர் திருக்கரங்களால் பல முறை ஆசி பெற்றிருக்கிறேன்'' என்றார். என் ஆர்வம் கூடியது. எத்தனை பேறு பெற்றவர் இவர் என்று என் மனம் சந்தோஷப்பட்டது.

அதற்குள் ஒருவர் வந்து "ஒரு சிகரெட் பாக்கெட் தாருங்கள்'' என்று, ஒரு செல்வர் புகைக்கும் உயர்தர சிகரெட்டின் பெயரைக் கூறினார்.

"இல்லீங்க'' என்றார்.

வந்தவர் ஏமாற்றமிகுதியால், "என்ன கடையய்யா இது? சிகரெட் இல்லாத கடை ஒரு கடையா? எல்லா சிகரெட்டுமா விற்றுவிட்டது?'' என்றார்.

"இல்லீங்க. சிகரெட் வியாபாரமே நம்ம கடையில இல்லைங்க'' என்றார்.

"சரிதான்'' என்று வந்தவர் அலுப்புடன் சென்றுவிட்டார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம். "என்னங்க இது? சிகரெட்தான் சின்னக் கடையில் அதிகப் பணம் ஈட்டித் தரும். அது இங்கு விற்பனையில்லை என்றால் எப்படி நிறைய சம்பாதிப்பீங்க? உங்களுக்குச் சிகரெட் என்றாலே பிடிக்காதா? அதானால்தான் கடையில் விற்கவில்லையா?'' என்றேன்.

"அப்படியில்லீங்க. இளம் வயசுல எனக்குச் சிகரெட் ரொம்பப் புடிக்கும். சொன்னா நம்பமாட்டீங்க. ஒரு நாளைக்கு 100 சிகரெட்கூட பிடிப்பேன்'' என்றார்.

"ஐயய்யோ, அத்தனை சிகரெட் புகைத்தால் உடம்பிற்கு என்னவாகும்? உங்கள் மனைவி கூறினார் என்று சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டீர்களா?'' என்றேன். (என் மனைவி கூறி நான் நிறுத்தவில்லை என்பது இங்கு நினைவுகூறத் தக்கது).

"மனைவியா? நான் திருமணமே செய்து கொள்ளவில்லை'' என்றார்.

(அவருக்கு இப்போது ஐம்பது வயதாவது இருக்கும். ஏனென்று கேட்க ஆவல். கேட்கலாமா என்று தயக்கம்).

"பிறகு எப்படிச் சிகரெட் புகைப்பதை விட்டீர்கள்?'' என்று கேட்டுவிட்டேன்.

"சொல்பவர் சொன்னதால் விட்டு விட்டேன்'' என்றார்.

எனக்குச் சுவாரஸ்யமாயிற்று. மேலே கடைக்காரர் இருக்கைக்குப் பின்னால் சிறிய திருவுருவப் படம் மிகப் பழமையானது. என் மகள் அதைப் பார்த்துவிட்டாள். "அப்பா அதோ மதர் இருக்காங்கப்பா'' என்று ஆர்வக் குரல் கொடுக்க, நானும் மகிழ்வுடன் பார்த்தேன். குழந்தை அழுகையை மறந்துவிட்டாள். நான் கடைக்காரர் சொல்லாமல் விட்டதை மறக்கவில்லை.

"உங்க அம்மா சொன்னாங்கன்னு சிகரெட்டை விட்டுட்டீங்களா?'' என்றேன்.

"ஆமாம். அம்மாதான் சொன்னாங்க. அதுவொரு சுவையான நிகழ்ச்சி. அந்தச் சொற்கள் சாவித்ரி காப்பியத்திற்கு ஒப்பானது'' என்றார்.

"என்ன சொல்கிறீர்கள்?'' என்றேன் ஒன்றும் புரியாமல்.

"ஆமாம், அந்த நாட்களில் நான் அன்னையின் அறையில் சேவை செய்யும் பேறு பெற்றிருந்தேன். அப்போது திடீரென்று அன்னை என்னை அழைத்து, "நீ சிகரெட் புகைப்பாயா?'' என்று கேட்டார்.

நானும் உண்மை பேச வேண்டும் என்ற எண்ணத்தில் "ஆமாம்'' என்று கூறினேன்.

"ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பாய்?'' என்றார்.

"சுமார் நூறு'' என்றேன்.

"புகைப்பதை நீ விடாவிட்டால் நாளை நான் உன்னைப் பார்க்கமாட்டேன்'' என்பதை (If you continue smoking I won't see you tomorrow) அழகிய ஆங்கிலத்தில் கூறினார்கள். அந்தச் சொற்கள் என் பொருட்டுப் பேசப்பட்டவை. என் மீது கொண்ட கருணையால் பேசப்பட்டவை. என்னை என்னவோ செய்தது. அந்தச் சொற்களின் வலிமையில் சிகரெட் ஆசை என்னை விட்டு ஓடிவிட்டது. கேவலம் சிகரெட்டிற்காக அன்னையை இழப்பதா? என்னால் முடியாது.

மறுநாள் உற்சாகத்துடன் சேவைக்குச் சென்ற என்னை அவர்தம் அறைவாயிலில் நின்று ஒரு புன்னகையுடன் பார்த்தார். அந்தக் காட்சி பசுமை மாறாமல் என்னுள்ளே இருக்கிறது'' என்று கூறியவர் கண்கள் தாரைதாரையாய் கண்ணீர் பொழிந்தன. அதே கணம் அந்தக் கருணை மிகுந்த சொற்களை (If you continue smoking I won't see you tomorrow) என் செவிட்டுச் செவியிலும் கேட்டேன். திருமணமான புதிதில் இளம் மனைவியின் கூச்ச சுபாவத்தை ரசித்து அவள் முகத்தில் சிகரெட் புகையைப் பரவவிட்ட என் வக்கிர புத்தி இப்போது என்னை உறுத்தியது. அதன் பிறகு பாப்பா பிறந்தவுடன், என் மனைவி, "வெளியே எங்காவது போய் சிகரெட் புகையுங்கள். வீட்டிற்குள் வேண்டாம். புகை பிடித்தபின் வாயைக் கழுவாமல் பாப்பாவை முத்தமிடக் கூடாது'' என்று கண்டிப்பாய்க் கூறினாள். அப்போதெல்லாம் அகந்தை அடிபட்டு ஆத்திரம் எழும். ஆனால் இப்போது இந்தக் கணம் அன்னையின் அருளுரை I won't see you tomorrow என்னைத் திருத்தியது.

என் மகள் கடைக்காரரைப் பார்த்து, "மாமா, அழாதீங்க, சாக்லேட் தாங்க'' என்று தன் அழுகையை மறந்து மகிழ்வானாள். குழந்தையின் அழுகையை நிறுத்த வந்தேன். வந்த இடத்தில் அன்னையின் கருணைமிகு குரல் கேட்டேன். பரவசமானேன். வீடு திரும்பும் வழியில் மறக்காமல் பாக்கெட்டில் வைத்திருந்த சிகரெட் டப்பாவைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போனேன்.

என் மனைவி, பாப்பாவை அடித்துவிட்ட தன் பொறுமையின்மையை உணர்ந்து எங்களிடம் மன்னிப்பு வேண்ட வாசலில் காத்துக் கொண்டிருந்தாள். நாங்கள் படியேறியதும், "பாப்பா, சாரிடா. அம்மா தெரியாமல் அடித்துவிட்டேனடா. இனிமேல் அடிக்கமாட்டேன். வாடா என் செல்லம்'' என்று குழந்தையை வாங்கிக் கொண்டாள். குழந்தை அம்மாவின் அன்பில் திளைத்து மகிழ்ந்தது. அன்னை வந்தவுடன் சூழல் சுமுகமாயிற்று.

முக்கியமான ஒரு நிகழ்ச்சியைக் கூறி முடித்துவிடுகிறேன். என் துணிகளை வாஷிங்மெஷினில் போடும்போதெல்லாம் என் பாண்ட் பாக்கெட்டிலிருந்து சிகரெட் டப்பாவையும், லைட்டரையும் எரிச்சலுடன் எடுத்து வைக்கும் என் மனைவி பழக்கங் காரணமாய் பாக்கெட்டைத் துழாவ அதில் ஒன்றுமில்லாது திகைத்தாள்.

"என்ன தேடுகிறாய்? என் நண்பனை (சிகரெட்டை)யா? அவன் கெட்ட சகவாசத்தை விட்டுவிட்டேன்'' என்றேன்.

"அப்படியா? யார் சொல்லி இதைச் செய்தீர்கள்? தெரிந்தால் அந்தப் புண்ணியாத்மாவை நன்றியுடன் நமஸ்கரிப்பேன்'' என்றாள் மகிழ்ச்சி பொங்க.

"சொல்பவர் சொன்னதால்'' என்றேன்.

"புரியவில்லை'' என்றாள். அவள் கையைப் பற்றி அழைத்து வந்து பாப்பா சுவரில் ஒட்டி வைத்திருக்கும் கருணை தவழும் கண்களுடன் எங்களைப் பார்க்கும் ஸ்ரீ அன்னையைக் காட்டினேன்.

என் மனைவி நன்றியுடன் நமஸ்கரித்து நெகிழ்ந்து போனாள்.

முற்றும்.

*******

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நான் என் சூழலின் மறுபுறமா, எதிர்புறமா?
 

*******



book | by Dr. Radut