Skip to Content

05. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/66) மனிதனுக்கோ, ஆன்மாவுக்கோ பரிணாம வளர்ச்சி தேவையில்லை. அதைத் துரிதப்படுத்தும் அவசியமுமில்லை. இறைவனுக்கு அந்த அவசியம் ஏற்படலாம். தான் பெறும் ஆனந்தத்தின் நிலையை உயர்த்த இறைவன் நினைத்தால் ஆன்மீகப் பரிணாமத்தின் மூலம் ஒளிந்ததைக் காண முன்வந்து அதைச் சாதிக்கலாம்.

 • ஒளிந்ததைக் காண ஓடி வருவது பரிணாமம்.
 • நாம் கடவுள் என்பது பிரம்மம் எனக் கொள்கிறோம். அது தவறல்ல. ஆனால் சரியில்லை.
 • பிரம்மம் கடவுளைக் கடந்த நிலை.
 • சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன், லக்ஷ்மி, சரஸ்வதி, காளி போன்றவர்களைக் கடவுள்கள் எனவும், இவர்கட்கெல்லாம் ஆதியைக் கடவுள் எனவும் கூறுகிறோம்.
 • எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், ஆனந்தமயமான கடவுள் என்பது சத்திய ஜீவியத்தின் காலத்தைக் கடந்த நிலை.
 • சச்சிதானந்தம் அதற்கு உயர்ந்த நிலை.
 • வேத ரிஷிகள் சச்சிதானந்தத்தையடைய கடவுள்களின் உதவியை நாடினர்.
 • பிரம்மம் சச்சிதானந்தத்தைக் கடந்த நிலை.
 • மனிதனுள் உள்ள கடவுளுக்கு ஆன்மா எனப் பெயர்.
 • ஆன்மீகப் பரிணாமம் என்பது உடல், உணர்வு, மனத்தாலான மனிதன் இவையெல்லாம் ஆன்மாவாலானவை. பரிணாமத்தால் மனம் ஆன்மாவாகிறது. பரிணாமம் உணர்வை மனமாக்கி, மனத்தை ஆன்மாவாக்குகிறது. உடலை உணர்வாக்கி, உணர்வை மனமாக்கி, மனத்தை ஆன்மாவாக்குவது ஆன்மீகப் பரிணாமம் எனப்படும்.
 • தகப்பனார் குழந்தைகளுடன் விளையாடுவது, படிப்பு கற்பிப்பது கடந்த 20 அல்லது 30 வருஷமான பழக்கம். அதற்கு முன் அரிபொருளாக அது காணப்படும். குழந்தையின் வளர்ப்பு, படிப்பு அம்மா செய்வது என்பது பரம்பரை வழக்கம். ஒரு தகப்பனார் குழந்தைக்குக் கதை சொல்ல ஆரம்பித்தால் அவர் ஆபீஸுக்குப் போக முடியாது. விளையாட ஆரம்பித்தால் குழந்தை அவரை அனுப்பாது. அது குழந்தை மிகவும் விரும்புவது. தகப்பனார் குழந்தைக்காகச் செய்பவை அவை. குழந்தைக்குக் கற்பிப்பதும், அதனுடன் விளையாடுவதும் தனக்கே ஆனந்த அனுபவமானால் தகப்பனார் அதை விட்டு அகலமாட்டார். ஆன்மீகப் பரிணாமம் அப்படிப்பட்டது. தகப்பனார் குழந்தையுடன் விளையாடும் பொழுது தான் பெறும் இன்பம் அனுபவித்தறியாதது என்று காண்பார் என்பது மிகப்பெரிய உண்மை. குழந்தைக்குக் கற்பிக்கும் பொழுது தகப்பனார் தான் கற்பிப்பவற்றை மேலும் மேலும் உச்சகட்டத்தில் அறிகிறார் என்றும், இதுவரை அந்த அறிவு பெற்றதில்லை எனவும் காண்பார். குழந்தையுடன் விளையாடும் பொழுதும், கல்வி புகட்டும் பொழுதும் தகப்பனார் குழந்தையைப் பற்றியும், அதன் உலகத்தைப் பற்றியும் அதுவரை தான் கற்றறியாதவற்றைக் கற்கிறார்.

  குழந்தை உலகம் நம் உலகை விடப் பெரியது.
  அதன் கற்பனைக்குக் கடிவாளமில்லை.
  மனிதனுக்குரிய அளவு, குழந்தைக்கில்லை.
  அதன் மனம் நேரடியாகப் பிரம்மத் தொடர்புடையது.
  குழந்தை கல்வியை மட்டும் ஏற்கவில்லை.
  கல்வி மூலம் பிரம்மத்தை அறிகிறது.
  குழந்தை மூலம் தகப்பனார் பிரம்மத்தை அறிகிறார்.
  தான் வாழ்வில் பெற முடியாததை அவர்
  குழந்தை மூலம் பெறுகிறார்.

 • பெற்றோர் குழந்தை மூலம் உயர்ந்த கல்வியையும், பரந்த உலகையும், பிரம்மத்தையும் இடைவிடாது அறிகிறார்கள் என்பது போல் பிரம்மம் பரிணாமத்தின் மூலம் பெரும் ஆனந்தத்தை அடைகிறது.

*******

II/67) இலட்சக்கணக்கான பிரபஞ்சங்களைத் தன் ஓர் அசைவால் பரமாத்மா நிரப்ப முடியும் என்று பகவான் கூறிய பொழுது, அவர் தான் பார்த்ததைச் சொல்லவில்லை. தன் நிலையை அறிவித்தார்.

 • பகவான் நிலை பரமாத்மாவின் நிலை.
 • பிரெஞ்சுப் புரட்சியை ஓர் யோகி இமயமலையில் செய்த தவத்தால் எழுப்பினார் என்று பகவான் கூறுகிறார். தானே செய்ததாகக் கூறவில்லை.
 • கீதையில் கிருஷ்ணபரமாத்மா அது போன்ற பல விஷயங்களைக் கூறும்பொழுது தான் செய்தவை அவை என்கிறார்.
 • மகாத்மா என்ற காவியத்தில் குத்துமஸ் என்பவன் ராஜ யோகம், ஹட யோகம் ஆகியவற்றை 3 நாட்களில் செய்ததாகக் கூறுவது பகவான் தன் அனுபவத்தைக் கூறுவது.
 • இன்டர்நெட்டில் ஒரு செய்தி மட்டும் போகாது. ஓராயிரம், ஓராயிரம் கோடி செய்திகள் போகின்றன.
 • எலக்ட்ரிசிட்டி, எலக்ட்ரானிக்ஸ் ஆக மாறும் பொழுது ஒரு வேலை அனந்தமாகிறது.
 • நினைவில் ஆன்மா வெளிப்பட்டால் எந்த ஒரு காரியத்தை எவரும் செய்ய முடியாதோ அதைப் போல் 100 காரியங்களைத் தொடர்ந்து ஒருவரே செய்கிறார்.
 • ஒரு மனிதன் எத்தனை சொற்களைப் பேச முடியும்?
  • பேசப் பேச பேச்சு வளரும்.
  • செலவு செய்யும் பொழுது வளர்வதே அனந்தத்தின் குணம்.
 • பரமாத்மா, பரம புருஷா, பராத்பரா என அறியப்படும் நிலையைப் பகவான் கூறுகிறார்.
 • நமது அன்றாட வாழ்வில் அனந்தம் நம் அளவில் வெளிப்படுவதை ஆயிரம் முறை நாம் காண்கிறோம்.
  • தோட்டத்துக் கிணறு தலைமுறை தலைமுறையாக வற்றாத ஊற்றுள்ளது.
  • காட்டில் நிலம் பூமி உற்பத்தியான நாளாக முளைத்து வளர்கிறது.
  • காற்றுக்கு வயதேது? அது க்ஷணம் இல்லாத நேரமுண்டா?
  • கடல் கண்ணுக்கு எட்டிய அளவு பரவுகிறது.
   அதன் காலத்தை மனம் அறியாது.
  • அச்சுக் கோர்த்தபின் பிரதிகட்குக் கணக்குண்டா?
  • பேசும் வாய் உற்பத்தி செய்யும் சொல்லுக்கு முடிவுண்டா?
  • மக்கள் பிறந்தது முதலில் எப்பொழுது? முடிவு உண்டா?
  • நீல வானத்திற்கு நிலையாமையுண்டா?
  • தாயின் பாசம் முடிவு கண்டதா?
  • கணவனும் மனைவியும் காரில் வாக்குவாதம் செய்த பொழுது கணவன், மனைவி கையிலிருந்த புத்தகத்தைப் பிடுங்கி வெளியில் எறிந்தார். கார் நின்றது. நள்ளிரவு. மனைவி இறங்கிப் போய் புத்தகத்தை எடுத்தார். நிர்மானுஷ்யமான இடத்தில் வயதான ஒருவர் அவரை விளித்து, "உங்கள் பிணக்கை நான் அறிவேன். கணவர் குற்றச்சாட்டை மறுத்துப் பேசாதே'' என்றார்.
  • ஹைதராபாத்தில் ஆப்பரேஷனான நோயாளியை விட்டு விட்டு தரிசனத்திற்கு டாக்டர் வந்துவிட்டார். நோயாளி அவஸ்தையால் டாக்டரைக் கூப்பிட்டார். பகவான் வந்து கட்டை விரலை உலுக்கினார், அவஸ்தை நின்றது.
  • பகவான் சண்டை போடும் மனைவியை நாடியும், அவஸ்தைப்படும் நோயாளியைத் தேடியும் வரும் அற்புதத்திற்கு முடிவுண்டா?
  • முடிவில்லாத மூலம் பிரம்மம்.
  • அது வாழ்வில் வெளிப்படுவது பிரம்ம ஜனனம்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உடனே நடக்க அவசரப்படுவது மனம்.
அவசரம் அவசியம் அழிய வேண்டும்.
 
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நேரம் வந்தால் ஆழம் தெரியும்.
கூர்மையான பார்வைக்கு எப்பொழுதும் தெரியும்.
 
 
 
*******book | by Dr. Radut