Skip to Content

14. இனிய உறவுக்கு இருபது வழிகள்

இனிய உறவுக்கு இருபது வழிகள்

(மூலம்: கேரி ஜேக்கப்ஸ் எழுதிய Rules for Happy Harmonious Relationships தமிழாக்கம்: லதா சந்திரசேகரன்)

  1. அன்பர் குறை கூறுதல் மூலம் எந்த நடத்தையைச் சீர் செய்ய விழைகிறாரோ, அந்த நடத்தை குறை கூறுவதால் மேலும் மோசமாகும். குறை கூறும் திறனை அன்பர் இழக்க வேண்டும்.
  2. எந்த அளவிற்கு அன்பர் குறைவாக எதிர்வினை ஆற்றுகிறாரோ, அந்த அளவிற்கு எதிர்வினைக்கான காரணமும், எரிச்சலும் குறையும்.
  3. எந்தப் பிணக்கிலிருந்தும் அன்பர் விரைந்து விலகுதல் நலம்.
  4. எப்போதும், எல்லாச் சமயங்களிலும் சந்தேகத்தின் சாதகமான பலனை அன்பர் அடுத்தவருக்குத் தர வேண்டும்.
  5. ஒரு துளி பொறுமை சுமுகமின்மையைக் கரைக்கும். உண்மையான பொறுமை அன்பர் தன்னை அறிவதன் மூலம் வரும்.
  6. அன்பர், வேடிக்கை என்ற பெயரால் எள்ளி நகையாடல், கேலி, குத்தல் ஆகியவற்றைச் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை செழித்த மழைக் காட்டிலுள்ள மலர்களை விஷமாக்கும் அமில மழை போன்றவை.
  7. அன்பர் பக்கம் நியாயம் இருந்தாலும்கூட, அடுத்தவர் மீது தவறான உள்நோக்கங்களைக் கற்பிக்கக்கூடாது.
  8. ஒரு பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்கும் வழி அப்பிரச்சனையை முழுவதுமாக மறந்துவிடுவதே. கடந்த கால வருத்தங்களை எச்சுவடும் இன்றி அன்பர் விடை கொடுத்து அனுப்பிவிட வேண்டும்.
  9. எப்போதெல்லாம் அன்பருக்குத் தான் செய்வது சரி என்று நிச்சயமாகத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அவர் அடுத்தவரின் கோணத்தில் விஷயத்தை அணுக வேண்டும். அப்போது அதில் மதிக்கத்தக்க உண்மை ஒன்றை அன்பர் கண்டறிவார்.
  10. அன்பர் தான் சொல்வதுதான் சரி என்று வாதாடி தன் விருப்பத்தைச் சாதித்துக் கொள்வது அகந்தை வெற்றி முழக்கமிடுவதாகும். அது உறவுகளை அழிக்கும். அன்பர் என்பவர் பெருந்தன்மையானவராக, பிறரது விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பவராக, அன்பானவராக, தன்னைத் தருபவராக இருக்க வேண்டும்.
  11. அன்பர் தன்னை மாற்ற அதிகமாகவும், அடுத்தவரை மாற்ற குறைவாகவும் முயன்றால் உறவு மேம்படும்.
  12. அன்பர் அடுத்தவரின் உணர்ச்சிகளையும், அறிவுணர்வு- களையும் விமர்சனமோ, ஆராய்ச்சியோ இல்லாமல் ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.
  13. முழுமையான தனிப்பட்ட கவனம் தீவிரமான பிரியத்தை வளர்க்கும்.
  14. அடுத்தவரின் முழு ஒத்துழைப்பைப் பெற சிறந்த வழி, அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், உறவை மேம்படுத்த அன்பரே நூறு சதவீத பொறுப்பை ஏற்பதாகும்.
  15. அன்பர் தனக்கும், அடுத்தவருக்கும் உள்ள வேற்றுமைகளைப் புரிந்து போற்ற கற்று கொள்ள வேண்டும்.
  16. பிரியத்தை எந்தச் சிறிய அற்பமான காரியத்தின் மூலமும் வெளிப்படுத்தலாம்.
  17. அன்பர் எதையும் தானாகவே தீர்மானித்துக் கொள்ளக் கூடாது. அடுத்தவருக்குரிய பெருமையை, அது மிகச் சிறிய மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருந்தாலும், முழுமையாகத் தந்துவிட வேண்டும்.
  18. சொன்ன சொல்லைவிட மௌன விருப்புறுதி அதிக வலிமையானது. அடுத்தவரிடமிருந்து எதையேனும் பெற அன்பர் தீவிரமாக விரும்பினால், அதற்காக மௌனமாக விழைவது வாய்விட்டுக் கேட்பதைவிடச் சிறந்தது.
  19. அடுத்தவரின் மௌனங்களை அன்பர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவற்றை அன்போடும், புரிதலோடும் ஏற்றுக் கொண்டு மறுமொழி தர வேண்டும்.
  20. நன்றியறிதல் ஓர் ஆன்மீக உணர்ச்சி. அன்பர் எதற்காக நன்றியோடு இருக்கிறாரோ, அதை அந்த நன்றியறிதல் அதிகமாகப் பெற்றுத் தரும்.

இவ்விருபதையும் இதயத்தில் நிறுத்துவது அன்னை நினைவு. - கர்மயோகி

********

ஜீவிய மணி
 
கையால் செய்வதே காரியம்.
 

******



book | by Dr. Radut