Skip to Content

13. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/31) வெட்கமின்றி கேட்பது உணர்வின் கர்வமாகும். அதை ஏற்பது கண்மூடித்தனமான பாசமாகும்.

  • பாசம் வெட்கமில்லாத உணர்வை விரும்பி ஏற்கும்.
  • உலகமும், ஊரும் பல முறைகளைச் சட்டமாக ஏற்பது நாகரிகம் வளர்வது.
  • மரியாதையாகப் பேசுவது நல்ல பழக்கம். பிரியமாகப் பேசுவது இனிமையானது.
  • மரியாதை கலந்த பிரியம் இயல்பாக அமைவது நாகரிகம் உள்ள சமுதாயம்.
  • அந்த ஊரில் மரியாதையில்லாமல், முரட்டுத்தனமாக எவரும் பேசமாட்டார்கள்.
  • அப்படிப் பேச வெட்கப்படுவார்கள்.
  • சட்டத்தை மீற, முறையை விட்டுச் செயல்பட, நாகரிகமின்றி நடக்க வெட்கப்படுவதுண்டு.
  • அநாகரிகமான ஊரிலிருந்து வந்தவரும் அந்த ஊரில் உள்ளவரை நாகரிகமாக நடப்பார்.
  • வெட்கம் என்பது சொரணை.
  • அனைவரும் பரம்பரையாய் ஏற்ற நல்ல பழக்கத்திற்கு மாறாக நடப்பதற்கு வெட்கப்படுவார்கள்.
  • அந்த வெட்கமில்லாதவர்,
    • என்னைச் சாப்பிட அழைக்கமாட்டேன் என்கிறீர்களே,
    • வெறும் கையோடு வந்திருக்கிறீர்களே, ஒன்றும் கொண்டு வரவில்லையா?
    • என்னை சினிமாவுக்கு அழைத்துப் போங்களேன்,
    எனக் கேட்பார்கள். நீங்கள் என்பதற்கு நீ எனப் பேசுவார்கள். இதெல்லாம் நாம் எளிதில் காண முடியாது.
  • மருமகன் உங்கள் அப்பா எனக்கு ஒன்றும் தரவில்லையே என மனைவியைக் கேட்க வெட்கம் கெட்டவனாக இருக்க வேண்டும்.
  • வெட்கம் கெட்டவர் குறைவு, ஆனால் உண்டு.
  • அவர்கள் எவருக்கும் எதுவும் செய்யமாட்டார்கள், எல்லோரும் ஏதாவது தனக்குச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள், சமயத்தில் கேட்டுவிடுவார்கள். உங்கள் சொத்தில் பாதியைக் கொடுங்கள் எனவும் ஒருவர் கேட்டுவிட்டார்.
  • கம்பனியில் பார்ட்னராக வர, 5 ஆண்டுக்குப் பின் முழு கம்பனியும் தனக்கே கொடுக்க வேண்டும் என்று கேட்டவர் ஒருவர்.
  • எனக்குப் புதுவையில் வாடகையில்லாமல் வீடு வேண்டும் என ஒருவர் கடலூரில் உள்ளவர்க்கு எழுதினார்.
  • அட்மிஷன் கேட்பார்கள், சிபார்சு செய்யச் சொல்வார்கள், மார்க் போட்டு பாஸ் செய்ய வேண்டும் என்பார்கள், ஆபீஸ் இரகஸ்ய பைலைப் பார்க்க வேண்டும் என்பார்கள்.
  • வெட்கம் கெட்டவர் எதையும் கேட்பார்கள். எதுவும் கிடைக்காது என்றாலும் கேட்டபடியிருப்பார்கள்.
  • உறவு, நட்பில், நெருங்கிய உறவு, அந்தரங்க நட்பிலும் கேட்கக் கூடியதுண்டு, கேட்கக் கூடாததுண்டு.
  • பாசம் என்ற பெயரால் அதில் பலவற்றை ஏற்பதுண்டு.
  • வெட்கம் கெட்ட சுயநலத்திற்குப் பாசம் ஒரு போர்வை.
    பாசத்திற்காக அது போன்ற வேண்டுகோளை ஏற்பவர் ஒரு நேரம் இது பாசமில்லை, சுயநலம் என அறியும்பொழுது மனம் உடைவார்கள்.
  • அப்படிப் பெறுபவர், கொடுப்பவரை ஏமாந்தவர் என நினைப்பாரே தவிர, பெருந்தன்மையுடையவர் எனக் கருதமாட்டார்.
  • மகளுக்கே தாய் அளவுக்கு மேல் கொடுக்கப் போவதில்லை.
    என்றாலும் கேட்பவர் கேட்பதை நிறுத்தமாட்டார்.
  • பார்த்தவரெல்லாம் எதையாவது கேட்கும் ஊரிலிருந்து எவரும் எதுவும் கேட்காத ஊருக்கு வந்தவருக்கும், அந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு வந்தவருக்கும் ஏற்படும் அனுபவம் விவரிக்க முடியாதது. அனுபவிப்பவரால் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது.
  • கேட்க முடியாதது தெய்வீக குணம். தெய்வம் அவரை நாடி வரும்.

******

II/32) பகவான் அன்னை எழுதியவற்றைச் சத்திய வாக்காக ஏற்பது யோகமாகும்.

  • எழுத்தை ஏற்பது யோகம்.
  • வேத வாக்கு சத்திய வாக்கு.
  • சத்தியம் ஆன்மாவின் புறம்.
  • பிரம்மம் சிருஷ்டித்த முதல் நிலை சச்சிதானந்தம்.
  • சச்சிதானந்தம் சத்தின் முழு உருவம்.
  • சத் என்பது சித்.
  • சத் சித்தாக இருப்பது ஆனந்தம்.
  • சத் சத்தாகவே இருக்கலாம், சித்தாக இருக்கும் அவசியமில்லை.
  • ஒரு கவிஞர் மனிதன், கவித்திறன் பெற்றவர்.
  • அவருக்குக் கவி எழுதும் திறனிருப்பதால் கவியாக வேண்டும் என்ற கட்டாயமோ, நிபந்தனையோ இல்லை. அவர் இஷ்டப்பட்டு கவியாகலாம், ஆகாமலிருக்கலாம்.
  • சத் சித்தாவது ஆனந்தம். சத் ஆனந்தத்தில் சித்தாகிறது.
  • சத் என்பது அகமும் புறமுமாகப் பிரிந்தால் அகம் ஆன்மா, புறம் சத்தியம்.
  • மனிதன் சத்தியத்தை அகத்தில் நாடினால் ஆன்மாவின் ஆதிக்கம் ஜீவனில் எழும்.
  • மேலும் சத்தியமும் அகமும் புறமுமாக மாறும்.
  • அதன் அகம் காலம், புறம் இடம்.
  • காலத்திலும், இடத்திலும் சத்தியம் செயல்படுவது இயற்கை, பிரகிருதி.
  • பிரம்மம் அகமும், புறமுமாகப் பிரிவது சிருஷ்டி.
    • பிரம்மம் அகம், புறமாகப் பிரிவது முதல் நிலை.
    • அது பிரம்மம், சத்தாவது - சத் புறம் - அடுத்த நிலை.
    • சத் அகம் புறமாகப் பிரிவது மூன்றாம் நிலை.
    • ஆன்மா அடுத்த நிலையில் அகம், புறமாகப் பிரிகிறது.
    • ஆன்மாவின் அகம் காலம், புறம் இடம்.
    • காலமும், இடமும் உலகம், பிரபஞ்சம், இயற்கை, பிரகிருதி.
  • சத்தியத்தைக் கடைபிடிப்பவன் அதன் அகமான ஆன்மாவை அடைவான்.
  • சத்தியம் என்பதற்கடையாளம் பிணக்கற்றிருப்பது.
  • பிணக்கு பொய்.
  • பிணக்கொழிந்த நிலை மெய்.
  • மனம் பிணக்கற்று, முரண்பாடற்று, ஒருமையுறுவது சத்தியம்.
  • அன்னை மனிதனையும், நாட்டையும், உலகையும் விளித்து,
    "சத்தியம், அன்றில் பாதாளம்" என்கிறார்.
  • சத்தியம் இந்திய விடுதலையை அளித்தது.
  • சத்தியம் உலகப் போரை வென்றது.
  • ஒருவருடைய சத்தியம் சிறப்பானால் உலகைக் காக்க முடியும். - பக்கம் 531, சாவித்திரி.

******

II/33) தன் தத்துவம், பயிற்சி ஆகியவற்றைச் சொன்ன பின் காவியமாக அவற்றை இலட்சியக் கருத்தாகவும் பகவான் சொன்னார். சத்திய வாக்காக அவற்றை ஏற்று, இலட்சியவுணர்வாக அவற்றைக் கிரகித்து, யோகப் பயிற்சியாக உள்ளத்தில் வைப்பது பூரணயோகமாகும்.

  • தத்துவம் காவிய ரூபமாக சத்தியமாகிறது.
  • அறிவு மனத்தில் உறைவது, உடலில் ஆரம்பித்து வளர்ந்து உணர்ச்சி வழியாக அறிவை எட்டி ஆன்மாவை அடைகிறது.
  • அறிவு உடலையும் உணர்ச்சியையும்விட உயர்ந்த சிகரம்.
  • என்றாலும் சாதிக்கும் திறன் உடலுக்கு முழுமையாகவுண்டு. உணர்வுக்கும் ஓரளவுண்டு.
  • அறிவு தெளிவு பெற்றது. சாதிக்கும் திறனற்றது.
  • தெளிவின் சிகரம் மனத்தின் அறிவு.
  • சாதனையின் முழுமை உடலுக்கும், ஓரளவு உணர்வுக்கும் உண்டு.
  • உணர்வு ஓரளவு அறிவின் தெளிவையும், உடலின் திறனையும் இணைத்துள்ளது.
  • தெரிந்தது, தெரிந்தே பல ஆண்டுகள் இருக்கும்.
  • உணர்ந்தது உடனே செயல்படும்.
  • செயல்பாடு முழுமை பெற உணர்வு பெற்றதை உடல் பெற வேண்டும்.
  • அதற்குப் பல தலைமுறைகளாகும்.
  • மரபு வழி வந்ததை முழுமை பெற்று பூரணமாகத் தானே தன்னைச் சாதித்துக் கொள்ளும்.
  • The Life Divine பேசுவது தத்துவம். நாம் அதனால் தெளிவு பெறுகிறோம்.
  • Synthesis பயிற்சியை அளிக்கிறது. தத்துவம் நடைமுறை- யாகிறது.
  • மூத்த சாதகர்கள் அன்னையிடம் வந்து மேல் நாட்டில் பகவான் நூல் ஒன்றை வெளியிட வேண்டும். அதற்கு The Human Cycle சிறந்தது என்றனர். இங்கு வரும் மேல் நாட்டார் அனைவரும் போற்றும் நூல் அது. அன்னை மறுத்து,

    Synthesis நெஞ்சைத் தொடும்.
    The Human Cycle மனத்திற்குத் தெளிவு தரும்.
    அதனால் Synthesis மேல் என்றார்.

  • அன்னை சாவித்திரியைப் பற்றிச் சொல்வது:
    சாவித்திரியில் பகவான் அதிகப்பட்சம் சொல்லியிருக்கிறார்.
  • The Life Divine தெளிவு தரும். நாம் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    Synthesis நடைமுறையைக் கூறுவதால் செயல்படுத்துவது எளிது.
    சாவித்திரி தானே தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும் என்றார் அன்னை.
  • அறிவு உயர்ந்ததெனினும், தெளிவு சிறந்ததெனினும் பலனைக் கருதும்பொழுது Synthesisம் சாவித்திரியும் பெரியவை.
  • The Life Divineயைப் படித்துப் பெற்ற தெளிவை Synthesisஇல் நடைமுறையாகக் கண்டு, சாவித்திரியால் உற்சாகமடைந்து சாதிப்பது முழுமைக்குரியது.
  • ஒரு கருத்தை The Life Divineஇலிருந்து எடுத்து, அதை Synthesisஇல் உள்ள விளக்கத்தையும், அதன் காவிய உருவத்தை சாவித்திரியிலும் காண்பது ஆரம்பம்.
  • நாமே அது போல் காண்பது ஆழ்ந்த பலனை நிரந்தரமாகத் தரும்.
  • ஒருவர் பெறும் பலன் பலரிலும் தானே வெளிப்படும்.

******

II/34) லௌகீக வாழ்விலிருந்து ஆன்மீக வாழ்விற்குப் போகப் பண்புகள் படிகளாக அமைகின்றன. எந்நிலைக்குரிய பண்பையும் ஏற்கும் திறன் நமக்குண்டு. பண்பை ஏற்பதால் காலம் சுருங்கும். முன்னேற்றத்தையும் முன்பாக முடிக்கலாம். பரிணாம இலட்சியத்தையும் சுருக்க முடியும்.

  • பண்பை ஏற்றால் காலம் சுருங்கி முன்னேற்றம் முடிவில் வரும்.
  • குடும்ப வாழ்வை லௌகீக வாழ்வு, நடைமுறை வாழ்வென்கிறோம்.
  • ஆன்மீக வாழ்வு அன்னையை மையமாகக் கொண்டது.
    மனிதனை மையமாகக் கொண்டதல்ல.
  • இரு வாழ்வுக்கும் உரிய பண்புகள் உள.
  • பண்பில்லாமல் வாழ்வில்லை. ஆன்மீக வாழ்வின் பண்புகளை ஏற்றால் குடும்ப வாழ்வு ஆன்மீக வாழ்வாகும்.
  • இவ்விரு வாழ்வுகட்கும் இடையே சில கட்டங்களுண்டு.
    அவை,
    • தன்னலமான குடும்ப வாழ்வு.
    • தன்னலமற்ற குடும்ப வாழ்வு.
    • இலட்சியமான குடும்ப வாழ்வு.
    • ஊருடன் இணைந்த உயிரற்ற வாழ்வு.
    • ஊருடன் ஒன்றி வாழும் இலட்சிய வாழ்வு.
    • தெய்வத்தை நம்பும் தார்மீக வாழ்வு.
    • ஊருடனும், உலகுடனும் ஒன்றிய இலட்சிய தார்மீக வாழ்வு.
    • ஆன்மீக வாழ்வு.
  • ஒவ்வொரு நிலைக்குரிய பண்புகள் உள.
  • சுயநலமானவன் வசதிகளைத் தான் அனுபவித்தது போக மீதியைக் குடும்பத்திற்குத் தருவான்.
  • சுயநலமற்றவன் நான் கடைசி என்பான்.
  • பொய் சொல்லிக் குடும்பப் பெயரை காப்பாற்ற முனைவதும், பொய் சொல்லாமல் குடும்ப உயர்வைப் பாதுகாப்பதும் வேறு.
  • இம்மாற்றம் இது போன்ற மாற்றங்கள் எளிதல்ல.
  • நாம் எந்த உயர்வை எட்ட வேண்டுமானாலும் அந்நிலைக்குரிய பண்புகளை மனதில் கொண்டு பின்பற்றினால், அந்நிலையை எய்தலாம்.

    நீ படித்த பிள்ளை, மற்றவர் போல் நடக்க முடியாது.
    உனக்குத் திருமணமாயிற்று, இன்னும் நீ சிறு பெண்ணல்ல.
    பொறுப்பு வாய்ந்த பெரிய வேலைக்கு வந்தபின் அதற்குரியவாறு நடக்க வேண்டும்.
    பதவி வந்தபின் முன்போல் நினைப்பது சரியல்ல,
    என்பன போல்

    நான் அன்னை அன்பன், முன்போல் நடக்கக்கூடாது என்பது பொருந்தும்.

  • ஆன்மீக உயர்வை எட்டுவது தவம்.
  • பண்பு உயர்ந்த உள்ளமுள்ள குடும்பஸ்தனுடைய தவம் - தர்மம்.
  • நெருக்கடி வந்த நேரம் நேராக நடப்பது எளிதல்ல.
  • ஆபத்தை விட்டு விலகலாம், அது அனைத்தையும் விட்டு விலகச் செய்யும்.
  • ஆபத்து, நெருக்கடி, நேரம், சமயம், சந்தர்ப்பம் எழும்பொழுது அதற்குரிய உயரிய பண்பைப் போற்றிப் பணிவது முன்னேற்றம்.

    அது ஆன்மீகப் பரிணாம முன்னேற்றம்.

*****

II/35) மிக உயர்ந்த பண்பை, மிகச் சிறிய செயலில் ஏற்பது அதிகபட்ச அகவாழ்வின் முன்னேற்றம்.

  • சிறியதில் உயர்ந்ததைக் காண மனம் பெரியதாக இருக்க வேண்டும்.
  • நல்ல பழக்கமும், கெட்ட பழக்கமும் கலந்தேயிருக்கும்.
  • எந்த ஒரு நல்ல பழக்கம் அது போன்ற கலப்பற்றிருக்கிறதோ, அதுவே ஒருவர்க்குரிய பழக்கம்.
  • நல்லவர்க்கு நல்லவர், கெட்டவர்க்குக் கெட்டவர் என்பவரிடம் கெட்டதும் உண்டு.
  • அப்படியுள்ள கெட்டது நேரம் வந்தால் வெளிவரும்.
  • எந்த நேரத்திலும் வெளிவராத கெட்டது அவரிடமில்லை எனப் பொருள்.
  • பழக்கம் பால் போன்றது. அதில் விஷக்கலப்பு துளியும் அனுமதிக்க முடியாது.
  • ரோஜாவுக்கும் முள் உண்டு என்பது மனிதனுக்குப் பொருந்தாது.
  • அது உயிரற்ற தாவரம். முள் தற்காப்புக்காக ஏற்பட்டது.
  • பழக்கம் பகுதியானது, சுபாவம் முழுமையானது.
  • பகுதியான பழக்கம் சமயம் மாறினால், மாறக்கூடியது.
  • அரசியலில் இந்தத் தலைவர் மீது ஒரு இலஞ்ச குற்றச்சாட்டுகூட இல்லை என்று ஜனாதிபதி பொதுக் கூட்டத்தில் பேசியபின் அவர் மற்றவர் ஆயிரம், இலட்சம் லஞ்சம் வாங்கிய இடத்தில் கோடி கோடியாக வாங்கினார்.
    அவருடைய நல்ல பெயர் தோற்றம்.
  • பெண்ணுக்குப் பெருமையுண்டு என திரு.வி.க. போன்றவர் கூறியதற்கு ஒரு காரணம் ஒரு முறை தவறிய பெண் தன் நல்ல பெயரை இழந்துவிடுகிறாள். அதைக் காப்பது கடினம்.
  • இந்தியப் பெண் அந்த நல்ல பெயரை விரும்பிக் காப்பாற்றி, காப்பாற்றியதற்குப் பெருமைப்பட்டு போற்றி வருகிறாள்.
  • ஓர் இலட்சியத்தைப் பின்பற்றுவது எப்படி?
    • ஊருக்காகப் பின்பற்றலாம்.
    • ஏதேனும் ஆதாயமிருந்தால் அதற்காகப் பின்பற்றலாம்.
    • ஆத்ம திருப்திக்காகச் செய்யலாம்.
    • (Perfection) சிறப்பு எய்தச் செய்யலாம்.
  • இலட்சியத்தைப் பின்பற்றுவதில் இலட்சியப் பாதையுண்டு, முழுமையுண்டு, சிறப்புண்டு.
  • சிறப்பான முழுமையை இலட்சியமாக அடைய மிகச் சிறிய செயலிலும் அதிகப்பட்ச அகவாழ்வின் முன்னேற்றத்தைத் தேட வேண்டும்.
  • ஜெர்மனியில் இரயில் ஒரு நிமிஷம் தாமதமாக வாராது.
  • எந்தக் காந்தீயவாதியும் மாமிசம் சாப்பிடமாட்டான், புகை பிடிக்கமாட்டான். கதர் உடுக்கத் தவறுவதில்லை.
  • இந்திய எல்லைக்குள் எந்தப் பக்கமிருந்து நுழைந்தாலும் ஆன்மீக அமைதி ஆட்கொள்ளும்.
  • சந்தன மரம், வெட்டும் கோடரிக்கும் நறுமணம் தரும்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.
  • வேத பாராயணத்தில் எந்த ஒரு சொல்லுக்கும் த்வனியின் உயர்வுண்டு.
  • திருவாசகம் ஓர் அடி பாடினாலும் நெஞ்சம் உருகும்.
  • தாய்மையின் கொடுமையும் மென்மையானது.
  • துளசிச் செடியில் இலை, மலர், கிளை, தண்டு என எல்லாப் பாகங்களும் துளசி மணம் பெற்றவை.
  • மனிதத் தன்மையுடைய மனம் நெகிழாத நேரமில்லை. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழும் மனம் மனித மனம்.

******

II/36) இலட்சியத் தலைவர் தம் இலட்சியத்தைப் பரப்ப இளைஞர்களைத் தயார் செய்வது இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை. இலட்சியமாகவே இருக்கிறது. இலட்சியத்திற்கு எதிரானவர் தலைவரைச் சூழ்ந்து இலட்சியத்தையும் தலைவரையும் தங்கள் பிடியில் வைத்து உலகுக்கு எட்டாமல் செய்வதே இன்றுவரை உலகம் கண்டது. அடுத்த தலைமுறையில் இலட்சியம் கூட்டிலிருந்து விடுபடுவதுண்டு.

  • இலட்சியத் தலைவர் இலட்சிய இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
  • இலட்சியம் என்பது இலக்ஷணம்.
  • அது உயர்ந்த மனிதனின் உன்னதக் கற்பனையில் இடம் பெறும். நடைமுறையிலில்லை.
  • உலகின் இருளை எதிர்த்து ஆன்மா போராட வேண்டுமானால் (பக்கம் 485 - The Life Divine) சொர்க்க லோக இலட்சியவாதி உலகில் வந்து செயல்பட வேண்டும் என பகவான் கூறுகிறார்.
  • இலட்சியத்தை ஏட்டுச் சுரைக்காய் எனக் கருதுவதின் உண்மையைப் பகவான் ஏற்கிறார்.
  • மனம் இலட்சியத்தை நாடினாலும், செயல் சுயநலமாகவே இருக்கும்.
  • தலைமை என்பது காண்பது அரிது.
  • தலைமைப் பதவிக்குரியது என்பதால் அதற்கு மரியாதையுண்டு, கவர்ச்சியுண்டு.
  • கல்வி கொள்ளத்தான் குறையாது என்றாலும் கல்வியை, ஞானத்தைக் கொடுக்கும் பரம்பரையிருந்தாலும், கொடுப்பதும் பெறுவதும் குறைவு.
  • கல்வியில் பதவி, அதிகாரம், பணமில்லை. தலைமைக்குப் பதவியுண்டு, அதிகாரமுண்டு.
  • பெற்றவர் குறைவு. பெற்றதைக் கொடுப்பவர் கேள்விப்பட்டதில்லை.
  • விதிவிலக்கானவர் மகாத்மா காந்தி.
  • அவர் இயல்பாகப் பெற்ற தலைமையை நிராகரித்தார்.
    • அவர் சுதந்திரம் பெற்றார், வன்முறையை நாடிய இதயங்களில் அன்பை வளர்த்தார். ஹரிஜனங்களுடைய உரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடம் கொடுத்தார். இந்த நாட்டில் முடிசூடா மன்னராய்த் திகழ்ந்தார். ஜனாதிபதி, பிரதமர் பதவிகள் அவருக்குரியவை. அவற்றை அவர் கருதவில்லை. இவற்றைக் கடந்து அவர் நாட்டிற்குச் செய்த ஒரு பெரிய சேவையை உலகம் கருதவில்லை. அது

      தலைவர்களைத் தயார் செய்தது.

      ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரை உருவாக்கி உரம் பெற்றவராக மாநிலத்திற்கு அளித்தார். அவர்களே சுதந்தரம் வந்தபின் நாட்டையாண்டனர். அது மகத்தான சேவை.
      தமிழ்நாடு - இராஜாஜி,
      ஆந்திரா - பிரகாசம்,
      பம்பாய் - B.G. கெர்,
      வங்காளம் - B.C. ராய்,
      உத்தரப்பிரதேசம் - கோவிந்த வல்லப பண்ட்,
      ராஜஸ்தான் - சுக்லா,
      சிந்து - கிருபளானி,
      கேரளா - பட்டம் தாணுப்பிள்ளை,
      காஷ்மீர் - ஷேக் அப்துல்லா,
      North West Frontier Province - எல்லை காந்தி.

      தான் தலைமையை வேண்டாததும், தன் ஸ்தாபனத்தில் பல தலைவர்களை உருவாக்கியதும் உலக சரித்திரம் இன்றுவரை அறியாதது, இது பரநலம். பரநலம் வாழ்க்கை பண்பாகி, வளரும் கலையானது மகாத்மா வாழ்வில். இலட்சியம் இன்னும் தலைவரால் வாழ்கிறது. தலைவர் இலட்சியத்தைப் போற்றாவிட்டால் தொண்டர் வாழ்வு இலட்சியத்தை நாடாது. தலைவரைக் கடந்து இலட்சியத்தைத் தொண்டர் நேரடியாக நாடும் நிலை வரவில்லை.

******

II/37) சிறிய மனிதனுக்குப் பிரபஞ்சத்தை அனந்தன் அளிக்க முன்வந்தால் அனந்தனைத் தன் வாழ்வுள் சுருக்க மனிதன் முனைகிறான். தன்னைக் காப்பாற்றுவதே சரி என்பது அனந்தனுக்கும் மனிதனுக்கும் பொது. இலட்சியமேயானாலும் வலிமையே வெற்றி பெறும்.

  • சிறியதைப் பெரியதாக்க பெரியது தேடிவந்தால் சிறியது பெரியதை சிறியதாக்க முனைகிறது.
  • முதல் க்ஷணத்திலிருந்து அன்னை அன்பனுக்குத் தன்னை முழுவதுமாகத் தருகிறார்.
  • சமர்ப்பணம் பூரணமாகி சரணாகதி பூர்த்தியானால் மனிதன் அருளைப் பெற முடியும்.
  • எந்தக் காரியமும் சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அந்தச் சமர்ப்பணம் பூரணமாக வேண்டும்.
  • சமர்ப்பணம் தவிர வேலையில்லை. அதைப் பூரணம் செய்வதே முதற் கடமை.
  • மயிரிழை சமர்ப்பணத்தை உயர்த்துவதும், நாள்கணக்காக வேலை செய்வதும் ஒன்றே.
  • நெடுநாள் - பல வருஷ - அனுபவம் சமர்ப்பணம் ஓரிழை உயர உதவும்.
  • வேலையைச் சிரத்தை - நம்பிக்கை - யால் செய்ய முதல் மூன்று கட்டங்களையும் - சக்தி, வீரியம், தெய்வப் பிரகிருதி - கடந்திருக்க வேண்டும்.
  • மனிதன் சிரத்தையிலிருந்தால், (Divine Shakthi) சக்தி செயலை மேற்கொள்கிறது.
  • சக்தி செயலை மேற்கொள்ள முதல் மூன்று நிலைகளைக் கடக்குமுன் இரண்டு முக்கிய கட்டங்களும் அதற்கு முந்தைய நிலைகளும் உள.
  • செயலுக்குக் கருவி சிரத்தை - நம்பிக்கை - அடிப்படை சமத்துவம்.
  • சமத்துவம் அனந்த ஜீவியம்.
  • அனந்தன் நம் வாழ்வில் ஜீவியமாக - சமத்துவமாக - செயல்படுகிறான்.
  • நாம் அவனை நோக்கிப் போவதில்லை.
  • அவன் நம்மை நோக்கி வந்தபடியிருக்கிறான்.
  • தொடர்ந்து விலகிப் போவது நம் கொள்கை.
  • நம்மை இறைவன் ஆட்கொண்டபின் நாம் தப்பிக்க முடியாது.
  • ஆனால், நாம் அவனை நம் எல்லைக்குள் சுருக்கும் முயற்சியை எடுக்கிறோம்.
  • அதுவே நமது பிரார்த்தனை.
  • அகந்தை சிறியது, அளவு கடந்தும் சிறியது.
  • நாம் அகந்தையை விட்டொழித்து இறைவனை ஏற்றால், அவனுடைய அளவுக்கு வளருவோம்.
  • நாம் அகந்தையை விடாமலிருக்கும்பொழுது அவன் உள்ளே வந்துவிடுவதால் அகந்தை அனந்தனைச் சுருக்குகிறது.
  • பள்ளிக்கூடம் நடத்துபவருக்கு அன்னை அருள் புரியும் பொழுது பள்ளியை விரிவு செய்யும் வாய்ப்பைத் தருவதில்லை. கல்லூரியைக் கொடுத்தால் அவரால் நிர்வாகம் செய்ய முடியாது. அவர் கல்லூரியையும் தருவதில்லை. அன்னை தருவது பல்கலைக்கழகம்.
  • அதைப் பெறும்பொழுது சமர்ப்பணத்தால் மட்டும் பெற முயன்றால், பெறுபவர் நிர்வாகத் திறமை உயரும். வந்ததை நிர்வாகம் செய்ய முடியும்.
  • பலிக்கும்போல் தெரியும்பொழுது ஏற்படுபவை இரண்டு.
    1. சமர்ப்பணம் அடியோடு மறந்துவிடும்.
    2. வரட்டும், வந்தால் நான் பார்த்துக் கொள்வேன்.
  • வரும், பலிக்கும், பலித்த பிறகு எல்லாம் தவறாகும். சமர்ப்பணம் நினைவுக்கே வராததால், பல்கலைக்கழகம் சுருங்கி, கல்லூரியும் ஆகாமல், பெரிய பள்ளிக்கூடமாகும். அதுவும் இவர் நடத்திய பள்ளியைப் போல் இரு மடங்கிருக்கும்.
  • காரியம் கூடி வராத பொழுது மனம் கரித்துக் கொட்டும், சபித்தபடியிருக்கும்.
    எவரையும் சபிக்கும், எல்லாவற்றையும் சபிக்கும்.
    சாபம் சபிப்பவருக்கே பலிக்கும்.

தொடரும்....

******



book | by Dr. Radut