Skip to Content

08. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Our chief need is to discover the origin and nature of the Ignorance

(Page 365, The Life Divine)

அஞ்ஞானத்தின் மூலம், சுபாவத்தை அறிவது முக்கியம்

Science என்ற சொல்லைத் தமிழில் விஞ்ஞானம் என மொழி பெயர்க்கிறோம். ஞானம் எனக் கூறுவதில்லை. ஐரோப்பா விஞ்ஞானம் பிறந்த நாடு. அங்கு இயற்கை செயல்படும் வகைகளையும், அதன் சட்டங்களையும் அறிவது விஞ்ஞானம் எனக் கருதப்பட்டது. அதன் விளைவாக பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. 365 நாள் என்பது வருஷம் என்றனர். கங்கையை நாம் கங்காதேவி எனவும், ஜீவ நதியெனவும், நாம் வணங்கும் தேவதை எனவும் கூறுவது போல், சூரியனை Sun god என்ற ஐரோப்பியர், சூரியனை இயற்கையாகக் கருதி செய்த ஆராய்ச்சியால் அதன் அம்சங்களை அறிந்தனர். இன்று விஞ்ஞானம் பல்வேறு துறைகளையுடையது. எல்லாத் துறைகட்கும் உரிய அடிப்படையான சட்டங்கள் பல.

  • கண்ணுக்குத் தெரிவது விஷயம். கற்பனையில் எழுவதல்ல.
  • அறிவுக்குப் புலப்படுவதே பகுத்தறிவு, அழகாக அலங்கரிக்கப்படுவதில்லை.
  • புரியும் அம்சங்களை விளக்க வேண்டும், அளக்க வேண்டும்.
  • அளப்பதற்கு அளவு கோல் தேவை. (scales, measurements).
  • விளக்கமின்றி (definition) எந்தத் துறையும் முன்னேற முடியாது.
  • அப்படி ஆரம்பத்தில் சரித்திரம் மன்னர் வாழ்வாகக் கருதப்பட்டது விஞ்ஞானத்தால் மக்கள் வாழ்வாகக் கருதப்பட்டது.
  • இன்று வரை முன்னேற்றம் (development) என்பதற்குத் தெளிவான விளக்கமில்லை. டெக்னாலஜியை முன்னேற்றமெனக் கருதுகிறார்கள். அதனால் பூமியின் சூழல் பாதிக்கப்பட்டது. மனித முன்னேற்றமே முன்னேற்றம் என உலகம் இன்று வரை முழுமையாக ஏற்க முடியவில்லை. ஆன்மீகம் வளர்ந்த நாடு இந்தியா. வேதம் ஆரம்பம்.

உபநிஷதம் உச்ச கட்டம். கீதை கிரீடம் என நாம் கொள்கிறோம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய நூல் The Life Divine. இவற்றிற்கெல்லாம் புதிய உயர்வும், அகன்ற அலங்காரமும் தர முயல்கிறது. அதில் முக்கியமானது, அஞ்ஞானத்திற்குரிய விளக்கம் (definition).

ஒரு துறையின் முன்னேற்றம் அதன் முக்கிய அம்சங்களின் விளக்கத்தைப் பொறுத்தது. அது போல் ஆன்மீகத்திற்கு முக்கியமானது: அஞ்ஞானம்.

இறைவன் சிருஷ்டித்த உலகில் மரணம், நோய், துன்பம், கொடுமை, அநியாயம் ஏனுள்ளது என்பது தொன்றுதொட்ட நாளாக எழுந்த கேள்வி. இக்கேள்விக்கு முடிவான பதில் இதுவரையில்லை. இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால், இருளால் நமக்குத் தொந்தரவில்லை என்பது வேதம். இறைவனை நாடி மோட்சம் தேடுபவனை இருள் தொடராது என்பது உபநிஷதம். அகந்தை கரையுமானால் இருளிலிருந்து விடுதலை பெறலாம். இருள் என்ன என்ற கேள்வி எழ வேண்டிய அவசியமில்லை என்பது பௌத்தம். சர்வ தர்மத்தையும் சரணடைந்தவனுக்கு மோட்சம் உரியது என்பது கீதை. இறைவன் இருளைப் படைக்கவில்லை, அஞ்ஞானம் அடர்ந்த ஒளியை இருளாகக் காண்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். இதை விளக்க அஞ்ஞானம் என்பது என்ன என்று (definition) விளக்க வேண்டும். இந்த அடிப்படையான விளக்கம் இதுவரை சரியில்லாததால் வேதம் முதல் கீதை வரை இருளுக்குப் பதிலில்லை.

இறைவனை அறிவது ஞானம். அறியாதது அஞ்ஞானம் என்பது வேதம். தத்துவம் இறைவனில் ஆரம்பித்து இறைவனில் முடிகிறது, உலகம் ஒதுக்கப்பட்டது. அதனால் இருளுக்குப் பதிலில்லை. இறைவனை அறிவது ஞானம். உலகத்தை அறிவது அஞ்ஞானம் என்பது உபநிஷதம். இது வேதத்தைக் கடந்த நிலை. இவற்றிடையேயுள்ள தொடர்பு குறிப்பிடவில்லை. தொடர்பு தெரியவில்லை. தொடர்பு தெரியாமல் புரியாது.

ஞானம் லீலைக்காகத் தன்னை அஞ்ஞானமாக மாற்றியது என்பது ஸ்ரீ அரவிந்தம். அஞ்ஞானத்திலிருந்து எழும் ஞானம் சச்சிதானந்த ஆனந்தத்தைப் பெரிதும் வளர்க்கவல்லது. இறைவன் அந்த வளரும் ஆனந்தத்தை நாடி உலகை, உலகில் இருளை சிருஷ்டித்தான் என்ற புது விளக்கம் பகவான் கொடுப்பது. இப்புது விளக்கத்தின் அடிப்படையில் எழும் வாழ்வு தெய்வீக வாழ்வு. அதுவே ஸ்ரீ அரவிந்தத்தின் இலக்கு. அதை விளக்குவதே The Life Divine லைப் டிவைன் என்ற நூல்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வின் அமைப்பு முறைக்கு அஸ்திவாரம் ஜடத்தின் தூய்மையான "நாணயம்”.
 

*******



book | by Dr. Radut