Skip to Content

11. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை

அன்னை இலக்கியம்

அன்னையின் கைக்குட்டை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

"அந்த மனுஷ ரூபம் புருஷன்தான்னு ஏன் தாத்தா நெனச்சுக்கற?'' எத்தனை உறுதியாய்ச் சொல்கிறாள் வாணி.

"பொம்பளக்கி இந்த வுலகில பாதுகாப்பு இல்லையேம்மா'' என்று வருந்திக் கூறினார் தாத்தா.

"நீ சொல்லுறது சரிதான் தாத்தா. ஆனா, அந்த நெலய உண்டாக்கினதே நம்ப மனுஷ சமுதாயந்தானே. அவுங்க அவுங்க சுயநலத்தால உருவானதுதான் இந்தக் கொடும. அங்க அங்க கொலையும், கொள்ளையும் நடக்கறப்ப நிம்மதியா வாழுற மனுஷங்களுந்தான் இருக்குறாங்க. நம்ப மனசுல சுத்தம் இருந்தா சுகமா இருக்கலாம் தாத்தா. நான் சொல்ற அந்த அன்னை இதுவும் சொல்லியிருக்காங்க. கடவுள மனசார நம்பி ஏத்துக்கிட்டா ஆம்பள தொணை தர பாதுகாப்பைவிட அதிகப் பாதுகாப்பை அது தருமாம். அதனால நா புருஷத் துணையைத் தேடப்போறதில்ல. அந்த அன்னையோடத் துணையைத்தான் நம்பப்போறேன்'' என்றாள் திடமாக.

"ஊரு விட்டு ஊரு வந்து பொழைக்கிறோம். பாத்து நடந்துக்கத் தாயி'' என்று ஓய்ந்துபோனார் தாத்தா.

"உன் குடும்பத்தை நீயே தேர்ந்தெடுக்கலாம் என்றும் அன்னை சொல்லியிருப்பதாகவும் ஒரு செய்தியை அண்ணி சொல்லியிருந்- தாரே. அவ்வூரில் ஓரன்னையன்பர் இருப்பதாயும், அவர் அன்னை மயமானவர்என்றும் சொல்லியிருந்தாரே. அவரை ஒரு நாள் கண்டு வரவேண்டும்' என்ற எண்ணமும் இருந்தது. இவ்வாறு அண்ணியார் கொடுத்த அன்னையின் திருவுருவப் படத்தை கையில் வைத்தவண்ணம் தன்னை மறந்து கண்ணுறங்கிவிட்டாள்.

அவள் தன் தோழியுடன் தேவனாம்பட்டினம் திருவிழாவிற்குச் செல்கிறாள். திடீரென அங்கே கார் ஒன்று வந்து நிற்கிறது. டிரைவர் இறங்கி உள்ளேயிருப்பவரிடம் ஏதோ (பணிவாய்க் குனிந்து) சொல்கிறார். மக்கள் கும்பலாய்க் காரைச் சூழ்ந்து நின்று வணக்கம் தெரிவிக்கின்றனர். யாரவர் என்று வாணி எட்டிப் பார்க்கிறாள். அவர்தாம் அவள் இப்போதெல்லாம் சதா நினைத்துக் கொண்டிருக்கிறாளே அந்த சக்தி வாய்ந்த தெய்வம்தான். கும்பலைக் கடந்து தன்னை மறந்து ஓடிச் சென்று கார் கதவருகே சென்றுவிட்டாள். உள்ளிருந்தபடியே இவளைப் பார்த்து புன்னகைத்தார். கார் புறப்படத் தயாரானது. மக்கள் விலகி வழிவிட்டனர். மனமின்றி வாணி நிற்கிறாள். கார் கிளம்பிவிட்டது.

காருக்குள்ளிருந்து அழகிய வெள்ளை நிறக் "கைக்குட்டை” ஒன்று பறந்து வந்து அவள் முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. சட்டென்று அதைப் பற்றிக் கொண்டாள். உடனே ஊருக்குத் திரும்ப வேண்டும். இப்போது கிடைத்த இந்த அரிய பொக்கிஷத்தை அனுபவிக்க வேண்டும். அதற்கு அவளுக்குத் தனிமை வேண்டும். திரும்புகிறாள். அவளுடன் வந்த தோழி பொன்னி, "வாணி, எங்கபோற?'' என்றழைக்கிறாள்.

"நா வீட்டுக்குப் போறேன்'' என்கிறாள் வாணி.

"வீட்டிற்கா? திருவிழாப் பாக்க வந்தோமில்ல?'' என்றாள் பொன்னி.

"திருவிழாவா?'' என்கிறாள் வாணி.

"சரிதான், நாம இங்க எதுக்கு வந்தோம்னு மறந்திடிச்சா?'' என்றாள் பொன்னி.

"மறக்கலயே. வந்த வேலை முடிஞ்சுதான் கௌம்பறேன்'' என்கிறாள் வாணி.

"என்ன உளர்றே? இன்னும் சாமியே வரல, கும்பிடாம போனா எப்படி?'' என்கிறாள் பொன்னி.

"சாமி எப்பவோ வந்து போயிடிச்சு. நீதான் கவனமில்லாம நிக்குற'' என்கிறாள் வாணி.

"சரிதான், ஒனக்குப் புத்தி மாறிடிச்சுன்னு நெனைக்குறேன்'' என்கிறாள் பொன்னி.

"சாமி வந்தப்ப கவனிக்காம, போனபிறகு காத்திருக்கீங்களே, ஒங்களுக்குத்தான் புத்தி மாறிடிச்சு. நா வறேன்'' என்று புறப்பட்டு விட்டாள். வீட்டிற்குச் சென்ற வாணி, அறைக்குள் சென்று கதவைச் சார்த்தினாள். ஆர்வம் பொங்க அந்தக் கைக்குட்டையை எடுத்துப் பிரிக்கிறாள். ஓரங்கள் தைக்கப்பட்டு, சிறிய பூக்கள் பின்னப்பட்ட வேலைப்பாடு மிக்க கைக்குட்டை. நல்ல மணம் வேறு. ஆவலுடன் அதை முகம் முழுவதும் தழுவிக் கொண்டாள். அன்பு பொங்க முத்தமிட்டாள். யாரும் பார்க்குமுன் அதை டிரங்குப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வெளியே வந்தாள். இவளைக் கண்ட இவள் அம்மா, "என்ன வாணி, திருவிழா காணப் போன சனம் திரும்பறதுக்குள்ள நீ எப்படி திரும்பி வந்த?'' என்றாள்.

"அங்க ஒரே கூட்டம். பிடிக்கல. அதான் திரும்பி வந்திட்டேன்'' என்றாள்.

"கூட்டந்தான் ஒனக்கு ஒவ்வாதில்ல? ஏன் அங்கெல்லாம் போவுற?'' என்றாள் அம்மா.

"போனதாலதான் அவுங்களப் பாத்தேன்'' என்று மனங் கொள்ளா மகிழ்வுடன் கூறும் மகளை வியப்புடன் பார்த்து,

"அவுங்களா? யார் அவுங்க?'' என்றாள் அம்மா.

"இந்தவூர் பெரிய மனுஷியாமே ஒருத்தங்க, அவுங்க அங்ஙன கார்ல வந்திருந்தாங்க'' என்றாள்.

"இந்தவூர்ப் பெரிய மனுஷியைப் பாக்க தேவனாம்பட்னம் போனியா? யாரந்த பெரிய மனுஷி?'' என்றாள் அம்மா.

"அவங்க பேரெல்லாம் தெரியாது. பெரிய மகாராணிகணக்கா கார்ல வந்தாங்க'' என்றாள் பெருமையாய்.

"சாமிய பாக்கப் போயி, மனுஷியைப் பாத்து மயங்கி வந்தியா?'' என்றாள் அம்மா.

"இல்லம்மா. அவங்க வெறும் மனுஷி இல்லயாம். சாமியே மனுஷியா வந்தவங்களாம், பேசிக்கிறாங்க''.

பட்டென்று முதுகில் ஓரடி விழுந்தது. "பட்டப்பகலில் என்ன தூக்கம்? பகல் கனவு வேற. ஏதோ சாமி, மனுஷின்னு பேசினியே, என்ன கனாக் கண்ட?'' என்றாள் அம்மா.

"அட! எல்லாம் கனவா? நா தேவனாம்பட்டனம் போகலையா? அவங்களைப் பாக்கலையா? கைக்குட்டை எங்கே? நல்ல வாசமா இருந்திச்சே' என்று மனதிற்குள் பேசுகிறாள் வாணி.

"என்னடி விழிக்கிறே?'' என்றாள் அம்மா.

"தேவனாம்பட்டனம் திருவிழாவுக்குப் போனதுபோல கனவு'' என்றாள் வாணி.

"எந்திரிச்சு வேலய கவனி'' என்று கூறிச் சென்றாள் அம்மா.

இன்று எப்படியாவது அன்னையைப் பார்த்திருக்கும் அந்த அன்பரைக் கண்டுவர வேண்டும்என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

ஒரு மாலை நேரத்தில் வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு கிளம்பினாள். அண்ணியார் தாம் சென்று வந்த வீடு பற்றித் தன் எஜமானியம்மாவுக்குக் கூறிய அடையாளங்களை அவள் நன்றாக கவனித்து வைத்திருந்தாள். எனவே, அந்த வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. ஓரன்னையன்பரை, அன்னையை நேரில் தரிசித்தவரை, அன்னையை வாழ்வில் ஏற்று அன்னைமயமாக வாழும் ஒருவரைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி நெஞ்சு நிறைந்திருந்தது. தான் கண்ட கனவை அந்த அன்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. அதற்கிடையில் தன்னால் அவரைக் காணக்கூடுமா? அவர் தன்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசுவாரா? என்ற எண்ணம் எழுந்தது. உடனே அவரையும் தன்னையும் விலக்கி, அவருள்ளும் தன்னுள்ளும் இருக்கும் அன்னையைக் கருதினாள். அவர் யாரை நேசிக்கிறாரோ, அந்த அன்னையையே தானும் மனமார நேசிப்பதை எண்ணினாள். எல்லாம் மறந்துவிட்டது.

வெளிப்புற காம்பவுண்ட் கதவு திறந்திருந்தது. யாரோ அப்போதுதான் உள்ளே சென்றிருக்க வேண்டும். முன்பின் அறியாதவர் வீட்டில் உள்ளே நுழைவது தவறுஎன்று அறிந்திருந்தாள். "அம்மா, அம்மா'' என்று சில முறை அழைத்தும் யாரும் வாராததால் வீட்டு முன்புறம் போய் திறந்த கதவிற்கு வெளியே நின்றாள். "அன்னையே! நான் இங்கு உம்மை தரிசிக்கவே காத்திருக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்'' என்று மனதில் வேண்டி நின்றாள். அப்போது மூன்று வயது குழந்தையொன்று சலங்கை ஒலிக்க உள்ளிருந்து வெளியே ஓடி வந்தது. அதன் கையில் ஒரு கைக்குட்டை. இவளைக் கண்டதும் சிரித்துக் கொண்டே, "இந்தா, இது உனக்கு வேணுமா? எடுத்துக்கோ'' என்று அவள் கையில் கொடுத்துவிட்டு, வெளியே ஓடிவிட்டது. என்ன அதிசயம் இது! கணப்போது இன்ப அதிர்ச்சியில் யாவும் மறந்து நின்றாள். இது அவள் கனவில் கண்ட பூவேலைப்பாடமைந்த பெண்கள் பயன்படுத்தும் அழகிய கைக்குட்டை. அதைத் தொட்ட கையெல்லாம் மணத்தது. எப்படி இது!

குழந்தை சென்ற சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் வெளியே வந்தார். வயது முதிர்ச்சியிலும் தெளிவாகவும், கனிவாகவுமிருந்தார். அவர் பார்வையில், முகச் சாயலில் அவள் கண்ட அன்னை திருவுருவப் படத்தின் சாயல் இருந்தது. "என்ன சொல்வது? எப்படிப் பேசுவது?' என்று புரியாமல் தயங்கி நின்றாள். அவர் கையில் ஒரு சாக்லேட் இருந்தது. "இப்படி ஒரு குழந்தை ஓடி வந்ததா?'' என்று கேட்டார்.

"ஆமாம், வெளியே சென்றுவிட்டது'' என்றாள்.

"குறும்புக்காரக் குழந்தை'' என்றவர்,

"நீ யாரம்மா? என்ன வேண்டும் உனக்கு?'' என்றார் எளிமையாக.

"அன்னை என்பவரைப் பற்றி சில தினங்களுக்கு முன்புதான் கேள்விப்பட்டேன். அவரை நேரில் தரிசித்த, அவரை மிகவும் பக்தி செய்யும் ஒருவர் இந்த வீட்டில் இருப்பதாயும் சொன்னார்கள். அவரைத் தேடித்தான் வந்தேன்'' என்று மெல்ல சொல்லிவிட்டாள்.

"அப்படி என்றால் நீ என் உறவுக்காரப் பெண்தான்'' என்றார் பெரியவர்.

"நீங்கள் என் சொந்தக்காரரா'' என்றாள் ஆச்சர்யமாக.

"ஆமாம். அன்னைக்குச் சொந்தமென்றால் எனக்குச் சொந்தமில்லையா?'' என்றார் நெடுநாள் அறிந்தவர்போல.

ஏதோ ஏழு கதவுகளைத் தாண்டி யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைவாய் இருப்பார். அவரைக் காணத் தன்னை விடமாட்டார்கள் என்று எண்ணியதெல்லாம் போக, இப்படி வெளியே வந்து அவரே காட்சி தந்தது நம்ப முடியவில்லை.

"ஐயா, எனக்கு அன்னையை ரொம்பவும் புடிச்சிருக்கு. ஆனா எழுத்து படிப்பில்ல. அதனால படிச்சுத் தெரிஞ்சுக்க முடியாதத ஒம்மைப் பாத்து அறிஞ்சிக்க ஆவலா வந்தேன்'' என்றாள்.

"அன்னைப் பிடித்தால் போதும். அதற்கு எழுத்தெதற்கு? படிப்பெதற்கு? சிலருக்கு இவையெல்லாம் தடையாகவே இருந்திருக்கிறது. உள்ளே வாம்மா'' என்றார்.

தூய்மையும், அமைதியும் தவழ்ந்தது.

"எனக்கு ஒரு விருப்பம் ஐயா. அதைச் சொன்னால், நிறைவேத்துவீரா?'' என்றாள்.

"சொல்லம்மா'' என்றார்.

"அன்னையம்மா உங்களுக்கு நிறைய பரிசெல்லாம் கொடுத்திருக்காங்கன்னு சொன்னாங்க. அதெ நானும் பாக்கலாமுங்களா?'' என்றாள் தணியாத ஆர்வத்துடன்.

"நான் அவற்றைக் காட்சிப் பொருள் ஆக்க முடியாதம்மா. இவை அன்னையின் அருமை உணர்ந்தவர்களுக்குப் போய்ச் சேர வேண்டியவை. அவற்றைக் கவனமாகப் பாதுகாக்கவே அன்னை என்னை வைத்திருக்கிறார்'' என்றார் உருக்கமாக.

"ஐயா, நான் அந்தப் பரிசுங்கள வேடிக்கை பாக்க ஆசைப்படலை ஐயா. அன்னையா நெனச்சு தரிசனம் செய்யவே வந்தேனுங்க'' என்று கண்களில் கண்ணீர் தளும்பக் கூறினாள்.

"அப்படியா? சரி சரி, வா'' என்றவர், கண்ணாடியால் செய்யப்பட்ட மேல்புறம் மூடிய அந்தப் பெட்டியை நோக்கி அழைத்துச் சென்றார். பக்கவாட்டில் திறந்திருந்த அதன் கதவை மூடினார். "இப்போதுதான் இந்தப் பெட்டியைத் திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்தப் பக்கத்து வீட்டுக் குழந்தை வந்தது. அதற்குச் சாக்லேட் எடுக்க உள்ளே போனேன். அதற்குள் அது ஓடிவிட்டது'' என்றவர், "கிட்ட வந்து தரிசனம் செய்து கொள்ளம்மா'' என்று கூறவே, பெட்டியருகே வந்து மேல்புறக் கண்ணாடி வழியே அன்னையின் அருட்கொடைகளை தரிசித்தாள்.

மோதிரம், பேனா, பென்ஸில், ரிஸ்ட் வாட்ச், சாக்லேட் தாள், உலர்ந்த பல ரகப் பூக்கள், புத்தகம், செண்ட் பாட்டில், மெஸேஜ் கார்டு என்று ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க, இவை அன்னையின் ஸ்பரிசம் பட்டவை என்று நினைக்க நினைக்க பரவசமாயிற்று. திடீரென ஓரிடம் வெற்றிடமாய் இருந்தது.

"தரிசித்தாயா?'' என்று பரிவுடன் கேட்டவண்ணம் பெட்டியருகே வந்து உள்நோக்கிப் பார்த்தவர், "அட, இதிலிருந்த கைக்குட்டையைக் காணோமே. இதை நான் திறந்தபோது அக்குழந்தை என் பக்கத்தில் இருந்தது. ஒவ்வொன்றையும் பெயர் கேட்டது, சொன்னேன். நான் உள்ளே போனபோது அக்குழந்தை இந்த கைக்குட்டையை எடுத்துவிட்டதோ', கலங்கிப்போனார். "இதை நான் உன்னிடத்தில் கொடுத்து வைத்திருக்கிறேன். இதற்குரியவர் உன்னைத் தேடி வரும்போது கொடுத்துவிட வேண்டும்'' என்று கைக்குட்டைக்கு கட்டளை விதித்திருந்தார் அன்னை. சிவபெருமான் கொடுத்த திருவோடு போல் அன்னை மாயம் செய்துவிட்டாரா?

"ஏனம்மா அந்தக் குழந்தை போகும்போது பார்த்தாயா? அதன் கையில் ஏதேனும் கைக்குட்டை இருந்ததா? குழந்தைகளை கடிந்து கொள்வது அன்னைக்குப் பிடிக்காது. அதிலும் மூன்று வயதுடைய குழந்தை. அது தவறு செய்ய முடியாது'' என்று தவித்தார்.

"ஐயா, என்னை மன்னிச்சிடுங்க'' என்று வாணி அவர் காலில் விழுந்தாள்.

"எழுந்திரு, எழுந்திரு. ஏன் என் காலில் விழுகிறாய்?'' என்றார்.

"நான் உங்களைப் பார்த்தவுடன் இதைச் சொல்லியிருக்க வேண்டும். அந்தக் குழந்தை இதை, "உனக்கு வேணுமா? எடுத்துக்க'' என்று மழலையாய்ச் சொல்லி, என்னிடம் கொடுத்து ஓடிவிட்டது. நான் ஒரு கனாக் கண்டேன் ஐயா. தேவனாம்பட்டனம் திருவிழாவில் அன்னையம்மா கார்ல வந்தாங்க. நான் ஓடிப் போய் நின்னப்ப இதே போல கைக்குட்டை ஒண்ணு பறந்து வந்து என் மூஞ்சியிலே ஒட்டிக்கிச்சு. ஒரே வாசமா இருந்திச்சு. அது இது போலவே இருந்திச்சு. அதனால என்னை மறந்து இதை நானே வச்சுக்கிட்டேன். திருடுற எண்ணம் எதுவுமில்ல ஐயா'' என்று அழுது கொண்டே கூறினாள்.

"அம்மா! நீ சாதாரணப் பொண்ணில்லம்மா. இந்த கைக்குட்டையை முதன்முதல்ல தேவனாம்பட்டினத்தில அன்னையை கார்ல பார்த்தபோதுதான் கிடைக்கப்பெற்றேன். அவங்க கையிலேர்ந்து நழுவி விழுந்தது. அதை எடுத்துப் பத்திரமாய் வைத்திருந்து, அவர்களிடம் சொன்னபோது, "இது உனக்கில்லை. இதைத் தேடி ஒருத்தி வருவாள். வைத்திருந்து கொடுக்க வேண்டும்'' என்றார்.

எப்படி அன்னையே அந்த பக்தரை நான் கண்டுபிடிப்பது? என்று தயங்கியபடி கேட்டேன்.

"நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பாதுகாப்பது மட்டும் உன் வேலை. தருணம் வரும்போது நானே சேர்த்துவிடுவேன் என்றார்''.

மீண்டும் குழந்தை உள்ளே வந்தது. அவள் கையிலிருந்த கைக்குட்டையைக் காட்டி, "இது ஒனக்குத்தான். நீயே வெச்சுக்கோ'' என்று சிரித்தது.

(நான் என்னை மறந்துவிட்டேன். இனி கதை தொடர்வது எப்படி?)

முற்றும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன்னை தவறாது வலியுறுத்தும் கடந்த காலக் கர்மத்தை 9 நிலைகளாகப் பிரிக்கலாம். கர்மத்தை எண்ணமாக மாற்றி மனம் இடைவிடாது திரும்ப திரும்ப நினைக்கும். உணர்ச்சி அதே கர்மத்தைத் துள்ளி எழும் வேகமாக்குகிறது. ஒவ்வொரு முறையும் அது தவறாது தலைதூக்கும். உடலில் இதே கர்மம் மௌனமாக மீண்டும் மீண்டும் செயல்படும் பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கத்திற்கு உணர்வோ, எண்ணமோ இல்லை.
 
இடைவிடாத எண்ணம், துள்ளி எழும் வேகம்,
 தன்னை வலியுறுத்தும் பழக்கம் ஆகியவை
கடந்த காலக் கர்மமாகும்.

******book | by Dr. Radut