Skip to Content

10. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

எப்பொழுதும் பிரம்மத்தின் முன்னிருப்பது பிரம்ம ஜீவியம் சாதாரணமாக வாழ்க்கை நடத்தும்பொழுது நம் வீட்டிற்கு வருபவர்கள் சாதாரணமாக இருப்பார்கள். நம்மைப் போலிருப்பார்கள். கவர்னர் நம் வீட்டிற்கு வருவதில்லை. கலெக்டரும் வருவதில்லை. நம் இலாக்கா தலைவரும் வருவதில்லை. அதுபோல் தெய்வ நம்பிக்கையுள்ளவர் வாழ்வில் ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுவதில்லை. பொதுவாக நம்பிக்கையுள்ளவர்க்குப் பிரார்த்தனை பலிக்கும். நம்பிக்கை அதிகமானால் ஆண்டவன் சோதனை செய்வார்.

அசரீரி மனதில் கேட்பது, மௌனம் வந்து போவது, தியானத்தில் தெய்வம் தரிசனம் தருவது போன்றவை ஆன்மீக அனுபவங்கள். அன்னை பக்தர்கட்கு இவை அரிபொருளாக நடப்பதுண்டு. சாதகர்கள் ஆசிரமத்தில் என்ன சாதித்தார்கள் என்று பகவானைக் கேட்டபொழுது சுமார் 6 அல்லது 7 பேர் பிரம்ம ஜீவியம் பெற்றுள்ளனர் என்றார். சம்பந்தப்பட்ட சாதகர்கட்கே அது தெரியுமா எனத் தெரியாது.

  • Divine Soul தெய்வீக ஆன்மா எப்பொழுதும் பிரம்மத்தின் முன்னிலையில் வாழ்கிறதுஎன்று The Life Divine கூறுகிறது.

சித்தி பெறுவது வேறு, பெற்றோம்என அறிவது வேறு. தான் அவதாரபுருஷன் என்பதை பகவான் நெடுநாள் அறியவில்லை. நமக்கு ஓர் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டால் அனுபவமுள்ளவர் எடுத்து விளக்கமாகச் சொன்னால்தான் நமக்கு அது புரியும். இதன் விளைவு இரண்டு.

  • ஆன்மீக அனுபவம் பெறுபவர்கள் அதை வெகுநாள் அறியார்.
  • அன்னையை வழிபடுவதால், புத்தகம் படிப்பதால் தமக்கு ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டனஎனத் தவறாக நினைத்துக் கொள்வது.

இரண்டும் தவிர்க்க முடியாதது. தியானத்தில் மெய்மறப்பது, உடல் மறைந்து போவது, சுற்றியுள்ள உலகம் அலையலையாக மாறுவது, மண்டையோடு பெரிதாக மாறுவதுபோன்ற உணர்வு, திடப் பொருள்கள் திடத்தன்மையை இழப்பது, அகண்ட வானம் நெஞ்சில் தெரிவது, க்ஷணம் அகண்ட மௌனம் மனத்தை ஆட்கொள்வது போன்றவை பிரம்ம ஜீவியம் நம்மைத் தீண்டுவதைக் காட்டும்.

  • சுவர் அலையலையாக மாறுவது தியானத்தின்பொழுது தோன்றுவதுண்டு.
  • நாம் பிரம்மத்தின் முன்னிருப்பதை அது காட்டும்.
  • பிரம்மம் நம்மைத் தீண்டுவதற்கு அது அடையாளம்.
  • அந்த அனுபவம் ஒருவருக்கு ஏற்பட்டால் பெரிய மனிதர் நம் வீடு தேடி வருவதுபோலாகும்.
  • அப்படிப்பட்டவருக்கு "யோகம் பலிக்கும்'' என்ற செய்தி வருகிறது.
  • பெரிய மனிதர் நம் வீடு தேடி வந்தால் "வாழ்க்கை உயரும் சந்தர்ப்பம் எழுகிறது'' என்பது செய்தி.
  • இந்த ஆன்மீக வாய்ப்பை அறிவது குறைவது, ஏற்பது இல்லை.

"பூரணயோக வாயில் திறப்பது”என்ற தலைப்பில் இது போன்ற 140 அறிகுறிகளை நான் சேகரம் செய்தேன். அவற்றுள் இது ஒன்று.

தொடரும்.....

*******



book | by Dr. Radut