Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

தவத்திரு கர்மயோகி அவர்களுக்கு அன்னை அன்பன் சந்தானம் எழுதிக்கொள்வது. வணக்கம். தங்களின் மலர்ந்த ஜீவியம், மற்றும் தங்களின் நூல்களைத் தொடர்ந்து படித்து வரும் பாக்யசாலிகளில் அடியேனும் ஒருவன். தங்களின் எழுத்துகள் மிகுந்த சக்தி வாய்ந்தவை. மனம் சற்றுத் தொய்வு அடையும் நேரத்தில் ஏதேனும் ஒரு பக்கம் எடுத்துப் படித்தால்கூட மனச்சோர்வு நீங்கி, உடலும் உள்ளமும் புத்துணர்வு பெற்றுத் தொடர்ந்து வேலைகளில் ஈடுபட முடிகிறது. தாங்கள் எழுதி வரும் சுத்தம், வருமானம் போன்ற கருத்துகள் நடைமுறையில் எளிதாகப் பயன்படுத்தக்கூடியவை. அன்னை அன்பர்களுக்கு இவை ஒரு கொடையாகும். உங்களின் கருத்துகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு நிறைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டுள்ளேன்.

நான் 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஒரு மத்திய அரசு ஊழியன். சமீபத்தில் எனக்கு ஓய்வு ஊதிய உயர்வு காரணமாக அரியர்ஸ் தொகை ரூ.73,030/- என்று கணக்கிடப்பட்டு முதல் தவணை ரூ.29,213/- வழங்கப்பட்டது. அடுத்த தவணை ரூ.43,817/- 2009இல் வழங்கப்பட உள்ளது. நான் 1963 முதல் 2004 வரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றதில்லை.

தங்களுக்கும், தங்களின் கருத்துகளை தியான மைய சொற்பொழிவுகளில் விளக்கமாக உதாரணங்களுடன் கூறும் சொற்பொழிவாளர்களுக்கும், மற்றும் அங்குள்ள சேவை அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்துக் கொள்கிறேன். வணக்கம்.

-- தங்களின் ஆசிகளை நாடும் அன்பன் சந்தானம், சென்னை.

******



book | by Dr. Radut