Skip to Content

06. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

ஏகன், அநேகன் இரண்டும் உள்ளது பிரம்மம் இருப்பதைக் காட்டுகிறது (P.126)

மௌனம் செயலுக்கு ஆதாரம் (P.29)

ஏகன் அநேகனுக்கு எதிரானது.
மௌனம் பேச்சுக்கும் செயலுக்கும் எதிரானது.
டம்ளர் தண்ணீரில் உள்ள பென்சில் உடைந்திருப்பது கண்ணுக்குத் தெரிவது.
பார்வைக்கு உடைந்ததாகத் தெரிந்தாலும், உண்மையில் பென்சில் உடையவில்லை என மனம் அறியும்.
மனமும், புலனும் எதிரெதிரானவற்றை அறிகின்றன.
மனமும் சத்தியஜீவனும் எதிரெதிரானவற்றை அறிய வல்லன.
சத்தியஜீவியம் காண்பது உண்மை, ஞானம்.
மனம் காண்பது தோற்றம், அறியாமை.
பூமி செயலற்றிருப்பது தோற்றம்.
பூமி சுழல்வதும், சூரியனைச் சுற்றி வருவதும் விஞ்ஞான உண்மைகள்.
பூமியோ, சூரியனோ சுழலவில்லை, சுற்றி வரவில்லை என்பது ஆன்மீக உண்மை.
ருசியான பண்டம் சாப்பிட இனிமையானது - புலனறிவு.
உடல் நலத்திற்கு அது குந்தகம் விளைவிக்குமா என்பது அறிவுக்குரியது - மனத்தின் அறிவு.
நாம் வேகமாக ஓடும் விளையாட்டு வீரரைப் பார்க்கிறோம்.
அது சலனம், தீவிரச் சலனம்.
அவர் ஓட ஆரம்பிக்குமுன் அவர் மூச்சு, இரத்த ஓட்டம், பார்வை, காது, கால் தரையில் தொடுவது, நாடி, சக்தி ஆகிய அனைத்தும் ஓட்டத்தை நடத்த க்ஷணத்தில் தயாராகின்றன.
தயாராக அவை மௌனமாகின்றன.
அது நிதானம் - ஓடி, ஓடி ஜெயிக்க, நிதானம், மௌனம் அவசியம்.
நிதானம் குறைவானவருக்கு படபடப்பு வந்துவிடும்.
படபடப்பு ஜெயிக்க அனுமதிக்காது.
நிதானம் முழுமையாவது மௌனம் குடிகொள்வது.
மௌனம் அதிகரித்தால் நன்றாக ஓடலாம்.
மௌனம் பூரணமானால், ஜெயிப்பது நிச்சயம்.
மௌனம் - உடலின் மௌனம், ஜீவனின் மௌனம் - ஓட்டத்திற்குரிய சக்தியை அளிக்கிறது.
ஏகன், அநேகன் என்பதும் பிரம்மம், சிருஷ்டி (Relative) என்பதும் மௌனம், செயல் என்பதும் ரூபம், அரூபம் என்பதும் காலம், காலத்தைக் கடந்தது என்பதும், ஐக்கியம், பல என்பதும், குணம், அனந்த குணம் என்பதும், சகுணம், நிர்க்குணம் என்பதும் ஜீவன், ஜீவியம் என்பதும் புருஷன், பிரகிருதி என்பதும் தத்துவரீதியாக ஒன்றே.

  • நாம் நினைக்கிறோம், அது அகம்.
    நாம் பேசுகிறோம், அது புறம்.
    அகமும் புறமும் காலமும் இடமும் ஒன்றே. 
  • புறம் மேல் மனத்திற்குரியது.
    அகம் மேல் மனத்திலும், ஆழ்ந்த காலத்து உள் மனத்திலும் உறையும்.
    புறத்திற்குரியது சலனம்.
    அகத்திற்குரியது மௌனம்.
    நிதானம் வளர்ந்தால் சலனம் மௌனமாகும் - புறம் அகமாகும்.
    அந்நிலையில் நாம் முழுவதும் மேல்மனத்தினின்று உள்மனம் சென்றடைவோம்.
    உள்மனம் முழுவதும் மௌனத்திற்குரியது.
    மௌனத்தின் பின்னுள்ள மௌனம் உள்மனத்திலில்லை.

    மேல்மனம் உள்மனமும் ஒன்றாகும் நிலை சலனம் மௌனமாகும் நிலை.
    இம்மாற்றம் ஜீவியத்தில் வந்த நிலை இது.
    இதே மாற்றம் பொருளில்வர முடியும்.
    பொருளில் சலனம் மௌனமானால், மேல்மனம் உள்மனமாவது போல் அவை இணைந்த நிலை அடிமனமாகும்.
    அடிமனம் - பிரபஞ்சமனம் - உயர்ந்து மேல்மனத்தில் வந்து செயல்படும் நிலையது.
    • இதுவரை கூறியவை சலனம் மௌனமாகி மேல்மனம் உள்மனமாகவும், அடிமனமாகவும் மாறுவது.
      இம்மாறுதலுக்கு அதே சமயம் வேறு ஒரு புறம் உண்டு.
      அது வேறு அம்சம்.
      சலனம் பிரகிருதிக்குரியது. மௌனம் புருஷனுக்குரியது.
      மௌனம் சலனத்துடன் இணைவது வளரும் புருஷனுக்கு - சைத்தியபுருஷனுக்கு - உரியது.
      சலனம் மௌனமாகும் கட்டங்கள் புருஷன், பிரகிருதி இணைவது.
      இணைவது பூர்த்தியானால், புருஷன் பரிணாம வளர்ச்சி பெறும்.
      அந்த சைத்தியபுருஷனுக்குரிய லோகம் அடிமனம்.
      சைத்தியபுருஷன் அடிமனத்தில் 3 கட்டங்களில் உறைகிறது.
      முதற் கட்டம் - மனத்திற்குரிய சைத்தியபுருஷன்.
      இரண்டாம் கட்டம் - உயிருக்குரிய சைத்தியபுருஷன்.
      மூன்றாம் கட்டம் - உடலுக்குரிய சைத்தியபுருஷன்.
      உடலுக்குரிய சைத்தியபுருஷனும் சத்தியஜீவனும் எதிரெதிரான பாதை வழி வந்து சந்திக்கின்றனர்.
      மனம், உயிர், உடல்என சைத்தியபுருஷன் வளரும் பொழுது முனிவர்மனம், ரிஷிமனம், யோகிமனம், தெய்வீகமனத்தின் வழியாக மேல்நோக்கி சைத்திய புருஷன் வளர்ந்து சத்தியஜீவியத்தை சத்தியஜீவனாக அடையும்பொழுது அங்கே உடலின் சைத்தியபுருஷன் அவனுக்காகக் காத்திருப்பது தெரியும். கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் வளர்ந்த சைத்தியபுருஷன் சத்திய ஜீவியத்தில் சத்தியஜீவனாகிறது.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இந்த தத்துவம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமானால்,
 
மனைவி கணவனை அதிகாரம் செய்யக்கூடாது.
மேலதிகாரியைத் தன் கைக்குள் வைக்க நினைக்கக் கூடாது.
 
உரிமையில்லாததை மனம் விழையக் கூடாது.
 
அடுத்தவர் கண்ணோட்டத்தில் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
தந்திர யுக்திகளைப் பயன்படுத்தக் கூடாது.
 
பிரச்சினையைப் பிறர் நோக்கில் காணவேண்டும்.
தந்திரம் தவிர்க்கப்பட வேண்டும்.

*******



book | by Dr. Radut