Skip to Content

10. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

"அன்னை இலக்கியம்"

மனிதனும் மிருகமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சியாமளா ராவ்

அன்னையைப் பார்த்தாள். வீழ்ந்து வணங்கி கேவிக் கேவி அழுதபடி..... "அன்னையே.... அன்னையே..... இந்த நேரத்திற்கு என்னை அனுப்பியது நீதானே.... நீயேதான்.... இல்லைன்னா.... இந்தப் பெண்ணும், அந்தக் குழந்தையும்?..... அம்மா..... எதுவும் தெரியாத என்னை இயக்கியதும் நீதானே..... எப்படி? தாயையும், சேயையும் தனித்தனியாகப் பிரிக்க என்னால் முடிந்தது என்பது சந்தேகமேயில்லாமல் உன்னால் தான். என்னுள் புகுந்து நீயேதானேம்மா இயக்கியிருக்கிறாய்.... அன்னையே.... சரணம்.... சரணம் அம்மா.... அம்மா.....''.

அப்படியேயிருந்தவளின் கண்களின் பிரவாகம் அடங்கவில்லை. இத்தனை நேரம் இருந்த தைர்யம்....! இப்போது அன்னையினால் தான் அந்த தைர்யமும் ஏற்பட்டது என்கிற எண்ணத்தில் உறுதியாயிற்று.

முதல் குழந்தையும் எழவில்லை. இந்தக் குழந்தையும் அழவில்லை, தூங்கியது. பார்வதியும் அசதியில் தூங்கினாள்.

இது நிஜமா? நான் எப்படி இந்த நேரத்தில் வந்தேன்? அதுவும் உன்னையும் என்னோடு அழைத்துக் கொண்டு....

அயர்ந்து, அசந்து அப்படியே சுவரில் சாய்ந்தாள் மாமி. அறையைச் சுற்றிப் பார்த்தாள். தன்னையும் பார்த்துக் கொண்டாள். "அம்மாடி....'' பெருமூச்சு எழுந்தது. இத்தனை நேரம் இருந்த ஒரு சக்தி, அவள் தன்னை உணர்ந்து பிரமித்தபோது.... உதடுகள் நடுங்கின.... கண்கள் துளிர்த்தன.... சரீரமே அதிர்ந்து கொண்டிருந்தது. மீண்டும், மீண்டும் பிரமித்து ஒருவாறு அடங்கினாள் என்றால், அதற்குக் காரணம் அவளால் மனதுள் மௌனமாய் சுழன்று கொண்டிருந்த "அன்னையே சரணம்” என்னும் உயர்ந்த மந்திரமே அன்றி, வேறெது?

எழுந்தவள் அங்கிருந்த அழுக்குத் துணிகளை அள்ளி வெளியே கிணற்றடியில் போட்டாள். எல்லாம் சுத்தம் செய்து, ஓரளவிற்கு வீட்டை பளிச்சென்று பார்க்கும்படிச் செய்தாள்.

அப்போதுதான் ராமனாதன் தள்ளாடியபடி வந்தான்.

அவனைப் பார்த்தவுடனேயே மாமிக்கு அஸ்தியில் நடுக்கம் ஏற்பட, சட்டென "என்னுடன் அன்னையிருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்?” என்கிற முதிர்வான எண்ணம் ஏற்பட தைர்யமாக நின்றாள்.

"வாப்பா ராமனாதா... இந்தா சர்க்கரை. வாயில போட்டுக்கோ.... என்ன புரியலையா.... உனக்கு ரெண்டாவதும் பிள்ளையா பொறந்து இருக்குப்பா..... என்ன அழகுங்கறே.... பெரிசும் சமத்தாயின்னும் தூங்கறது, பாரேன்.... வா.... வந்து பாரு....''

தள்ளாடியவன் இப்போது... இன்னொரு பிள்ளை பிறந்து இருக்கிறான் என்றதும் குபீரென்ற சந்தோஷம் ஏற்பட.... ஓடினான் இங்குமங்குமாய். ஏற்றிய "ஸ்வரம்” எல்லாம் சட்டென்று வடிந்தது போலானது. மனதுக்குள் அந்த தடுமாற்றத்திலும் ஒரு சிறு பொறி புறப்பட்டு தீட்சண்யமாகியது.

"எங்கே மாமி என் பிள்ளை.... பார்க்கணுமே.... கையில எடுத்துக்கலாமா.... கொஞ்சலாமா? எப்டி ஆணா பொறந்துருக்கு பாருங்கோ.... ம்....'' கர்வத்துடன் அவன் பேசிய பேச்சில், எந்த அசம்பாவிதமோ, திரிசமனோ தோன்றவில்லை மாமிக்கு.

தன் கரங்களில் எடுத்து அவனுக்குக் காண்பித்தாள்.

"இதோ பாருப்பா.... திடீர்னு வலி எடுத்ததால எனக்குத் தெரிஞ்சதைச் செஞ்சேன். ஆனா.... ஒரு வண்டி ஏற்பாடு பண்ணு. கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில காமிச்சுட்டு வரலாம் ரெண்டு பேரையும். என்னமோ ஊசில்லாம் போடுவாளோ என்னமோ.... போட்டுண்டு வா. நான் சமைச்சுத் தரேன் ஒரு பத்து நாளைக்கு. பெரிசை நான் பார்த்துக்கறேன். அவளை மட்டும் பார்த்துக்கோ. இனிமே இந்த பிள்ளை பொறந்த நேரம் நன்னா நீயும் சம்பாதிச்சுண்டு அழகா... நன்னா குழந்தைகளோட சந்தோஷமாயிரு.... சரியா....''

இப்போது சிணுங்கிய பெரிய குழந்தையை மாமி எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்தாள். அன்னை, ஸ்ரீ அரவிந்தரின்முன் அந்தக் குழந்தையோடு உட்கார்ந்தாள். அதற்குமுன் குழந்தையின் கையில் பால் நிரம்பிய பாட்டிலையும் கொடுத்துவிட்டாள்.

"உன்னை நம்பித்தான் அந்தப் பொண்ணுக்கு செஞ்சேன். தப்பு, தப்பு... நீதான் எனக்குள்ள பூந்துண்டு என்னை இயக்கினாய்னு தெரியும். இனிமேலும் அந்தப் பெண் பார்வதிக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு. ஆமா... நீதான் நல்லது செய்யணும். உன்னாலதான் முடியும். அன்னையே சரணம்.... சரணமம்மா....''

திடீரென மனதுள் ஒரு கலக்கம்.

ஐயோ, அந்தப் பொண்ணைக் குடிகாரனோட அனுப்பிவிட்டோமே என ஆதங்கம்.

அன்னையிடம் வணங்கி வேண்டினாள். பார்வதிக்கு அவள் கணவனால் எந்தவிதமான கஷ்டங்களும் வரக்கூடாதுஎன மனமாற வேண்டினாள்.

ஆனாலும் ஏனோ மனது உளப்பறித்தது. அந்த மனதின் வாயை மூடவே முடியவில்லை. காரணம் தெரியவில்லை. பதறித்தான் போனாள்.

"அன்னையே, நான் செய்யும் இந்தத் தவற்றை மன்னித்துவிடு. நீ இருக்கும்போது நான் மனசை இப்படி அலையவிடக்கூடாது. மன்னித்துவிடும்மா.

மறுபடியும் ராமனாதன் பேசிய பேச்சுக்களையும், அவன் முகபாவங்களையும் மனதுள் ரீவைண்ட் செய்து பார்த்தாள். மறுபடி, மறுபடி யோசித்ததில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்கிற எண்ணம் மனதில் புரண்டது. அதை மாமியால் தடுக்கவும் முடியவில்லை, மனதை அடக்கவும் முடியவில்லை. கண்கள் தளும்பின. அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் எதிரில் அமர்ந்து தியானித்தாள்.

திடீரென யாரோ உசுப்பிவிட்டதுபோல் எழுந்தவள், புத்தக அலமாரியில் வைத்திருந்த அன்னையின் புத்தகங்களில் ஒன்றை அவள் கை உருவியது. கையிலெடுத்த புத்தகம் "அருளமுதம்''.

கண்களில் ஒற்றிக் கொண்டு புத்தகத்தைத் திறந்தாள்.

ஏழாவது கட்டுரையின் பக்கம்தான் திறந்தது. தலைப்பு "நல்லது மட்டுமே நடக்கும்''.

அவ்வளவே, ஆனந்தத்துடன் தைரியமும் மட்டுமன்று, கண்களின் பாஷ்பமும் பொங்கிப் பொங்கி வந்தது.

"அன்னையின் கருணை” யாருக்குத்தான் திகட்டும்? அந்தக் கருணையை நாம் உணர, உணர, உணர்ந்து அனுபவிக்க, அனுபவிக்க, நம்முள் ஒரு புளகாங்கிதமும், தெளிவும், ஒன்றின்பின் ஒன்றாய் எத்தனை, எத்தனை அனுபவங்களை நமக்கு உணரச் செய்கிறது என்பது அதை அறிந்தவர்க்கே தெரியக்கூடிய, அறியக்கூடிய அசாதாரணம்.

ஆம், எந்த ஓர் இக்கட்டான சூழ்நிலையிலும் நம் ஆர்ப்பரிக்கும் மனதை "நல்லதே நடக்கும்", "நல்லது மட்டுமே நடக்கும்" என்கிற இந்த வார்த்தைகளை மட்டுமே நம்முள் சுழலவிட்டோமானால், ஆர்ப்பரிக்கும், கொந்தளிக்கும், தடம் புரண்டு ஓட நினைக்கும் மனது, அந்த வார்த்தைகளை உள்வாங்கி, உள்வாங்கி, அதை நம் சரீரம் பூராவுமே ஓடவிட்டு, நம்மை எவ்வாறு அலைகளில்லாத நீர்த்தடாகம் போல சலனமற்று இருக்கச் செய்கிறதுஎன்பதை நம்மால்.... ஆமாம் நம்மால் மட்டுமே உணர முடியும்என்பது நிஜம்.

மாமி தன் கண்களில் பொங்கியதை அடக்கினாள். தெளிவானாள். "இனி எனக்கு எந்தவிதமான மனக்கிலேசமுமில்லை. பார்வதியுடன் நீயிருக்கிறாய். நீயிருக்கும்போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லாம் நல்லபடியாய் நடக்கும். அன்னையே சரணம்... சரணமம்மா..."

அருளமுதத்தின் அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தாள். படிக்கப்படிக்க மனம் ததும்பியது. தைர்யமும் பிறந்தது.

வாசலில் வந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உட்கார்ந்தாள்.

******

ஆஸ்பத்திரியில் களைத்துப் போய் அங்கிருந்த பெஞ்சில் உட்கார முடியாமல் சரிந்து படுத்த பார்வதியையே பார்த்தான் ராமனாதன்.

தன் கரத்தில் ஏந்திய குழந்தையையும் பார்த்தான். சட்டென அவன் மனதில் உதித்த ஓர் எண்ணத்தின் பிரதிபலிப்பு, அவனுடைய கண்களைப் பெரியதாக விகசிக்க வைத்தது.

"ம்.... பயலே.... நீ அதிர்ஷ்டக்காரந்தாண்டா.... உனக்குப் பணக்காராத்து பந்தம் வரப் போறதே. நீ பொறந்துதாண்டா இந்த அப்பனைக் கோடீஸ்வரனாக்கப்போறே. அந்த தேஜஸு இப்பவே உன் முகத்துல தெரியறதே... ம்.... அம்மா முனகறா.... இப்ப ஒண்ணும் சொல்லப்படாது. அப்புறமா பெரிய பிரளயம்னா வந்துடும். சோத்துக்கு இல்லைன்னாலும்.... வீம்புக்குக் குறைச்சல் இல்லே... ம்...'' ஒரு அகங்காரச் சிரிப்புத் தோன்றியது அவனிடம்.

டாக்டர் வரும் சத்தம் கேட்டு சட்டெனக் கண் திறந்தாள் பார்வதி. "ரெண்டு நாள் ஆஸ்பத்திரியிலயிருந்துடு. அப்ப உன்னையும், குழந்தையையும் முறைப்படி எல்லாம் செக்கப் செஞ்சு அனுப்பிடுவோம். வீட்டுல பிரசவமாச்சேன்னு பயப்படாதேம்மா.... எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பார். சந்தோஷமாயிரு. குட்டிப்பயல் நன்னா, அழகாயிருக்கான், பார்த்தியோ....'' கூறியபடி குனிந்த டாக்டரின் கழுத்திருந்த செயின் வெளியே வந்து ஆடியபோது, அதைத் தற்செயலாகப் பார்த்தபோது, ஸ்ரீ அன்னையின் டாலர் சிரித்த முகத்தோடு செயினோடு அசைந்தாட, "அம்மா...'' என்று தன் கழுத்தைத் தூக்கி, அந்த டாலரைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் பார்வதி. முகம் சிவந்து, கண்கள் தளும்பின. ஆனால் உதட்டில் சிரிப்பு அப்படியேயிருந்தது.

"ஏம்மா.... நீயும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரைத்தான் வணங்கறியாம்மா. அப்ப, உனக்கு எந்தக் கெடுதலோ, கஷ்டமோ வரவே வாராது. அப்படி வந்தாலும், அன்னை அந்தக் கஷ்டத்தை அறவே விலக்கிடுவார்மா. கவலையேபடாதே, சரியா. நீ நார்மலாத்தான்மா இருக்கே. இன்னிக்கு ஒரு நாள் வேணும்னா இரு... சரியா....''

மீண்டும் டாக்டரின் கரங்களைப் பிடித்தவள் ஏதோ சொல்ல விரும்புவதை உணர்ந்து, "என்னம்மா.... ஏதாவது சொல்லணுமா?''

"ஆமாம் டாக்டர்.... வீட்டுல இன்னொரு குழந்தையும் இருக்கான். அதனால.... இன்னிக்கே.... டிஸ்...சார்ஜ்... பண்ணிடுங்களேன். எனக்கு உடனே அவனைப் பார்க்கணும். அவனும் ரெண்டுங்கெட்டான். ரெண்டு வயசுகூட நிறையலே.... அதனால.... அதனால.... ப்ளீஸ்'' இரு கரம் கூப்பி, தளும்பும் கண்களுடன் கூற.... டாக்டர் அனுமதித்ததும் மீண்டும் வீட்டிற்கே வந்தாள், குழந்தையுடன் பார்வதி.

ராமனாதனின் மனம் போட்ட கணக்கு தவறியே போனது.

அன்னையைச் சரியாக, முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிடினும், அவள் மனதில் அன்னையைத் தவிர வேறெதுவுமே குடிகொள்ளவில்லை.

கருணை நிறைந்த, பரிவான கண்களின் தீர்க்கமும், முகம் முழுவதும் மண்டிக்கொண்டிருக்கும் புன்னகையும், பிரகாசமும், அத்துடன் சாந்தம் நிறைந்த மலர்ந்த முகமும் அவள் மனதில் அச்சடித்ததுபோல் பதிவாகியே போனது.

அவளையுமறியாமல் அவள் அன்னையை நினைத்தபோதெல்லாம் அந்தக் கருணைக்கண்கள் அவளையே பார்த்ததுபோன்ற தோற்றம் அவளைப் புளகிக்க மட்டுமின்றி, அவள் மனதில் ஒரு தைர்யத்தையும், உறுதியையும் அளவில்லாமல் தந்தது. அதனால் தன் உடல்நிலைகூட மிகத்தெம்பானதாக உணர்ந்தாள்.

மனதில் தெம்பிருந்தாலும் உடல் சோர்வு மிகவும் இருந்தது. வீட்டினுள் நுழைந்ததுமே மெதுவாக அடி எடுத்து வைத்தவள், தன்னறையில் அழகாக சுத்தமுடன் படுக்கை விரித்திருப்பதைப் பார்த்து நெஞ்சு அடைத்தது, மாமியை நினைத்து. கண்கள் தளும்ப முகத்தை நிமிர்த்தியவளின் கண்களில் சுவரிருந்ததைச் சரியாகப் பார்க்க முடியாததால், அந்தத் தளும்பும் கண்ணீரை அழுந்தத் துடைத்தபடி ஏறிட்டவளின் மனதுள் எப்பேர்ப்பட்ட தைர்யம் நிரம்பியது, சரசரவென மழை பெய்வதுபோல. பலகீனமான நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்தாள். மாமி அங்கு அன்னையை நிறுத்தியிருந்தது, இதயத்துள் ஒரு நிம்மதி, இதம். "நானிருக்கேனோ... எப்போதும் உனக்குத் துணையாகயிருப்பேனோ... பயப்படாதே பார்வதி...” என்று சொல்வது போலிருக்க, அவள் மனதிலிருந்த அத்தனைப் பயங்களும் துடைத்துவிட்டதைப் போன்று ஈரமற்று, கனமற்று, நிம்மதி ஒன்று அவளுள் சுழன்று அவளைத் தெம்பாக்கியது.

******

மாமி அவளிடம் பத்தியத்திற்கான சாப்பாட்டைத் தந்தாள்.

கண்கள் தளும்ப, "மாமி, நீங்க எங்காத்துலேயும் அன்னையை உக்கார வச்சுட்டீங்களே. வீட்டுல நுழைந்ததுமே அந்த அம்மாவின் கண்கள் என்னையே பார்த்தபடியிருந்தன. எத்தனை ஆறுதலாயிருந்தது தெரியுமா, மாமி. எனக்குள்ளே இப்ப பயம்கறது அத்துப்போச்சு மாமி. ஆமாம், எனக்கு அன்னையே என் அம்மாவா வந்து, எங்காத்துல உக்காந்துண்டு, எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கிறப்ப.... எனக்கு தைர்யம் வந்துடுத்து. எது ஆனாலும் சமாளிக்கிற சக்தி நிச்சியமா "அம்மா” தருவா. அது தவிர அந்தந்த நேரத்துல எங்காத்துக்காரர் போடற நாடகத்தையும் புரியவச்சு, என்னை அதுக்கேத்தாப்பல நடக்கவும், பேசவும் வைப்பார். ஆமாம் மாமி, என்னைப் பெத்த தாய்கிட்ட இந்த நிலையில போக விருப்பமில்லே. எப்படியாவது நானும் இந்த ரெண்டு குழந்தைகளோட என்னோட ஆத்துக்காரரையும் திருந்த வச்சு, ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்புறமாத்தான் நானும் கௌரவமா என் பொறந்தாத்துக்குப் போவேன். அதுக்கு "அம்மா” கண்டிப்பா எனக்கு வழிகாட்டுவா. அந்த நம்பிக்கை எனக்கு முழுசாயிருக்கு மாமி. ஆமாம் மாமி... இன்னொரு விஷயம் தெரியுமா? ஆஸ்பத்திரியில என்னை பரிசோதிச்ச டாக்டரும் அன்னையோட பக்தைதானாம். எங்காத்துல எப்ப நீங்க இந்த அம்மாவை அழைச்சுண்டு வந்தேளோ, அப்போலருந்தே எங்காத்தைப் பார்த்துக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு புரிஞ்சு போச்சு மாமி. என்னைப் பெத்தவளும், வளர்த்தவளும் ஒரு அம்மாதான். ஆனா, அந்த அம்மா என்னோட கல்யாணத்தை முடிச்ச பிறகு அடுத்தப் பெண்ணோட கல்யாணத்துக்கு வரன் தேடற வேலையை ஆரம்பிச்சுட்டா. அவளால வேறென்ன செய்ய முடியும்? செட்டு, கட்டாயிருந்து அஞ்சு பெண்களைக் கரையேத்தணுமே, பாவம்... மாமி. ஆனா, இப்ப பாருங்கோ, என்னோட மன உளைச்சல்களையும், என் கஷ்டங்களையும் தீர்க்கறதுக்கும், என் ஆத்துக்காரரைத் திருத்தறதுக்கும், "அன்னை”ங்கற இந்த அம்மாவை விட்டா எனக்கு யாரிருக்கா மாமி? விடமாட்டேன். இந்த அம்மாவின் சரணங்கள்தான் என் மனசுல கடிகாரம் மாதிரி ஓடிண்டேயிருக்கும். கடிகாரத்துக்குக்கூட அப்பப்ப சாவி குடுக்கணும். ஆனா, என்னோட இதயம் நிக்கிறவரை இந்த "அன்னையே சரணம்' ஓடிண்டேதாம்மாயிருக்கும். இனிமே எனக்குப் பயமேயில்லே. எல்லாத்தையும் எதிர்கொள்ள தயாராயிட்டேன் மாமி. எனக்கு நல்ல வழியையும், அன்னையையும் காமிச்ச உங்களுக்கு.... உங்களுக்கு....'' மேலே வார்த்தைகள் வாராமல், கண்கள் மல்க திணறினாள் பார்வதி.

"பாரு... வேண்டாம்மா. பச்சை உடம்பு, அழப்படாது. அப்புறம் தலை வச்சு, நீர்க்கோத்துனுடும். "அன்னை'யைப் புரிஞ்சுண்டு, உன் அம்மாவாவே எப்ப நீ நினைச்சுக்க ஆரம்பிச்சுட்டியோ.... அப்பவே உன் கஷ்டங்களை நீ மறந்துடு. எல்லாம் அவா ரெண்டு பேரும் பார்த்துப்பா. அந்தத் தைர்யம், உறுதி உங்கிட்டே இருந்தா போதும்டி பாரு. சரி, சரி, சீக்கிரமா பத்தியச் சாப்பாட்டைச் சாப்டு. இன்னொண்ணு, ஒரு பதினைஞ்சு, இருபது நாளுக்கு உனக்குப் பத்திய சமையலும், குழந்தைக்கும் உன் ஆத்துக்காரருக்கும் எங்காத்துலேயே சாப்பாடும் தந்துடறேன்... ம்.... வாய் திறக்கப்படாது. நான் சொன்னா சொன்னதுதான். எனக்கு மட்டும் உன்னை விட்டா யாருடியிருக்கா....'' சொன்னவளின் விழிகளில் தளும்பன் கசிவு.

நெகிழ்ந்து போன பார்வதி, "சரி, மாமி... நான் நீங்க சொல்றபடித்தான் நடந்துப்பேன் மாமி....''

பத்தியச் சாப்பாடு ஹாட்பேக்கில் சுடச்சுடயிருக்க, பசித்த வயிற்றுக்கு இதமாகவும், பதமாகவுமிருக்க, வயிறு நிறைய சாப்பிட்டாள் பார்வதி.

******

நாட்கள் நகர்ந்ததில் குழந்தை பிறந்து ஒரு மாதமும் முடிந்தது. மாமி ஏதோ ஒன்று சால்ஜாப்பு கூறியபடி தினமும் அவளுக்குக் கறிகாய்களை சமைத்துத் தருவதை விடவேயில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழந்தைக்கும் அவளுக்கும் எண்ணைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதை தவறவிடவில்லை.

மூத்தவன் குமரனை மாமி தன்னுடனேயே இரவும், பகலும் வைத்துக் கொண்டாள். இரண்டு குழந்தைகளுமே அழகாய், நன்றாய் இருக்க, சின்னவன் சங்கரும் இந்த ஒரு மாதத்தில் நன்கு தேறி, முகம் பார்த்து, சிரிக்கத் தொடங்கியிருந்தான்.

குமரன் பக்கத்து வீட்டிலிருக்க, மதியமானதால் குழந்தையைத் தூளியில் தூங்க வைத்துத் தானும் படுத்துக் கொண்டாள் பார்வதி.

திடீரென மெல்லிய குரல் பேச்சுக் குரல் கேட்க, சட்டென எழலாம் என நினைத்தவள், அப்படியே ஆடாமல், அசையாமல் படுத்து, காதை மட்டும் நன்றாகத் தீட்டிக் கொண்டாள்.

"இங்கே வாங்கோ.... ஸ்.... அவ தூங்கறா. குழந்தையைப் பாருங்கோ... கோகுல கிருஷ்ணன்தான். ம்.... பிடிச்சிருக்கா... எப்டி.... எப்டியிருக்கான் என் பிள்ளை....."

"என்னய்யா... உம் பிள்ளைங்கற.... ஆனா.... இவ்வளவு அம்சமா இருக்கானே.... நல்லவனாயிருப்பானா.... இல்லே.... உன்னைப் போல ஆயிடுவானா....."

"இல்லே.... அவனோட அம்மா நல்ல அழகு, சமத்து. அதான் இவனும் அழகாயிருக்கான். நிச்சியமா உங்க வளர்ப்புல அவன் நல்ல கெட்டிக்காரனாயிருப்பான். வளர்ப்புலதானே எல்லாமேயிருக்கு. உங்க வசதிக்கு இந்தக் குழந்தை..... உங்காத்துல அமோகமா வளருவான் பாருங்கோ....."

காதில் விழுந்ததைக் கேட்டு அதிர்ந்து போனாள் பார்வதி.

தொடரும்.....

*****

ஜீவிய மணி
படிப்பைவிட பட்டம் பெரியது.



book | by Dr. Radut