Skip to Content

07. நெஞ்சில் உறையும் தெய்வம் - ஆத்மா

நெஞ்சில் உறையும் தெய்வம் - ஆத்மா

என். அசோகன்

நாடு பெற்ற விடுதலையை நாமும் பெறவேண்டும். நாம் விடுதலை பெறுவதென்றால், முடியாதது முடிய வேண்டும். அழும் குழந்தையைச் சிரிக்க வைப்பதும், காலம் கடந்தபின் கண்ணிறைந்த கணவன் அமைவதும், சரியும் மார்க்கெட்டில் கம்பெனியை லாபகரம் ஆக்குவதும், வறட்சியான பருவத்தில் பயிரிடுவதும், எல்லையில் நின்று மிரட்டும் எதிரியை எதிர்கொள்வதும் முடியாதவையாக மாறும் நேரம், நெஞ்சைத் தொட்டு ஆத்மாவை நினைவுகூர்ந்தால், அவை முடியும் என மாறும். விடுதலை பெற்ற இந்தியா விருதாகப் பெற்று வரும் அனுபவம் இது.

மனிதன் என்பவன் மனத்தால் வாழ்பவன்.
மனத்தின் திறமைக்கு எல்லையுண்டு. ஆத்மா வரையரையற்றது.

காலையில் குழந்தைகள் பள்ளிக்குப் புறப்படும் நேரம், கணவர் பஸ்ஸைப் பிடிக்க வேண்டும் எனில் தினமும் வீடு அமர்க்களப்படுகிறது. இது இப்படித்தான் என மனம் ஏற்கிறது. டென்ஷன் நிலைபெறுகிறது. பெரிய படிப்பு, சிபாரிசில்லாமல் நல்ல வேலை கிடைக்கவில்லை. சொற்ப சம்பளத்தைக் கர்மம் என நாம் ஏற்கிறோம். இன்று வீடு கட்டாதார் இல்லை. குடும்பம் பெரியதானதால், நமக்கு அந்த பாக்கியமில்லை என முயற்சியைக் கைவிடுகிறோம். பாஷன் மாறியதால் மார்க்கெட்டே மறையும்போது "நமக்கு மட்டுமா?” என மனத்தை அமைதி செய்து கொள்கிறோம். சுதந்திரம் வரும்முன் இதுபோன்ற தோல்விகள் 100க்கு 95. நாடு அன்னியனிடமிருந்து விடுதலை பெற்று சுமார் 20 அல்லது 25 ஆண்டுகள் நிலைமை மாறவில்லை. 40 வயதுக்குட்பட்டவர் இன்று சுதந்திர மண்ணில் பிறந்தவர்.

நாடு பெற்ற விடுதலை, உடல் பெற்ற விடுதலை. அடுத்து உயிரும், மனமும், ஆத்மாவும் விடுதலை பெறும் நேரம் 1970, 1980க்குப் பின் வந்துவிட்டது. அன்று நடக்காதவை, இன்று ஓரளவு நடக்கின்றன.

  "நாட்டை யார் ஆண்டால் என்ன? ஆத்மாவை யார் அடிமைப்படுத்த முடியும்? ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் அவசியமில்லை. ஆத்ம சுதந்திரம் அனைத்தையும் சாதிக்கும்'' என்ற பொருள்பட மகாத்மா காந்திக்கு டால்ஸ்டாய் எழுதினார். பிறந்த மண் விடுதலை பெறாமல் ஆத்மா சுதந்திரம் பெற முடியாது என்பது ஆன்மீகச் சட்டம். நம் நாடு பெற்ற விடுதலை 45 நாடுகளையும் விடுவித்தது. நாடு ஆயுதம் தாங்கி விடுதலைப் போராட்டம் நடத்தவில்லை. ஆத்ம சக்தியான சத்தியாக்கிரகத்தால் விடுதலை பெற்றது. கடந்த 20, 30 ஆண்டுகளாக இங்குமங்குமாக மக்கள் தங்களையறியாமல் அன்று மகாத்மா காந்தி பயன்படுத்திய ஆயுதத்தை அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுத்துகின்றனர். அப்படி முயன்றால், முடியாததில்லை என்பது அனுபவம்.

சிறிய விஷயங்களிலிருந்து பெரிய கம்பெனி நிர்வாகம் வரை, தோல்வியின்றிச் செயல்படும் இச்சக்தியின் வெளிப்பாடுகளை எல்லாத் துறைகளிலும் விளக்கிக் கூறலாம்.

சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகட்குமுன்பு வடநாட்டில் 40 கோடி கம்பெனி ஒன்றை மூட முடிவு செய்தனர். 40 கோடி செலாவணியும் ரூ.2 கோடி லாபமும் உள்ள கம்பெனி அது. ஆத்ம சக்தி தவறாது என்ற அடிப்படையில் நிர்வாகத் துறை நிபுணர்கள் இக்கம்பெனி நிர்வாகத்தை அணுகி, "கம்பெனியை மூட வேண்டிய அவசியமில்லை. மேலும் லாபம் 4 கோடியாகும்'' என்றனர். "25 ஆண்டுகட்குமுன் டெக்னாலஜி மாறிய காலத்தில் சொற்ப விலைக்கு வந்ததால் அதை வாங்கினோம். இன்று எங்கள் சரக்கை உலகில் பயன்படுத்தும் கம்பெனியை விரல்விட்டு எண்ணலாம். மூடுவதே உசிதம்'' என்றனர். ஆயினும் நிபுணர்கள் சொல்லை ஏற்று, அவர்களை ரிப்போர்ட் தயார் செய்யச் சொன்னார்கள். 3 மாதத்தில் ரிப்போர்ட் 4 கோடி லாபமுள்ள இடங்களைக் காட்டியது. நிபுணர்கள் மூவர். அவர்களில் ஒருவர், "நம் ரிப்போர்ட்படி லாபம் 4 கோடியாகும். மானேஜ்மென்ட் இதன் சூட்சுமத்தை ஏற்றால், லாபம் 6 கோடியாகும். இரகசியத்தை ஏற்றால் 12 கோடியாகும்" என்றார். ரிப்போர்ட் எழுத வேண்டியவர் தம்மால் அப்படி எழுத முடியாது என்றார். முடிவாக, 4, 6, 12 கோடி லாபத்தை குறிப்பிட்டு ரிப்போர்ட் எழுதப்பட்டது.

நிர்வாகி, "வெளியிலிருந்து வந்த நீங்கள் 12 கோடி லாபத்தைக் கண்டுவிட்டீர்கள். நாங்கள் அதைக் கண்டுபிடிக்கிறோம்'' என்றார். இந்த ஆண்டு அந்தக் கம்பெனி 500 கோடி செலாவணியுடன் லாபகரமாயும் நடக்கிறது.

எப்படி ஆத்மாவை அன்றாட வாழ்வில் செயல்படச் செய்வது? அதற்குரியவை என்ன முறைகள்? அதைச் செய்தவர்கள் அனுபவங்களை விவரிக்க முடியுமா? என்பவை முக்கிய கேள்விகள். அத்தகைய அனுபவங்களை அதற்குரிய முறைகளுடன் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன் காரியம் - புத்தகம், கருத்து, திட்டம், etc. - நாடெங்கும் பரவ விரும்புபவர் "வாய்மொழி"யை நாட வேண்டும். அதை நல்ல முறையிலும் செய்யலாம்.

 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வக்கிரம், பொய் ஆகியவை மனித பாக்டீரியா. அவற்றை இரக்கமின்றி அழிப்பது சேவை. தங்களை அழித்துக் கொள்ள அவை உன்னை நாடுவதும் உண்டு. அவற்றை அழிப்பது வக்கிரத்திற்கும், பொய்மைக்கும் நாம் செய்யும் சேவையாகும்.
 
வக்கிரத்தை அழிப்பது அதற்குச் சேவை.

 

*****



book | by Dr. Radut