Skip to Content

02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

என். அசோகன்

  1. தம்பதியர் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும்பொழுது அது அளவுக்குட்பட்டு இருக்கவேண்டும். மனைவி குறையே சொல்லாமலிருந்தால் கணவன், மனைவியை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார். அதே சமயத்தில் அதிகமாக குறை கூறினாலும் கணவன், மனைவியிடமிருந்து விலக நேரிடும். ஆகவே பாராட்டு மற்றும் கண்டிப்பு இரண்டையும் அளவோடு வழங்கும்பொழுது உறவு சீராக போகும்.
  2. அழகுக்கும், குண விசேஷங்களுக்கும் நேரடி சம்பந்தம் இல்லைதான். அழகாக இருப்பதாலேயே ஒரு பெண்ணிற்கு ஆணவம் அதிகமாகி, நல்லபடியாக, கணவருடன் உறவாடாமல் போகலாம்.
  3. நிச்சயித்த திருமணங்கள் மற்றும் காதல் திருமணங்கள் இரண்டுமே நிறைவுகளும், குறைபாடுகளும் கொண்டுள்ளன. காதல் திருமணம் செய்து கொள்பவர்களாவது தங்கள் கணவர் அல்லது மனைவியுடைய குறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தேர்வு செய்பவர்களே அவர்கள் எனும்பொழுது, பொறுப்பும் அவர்களுடையதாகிறது.
  4. காதல் உறவுகள் காரணமாக அரசர்களிடையே பழங்காலத்தில் போரே மூண்டுள்ளது. ராமாயணத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நிகழ்ந்த காரணமே சீதையை ராவணன் கடத்தியதுதான். ஓர் ஆங்கில அரசர் ஒரு விதவையை மணப்பதற்காகத் தம்முடைய பதவியைத் துறந்தார். காதல் உணர்வுகள் மனிதனை பைத்தியம் ஆக்கும் என்று கவிஞர்கள் வர்ணித்திருப்பது ஒரு வகையில் உண்மையாகும்.
  5. இந்தியச் சமூகம் மறுமண விஷயத்தில் இரண்டு விதிகளைப் பின்பற்றுகிறது. ஆண்கள் மனைவிமார்களை இழந்தால், அவர்கள் மறுமணம் செய்துகொள்ள இந்தியச் சமூகம் அனுமதிக்கிறது. ஆனால் இளம் விதவைகளைக்கூட அனுமதிப்பதில்லை.   நெடுங்காலமாக இந்த பாரபட்சத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்டது இல்லை. ஆனால் இப்பொழுது பெண்கள் விஷயத்தில் சமூகம் சற்று தாராளமாக நடந்துகொள்கிறது. விதவைகளும், விவாகரத்து பெற்றவர்களும் இப்பொழுது மறுமணம் செய்துகொள்ள முன்வருகிறார்கள். பெண் உரிமை இயக்கங்கள் இந்த மாறுதலுக்குக் காரணமாக இருப்பதாகத் தெரிகிறது.
  6. கற்பு என்பது ஓர் உயர்ந்த விஷயமாகத் தெரியலாம். ஆனால் தனக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத்தான் தன்னுடைய சொத்தைக் கொடுப்பேன்என்று ஆண்கள் கேட்பதால்தான் பெண்கள் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
  7. உழைக்கும் வர்க்கத்தில் உள்ள ஆண்கள் மிகவும் physicalஆக இருப்பார்கள்என்பதால் மனைவிமார்களை அவர்கள் அடிப்பது என்பது மிகவும் சகஜம். கலாச்சாரம் உயரும்பொழுது அடி, உதைக்குப் பதிலாகத் திட்டு வருகிறது. மிகவும் பண்பானவர்கள் இந்தத் திட்டுவதைக்கூட நிறுத்தி மனைவியின் குறைபாடுகளைத் தங்கள் குறைபாடுகளாக ஏற்று, மௌனமாகிவிடுகின்றனர்.
  8. ஆண்கள்தான் முதல் பெண்களை நாடிப் போவார்கள். பின்புதான் பெண்களும் பதிலுக்கு response கொடுப்பார்கள்என்று உலகம் நம்புகிறது. ஆனால் இவ்விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தால் உண்மை வேறுஎன்று தெரிய வருகிறது. முதல் வலை விரிப்பதே பெண்கள்தான். வலையில் வீழ்வதே தெரியாது ஆண்கள் அகப்பட்டுக் கொண்டு, பின்னர் தாங்கள்தான் முதல் நடவடிக்கை எடுப்பதாக நினைக்கிறார்கள்.
  9. காதல் உறவுகள் அதில் ஈடுபடும் ஆண்களையும், பெண்களையும் அந்த நேரம் உற்சாகம் ஊட்டுகிறது என்பது உண்மை. ஆனால் திருமணம் எனும்பொழுது அதனோடு பொறுப்பு, பாரம் எல்லாம் வந்துவிடுகிறது. அதனால் முன்பிருந்த உற்சாகம் குன்றிவிடுகிறது.
  10. இந்தியச் சமூகம் இந்நாட்டுப் பெண்களுக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் உரிமையைத் தருவதில்லை. மேலை நாட்டுப் பெண்கள் இந்த உரிமையை எடுத்துக் கொண்டுள்ளார்கள். இங்கே நிறைய பேர் வேலை, உத்தியோகம் என்று அதிலேயே மூழ்கிவிடுவதால் திருமணத்தைப்பற்றி யோசிக்கக்கூட நேரம் இல்லாத நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இறுதியில் யோசிக்க அவகாசம் கிடைக்கும்பொழுது வயது தாண்டிவிடுவதால் திருமணமே தேவையும் இல்லைஎன்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார்கள். திருமணம், பிள்ளைப்பேறுஎன்ற பந்தங்களிலிருந்து விடுபட்டு ஆன்மீக முன்னேற்றத்தை நாடும் சுதந்திரத்தை இந்தியப் பெண்களுக்கு அன்னை அளிக்க விரும்பினார். அவர் வழங்கும் சுதந்திரத்தை ஏற்க பெண்கள் முன்வர வேண்டும்.
  11. துணிமணிகள், ஆபரணங்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் என்று இவற்றின் மேல் பெண்கள் கொண்டுள்ள மோகம் அவருடைய personality வளர்ச்சிக்குப் பெரிய தடையாக உள்ளது. இவற்றிலிருந்து அவர்கள் விடுபட்டார்கள் என்றால், பர்சனாலிட்டி வளர்ச்சிக்குண்டான உயர்ந்த வாய்ப்புகள் அவர்களுக்குத் தெரிய வரும்.
  12. அழகான நடிகைகள் தங்களுடைய உடல் அழகை ஒரு பணம் ஈட்டும் சாதனமாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள். எந்தத் திறமையையும் நாம் பணமாக்கலாம்என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது, பணம் சம்பாதிக்க அழகைப் பயன்படுத்துவதும் தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  13. தம்முடைய நிலைக்குக் கீழ் இறங்கித் திருமணம் செய்து கொள்பவர்கள் அந்தளவிற்குத் தம்முடைய சிறப்பை இழக்க நேரிடும். தம்முடைய நிலைக்குமேல் திருமணம் செய்து கொள்பவர்கள் அந்த அளவுக்குத் தம்முடைய அந்தஸ்தை உயர்த்திக்கொள்வார்கள். பொதுவாக நிலையை உயர்த்திக் கொள்வதில்தான் எல்லோரும் ஆர்வமாக உள்ளார்கள்.
  14. பொதுவாக, கணவன்மார்களுக்கு மனைவிமார்கள் காட்டும் மரியாதை என்பது அவர்கள்பெறும் வருமானத்தைப் பொருத்திருக்கிறது. நல்ல சம்பாத்தியம் இல்லாத கணவன்மார்களைக் கவனித்துப் பணிவிடைசெய்யும் மனைவிமார்களைக் காண்பது அரிது.
  15. கூட்டுக்குடும்பமாக இருப்பதற்குக் குடும்பப் பாசம் ஒரு காரணமாக இருக்கும். தனிக்குடித்தனம் போகும் அளவிற்கு வருமானம் இல்லாததும், திருமணமான மகன் பெற்றோர்களுடனேயே இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கும். நிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் கிராமிய வாழ்க்கையில் விவசாய வேலைக்கு நிறையபேர் தேவைப்படுவதால், கூட்டுக்குடும்பமாக இருந்தது உதவியாக இருந்தது. நகரங்களில் வீட்டு வசதி பற்றாக்குறை இருப்பதால், சிறுசிறு வீடுகளில் தனிக்குடித்தனம் நடத்துவதே பெரும்பான்மையாக இருக்கிறது.
  16. மாமியார், மருமகளுக்கு இடையே எழும் தகராறுக்குக் காரணம் தாயாருக்கு மகனாகவும், மனைவிக்குக் கணவனாகவும் இருக்கும் அந்த ஆண்மகன் யாருக்குச் சொந்தம்என்பதில் எழும் தகராறாகத் தெரிகிறது. தாய், பிள்ளை, கணவன், மனைவிஎன்ற இரு உறவுகள் வெவ்வேறு உறவுகள். இதில் போட்டி எழுவதற்கு அவசியம் இல்லை. இரண்டு தாயாருக்கிடையே போட்டி அல்லது இரண்டு மனைவிமார்களுக்கிடையே போட்டிஎன்றாலும் அர்த்தம் இருக்கிறது. தாயாருக்கும், மனைவிக்கும் எழும் போட்டியில் அர்த்தமேயில்லை. காரணமே இல்லாமல் இந்தப் போட்டி தொடர்வது புதிராக உள்ளது.
  17. மனைவிமார்களால் அவமானப்படுத்தப்படுகின்ற கணவன்மார்கள் வருமான விஷயத்தில் பின்தங்கிவிடுகிறார்கள். மனைவிமார்கள் தங்களுடைய செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும்வரை இப்படி பின்தங்கிய கணவன்மார்கள் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம்.
  18. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கின்ற ஆடவர்களும், வாழ்க்கையில் பெரிதாகச் சாதிக்க முடிவதில்லை. மாமனார் வீட்டில் இருப்பது அவருடைய முன்னேற்றத்தை ஏதோ ஒரு வகையில் தடுக்கிறது.
  19. பல ஆண்கள் தங்கள் மனைவிகளின் பெயரில் வீடு வாங்குகிறார்கள். இப்படிச் செய்வதில் ஆபத்தும் இருக்கிறது. மனைவி விலக நேரிட்டால், கணவன் வீட்டை இழக்க நேரிடும்.
  20. பொறுப்பற்ற மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால் மகன் திருந்திவிடுவான் என்று பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆனால் எல்லோர் விஷயத்திலும் இது உண்மையில்லை. பொறுப்பற்ற தன்மை ஓர் ஆணின் பர்சனாலிட்டியில் ஊறிப்போயிருந்தால், திருமணம் செய்துவைத்தாலும் அவன் திருந்தமாட்டான். ஒரு சில ஆண்கள்தான் பொறுப்பற்றவர்களாக இருந்து, திருமணத்திற்குப் பின் பொறுப்புள்ளவர்களாக மாறுகிறார்கள்.

தொடரும்.....

*****



book | by Dr. Radut