Skip to Content

அஜெண்டா

Vol III, P.49 It was the universal Mother who told Sri Aurobindo that India was free

இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது என பகவான் ஸ்ரீ அரவிந்தரிடம் லோகமாதா கூறினார்.

ஒரு பெரிய இடத்துப் பெண்ணைச் சாதாரண வரனுக்குக் கொடுப்பதானால் அவர்கள் அபிப்பிராயத்தை யார் மூலம் தெரிவித்தாலும் வரன் ஏற்றுக் கொள்வான். செய்தி பொதுவாக இரண்டாம் பேர்வழி மூலமாக வரும். சமயத்தில், டைப்பிஸ்ட், டிரைவர் மூலமாகக் கேள்விப்படுவார்கள். அன்னையின் அருள் மூலமாக அன்பர் பெறும் எந்தப் பெரிய காரியமும் அன்பர்க்குத் தெரிவிக்கப்படும் முறையே அருளுக்குரிய முறையாக இருக்கும்.

  • பாங்க் கடன் தர அபிப்பிராயப்படும் செய்தி பாங்க் சேர்மன் மூலமாக வரும்.
  • நாட்டின் தலைவர் அன்பரை நாடி வந்து வீட்டில் பார்ப்பார்.
  • கவர்னர் பார்க்க விரும்பினால் கூப்பிட்டு அனுப்புவதற்குப் பதிலாக அன்பரை வீடுதேடி வந்து சந்திப்பார்.

ஸ்ரீ அரவிந்தர் உலகுக்குக் கொண்டுவந்த அருள் "the greatest boon, from the Highest'' சிருஷ்டியின் உச்சகட்டத்திலுள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம்.

  • இன்றைய வாழ்வின் எந்த நிலையும் அருளின் சிறப்பைப் பெற முடியாது என்ற காரணத்தால், அருள் சிறப்பாகப் பலிக்க வாழ்வின் எல்லையைக் கடக்கும்.
  • அருள் பலிக்கும்பொழுது வாழ்வின் உச்சகட்டத்தில் பலிப்பதன் காரணம் அதுவே. (அருளின் சிறப்பு வாழ்வைக் கடக்கும். வெறும் அருள் உச்சத்தில் பலிக்கும்.  Super grace transcends present life. Grace reaches the top of life)

ஸ்ரீ அரவிந்தர் இந்தியச் சுதந்திரத்திற்காக யோகத்தை மேற்கொண்டபொழுது சுவாமி விவேகானந்தர் மூலம் ஆன்மீகச் சத்தியம் மோட்சமன்று, சத்தியஜீவியம் என அறிந்தார். உள்ளிருந்து எழுந்த குரல் "இந்தியச் சுதந்திரம் பூரணமாயிற்று. உனக்கு வேறு பணியுண்டு. புதுவைக்குப் போ'' என்று கூறிற்று. இது அச்சில் வெளிவந்துள்ளது. வேறு வகையாக, பகவான் இந்தியச் சுதந்திரத்தைப்பற்றி அறிந்தாரா என அச்சில் வெளிவந்த செய்தி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இந்தச் செய்தியை பகவானுக்குத் தெரிவித்த தெய்வம் லோகமாதா என்கிறார் அன்னை.

பார்வதி, லட்சுமி, அம்மன் போன்ற தெய்வங்களை நாம் ஆதிபராசக்தி என்கிறோம். எது ஆதி, எது சக்தி, பராசக்தி என்றால் எது என்பவை தத்துவமான கருத்துகள். குழந்தையை நாம் "ராஜா'' என்று பிரியமாக அழைப்பதைப்போல் நம் தெய்வத்தை நாம் முடிவானதாகக் கொள்கிறோம். பிரம்மம் சச்சிதானந்தமாகி, சத் மூன்று அம்சமாகப் பிரிவதில் பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் எழுகின்றன. ஞானத்திற்குரிய பிரம்மம், பக்திக்குரிய புருஷன், செயலுக்குரிய ஈஸ்வரன். ஈஸ்வரனுக் குரியவள் சக்தி. தெய்வங்கள் எல்லா நிலைகளுக்கும் உண்டு, என்பது போல் சக்தியும் எல்லா நிலைகளிலும் காணப்படும். முடிவான நிலையை சக்தி எனவும், அதனினும் உயர்ந்த நிலையை பராசக்தி எனவும், அதன் ஆதியை ஆதிபராசக்தி எனவும் தத்துவம் கூறுகிறது. அரசியல் தலைவரின் தகுதிக்கேற்ப அவரைக் கைது செய்யும் போலீஸ் அதிகாரியின் நிலையிருக்கும். அதிகாரியின் அந்தஸ்தைப் பொருத்து அழைப்பு கொண்டு வருபவரின் நிலை அமையும்.

ஸ்ரீ அரவிந்தரிடம் அவர் விழையும் செய்தியை லோகமாதாவே நேரிடையாகக் கூறுகிறார்.

 

                                                               ********



book | by Dr. Radut