Skip to Content

சிறு குறிப்புகள்

ஸ்ரீ அரவிந்தர் உறையுமிடம்

ஒரு சாதகியைப் பார்த்துப் பேசும்பொழுது, "நேற்றிரவு நான் சூட்சும உலகில் ஸ்ரீ அரவிந்தர் உறையுமிடத்திற்குப் போனபொழுது உன்னை அங்குக் கண்டேன். நீ மறந்துவிட்டாய்'' என்கிறார் அன்னை.

ஆசிரமம் ஆரம்பித்த நாட்களில் 15, 20 பேரிருந்தனர். புதியதாக வருபவர்கள் "ஆசிரமம்'' என்றால் ஆசனம், பிராணாயாமம், தியானம், பூஜை போன்றவற்றை எதிர்பார்ப்பார்கள். அவையெல்லாம் இங்கில்லை எனப் பதில் வரும். பிறகு என்ன இருக்கிறது? என்று கவனித்தால் மாலையில் கால்பந்து விளையாடப்போகிறார்கள். பகலில் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. சமயத்தில் கேளிக்கை, கூச்சல் அதிகமாக இருப்பதுண்டு. ஆசிரமத்தில் என்னதான் செய்கிறீர்கள் என்ற கேள்வி முக்கியமாக எழும். ஸ்ரீ அரவிந்தர் எவரையும் எதையும் கண்டித்துச் சொல்வதில்லை என்பதால், எவரும் எதையும் செய்வதில்லை என்பது புதியதாக வந்தவர்கட்கு சில நாட்களில் தெரியும். முதன்மையான சிஷ்யரைக் கவனித்தவர் ஸ்ரீ அரவிந்தரிடம் போய் "முதன்மையானவர் யோகம் செய்வதில்லை என்று எல்லோரும் கூறுகிறார்களே'' எனக் கேட்டார். "அவரே யோகம் செய்யவில்லை என்றால், பிறகு யார்தான் செய்கிறார்கள்?'' எனப் பதில் ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து கேள்வியாக வந்தது.

அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் ஏற்று அவர்களுடன் இருப்பதால் அவர்கள் செய்யும் யோகப் பலன் சிஷ்யர்களை அறியாமல் சிஷ்யர்கட்கு வந்து சேருகிறது என்று அன்னை கூறுகிறார்.

1910இல் ஸ்ரீ அரவிந்தர் வந்தார். 1926இல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகுதான் அன்னை சட்டதிட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தினார். அதுவரை முன் சொன்னபடிதான் இருந்தது. சாதகர்கள் நிலை அது. பக்தர்கள் நிலை என்ன?

  1. பக்தர்கள் தங்கள் ஆன்ம விழிப்புக்கேற்ப பலன் பெறுகிறார்கள்.
  2. Subconscious தன்னையறியாமல் பெறுவதை, பக்தர்கள் அறிவதில்லை.
  3. பிரார்த்தனை பலிப்பது மட்டுமே பக்தர்கள் கண்ணில் படும்.
  4. அன்னை தம் எல்லா ஆன்மச் சித்திகளையும் சாதகர்கட்கும், பக்தர்கட்கும் கொடுத்திருக்கிறார்கள்.
  5. சில கனவில் தெரியும்.
  6. அனைவரும் காண்பது சந்தோஷம். சந்தோஷம் என்பது முடிவான ஆன்மசித்தி.
  7. ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கேட்காமல் பெறுவது.
  8. மனம் விழித்து பிறவியிலுள்ள புத்திசாலித்தனம் வளர்கிறது.
  9. முகம் பொலிவு பெறுகிறது.
  10. சூட்சும உலகில் அன்னையுடன் பக்தர்கள் உறவாடுகிறார்கள்.

வாழ்க்கைப் பலன் மட்டுமே பக்தர்கள் கண்ணில் படும். ஆன்மிகப் பலன் சூட்சும லோகத்தைச் சேர்ந்தது என்பதால், அது பக்தர்கள், சாதகர்கள் கண்ணிலோ, மனதிலோ, நினைவிலோ படுவதில்லை.

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வில் ஆனந்தம் பெற நல்லதும் கெட்டதும் தேவை. இரண்டும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தும். மனிதன் முழு ஆனந்தம் பெற அவன் இரு பக்கங்களையும் அனுபவிக்க வேண்டும்.



book | by Dr. Radut