Skip to Content

மழை

கர்மயோகி

அன்னை மழையை அருள் என்கிறார். சூட்சுமத்தில் அருள் ஸ்தூலத்தில் மழையாகிறது. மழை பெய்ய வருண ஜபம் செய்வதுண்டு. அதை முறையாகச் செய்தால் தவறாமல் மழை பெய்யும். கற்புக்கரசிக்கு மனம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டை ஆசையின் விகாரங்கள் தொடா. ஆசை உணர்ச்சியாலானது. வாழ்வில் காற்று, வெளி, மழை ஆகியவை (vital) உணர்ச்சிக்குரியவை. ஆசையை அழித்த கற்புக்கரசிக்கு உலகில் உணர்ச்சிக்குரியவை கட்டுப்படும். எனவே அவள்  'பெய்' என்றால் மழை பெய்யும். பக்தர்கள் மழை வேண்டுமென்றால் மழையை அழைத்தால் வரும் என்கிறார் அன்னை. தியானத்திலமர்ந்து, "மழை, மழை, மழை, மழை'' என்றழைத்தால் மழை வரும் என்கிறார். தண்ணீர்ப் பஞ்சமுள்ள நாளில் வெளியில் போய் உள்ளே வந்த தம்பதி தண்ணீரில்லாததால், அன்னைக்குப் பிரார்த்தனை செய்தார்கள். ஒரு மணி நேரத்தில் பெருமழை பெய்தது. தேவையான தண்ணீரைப் பிடித்தனர் என ஒரு பெண்மணி எனக்கு எழுதியிருந்தார்.

அன்னை பக்தர் விவசாயியானால், அவர் நிலத்தில் உரிய காரியங்களைச் செய்தால் தண்ணீர் வேண்டும் என்ற நாளில் பிரார்த்தனையின்றி மழை பெய்யும். பிரார்த்தனையை மேற்கொண்டால் நிச்சயமாக மழை பெய்யும். நிற்க வேண்டும் என்ற அளவுக்கும் பெய்யும்.

தம் 15 ஏக்கர் நிலத்தில் ஒரு முறை நீர் பாய்ச்சி முடித்தவுடன் மழை பெய்வதை பக்தர் கண்டார். ஏன் நீர் பாய்ச்சிய பின் மழை பெய்கிறது?முன்னமே பெய்யக் கூடாதா என நினைத்தார். நிலம் வறண்ட பின் நிர்ப்பந்தத்தால் நீர் பாய்ச்சுகிறோம் என்று நினைத்தார். தம் கடமையை வற்புறுத்தலால் முடிக்கிறோம். கடமை முடிந்தவுடன் மழை பெய்கிறது என்று புரிந்து கொண்டார். அடுத்த ஆண்டு மனதை மாற்றிக்கொண்டு ஜனவரியில் நிலம் வறண்டு போகுமுன் கால்வாய், பாத்தி போட்டு நீர் பாய்ச்ச ஆயத்தமானார். முதல் நாளே பெருமழை பெய்தது. பாய்ச்சும் நீரைவிட மழைநீர் வளமானது. நிலம் ஆழமாக ஈரமாகி அதிக நாள் ஈரம் காயாமலிருக்கிறது என்பதால் இடைவெளி அதிகமாக விட்டு நீர் பாய்ச்சலாம். அடுத்த பாய்ச்சலுக்கு உரிய காலத்திற்கு முன் தயாரானார். மீண்டும் மழை பெய்தது. ஜனவரி முதல் ஜுன் வரை வெயிற்காலத்தில் 24 முறை தண்ணீர் பாய்ச்சுபவர் அந்த ஆண்டு ஒரே ஒருமுறைதான் தண்ணீர் பாய்ச்சினார்.

தண்ணீர் உணர்வைக் குறிக்கும். உணர்வு நெகிழ்ந்துள்ள இடத்தில் தண்ணீர்ப் பஞ்சமிருக்காது. வறண்ட ஊர்களில் மனம் வறட்சியாய் இருக்கும். மனம் உணர்ச்சியால் நனைந்தால், நிலம் மழையால் நனையும். தண்ணீர்ப் பஞ்சம் வரப்போகிறது என்ற பொழுது அன்பர்கள் கூடிப் பிரார்த்தனை செய்தனர். அந்த ஊரில் அதன்பின் தொடர்ந்து 4 வருஷம் நீர்ப்பஞ்சம் விலகியிருந்தது. பிறகு பக்தர்கள் நீர்ப் பிரச்சனையை மறந்தனர். மீண்டும் பஞ்சம் தலை தூக்கியது. நம்பிக்கையில்லாத பக்தருடன் அளவளாவினால் நீருக்குப் பஞ்சம் வருவதைக் காணலாம்.

1914 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அன்னை முதன்  முதலாகப் புதுவை வந்து தாம் தியானத்தில் கண்ட "கிருஷ்ணா'' வைக் கண்டு கொஞ்ச காலம் தங்கியிருந்து பிரான்சுக்குத் திரும்பினார். மீண்டும் 1920 இல் யுத்தம் முடிந்தவுடன் நிரந்தரமாகப் புதுவைக்கு வந்து பகவானுடன் தங்கிவிட்டார்.

"நான் புதுவைக்கு வந்த வருஷத்தில்தான் அளவுகடந்த மழை பெய்தது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை அது என்றனர்'' என்று அன்னை கூறுகிறார். அன்னையே அருள். அருளே மனித உருவமாக வந்ததால் தெரிவிக்க மழை வருகிறது. 

அன்னைக்குச் சமர்ப்பணமாக விவசாயம் தொடங்கிய பக்தர் தாம் நிலம் வாங்கிய ஆண்டு அபரிமிதமான பெருமழை பெய்ததைக் கண்டார். 30 வருஷமாக அதுபோன்ற அளவு மழையை அவர் காணவில்லை என நினைத்துக் கொண்டிருந்தபோது, "இந்த நுற்றாண்டில் இதுவரை மூன்று முறை பெருமழை பெய்துள்ளது. அதில் 1960 ஆம் ஆண்டும் ஒன்று'' என்று வானிலை அறிக்கையில் கண்டார்.

தண்ணீர் அபரிமிதமான சொந்த ஊரிலிருந்து தண்ணீரில்லாத ஊருக்குச் சர்க்கார் வேலையாகப் போனார். வீடு மாடியில். காலை 5 மணிக்குத் தண்ணீர் சிறிது நேரம் வரும். பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். சில நாள் கழித்து மோட்டார் ரிப்பேர், கீழே போய்த் தண்ணீர் பிடித்து மேலே எடுத்து வரவேண்டும். வீட்டுக்காரர் மோட்டாரை ரிப்பேர் செய்யப் பிடிவாதம் செய்கிறார். அவர் பட்டபாடு குடியிருப்பவர்களும், நீர்ப் பஞ்சமான ஊரிலுள்ளவர்களும் அறிவார்கள். அவர் ஆசிரமம் வந்தபொழுது தம் வேதனைகளைச் சித்தரித்துவிட்டு, அன்னை இதற்கு வழி சொல்லியிருக்கிறாரா எனக் கேட்டு அறிந்ததுடன் கீழ்வருவனவற்றைச் சேகரம் செய்து கொண்டு போனார்.

நீரை விரயமாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

மனம் நெகிழ்வாக இருக்க வேண்டும்.

வீட்டுக்காரர் ரிப்பேர் செய்யாவிட்டாலும் அவர் மீது கோபம் கூடாது.

தண்ணீர் விஷயத்தில் நம் கடமைகளைச் சரிவரத் தாமதமின்றிச் செய்ய வேண்டும்.

முடியுமானால், மோட்டாரை ரிப்பேர் செய்யும்படி வீட்டுக்காரரைக் கேட்கக்கூடாது.

எவர் மீது எரிச்சல் பட்டாலும், நம் வீட்டில் தண்ணீர் வாராது.

இந்தக் கருத்துகள் அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக் கொண்டார்.

வீட்டுக்காரரைக் கேட்காமலிருப்பதை அவரால் ஏற்க முடியவில்லை. திரும்ப ஊர் போய்ச் சேர்வதற்குள் மனதை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு கேட்பதில்லை என முடிவு செய்தார். வீட்டிற்குப் போனபொழுது, மோட்டார் ரிப்பேராகியிருந்தது. சற்று நேரம் தண்ணீர் அதிகம் வந்தது. பெரிய நிம்மதி. ஏற்கனவே மனம் அரைகுறையாக ஏற்ற கருத்துகளை இப்பொழுது முழுமையாக ஏற்றுக் கொண்டவுடன், பஞ்சமில்லை என்று சொல்லுமளவுக்குத் தண்ணீர் வந்தது. மனம் சந்தோஷப்பட்டு, பஞ்சம் நீங்கிய பின்னும் தம் மனதை ஆசிரமக் கருத்துகளால் நிரப்பினார். அடுத்த முறை ஆசிரமம் வர அவர் புறப்படும்பொழுது அந்த ஊரில் உள்ள ஒரே ஒரு வசதியான தண்ணீர்த் திட்டத்தோடு தம் வீட்டுப்பகுதியை இணைக்கப் போகிறார்கள் எனக் கேட்டுப் பரவசப்பட்டுவிட்டார்.

புதுவைக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஆட்கள் ஆசிரம டிபார்ட்மெண்ட் ஒன்றில் வேலை செய்கிறார்கள். அவர்கள் சரியாக வருவதில்லை. அவர்கட்கு ஆசிரமம் மீது கோபம், அன்னையைப் பிடிக்காது. நிற்காமல் வரச் சொன்னால், ஊரில் நீர்ப்பஞ்சமிருப்பதால் வர முடியவில்லை என்று கண்டு, அன்னையிடம் சொன்னார் தலைவர். அன்னை ஸ்ரீ அரவிந்தர் படத்தை எடுத்துக் கொண்டு ஊரை வலம் வரச் சொன்னார்கள். அடுத்த நாள் மழை அதிகமாகப் பெய்யத் தொடங்கிற்று. பல நாளாகியும் நிற்கவில்லை. மீண்டும் தலைவர் அன்னையிடம் மழை அதிகமாக இருப்பதாகச் சொன்னார்.அன்னை புன்னகையுடன் கேட்டுக் கொண்டார். மழை நின்றுவிட்டது.

ஒரு வருடம் தொடங்கியபொழுது பஞ்சாங்கப் பலன்களைப் பார்த்த பக்தர் ஒருவர் அந்த ஆண்டு நாடே தண்ணீருக்குக் கஷ்டப்படும் என்று அறிந்து, தம் விவசாயத்தைக் காப்பாற்ற முனைந்தபொழுது, பஞ்சாங்கம் சொல்வதையே வானிலை இலாக்காவும் சொல்லக் கேட்டுத் துணுக்குற்று, தினமும் 15 நிமிஷம் சீசன் முடியும்வரை 100 நாளைக்கு மழைக்காகப் பிரார்த்தனை செய்ய முடிவு செய்தார். பஞ்சாங்கமும், வானிலை இலாக்காவும் பொய்க்குமாறு அந்த ஆண்டு குறைவில்லாமல் மழை பெய்தது. அதிலிருந்து 10 வருடம் தொடர்ந்து மழை குறைவறப் பெய்தது. தொடர்ந்து அதுபோல் இருப்பது வழக்கத்திற்கு மாறானது. அவருடன் பிரார்த்தனையில் உட்கார்ந்தவர், 100 நாளில் பக்தர் பிரார்த்தனையை முடித்த பின்னும் பல நாள் பிரார்த்தித்தார். சீசன் முடிந்து 4 மாதம்வரை ஒவ்வொரு மாதமும் கணிசமான மழை பெய்தது. வானிலை இலாக்கா "இது வழக்கத்திற்கு மாறானது'' என்றது. இந்த உபரி மழை 3 வருடம் தொடர்ந்தது.

காவிரி நீருக்காக கர்நாடகாவும், தமிழ்நாடும் ஏன் சண்டை போட வேண்டும் என வருந்திய பம்பாய் தமிழ் அன்பர் ஒருவர் காவிரி பொங்க வேண்டுமென்று ஒரு வருஷம் பிரார்த்தனை செய்தார். அந்த ஆண்டு காவிரி பொங்கிற்று. சட்டப்படி கர்நாடகா கொடுக்க வேண்டிய நீர் தமிழ்நாட்டில் உபரியாகி உபயோகப்படுத்த முடியாமல் இறுதியில் கடலில் கலந்தது.

தான் வளர்க்கும் பூந்தோட்டத்திற்கு மழை வேண்டுமென ஒரு குழந்தை அன்னையைக் கேட்டபொழுது, அதிக மழை என் தோட்டத்தை நாசமாக்கும், தொடர்ந்து சிறு மழை நெடு நேரம் வேண்டும் என மாலை 3 மணிக்குப் பிரார்த்தனை செய்ததில் அன்றிரவு இரவு முழுவதும் தூறலாக இருந்ததைக் கண்டு குழந்தை வியப்படைந்தது.

தம்மூரில் நீர்ப் பஞ்சம் என ஆசிரமம் வந்து, பிரார்த்தித்து விட்டு வீட்டுக்குப் போய் மூன்று நாள் பிரார்த்தனையை மேற்கொள்ள முடிவு செய்த பக்தர், பஸ்ஸை விட்டு வீட்டுக்குப் போன அரை மணிக்கெல்லாம் பெருமழை பெய்தது.

 விவசாயத்திலிருந்த பக்தரான இளைஞருக்கு மழையில்லை எனில் பீதி வரும். ஆனால் பிரார்த்திக்கத் தோன்றாது. பலரும் நினைவுப்படுத்தப் பிரார்த்தனையை மேற்கொள்வார். மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் மழை பெய்யும். அடுத்த முறை மழையில்லை எனில் அன்னை நினைவு வாராது. புலம்புவார். மற்றவர் பிரார்த்திக்கச் சொன்னால் செய்வார். ஓரிரு நாள் கழித்து மழை வரும். 8, 10 முறை பார்த்தபின் ஆச்சரியப்பட்டு பிரார்த்தனை தவறுவதேயில்லை என்றார்.

தண்ணீர்ப் பஞ்சமேயறியாத கல்கத்தாவிலிருந்து சென்னை வந்தவர் பஞ்சத்தில் துவண்டு போனார். பம்ப்பில் தண்ணீர் செந்நிறமாக வருவதைக் கண்டு அஞ்சினார். அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு பிரார்த்தனையை மேற்கொள்ளப் பொறுமையின்றி அலறினார். தமக்கு உடனே வேறு வீடு கிடைத்ததையும், பஞ்சமேயில்லாமல் தண்ணீர் வந்ததையும் வியந்து எழுதி பிரசுரிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

1952-54 இல் இராஜாஜி சென்னை முதலமைச்சராக இருந்தபொழுது தண்ணீர் வறண்டுவிட்டது. எல்லாக் கோயில்களிலும், மாதா கோயில், மசூதிகளில் பிரார்த்தனை செய்யும்படிக் கேட்டுக் கொண்டார். எதிர்க் கட்சிகள் ஏளனம் செய்தன. பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது.

அமெரிக்காவில் மழையில்லை என பக்தர் பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனைக்கு அங்கு மழையில்லை. பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் புதுவையில் மழை பெய்தது. சுமார் 3, 4 மாதம்வரை அவர் பிரார்த்தனைக்கு அமெரிக்காவில் மழை பெய்யவில்லை. பிறகு பெய்தது. தொடர்ந்து பெய்தது. அபரிமிதமாகவும் பெய்தது.

சென்னையில் அதிகமான பக்தர்களிருப்பதால், அவர்கள் மழைக்கான முயற்சியை முழுமையாக மேற்கொண்டால், சென்னையில் நீர்ப்பஞ்சம் விலகும். உள்ளம் நெகிழ்ந்தால் மழை பெய்யும். வறண்ட உணர்ச்சியுடையவருடைய தொடர்பு மழைக்கான பிரார்த்தனை பலிக்க இடையூறாக இருக்கும்.

இக்கட்டுரை அன்னைக்கு ஒரு மௌனமான பிரார்த்தனை. இதை எழுதிய அடுத்த 3 நாளில் புதுவையில் 12 அங்குல மழை, தமிழ்நாடு முழுவதும் பெருமழை. மதுரையில் 10 அங்குல மழை. தாம்பரம் 9 அங்குல மழையைப் பெற்றது. மழை, நீர் வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தால் பூரணமாகப் பலிக்கும்

நன்றி: அமுதசுரபி

12 ஆண்டுகட்குப்பின்  இந்த ஆண்டு பருவ மழை தவறலாம் என்று வானிலை இலாக்கா கூறுகிறது. பக்தர்கள் தேசபக்தி மிஞ்சி நாடு மழை வளம் பெற பிரார்த்தனை செய்தால், பருவமழை தவறாது. பிரார்த்தனை பலிக்க உதவும் அம்சங்கள்;

  1. தேசபக்தி நெஞ்சை உணர்வால் நிரப்பவேண்டும்.
  2. நாட்டில் எங்கு நீர்ப்பஞ்சம் என்றாலும் நம்மூரில் வந்ததுபோல் மனம் துணுக்குற வேண்டும்.
  3. நம் வீட்டில் கடுமையான நீர்ப்பஞ்சம் உள்ள நேரம் நாம் தண்ணீரைப் பயன்படுத்துவதுபோல் வெகு கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
  4. நீர்வளத்தையும் அன்னையையும் மனவளம் இணைத்து மகிழவேண்டும்.
  5. பிரார்த்தனை நெஞ்சின் ஆழத்திலிருந்து எழவேண்டும்.

ஜீவிய மணி

அகந்தை புலன்களால் செயல்படுகிறது.



book | by Dr. Radut