Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - அப்படியானால் சட்டம் எது? நம் நிலைக்கு 10 மடங்கு, எந்தச் சட்டத்தை எப்படிப் பின்பற்றினால், அது கூடி வரும்.

அண்ணன் - முதல் காரியம் நமக்கு நல்லது வருகிறது என்றால், நம்மவர் அனைவரும் (4 பேரானாலும், 10 ரூபாயானாலும்) அதை உளமார வரவேற்க வேண்டும். அந்த முதல் நிபந்தனையே எங்கேயும் பூர்த்தியாவதில்லை.

தம்பி - அது தெரிந்த விஷயம், மனைவிக்கு T.V.இல் பேச்சுவந்தால் கணவனுக்குப் பொறுக்கவில்லை. கணவனுக்குத் தொழில் பெருகினால் மனைவி, "இவர் கையில் பணம் வரக் கூடாது. வந்தால் என்னைக் குப்பையில் போட்டுவிடுவார்''. அண்ணனுக்கு வந்தால் தம்பிக்கு ஆகாது, தம்பிக்கு வர அண்ணன் சம்மதிக்க மாட்டான். அதைக் கடந்துவந்தால்,

அண்ணன் - நமக்குத் தெரிந்தவர்களில், அதைக் கடந்தவருண்டா? ஒருவர் கூட இல்லையே.

தம்பி - இருக்கட்டும் சட்டம் வரை சொல்லுங்கள்.

அண்ணன் - வேலை செய்யச் சுணங்குபவர் விலக்கு, நன்றிகெட்டவர் விலக்கு. இப்படிப் பார்த்தால் யார் தேறுவார்? இது அன்னைமூலம் வருகிறது என்று தெரிய முடியாமல் தூரத்திலிருப்பவர் தம் திறமையால் வருகிறது என்று நினைத்தால், அவர்கட்குப் பலித்து விடுகிறது. 20 வருஷத்தில் தொழில் 1500 கோடியாயிற்றே அவருக்கு, தாம் செய்த சேவை தெரியுமா? 

தம்பி - அந்தச் சேவையை ரத்து செய்ய 4 வருஷமா முயல்கிறாரே!இவர் தூர இருப்பவர். திறமைசாலி. இவர் நிறுவனம் சேவை செய்வது. இவருக்குச் சரிவரத் தெரியாது. சேவை பலனைக் கொடுக்கிறது. இதெல்லாம் அன்னையால் நடக்கிறது என்று தெரிந்தால்தானே மனம் வேலை செய்யும். மனம் வேலை செய்தால் காரியம் கெடும்.

அண்ணன் - அப்படியொருவரிருந்தால், அவர் செய்யக்கூடிய முதற்காரியம் ஒன்று 100 ஆகப் பெருகுவதை, சோதனை செய்ய வேண்டும்.

தம்பி - சோதனையே வேண்டாம். நம்புகிறவர்க்கு சொல்லுங்கள்.

அண்ணன் - சொல்கிறேன். சோதனை என்றால் ஒரு முறை செய்யலாம். அத்தோடு நிறுத்த வேண்டும். செட்டியார் கம்பனியில் சேல்ஸ் ஆபீசரை எடுத்துக்கொள்வோம். இவர் கம்பெனி 4 கோடி கம்பனி. பல ஆபீசர்கள் இருக்கிறார்கள். அந்தச் சேலத்து ஆபீசர் மாதம் 20 லட்சம் விற்கிறார். செட்டியார் இவரிடம் சோதனை செய்தால், கம்பனி, 5 components, organisation, energy, results ஆகிய அனைத்தையும் புரிந்து கொண்டு மனதால் இந்த சக்தியை நம்ப வேண்டும். நமது விதிப்படி எல்லா முறைகளையும் சரிவரப் பின்பற்றினால் ஒன்று நூறாகும் என்பதை இவர் அறிவால் புரிந்து, உணர்வால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தம்பி - செட்டியாரிடம் சொன்னால் செய்வார்?

அண்ணன் - அதைச் செய்தவுடன் தெம்பு 100 மடங்காவது மனதில் தெரியும். அது பலிக்கும் என்ற அறிகுறி. அதைக் கண்டவுடன் செட்டியார் தனக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. இதைக் கெடுக்கும் காரியம் எதையும் நான் அனுமதிக்கமாட்டேன் என நாம் முன்பு பேசியது போல் முடிவு செய்ய வேண்டும். அதுவே முதல் நிபந்தனை. பணம் சம்பாதித்தவர்களுக்கு அதை விபரமாகச் சொல்லத் தேவையில்லை. அவர்கட்கெல்லாம் தெரியும். புதியவர்கட்குச் சுருக்கமாகச் சொன்னால் "இந்த அறிகுறியை மனதில் கண்ட பிறகு இதுவரை உங்களுக்கு ஒத்துவராது, ஆகாது என்ற மனிதர்களையும், செயல்களையும் அறவே புறக்கணிக்க வேண்டும்'' என்பது போதும். இந்த நிபந்தனையிலும் யாரும் கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். தூரத்து உறவு கருமாதிக்கு எப்படிப் போகாமலிருப்பது, எதிர்வீட்டு birthdayக்கு போனால் தப்பா? 10 முறை வாங்கிய கைமாத்தைத் தராத மனிதனுக்கு 11வது முறை எப்படியில்லை என்பது எனப் பல பெரிய, சிறிய தவறுகளைச் செய்து விடுவார்கள்.

தம்பி - செட்டியார் அதைச் செய்யவில்லை என்று கொள்வோம்.

அண்ணன் - 20 லட்சம் நபருக்கு விற்பவரை எடுத்து நம் consultancy முறைப்படி எல்லா புது முறைகளையும் perfect ஆக சொல்லித்தந்து அவர் 1 மாதத்தில் என்ன விற்கிறார் எனப் பார்ப்பதே சோதனை.

  • மனம் பெற்ற புதுத் தெம்பை விட்டுவிடக் கூடாது.
  • சேல்ஸ் டிரெயினிங்கில் குறை வைக்கக் கூடாது.
  • சூட்சுமத்தில் எதிரான காரியங்களை அனுமதிக்கக் கூடாது. மனதால் அவருடைய சேல்ஸை அன்னையால் நிரப்பியபடி இருக்க வேண்டும்.

தம்பி - பலன் தெரியுமா?

அண்ணன் - சுமார் 10 முதல் 100 மடங்குவரை சேல்ஸ் உயரும். இந்த ஒரு சேல்ஸ் ஆபீசர் 2 கோடி விற்பார், 20 கோடியும் விற்பார். சந்தேகமில்லை. 

தம்பி - இது பலமுறை நடந்திருக்கிறது. முதலாளிகள் அதைச் சௌகரியமாக எடுத்துக்கொள்கிறார்களே தவிர, அருள் எனப் புரிந்து கொள்வதில்லை.1 மாதத்திற்குப் பின் இது தொடராது. சோதனையால் சக்தி விளங்கியபின் முறையாக, கம்பனி முழுவதும் இம்முறையைப் பின்பற்ற முன்வரவேண்டும்.

அண்ணன் - குடும்பத்திற்கும் இதுவே சட்டம். எவரும் செய்வதில்லை. இந்த நிதானம் இருப்பதில்லை. ஏன் நாம் செய்யக் கூடாது?

தம்பி - நாம் செய்ய நம் வீடு அனுமதிக்காது.

அண்ணன் - வீட்டுக்கு வீடு அதுதான் நிலைமை. அதை மீறியும் ஒன்று செய்யலாம். வீட்டிலுள்ளவர் அறியாமல் ஒரு வேலை செய்தால் அது பலிக்கும்.

தம்பி - அந்தப் பலன் வீட்டுக்கு வராது.

அண்ணன் - வீட்டிற்கு நிச்சயம் வராது. சேவைக்கு உதவும். அது போன்ற மனிதரை இதுவரை நான் கண்டதில்லை. ஆனால் முயற்சியை இன்றுவரை கைவிடவில்லை. அன்னை தெளிவாகச் சொல்கிறார் "நல்ல மனம் வேண்டும்'' என்று. அது இருப்பது கடினம். அது உள்ளவர் அது இல்லாதவர் மீது பிரியம் கொண்டால் விஷயம் பலிக்காது. நல்ல மனமுள்ளவர் இது கெட்ட எண்ணமுள்ள வருக்காகப் பலிக்க ஆசைப்படுவதால் நடப்பதில்லை.

தொடரும்.

 

சாவித்திரி

எப்பொழுதும் "சாவித்திரி' யைப் பிரித்து கேள்வி கேட்கும் பழக்கமுள்ளவர்களுண்டு. பதில் sanction ஆக வந்தால் செய்பவர்கள் ஒரு சாரார். இல்லை என்று வந்தால் அந்த வேலையை மீண்டும் செய்பவரும் உண்டு. கேட்டால், 'சாவித்திரி' சொல்வதுபோல் நடக்க மனமில்லாதவர் கேட்காமலிருப்பது நல்லது. கல்லூரிப்படிப்பை விட்டு அறிவு வளர படிப்பதை நினைத்தவர் சாவித்திரியைக் கேட்டால், விட்டுவிடு என வந்தால் எத்தனை பேர் கல்லூரிப்படிப்பை விட முடியும்?

அப்படிப்பட்ட பக்தர் ஒருவருக்கு ஒரு சந்தோஷமான பிரச்சினை. மனம் சந்தோஷத்தால் பொங்கி வழிகிறது. ஆனால் அவர் மனதில் தோன்றும் காரியத்தை உலகம் ஏற்காது. பணக்காரக் கூட்டாளியை அவர் பக்தரில்லை என்பதால் விலக்கி, பணமில்லாத பக்தரைக் கூட்டாளியாகச் சேர்ப்பதை உலகம் ஏற்காது. சாவித்திரியைக் கேட்க நினைத்தார்.

...time divine, action wonderful

என்ற வரி புத்தகத்தைப் பிரித்தவுடன் கண்ணில் பட்டது. சாவித்திரி காட்டிய வழிப்படியே நடந்தார். பணமில்லாத கூட்டாளி ஜீவனில்லாமல் செயல்பட்டார். ஆனால் மனம் மேலும் துள்ளியது. மேலும் பலமுறை சாவித்திரியைக் கேட்க நினைத்தார். அப்படிச் செய்யக் கூடாது என நினைத்தார். எது சொன்னாலும், சாவித்திரி சொற்படி நடப்பதாக முடிவுசெய்தார். மீண்டும் கேட்டார். பணமில்லாக் கூட்டாளியின் பக்திக்கு நீ உரியவனில்லை. அவனுடைய பக்திக்குரிய அளவில் நீ உயர்ந்தால் உனக்காக ஓர் Marvel அற்புதம் காத்திருக்கிறது என்று சாவித்திரி வழி காட்டியது. மனம் ஏற்றுக் கொண்டது. உணர்வு ஏற்க மறுத்தது. கூட்டாளி "நீ குறையுடையவன்'' என்று வற்புறுத்திக் கூற ஆரம்பித்தான். இதுவே தான் தேடிய அருள் என அறிவு கூறினாலும் மனம் கசங்குகிறது.

அருளை விரும்பி ஏற்பது பக்தனுக்குரிய பாங்கு

 

வெயிலும் குளிரும்

நம்பிக்கை அறவேயில்லாத பலர் அன்னையுடன் நெருக்கமாக இருந்தனர். புதிய பக்தர்களுடன் அவர்கள் பேசி அவர்கள் அனுபவத்தைக் கேட்டால் நம்பிக்கையில்லாமல் சிரிப்பார்கள். அன்னையின் ஸ்பர்சம் நம்பிக்கையைப் பொருத்தது. நெருக்கத்தைப் பொருத்ததில்லை. படிக்காதவன் நூலகத்தில் வேலை செய்தால் அவனுக்குப் பலனில்லை.

ஐரோப்பாவில் குளிரான நாட்டிலிருந்து புதுவை வந்து அன்னைக்குரிய நிலத்தில் அக்னி நட்சத்திரத்தில் ஒருவர் வேலை செய்தார். வெயில் தாங்காமல் நாமெல்லாம் ஓடும்பொழுது, அவரை வெயில் பாதிக்கவில்லை. அவர் நண்பர் எப்படி இது என்று கேட்டார்."நான் காலையில் எழுந்தவுடன் இன்றைய வெயில் என்னைப் பாதிக்கக்கூடாது என்று அன்னையிடம் கூறினால் அன்று பொதுவாக வானம் மந்தாரமாகவும், குளிர் காற்று வீசியபடியுமிருக்கும்.கடும் வெயிலானாலும் நான் அதனால் பாதிக்கப்படுவதில்லை'' என்றார். உடனிருந்த சாதகர்கள் அவரை நம்பவில்லை.

மே மாதம் வயதான அமெரிக்கத் தம்பதிகள் புதுவை வருகிறார்கள். A/C ரூமில் தங்குகிறார்கள். தினமும் பல மணி வேலையுள்ள வீட்டில் fan கூட இல்லை. வீட்டில் அனைவரும் கவலைப்பட்டார்கள். முக்கியமானவர் மட்டும் கவலைப்படவில்லை. விமான நிலையத்திலிருந்து அவர்கள் புதுவை வரும்வரை வானம் இருண்டு, காற்று குளிர்ந்தது. வேலைக்காக வந்த வீட்டில் பல மணியிருந்த பொழுது எவரும் வெய்யிலை உணரவில்லை!

டிசம்பர் ஐரோப்பாவில் குளிர் மாதம். குளிர் அதிகம். வழக்கமாக அங்கேயிருப்பவர்கள் கோட்டு, ஓவர் கோட்டு, சுவெட்டர் என அணிந்து கொண்டனர். இந்தியப் பெண் அங்கிருக்கும்படி அமைந்தது. எல்லா warm clothes எடுத்துப்போயிருந்தாள். காலையில் அன்னையிடம் குளிரைப்பற்றிச் சொன்னாள். அவளுக்கு குளிர் தெரியவில்லை. கோட்டையும், ஓவர் கோட்டையும் போட்டுக்கொள்ளவில்லை. சுவெட்டர் மட்டும் போட்டுக்கொண்டாள். அங்குள்ளவர்களே ஆச்சரியப்பட்டார்கள்.

குளிரும் வெயிலும் அன்னைக்குக் கட்டுப்படும்.

நம் மனம் அன்னையை அதுபோல் ஏற்றுக்கொள்ளுமா?



book | by Dr. Radut