Skip to Content

"அன்னை இலக்கியம்'' நம்பிக்கை

S. அன்னபூரணி

அந்தக் கிராமத்தில் வாராந்திர சந்தையில் வியாபாரம் களை கட்டித் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.இங்கு அமைந்திருந்த கடைகளில் இருந்த விதம்விதமான விற்பனைப் பொருள்கள் எவரையும் கவர்ந்திழுக்கும்வண்ணம் இருந்தன.

"என்னங்க இந்த வேர்க்கடலை கூறு என்ன விலை?'' ஆழ்ந்த யோசனையால் இருந்த கந்தன் தன்னை இப்படி மரியாதையுடன் அழைப்பவர் யார் என்ற ஆச்சரியத்துடன் தலை நிமிர்ந்தான். நாலைந்து இளம் பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பது அவர்கள் தோற்றத்தைப் பார்த்தாலே தெரிந்தது. கண்ணிலே போட்டிருந்த கறுப்புக் கண்ணாடி, ஆளுக்கு ஒரு பையைத் தோளில் மாட்டியிருந்த விதம், அவர்கள் நுனிநாக்கு ஆங்கிலம் யாவும் கந்தனை, பிரமிக்க வைத்தன. இந்தக் கிராமத்துச் சந்தைக்கு இப்படிப்பட்டவர்கள் வந்து அவன் பார்த்ததேயில்லை. "என்ன பெரியவரே, நாங்க கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் நீங்க பாட்டுக்கு ஏதோ யோசனை பண்ணிக்கிட்டிருக்கீங்க.''

சட்டென்று தன் நிலைக்குத் திரும்பிய கந்தன், "என்னம்மா சொன்னீங்க? கடலையா வேணும்? ஒரு கூறு நாலணா''.

அவன் பதிலைக் கேட்டதும் பெண்கள் ஒருவரையொருவர் அர்த்தபாவத்துடன் பார்த்துக் கொண்டனர். ஒருவேளை அதிக விலை சொல்லி விட்டோமோ என்று குழம்பிப் போனான். "மொத்தம் நாலு கூறு இருக்கு, அத்தனையும் கொடுங்க. இந்தாங்க ஒரு ரூபாய். ரொம்ப மலிவா இருக்கே''.

கந்தனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஒரு கூறு கடலையை விற்க அவன் படும் பாடு அவனுக்குத்தான் தெரியும். "கொஞ்சம் விலையைக் கொறச்சுக்கோங்க. மூணு கூறு எட்டணாவுக்குக் கொடுங்க. இரண்டு கடலை கொசுறு போடுங்க. சொத்தை இருக்குமா?'' என்று கடலையை வாங்குவதற்குள் என்னவோ பெரிய வீட்டையே விலைக்கு வாங்குற மாதிரி படுத்தும்பாடு "என்ன பிழைப்பு இது'' என்று வெறுத்துப் போகும். இந்தக் குழந்தைகள் யார் பெத்த பிள்ளைங்களோ தெரியல்லை. இன்னிக்கு நான் யார் முகத்தில் முழிச்சேனோ தெரியல்லை! என்று மகிழ்வுடன் இருக்கிற கடலையை எல்லாம் கொட்டிக் கொடுத்துவிட்டு அவர்கள் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டான். "பெரியவரே எங்களுக்கு ஒரு உதவி செய்வீங்களா? நாங்க இங்கேயிருந்து ஸ்டேஷனுக்குப் போய் ரயிலைப் பிடிக்கணும். அதுக்கு வழி சொல்வீங்களா?''

"என்னம்மா இப்படிக் கேட்டுட்டிங்க? உங்க புண்ணியத்தில எங்க சரக்கெல்லாம் வித்துப் போச்சு. நானும் ரயிலைப் பிடிக்கத்தான் போயிட்டிருக்கேன்'' என்று தான் கொண்டு வந்திருந்த கூடையில், தன் கையிலிருந்த பழைய துண்டை உதறிப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

"விமலா டிரெய்ன்ல மெட்ராசுக்குப் போய் அங்கிருந்து பாண்டிக்குப் பஸ் பிடித்துப் போகணும். நீ எல்லாக் காணிக்கையையும் எடுத்துக் கொண்டாயா?''

"மறப்பேனா?'' வேர்க்கடலையைப் கொறித்தபடி அவர்கள் கலகலவென்று பேசியபடி வந்தது கந்தனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. நடு நடுவே அவனைப் பார்த்து "very tasty'' என்று சொல்லியபடி அவர்கள் வேர்க்கடலையைச் சுவைத்தனர்.

"என்னடி இது பெரியவருக்கு ஆங்கிலம் தெரியாது. நீ பாட்டுக்கு "tasty' என்று சொன்னால் எப்படி?'' என்று ஒரு பெண் கோபித்துக்கொண்டாள்.

"இல்லீங்க அவங்க பார்வையிலிருந்தே அவங்க என்ன சொல்றாங்கன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. கடலை ரொம்ப சுவையாயிருக்குன்னு சொல்றாங்க, சரியா?'' என்றான் கந்தன் வெகுளித்தனமான புன்னகையுடன். "அட எப்படி கரெக்டா சொல்லிட்டீங்க?'' 

"அம்மா, ஒருவரையொருவர் நல்லாப் புரிஞ்சுகிட்டா மொழியே தேவையில்லை. பார்வையிலேயே அவங்க என்ன சொல்றாங்கன்னு புரிஞ்சுக்கலாம்''. "He is quite an interesting personality'' என்று சொன்னாள் விமலா.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க. எனக்கு, சின்ன வயசிலிருந்தே படிக்கணும்னு ஆசை. ஆனா குடும்ப நிலைமை அதுக்கு இடம் கொடுக்கலை. அதனால உங்களை மாதிரி படிச்சவங்களைப் பார்த்தாலே ஒரு சந்தோஷம். ஆனா ஒண்ணுங்க, உங்களை மாதிரி இருக்கிறவங்க யாரும் இதுவரைக்கும் என்னை மதிச்சுப் பேசினதேயில்லை. நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் உங்களை ஒண்ணு கேக்கலாமா?'' "தாராளமாகக் கேளுங்களேன்''.

"நீங்க எல்லாரும் பாண்டிச்சேரி போகணும்னு பேசிக்கிட்டீங்களே. அங்கே என்ன விசேஷம்? யாரைப் பார்க்கப் போறீங்க?'' "எங்க அம்மாவைப் பார்க்கப் போகிறோம்''.

"உங்க அம்மாவையா? அப்படின்னா நீங்க எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைங்களா?'' "ஆனால் முக ஜாடை வித்தியாசமா இருக்கே'', வெகுளித்தனமான அந்தக் கேள்வி அந்தப் பெண்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.

"ஏங்க நான் ஏதாவது தவறாகக் கேட்டுவிட்டேனா?'' "அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு விதத்தில் நீங்க சொன்னது சரிதான். நான் விளக்கமாகச் சொல்கிறேன். நாங்க அஞ்சு பேரும் காட்பாடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் படிக்கிறோம். என் பெயர் தாரிணி, இவள் விமலா, இவள் சுகுணா, இவள் அபர்ணா, இவள் பத்மா. நாங்கள் விடுமுறைக்கு, பக்கத்துக் கிராமத்திலுள்ள சுகுணாவின் வீட்டுக்கு வந்தோம். அப்பொழுதுதான் இந்தச் சந்தையைப் பற்றிக் கேள்விப் பட்டோம். நாங்கள் இங்கிருந்து ரயிலைப் பிடித்து சென்னைக்குச் சென்று அங்கிருந்து பாண்டியில் உள்ள அம்மாவைப் பார்க்கப் போகி றோம். நாங்கள் அம்மா என்று சொன்னது எங்களைப் பெற்றெடுத்த தாயை இல்லை. இந்த உலகத்திலுள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் தாய் அந்தத் தெய்வீக அன்னை.'' 

"என்ன தெய்வத்தை நகமும் சதையுமாய் நேரிலேயே பார்க்க முடியுமா? உலகத்திலுள்ள எல்லோருக்கும் அவர் அம்மா என்றால் எனக்கும் அவர் அம்மாவா? என்னைப் போல, படிப்பறிவேயில்லாத ஏழையைக் கூடத் தன் மகனாக ஏற்றுக் கொள்வாங்களா அவங்க?''

கலகலவென்று சிரித்தாள் தாரிணி.'' என்ன இப்படிக் கேட்டுட்டீங்க பெரியவரே? எந்த அம்மாவாவது தன் குழந்தைக்கு படிப்பறிவு இல்லை, அழகு இல்லை, பணம் இல்லை என்ற காரணத்திற்காக "இது என் குழந்தை இல்லை'' என்று சொல்வாங்களா? பார்க்கப் போனால் எந்தக் குழந்தையிடம் குறை அதிகம் இருக்கிறதோ அந்தக் குழந்தையின் மேல்தான் அந்த தாயின் கவனம் அதிகமாயிருக்கும்.

"நிஜமாகவா சொல்றீங்க? அப்ப நானும் அவங்க குழந்தையா? நான் சின்ன வயசிலேயே அம்மாவை இழந்திட்டேன். தாயன்பு என்றாலே என்ன என்று எனக்குத் தெரியாது. எனக்கும் ஒரு அம்மா கிடைப்பாங்க என்று சொல்லும்போது எனக்கு எவ்வளவு பரவசமாயிருக்கு தெரியுமா? குழந்தைங்களா உங்களை இன்னிக்கு நான் சந்தித்தது கூட தெய்வ சங்கல்பம்தான். நீங்கள் பேசினதிலிருந்து எனக்கும் அந்த அம்மாவைப் பத்தித் தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அடடா, பேச்சு சுவாரஸ்யத்தில ஸ்டேஷன் வந்தது கூடத் தெரியல்லை''. அவர்கள் ஸ்டேஷனில் நுழையவும் ரயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. கிடுகிடுவென்று அவர்கள் கொண்டு வந்த "லக்கேஜ்'' எல்லாம் வண்டிக்குள் எடுத்து வைக்க உதவியவன் அவர்கள் முதலில் ஏற வழிவிட்டுக் கடைசியில் தானும் அதில் ஏறிக்கொண்டதும் வண்டி புறப்படத் தொடங்கவும் சரியாக இருந்தது. பெண்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர். கந்தன் அவர்கள் எல்லோரையும் பார்த்தபடி கூடையிலிருந்த துண்டை உதறிக் கீழே விரித்துவிட்டு அதன் மேல் அமர்ந்தான்.

"என்னங்க இது இங்கேதான் நிறைய இடம் இருக்கே. ஏன் நீங்க கீழே உட்கார்ந்திட்டீங்க? இங்கே வந்து உக்காருங்க'' என்று தாரிணி தன் அருகிலே இருந்த இடத்தைக் காட்டினாள். 

"அதெல்லாம் வேண்டாங்க. எனக்கு இப்படி ஒக்காந்து பழக்கமாயிடுச்சு. அதனாலே இதுதான் சௌகரியமா இருக்கு. நீங்க அம்மாவைப் பத்திப் பேசப் போறீங்க நான் கேட்கப் போகிறேன். உங்க எல்லோருடைய முகத்தையும் பார்க்க இந்த இடம்தான் வசதியா இருக்கும்.''

"சரி உங்க விருப்பப்படியே ஆகட்டும். அம்மாவைப் பற்றிப் பேசுவதென்றால் வருஷக்கணக்கில் பேசலாம். அதனால் நாங்க ஒன்று செய்கிறோம். நாங்க ஒவ்வொருவரும் எங்களுடைய அனுபவத்தில் ஆளுக்கு ஒன்றை எடுத்துச் சொல்கிறோம்.'' "சரி'' என்று உற்சாகத்துடன் தலையாட்டினான் கந்தன்.

தாரிணிதான் முதலில் ஆரம்பித்தாள். அம்மாவுக்குப் பூக்களைத் தட்டிலே வைத்து அடுக்குவோம். எங்கள் வீட்டில் நிறைய தட்டுகள் இருந்த போதிலும் எனக்கு அம்மாவுக்காக வெள்ளியில் ஒரு தட்டு வாங்க வேண்டும் என்று ஆசை. வீட்டில் மாறி மாறி ஏதோ செலவு வந்து கொண்டேயிருந்ததால் என் அப்பாவால் அதை வாங்கித் தர முடியவில்லை. வீட்டில் உறவினர் வந்து ஊருக்குப் போகும்பொழுது பரிசாகப் பணம் கொடுப்பது வழக்கம். அது தவிர "பாக்கெட் மணி'' என்று ஒரு சிறிய தொகையை அப்பா கொடுப்பார். சிக்கனமாக செலவு செய்து அதில் ஒரு பகுதியைச் சேர்த்து வைத்து கடைக்குச் சென்று அம்மாவுக்கென்று வெள்ளியில் பூப்போட்ட ஒரு தட்டு வாங்கி வந்தேன். மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அந்தத் தட்டை அம்மாவின் முன் வைத்து அம்மா உனக்குப் பெரிய தட்டு வாங்கலாம் எனக்கு சக்தி இல்லை. ஆகவே இந்தச் சிறிய காணிக்கையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று பிரார்த்தித்து அதில் பூ வைக்க ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் கழித்து என் பிறந்த நாள் வந்தது.அன்று காலை எழுந்து அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்.

"மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் தாரிணி'' என்று குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் என்னுடைய சித்தி நின்று கொண்டிருந்தார். "வாங்க சித்தி, எங்கே இவ்வளவு தூரம்?'' "சித்தப்பா ஆபீஸ் விஷயமாக வந்தார் நானும் அவருடன் வந்தேன்''.

"சித்தி என் பிறந்த நாளன்று நீங்கள் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நமஸ்கரிக்கிறேன். ஆசீர்வதியுங்கள்'' என்று நமஸ்காரம் செய்தேன். உடனே சித்தி என் கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்தார்.

"என்ன சித்தி இது?''

"திறந்துதான் பாரேன்! என்றார் புன்சிரிப்புடன்.''

திறந்தவுடனேயே எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஒரு பெரிய வெள்ளித்தட்டு. அதற்குள் என் அம்மா இடைமறித்து "என்ன கோகிலா எதற்கு இவ்வளவு விலை உயர்ந்த பரிசெல்லாம்?'' என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள். "அக்கா நீயும் உன் கணவரும் செலவாளிகள் மட்டுமல்ல, பரோபகாரியும் கூட. தாரிணிக்குப் பிறந்த நாள் பரிசாக எப்பொழுதும் புடவை எடுத்துத் தருவதுதான் வழக்கம். என்னமோ இந்தத் தடவை உருப்படியாக வெள்ளியில் ஏதாவது வாங்கித் தரலாமென்று தோன்றியது!'' என்று சொல்லித் திரும்பிய சித்தி என்னைப் பார்த்து திடுக்கிட்டார். என் கண்ணிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"என்னம்மா தாரிணி ஏன் அழுகிறாய்?'' அம்மாவும் சித்தியும் பயந்து போய் ஆளுக்கொரு கையைப் பிடித்துக் கொண்டு விட்டனர்.

"அழுகை இல்லை இது. ஆனந்தக் கண்ணீர். இந்தத் தட்டு எனக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை. அன்னைதான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு நிமிடம் இருங்கள் வருகிறேன்'' என்று சொல்லி நான் வாங்கிய சிறிய வெள்ளித்தட்டை சித்தியிடம் காட்டி "இது அன்னைக்கென்று நான் ஆசையுடன் வாங்கிய தட்டு. இந்த "டிசைனை'' பாருங்கள். oval shape-இல் சிறிய ரோஜாப்பூ போட்டது. நீங்கள் வாங்கிய தட்டு அது போலவே பத்து மடங்கு பெரிய அதே oval shape ரோஜா "டிசைன்'' போட்ட தட்டு.'' 

அம்மாவும் சித்தியும் ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார்கள். "ஆமாம் நீ சொல்வது சரிதான் தாரிணி நல்லவேளை ஞாபகப்படுத்தினாய். நான் இது வரை அன்னைக்கு எடுத்து வைத்த காணிக்கை ஆயிரம் ரூபாய்வரை சேர்ந்துவிட்டது. அதை நீ பாண்டி போகும்போது அன்னையிடம் சேர்ப்பித்து விடுகிறாயா?'' என்று சொல்லிக் கொடுத்தார்.''

தாரிணி சொல்லி முடித்தவுடன் கந்தன் கண்கள் பளபளக்க "ஆஹா அற்புதம்'' என்று சொல்லி "அடுத்து நீ சொல்லம்மா'' என்று விமலாவை நோக்கிக் கூறினான். இதற்கு நடுவில் ரயிலில் காபி காபி என்று விற்பனை செய்து கொண்டு வந்தான். ஒரு ரயில்வே சிப்பந்தி.

"பெரியவரே காப்பி சாப்பிடுகிறீர்களா?'' என்று கேட்டாள் அபர்ணா. கந்தன் அவசர, அவசரமாக மறுத்து! "அம்மா நான் சொல்கிறேனே என்று தவறாக எடுத்துக்காதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்திலே நான் இறங்கும் ஸ்டேஷன் வந்துவிடும்; நான் இறங்கிப் போயிடுவேன். அப்புறம் உங்களையெல்லாம் நான் பார்க்க முடியுமோ முடியாதோ?எனக்கு நீங்கள் சொல்லச் சொல்ல பாண்டி அம்மாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் அதிகமாகிக்கிட்டே வருது. இருக்கிற கொஞ்ச நேரத்தை காப்பி குடித்து வீணாக்க வேண்டாம்''.

விமலா உடனே, "உங்களுடைய ஆர்வம் எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. கவலைப்படாதீர்கள். உங்கள் ஸ்டேஷன் வந்து நீங்கள் இறங்குவதற்குள் சுருக்கமாக ஆளுக்கு ஒரு அனுபவம் அம்மாவைப்பற்றிச் சொல்லி விடுகிறோம்''.

"ஒரு நாள் என் அம்மா படுக்கையிலிருந்து காலை எழுந்திருக்கும்போது பார்த்தால் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியைக் காணவில்லை. உடனே பதட்டப்படாமல் எழுந்து சென்று அன்னைக்குக் காணிக்கை வைத்து வேண்டிக் கொண்டார். அன்று என் அப்பாவுக்கு காலை "shift'' அதனால் அவர் ஐந்து மணிக்கே கிளம்பிப் போய்விட்டார். மாலை நாலு மணிக்கு அவர் அலுவலகத்திலிருந்து திரும்பியதும், "விமலா காலையில் நான் அலுவலகம் கிளம்பும்போது பல் தேய்க்க wash basin அருகே சென்றேன். அப்போது தரையில் ஏதோ பளபளவென்று தெரிந்தது. குனிந்து பார்த்தால் உன் அம்மாவின் தாலிக்கொடி துண்டாகிக் கீழே விழுந்திருந்தது. அதிலிருந்த குண்டுகள் சிதறியிருந்தன. எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி ஒரு டப்பாவில் போட்டு அன்னை படத்தருகே வைத்தேன். கவலைப்பட்டுத் தேடினீர்களா?அலுவலகம் கிளம்பத் தாமதமாகி விட்டதால் தூங்கிக் கொண்டிருந்த உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்து automatic latch ஐப் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டேன். அலுவலகத்தில் வேலைப்பளு அதிமிருந்ததால் இது பற்றி வீட்டுக்குப் போன் பண்ணி சொல்ல மறந்து விட்டது. அம்மா மிகவும் கவலைப்பட்டாளா?'' "இது பற்றி எனக்கு ஒன்றுமே சொல்லவேயில்லையே அம்மா,'' "நான் அன்னையிடம் மட்டும் சொல்லி விட்டேன். வேறு யாரிடம் சொல்ல வேண்டும்?'' "என்ன ஒரு நம்பிக்கை உனக்கு?'' என்று என் அம்மாவைப் பாராட்டினேன்.

"விமலா என்னைப் பாராட்டுவது இருக்கட்டும், எனக்கு ஒரு உதவி செய். முதலில் தாலிக்கொடி கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து ஆசிரமத்திற்கு ஒரு தந்தி கொடுத்து விட்டு வா. கூடவே உன் அப்பாவின் பிறந்த நாளுக்குக் காணிக்கையாக ஐந்நூறு ரூபாய்க்கு ஒரு draft எடுத்து வைத்திருக்கிறேன். அதையும் அனுப்பி விடு என்றாள்''.

கந்தனுக்குப் புல்லரித்தது. "விமலா அம்மாவுக்குத்தான் எத்தனை நம்பிக்கை? பத்மா உன்னுடைய அநுபவத்தை சொல்லம்மா'' என்றான் இன்னும் தீவிர ஆர்வத்துடன்.

"சுருக்கமாகச் சொல்கிறேன். எங்கள் வீட்டில் விதம்விதமான மலர்களைச் சேகரித்து வைப்போம். அடிக்கடி Mother symbol எல்லாம் அலங்கரிப்போம். அதனால் மறுநாள் பூக்கள் சேர்ந்துவிடும். நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடியில் தினமும் ஒரு கிழவி வந்து அதையெல்லாம் சேகரித்துக் கொண்டு போவாள். ஒரு நாள் மலர்களை அள்ளும்போது "இவங்க வீட்டிலே வேற வேலையே இல்லை. பூவுக்கே ஏராளமா பணம் செலவழிப்பாங்க போலிருக்கு. எனக்குத்தான் அதிக வேலை'' என்று முணுமுணுத்துக் கொண்டே போனது என் மனதுக்கு வேதனையளித்தது. மனம் நொந்து போய் நான் அன்னையிடம் முறையிட்டேன். அம்மா நாங்கள் இருப்பதோ அடுக்குமாடிக் கட்டிடத்தில், அதுவும் மூன்றாவது மாடியில் வாடிய மலர்களை எங்குக் கொண்டு சேர்ப்பது என்று புரியவில்லை. நீதான் வழி சொல்ல வேண்டும். "என்ன ஆச்சரியம்! அடுத்த சில நாட்களில் அந்த ஆயா வந்து "பாப்பா இந்த பூஜை பண்ணிய பூக்களை ஏன் குப்பையுடன் சேர்க்க வேண்டும்? நான் நம் "ப்ளாட்டுக்கு பின்புறம் ஒரு மூலையில் சிறிய குழி ஒன்று தோண்டி வைத்திருக்கிறேன். தினமும் மலர்களை அதில் கொட்டிவிடலாம். அது நாளடைவில் நல்ல உரமாகும். இனிமேல் தினமும் நான் எனக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வந்து தருகிறேன். ஆனால் அதற்கு நீ பணம் கொடுக்க வேண்டும்,'' என்றாள். கரும்பு தின்னக் கூலியா? அன்னையிடம் முறையிட்ட சில நாட்களில் இப்படி ஒரு சாதகமான மாற்றமா?'' என்று வியந்து போனேன்.''

"நீங்கள் சொல்லச் சொல்ல அந்த அம்மாவின் பெருமையை என்னால் சிறிது சிறிதாக உணர முடிகிறது,'' என்றான் கந்தன் மன நிறைவோடு. "இருங்க பெரியவரே அடுத்தது என்னை நீங்கள் கேட்கு முன்பு நானே சொல்லி விடுகிறேன்'' என்று அபர்ணா ஆரம்பித்தாள். ஸ்டேஷன் நெருங்க நெருங்க எங்கே எதையாவது கேட்காமல் விட்டுவிடுவோமோ என்று கந்தன் பதட்டப்படுவது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

"ஒரு முறை டி.வி.யில் ஒரு போட்டி வைத்தார்கள். அதில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு டெலிபோனில் பதில் சொல்ல வேண்டும். யார் முதலில் சரியான பதில் சொல்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு கிடைக்கும். ஒரு முறை அது மாதிரி நான் சரியான விடையை சொன்னேன். ஆனால் முதலில் சொன்னது வேறு யாரோ ஒருவர் என்பதால் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. அன்று மாலை டி.வி. எதிரே அமர்ந்து நாங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஆறுதல் பரிசு கிடைத்தவர்களின் பெயர் வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். உடனே என் தந்தை என் தாயிடம் கேலியாக "உன் பெண்ணுக்கு ஆறுதல் பரிசாவது கிடைக்குமா?'' என்று கேட்டார். உடனே என் அம்மா "மதர் மனசு வைத்தால் நிச்சயம் கிடைக்கும்'' என்று பதில் சொல்லி முடித்தாரோ இல்லையோ, டி.வி.யில் "இதில் ஆறுதல் பரிசு பெறுபவர் த. அபர்ணா'' என்று சொல்லி எங்கள் வீட்டு விலாசத்தை சொல்லவும் நான் மகிழ்ந்து போக, என் அம்மாவோ "நான் சொன்னேன் பார்த்தீர்களா அன்னையின் மகிமையை'' என்ற பாவனையில் என் அப்பாவைப் பார்க்க, அவர் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார்.''

"என்னம்மா ஒன்றுக்கு மேல் ஒன்று சுவாரஸ்யமாக இருக்கிறது அடுத்தது என்ன?'' என்று ஆரம்பிப்பதற்குள் சுகுணா தன் அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தாள்.

"இரண்டு மாதம் முன்பு திடீரென்று என் தந்தைக்கு பணமுடை ஏற்பட்டது. அவசரமாக ஒரு ஐந்நூறு ரூபாய் தேவையாயிருந்தது. மாதக்கடைசி.யாரிடமும் கடன் கேட்கவும் விருப்பமில்லை.

"அன்னையே எனக்கு எப்படியாவது ஒரு ஐந்நூறு ரூபாய் தேவையாக இருக்கிறது. நீங்கள்தான் கை கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்று அந்த ஞாபகம் வரும்போதெல்லாம் சமாதியில் நாகலிங்கப்பூ வைத்துப் பிரார்த்திப்பதாகக் கற்பனை செய்து கொண்டார். மறுநாள் காலையில் அவரது சக ஊழியர் வந்து, சார் உங்களுக்குத் தெரியுமா?நமக்கு பண்டிகைக்காலக் கடன் (festival advance) 2000 ரூபாயிலிருந்து 2500 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 வாங்கியவர்கள் அந்த அதிகப்படியான 500 ரூபாயை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்ளலாம்,'' என்றார். உடனே அன்னைக்கு நன்றியைத் தெரிவித்த அப்பா, "எதையும் மனிதர்களைக் கேட்காமல் அன்னையைக் கேட்கவேண்டும்'' என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். அது எவ்வளவு பெரிய உண்மை? என்று வியந்தபடி பணத்தை வாங்கி வந்தார்.''

கந்தன் இந்த முறை எதுவும் சொல்லாமல் ஏதோ யோசித்தவாறு அழுக்குப்படிந்த தன் துண்டின் ஒரு மூலையில் இருந்த ஒரு முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து எட்டாக மடிக்கப்பட்ட ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து "நீங்களெல்லாம் சொல்வதைப் பார்த்தால் எல்லோரும் அம்மாவுக்கு ஆயிரம், ஐந்நூறு என்று காணிக்கை கொடுப்பீர்கள் போலத் தெரிகிறது. நானோ பரம ஏழை. என்னிடம் தற்சமயம் இருப்பது இந்த பத்து ரூபாய் மட்டுமே, தயவு செய்து இதை என் சார்பில் அம்மாவிடம் சேர்த்து விடுகிறீர்களா?'' என்று பணிவாகக் கேட்டான். "ஆஹா அதற்கென்ன'' என்று அதை வாங்கிக் கொள்வதற்கும் ஸ்டேஷன் வருவதற்கும் சரியாக இருந்தது. கந்தன் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கி தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

போகும் வழியில் அம்மாவைப்பற்றிய இனிய நினைவுகளை அசை போட்டுக் கொண்டே வந்தான். தன் குடிசையை நெருங்கும்போதுதான் வீட்டுக்கவலை தலைதூக்கத் தொடங்கியது. வீட்டில் வேலாயி என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளே. வரும்போது ஒரு ஆழாக்கு அரிசி, வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் வாங்கி வா மச்சான், தினமும் கஞ்சி குடிச்சு நாக்கு செத்துப் போச்சு. ஒரு நாளாவது அரிசி சோறு சாப்பிடலாம் என்றாளே. இருக்கிற பத்து ரூபாயையும் கொடுத்து விட்டேனே. அய்யோ அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது. தப்பு, அம்மா தப்பு. எல்லோருக்கும் வழி காட்டும் நீ எனக்கும் ஒரு வழி காட்ட மாட்டாயா என்ன என்று எண்ணியவாறு குடிசையை அடைந்தான்.

"வா மச்சான் வா'' முல்லைப்பல் வரிசைதெரிய தலை நிறைய மல்லிப்பூவுடன் அவனை வரவேற்றாள்.

"என்ன புள்ளே இது? தலையிலே அதிசயமா பூ வெச்சிருக்கே. கஞ்சிக்கே வழியைக் காணோம். பூ வாங்க உனக்குப் பணம் ஏது?'' "இனிமே நமக்கு நல்ல காலம்தான். உங்க சித்தப்பா வந்திருந்தாரு. நம்ம பங்காளி மேல் நில விஷயமா "கேஸ்'' போட்டிருந்தோமில்ல அது ஜெயிச்சிட்டதாம். அவர் வரும்போது பூ, பழம் வாங்கிட்டு கூடவே நூறு ரூபாய் தட்டுல வெச்சுக் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினாரு.

அந்தப் பணத்தில அரிசியெல்லாம் வாங்கி உனக்கு விருந்து பண்ணி வெச்சிருக்கேன். நீ ரொம்ப களைப்பா இருக்கே. கை கால் கழுவிக்கிட்டு வந்து சூடா சாப்பிடு''.

கந்தனுக்குக் காரணம் புரிய நேரமாகவில்லை. அம்மா தன் மீதும் கருணையை வர்ஷிக்க ஆரம்பித்துவிட்டார் என்று புரிந்து கொண்டான். சாப்பிடும்பொழுது அன்று நடந்த நிகழ்ச்சியை ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டே வந்தான். கேட்ட வேலாயி ஆச்சரியப்பட்டாள்.

"வேலாயி அந்தப் புள்ளைங்க என்கிட்ட எவ்வளவு மரியாதையா பேசினாங்க தெரியுமா? அவங்க பேசினதையெல்லாம் கேட்டதிலிருந்து எனக்கு ஒரு ஆசை. எப்படியாவது என் ஆயுசு முடியறதுக்குள்ளே ஒரு நடையாவது அவங்களைப் பார்த்திட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வரணும் என்று இப்போ அதுக்கு வழி ஏற்பட்டுவிட்ட மாதிரி தெரிகிறது.'' "எப்படி?''

"கையகல புன்செய் நிலத்தில் வேர்க்கடலை விளைஞ்சு அதை சந்தையில வித்துட்டு கைக்கும் வாய்க்குமாய் போராடிக்கிட்டிருந் தோம். இப்போ மூணு போகம் விளையும் நஞ்சை நிலம் பெரிய அளவில கிடைக்கிறது. அதில் நல்லா ஒழைச்சு முதல்ல வர்ற மகசூலைக் காசாக்கி எடுத்துக்கிட்டுப்போய் அம்மாவுக்குக் காணிக்கையா செலுத்தணும் என்கிற ஆசை வந்திட்டுது.'' "ஏதேது கற்பனைக் கோட்டை கட்டிக்கிட்டுப் போறே?'' "கற்பனையில்லை புள்ளே, அம்மா மனசு வெச்சா என்னதான் நடக்காது?''

இதற்கிடையில் பாண்டியை அடைந்த அந்த ஐந்து பெண்களும் அன்னையின் தரிசனத்திற்காக உத்தரவு வாங்கிக் கொண்டு சென்றனர். கியூவில் நின்றவர்கள் தங்களுடைய முறை வந்தபொழுது அன்னையை நமஸ்கரித்துவிட்டுத் தாங்கள் கொண்டு வந்திருந்த காணிக்கையைச் சமர்ப்பித்தனர். அன்னை அவர்கள் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார். பிறகு மெல்லிய குரலில் "எல்லா காணிக்கையும் செலுத்தியாகிவிட்டதா?'' என்று கேட்டார். "ஆமாம்'' என்று தலையாட்டிய தாரிணி சட்டென்று நினைவுக்கு வந்தவளாக ரயிலில் தாங்கள் சந்தித்த கந்தனைப்பற்றிக் கூறி அவன் கொடுத்த பழைய கசங்கிய பத்து ரூபாய்த்தாளை தயங்கியவாறே எடுத்து அன்னையின் காலடியில் சமர்ப்பிக்கப் போனாள். சட்டென்று அன்னை அவள் கையைத் தடுத்து அவள் கொடுத்த அந்த பத்து ரூபாயை ஆர்வமுடன் வாங்கி "இந்தக் காணிக்கைக்கு ஈடு இணை கிடையாது. இந்த நன்றிக் கடனை தீர்க்கவே முடியாது'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். தாரிணியும் அவள் தோழிகளும் அசந்து போயினர்.

தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் விமலா, "தாரிணி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாம் எத்தனையோ பேரிடமிருந்து பெரிய தொகைகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்தினோம். ஆனால் அம்மாவோ கந்தனிடமிருந்து வந்த பத்து ரூபாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. கந்தன் மிகவும் கொடுத்து வைத்தவர்'' என்றாள்.

"கந்தன் கொடுத்து வைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் கொடுத்த காணிக்கைக்கு அம்மா முக்கியத்துவம் கொடுத்தது எனக்கு ஆச்சரியமாகவே இல்லை. ஏனென்றால் லட்சக்கணக்கில் பணம் இருப்பவர்கள் அதிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்த ஏழை விவசாயி அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்படுபவன் தன்னிடமிருந்த ஒரே சொத்தான பத்து ரூபாயை மனமுவந்து கொடுப்பது பெரிய விஷயமில்லையா?'' என்று விளக்கம் கொடுத்தாள் தாரிணி. "தாரிணி நீ எவ்வளவு அழகாக விளக்கி விட்டாய்?'' என்று அவளைப் பாராட்டினாள்.

தொடரும்.book | by Dr. Radut