Skip to Content

மனித சுபாவம் III

கர்மயோகி

 

(Physical skill) திறமையாக நீ அறிந்ததை, உணர்வாகப் பெறுதல் உயர்வு. உணர்வாக அறிந்ததை, அறிவாகப் பெறுதல் சிறப்பு. மனத்தாலும் அறிவாலும் சிறப்பாக நீ ஒன்றை அறிந்தால், அதை விவேகத்தின் சாரமாக அறிய முயலவேண்டும். உ-ம், ஒரு தொழில் 7 முறை தோல்வி அடைந்தால், அதன் பின் அதை மீண்டும் செய்யும்பொழுது விரக்தியின்றி செய்தால் அதன் சாரம் பொறுமை. ஒரு காரியத்தில் இதைப் பெற்றால், மெதுவாக இத்தன்மை எல்லாக் காரியங்களுக்கும் பரவி உன் நிலையை உயர்த்தும்.

*********

தச்சு வேலை செய்வது, சிறிய சைக்கிள் ரிப்பேர் செய்வது, மேடையில் பேசுவது, தகராறு தீர்ப்பது போன்று நாம் பல திறமைகளைக் கற்கிறோம். அவற்றின் பயன் கருதி ஏற்றுக் கொள்கிறோம். சில சமயங்களில் இதுபோல் கற்ற திறமையொன்றில் ஆசைப்பட்டு அதிலேயே உயிரை வைத்திருப்பதும் உண்டு. அதுவே திறமையை உணர்வாகப் பெறுவது. நாம் செய்வது நம் அறிவுக்குட்பட்டதாக இருக்கும். அத்தொழிலுக்குரிய அறிவை அவ்விஷயத்தில் பெறுதல் மிக உயர்வு. அவ்வறிவு அத்தொழிலில் அனுபவப்பட்டவர் அறிவதாக இருக்கும். அதற்கு மேல் விவேகமான சூட்சுமம் உண்டு.

நாம் ஒரு புத்தகம் அச்சடித்திருப்போம். அதன் மூலம் அது சம்பந்தமான பேப்பர், அச்சு, இங்க் ஆகியவற்றிற்குரிய நுணுக்கங்களை அறிய முடியும். அடுத்தாற்போல் அச்சகத்திற்குப் போனாலும், அடுத்த புத்தகம் அச்சடிக்கப் போனாலும், புதிய பேப்பர், புதிய இங்க், புதிய எழுத்து வந்திருப்பதால், 'இந்த அச்சில் எத்தனைப் பக்கம் உங்கள் புத்தகம் வரும் என்று அச்சுக் கோத்துப் பார்த்துத்தான் சொல்லமுடியும்' என்றால் எழுத்தின் சைஸ் கண்ணில்பட்டு ஒரு பக்கத்திலுள்ள வார்த்தையைக் கொண்டு, இத்தனைப் பக்கம் வரும் என்று நாம் சொல்வதை, பிறகு அது சரியாக இருந்தால் மற்றவர் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்.

நெடுநாள் தொழிலில் இருப்பவர், ஏதோ ஒரு சமயம் வரும் வாடிக்கைக்காரருக்குத் தமக்குரிய அனுபவம் இருப்பதைக் காண்பதுண்டு. தமக்கு மேலும் வாடிக்கைக்காரருக்கு விளங்குவதையும் காணலாம். செயல் (உடல்), உணர்வு, அறிவு, ஆன்மா என்ற நிலைகளில் காரியங்களிருப்பதால், நமக்கு ஆன்ம நிலைக்குரிய அறிவு இருப்பதால் இது சாத்தியம்.

விவசாய அனுபவமுமின்றி, விவசாயப் படிப்புமில்லாமல், பரம்பரை விவசாயிகள் செய்யும் வேலையை அவர்களைவிட நேர்த்தியாகச் செய்யும் கம்பனி ஊழியருண்டு.

அன்னையை ஏற்றுக் கொண்ட பின் எந்தத் தொழிலுக்குப் போனாலும் அங்கு நெடுநாளாக உள்ளவர் அறிவை நாம் உடனே பெறவும், அதைச் சற்று உயர்த்தவும் முடியும். இது அன்னை சக்திக்குண்டான திறன்.

ஓர் ஆங்கிலப் பேராசிரியர் ரயிலில் போகும்பொழுது எதிரேயிருப்பவர் தம் நண்பருக்கு அறிமுகமானவர், வெறும் பட்டதாரி, ஆபீஸில் வேலை செய்பவர் என அறிந்து இலக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார். கேட்டவருக்கு மேற்சொன்ன நுணுக்கம் தெரியுமாதலால் பேராசிரியர் சொல்லியதை ஏற்றுக் கொண்டு, மேற்கண்ட கருத்தையும் தெரிவித்தார்.பேராசிரியரால் நம்ப முடியவில்லை, 'நான் செய்யுள் poem ஒரு மணி நேரமாகப் படிக்கிறேன் விளங்கவில்லை.இந்த நுணுக்கத்திற்கு இது புரியுமா' என்றார். கேட்டவர் செய்யுளைப் பார்த்து, தக்க விளக்கத்தைச் சொன்னார்.இத்திறமைக்கு அந்த விவேகம் உண்டு.

 

ஏதாவது மடத்தனமான ஒரு காரியம் எந்தத் திட்டத்தையாவது கெடுத்துள்ளதா எனக் கண்டு பிடி. அதை உடனே அறவே விலக்கு.

*********

  • டெக்னாலஜியில் உள்ள சிறு குறையைச் சரிசெய்து கொள்ளலாம் எனத் தொழிலை ஆரம்பித்தவர் 1 1/2 கோடி நஷ்டப்பட்டார்.
  • பெரிய தொழிலில் கிடைக்காத பங்கு கிடைத்ததை, அடிமுட்டாள் தனமாக 'எனக்கே தொழிலைப் பிறகு கொடுக்க வேண்டும்' எனக் கேட்டு இழந்தார்.
  • திருடனைக் காவல்காரனாக வைத்துவிட்டுப் பணமெல்லாம் எங்கே போகிறது என்பவர் ஒருவர்.
  • ஸ்தாபனத்தின் இலட்சியம் 'பணம் நம்மை நாடி வர வேண்டும்' என்றபொழுது அதில் முக்கியஸ்தர் பணம் வசூல் செய்யப்போய் அவமானப்பட்டார்.
  • படிப்புக்காகக் கூலிக்காரனுக்குப் பெண் கொடுத்துவிட்டு குடும்பமே கூலிக்காரன் பண்பை அனுபவிக்க வேண்டியதாயிற்று.
  • செல்லம் கொடுத்ததால் பிள்ளை ஒரு பரீட்சையை 19 முறையும், அடுத்ததை 17 முறையும் எழுதினான்.

இதுபோன்ற காரியங்கள் பெரிய குடும்பங்கள், ஸ்தாபனங்களில் தவறாது காணப்படும். அவற்றை விலக்க முயல்பவர்கள் குறைவு. நம் வாழ்வில் நிச்சயமாக இந்த அம்சம் இருக்க வாய்ப்புண்டு. கவனித்துப் பார்த்துப் பலனடைய வேண்டும்.

அறிவில்லாத செயல் குழப்பத்தை விளைவிக்கும், ஆபத்தையும் ஏற்படுத்தும். அது உன் வாழ்விலிருக்கிறதா எனப் பார். இருந்தால் சுமார் 100 இடங்களில் அதன் சாயலிருக்கும்.அதைக் காண வேண்டும்.

*********

 

படித்தவர், படிக்காதவர் செயலைச் செய்யக்கூடாது. நகப் பாலீஷை வைக்க பாட்டிலில்லை என ஒரு பாட்டிலை எடுத்து நிரப்பினார் ஒருவர். கொஞ்ச நாள் கழித்து கண் வலிக்கு மருந்து தேடினார். ஒரு சொட்டு விட்டவுடன் விஷம் தலைக்கேறியது போலிருந்தது. டாக்டர் பார்த்து விட்டு கண் பிழைத்தால் ஆண்டவன் புண்ணியம் என்றார். நகப்பாலீஷ் பாட்டில் மூடி உடைந்துவிட்டதால் அதைக் கண் மருந்து பாட்டிலில் ஊற்றும் பொழுது நாளைக்கு இது ஆபத்து என்று படிக்காதவர் அறியமாட்டார்கள். ஊற்றினால் ஒரு சீட்டில் நகப்பாலீஷ் என எழுதி ஒட்ட வேண்டும். இந்த வீட்டில் இதுபோன்ற குறைகள் 100க்கு மேலிருக்கும். இவர்கள் பட்டதாரிகளானால் வாழ்வு தரம் 8வகுப்பு படித்தவர் நிலைக்கு மேல் உயராது. படிப்புப் பலன் தர அறிவும், தெளிவும் தேவை. தெளிவைப் பொருத்தே, படிப்புப் பலன் தரும். 5 கடிகாரங்கள் வேலை செய்யவில்லை. வாக்குவம் கிளீனர் ஒரு மறையில்லாமல் பயன்படவில்லை. இருக்கும் சாமானை மீண்டும் மீண்டும் வாங்கி முதலில் வாங்கிய பருப்பு பூச்சி அரித்து விட்டது. உள்ள துணிமணிகளைச் செவ்வனே உபயோகப்படுத்த முடியவில்லை என மைல் கணக்காக நீளும் பட்டியல் எழும். வீட்டில் 12,000 ரூபாய் செலவு 34,000 ரூபாயால் முடிவு பெறும். பலன் பாதியாக இருக்கும்.

தெளிவு, முறைமை, விழிப்பு, கவனம், அறிவு, பொறுமை, குடும்பம் நடத்தவும், கம்பனி நிர்வாகம் செய்யவும், மனிதனாக வாழவும், மாடு மேய்க்கவும் தேவை. அறிவற்ற செயலை எல்லா மட்டங்களிலுள்ளவர்களும் செய்கிறார்கள். தாங்கள் செய்வதை அறிவதில்லை. அதன் பலன் என்ன என்று சிந்திப்பதில்லை.

மேல் உள்ளவர்களை எதிர்க்கும் மனப்பான்மையுண்டா?  எவ்வளவு சிறு விஷயமானாலும், அதை அறவே நீக்க வேண்டும். எதிர்க்கும் எண்ணமும் உதவாது.

********

 

மேல் அதிகாரி சொல்லிய சிறு வேலைகளைச் செய்யாவிட்டால் தண்டிக்கமாட்டார்கள், கண்டிப்பார்கள். சில சமயங்களில் கண்டிப்பதும் இல்லை. சோம்பேறித்தனமாக இது போலிருப்பதுண்டு வேண்டு மென்றே செய்வதுண்டு (desire to cross authority). அந்தச் செயல் எவ்வளவு சிறு செயலானாலும் அது தவறு. நமக்குள்ள முன்னேற்றத்தை அது தடுக்கும். ஒரு மெஷினைப் பூட்டும்பொழுது ஒரு மறை குறைவாக விட்டுவிட்டால், மெஷின் ஓடும், ஆனால் அதன் திறமை 25% குறைந்துவிடும் என்பதை இன்ஜீனியர் அறிவார். 98.40 F இருக்க வேண்டிய டெம்பரேச்சர் 99.4 இருந்தால் உடல் வேலை செய்யும் திறன் அளவு கடந்து பாதிக்கப்படும் என்பதை டாக்டர் அறிவார். Authority அதிகாரம் என்று நமக்கு வேண்டாததன்று அதுவே உலகத்தின் சொத்து. ரோடில்லாவிட்டால் வாழ்க்கையில்லை, தபால் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது. இவற்றை நடத்துவது நாட்டின் நிர்வாகம். நிர்வாகம் அதிகாரத்தால் இயங்குகிறது. வீட்டிலும், வெளியிலும் நாம் அதிகாரத்திற்கு அறிவோடு பணிந்தால்தான் நாட்டில் அதிகாரம் இயங்கும். ஏதோ ஒருவன் அவன் அதிகாரியை எதிர்க்கிறான் என்பது வேறு. நமக்கு அதிகாரியை எதிர்க்கும் மனப்பான்மை வந்துவிட்டால், நாளைக்கு நாம் அந்த அதிகாரத்தைப் பெறமுடியாது. அதிகாரம் நிர்வாகத்திற்கு அவசியம். மனித வாழ்வுக்குக் காற்றும், நீரும் அவசியம் என்பதைப் போல் அவசியம்.

அதிகாரத்தையும் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்வது நம் சொந்த வாழ்வின் எதிர்காலத்தையும் அதன் வளர்ச்சியையும் புரிந்து கொள்வதாகும். எண்ணத்திலும் அதிகாரத்திற்கு எதிராக போகும் நிலை எழக்கூடாது.

இரு விஷயங்களுக்குள்ள தொடர்பை நீ பார்க்கத் தவறியதுண்டா? இரு விஷயங்களுக்கிடையே இல்லாத தொடர்பை இருப்பதாக நீ நினைத்தது உண்டா? அப்படியானால் அது உன் வாழ்வில் நிரம்பியிருக்கும் அதற்கு மடமை எனப் பெயர்.

*********

 

எதிர் வீட்டுக்காரர் வசதியாக இருக்கிறாரே எப்படி? என்று கேட்பவர், எதிர் வீட்டுக்காரர் உழைப்பாளி, தாம் சோம்பேறி என்பதைப் பார்க்க முடியாமல் கேட்டுக் கொண்டேயிருப்பார். உழைப்பு, வருமானத்தைப் பெருக்குகிறது என்பதைத் தெரியாமல் உழைப்புக்கும் வருமானத்திற்கும் உள்ள தொடர்பைப் பார்க்க முடியாதது மடமை.

நண்பன் முதல் மார்க் வாங்கினால், 'அவன் பணக்காரன் வாங்கலாம்' என்று பணத்திற்கும் படிப்பிற்கும் இல்லாத தொடர்பை மனதில் நினைத்துக் கொள்வது அறிவீனம். ஏதோ ஒரு விஷயத்தில் இது போன்று நினைத்தால் நம் வாழ்வில் எல்லா இடங்களிலும் இது இருக்கும். நம் பலஹீனங்களை மறைக்கவும், கடமைகளைச் செய்யாமலிருக்கவும் நாம் பயன்படுத்தும் பல்வேறு உபாயங்களில் இதுவும் ஒன்று.

விஸ்வேஸ்வரய்யா 104ஆம் வயதில் இறந்தார் என்ற செய்தியைக் கேட்டவர்கள் இவர் அத்தனை நாள் எப்படியிருந்தார் என்று வியப்பாகப் பேசிய பொழுது, சாப்பாட்டிற்கு இல்லாதவர் ஒருவர் 'அவர்களுக்கெல்லாம் சாப்பாட்டு வசதியிருக்கும்' என்று சொன்ன பொழுது அனைவரும் அவர் மனநிலையைக் கண்டு அதிர்ந்தனர். படித்த படிப்பின் பயன் என்னாவது என்றும் கருதாமல், மனிதனால் இதுபோல் நினைக்க முடிகிறது.

அளவு கடந்த திறமையுடன் (resourceful) எப்பொழுதாவது நீ செயல்பட்டிருக்கிறாயா? அப்படி எனில் அத்திறமையை மற்ற விஷயங்களில் செயல்படுத்தினாயா? இல்லை எனில் இப்பொழுது செய்ய வேண்டும்.

*************

 

எல்லோரும் அறிந்த விஷயங்களில் புத்திக் கூர்மையால் எதிர்பாராத பலன் பெறும்படிச் செய்வதற்குத் (resourcefulness) திறமை எனப் பெயர்.

சேல்ஸ் டாக்ஸ் 1937இல் வந்தது.1952இல் ரேஷன் ஒழிந்தது போன்றவற்றை அரசியலில் புதுத் திறமை என்பதுண்டு. டாக்ஸியில் போகும்பொழுது தலை தெறிக்கும் வேகத்தில் போகாதே என டிரைவரிடம் காரில் உள்ள அனைவரும் சொன்னார்கள். டிரைவர் கேட்கவில்லை. போய் இறங்கிய இடத்தில் வந்த வேலையைப் பற்றிப் பேசாமல், டிரைவரைப்பற்றியே பேசினார்கள். மீண்டும் எப்படி அதே வண்டியில் போவது எனப் பயந்தனர். போன இடத்தில் அந்த வீட்டுக்காரர் உங்களோடு நான் திரும்ப வருகிறேன். டிரைவரிடம் சொல்கிறேன் என்றார். திரும்ப வரும் பொழுது டிரைவர் நிதானமாக வண்டியை ஓட்டினார். அனைவருக்கும் ஆச்சரியம். வீடு திரும்பிய பொழுது எப்படி நாங்கள் அனைவரும் சொல்லியதை டிரைவர் கேட்கவில்லை, நீங்கள் சொல்லியதை மட்டும் எப்படி கேட்டான் என்று விசாரித்தார்கள். நான் 'வண்டியை மெதுவாக ஓட்டு இல்லையென்றால் வாடகை தரமாட்டார்கள்' என்று சொன்னேன் என்றார். இதற்கு (resourcefulness) புதுத் திறமை எனப் பெயர்.

கிருஷ்ணதேவராயர் 17 யானைகளைப் பிரித்ததை இதுபோல் சொல்வார்கள். சந்தர்ப்பம் ஏற்பட்டால் சில சமயங்களில் இது போன்ற புது யோசனை தோன்றும். இந்த திறமையுள்ளவர்கள், இதை எல்லா விஷயங்களிலும், சந்தர்ப்பமில்லாதபொழுதும் பயன்படுத்த வேண்டும்.

ஆழ்ந்த மன நிலைகளை அறிய முயல்வது நல்லது. பிறரிடம் அதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அதை நாம் முழுமையாக ஏற்க வேண்டும். அவை சக்தி வாய்ந்தவை.

********

ஓரிடத்திற்குப் போய், வரும் பொழுது நம் பொருள் ஒன்றை அங்கு மறந்து வைத்துவிட்டு வந்தால், நமக்கு மீண்டும் அங்கு வரப் பிரியம் உண்டு என்பார்கள். ஒரு புது உறவில் முதல் நிகழ்ச்சியே முடிவுவரை நிலைக்கும் என்பார்கள். Subconscious ஆழ்ந்த மனம் தவறு செய்வதே இல்லை. அதன் அபிப்பிராயத்தை அறிகுறிகளால் தவறாது காண்பிக்கும். நாம் அதைச் சகுனமாக எடுத்துக் கொள்கிறோம்.

ஸ்தாபனத் தலைவர் முக்கிய வேலைக்குப் படிப்பு அதிகமானவர் ஒருவர் தேவை என்று தேடிக் கொண்டிருந்தபொழுது திறமைசாலி ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரை அழைத்து வரச் சொன்னார். ஆர்வமாகக் கேட்டவர், ஆள் வந்தவுடன் பேசாமலிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து வந்தவர் ஒருவரை வந்திருப்பவர் யார் என்று விளக்கியவுடன் ஆர்வமாகப் பேசி, ஆர்டர் கொடுத்து விட்டார். இந்தத் தயக்கம் ஏன் என எவருக்கும் புரியவில்லை, இரண்டாண்டு கழித்து வந்தவரின் திறமை அபரிமிதமாக இருப்பதைக் கண்டு தலைவருக்குப் பொறாமை வந்து தொந்தரவு கொடுத்தார். அன்றுதான் வந்தவருக்கு முதல் நாள் தலைவரின் தயக்கம் புரிந்தது. பார்த்தவுடன் திறமைசாலி எனவே அன்றே அவருக்குப் பயம் கலந்த பொறாமை எழுந்ததை அவர் தயக்கம் காண்பித்தது.

ஆழ்மன அபிப்பிராயங்கள் தவறாது வெளிப்படும். அவற்றைத் தவறாமல் கவனிப்பது பலன் தரும்.

நமக்கு ஒரு வேலை பூர்த்தியான பின், இதைச் சாதனை செய்வதற்குத் துணையாயிருந்த சமூக ஸ்தாபனங்கள் எவை என ஆராய்ந்து கண்டுபிடி.

**********

ஒரு மனிதன் 21 வயது வரைக்கும் இந்தியாவில் சர்க்கார் அவனுக்காக 42,000/-ரூபாய் செலவு செய்கிறார்கள். கல்வி, மருத்துவ உதவி போன்றவற்றை மக்கள் நேரடியாகப் பெறுகிறார்கள். ரேடியோ, T.V., ரோடு போன்ற சாதனங்கள், பாதுகாப்பு (போலீஸ்)போன்றவற்றால் மறைமுகமாக நாம் உதவி பெறுகிறோம். வீடு எரிவதைத் தீயணைக்கும் படையினர் வந்து அணைத்தால், அது சர்க்கார் செய்யும் சேவை. நாம் அதற்குப் பணம் செலுத்துவதில்லை.

பட்டமளிப்பு விழா, மகாநாடு, கண்காட்சி, போன்றவை பெரிய நிகழ்ச்சிகள். மகன் வெளிநாடு போய்ப் பட்டம் பெற்று இன்று பெரிய உத்தியோகத்திலிருந்தால் இதை நாம் சாதிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவை எவை என்று யோசனை செய்தால் நாட்டிலுள்ள அனைத்தும் உதவியிருக்கும். தபாலாபீஸ், பஸ் முதல் அனைத்தும் நமக்குப் பயன்பட்டன. சிறு விஷயங்களை ஆராய்ந்தாலும் பேர் அறிவு வரும். எந்த அளவுக்கு நாம் சர்க்காருக்குக் கடமைப்பட்டுள்ளோம் என்று அறிந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் சமூகத்திற்கு அதைவிட அதிகமாகக் கடமைப்பட்டது தெரியும். ஆராய்ச்சிக்கு முடிவில்லை, அடுத்த கட்டத்தில் ஆண்டவனுக்கு நாம் ஒவ்வொரு வினாடியும் கடமைப்பட்டது தெரியும், அந்த அறிவு நன்றியறிதலாகும்.

புதிய நல்ல திறமைகளைப் பெற ஒரு முறையுண்டு. மனம் திறமையின் பகுதிகளை விவரமாக நன்கு அறிவது முதற்படி. அடுத்தது உணர்வின் பங்கு. கடைசியாக உடலும் அதே போல் அத்திறமையின் பகுதிகளை அறிய வேண்டும். உடலே திறமையைப் பூரணமாகக் கற்றுக் கொண்டால், மனம் தன் ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கிறது. அடுத்தாற்போல் உணர்வும் விட்டுக் கொடுக்கும். இப்பொழுது உடலே அத்திறனை (மனம், உணர்வின் உதவியின்றி) பெற்றுள்ளது. இத்துடன் திறமை பூரணம் பெறுகிறது. இதற்கு மேல் திறமை வளர வேண்டுமானால், திறமையின் தரம் உயர வேண்டும். நம் உள்ளத்தில் அத்திறமை வேரூன்றி முதிர வேண்டும்.

**********

 

இதுபோல் திறமையின் பகுதிகள் வளர்ந்தால், (in precision, perfection, width, force, amplitude ) திறமை, தெளிவு, பூரணம், சக்தி, ஓட்டம், ஆகியவை உற்பத்தியாகும். நம்முள் நெடுநாள் இத்திறமை உறைவதால், நமக்குப் பொதுவான திறமையின் அஸ்திவாரமும், குறிப்பான திறமையும் (talent) உற்பத்தியாகும். உ-ம் வயலின் வாசிப்பது.

திறமை வளரும் வகை. வயலின் வாசிப்பதில் (skill ) குறிப்பான திறமை - பொதுவாகச் சங்கீதத்தில் (capacity) திறமை - (talent) வயலின் வாசிப்பதில் சிறப்பான திறமை.

மனத்திலும், செயலிலும் உள்ள குறைகளையும், தீமைகளையும் ஏற்றுக் கொள்ளும் நேர்மையிருந்தால், முன்னேற்றம் அளவு கடந்து வரும். நாணயமின்மை, நம்பிக்கையின்மை, தீய எண்ணம், கெட்ட எண்ணம், பொய், துரோகம், பிறர் மனம் புண்படும் திறமையான மடமை ஆகியவை நம்முள் இருக்க வாய்ப்புண்டு. இதில் ஏதாவது நம்மிடம் இருக்க முடியும். இருப்பதை ஏற்பது நேர்மை. அதை மாற்ற முயல்வது சிறப்பு.

அவை வெளிப்படுவதில் சில முறைகள்.

  1. பண ஆதாயமிருந்தால், எம் முறையும் ஏற்கக் கூடியது.
  2. நல்லவர்கள், நமக்கு உதவி செய்தவர்கள் மீது கெட்ட எண்ணம் எழுவது.
  3. வேலை செய்வது தவறு, பிடிக்காது.
  4. கடத்தல்காரனானாலும் பணக்காரன் என்பதால் மரியாதைக்கு உரியவன்.
  5. விசேஷங்களுக்குப் போகும் நல்ல பழக்கத்தையும் புறக்கணிக்கும் மனப்பான்மை.

தொடரும்.



book | by Dr. Radut